ஊர்நாட்டானின் பக்ரீத்



ரம்ஜான் சின்ன பெருநாள். பக்ரீத்துதான் பெரிய பெருநாள் அப்படின்னு உசேன் தான் சொல்லுவான். தாஹீர் , சிக்கந்தர் உசேன் எல்லாவனும் பள்ளிவாசல் தெருக்காரனுங்க. எங்களது தைக்கா தெரு. ஒண்ணுமண்ணா பள்ளிக்கூடத்துல படிச்சவனுங்கதான் எல்லாவனும். இன்னைக்கு ஒருத்தன் செல்போன் கடை, ஒருத்தன் ஜவுளி யாவாரம், வாட்ச் கம்பேனின்னு ஆளுக்கொரு தொழில்ன்னு ஆகிட்டானுங்க.

ரம்ஜான் பக்ரித் அப்பொல்லாம் வெள்ளைல கட்டம் போட்ட சாரத்தை கட்டிட்டு வந்து நிப்பானுங்க. நமக்கு வேடிக்கையாத்தான் படும். எம்மா எனக்கும் சாரம் தாயேன்னு கேட்டா வெளக்கமாறு தான் வந்து விழும்.

முஸ்லீம் பண்டிகையப்போ நமக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் லீவுன்றதோட சரி. அவங்களுக்கு அப்டி இல்லல்லா... அப்ப எங்ககூடி தீபாவளி பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்ற பழக்கம்லாம். பரிட்சைக்கு நடுவுல லீவு விட்டதே பெருசு. அதனால எல்லா பயல்களும் ஆத்தங்கரையிலயும், எம்.டி.டி பள்ளிக்கூட கிரவுண்ட்லயும் கிரிக்கெட் விளையாடிட்டு கிடப்போம். அந்த மஞ்ச கட்டடம் செவுத்துல த்ரூவா பந்து பட்டா சிக்ஸு. தப்பித்தவறி ஜன்னல் உள்ள போயிடுச்சுன்னா அவுட்டு.

ஆத்தங்கரையில் இந்த பிரச்சனை இல்ல. எங்க அடிச்சாலும் ரன்னு உண்டு. முள்ளுக்குள்ள சிக்குனா ட்டூ-ஜின்னு சொல்வோம். அது அவ்ளோ பெரிய ஊழல்ன்னு அப்ப யாருக்கு தெரிஞ்சது.

சற்குணத்தம்மான்னு பேருள்ள ஆச்சியை எல்லாரும் சலீமாம்மான்னு தான் கூப்பிடுவாங்க. ஆத்தங்கரை ஓரத்திலதான் அந்த ஆச்சி வீடு. பக்ரீத் அன்னைக்கின்னு பார்த்து சிக்கா அடிச்ச பந்து நேரா ஆச்சி வீட்டுக்குள்ள பாஞ்சி அடை வச்சிருந்த கோழிமேல பட்டு கோழி செத்துப் போச்சி. பெருஞ்சண்டைக்குப் பெறகு முட்டகோழிக்கு நூத்தம்பது ரூவான்னு கணக்குசொல்லி பிரச்சனை தீர்ந்துச்சி. அன்னைக்கு மத்தியானம் எங்க வீட்ல நாட்டுக் கோழிக்குழம்பு வாசனை மூக்கத் தொளைச்சுது.

சலீமம்மா அந்த நூத்தம்பது ரூவா கணக்கை கடன் சொல்லி தன் கடைசி காலம்பூரா எங்கைய்யா கடையில துணி சோப்பு வாங்கியே கழிச்சிச்சு கிழவி.
அன்னைக்கு உயிர்த்தியாகம் பண்ண கோழியை இன்னைக்கு நினைச்சாலும் நீர் சுரக்கும்.

கண்ணுலயா நாக்குலயான்னு நீங்க கேக்குறது எனக்கொன்னும் கேக்கல பார்த்துக்கிடுங்க.

-ஊர்நாட்டான்.
24/09/2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil