Thursday, 30 March 2017

வாசிக்கும் பிம்பங்கள்         ஏழை எளியோர் வாழ்வைச் சித்தரிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டு கி.ரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் நாவலின் ஒவ்வொரு நிலைக்களன்களையும் குறிப்பிட்டு, குறுங்கதை ஒன்று சொல்லி காலக்கட்டத்தை அறிமுகப்படுத்தி அதுபற்றி எழுதினவர்களையும் அந்தந்த நூல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார்.
அப்படி கி.ரா குறிப்பிட்ட வரிசையில் தேயிலைத் தோட்டங்களின் வாழ்வைச் சொல்லும் செல்வராஜ் எழுதிய ‘தேனீர்’, கோகிலம் சுப்பையா எழுதின ‘தூரத்துப் பச்சை’, கொங்கு நாட்டு கிராமங்களை நிலைக்களமாகக் கொண்டு ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய ‘அறுவடை’, ‘பூவும் பிஞ்சும்’ மற்றும் ‘மாயத்தாகம்’
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் 
 எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘வேள்வித் தீ’, தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’ தென்மாவட்டங்களில் பனைத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையச் சரடாகக் கொண்டு ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதிய ‘புத்தம் வீடு’, ஆற்றுமணலை அள்ளிக்குவித்து வயிறுவளர்த்த கொள்ளையர்களைப் பற்றி ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’, வெற்றிலைக் கொடிக்கால் வாழ்வை எழுதின ஆ. பழநியப்பனுடைய ‘காவிரிக் கரையினிலே’,

தஞ்சை விவசாயிகள் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, செ.கணேச லிங்கனின் ‘செவ்வானம்’, ஜோசப் எழுதிய ‘காலங்கள் சாவதில்லை’, கே.டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ மற்றும் ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’, செங்கை ஆழியான் எழுதிய ‘வாடைக்காற்று’ என்று தான் வாசித்தவற்றில் சில நாவல்களை எழுதி வைத்திருக்கிறார்.
இந்த வரிசைகளில் முன்னணியாக ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் அசோகமித்ரன் ஆகியோரது படைப்புகளைக் குறிப்பிட்டு, ரொம்ப நேசமாக பொன்னீலன் எழுதிய ‘கரிசல்’ நாவலைக் கொண்டாடி இருக்கிறார். அவற்றில் இருந்து நான் கொஞ்சம் அறியாத புத்தகங்களை வரிசைக்கிரமமாக வாசிக்க வேண்டியதென்று கல்பிறக்கிக் கொண்டேன்.
முதலாவதாக, 1950களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் கைத்தறி நெசவாளர்கள் சந்தித்த பெருந்துயரையும், கூட்டம் கூட்டமாக அவர்கள் பஞ்சம் பிழைக்கப் போனதையும், மானம் காக்க ஆடை நெய்தவர்கள் மானம் துறந்து கைநீட்டி பிச்சை கேட்ட காட்சிகளையும் கொண்டு எழுதப்பட்ட ‘பஞ்சும் பசியும்’ நாவலை வாசிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ பற்றிக் குறிப்பிடும்போது, எம்.வி.வெங்கட்ராம் எழுதின ‘வேள்வித் தீ’ நாவலை இன்னும் நெருக்கமாக மக்களின் வாழ்வியலோடு அவர்கள் பிரச்சனைகளையும் பேசியிருக்கிறது என்று எழுதியிருக்கிறார் கி.ரா.
ரகுநாதனின் இலக்கிய வாழ்க்கையை எழுத்தாளர் பொன்னீலன் எழுதின சரிதை வழியாக அறிந்துக்கொண்ட பிறகு ரகுநாதனை இன்னுங்கொஞ்சம் இனங்கண்டு வாசிக்க ஆர்வமாக இருந்தேன். காரணம் புதுமைப் பித்தனும், ரகுநாதனும் அவர்களுடைய காலக்கட்டத்தில் சோடிபோட்டுக் கொண்டு அடித்து வெளுத்துக் கட்டிய இலக்கிய சமாச்சாரங்கள் அவ்வளவு ருசியானவை.
மேற்படி விஷயத்தை பொன்வாசுதேவன் சாரிடம் மேலோட்டமாகச் சொன்னபோது, ‘பஞ்சும் பசியும்’ பிரதி உங்களிடம் இருக்கிறதா என்று ஒரு கொக்கியை வீசியிருக்கிறேன். ‘இருக்கிறது’ என்று நல்ல சகுமான பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. சொன்னதோடு மட்டுமில்லாமல் முதலாவதாக ரகுநாதன் எழுதின ‘பாரதியும் ஷெல்லியும்’ என்கிற ஒப்பீட்டு நூலைக் கையில் கொண்டுவந்து கொடுத்தார்.
1789ல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தையான ஷெல்லியிடமிருந்து, 1905ல் தோன்றிய ரஷ்யப் புரட்சியின் குழந்தையான பாரதி எங்கெங்கிருந்தெல்லாம் தன் கவிதைகளுக்கான கருவினை எடுத்துக் கையாண்டிருக்கிறார். எவ்வளவு வார்த்தைகள் ஒன்றுக்கொன்று இணையாக தந்திருக்கிறார், அவற்றை எங்கெங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் என்று பிச்சு எறிந்திருக்கிறார் ரகுநாதன் அந் நூலில்.
உதாரணத்திற்கு, ஷெல்லியின் ‘வானம்பாடி’ பாரதிக்கு ‘சிட்டுக்குருவி’யாகிறது. ஷெல்லியின் ‘மேல்காற்று (west wind)’ பாரதியின் ‘நல்லதோர் வீணை’, ஷெல்லியின் சுதந்திரப் பனுவல், பாரதியின் சுதந்திர தேவி துதி. ஷெல்லியில் நேப்பிள்ஸ், ராணி மாப், வரிகள் பாரதியின் வந்தே மாதரம், பாரத சமுதாயம், புதிய ரஷ்யா, பாஞ்சாலி சபதம் பாடல்களில் அப்படியே தமிழாகிறது.
ஷெல்லி எழுதின, ‘இஸ்லாமின் புரட்சி’யில் வரும் சித்னா, பாரதியின் புதுமைப் பெண்ணாகிறாள். ஷெல்லியின் ‘சென்சி’ கவிதை நாடகத்தில் வருகிற பீட்ரைஸின் வார்த்தைகள், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியின் குரலாக அப்படியே ஒலிக்கிறது.இப்படி இன்னும் நிறைய...
பாரதியின் கவிதைகளைக் களங்கட்டி அடித்தாடினாலும் ஒரு இடத்திலும் பாரதி காப்பியடித்தார் என்று நேராகச் சாடாமல் இருவரும் ஒரேமாதிரி யோசித்திருக்கிறார்கள்; ஷெல்லியின் தாக்கத்தால் எழுதினார்; ஷெல்லியிடம் பாரதி சுவீகரித்துக்கொண்டார், என்று மிதமான நக்கலிலே முழு நூலையும் எழுதியிருக்கிறார் ரகுநாதன்.
சமீபத்தில் தான் சலபதியின் ‘அந்த காலத்தில் காபி இல்லை’ நூலில் பாரதி குறித்து வேறு கோணங்களைக்கொண்ட மூன்று ஆதாரங்களோடான கட்டுரைகளைப் படித்திருந்தேன். தன் வாழ்வில் எவ்வெப்போதெல்லாம் தான் பேசின அறத்துக்குப் புறம்பாக பாரதி செயல்பட்டார் என்று சலபதி கூறுகட்டிக் குவித்து வைத்திருக்கிறார்.
கூர்ந்து கவனித்தால் மகாகவி பாரதிக்கு நாம் எக்கச்சக்கமாக புரட்சித் தோல் போர்த்திவிட்டோமோ என்று கூட மனத்துக்குப் பட்டது. அதெல்லாம் இல்லை அவன் தமிழில் இப்படிக் கொட்டிக் குவித்திருக்கா விட்டால் நாம் எங்கிருந்து ஷெல்லியை எல்லாம் வாசிக்கப் போகிறோம் என்ற எண்ணமும் மேலெழுந்தது.
எது எப்படியோ நான் ரகுநாதனை இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. எக்கச்சக்க புத்தகங்களோடு வாழ்ந்த இந்த மனுஷனைப் பத்தி உங்கள்கிட்டே பகிர்ந்துகொள்ள, எழுத்தாளர் பொன்னீலன் சொன்ன ஒரு விஷயம் உண்டு.
தோழர் ஜீவானந்தத்திற்கு ரகுநாதனின் நூல்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டாம். அவர் தன் வீட்டுக்கு வருகிறார் என்றாலே தொ.மு.சி.,க்கு கைகால் நடுங்க ஆரம்பித்து விடுமாம். சத்தம் கேட்டதும், வீட்டின் கீழ் அறையிலே வைத்து பேசி அனுப்பிவிட வேண்டும் என்று கருத்தாய் இருப்பாராம். ஆனால் தோழர் ஜீவா ‘எனக்கு ஒரு நல்ல காபி வேணும் ரகுநாதா’ என்று அவரை கடைக்கு அனுப்பிவிட்டு அவர் புத்தகங்களை மேய்ந்துவிடுவாராம்.
ஜீவாவுக்குக் கொஞ்சம் கொடைப் பண்பு அதிகம். ஜீவா வீட்டுக்கு வந்த டி.செல்வராஜ் ஜீவாவின் அலமாரியிலிருந்த ‘தென்னிந்தியாவில் சாதிகளும் குலங்களும்’ புத்தகங்களை ஆசையாகத் தடவிப் பார்க்க, அதன் ஏழு தொகுதிகளையும் அவருக்கே அன்பளிப்பாய் கொடுத்து விட்டிருக்கிறார் ஜீவானந்தம். இதை நேரில் கண்ட தொ.மு.சிக்கு அடங்காத அச்சமும் கோபமும். எங்கே இவரை விட்டால் நம் சேமிப்புக்கும் அல்லவா பங்கம் வந்துவிடும் என்று தவித்திருக்கிறார்.
ரெண்டுபேருமே புத்தகங்களை வாசிக்கிறதில் கொம்பாதி கொம்பன்கள். பின்னே நிலைமை இப்படித்தானே இருக்கும். என்னதான் நான் ஜீவா அபிமானி என்றாலும் இந்த புத்தகம் சேகரிக்கிற விஷயத்தில் நான் ரகுநாதன் வழி. அது என்னம்மோ அப்படித்தான். இந்த புத்தகத்தில் இந்தப் பக்கத்தில், இந்த இடத்தில் இப்படி எழுதி இருக்கும் என்று குறித்து வைக்காமலே தேடி எடுத்துக் காட்டிவிடுவேன். பிறகு எப்படி இரவல் கொடுக்க.
ஆனால், வாங்குவதற்கு கூச்சமே படமாட்டேன். வள்ளுவனே சொல்கிறானய்யா ‘பிச்சைப் புகினும்’ என்று. ஆக, இந்த பிட்டெல்லாம் மேற்படி குறிப்பிட்ட நாவல் வரிசையைக் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கான விதை என்பதை மேலோட்டமாகச் சுட்டிக்காட்டிக்கொள்கிறேன். நன்றி!
இறுதியாக, பத்திரிகை ஒன்றிற்காக ரகுநாதனின் நினைவு தினத்தில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட பத்தி ஒன்றை இங்கே சொல்ல நினைக்கிறேன்.
“ தான் வாசித்த புத்தகங்களை எல்லாம் சேர்த்து தனக்கென்று ஓர் நூலகத்தையே உருவாக்கிக் கொண்டார். இரவலோ, இலவசமோ யாருக்கும் புத்தகங்கள் கொடுத்ததில்லை. பல லட்சங்கள் தருகிறேன் என்று அந்தப் புத்தகங்களை விலைபேச வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பியவர், தன் முதுமையில் தன் சேகரிப்பு நூல்கள் அத்தனையையும் எட்டையபுரம் பாரதி நூலகத்துக்குக் கொடையளித்தார் தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன் ” என்கிற பத்திதான் அது.
யாருடைய எழுத்தை அக்குவேறாக ஆணிவேறாக விமர்சித்து ஒப்பிட்டு எழுதினாரோ அவர் பேரிலான நூலகத்திற்கு தன் அத்தனைப் புத்தகத்தையும் கொடுத்திருக்கிறார் பாருங்கள். எமன்யா நீர்!

-கார்த்திக்.புகழேந்தி
30-03-2017மரக்கா - முத்துராசா குமார்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பாக தமிழ் மொழிக்கூடம் Srinivas Parthasarathy அவர்கள், சென்னை ரோஜா முத்தையா நூலகத்திற்கு மேற்காக களிகுன்றம் பகுதியில் அமைந்துள்ள தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு வளாகத்திலே அமைந்திருந்த தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகத்தையும் ஒருபார்வை பார்க்கலாமென்று உள்ளே நுழைந்திருந்தேன்.

அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒரு நல்ல தமிழ் காரியம் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டே உள்நுழைந்தாலும், அருங்காட்சியகத்தின் உள்ளே ரம்பர் மரங்களைக் கடைந்து, மெஷின் கட்டிங்கில் செய்த சிலைகளையும், மெழுகுக் களிமண் பொம்மைகளையும், கேரள பாணியிலான வடிவச் சிற்பங்களையும் காட்டி தமிழர் பண்பாட்டுக் கலைப் பொருட்கள் என்று ஏமாற்றியிருந்தார்கள்.

சரி போகிறது என்று சுற்றிவந்ததில், ஓர் அறையில் நான்கு பழைய மொடாக்கள், காவி பூசின நெற்குதிர்கள், கொஞ்சம் கல் உரல், உலக்கை, பழைய நெல் அளவை மரக்கால்கள், சொளவு என்று கொஞ்சம் தமிழ் நிலத்துக்குத் தொடர்புள்ள பொருட்களும் இருந்தன. கட்டடத்திற்குள்ளே ஒரு குறும் திரையரங்கம் அமைத்து தமிழர் மருத்துவம், நீர் மேலாண்மை இப்படியாக ஐந்து ஆவணப்படங்கள் ஒளிப்பதிவிடுகிறார்கள். அது கொஞ்சம் உருப்படியானது.

கல்லூரித் தோழன், தோழிகளென்று குழுவாக வருகிறவர்கள் தங்கள் செல்போன்களில் அவற்றை பதிவு பண்ணிக்கொண்டிருந்ததையும் கவனித்தேன். எனக்கு மனத்தளவில் பெரிதாக எதிலுமே லயிப்பில்லை. ஒரு சில விஷயங்கள் தவிர. இந்த மாதிரி அருங்காட்சியகம் போன்ற கலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இவர்கள் செட்டாக மாட்டார்கள் என்று தோன்றினாலும் அதன் தலைமை இயக்குநர் என் எண்ணத்துக்கு நேர்மாறானவராக தமிழ் உணர்வோடு, இலக்கிய, மொழிப் பரிச்சயங்களோடு இருந்தார்.

மொத்தமாக வேடிக்கை பார்த்ததில் நெல் அளவைக்குப் பயன்படுத்தும் அந்த மரக்கால்களும் சொளவுகளும் மட்டும் கண்ணுக்குள்ளே நின்றது. பார்த்து எவ்வளவு வருசங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவு. அத்தனைவிதமான அளவைகளையும் எங்கிருந்தோ சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்தமாதிரி நெல்வேடையும், வெள்ளைத் தூசுபடிந்த அழுக்குமாக இருந்தது. பொன் முத்துராசாவின் இந்தக் கவிதையை வாசித்தபோது எனக்கு அந்த மரக்கால் மறுபடியும் கண்முன்னால் வந்துபோகிறது.

மரக்கா

பால்யங்களில் பிடித்த நாரைக்குஞ்சுகள்
குமட்டி கக்கிய மண்புழுக்களின் வயிறுகளில்
எனதுகாட்டின் கறித்திமிரெடுத்த
கரம்பைமண் செழும்ப கிடந்தது

இன்று,
எனது காட்டின் ஒட்டிப்போன
வயிறுக்குள் எட்டிப் பார்க்கையில்
Image result for மரக்கால்ஒரேயொரு கருக்கா நெல்லோடு
ஒரு சுருக்கத்தோல் ஆளு
மரக்காலுக்குள் உட்கார்ந்து கொண்டு
ஏதேதோ பேசி புலம்பிக் கொண்டிருந்தார்

தளும்ப தளும்ப நெல்லளந்த
எனது மரக்காக்களின்
மடியறுந்த வெறுமை இருளும்
கதிர்கள் கொட்டி
இன்று, அழுக்குத்துணிகள்
அடைந்து வைக்கும்
மண் முட்டிகளின் வாசமும்

ஒருசேர தலைக்கேறி சித்தம் கலக்கி
யாரையோ பச்ச பச்சயாய் திட்டிக்கொண்டே
தொலைந்து போன பொட்டல்களம் நோக்கி
ஓட வைக்கின்றன

பொட்டல்களத்தை பார்த்துவிட்டு -நான்
திரும்பும் காலத்தை கணித்துச்
சொல்ல முடியாது

பொந்தான பனையோ
பொந்தாகும் மொட்டைத் தென்னையோ
பாகம் பிரிக்கப்பட்ட நமது ஆத்தா
அப்பன் வாழ்ந்த பூர்வீக வீட்டின்
நவீன கதவுகள் ஆன பின்பு

மரங்கொத்தியும்
கிளியும் தனது குஞ்சுகளோடு
வாசல் வந்து கதவுகொத்தி
கத்தினால் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு,
வாடிக்கை பொறியாளனைக் கூப்பிட்டு
தானியங்கள் செய்யச் சொல்!

-முத்துராசா குமார்


ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளன் -தொ.மு.சி ரகுநாதன்
          மிழ் சிறுகதை இலக்கியத்தில் மாபெரும் எதார்த்தவாதியான புதுமைப்பித்தனால், அற்புதமான சிறுகதையாளரெனக் கொண்டாடப் பட்டவர் தொ.மு.சி ரகுநாதன். திக்கெல்லாம் தமிழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து, ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர் தொ.மு.சி.,

படித்த, பண்பட்ட, கவித்துவம் நிறைந்த ஓரளவு வசதியான குடும்பம் அவருடையது.  இன்னும் சொல்லப் போனால் மூன்று தலைமுறைகளாக இலக்கியப் பரிச்சயம் கொண்ட குடும்பம் தொ.மு.சியுடையது. தாத்தா சிதம்பரத் தொண்டைமான் புகழ் பெற்ற அறிஞர். அவர் பாடிய நெல்லைப்பள்ளு, ஸ்ரீரங்க நாதர் அம்மானை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

‘குமிழ்த்த முலையைக் காட்டி நின்று
குறௌப் பொழுதையும் போக்குகிறீர்
குரவை ஒலித்து முடியை அவிழ்த்துக்
குனிந்து நடுங்கள் பள்ளியரே’

                                                -நெல்லைப் பள்ளு

வைர வியாபாரியாக செல்வச் செழிப்புகளோடு வாழ்ந்த இவர் தன் இறுதிக் காலத்தில் வறுமையுற்றார். ஆனாலும் தன் பிள்ளைகளுக்குக் கல்விச் செல்வத்தை வாரி வழங்கியதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.

தொ.மு.சியின் தந்தை  ‘தொண்டைமான் முத்தையா’ இயல்பிலேயே சிறந்த ஓவியர். கவிஞர், மொழிப் பெயர்ப்பாளர், புகைப்படக் கலைஞராகவும் கூட பரிமளித்தவர். அவருடைய ஆங்கிலப் புலமையின் காரணமாகவும், அன்றைய ஆங்கிலேய அதிகாரிகளிடம் (சென்னை ஆளுநர் வெல்லிங்டன் பிரபு) அவருக்கிருந்த நற்பேருமாகச் சேர்ந்து, தொண்டைமான் முத்தையா வீட்டை ‘இங்க்லீஷ்காரர் வீடு’ என்றே அடையாளம் காட்டியது.

Related imageஅந்த வீட்டில்தான் தொண்டைமான் முத்தையா –முத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டாம் மகனாக 1923 அக்டோபர் 20ல் தொ.மு.சி.ரகுநாதன் பிறந்தார். அண்ணன் தங்கைகளென ரகுநாதனோடு உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர். அண்ணன் பாஸ்கர தொண்டைமான் மாவட்ட ஆட்சியாளர், பெரும் பேச்சாளர், எழுத்தாளர், கல்கி கிருஷ்ண மூர்த்தி, பேராசிரியர் அ.சீனிவாச ராகவன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், ‘வட்டத்தொட்டி’ டி.கே.சி., என்று அகாலத்துப் பெரும் அறிஞர்கள் அத்தனைபேரோடும் நட்பு பேணினவர். ஆனால், ரகுநாதனோ இவை அத்தனைக்கும் நேர் எதிர் திசையில் பயணித்தான்.

தீவிர புத்தக வாசிப்பாளராக இருந்த தொ.மு.சி., தன் அப்பாவின் நூலகத்தை அவருக்குத் தெரியாமல் திருட்டுச் சாவி போட்டுத் திறந்து, பல நூல்களை வாசித்துக் கொண்டிருந்தார். பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன தமிழ் இலக்கியங்கள், ஐரோப்பிய, ரஷ்ய இலக்கியங்கள், மலையாள, கன்னட, வங்க, இந்தி  மொழிகளில் வெளியான சிறந்த இலக்கியங்கள் எனத் தேடித் தேடி வாசித்தார்.

சங்க இலக்கியங்கள் முதல் புதுமைப் பித்தன் காலம் வரை அவரிடம் தேர்ந்த வாசிப்பனுபவம் இருந்தது. லத்தீன் அமெரிக்க இலக்கியப் பார்வையும், மேலை இலக்கியங்கள் மீதான விமர்சனங்களும், பக்தி இலக்கியங்களிடையே உள்ள ரசமும் நெருடலும், பாலியல் நாட்டார் செய்திகளில் பகடியும் என்று பலதரப்பட்ட இலக்கியக் கலவையாக இருந்தார் ரகுநாதன்.

அவருடைய உரையாடல்கள் கூட இலக்கியத்தை மறுவாசிப்பு செய்வதுபோல காத்திரமானவை. பொய்மை சமூகத்தை வெறுப்பதற்கு காரணங்கள் அடங்கிய அளவு நேர்மையும், கறார்த்தன்மையும், மதிப்பீடுகளும் கொண்ட அறிஞன் அவர். சரியாகச் சொன்னால் நகை செய்யப் பயன்படாத சுத்தத் தங்கம் என்பார் எழுத்தாளர் பொன்னீலன்.

பாதிப் படிப்பிலே கல்லூரியிலிருந்து வெளியேறியவர் தொ.மு.சி., இலக்கியமும் அரசியலும் அவருக்கு இரு கண்கள். நெல்லையில் நண்பர்களோடு இணைந்து இலக்கியச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினவர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் ‘கம்பனில் யார்  சத்யாகிரஹி’ என்ற தலைப்பில் ஆங்கிலேய அதிகாரத்தை இரணிய வதத்தோடு ஒப்பிட்டுப் பேசினார். மேடை அதிர்ந்தது. வாரண்ட் பிறப்பிக்கப் பட்டு சிறைக்கும் போனார்.

 கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. அம்மாதிரியான நூல்களைக் கண்ணால் பார்க்கவே அன்றைய இளைஞர்கள் பயந்தார்கள். அரசின் கெடுபிடி அப்படி. அந்தச் சூழலில் தன் பேராசிரியரிடம் போய் மூலதனைத்தைக் கையில் வாங்கி,  ‘கொடுங்கள் தொட்டாவது பார்த்துவிட்டுத் தருகிறேன்’ எனக் கையில் வாங்கி ஒரே மூச்சாக வாசித்து முடித்தார்.

தம்பிக்கு இருந்த இந்த முற்போக்குத் தனங்கள் அண்ணனுக்குத் தெரியவந்தது. கண்டித்துப் பார்த்தார், கேட்கவில்லை. அண்ணனின் வழிகாட்டலின் பேரில்  அகில இந்திய வானொலியில் வேலைக்கு பரிந்துரைக்கப் பட்டார். சிறைக்குப் போனவர் என்பதாலும், வேலை கிடைக்கவில்லை. கல்கியில் சேரும்படி டி.கே.சி சிபாரிசு செய்தார். ஆனாலும் அவருக்கு அந்தக் கூடாரம் பிடிக்கவில்லை

சா. கணேசனின் பரிந்துரையில் தினமணி ஏட்டில் வேலைகிடைத்தது. பி.ஸ்ரீ.ஆச்சார்யாவுக்கு உதவியாளராக இருந்தார். மாதம் 65ரூபாய் சம்பளம். சொந்தமாக எழுதினால் கூட 15 ரூபாய் ஊக்கத் தொகை. அங்கேதான் முதன்முதலாக புதுமைப் பித்தனை நேரே சந்தித்தார் ரகுநாதன். தன் ஆசிரியர் முத்துசிவம் எழுதின ‘அசோகவனம்’ என்ற நூலை தடாலடியாகத் தாக்கி விமர்சனம் செய்திருந்த புதுமைப் பித்தனை, இது விமர்சனம் பண்ணும் முறையல்ல என்று எதிர்த்து எழுதியிருந்தவர் தொ.மு.சி ரகுநாதன்.

முன்பாக, தொ.மு.சி எழுதிய ‘பிரிவு உபசாரம்’ என்கிற சிறுகதையை நெல்லையில் அ.சீ.ரா.,வின் நண்பர் துறைவன் (வானொலி இயக்குநர்) புதுமைப் பித்தனுக்கு வாசித்துக் காட்ட, யார் இந்த ரகுநாதன் என்று தேடிக் கொண்டிருந்தார் பு.பி., “நீ நம்ம ஆளு, உன்னைத்தான் இத்தனை காலமா தேடிக்கிட்டு இருந்தேன்” என்று ரகுநாதனை வாரிக் கொண்டார்  புதுமைப் பித்தன். நவீன இலக்கிய உலகமும் கூடவே சேர்த்தணைத்துக் கொண்டது.

தினமணியிலும் ரகுநாதனால் நிலைக்க முடியவில்லை. காரணம் அவருடைய கறார்த்தன்மை. ஆசிரியர் பி.ஸ்ரீ பதிப்பித்து, மு. அருணாசலம் எழுதின ‘இன்றைய தமிழ் வசன நடை’ என்ற நூலைக் கண்டித்து, பாரததேவியில் தொ.மு.சி ஒரு விமர்சனம் எழுதினார். நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. ஒரு எழுத்தாளனாக என் கருத்தை முன்வைக்க எனக்கு உரிமை உண்டு என்ற விவாதம் அவரை தினமணியில் இருந்து வெளியேறச் செய்தது.


லா.ச.ரா., கு.அழகிரிசாமி, எம்.வி.வெங்கட் ராம் முதலிய இலக்கிய ஆளுமைகளின் கூடாரமாக இருந்த  ‘முல்லை’யில் புதுமைப் பித்தனின் பரிந்துரையின் பேரின் வேலைக்குச் சேர்ந்தார் தொ.மு.சி. கம்பராமாயணத்தில் கும்பகர்ணனும் விபீடனனும் சந்திக்கும் காட்சியை ‘அண்ணனும் தம்பியும்’ என்ற தலைப்பில் நாடகமாக எழுதினார். நெல்லை மண்ணின் விருந்தோம்பலை நையாண்டி செய்யும் ‘அத்தான் வந்தார்’, வறுமையைச் சொல்லும் ‘பஞ்சப் பாட்டு’, ‘மருது பாண்டியர்’ என தொ.மு.சியின் நாடகங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன.

நாடகங்களைத் தொடர்ந்து தொ.மு.சியின் சிறுகதைகளும், புதினங்களும் வரவேற்புகளைப் பெற்றன. புயல் (1945), முதலிரவு (1949), கன்னிகா (1950), பஞ்சும் பசியும் (1953) என நான்கு நாவல்களும், பல்வேறு ஒப்பிலக்கிய மற்றும் ஆய்வு நூல்களும், இலக்கிய விமர்சனங்களும், பாரதி ஆய்வு நூல்களும், மொழியாக்கங்களும் பண்ணினார். சாகித்ய அகாடமி, இலக்கியச் சிந்தனை, என எண்ணற்ற விருதுகளை அவர் பெற்றபோதும் தன் படைப்புகளை தன்னுடைய விருதுகள் எனச் சொன்னவர்.

 ‘ஆன இவையெல்லாம் அழகாகக் கூடிவர
கூனுடைய பூமாந்தர் குறையெல்லாம் போக்கி – அவர்
மானிடராய் வாழுமொரு மார்க்கம் தனை வகுக்கும்
காரியத்தில் ஈடுபட்டுக் கவிதைப் பணிபுரியும்
வீரியர்க்கே தமிழ்க்கன்னி விரும்பி அருள் புரிவாள்

                        என்ற தொ.மு.சியின் கவிதையை அன்றைக்கு காலக் கட்டத்தில் பலப்பேர் மனனம் செய்துகொண்டிருந்தார்கள். அவர் எழுதிய கவிதைகள் பல அழிந்துபோனாலும், இம்மி பிசகாமல் அப்படியே மனப்பாடமாய்ச் சொல்லுகிறவர்கள் தமிழகத்தில் பலர் உண்டு. தான் பிறந்த நெல்லையைப் பற்றிய அவருடைய பாடலின் கடைசி இரண்டு அடிகள் பற்றி கா. சிவத்தம்பி சொல்லிச் சொல்லி மகிழ்வாராம்.

‘எண்ணற்ற புகழ் மணக்கும் எங்கள் திருநெல்லையில்
அண்ணாச்சி மதினியுடன் ஆவணியில் வாரீகளா’

அன்றைய கவியரங்க மேடைகளில் ஒளி வீசியவர்களில் முக்கியமானவர்கள் அண்ணாச்சி கே.சி.எஸ் அவர்களும், தொ.மு.சி. ரகுநாதனும். கே.சி.எஸ்., தேன் குரல் என்றால்,  ரகுநாதன் சிம்மக்குரலோன். மேடைப் பாடல்கள் போக அழகுமிக்க கவிதைகள் பல எழுதினார் தொ.மு.சி.

பாரதியையும் புதுமைப் பித்தனையும் தன் எழுத்துக்களின் வழி நின்று ஆர்ப்பரித்தார். தன் சொந்த வாழ்க்கையில் அவருக்கிருந்த அன்பும் முரண்களும், குடும்பத்தினருடன் பழகிய முறைகளும், யாருக்கும் வணங்கிப் போகாத குணநலனும், ஆங்கில அரசுக்கு தன் அண்ணன் இணங்கிப் போகிறார் என அவரையே மதிக்காத தன்மையும், தன் குடும்பப் பெருமைகள் எதுவும் தனக்கு வேண்டாம் என முன்னெழுத்துகளைத் தவித்து ‘ரகுநாதன்’ என்றுமட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டதும் என  ‘ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளனாகவே’ வாழ்ந்து மறைந்தார்.

தான் வாசித்த புத்தகங்களை எல்லாம் சேர்த்து தனக்கென்று ஓர் நூலகத்தையே உருவாக்கிக் கொண்டார். இரவலோ, இலவசமோ யாருக்கும் புத்தகங்கள் கொடுத்ததில்லை. பல லட்சங்கள் தருகிறேன் என்று அந்தப் புத்தகங்களை விலைபேச வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பியவர், தன் முதுமையில் தன் சேகரிப்பு நூல்கள் அத்தனையையும் எட்டையபுரம் பாரதி நூலகத்துக்குக் கொடையளித்தார். தான் வாழ்ந்த காலம் முழுக்க அந்த நூல்களின் நினைவுகளுடனேயே வாழ்ந்து மறைந்தார்.

தொ.மு.சி ரகுநாதன் நினைவு நாள்
31: 12: 2001

                                                                                 -கார்த்திக்.புகழேந்தி


தொ.மு.சி.ரகுநாதன் (ரகுநாதன் என்னும் இலக்கிய ஆளுமை)பொன்னீலன் – சாகித்ய அகாதமி வெளியீடு.குணா பில்டிங்க்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. ISBN : 978-81-260-4199-2Rs. 50/-

Friday, 24 March 2017

காற்றில் வரும் ஒரு சிறு இசை

“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்று மூதுரையில் அவ்வை அவள் பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். திடீரென்று நண்பன் கேட்டான் அதெப்படி சங்கு சுட்டாலும் வெள்ளையாக இருக்கும் என்று. கொஞ்சம் புரிகிறமாதிரி பேசித்தீர்த்துக்கொண்டோம் என்று வையுங்களேன். சங்கு சுடுகிற அனுபவம் ஒன்று எனக்கு இருந்தது அதைத்தான் இங்கே எழுதுகிறேன்.

நல்ல பளபளாவென்று வெள்ளையாக இருக்கும் சங்கை ஏறக்குறைய நம்மில் நிறையபேருக்குத் தெரிந்திருக்கும். அதில்லாமல் முக்குவர்கள் ஆழியில் குளித்தெடுத்த சங்கின் பூர்வாங்க நிலை எப்படி இருக்கும் என்பதை நிறையபேர் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. நல்ல பாசிபிடித்து அழுகி இறுகிப்போன பெரிய தேங்காய் கனத்தில் ஒரு பருங்கல்லை தூக்கிக்கொண்டுவந்து, இதுதான் சங்கு என்றான் செந்திலதிபன் என்கிற என் பள்ளிக்கூடக் கூட்டுக்காரன்.

எனக்கு நம்பிக்கையே இல்லை. சங்கின் வடிவம் கொஞ்சம்கூட அந்தக் கல்லுக்குப் பொருந்தவில்லை. “இதுக்குள்ள தாம்ல சங்கு இருக்கும்” என்று அடித்துச் சொன்னான். பாசி வாடையில் சொரசொரவென்று பார்க்கவே அருவெறுப்பாக இருந்ததைக் கையில் வாங்கிப் பார்த்தேன். அவன் வீட்டின் உள்ளறையில் அப்படி நிறைய சுடாத சங்குகளைக் காண்பித்து, “இன்னும் நிறைய சேர்ந்ததும் சுடுவோம் அப்ப தெரியும் உனக்கு” என்றான். அந்த நாளுக்காகக் காத்திருந்தேன்.

அவன் காண்பித்த அதே தேங்காய் கல் இப்போது கல்லாக இல்லை. மேலே ஒட்டியிருந்த படிம அழுக்குகளைச் சுரண்டி, கிட்டத்தட்ட சங்கின் தோற்றத்துக்கு சற்று முன்பான வடிவத்திற்கு மாற்றியிருந்தான்.

“இதுதாம்ல ராக்கை, இதவச்சித்தான் சங்க அளக்கணும்; தீல வாட்டி எடுத்ததும் பாரு அப்ப தெரியும் உனக்கு” என்றான். அதுவரைக்கும் சேர்த்து வைத்திருந்த சங்குகளை எல்லாம் குழிநெருப்பில் போட்டு சுட ஆரம்பித்தான். வாடை குடலைப் புரட்டியது. பாசி கரிந்த மேற்பரப்பைச் சுரண்டி, பளபளப்பேற்றி, தேய்த்து தேய்த்து மெருகுபண்ணி கையில் கொடுத்தபோது, என்ன வளவளப்பு என்கிறீர்கள் அதற்கு.

“இதை என்ன பண்ணுவீங்க”

“வெள்ளக்காரனுங்க வாங்கிட்டுப் போவான். பெருசுன்னா ஆயர்ரூவா ஐநூர்ரூவா கிடைக்கும் இது சின்னதுதான முந்நூறு தேறும்”

“நீ பார்த்ததுலே பெரிய சங்கு எவ்ளோ பெருசு இருக்கும்?”

“உன் தல தண்டிக்கு இருக்கும்”

“அடேயப்பா..” எனக்கு எனக்கு சங்கை ஊதவேண்டும்போல ஆசையாக இருந்தது.

”அதுக்கு மூக்கை அறுக்கணுமே” என்றான். சங்கின் மூக்கைத்தான்.

திருச்செந்தூரில் நமக்கு வேண்டப்பட்ட பண்டாரம் ஒருத்தர் இருக்கிறார். அவரைப் பற்றி வலசையில் எழுதியிருக்கிறேன். “அந்த முருகன் மட்டும் கோயில விட்டு வெளியே வரட்டும், அவன் செவுட்டுலே அடிக்கனா இல்லையா பாரு” என்று திரிந்துக்கொண்டிருப்பவர். கப்பல் வியாபாரத்தில் நடுத்தெருவுக்கு வந்து பண்டாரம் ஆனவர். ரெண்டு சங்குகளை ஒரே நேரத்தில் தம் கட்டி ஊதுவார். அப்படியே கை மயிர் எல்லாம் மிரண்டு சிலிர்த்துவிடும்.

மூக்கு அறுத்து, பித்தளை வாய் பொருத்தி, முனையில் நாகலிங்கம் வைத்த பெரிய சங்கு ஒன்று அவர்கிட்டே உண்டு. ஒட்டு உதடு வைத்து அழுத்தி, மெதுவாக ஊதுகிறபோது ஒலிக்கிற “சங்கநாதம்’ கடைசி வரைக்கும் என் வாயில் இருந்து வரவேயில்லை.

சமீபத்தில் குமரிக்குப் போயிருந்தபோது , அகரமுதல்வன் சங்கநாதம் முழங்கிக் காண்பித்தார். போர் மறம் விளைந்த நிலத்துக்காரர் இல்லையா. அவர்கிட்டே பேசினால் பல விஷயங்கள் என் திருநெல்வேலி வாழ்வுக்கும், அவரது கிளிநொச்சி வாழ்க்கைக்கும் ரொம்பவும் நெருக்கமாய் இருக்கும். வித்யாசமே தென்படாது. 

அவ்வை மேன்மக்களுக்கு அடையாளமாகச் சொன்ன இந்த சங்கொலியை, எங்கள் ஊர்களில் நான் முதன்முதலாக சாவொலியாகத்தான் கேட்டேன் என்றால் நம்புவீர்களா! மணியடித்துக்கொண்டே சாவு அறிவிக்க சங்கு முழங்கின குடிக்காரர்தான் நான் என் வாழ்க்கையில் முதன்முதலில் நேரில் கண்டு ஆட்டோகிராப் வாங்காத மியூசிஸியன்.

பிறகு இந்த வீர வைணவம் வெற்றிநடைபோடுகிற கோயிலில் சங்கு முழங்குவார்கள். வீரசைவர்களின் சங்கநாத முழக்கம் வைணவத்திலிருந்து வேறுபட்டு அது ஒரு தனி கம்பீரத் தொனியாக ஒலிப்பதாக நம்புகிறேன். ஆயனுக்கு முதல் இசைக்கருவியே காற்றுக்கருவி தானே. எங்கள் ஊரிலும் ஒரு ஆயக் கொம்பூதி இருந்தார். இளங்கன்று கிடாரிப் பருவம் தாண்டிய போது அரையடிக்கு முளைவிட்டு நிற்குமில்லையா கொம்பு. அதில் ஒன்றை மெழுகாய் தீட்டி, காற்றூதுவார்.

அதற்கு திமிரிக்கொம்பு என்று பேரும் சொல்லுவார். இன்னும் கொஞ்சம் பெருசுக்கு பாரிக்கொம்பு என்று பேர். கொம்பை விட இன்னும் பெரிது தாரை. நல்ல மேல் வளைவும், கீழ் வளைவுமாக வாய் பிளந்து கனமாக இருக்கும். தூக்கி வாயில் முட்டுக்கொடுத்து, தூக்கி ஊதுவதற்கு தனி வலுவேண்டும்.

திருநெல்வேலியில் தாரை ஊதுகிறவர்கள் ஒரு குடும்பமாகவே வாழ்கிறார்கள். தேரோட்டத்திற்கு திருமறைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகிறபோது பெரியாள் முதல் சின்னவன் வரைக்குமாக தாரை ஊதுகிறார்கள் இன்றைக்கும். அவர்களின் மூதாதைகளுக்கு பதிமூன்றாம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைக்கு நாலரை அச்சு சம்பளம் வழங்கி இருக்கிறான் என்கிற சேதியை கல்வெட்டு ஒன்றில் வாசித்திருக்கிறேன்.

அது நெல்லையப்பன் கோயிலின் கிழக்குச் சுவரில் 1230ல் எழுதப்பட்டிருக்கிறது. “ஸ்ரீ கோமாற பன்மரான திரி புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு பதினைஞ் சா வது … என்று இடையிலே ஆரம்பித்து, “கை ஒன்றும்.. தாரை ஊதிகள் பேர் இரண்டுக்கும் சின்னமூதி பேர் ஒன்றுக்கும் …” என்று குறிப்பிட்டு அவர்கள் பத்துபேருக்கு தலைக்கு நாலரையாக நாற்பத்தைந்து அச்சு சம்பளம் அளித்ததை அப்போதே ரெக்கார்டாக தமிழில் எழுதிவைத்திருக்கிறார் மாறவர்மன் சுந்தரபாண்டியன்.

எனக்கு அந்தக் கல்வெட்டு ஏன் நினைவில் இருக்கிறதென்றால் அந்தக் காலத்தில் தாரை ஊதுகிறவர்களில் ஒரு சாரருக்கு ‘சின்னமூதிகள்’என்று பேர்வைத்து அழைத்திருக்கிறார்கள். அந்த விஷயம் கல்வெட்டிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. பொதுவாக, “ஏ… மூதி” என்பது திருநெல்வேலியில் ஆளைத் திட்டுகிற சொல். அது இங்கே ஓர் இசைக்குடும்பத்துக்கு வழங்கப் பட்டிருக்கிற பேராக நிலைத்திருக்கிறது இன்றைக்கும்.

வசைச் சொற்கள் பின்னாலே போ உனக்கு ஒரு வரலாறு கிடைக்கும் என்று கி.ரா சொன்னபோது இந்தத் தரவு எனக்குப் பெரிய கண்டடைதலாக அமைந்தது. மூதி கதையை நான் அவருக்குச் சொன்னதும், சீதேவிக்கு அக்கா ஒருத்தி இருக்கா அவ பேர் மூதேவி. திட்டுலே மூத்தவனே, மூதி, மூதேவி எல்லாம் அவளுக்கு பேர்தான். அவளைத்தான் வடக்கே ஜேஷ்டை அம்மன்னு கும்புடுதான். அவளுக்கு வாகனம் என்ன தெரியுமா! கழுதைதான் என்கிு இன்னுமொரு அக்கன்னாவை சேர்த்து எழுதி வைத்தார் கி,ரா.,

புல்லாங்குழல் பற்றி நமக்கு பேச பெரிதாய் ஒன்றுமே இல்லை. காரணம் நம் இசை ஆர்வத்தால் அதிகம் அசிங்கப்பட்டது பீச்சில் விற்கும் புல்லாங்குழல்காரரிடம் தான். ஒருதடவையாவது ராகமாக இசைத்து விடவேண்டும் என்கிற பகீரதப் பிரயர்த்தனத்தில் ஒரு எள்ளைக் கூட இன்னும் கிள்ளிப் போடவில்லை. கார்னி என்கிற நம் சக தொழில்காரன் எழுதுகிறான். ப “ர்மியர்களில் சில புத்த அனுஷ்டானிகள் சாவை வரவேற்க மனிதனின் கல்லறைகளில் இருந்து திருடி எடுக்கப்பட்ட தொடை கீழ் எலும்பை புல்லாங்குழலாகப் பயன்படுத்தி இடுகாடுகளில் அமர்ந்து தியானம் பண்ணுவார்கள் என்று. கொல்காரனுங்களா!

யோசித்துப் பார்த்தால் காற்று இசைக் கருவிகள் மேல் எனக்கு ஒரு தீராப் பிரியம் இருந்திருக்கவேண்டும். கோயில் கொடைக்கு கொட்டு வாசிக்கிறவரோடு என்சோட்டுப் பயல்கள் எல்லாரும் ஒட்டிக்கொண்டு ஆட, நான் மட்டும் நாதஸ்வரக்காரரின் தொண்டையைக் கவனித்துக் கொண்டிருந்தேன் என்றால் சும்மாவா! அவருடைய பட்டுநூல் சுற்றின சீவாளியை எடுத்து சத்தமாக ஒரு ஊது ஊதிவிட்டு ஓடின ஓட்டம் நெஞ்சுக்குழிக்குள்ளே இருக்கிறது.

மழையில் நனையாமல் பிளந்துபோட்ட விறகு எரிய அடம்பிடிக்கிறபோது ஊதாங்குழல் வைத்து அடுப்பு ஊதுகிற வயசில் ஆரம்பித்தது நம்முடைய இசை முயற்சி. இன்றைக்குவரைக்கும் ஒழுங்காக ஒரு விசில் கூட அடித்ததில்லை. அந்த விஷயத்தில் டிஸ்கவரி வேடியப்பன் அண்ணன் ஒரு தசாவதானி. முழு திரையிசைப் பாடலையும் விசில் சத்தத்தாலே பின்னியெடுக்கிறார். முட்டம் கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு அவர் ஊதலைக் கேட்டுக் கொண்டிருந்தோம் நானும் அகரனும் பாக்கியம் சங்கர் அண்ணனும்.

சங்கு, கொம்பு, தாரை, சீவாளி, புல்லாங்குழல், விசில் மிச்சம் விட்டது பாம்புக்கு வாசிக்கிற மகுடியை மட்டும்தான் போல. அது நமக்குக் கொஞ்சம் பயம் தரும் ஆர்கன். தனித்தனியாக எடுத்து வைத்துக் கவனிக்கிறபோதுதான் இந்தமாதிரி நிறைய விஷயங்கள் வரிசையாக வந்து குதிக்கிறது. எடுத்து ஊதலாம்ன்னு போனா வெறும் காத்துதான் வருகிறது. என்செய்வேன் சொல் அம்மையே!


-கார்த்திக் புகழேந்தி
24-03-2017


Wednesday, 22 March 2017

வெள்ளிக்கிழமை - கோடம்பாக்கம் | பாம்புச்சட்டை


கோடம்பாக்கத்துக் காரனுக்குத் தான் தம்பி தெரியும் வெள்ளிக்கிழமையின் வேல்யூ” என்பார் கணேசன் அண்ணன். அக்மார்க் ராஜபாளையத்துக்காரர். 2014ல் வற்றாநதியில் எழுதின ‘லைட்ஸ் ஆஃப்’ கதையைப் படித்துவிட்டு, “என் வாழ்க்கைடா தம்பி இது. உனக்கு என்னம்மோ செய்யணும்ன்னு தோணுது” என்று ஐநூறு ரூபாய் தாளை என் சட்டைப் பையில் திணித்துவிட்டுப் போனவர்.

கணேசன் அண்ணனுக்கு சினிமாதான் வாழ்க்கை. அதில் பெரிதாகச் சம்பாதித்துக் கொண்டதில்லை. ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு வீடுகிடைத்த சாலிகிராமத்தில் 90களின் இறுதியில் வந்து செட்டில் ஆகி, முந்நூற்றுச் சொச்சம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். ஏழோ எட்டிலோ டைட்டில்கார்டில் பேர் வந்திருக்கலாம்.


கனவுத் தொழிற்சாலையின் வாசலை ஏக இறைவனாக நினைத்துக்கொண்டு, சாஸ்ட்ராங்கமாக நான் விழ நினைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சினிமா எனும் கரையற்ற வெள்ளத்துக்குள் விழுந்துவிடாமல், என் சட்டையைப் பிடித்து இழுத்து வேறு கிளைக்குள் திருப்பி விட்ட வகைக்கு கணேசன் அண்ணன் என் வாழ்க்கைத் தடத்தில் முக்கியமான மனிதர். அவருக்கு கணேசன் என்கிற பெயரே ஒரு அடையாளச் சொல் அவ்வளவுதான்.

“சொல்லுவதைக் கேட்டுக்கோ நதிமூலம் ரிஷிமூலம் தேடாதே” என்பார். இங்கே பணம் விளையாடிக் கொப்பளிக்கிற இடம் ஒன்றாகவும். ‘அடுத்தென்னெ ப்ராஜக்ட் போய்கிட்டு இருக்கு’ என்று பார்க்கிறவர்களை எல்லாம் கேட்டுக்கேட்டே, தன்னைத் தேற்றிக் கொள்கிற பிரஜைகளின் வாழ்வு வேறாகவும், எடுத்த படத்தை திரையில் ஓட்டிப் பார்க்கிற வாய்ப்பே கிடைக்காமல் தலை நரைத்துப் போன இயக்குநர்களின் மன அழுத்தங்கள் மிகுந்த உலகம் இன்னொரு அவஸ்தையாகவும் இருக்குமென்கிற நிதர்சனங்களை எல்லாம் என் கண்முன்னே நிகழ்த்திக் காட்டியவர் கணேசன் அண்ணன்.உருப்படியாகச் சொல்வதற்கு அவர்கிட்டே நிறைய விஷயம் இருந்தது. எனக்கு கேட்பதற்கு காதுகளும் நிறைய நேரமும் இருந்தன. இந்த நேர்கோடுகள் தான் எங்களை ஒரே திண்ணையில் உட்கார வைத்துக்கொண்டது. பிறகு நான் வேலை, வருமான காரியங்கள் என்று திசைதிரும்பியதும் அண்ணனுடைய தொடர்புகள் குன்றிப்போயின. இலக்கிய உபன்யாச நிகழ்ச்சிகளிலும், கலை, தொல்பொருள் ஆகிய தடங்களிலும் ஈடுபட்டுக்கொண்டுருந்த நாட்களில் அண்ணன் அழைப்பார்.

“தம்பி வெள்ளிக்கிழமை காலையில உதயத்துக்கு வந்துடேன். நம்ம படம் ரிலீஸ் ஆகுது’ என்பார். அப்படி அவர் நம்ம படம் என்று சொல்கிற படத்தில் ஏதாவது ஒரு சின்ன வேலை அவர் செய்துகொடுத்ததாக இருக்கும். ஆயிரம் கைகளில் அவருடைய கையும் ஒரு அணில் கை. ஆனாலும் அவருக்கு அது தன்னுடைய படம்.

வெள்ளிக்கிழமை காலங்காத்தால தியேட்டர் வாசல்ல போய் நிக்கவா என்ற நினைப்புடன்‘ வேலை இருக்கேண்ணே’ என்றால் போதும், “சரி கவனி் அது முக்கியம்லா, சின்னதா ஒரு கேப் இருந்தா சொல்லு. சனிக்கிழமை சாயங்காலத்துக்கும் டிக்கெட் இருக்கு” என்று போனை வைப்பார்.


இங்கே நான் பேச வந்தது கணேசன் அண்ணன் பற்றியல்ல. பல கணேசன் அண்ணன்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்த கோடம்பாக்கத்தின் வெள்ளிக்கிழமைகளைப் பற்றி. அந்த வெள்ளிக்கிழமைகளுக்காக காத்திருக்கிற பல கணேசன் அண்ணன்கள் பற்றி, அந்த கணேசன் அண்ணன்களை இன்னும் சினிமாவை நேசிக்க வைக்கக் காரணமாக இருக்கிறதே ஏதோ ஒன்று. அந்த ஏதோ ஒன்றைப் பற்றி.


மனத்துக்குள் கதை உருவாக்கி, உருவாக்கின கதையைத் தயாரிப்பாளரிடம் சொல்லி, அட்வான்ஸ் வாங்கி, அலுவலகம் போட்டு, ஆர்ட்டிஸ்டுகள் தொடங்கி திரைப்படத்துக்கான மொத்த குழுவையும் ஒருங்கமைத்து, பட்ஜெட் கணித்து, பூஜையைப் போட்டு, ஷெட்யூல் வாரியாக படப்பிடிப்பு நடத்தி, சூரையை உடைத்து, போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்து, இடையிடையே சினிமா வாராந்திரிகளுக்குத் தீனியாக செய்திகளும், விளம்பரங்களும் கொடுத்து, இசைவெளியீடு, சென்சார் போர்டு, டீஸர், ட்ரெய்லர், என்று கண்டங்களைக் கடந்துவந்து வெள்ளிக்கிழமை திரையை எட்டுகிறவரைக்கும் ஒரு சினிமாவுக்குப் பின்னாலான பல அடுக்கு உழைப்பு இருக்கிறதை மறுக்க முடியாது.

அத்தனை உழைப்புக்கும், உழைப்பாளர்களுக்கும் மத்தியில் தயாரிப்பாளர் என்கிற முதலீட்டாளர்களின் குதிரை சேனத்தில் உட்கார்ந்துகொண்டு, கூடே இருந்து அரசியல் பண்ணுகிற வர்களையும், சுருட்டல்காரர்களையும், ஏமாற்றுப் பேர்வழிகளையும், கையாலாகாதவர்களையும், பணந் தின்னிகளையும், முன் ஒன்று சொல்லி புறம் ஒன்று செய்கிற அக்கிரமனையும், அவமானம் செய்கிறவனையும், நம்பிக்கையைக் கொல்கிறவனையும், பொய்யனையும், என்று அத்தனை கெட்டதுகளையும், கொஞ்சமே கொஞ்சம் நல்லதுகளையும் அனுசரித்துச் சகித்து, வேண்டியமட்டும் எதிர்த்தும், அரவணைத்தும் ஒரு திரைப்படத்தின் உயிர்நாடியாக நிற்கிற இயக்குநர்களுக்கு இந்த வெள்ளிக்கிழமை நாட்கள்தான் தீபாவளி.

தேவி கருமாரி தியேட்டர் வாசலில் நின்றுகொண்டு, இதே தியேட்டரில் நம்முடைய படத்துக்குக் முதல் காட்சிக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று கனவு காணுகிற இயக்குனர்களை அணுகி நின்று, அவர்கள் வாழ்க்கையை கண்டுணர்கிறபோதுதான், ஒரு கருவைச் சுமக்கிற தாயின் அவஸ்தைகள் பற்றின பெரும்புரிதல் எனக்குள் ஏற்பட்டது. அந்த வகையில் இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை எனக்குக் கொண்டாட்டமானது.


‘பாம்புச் சட்டை’ படத்திற்காக நான் கணேசன் அண்ணனாக மாறி நிற்கிறேன். அவர் அதை விரும்புவாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. “திரும்ப இங்கேயேதான் வந்து நிக்கியா” என்பார். ஆனால், எனக்கு நிற்பதற்கான தளம் என்று இன்றைக்கு ஒன்று இருக்கிறது. நான் சினிமாக்காரனாக இல்லையென்ற போதிலும் எனக்கு சினிமா அந்நியமில்லாமலாகிவிட்டது. எங்கள் இயக்குநருடைய கனவை முதல்தடவையாகத் திரையரங்கத்தில் காணுகிறோம். 

“சத்துள்ள படமா இருந்தா அது அடுத்தவாரம் வரைக்கும் தாங்கும்” என்கிற கோடம்பாக்கத்து நிதர்சனத்தை எதிர்நோக்கி, இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கிற கனம் ஒருமாதிரி தகிப்பாகத்தான் இருக்கிறது. அதேநேரம் சந்தோஷத்தையும் கொடுக்கிறது. நேற்றைக்கு ஆடம்தாசன் சாரைச் சந்தித்தபோதும் இதே வார்த்தைகளைத்தான் சொன்னார்.


பெரிய ப்ரமோஷன்கள் இல்லை. டி.வி.ஷோக்களில் கதாநாயகன் நாயகிகளைக் கூப்பிட்டு வைத்து நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. தேவையான அத்தனை வெளிச்சங்களிலிருந்தும் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் இந்த வெள்ளிக்கிழமையின் பெரிய பேனர் படங்களில் பாம்புச்சட்டை தன் சத்துக்களோடு முன்னேறி வந்து நிற்கிறது.


திரைக்கதை எழுதும்போது ஒரு வசனம் வைத்திருந்தார் இயக்குநர். “உடம்போ வாழ்க்கையோ எவ்வளவு அடிவாங்கினாலும் எவன் மனசு தளராம இருக்கானோ அவனாலதான் திரும்ப எழமுடியும். எவனால திரும்ப எழுந்திருக்க முடியுமோ அவனால தான் ஜெயிக்கவும் முடியும்” என்று அதை அவர் எழுதும்போதும் எப்படி எழுதினாரோ, ஆனால் படம் அப்படித்தான் எழுந்து நிற்கிறது.


தேவி கருமாரியோ ஜாஸ் சினிமாஸோ நண்பர்களை போனடித்துத் திரட்டி வைத்திருக்கிறேன். “பிரதர் வெள்ளிக்கிழமை காலையில நம்ம படம் ரிலீஸ் ஆகுது. வந்துடுங்க” என்று, வாழ்த்துகள் Adam Dasan Sir. 
-கார்த்திக் புகழேந்தி
22-03-2017


Monday, 20 March 2017

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து

ங்கள் நண்பர் குழுவில் உள்ளவர்களில் தரகர் காண்பிக்கிற பெண்ணுடைய போட்டோ பார்த்து, பெண்ணைப் பிடித்துப்போய், அட்ரஸ் விசாரித்து, நாள் நட்சத்திரம், ஜாதகப் பொருத்தங்கள் பார்த்து, கும்பலாகப் போய் காபி குடித்து, பேசிப்பேசி திருமணம் முடித்தவர்கள் அதிகம்.

 என்றாலும் மனசுக்குப் பிடித்த பெண்ணைக் காதலித்து, பெற்றோர், சாதி,சமூக எதிர்ப்புகளை மீறி, நண்பர்கள் சூழ்ந்து பதிவுத் திருமணம் பண்ணிக் கொண்டவர்கள் எண்ணிக்கை கணிசமானது. மிச்ச சொச்சமான என்போன்ற சிலர் இன்னும் கிணற்றடி கல்லில் உட்கார்ந்துகொண்டு எப்படா தள்ளிவிடுவார்கள் என்று காத்திருக்கிறோம் என்பது வேறு விஷயம்.

   இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துவைத்த பரபர அனுபவங்கள் பற்றி வெளியே இதுவரைக்கும் வாய் திறந்ததில்லை. காரணம் இதிலெல்லாம் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்று தெரிந்தாலே எங்கள் வீட்டில் என்னைக் கட்டிவைத்து தொலியை உரித்துவிடுவார்கள் என்ற பயம் தான். அப்படியும் அண்ணன் ஒருத்தர் ஆணவக்கொலைகள் பற்றின டாக்குமெண்ட்ரி ஒன்றிற்காக பெற்றோர்களின் மனநிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர்கிட்டே பகிர்ந்துகொண்ட விஷயங்களின் மூலம் பழைய நியாபகங்கள் கொப்பளித்தன.
   2009ல் ஊரில் இருந்து தான் விரும்பின பெண்ணைக் கூட்டிக்கொண்டு நட்ட நடுராத்திரியில் கோவை வந்து நின்றான் செல்வசிங் என்கிற நண்பன். “என்னடா சொல்லாம கொல்லாம இப்படி வந்து நிக்குற” என்று, பெண் வீட்டைத் தொடர்புகொண்டு விபரத்தைச் சொன்னோம். கொஞ்சம் ஸாஃப்டான குடும்பம் போல. “அவ இனி எங்க பொண்ணே இல்லை” என்று எங்களை உக்கிரமாகத் திட்டிவிட்டு போனை வைத்தார்கள்.
நண்பனிடமும் அந்தப் பெண்ணிடமும் அடுத்து என்ன செய்யலாம் என்றோம். “எங்க வீட்ல அப்படித்தான். கொஞ்ச நாள் போனா தானா சரியாகிடுவார்” என்றது அந்தப் பெண். இரண்டே நாளில் மருதமலை முருகன் சன்னிதியில் இருவர் திருமணமும் நட்புகள் சூழ நடைபெற்றது. நண்பனுக்குக் கோவையிலே வீடுபார்த்து, வேலையும் ஏற்பாடு செய்து வைத்தோம். பின்னாளில் அவர்கள் சொன்னதன் படியேதான் நடந்தது. பெற்றோர்கள் மனமிறங்கி ஒன்றுகூடிக்கொண்டார்கள்.
    பைக் விபத்தில் லேசாகத் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்குச் சென்ற பிஜூ என்கிற நாகர்கோயில் உறவுக்காரப் பையன், அந்த மருத்துவமனையில் வேலைபார்க்கிற செவிலியர் பெண்ணை சிகிச்சை பார்க்கப் போகிற சாக்கில் அடிக்கடி முகத்தைக் காண்பித்து விரும்ப ஆரம்பித்துவிட்டான். இரண்டுபேருக்குமிடையே காதல் மலர்ந்துவிட இந்து - கிறிஸ்தவ வேறுபாடு கிளம்பிவிட்டது. ‘வா பிள்ள போலாம்’ என்று ஒரு சனிக்கிழமை மாலையில் பக்கத்து ஊருக்கு பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய்விட்டான் பிஜூ.
    மறுநாளில் ஞாயிற்றுக்கிழமையில் பூதபாண்டி ஸ்டேஷனில் நாலைந்து போலீசார் முன்னிலையில் இரண்டுபேருக்கும் திருமணம் நடந்தது. சொன்னால் நம்புவதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். அவர்கள் திருமணத்துக்காக தோவாளை மார்க்கெட்டில் மாலை வாங்கிக் கொண்டு வந்ததில் இருந்து, லெட்ஜரில் கையெழுத்துப் போட்டு, தாலி எடுத்துக் கொடுக்கிறவரை எல்லா வேலையும் நானும் அக்காள் கணவரும் முன்நின்று கவனித்தோம். அடுத்தவாரத்திலே அம்மாவும் பெண்ணும் ஜோடிபோட்டுக்கொண்டு தெருவில் நடந்துபோனார்கள். பிஜூ மாமனார் வீட்டு மொட்டைமாடியில் அத்தானை சரக்கடிக்கக் கூப்பிட்டிருந்தான்.
      இங்கே பேஸ்புக்கிலேயே இருக்கிறான் பங்காளி ஒருத்தன். பேரைச் சொன்னால் அடிக்க வருவான். அவன் காதல் திருமணம் பண்ணிக்கொண்ட கதை படு சுவாரஸ்யமானது. கோவை, மேட்டுப்பாளையத்தில் நாங்கள் ரெண்டுபேரும் கணக்காளர்களாக பணிபுரிந்த அதே நிறுவனத்தில் காய்கனி செக்‌ஷனில் வேலைக்குச் சேர்ந்திருந்த பெண்ணை விரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அந்தப் பிள்ளையும் மாமா மாமா என்று அவனை உறவு சொல்லி அழைத்து உருகிக் கொண்டிருந்தது.
அவர்கள் இரண்டு பேருக்குமிடையே பரிமாறப்பட்ட கவிதைகள் அனைத்தும் அவன் என்கிட்டே இருந்து சுட்டவை. திடீரென்று ஒருநாள் பெண்வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடந்திருக்கிறது. இரண்டுபேருமாகக் கிளம்பிப் போய் பெண் வீட்டில் பேசினோம். ஒருத்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
   அத்தனை காலமும் சம்பாதித்த காசை வீட்டுக்கு அனுப்பி நல்ல பிள்ளையாக இருந்தவன், நான் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று நின்றதும் பொல்லாதவனாகப் பார்த்தார்கள் நண்பன் வீட்டாரும். இது ஆகிற கதை இல்லை. நீங்களா வந்தா உங்க ஆசீர்வாதத்தோடு நடக்கும் இல்லைன்னா நாங்களே பார்த்துக்குறோம்” என்றான். மொத்தக் குடும்பமும் வண்டிகட்டிக்கொண்டு திருச்செந்தூரில் வந்து நின்றது.
   பெண்வீட்டில் இருந்து ஒரு ஈ காக்கா இல்லை. கோயில் வளாகத்தில் கண்ணைக் ககசக்கிக்கொண்டிருந்த பிள்ளையிடம் “உன் அண்ணன் வந்திருக்கேன்னு நினைச்சுக்க’ என்றேன். விஷயம் செண்டிமெண்டாகப் போய்க்கொண்டிருக்க, மாப்பிள்ளைக்கு ஆச்சி “எம்பேரனுக்கு கல்யாணத்துக்கு முந்தி இன்னொரு மொட்டை அடிக்க நேந்திருக்கேன். மொட்டைய போட்டுட்டு நீங்க என்னத்தையும் பண்ணிக்கங்க” என்று நிலையாய் நின்றது. வேறு வழி. மண்டை நிறைக்க சந்தனம் தடவிக்கொண்டு ஒரு கல்யாண மாப்பிள்ளையை நான் முதல்முதலாகப் பார்த்தேன்.
   இப்போது ராமநாதபுரம் HDFC வங்கியில் பைக் ட்யூ வசூலிக்கும் வேலையில் இருக்கிறான். திருமணம் முடிந்து சரியாய் ஐந்து வருடம் முடிந்திருக்கும். பங்காளிக்கு மூணு வயசில் ஓர் ஆண் குழந்தை. அனு என்கிற மனைவி பெயரையும் சந்திரா என்கிற அம்மாவின் பெயரையும் இணைந்து அனுசந்த் பையனுக்குப் பேர் விட்டிருக்கிறானாம். என்னடா ராஜஸ்தான் சேட்டு மாதிரி பேர் வைச்சிருக்க என்றேன். அடியோ புடியோ இரண்டுபேரும் நன்றாக இருக்கிறார்கள்.
    மேலே சொன்ன மருதமலை கல்யாண ஜோடிகளுக்கு முதல் பிள்ளை பிறந்ததுமே மாமனார் மாமியார் என்று படையெடுத்துவந்து ராசியாகி, பேர் விடுகிற வைபவத்தில் சீர்வரிசைகளை அள்ளி அடுக்கி அசத்தி விட்டார்கள். ரெண்டாவது ஜோடி கதைதான் முன்னமே சொன்னேனே. நாகர்கோயில் மருமக்கள் 100பவுனுக்குக் குறைவில்லாமல் மகளுக்குப் பூட்டி, மாப்பிள்ளைக்கு புது வண்டியும் திருமணத்திற்குப் பிறகு வாங்கிக் கொடுத்தார்கள். பிஜூ இப்போது பார்த்தாலும் அவ்வளவு அன்பாய் இருப்பான். நாங்கள் கூட்டணி சேர்ந்தால் கட்டாயம் ஒரு மலைக்கோழி காவு கொடுக்கப்படும்.
     இந்த திருச்செந்தூரில் மணம் முடித்தானே ராம்நாட்டுக்கார பங்காளி. அவன் மானஸ்தன். ஒரு பொட்டு நகையோ பணமோ உன் வீட்டில் இருந்து வாங்கக்கூடாது என்று இன்னைக்கு வரைக்கும் தன் பெஞ்சாதியிடம் பிடிவாதமாகவே இருக்கிறானாம். உனக்காகத்தான்டா பங்கே நேற்றைக்கு நீயா நானா டாபிக்கே என்றேன். சிரிக்கிறான்.
    “எங்க வீட்டில் நகைநட்டுன்னு எதையும் எதிர்பார்க்கமாட்டாங்க” என்று நானும் என்பங்குக்குச் சொல்லிப் பார்த்தேன். “உங்களுக்கு வேணாம்னா போங்க, அதுக்குன்னு நான் என்ன கழுத்தில் காதில் ஒண்ணுமில்லாம வந்து நிப்பேனோ. அதெல்லாம் எங்கவீட்ல இருபத்தஞ்சு பவுன் ஏற்கனவே சேர்த்து வச்சிருக்காங்க. அதுபோக எங்க வீட்டையும் என் பேருக்கு எழுதித் தரச் சொல்லி கேட்டுட்டு இருக்கேன்” என்றது அம்மணி. ‘தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்’ அதற்கு அர்த்தம் இதுதான்.
-கார்த்திக் புகழேந்தி

20-03-2017Thursday, 9 March 2017

வற்றாநதி தந்த அன்புசெய் மனங்கள்

Image may contain: 1 person, standing, hat, beard and outdoor              கார்த்திக் புகழேந்தி ... கார்த்திக் புகழேந்தின்னு ரெண்டு பேரா ன்னு கேட்டராதீங்க... ஒருத்தர் தான்.... அவரின் கதைகளையும், கவிதை களையும் வாசித்துவிட்டு அப்படியே சில மணிநேரங்கள் அந்த நொப்பத்திலேயே இருந்து கிடந்திருக்கிறேன். எதார்த்தம் துளிர்க்கும் வரிகளில் ஏன் சிலமுறை அழுது அரற்றியிருக்கிறேன். 

அவரின் சீர்மேவும் வரிகளில் ஆழ்ந்து பயணித்துக் கொண்டிருப்பேன்..திடீரென வரும் நகைச்சுவைக்கு இடம் பொருள் எதுவுமின்றி இடிச் சிரிப்பை உதிர்த்துவிட்டு என்னவென்று கேட்பவருக்கு இதனால்தான் இப்படிச் சிரித்தேன் என்று சொல்லத்தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துப்பின் வெட்கமாய் குனிந்திருக்கிறேன். நட்பு, தாய்மை, தோழமை, அதோடு தித்திக்க தித்திக்கக் காதல் என்று தமிழ் பேசும் நெல்லைக்காரர்.

வரிகளைப்பார்த்து வயதை அனுமானித்து ஏமாந்த ஏராளம் பேரில் அடியேனும் ஒருவன். நிறையப் பேசியதில்லை. ஆனால் நிறையத் தெரிந்துகொண்டேன். "வற்றாநதி" என்ற தனது முதல் நூலின் மூலம் "பொருநை" (தாமிரபரணி) நதியோரத்து மக்களின் வாழ்வியல்களை, அன்பு பெருக்கெடுக்கும் தருணங்களை, நமக்கெல்லாம் இதுபோன்ற நட்பெதுவும் வாய்க்காதா என்று ஏங்க வைக்கும் நட்பின் உயர்ச்சிகளை, போகிற போக்கில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுகின்ற வழக்கங்களை, கதைகளில் வலம் வரும் ஒவ்வொரு பாத்திரமும் என்னோடு பேசுவது போன்ற உணர்வுகளை என்று நான் அகத்திலே உணர்ந்தவை ஏராளம்..ஏராளம்.

"வற்றாநதி" தன் வரிகள் மூலம் தாமிரபரணி குறுக்குத்துறையில் என்னை நீராட்டி, நெல்லைச்சீமை மக்களோடு என்னை பேச வைத்து, சில முறை என்னையும் அவர்களோடு ஏங்கவைத்து, அழ வைத்து, நிறைய நெகிழ வைத்து, இன்னும் நிறைய வைத்துகளை சொல்லலாம்...

நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டுதான் படித்து முடித்தேன். ஆசையாய்ப் படிக்க எடுக்கும் போதே மகன் விளையாடக் கூப்பிடுவான் அல்லது வீட்டில் வேறு வேலை சொல்வார்கள். எப்போதும் இந்தப் புத்தகத்தையே வைத்திருந்த காரணத்தால் என் மகன் இது என்ன புத்தகம் என்றும் படத்தில் இருப்பவர் யாரென ஓர்நாள் வினவினான்? மூன்று வயதுடைய என் மகனுக்கு விளக்கமாய்ச் சொல்ல முனைந்து "கார்த்திக் புகழேந்தி" என்ற மாமா ஒருவர் எழுதிய கதைப்புத்தகம் என்றேன்.

எடுத்த எடுப்பிலேயே "கார்த்திக் சம்மந்தி" மாமாவா? என்றான்... திரும்பத்திரும்ப திருத்திச் சொல்லியும் பயனில்லை. இப்போது எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் "கார்த்திக் சம்மந்தி" மாமாவின் புத்தகமா என்று கேட்டுச் சிரிக்கிறான்.

நீங்கள் பொள்ளாச்சி வந்த நாளில் நானும் இருந்திருக்க பேராசை கொண்டிருந்தேன்... கடமையும், பணிச்சுமையும் என்னை அனுமதிக்கவில்லை. வருத்தமாய் இருக்கிறது. "வற்றாநதி" என்ற உங்களின் தலைப்பிலேயே இனி என்றும் வற்றாது உங்களின் தமிழ் நதி என்று உணர்ந்துகொண்டேன். அருமை.. அருமை...மனம் நிறைந்த பாராட்டுகள்...ங்க சம்மந்தி !! இன்னும் நிறைய உங்களிடம் எதிர்நோக்குகிறோம்...  


-நப்பின்னைநந்தன்
Devanurpudur DrAnbu Selvan )

Monday, 6 March 2017

ஊருக்குச் செல்லும் வழி - பதில் கடிதம்

”ஊருக்குச் செல்லும் வழி – கார்த்திக் புகழேந்தி”


Image may contain: 1 person, sitting and indoor    அண்ணன் கார்த்திக்.புகழேந்திக்கு வாழ்த்துகள்.

        நேற்றுதான் அவர் எழுதிய “ஊருக்குச் செல்லும் வழி” கட்டுரைத் தொகுப்பு படிக்க நேர்ந்தது. கி.ரா-வின் வளர்ப்பு சோடைப் போகாது என்று மீண்டுமொருமுறை நிருபித்துள்ளார் கா.பு. நானும் திருநெல்வேலிக்காரன் என்பதால் நிறைய இடங்களில் புத்தகத்தில் இருந்த எழுத்துக்கள் காட்சிகளாக மனக்கண் முன் விரிந்துச் சென்றது.

ஆவி பறக்கும் இட்’டி’லி; இதன் தலைப்பே மனதுக்கு நெருக்கமானதாக இருந்தது. ‘இட்லி’ என்பதே எழுத்து வடிவம் ஆனால் அதை இட்டிலி என்ற எழுதுவதன் மூலம் நம்முடன் இயல்பாக உரையாட தொடங்கிவிடுகிறார். ஒரு நிகழ்ச்சியை விவரிப்பது என்பது அதை நம்முன் நிகழச் செய்வதை போலிருக்க வேண்டும். அந்த வகையில் பெண் பார்க்கும் படலத்தின் போது ஒரு வீட்டில் நடக்கும் நிகழ்வை அந்த வீட்டின் சூழலோடு அழகாக விவரித்திருப்பார்.

இவருக்கும் எனக்கும் இன்னொரு ஒற்றுமை. அவர் படித்தது கிறிஸ்து ஜோதி, நான் கிறிஸ்து ராஜா மேல்நிலைப்பள்ளி. ரெண்டும் ஒரே குழுமம் தான். அவர் ஹாக்கி, நான் ஹேண்ட் பால்; அவரும் சப்ஸ்டியூட், நானும் சப்ஸ்டியூட்! ’ஊருக்குச் செல்லும் வழி’யில் ஒரு வரி வரும், ”மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு இடையே உள்ள தூரத்தை கடக்கும் அவகாசம்தான் உலகிலே கொடுமையான சித்ரவதை நிறைந்த தருணம்”. கிளாஸிக்!

அரங்க ஆட்டத்தில் வரும் தியேட்டர்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் நெருக்கமானதாய் தோன்றின. அந்த பாளை பஸ்-ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் (கமிஷ்னர் ஆபீஸ்) சுவர்தான், ராம்-முத்துராமின் ஆஸ்தான விளம்பர ஸ்தலம். பேருந்தில் அந்த இடத்தை கடக்கும்போதெல்லாம் அதில் வரைந்திருக்கும் நடிகர்களின் படங்களை வாய்ப்பிளந்து பார்ப்பதே பேருவகையாக இருக்கும். திருநெல்வேலிக்காரனுக்கே அதனருமை புரியும்! (இப்போது லக்ஷ்மி தியேட்டரும், பார்வதி தியேட்டரும் திருமண மண்டபமாகிப் போனது)

’பேருயிர்’ என்ற தலைப்பில் யானைகள் குறித்து எழுதியிருப்பார். இந்த தொகுப்பில் என் மனதுக்கு நெருக்கமானது இதுதான். அழியும் பேருயிர் புத்தகத்தையும் வாசிக்க வேண்டும்! இன்னொரு முக்கிய பகுதி ’அம்மன் சன்னதி’. இதுகுறித்து தி.க.சி, புதுமைப்பித்தன், வண்ணதாசன், நெல்லை கண்ணன் என்று அனைவரும் எழுதியாகிவிட்டது. ஆனால் இன்னமும் அதுகுறித்து எழுதி எழுதி உய்யலாம். அதுதான் அதன் சிறப்பு. மேலும், திரு. நெல்லை கண்ணனின் தமிழுக்கு நான் ரசிகன் என்றாலும் அவர் குறித்து எனது பார்வை வேறு என்பதால் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. 

’வணங்கான் கதை’. இதை ஏற்கனவே அறம் தொகுப்பில் படித்திருப்போம். மீண்டும் எதற்கு இதிலும் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. ’தண்ணீர்’ குறித்து அண்ணன் கா.பு எழுதியிருப்பது சற்று முக்கியமான விஷயம். இதற்கு முன்பு கழனியூரனிடம் நெல்லை தமிழையும், நாஞ்சில் நாடனிடம் ’நாரோயில்’ தமிழையும், சமீபமாக என்.ஸ்ரீராமின் எழுத்துக்களில் கொங்கு நாட்டு தமிழையும் வாசித்து இருக்கிறேன். அந்த வகையில் இவர் திருநெல்வேலி தமிழில் அநாயசமாக அடித்து ஆடுகிறார். இயல்பாகவே அண்ணனிடம் நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதை தன் எழுத்துக்களிலும் அங்கங்கு தெளித்துவிடுகிறார்; தெறிக்கவிடுகிறார்!!

புத்தகத்தைப் படிக்கையில் முகத்தில் ஒரு புன்னகை இருந்துக்கொண்டே இருக்கிறது, இறுதிவரை. ஆனால், படித்துக்கொண்டிருக்கும் போதே திடீரென்று ஒரு சந்தேகம்; இவையெல்லாம் கட்டுரைகள் தானா? என்று. கவனித்துப் பார்த்தால் தெரியும் இதில் எங்குமே கட்டுரை என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியிருக்கமாட்டேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை நேற்று முன்தினம் நாஞ்சில் நாடனின் ‘காவலன் காவான் எனின்’ என்ற கட்டுரைத்தொகுப்பை படித்ததுக் கூட காரணமாக இருக்கலாம். அதில் எண்ணிப்பார்த்தால் பத்து பன்னிரெண்டு கட்டுரைகள் தான் இருக்கும். நான் எண்ணிக்கை மட்டும் காரணமாக சொல்லவில்லை. அவை ஒவ்வொன்றும் அத்தனை செறிவான கட்டுரைகள். அனைத்திலும் ஒரு டீடெய்லிங் இருந்தது. ஆனால், கா.பு,வின் இந்த தொகுப்பில் அந்த டீடெய்லிங் மிஸ்ஸிங்.

அவரது முகநூல் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் இது அவரது முகநூல் பதிவுகளின் ஒரு தொகுப்பாகத்தான் எனக்குத் தெரிகிறது. சென்ற வருடம் இன்னொருவரும் இதேப்போன்று தனது முகநூல் பதிவுகளை புத்தகமாக்கினார். ”அதான் உங்க பதிவுகளை முகநூல்லயே படிக்குறோமே அப்பறம் எதுக்கு காசு கொடுத்து வேற வாங்கிப்படிக்கணும்?”னு ஒரு நண்பர் அவரிடம் கேட்டதாக ஞாபகம். எனக்கும் அது சரியென்றே தோன்றியது. 

ஒருவேளை மொத்த பதிவுகளை தொகுக்க வேண்டும் என்று நினைத்தால் பிடிஎப்-ஆக தொகுத்து, கேட்பவருக்கு அளிக்கலாம். முகநூல் பதிவுகளை புத்தகமாக்க விரும்பினால், அட்டையிலே போட்டுவிடுங்கள் ”இது எனது முகநூல் பதிவுகளின் தொகுப்பு” என்று. தொகுப்பை வாசித்த (விமர்சித்த) எவரும் இதைப்பற்றி பேசாதது ஏனென்று தெரியவில்லை. எழுதுபவனுக்காக பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்துக்காக பேசுவது மட்டுமே எழுத்தாளனுக்கு சரியான அங்கீகாரம்.

மற்றொரு விஷயம் இதில் வரும் வெகு சில அத்தியாயங்களை தவிர பெரும்பாலான அத்தியாயங்கள் தன் வரலாறு போலவும், சுயசரிதை போலவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. நான் அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று சொல்கிறார், சரி, அப்புறம்? என்று கேட்கையில் ”அவ்வளவுதான்” என்று முடித்துவிடுகிறார்.

ஒரு தருணத்தில் அண்ணன் சொன்னதுண்டு “நான் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்புவதில்லை” என்று. ஒருவேளை அவர் பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பினால் இன்னும் செறிவான கட்டுரைகளை அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். முகநூலிலே எழுதுவதால் ஒரு தேக்கம் ஏற்படுகிறதோ என்று தோணுகிறது. உள்ளுக்குள் ஓராயிரம் விஷயங்களை வைத்திருக்கிறார். அனைத்தையும் போட்டு உடைக்க வேண்டும்! என்பதே நேயர் விருப்பம்.

மீண்டும் சொல்லுகிறேன், அவனது எழுத்துக்காக பேசுவது மட்டுமே எழுத்தாளனுக்கு சரியான அங்கீகாரம்! எனக்கு பெரிய அளவு வாசிப்பனுபவமோ எழுத்தனுபவமோ கிடையாது. ”ஊருக்குச் செல்லும் வழி”யில் என்னவெல்லாம் மனதுக்குள் தோன்றியதோ அப்படியே கொட்டி வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்! ”ஊருக்குச் செல்லும் வழியை இன்னும் செம்மையாக சொல்லிருக்கலாம்”.
-பிகு
05-03-2017

**********************************************

Image may contain: 2 people, people smiling

**********************************************


அன்புத் தம்பிக்கு,

            வணக்கம், 
Image may contain: 1 person, beard and indoorஊருக்குச் செல்லும் வழி புத்தகம் குறித்தான உங்கள் பார்வையை மிகவும் ரசித்து வாசித்தேன். உங்கள் எழுத்தும் விமர்சனமும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும் என்கிற புரிதலோடுதான் உங்களது இந்தப் பதிவை வாசித்துமுடித்தேன். அதே புரிதலோடுதான் உங்களுக்கு இந்தப் பதில் பதிவையும் எழுதுகிறேன்.

கிராவுடைய வளர்ப்பு என்று நீங்களே சொல்லிவிட்டதால் என்னுடைய எழுத்தின் தளம் பற்றி நான் மேலதிக விபரம் ஒன்றும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்காது. ஆனாலும் நாம் பேசுவதற்குச் சில விஷயமிருக்கிறது. கதை, கட்டுரை, என்ற இரண்டு வடிவங்களுக்குள்ளும் பொருந்தாத ஒரு வடிவத்தில் எழுதிய குறும்பேச்சாடல்களின் தொகுப்புத்தான்  இந்த ஊருக்குச் செல்லும் வழி.

ஊ. செ.வ -யில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று நம்மிடம் கேட்கிற நண்பர்களுக்கு வாசகர்களுக்கு, அதனை அறிமுகப் படுத்தும்போது, இது ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று சொல்லவேண்டியதன் நிர்பந்தத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். வாசிக்கிறவர்களுக்கு நம்முடைய படைப்பு எந்த ரீதியிலானது என்று குறிப்பு கொடுக்க அந்த சொல்லின் அடையாளம் எளிமையானது. அதன் மூலமாக அவர்கள் கவனத்தில் இந்த நூலை முன்வைப்பது எனக்கு வசதியாகிறது. மற்றபடி என் தளம் கதையாடல்வழியாக பேசுவதுதான். முன்னுரையில் குறிப்பிட்டதுபோல “ஒரு நாடோடியின் வாய்ச்சவடால்கள் தான் இந்தக் கட்டுரைகள் வேறெதுவும் இதில் அதிகமில்லை.” என்பதே இந்தப் புத்தகத்திற்கான நியாயம். 

கி.ரா தாத்தா சொல்லுவார், “ஆண்டு, மாதம், நாள் நேரமெல்லாம் சொல்லி வரலாற்றைச் சொல்லுறது நம்முடைய வேலையில்லை. அது வரலாற்று ஆய்வாளன் பண்ணுகிற வேலை” என்று. என் கருத்தும் அதேதான். நான் ஒரு கதைசொல்லியாக என்னை வெளிப்படுத்துகிறேன். கதையில்வருகிற காக்காய்க்கு பசி அடங்காது. பாட்டிக்கு வயது மூக்காது. காலமிருக்கிற வரைக்கும் வடையைச் சுட்டுக்கொண்டும் திருடிக்கொண்டும், நரியிடம் இழந்துகொண்டுமே இருக்கும். ஆக டீட்டெய்லிங்குக்காக மெனக்கிடுவதும் இல்லை. அதேசமயம் போகிறபோக்கில் அடிச்சுவிடுவதும் இல்லை. 

அடுத்ததாக, நான் தான் முகநூலில் நீங்கள் எழுதினதை வாசித்துவிட்டேனே பிறகு எதற்கு புத்தகமாகவும் போட்டுக்கொண்டு என்று கேட்டிருக்கிறீர்கள். இதேப்போல, முகநூல் எழுதியதை புத்தகமாக்குவதை  ஒருவிதமான தரம்குன்றிய படைப்பாகப் பார்க்கிற மனநிலையும் நம்மவர்கள்  பலபேரிடம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஏனென்றும் தெரியவில்லை.  விகடனில் தொடராக வந்த பொன்னியில் செல்வனை இன்னும் அச்சுப்புத்தகம், ஆடியோ, வீடியோ, மேடை நாடகம், சினிமா முயற்சி என்று மாறி மாறி படைப்பாக்கிக் கொண்டிருக்கிறார்களே.. அது என்ன விதமான நியாயம்?

 எனக்கு எழுத்துச் சூழல் அறிமுகமானது மிகச் சில ஆண்டு இடைவெளிக்கு உள்ளேதான். அடித்தல் திருத்தல்களோடு எழுதத் தொடங்கி இருக்கிற ஆட்டக்காரன் நான். முகநூல் என்னுடைய  எளிய, அதேநேரம் பலப்பேரை சென்றடைய வாய்ப்புள்ள ஊடகம். இங்கே நான் என்னை மெருகேற்றிக் கொள்கிறேன். ஒரு வேடிக்கை பார்க்கிறவனாக இந்தச் சமூகத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து, அவற்றை எழுத்துகளாக்கிப் பழகுகிறேன். வக்கீல்களையும், டாக்டர்களையும் கேளுங்கள். தங்கள் வேலையை எப்போதும் ப்ராக்டீஸ் செய்துக்கொண்டிருக்கிறேன் என்பார்கள். என் பானியும் அதுதான்.

திருவிழாவில் மிட்டாய்க்காரர் செய்து காட்டுகிற வாட்ச் பொம்மைகள் மாதிரி விதவிதமாய் எழுதிப் பார்க்கிறேன். அவற்றில் தேர்ந்தவற்றை தொகுக்கும்போது, எங்கே எது நம்மை சீர் பண்ணியிருக்கிறது. எது நம் காலை வாரி இருக்கிறது என்ற முடிவுகளுக்கு வர முடிகிறது. ஆக, எழுதின மொத்தத்தையும் அள்ளிச் சொருகி வைக்கோல் மூட்டையாக புத்தகம் போடுவதென்பது கிடையாது, தொங்குச்சதை இல்லாத அளவுக்கு வேலைபார்த்ததை மட்டும் கடைவிரிக்கிறேன்.

கூடவே, இணைய வாசிப்புக்கும், புத்தக வாசிப்புக்குமான வித்யாசத்தை உங்களுக்கு நான் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. கேட்ஜட் சமூகம் காலை பத்து மணிக்கு வாசித்த சில வரிகளைச் சிலாகித்து, அதிலிருந்து விடுபட ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் புத்தக வாசிப்பு அப்படி அல்ல. அதனாலே முகநூல் பக்கங்களை புத்தகமாக்குவதில் எந்த குற்றமும் இல்லை என்கிறேன். அதைக் காசுக்கு விற்காமல் மின் புத்தகமாகக் கொடுங்கள் என்கிறீர்கள். நாட்டில் இலவசங்களுக்கு ஒருக்காலும் மதிப்பு கிடையாது. மாறாக, புத்தக விற்பனையில் கிடைக்கிற தொகையெல்லாம் கோடிகளில் குவியும் வணிகமும் இல்லை தமிழ்ச்சமூகத்தில்.

 “அட்டையிலே போட்டுவிடுங்கள் இது முகநூல் பதிவுகள் என்று” உங்களுடைய இந்த தொனி எப்படியானது என்பதை என்னால் புரிந்துக் கொள்ளமுடிகிறது. ஏனைய்யா வாசித்ததையே வாசிக்கச் செய்து, வாசகனை வதைக்கிறீர்கள் என்று கேட்பதுபோல என் காதுகளுக்குப் பட்டது. என்னுடைய இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வாய்ச் சவடால்களில் 30க்கு 20 இந்த சமூக ஊடகத்தில் எழுதினதுதான். ஆனால், அதில் ஏதோ ஒன்றாவது காலாவதியானதாகவோ, தேவையற்ற சொருகலாகவோ இருக்காது என்று நம்புகிறேன். அதை இன்னும் பலருக்கு புத்தக வடிவில் எடுத்துச் செல்கிறேன்.

 “வணங்கான் கதை’ இதை ஏற்கனவே அறம் தொகுப்பில் படித்திருப்போம். மீண்டும் எதற்கு இதிலும் எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை” என்று எழுதி இருந்தீர்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் தான் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டிருந்தீர்களா என்று. ‘அறம் ஓர் வாசிப்பனுபவம்’ என்று அந்நூல் பற்றி வாசக மதிப்புரை எழுதின பிரவீன் குமாரை எனக்குத் தெரியும். அதைப் படித்துவிட்டு அந்தத் தொகுப்பை வாங்கத் துடித்த ராம்குமார் என்கிற முதலாமாண்டு கல்லூரி மாணவனையும் எனக்குத் தெரியும். வணங்கான் கதையை ஒரு கதைசொல்லியாக நான் இன்னும் சிலபேருக்கு எடுத்துச் சொல்ல நினைக்கிறேன். உண்மையில் வணங்கான் யார் என்பதைப் பற்றிய விவாதத்தை அதன் கடைசிப் பத்தியில் நான் பேசியிருக்கிறேன்.

தன் வரலாறு, சுய சரிதை என்றெல்லாம் பெரிய வார்த்தைகளுக்கெல்லாம் போகவேண்டாம். நான் எழுதிக் குவிக்கிறது வாழ்க்கையைத் தான். நான் வாழ்ந்த, கண்ட, கேட்ட மனிதர்களின் கதையை பதிவு செய்வதுதான் என்னுடைய அறம். அதில் நான் மட்டும் இல்லை. நானும் இல்லாமலும் இல்லை. அவற்றை வாசிக்கிறபோது கொஞ்சமும் சொல்வதற்குச் செய்திகள் இல்லாமல்  வெறும் பானையைச் சுரண்டிக் கொண்டிருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்.

பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவதில்லை என்பது ஒரு கொள்கைசார் முடிவுதான். நமக்குள் இருக்கட்டும், தமிழின் பிரபலமான நாளேடுகளில் வாரம் ஒரு கட்டுரை வீதம், தகவல்களைத் தேடித் திரட்டி, பெரிய அரசியலாளர், முப்பது புத்தகம் போட்ட எழுத்தாளருக்கு இன்னைய தேதி வரைக்கும், எழுதிக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தவிர இதழியல் ஊடகங்களில் இரண்டு ஆண்டுகாலமாக பணி செய்து வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் பார்க்கிற இடத்தில் அல்ல.

ஆக, ஒரு காத்திரமான கட்டுரைக்கு எவ்வளவு மெனக்கிடல் வேண்டும் என்பதை அறிந்து, எழுதி, திருத்தி என்று இன்னொரு பக்க வேலைகளிலும் அனுபவம் கொண்டிருக்கிறேன். ஆக பத்திரிகை நம்மை மெருகேற்றும் என்பதிலெல்லாம் நீங்கள் நம்பிக்கை வைத்தால் அது தி.க.சி., தொ.மு.சி., காலத்தைய நம்பிக்கை. தவிர அங்கே கிடைக்கும் அங்கிகாரம் என்பது ஒரு வேடிக்கையான அரைக்கைச் சட்டை. எனக்கு இப்போதைக்கு அரைக்கை சட்டை மீது ஆசையில்லை.

ஊருக்குச் செல்லும் வழியை இன்னும் செம்மையாகச் செய்திருக்கலாம். ஆமாம் அதில் நிறைய சொதப்பியிருக்கிறேன். எழுத்துரு முதற்கொண்டு, எழுதியது, தொகுத்தது என்று நிறைய  மெருகேற வேண்டும். போகப் போக இன்னும் செம்மையாக்கிக் கொள்கிறேன். வளர்கிற பயிரப்பா நான். என்னைப் போய் நாஞ்சில் நாடன் கிட்டே எடுத்து வைத்தால் நான் என்ன செய்யட்டும் சொல். எனக்கு என்னை மாதிரி தான் எழுதவரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, “எழுத்துக்காக பேசுவது மட்டுமே எழுத்தாளனுக்கு சரியான அங்கீகாரம்” என்று ஒரு போடு போட்டிருந்தாய் அல்லவா. அந்த ஒரு வார்த்தைக்குத்தான் இவ்வளவு நீளமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய இந்த வார்த்தை தான் என்னை உறங்கவிடாது. தூக்கத்தைக் கெடுக்கும். போட்டு படுத்தும். என்ன எழுதிக் கொண்டிருக்கிறேனென்பதின் மீது கவனம் பெற வைக்கும். தவிர முகஸ்துதிக்காக பாராட்டுவதற்கும் கொஞ்சம் தலையை ஆட்டித்தான் வைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், உன் மாதிரி விமர்சனத்திற்குத்தான் மனசு திறந்து பதில் எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.

-கார்த்திக் புகழேந்தி
06-03-2017


There was an error in this gadget