ஆடுகளாய் இருங்கள்


Related image

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் 
பொன்றாது நிற்பதொன் றில்.
                                                                            -குறள் 233

        எங்கே விழுகிறோமோ அந்த இடத்திலே எழவேண்டும் என்பார் என் முன்னாள் நண்பர். அதற்கு அவர் கைகாட்டுவது குதிரையைத்தான். குதிரை மாதிரி இருக்கணும் நண்பா என்பார். அதுதான் விழுந்த இடத்திலே எழுந்து ஓட ஆரம்பிக்கிற விலங்கு. தன்னம்பிக்கையின் சூத்திரதாரி. நண்பரைப் பொறுத்தவரைக்கும் குதிரை என்பது அவரது மோட்டிவேஷன் ஐகான்.

அதேப்போல எனக்கும் ஓர் விலங்கு உண்டு. அது வேறொன்றுமில்லை ஆடு தான் அது. சாதாரண ஆடு அல்ல அது. கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஆடு. ஏன் எப்படி என்பதற்கு எழுத்தாளர் பாலகுமாரன் எழுதின சில வரிகளை நினைவில் இருந்து எழுதுகிறேன்.

“உலகிலேயே ஆடுகள் மண்டையால் முட்டி சண்டையிட்டுக் கொள்வதுபோல ஒரு முட்டாள்தனமான காரியம் இல்லை. ஆனால் கர்ப்பிணி ஆடுகள் ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை.

நிறைமாத கர்ப்பிணிக்கு தன் கருவின் மீது அபார நம்பிக்கையும், அன்பும் இருக்கும். கர்ப்பிணி அதிர்ந்து நடக்கமாட்டாள். ஆவேசம் கொள்ளமாட்டாள். அப்படிச் செய்தாள் நஷ்டம் அவளுக்கே. மாறாக, ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைப்பாள்.

நீ செய்து முடிக்க வேண்டிய காரியத்தை, ஏதோ ஓர் ஆளாக வேண்டிய விருப்பத்தை, ஏதோ ஒரு கர்ப்பிணி பெண் தாங்குவதைப் போலத் தாங்கு. எல்லா நேரமும், எதைச் செய்தாலும் கர்ப்பிணியின் சிந்தனைக் கருவிலே இருப்பதைப் போல, உன் உயர்வு குறித்த சிந்தனை உன்னிடம் இடையறாது இருக்கவேண்டும்.

வீண் வம்பிலோ, வீண் வழக்கிலோ ஈடுபட விரும்பாது எங்கேனும் சிக்கினாலும் நகர்ந்துகொள்கிற கர்ப்பிணியாய் இரு. கர்ப்பிணி தன் கருவை நேசிப்பதைப் போல, உன்னையும் நீ நேசிக்க வேண்டும். உன்னை நீ நேசிப்பது உன் நடையில், உன் உடையில் உன் பேச்சில், உன் செயலில் வெளிப்படும்.

பணிவாகவும் தெளிவாகவும் பேசு; சின்ன வாக்கியங்களை நிதானமாகப் பேசு. இன்றைக்குள்ள நிறைய இளைஞர்களுக்குப் பேசத் தெரியாது. உச்சரிப்பு சரி கிடையாது. காரணம் மொழியோடு பரிச்சயமில்லை. இதற்குக் காரணம் புத்தகங்களோடு தொடர்பில்லாததுதான்.

தினம் நாற்பது திருக்குறள்களை சத்தம்போட்டுச் சொல். அதன் அர்த்தத்தை உள்வாங்கு. திருக்குறளில் சொல்லி இருப்பதைப்போல் நடக்க முற்படு. நிதானமாகப் பேச முடியும். உன் மொழியில் உள்ள நல்ல நூல்களோடு உனக்குப் பரிச்சயம் உண்டெனில், உன் வாழ்க்கை சுகமாக ஆரம்பிக்கும். நீ தெளிவாகப் பேச, உன் எதிராளிக்கும் உன்னைத் தெளிவாகப் புரிய, ஆரம்பத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும்.

நடையில் பேச்சில் நேர்த்தி வரும்போது உன் செயலில் தன்னாலே மாற்றம் வரும். வேலையை முழுமையாக விரும்பிச் செய்வாய். வேலையை நேசித்துச் செய்கிறபோது வேலைகள் குவியும். நிறைய வேலை செய்தால் வீண்பேச்சு குறையும். வீண்பேச்சு குறைவான இடத்தில் சச்சரவே எழாது.

ஆனால், வாழ்க்கை அத்தனை சுலபமானதில்லை. நீ சரியாக இருந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடாது. நீ சரியாக இருக்கிறாய் அல்லது இருக்க முயற்சிக்கிறாய் என்பது தெரிந்தால் போதும். உன்னைக் கலைக்க பல மிருகங்கள் வரும். உன்னைக்கவிழ்க பலர் உறவாகவோ நட்பாகவோ வருவார்கள். அவர்களிடமிருந்து விலக முடியாத சூழல்கூட உருவாகும்.
தன் தேவையையும் பலத்தையும் முற்றும் உணர்ந்தவன் இவர்களை அமைதியாகச் சமாளிப்பான்.அவர்கள் பக்கமிருந்தும் விலகியும் தாமரை இதழ் தண்ணீரைப் போல் ஒட்டியும் ஒட்டாமலுமிருப்பான்.

சண்டை போடுகிற தகப்பன்,ஏமாற்றுகிற தமையன், கட்டிப்போடு என்கிற தாய், சுமக்கச் சொல்கின்ற தங்கை, ஏளனம் செய்கின்ற காதல், இங்கிதம் இல்லாத நண்பன் என்று உலகத்தில் பல வேதனைகள் உண்டு. மறுக்காதே ஏற்றுக்கொள். இவர்களைவிட்டு எங்கும் விலகமுடியாது. இவர்களோடு வாழத்தான் வேண்டும். மனத்திற்குள்ளே அவர்களிடம் விலகி இரு. உன் வேலைகளைக் கவனித்தபடியே இரு”

இப்படியாக ஒரு நான்கு பக்கத்துக்கு பாலா எழுதின பத்திகளை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் படித்திருக்கிறேன். என்னை ஓரளவுக்குத் தெளிவாகச் சிந்திக்க வைத்தம் நிதானமாக யோசிக்கவும் செயல்படவும் வைத்த புத்தகம் அது.

அதன் முன்னுரையில் கூட இயக்குநர் ஷங்கர் சொல்லி இருப்பார். "You Moved Me Bala இந்த மூன்று அத்யாயங்களையும் கிழித்து என் ட்ரெஸ்ஸிங் டேபிளில் ஒட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று.

ஆக, கர்ப்பிணி ஆடுகளாக இருப்பது அவ்வளவு சுலபமும் இல்லை. அவ்வளவு கடினமுமில்லை என்பதாக நான் பாலாவிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

-கார்த்திக் புகழேந்தி 
02-03-2017.


Comments

  1. // தினம் நாற்பது திருக்குறள்களை சத்தம்போட்டுச் சொல். அதன் அர்த்தத்தை உள்வாங்கு. திருக்குறளில் சொல்லி இருப்பதைப்போல் நடக்க முற்படு. நிதானமாகப் பேச முடியும். உன் மொழியில் உள்ள நல்ல நூல்களோடு உனக்குப் பரிச்சயம் உண்டெனில், உன் வாழ்க்கை சுகமாக ஆரம்பிக்கும். நீ தெளிவாகப் பேச, உன் எதிராளிக்கும் உன்னைத் தெளிவாகப் புரிய, ஆரம்பத் தொடர்பு நல்ல முறையில் இருக்கும். //

    இதை விட என்ன வேண்டும்...?

    வாழ்த்துகள்...

    நன்றிகள் பல...

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்