Saturday, 28 May 2016

பெருசுகள்


கிழவருக்கு சொடலை என்று பேர். ஆள் பார்க்க வண்டிமையை மேலே தேய்ச்சதுமாதிரி அரைக் கருப்பாக இருப்பார். கைகாலெல்லாம் குச்சு குச்சாய் மூங்கில் குருத்துமாதிரி இருக்கும். மூளிக்குளத்தில் பேராச்சியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் வளவு மொத்தத்துக்கும் கிழவருக்குச் சொந்தமானதுதான். ஆனால் கொத்துச்சாவி எல்லாம் பெஞ்சாதி தங்கம்மாள் பெயரில்தான் இருந்தது.

ஒண்ணேகால் ரூவாய் செய்யதுபீடிப் பொட்டலத்தை கையில் வாங்கி கசக்கி, உருட்டி, கீழே கட்டை விரலால் ஒரு குத்து குத்தினாரென்றால் மேட்ல்வாடு பிஞ்சுகொண்டு பீடிகள் வெளியில் நீண்டுகொள்ளும். அதில் ஒத்தைப்பீடியை எடுத்து பத்தவைத்துக் கொண்டு ஒருபல் கடியில் வாயில் வைத்துக்கொண்டே, ஏணிமீது ஏறி வைக்கப்போர் ஏத்துவார்.

“ஒருநா இல்ல ஒருநா பாரு கங்கு வுளுந்து படப்பு பத்திக்கலன்னா இருக்கு” என்று ஏசிக்கொண்டே தங்கம்மா ஆச்சி கரிச்சட்டியை கழுவி தொழுவத்துப் பக்கம் ஊத்தும். சொடலை தாத்தனுக்கு ரெண்டு பெஞ்சாதி. ஆச்சியைக் கட்டி ரெண்டு பொண்ணு பெத்தபிறகு, சீவலப்பேரியில் இருந்து ஒருத்தியை இழுத்துக்கொண்டு பச்சேரியில் வீடேத்திக் கொண்டார். இந்த சங்கதியெல்லாம் எங்களுக்கு ஆலமரத்தடியில் முடிவெட்டிக்கொள்ள போகிற ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் தெரிந்தது.

பகல்முழுக்க வயல்வேலைகளெல்லாம் பார்த்து தீர்த்ததும் ராத்திரி சாயும்போது வாய்க்காலில் ஒரு குளிப்பு போட்டுவிட்டு அந்தக் கரை ஏறிவிடுவார். சின்னாள் வீட்டில் ராத்தங்கல் போட்டுவிட்டு விடிகாலையில் தொழுவத்துக்கு வந்துவிடுவார். ‘அவனுக்கு என்னங்கா! கல்லு கணக்கா கெடக்கான் கட்டில் தேடுது’ என்று பெருசுகள் போகிறபோக்கில் அவல் மெல்லுவார்கள்.

சப்பரம் வரும் தேதிகளில் பெரியாச்சி, பேரப்பிள்ளைகள் என்று குடும்பத்தையே கூட்டிக்கொண்டு ரோட்டுக்கு வந்து சாமிகும்பிடும்போதும் சரி, கோயில் ‘கட்டளை’ ஏத்து பரிவட்டம் வாங்குகிற நாளிலும் சரி வெள்ளையும் சுள்ளையுமாக சொடலைத் தாத்தனைப் பார்க்கணுமே அப்படியே பேஞ்ச மழைக்கு மினுமினுப்பு கூடின பளிங்குத் தரை மாதிரி இருப்பார். சக்களத்தி குடும்பம்பற்றி ஆச்சி ஒருநாளும் வாயைத் திறந்து ஊர் பார்த்ததில்லையாம். எல்லாம் தெரிந்தே நடந்திருக்கிறது.

ஆச்சிக்கும் தாத்தனுக்கும் எல்லாமே சாடை மாடை பேச்சுத்தான். இவள் ஏசுவதும், அவர் ‘அந்தால அந்த கழநித்தண்ணிய எடுத்து மாட்டுக்கு வை’ என்று அவர் காற்றுப் போக்கில் சொல்லுவதும்தான் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை எல்லாம்.

மூலமடை தெரட்டுப்பக்கம் போய்க்கொண்டிருக்கும் போது கட்டுவீரியன் ஒன்று இவரை கொத்திவிட்டுப் போயிருக்கிறது. பதற்றமே இல்லாமல் அருணாகயித்தை அத்து, காலில் கட்டிக்கொண்டு, முனீஸ் அண்ணன் சைக்கிளில் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு, நேரே பச்சேரி வைத்தியன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

“எனக்குச் சூத்தை இருக்கு பல்லிலே, இரும் என்று மரத்தடியில் உக்கார்ந்திருந்த வண்டிக்காரன் யாரையாச்சும் வரச்சொல்லுங்க” என்று ஆள் அனுப்பினார் வைத்தியர். ஆள் யாரும் விஷம் உறிஞ்ச வருகிறமாதிரி இல்லாமல் போக, விஷயம் கேட்டி ஓடிவந்த சின்னாளே வாய் வைத்து நஞ்சை ரத்தத்தோடு உறிஞ்சித் துப்பிவிட்டாளாம். அன்னைக்கிலிருந்து தங்கம்மா ஆச்சிக்கு சின்னாள் மேலே ஒரு கரிசனம் பூத்துவிட்டது.

பிள்ளைகள் எல்லாம் வளர்த்திகண்டு, ரொம்பக் காலம் கழித்து தங்கம்மாள் ஆச்சி படுக்கையில் விழுந்தபோது முதல்முதலாக சின்னாள் வந்து ஆச்சிக்கு சுத்துவேலைகளுக்கு கூடமாட இருந்து பார்த்துக்கொண்டது. ‘சக்காளத்தியோள் ராசியாய்ட்டாவோ போல’ என்று ரெண்டுபேரையும் கேலிக்கிண்டல் பண்ணிக்கொள்ளுவார்கள் பீடி சுத்துகிற மைனி சம்பந்திகள். ஆனால் ஆச்சி கடைசிவரைக்கும் தாத்தன்கிட்டே மூஞ்சுகொடுத்து பேசிக்கொள்ளாமலே வெள்ளக்கோயில் போய்ச் சேர்ந்ததாம்.

#

கரைவேட்டி முத்தையா என்று அவரைச் சொல்லுவார்கள் ஊருக்குள். ஆடு மேய்கிறமாதிரி புல் நீளத்துக்கு அவருக்கு மீசை. ராஜாகுடியிருப்பில் இருந்து பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு, ஜரிகைப் பட்டு வேட்டி கட்டிக்கொண்டு, திடு திடு சத்தத்தோடு புல்லட்டில் பறப்பார். செங்கச் சூளை யாவாரி என்றால் ஊருக்குள் தெரியும். பஜாரில் கரைவேட்டிக்காரர் தான்.

தலைக்கும் மீசைக்கும் மையெல்லாம் அடித்து ஆள் ஒரு நாப்பது அம்பது போல் பவுசு காட்டினாலும் நிசத்துக்கு அவருக்கு எழுபதுக்குமேலே வயசு. 
பெருசுக்கு போகிற ஊரெல்லாம் தொடுப்புகள் இருப்பதாக ஒரு ரகசியமில்லாத ரகசியம் உண்டு. கோட்டூர் ரோடு பிரிகிற இடத்தில் அவருக்கு ஒரு டீக்கடை இருந்தது. சமாதானபுரம் போகிற வளவில் மாட்டுவண்டிக்கு ஆரச்சக்கரம் அடித்துக் கொடுக்கும் தெருவில் அவருக்கு ஒரு வைப்பாட்டி இருப்பதாகப் பேச்சு உண்டு.

இன்றைக்கு சாந்திநகரில் இடிந்துகிடக்கும் கார்த்திக் தியேட்டரில் அப்போது படம் ஓட்டிக்கொண்டிருந்த காலம். ராத்திரி காட்சிகள் போய்விட்டு சைக்கிளில் திரும்புகிற ஆட்கள் கல்லறைத்தோட்டம் வந்தால் போதும் உடனே கரைவேட்டிக்காரர் வேட்டி அவுத்த கதையைப் பேசிச் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதென்ன வேட்டி கதை? சமாதானபுரத்து வளவில் கரைவேட்டிகாரர் மெய்ண்டைன் செய்துவந்த பொம்பளையின் புருசனுக்கு பஜாரில் பெரிய ஸ்வீட்டு கடை இருந்திருக்கிறது. லாலாக்கடைகளுக்கு பேர் வாங்கிய அண்ணாச்சி கடை யாவாரத்திலே ஊறிக் கிடக்க, கரைவேட்டி அவர் வீட்டில் ஓடு மாத்தி இருக்கிறார்.
ஒரு நாள் கையும் களவுமாய் ரெண்டுபேரும் ஆப்பட்டுக்கொள்ள, வேட்டியை உருவிவிட்டு விரட்டி விரட்டி அடித்துப் பத்திவிட்டிருக்கிறார் லாலாக்கடைக் காரர். ராத்திரி பத்துமணிக்கு நடந்த இந்த சம்பவத்தால் ஊருக்குள் அவமானமாகிவிடுமே என்று கல்லறைத் தோட்டத்தில் ஒதுங்கிக்கிடந்து, நடுநிசியில் வேட்டியில்லாமல் குளத்தாங்கரை வழியாகவே ஊருக்குள் பாய்ந்திருக்கிறார் கரைவேட்டி. வரும்வழியில் வாத்துக்காரனிடம் மாத்து வேட்டி வாங்கிக் கட்டிக்கொண்டு போனவரின் சங்கதில் பொழுது புலரும் முன்னே ஊர் முழுக்க பரவி விட்டது.

*
அந்த எழுத்தாளர்கிட்டே பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு சுவாரஸ்யம் அவர் தாத்தாவைப் பற்றி வந்தது. என்னென்ன அழிச்சட்டியம் பண்ணி இருக்கிறான்கள் இந்தக் கிழவன்கள் என்றார். நான் ஏதாச்சும் சொல்லுங்கள் என்றேன். “எனக்குச் சின்ன வயசிலே எங்க தாத்தா தவறிட்டதாலேயும், அவருக்குன்னு போட்டோ கீட்டோ ஏதும் இல்லைங்கிறதாலையும் ஆச்சிகிட்டப் போய் நம்ம தாத்தா ஆள் பார்க்க யார் மாதிரி இருப்பா என்று நச்சரித்தேன்.

ரொம்ப நோண்டி நோண்டி கேட்டபிறகு ஆச்சி சிரிக்காமல் கொள்ளாமல், ‘அந்தா கீழத் தெருவுல ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இருப்பால்லா. அவ மன் ஒருத்தன் இருக்காம் பாரு அவனப் பார்த்தா உங்க தாத்தனைப் பார்க்க வேண்டாம்’ என்றாள். நான் முதலில் அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்துகொள்ளாதவனாக இருந்தேன். பிறகுதான் தெரிந்தது. அந்த குத்துக்கல்லாய் இருந்த பெண் தாத்தாவின் தொடுப்பு என்று. இன்னும் விடாமல் ஆச்சி சொல்லிக்கொள்வாள் ‘பிள்ளையில்லாத வூட்டுல கெழவன் துள்ளி வெளையாண்டானாம் என்று” அந்த எழுத்தாளர் இப்படிச் சொல்லி முடித்தபோது நான் மெல்லவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் புன்முறுவலித்தேன்.

*
நண்பன் அவனது தாத்தாவைப் பற்றி சொன்னான். “ஆள் வீட்ல இருந்தா ஒரே கோவணப் பாய்ச்சல் தான். மணியும் கிணியுமாத்தான் திரிவார். சேறு மிதிக்கிறப்போ தசையெல்லாம் இறுகி இருக்குறதைப் பார்த்தா சிக்ஸ் பேக்ஸோட பத்துபேர் வந்தாலும் சமாளிக்கிற மாதிரி இருப்பார். ஒருதடவை இந்த அணிலடிக்கிற குறவர் ஒருத்தர் அவர் பெஞ்சாதியை அடிச்சுட்டு இருந்திருக்கார் நடுரோட்ல. தாத்தா வீராவேசமாக் கிளம்பிப்போய் அவன்கிட்ட சண்டைபோட்டுட்டு நீவாம்மா நான் உனக்கு சோறுபோடுறேன். இவன்கிட்ட அடிப்பட்டு சாவாதன்னு சொல்லி பக்கத்துக் கடையில குழல்முட்டாய் வாங்கி கொடுத்துருக்கார்.

அந்தப் பொண்ணோட வூட்டுக்காரன் அவங்க ஆட்கள்கிட்டப் போய் தாத்தா சண்டை போட்டதைச் சொல்லி, எம்பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டுப் போய்ட்டானு அழுதிருக்கான். மொத்த கூட்டமும் ரவை துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்துடுச்சு. ஓடுன திசை தெரியாம ஓடி புளிய மரத்துமேல ஏறி ஒளிஞ்சுகிடந்து மருநாள் மேலெல்லாம் சிராய்ப்பா வந்து நின்னுருக்கார் தாத்தா. ஆச்சி என்ன ஏதுன்னு கேட்டதுக்கு, “புளியங்கா உழுக்கப் போனேன்’னு சொல்லி சமாளிச்சுட்டாராம்” என்றான்.

*
-கார்த்திக்.புகழேந்தி
28-05-2015.

Wednesday, 25 May 2016

நெற்கட்டான் செவல் கதை

 போன வருஷ மேமாசத்தில் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்னையிலிருந்து கிழக்குகடற்கரைச் சாலை வழியாக தூத்துக்குடி வரைக்கும், பிறகு அங்கிருந்து திருநெல்;வேலி, வட்டாரங்கள், மதுரை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், அப்படியென்று ஒருபாடு ஊர் சுற்றுவந்தேன். இந்த வருசத்தில் ஆந்திரா, ஒரிசா வழியாக சட்டீஸ்கர் வரைக்கும் அப்படி ஒரு சுற்றல் போட நினைத்துவைத்திருந்தேன். நினைப்பு நினைப்பாகவே தேம்பிவிட்டதால் எலெக்‌ஷனை மனதில் வைத்து ஊர்ப்பக்கங்களில் கொஞ்சம் விட்டேத்தியாகச் சுத்த நினைத்தேன். அப்போதுதான் நண்பர் துரைமோகன்ராஜ் அவர்களை எதேச்சையாக வேறோரு காரியத்துக்காக அழைத்து, கடேசியில் அவரோடே சங்கரன்கோயில் பகுதிகளைச் சுற்றுக்கொண்டு வந்தேன். நான் கொஞ்சம் சுமாராக எழுதி இருந்தேன். அவர் ரெக்கார்டர் ஆன் செய்து வைத்து பேச்சுக்களை பதிந்தது போல அப்படியே கச்சிதமாக மொத்த நாளில் நடந்ததையும் எழுதிவிட்டார். எழுதியது.... 
துரை.மோகன்ராஜ்                                                                                 சங்கரன்கோயில்
25-05-2016 .             ஒரு மழை நாளின் சாயாங்கால வேளையில் என் மகனுடன் 24 படம் பார்த்துக் கொண்டிருக்கையில் பேஸ்புக் மெசஞ்சரில் ஒரு அழைப்பு வந்தது.எடுக்க எத்தனிக்கையில், "குவாண்டம் பிசிக்ஸ் தெரிஞ்சா நானும் டைம் ட்ராவல் பண்ணலாமா?" என்ற என் மகனின் கேள்வி, என் கவனத்தை மெசஞ்சர் அழைப்பிலிருந்து திருப்பி விட்டது. சரி,இன்டர்வலில் பார்த்துக் கொள்ளலாம் என்று குவாண்டம் பிசிக்ஸ் பற்றிய விளக்கத்தில் மூழ்கிவிட்டேன். இன்டர்வெல் வர-யாரது-அழைத்தது,அதுவும் மெசஞ்ரில் என்று எடுத்துப் பார்த்தால், கார்த்திக் புகழேந்தி அழைத்திருந்தார்.
            அந்த மெசஞ்சர் அழைப்பு மிஸ்ஸானதைத் தொடர்ந்து,என் மொபைல் நம்பரையும் கேட்டிருந்தார்.இவரைப் பற்றி, இவரது பதிவுகளை பேஸ்புக்கில் பார்த்திருக்கிறேன். இவரது புத்தகங்களைப் பற்றியும்-எழுத்தார்வம்-இலக்கியத்திறன் பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் நேரில் அறிமுகமில்லை. இவர் ஏன் நம்மை அழைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டே என் நம்பரை அவருக்கு அனுப்பி வைத்தேன்.சிறிது நேரத்தில் அவரே அழைத்தார்.

"சார்-மே 11 திருச்சி மாநாட்டுல அய்யா பேசுனதோட வீடீயோ வேணுமே!" என்றார்.அய்யா என்றால் தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அய்யா. சரிங்க, வாங்கித் தர்றேன். நீங்க எங்க இருக்கீங்க?"என்று கேட்டேன்.

"இங்க திருநவேலில தான். எலக்சனுக்காக வந்தேன்.அப்படியே ஊர் சுத்திட்டிருக்கேன்" என்றார். அட,அப்ப இவரை சங்கரன்கோவில் வரச் சொல்லி-நெற்கட்டான் செவல் பூலித்தேவர் அரண்மனைக்கு கூட்டி போகலாமே, அதைப் பற்றி எழுதச் சொல்லாமே என்று நினைத்து, நினைத்ததை அப்படியே அவரிடம் சொன்னேன்.

"இங்க சங்கரன்கோவில் பக்கத்துல பூலித்தேவர் அரண்மனை இருக்கு. இங்க தான் மருதநாயகத்துக்கும் பூலித்தேவருக்கும் சண்டை நடந்து, அதுல மருதநாயகம் தோற்று ஓடினாரு. மருதநாயகம் தோற்ற ஒரே ஒரு போர்களம் அது தான். இதைப் பத்தில்லாம் நீங்களும் எழுதனுமே" என்ற வேண்டுகோளை வைத்ததும், "சார், நாளிக்கு நா பாவநாசம் போலாம்ன்னிருந்தேன். போவல. உங்கூர்க்கு வாரேன்" என்றார்.

சொன்னபடியே வந்தார். என்ன காலையில் வந்துடுறேன் என்றவர்,மதியம் இரண்டு மணிக்கு அவரது யமஹா ஆர்எக்ஸ் 100 ல் வந்தார். அதுவும் வரும் போதே மழையையும் கூட்டிக் கொண்டு வந்தார். உடைமாற்றல்- உபசரிப்பு எல்லாம் முடிந்து இருவருமாய் என் காரில் நெற்கட்டான் செவல் நோக்கிப் பயணமானோம்.

நெற்கட்டான் செவலுக்கு போகும் வழியில் நான்கைந்து கிரஷர்கள் உண்டு. மலையை உடைத்து சல்லிக் கற்களை எடுக்கும் அந்த "க்ரஷர்களை" ஆச்சர்யமாகப் பார்த்தவர்-தன் கேமராவிலும் அதை அடைத்துக் கொண்டார். "இதோ இது டைரக்டர் ஷங்கருக்கு ரெம்ப பிடிச்ச லொக்கேஷன்ங்க. இங்க தாங்க அந்நியன் ஷூட்டிங் நடந்தது.இந்த ரோட்ல தான் ரண்டக்க ரண்டக்க பாட்டுக்காக பெயின்ட்ல கோலம் போட்டாங்க.

முதல்வன் படத்துல அர்ஜூனை பாம்பு கடிக்குமே, அதுக்கு கூட மனீஷா வைத்தியம் பாக்குமே,அது அதோ அந்த மண்டபத்துல தான்..." என்று போகும் வழியெங்கும் எனக்குத் தெரிந்தவற்றை சொல்லிக் கொண்டே போனேன்.இது தான் மனீஷா கொய்ராலா இருந்த மண்டபம் என்று சொன்ன அடுத்த நொடி,"அந்த மண்டபமா?போட்டோ எடுக்கனுமே" என்று ஓடினார்.

"அட மனீஷா கொய்ராலா இருந்த மண்டபம் ன்னு சொன்னதுக்கா" என்ற என் நக்கலைக் கூட காதில் வாங்கவில்லை. புதராக இருந்த மல்லிகைச் செடிகளுக்குள் புகுந்து ஓடினார்.

"அலோ கார்த்திக்...பாத்துங்க... இது செவலக்காடு...பாம்பு கீம்பு இருக்க போவுது" என்றேன். அதையும் சேர்த்து படம் எடுப்போம் என்றவாரே மண்டபத்தை பல கோணங்களில் படமெடுத்தார். பத்து நிமிடங்கள் கழித்து வந்தவர்-இது நாயக்கர் கால மண்டபம். இந்த தூண் பாண்டியர் ஸ்டைல்.மேல உத்திரம் சோழர்கள் பாணி என்று மண்டபத்தின் வரலாற்றை எனக்கு சொன்னார்.
"இந்த மாதிரி பழங்கால மண்டபங்கள பாத்தா, நா விடுறதில்ல. உடனே போட்டோ எடுத்திடுவேன். ஏன்னா எப்பன்னாலும் இந்த மண்டபங்கள் காணாம போகும். நம்ம மக்களுக்கு இதோட அருமைல்லாம் புரியாது. அதோட அதுல எதாச்சும் கல்வெட்டு இருக்கும். அதுல நமக்கான தீனி இருக்கும். நாலு கதை கிடைக்கும்" என்றார். "கல்வெட்டா? உங்களுக்கு கல்வெட்டுக்களைப் படிக்கத் தெரியுமா?" "ஆமாங்க" என்ற கார்த்திக்கின் இந்த பதில் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

போகும் வழியெங்கும் எதையும் விட்டு வைக்கவில்லை. ஏரிக்கரையோர நடுகல்-ஆலமரம்-முசல்மான் கல்லறை-பச்சேரி கிராமத்தின் நந்தி-பள்ளிக்கூட மாணவர்கள்-நூறு நாள் வேலைக்குப் போய்விட்டு வந்து கொண்டிருந்த கிராம மக்கள் என எதையும் விடவில்லை.கேமராவில் சுட்டுத் தள்ளினார்.

புன்னைவனப்பேரி என்ற ஊரைக் கடக்கும் போது, "சார்,அந்த காலத்துல கோயில்கள்ல இந்த புன்னை மரத்தோட காய்கள் தான் தீவாரதணை காட்டுறதுக்கு பயன்பட்டுச்சு. அப்பல்லாம் சூடம் கிடையாது. இந்த காய்களை காய வச்சு, அப்படியே கொளுத்துவாங்க. நின்னு எரியும். பாண்டிச்சேரில ஒரு புரபசர் இந்த மரத்தோட காய்களை வச்சு பயோ டீசலே செஞ்சாரு" என்று அட்டகாசமான புதிய தகவலைச் சொன்னார்.

பேசிக் கொண்டே நெற்கட்டான் செவல் கிராம எல்லையை அடைந்தோம். அங்கிருந்த தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட "நெல்கட்டும் செவல்" என்ற பெயர்ப் பலகையைக் காட்டினேன்.

"பாத்தீகளா இதை.பாளையத்தில் விளைந்த நெல்லை ஆற்காடு நவாபிடம் வரியாகக் கேட்டது பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பனி. நவாப் தனக்கு கீழ் இருந்த எல்லா பாளையக்காரர்களிடமும் கேட்டார். நவாபின் ஆணையை இரண்டே இரண்டு பாளையங்கள் தான் மறுத்தது. ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம், இன்னொன்று இந்த நெற்க்கட்டான் செவல் பாளையம். இதில் முதலில் மறுத்தது நெற்கட்டான் செவல் பாளையம். அந்த வகையில் அக்கால இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக, முதன் முதலில் வாள் உயர்த்தியது பூலித்தேவர் தான். அது பிடிக்காமல் தான் அவரை அடக்குமாறு ஆற்காடு நவாபைக் கேட்டுக் கொண்டது கிழக்கிந்தியக் கம்பனி.

நவாபும் கம்மந்தான் கான்சாகிப் என்ற மருதநாயகத்தை அனுப்பி வைத்தார். கான்சாகிப் பெரும் வீரன். தோல்வியையே அறிந்திராவதன். அப்பேற்பட்டவன் மாவீரன் பூலித்தேவரிடம் தோற்று ஓடினான். கடைசியில் கம்பனிபடை பீரங்கிகளைக் கொண்டு வந்து அடக்கியது. அடக்கிய கையோடு- நெற்கட்டான் செவல் பாளையம் என்ற ஊரின் பெயரையும் நெற்கட்டும் செவல் என்று மாற்றி வைத்தது. சுதந்திரம் பெற்று எழுபது வருடங்களாகியும் நாமும் நெற்கட்டும் செவல் என்ற பெயரையையே தொடர்கிறோம். அதன் பின்னால் இருந்த காரணம் புரியாமல்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன்.

"இத மாதிரி நிறைய ஊர்ங்க இருக்குங்க. பச்சேரி ங்கற ஊர் பேர் எப்படி வந்துச்சி தெரியுமா?" என்று ஒரு வரலாற்றைச் சொன்னார். உள்ளபடியே அதிர்ந்து போனேன். இக்காலத்திலுமா இப்படி என்று நினைத்துக் கொண்டேன். அது என்ன பச்சேரி வரலாறு? அதை கார்த்திக்கிடமே கேளுங்க.

இதெல்லாம் இருந்தும் கார்த்திக்கிடம் ஒரே ஒரு விசயத்தில் தான் நமக்கு மைல்ட் கடுப்பு.பாம்பு-பல்லி-மரம்-செடி,கொடி-பாழடைந்த மண்டபம்-ரோடு என எதை எதையோ வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தாரே தவிர, ஒரு புகைப்படம் கூட என்னை எடுக்கவில்லை. அடுத்த பயணம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள். கார்த்திக்கின் கேமராவில் விழ கல்வெட்டாகவோ அல்லது பாழடைந்த மண்டபமாகவோ தான் நாம் இருக்க வேண்டும் போல. இதோ இந்தப் புகைப்படம் கூட என் மொபைலில் எடுத்தது. எடுத்தவர் பின்னால் இருக்கும் ரெஸ்ட்டாரன்ட் பணிபுரியும் அண்ணன் ஒருவர். கார்த்திக்கின் கேமராவிற்கு ஆந்த்ரோபோபியா போல.

ஆனாலும் கார்த்திக் உடனான அந்த இரண்டு மணி நேர பயணத்தில் நான் கார்த்திக்கிடம் கற்றதும்-பெற்றதும் நிறைய...நிறைய... அதையெல்லாம் அவரிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கின்றேன். 
அந்த "குறி சொல்லி" கதையை சீக்கிரம் கொண்டு வாங்க..சங்கரன்கோயில் மீன்துள்ளி  உணவகத்தில் துரைமோகன்ராஜ் மற்றும் கார்த்திக் புகழேந்தி 

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

             577776 இதுதான் எனக்கு வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்ரோல் எண். ச்சே! கொஞ்சம் பிந்தி இருந்தால் ஐந்து 7-வருகிறமாதிரி அடுத்த எண் கிடைத்திருக்குமே என்றெல்லாம் ஹால் டிக்கெட்டை கையில் வாங்கினதிலிருந்து ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருப்பேன்.
மொத்தம் இருபது பேர் தேர்வெழுதிய அந்த அறையில் நான் இரண்டாவது ஆள். இந்த கார்த்திக் என்ற பேரை கூட்டத்தில் கல் எறிந்த மாதிரி சும்மா சொல்லிப் பாருங்கள் பத்தில் ரெண்டு பேராவது திரும்பிப்பார்ப்போம். எம்., என்., எஸ்., என்று இனிஷியலை வைத்து வரிசையாக கார்த்திக்குகளாக உட்கார்ந்திருந்தோம்.
பேரதிசயமாக அப்போது நான் கொஞ்சம் நன்றாகப் படிக்கிற பையனாக இருந்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் எங்கள் தேர்வறையில் நானும் என்.எஸ்.மணி என்பவனும் தான் ஒன்றாவது, ரெண்டாவது ரேங்க்கைத் தொடுகிறவர்கள். (நம்புங்கள்)
தமிழ் முதல் தாளில் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த மற்ற பையன்கள், இரண்டாம் தாள் எழுதப் போகும் முன்பே யார் நமக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர் என்பதுவரைக்கும் விசாரிக்க ஆரம்பித்து, இந்த பொருத்துக, நிரப்புக மாதிரியான கேள்விகளுக்கு சொல்லித்தர முன்னே இருப்பவன் பின்னே இருப்பவனை செட் செய்துகொண்டிருந்தார்கள்.
என் பக்கத்து வரிசையில் உட்கார்ந்திருந்த பாரதிராஜா என்பவன் அக்மார்க் யோக்கியன். பத்தாவது மட்டும் மூன்றாவது வருடமாக முயற்சித்துக் கொண்டிருந்தவன். கண்காணிப்புக்கு வந்திருக்கும் வேறு பள்ளி வாத்தியார் அசருகிற நேரம் பார்த்து பேப்பரைக் காட்டச் சொல்லி உசுப்புவான். அவன் மட்டுமில்லை ஒட்டுமொத்த அறைக்கும் ஆபத்பாந்தவனாக இருந்தேன். என் பேப்பர் எவன் மேசையில் இருக்கிறது என்றே தெரியாமல் நான் மற்றக் கேள்விகளுக்கு பதில் எழுதிக்கொண்டும், எழுதிய பேப்பரைக் காண்பித்துக் கொண்டுமிருந்தேன். ஆர்.எஸ்.மணி இந்த விஷயத்தில் ‘செவிடன்’ மாதிரி இருந்துகொள்வான்.
முதல் மூன்று பரிட்சைகள் வரைக்கும் பிரச்சனை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. நான்காவது நாளில் ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு ரோஸ்மேரி கான்வெண்டில் இருந்து இளவயதில் பெண் ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார். வந்ததுமே, “யாரும் பார்த்து எழுதலாம் பிட் அடிக்கலாம்னு நினைச்சா நேரா பிரின்ஸ்பால்கிட்ட கொண்டு போய் விட்ருவேன். நியாபகத்தில் வச்சுக்கோங்க” என்றுவிட்டார். எனக்கு கொஞ்சம் திகிலாகிவிட்டது. அச்சமே இல்லாமல்,. இஸ்ஸ்ஸ்ஸ்.. இஸ்ஸ்ஸ் என்று பயல்கள் சத்தம் போட்டு பேப்பரைக் காண்பிக்கச் சொல்ல நான் இப்போது செவிடன் மோடுக்குப் போயிருந்தேன்.
ஒருகட்டத்தில் ஒன் வேர்ட் கேள்விக்காவது கண் காது மூக்கு நாக்கு அடையாள ஆப்ஷன்களைச் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்த வேறுவழியில்லாமல் அடையாளம் காட்டிக்கொண்டிருந்தேன். தேர்வறை கண்காணிப்புக்கு வந்த டீச்சர் வசமாய் கண்டுபிடித்துவிட நேராகவே வந்து, “உன்கிட்ட இருந்துதான் அத்தனைபேருக்கும் பிட் போய்ட்டு இருக்கு. ஒழுங்கா உன் வேலையை மட்டும் பார்த்துட்டு எழுதுறியா பிரின்ஸிபால்கிட்ட போறியா” என்று மிரட்டிவிட்டு என் பக்கத்திலே நின்றுகொண்டார். சுத்தம்.
அவரை அங்கிருந்து நகர்த்த வழிதெரியாமல் நடுக்கமாக பரிட்சை எழுதின எனக்கு எக்ஸ்ட்ரா பேப்பர்கள் கேட்டவனெல்லாம் கடவுளாகத் தெரிந்தான். ஆனாலும் அவர் விடாக்கொண்டனாக திரும்பவந்து என்பக்கத்திலே நின்றுகொண்டு என்னுடைய பேப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் ப்ரிஃபிக்ஸ் – சஃபிக்ஸ் கேள்விகளுக்கு தவறாக பதில் எழுதிக்கொண்டிருந்த என்னை என்ன எழுதி இருக்க அது இங்க வரும் இது அங்க வரும் என்று பதில் சொல்லிக் கொடுத்துவிட்டு லேசாகச் சிரித்துவிட்டு நகர்ந்தார். ஜிவ்வ்வென்று இருந்தேன்.
அதன்பிறகான மீதம் மூன்று தேர்வுகளையும் அநாயாசமாகக் கடந்தேன். கணக்குத் தேர்வை எல்லாம் 43 பக்கத்துக்கு எழுதின ஒரே ஆசாமி நானாகத்தான் இருப்பேன். எனக்கு எக்ஸ்ட்ரா பேப்பர் கொடுத்தே டயர்ட் ஆன கண்காணிப்பாளர்கள் உண்டு. பொதுத்தேர்வு கண்ணாமூச்சுகள் முடிந்து உள்ளூரில் உள்ள கார் ஒர்க் ஷாப்பில் எஞ்சின் ஸேஸ் அடியில் படுத்துக்கொண்டு ப்ளாக் பெய்ண்ட் அடித்துக் கொண்டிருந்த தினத்தில் ரிசல்ட் வந்தது.
480க்கு மேலே மார்க் எடுத்தால் உனக்கு புது சைக்கிள் வாங்கித்தருவேன் என்றிருந்தார் அந்த முதலாளி.

நோக்கியா 3300 வைத்திருந்த அண்ணன் ஒருத்தர் உன் நம்பர் சொல்லுடா ரிசல்ட் பார்ப்போம் என்றார். நான் 577776ஐச் சொன்னேன். செல்போன் எஸ்.எம்.எஸ்ஸில் பாடங்கள் வாரியாக மொத்த மதிப்பெண்ணையும் காட்டினார். பழைய சைக்கிள் தான் கிடைக்கும்போல. 450க்கு கொஞ்சம் கிட்டத்தில்நெருங்கியிருந்தேன்.

வீட்டுக்கு வந்து அப்பாகிட்டே இத்தனை மார்க் எடுத்திருப்பதாகச் சொன்னேன். “நீ படிச்ச படிப்புக்கு இதெல்லாம் ஒரு மார்க்கால.. மேலவீட்டு செல்வி பிள்ளை 484 எடுத்திருக்கா” என்றார். செல்வி வீட்டின் மோட்டு ஓடுமீது யாரோ பருங் கல் ஒன்றை அன்றைக்கு எரிந்துவிட்டுப் போயிருந்தார்கள்.
அந்த வருடத்தில் சரியாக 77.4 சதவிகிதத்தில் தமிழ்நாடு முழுக்க பத்தாம்வகுப்பு தேர்ச்சி இருந்தது. தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலிதான் அந்த ஆண்டில் டாப்பர். தஞ்சாவூர் செயிண்ட்.ஜோஸப் பெண்கள் பள்ளிக்கூட மாணவி 495/500 மார்க் வாங்கியிருந்தார். அவர் பேர்கூட காயத்ரி என்று நினைக்கிறேன். Facebook-ல் இருந்தால் ஒரு ஹாய் சொல்லி இருக்கலாம். by the by I'm Karthick Pugazhendhi From Tirunelveli Cathedral Higher secondary school. (Boys only  )
இன்னொன்று சொல்லாமல் விட்டுவிட்டேனே. என்கிட்டே கேட்டுக் கேட்டு, என் பேப்பரைப் பார்த்துப் பார்த்து எழுதிய பாரதிராஜா மூன்றாவது அட்டம்ட்டில் பாஸாகி இருந்தான். டிசி வாங்கப் போன தினத்தில் கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல் என்னைத் தாண்டிப் போனவன் குரங்கணி கோயில் விஷேசத்தில் தேடிவந்து “ஏல மாப்ளே” என்று கட்டிக்கொண்டான்.

அந்த 577777-காரன் பேரும் கார்த்திக் தான். பாவம். 197மார்க்கில் பெயிலாய்ப் போய் இருந்தான். ஆத்தீ….

-கார்த்திக்.புகழேந்தி

25-05-2016

படத்தில் எங்கள் பள்ளிக்கூடத்தின் புதிய நுழைவாயிலும், என்னுடைய ஒன்பதாம் வகுப்பறை சன்னலும். இங்கே உட்கார்ந்து கொண்டு ரோட்டுக்கு அந்தப்பக்கமுள்ள வசந்த்&கோ - டீவிகளில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது. 

Monday, 23 May 2016

இண்டமுள்ளு
   அரசனை எனக்கு நண்பர் கோவை ஆவி மூலமாகத் தெரியும். இரண்டு பேரையும் விக்ரமாதித்யனும் வேதாளமும் போல ஒன்றாகவேதான் பலதடவைச் சந்தித்திருக்கிறேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஒரு சந்திப்பின்போதுதான் அரசனோடு நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தது. பேச்சு முழுக்கக் “சிறுகதைகளைச்” சுற்றி நிகழ்ந்தது.

அரசன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். பொதுவாகவெ கதைகள் மீதுகொண்ட ஈர்ப்பும், அதிலும் வட்டார வழக்கு மொழியில் எழுதப்படும் கதைகள் மீதான பிடித்தமும் அரசனின் புத்தகமான “இண்ட முள்ளு” மீது பேரார்வத்தைக் கொடுத்தது.

வட்டார வழக்கில் எழுதுகிறபோது மொழி புரியமாட்டேன் என்கிற கூற்றைப் பலரும் சொல்வதுண்டு. அதன் நியாயத்தை உணர்ந்தும் இருக்கிறேன். ஆனால் அதற்காக நிலத்தின் பேச்சை விட்டுவிட்டு எளிமை எனப்படுகிற சாலைகளில் நடப்பதற்கு நான் எப்போதும் விரும்புகிறவனில்லை. எனக்குக் கால் கட்டாந்தரையில் படவேண்டும்.  கரிசலோ, செம்மண் புழுதியோ விரலிடுக்கில் அந்த மண் ஒட்டவேண்டும். மக்கள் பேசுகிற சொற்கள் எழுத்தில் உயிர்பெற வேண்டும். ஈழத்துப்பேச்சு புரிபடமாட்டேன் என்று அந்த மண்ணின் கதைகளை கலோக்கியலுக்குக் கொடுங்கள் என்றால் எவ்வளவு கோளாறாக இருக்கும். அதுமாதிரிதான் என் வட்டார மொழியின் நியாயமும்.

இன்னும் சொல்லப்போனால் மனிதர்கள் பேசுகிற/ புழங்குகிற சொற்களுக்கிடையிலேதான்  நல்ல தமிழ் வாழுகிறது. அதைபோட்டு உரித்து தோல்சீவி,  வாயில் வைத்து ஊட்டிவிடுகிற வழக்கத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்றாலும் மண்சார்ந்த எழுத்துக்களில் அந்த குதர்க்கத்தைச் செய்யவேண்டியதில்லை என்று நம்புகிறேன். ஃப்ரைடு ரைஸ் வறுத்துக் கொடுக்க ஏகப்பட்ட கடைகள் இருக்கின்றன வீதியில். எனக்கு வயலும் நாற்றங்காலும் தான் வேண்டும் என்ற கொள்கையில் கட்டிப்பட்டிருக்கிறேன். அரசன் எனக்குப் பக்கத்து வயல்க்காரர்.

அரசனின் மொழி அரியலூருக்குச் சொந்தமான புழங்குமொழி. நீட்டி இழுக்கிற வார்த்தைகளில் மண்ணின் உயிரை அறுவடை செய்கிற அடர்த்தியான மொழி. காய்ந்த கள்ளியில் பழம்பழுத்துக் கிடக்கிறமாதிரியான சுவையான சொலவடைகளோடு கூடிய மொழி. அவரது கதைத்தன்மைகள் ஈரமும் துயரமும் அப்பட்டமான உண்மையுமானது. மனிதர்களோடு இயங்குவதின் ஊடே மண்ணின் வாழ்நிலையைப் பெருமையோடு பதியும் குணாதிசயம் கொண்டது.

அரசன் 


“இண்ட முள்ளு” வாசிக்கும்போது நான் அந்த நிலத்தின் காற்றை சுவாசித்துக் கிடந்தேன். உகந்த நாயகன் குடிக்காட்டின் சுணைத் தண்ணீரின் ருசி வழிந்து ஓடுகிறது. உழைத்து உழைத்து கட்டிபிடித்துப் போன கைகளை வீசி நடக்கிற மனிதர்களை, அவர்கள் வாழ்க்கைப் பாடுகளை, அவரது வயல்நிலங்களின் உழவுகளை, சாக்குப்போக்கு பார்க்காமல் காடுகரையெல்லாம் அலைந்து மேய்க்கிற அவர்கள் கால்நடைகளை, கபடங்களை, பொல்லாப்புகளை, இன்னுமென்னென்ன உண்டோ அத்தனையின் சொச்சத்தை கதைகளின் வழி பதிவு செய்திருக்கிறார் அரசன்.

நான் நிலையில்லாத பித்தம் கொண்டு ஒரு நடுராத்திரியில் தூக்கமற்று தவித்தேன். சம்சாரியின் சாவுகளை எழுதுகிற கதைகளுக்குள் மூச்சைத் தொலைத்தேன்.  ‘எங்கேய்யா இருந்தே இத்தனை காலமா எழுதாமல்’ என்று அரசனை வசையால் வதைத்தேன்.  ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு போனில் பிடித்து நடுரோட்டில் நின்றுகொண்டு உம்முடைய கதைகள் எல்லாம் உம் மண்ணுடைய மக்களின் வரலாறுகள். அந்த நிலத்தில் விழுகிற ஒவ்வொரு துளி மழைக்குமான விதைக்கூறுகள் என்றேன்.

அரசனுக்கு வாய்வார்த்தைகள் நின்றுபோயிருந்தது. நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். மனிதர் கேட்டுக்கொண்டே இருக்கிறார். நான் மனசு நிறைந்து நிற்கிறேன் கார்த்தி என்றார். என் மொழி படிக்கச் சங்கடமாய் இருப்பதாக சில நண்பர்கள் சொன்னபோது நான் கொஞ்சம் அவஸ்தையாய்த்தான் உணர்ந்தேன். அந்த அவஸ்தையை வலிதெரியாமல் என் நெஞ்சில் இருந்து உருவி எடுத்துவிட்டீர் என்றார்.

 “நாக்கில்லாதவன் தேனின் சுவையை மட்டம் சொன்னதுபோல இம்மாதிரி கதைகளை வாசிக்கக் கடினமாய் இருக்கிறது என்பாரை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீரைய்யா. நீங்கள் செய்வது நூற்றாண்டுகளுக்குப் பிறகு எடுபடுகிற வேலை. உம்முடைய மண்ணில் உலவிய மக்களின் வாழ்க்கையை அவர்கள் சுயத்தோடு அனுமானம் பண்ணும்படிக்கு படியெடுத்து வைக்கிறீர். அதை வாசிக்கிறவர்களின் போதாமைக்காக வாய்மொழியைத் திருத்தி எழுத வேண்டியதில்லை என்று பெரும்பேச்சு பேசிக்கொண்டிருந்தேன்.

நாலாம் வகுப்புப் பையனுக்கு நாலாயிரம் சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பார் என் தமிழ் வாத்தியார். இங்கே எவனுக்கு அவ்வளவு கூறு தெரிந்திருக்கிறது. அவனைப் பற்றிக் கவலைப்பட்டு, “செலை கடித்த மாட்டுக்கு அடிநாக்கில் நரம்பைக் கீறிவிடுகிற” காரியத்தை எழுதாமல் விட்டுவிடாதேயும் என்றேன்.

     நேர்மையாகச் சொன்னால் நான் அரியலூர் நிலத்துக்கு அந்நியமானவனாகவே பிறந்திருக்கிறேன். எனக்கு அந்த நடுநாட்டின் பேச்சு அவ்வளவு அணுக்கமானதும் இல்லை. சிலநண்பர்களைத்தாண்டி அந்த ஊர்ப்பக்கத்து மனிதர்களை அறிந்ததும் கிடையாது. முண்டுதட்டி முட்டிமோதித்தான் அந்நிலத்தின் கதைகளைப் பின்பற்றுகிறேன். இருநூறு தலைக்கட்டுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த படைப்பாளியின் கதையை எந்த சம்பந்தமும் இல்லாத நான்போய் நீ எழுதியதைப் படிப்பதற்குச் சிரமமாய் இருக்கிறது என்று சொல்வதில் எவ்வளவு கூமுட்டைத்தனம் இருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறேன். அதனாலேயே எனக்கு உம் கதைகள் சிரமமில்லாமல் வாசிக்க முடிந்தது என்றேன்.


            வாசிக்கிற கதைகளில் நம் அறிவுஜீவித்தனத்தை தூர வைத்துவிட்டு, ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்துப் பயலாக புதிதாக நாமொன்றைத் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என்று கையைக் கட்டிக்கொண்டாலே தன்னாலே நாம் கதையின் சேற்றில் கால் நனைத்துவிடுவோம் என்று எண்ணுகிறேன். தவிர “இண்டமுள்ளு”க்காக நான் இத்தனை தூரம் பேசுவது சும்மா அந்த வட்டாரமொழி என்ற என் போதைக்காக மட்டுமில்லை. தாய் ஊட்டும் சோற்றுக்கிடையில் ஒரு ருசி நாக்கில் ஒட்டிக்கொள்ளுமே அந்தமாதிரியான கதைகளை எந்த வித சமரசமும் இல்லாமல் எழுதுவதும், முப்பது பக்கத்துக்கு ஒரு கதைக்கான தேவை இருக்கிறது என்றால் துணிந்து அதை எழுதுகிற கதைக்காரனின் வைராக்கியமும் தான் அரசனை தலைநிமிர்ந்து நிற்கச் செய்கிறது. எனக்கொரு சேக்காளி கிடைத்தமாதிரி மகிழ்கிறேன்.

-கார்த்திக்.புகழேந்தி
23-05-2016.
Saturday, 21 May 2016

பார்டர் பரோட்டாமே15 தொடங்கி 19வரைக்குமாக ஐந்துநாட்கள் ஊரில் இருந்தேன். முதல் மூன்று நாளுமே அவ்வளவு மழை என்பதால் உள்ளூரிலே சுற்றிக் கொண்டிருந்தேன். அண்ணனுடைய யமஹா RX135 மீது உட்கார்ந்து கொண்டாலே ஒரு தனி கெத்துதான்.
மூன்றாம்நாள் மதியம் திருநெல்வேலி - மானூர்- தேவர்குளம்- பனவடலிச்சத்திரம் வழியாக சங்கரன்கோவில் சென்றிருந்தேன். அங்கே நண்பர் துரை மோகன்ராஜ் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். கொஞ்ச நேரம் இளைப்பாறலுக்குப் பின்னே இரண்டுபேருமாக நெல்கட்டான்செவலில் உள்ள பூலித்தேவன் அரண்மனைக்குச் சென்றோம். வழியில் தென்பட்ட கல் மண்டபங்கள், நாட்டார் தெய்வங்கள் போன்றவற்றை நான் படமெடுத்துக்கொண்டேன்.
பூலித்தேவர் அரண்மனையை அடைந்தபிறகு அவ்வூரில் உள்ள குறிசொல்லும் பூசாரி பற்றி நண்பர் சொன்னதும் அவரைத்தேடி ஊருக்கு மேற்குகோடியில் உள்ள கோயிலுக்கே சென்றோம். அங்கு சென்று வந்ததில் ஒரு நல்ல கதை தேறியது.
பிறகு வழியில் உள்ள ஊர்களில் பச்சேரி என்னும் இடத்தில் முற்கால நந்தி சிற்பம் ஒன்றைக் கண்டேன். எப்படியும் 500 வருஷங்கள் முந்தையதாக இருக்கலாம். ஆவுடை ஆற்றங்கரையில் கரைவீரன் முனி கோயில் அருகே நடப்பட்டிருந்த நடுகற்கள், முசல்மான் கல்லறை ஒன்று என்று கேட்கிறதற்கான கதைகள் ஏகத்துக்குக் கிடைத்தன. அப்படியே ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வரைக்கும் இழுக்கலாம் என்றால் மேகம் மிரட்டிக் கொண்டிருந்தது.
மாலையில் மீன்துள்ளி உணவகத்தில் நண்பர் துரை மோகன்ராஜ் அவர்களிடமிருந்து விடைபெற்று நெல்லை திரும்பினேன். வரும்வழியில் ஒவ்வொரு ஊரிலும் சிறிது நேரம் பின்தங்கியபடியே வந்தேன். பனம்பாளை அறுத்து பதனீர் இறக்கிக்கொண்டிருந்தவரைப் படமெடுத்தபோது, கை நிறைய நுங்கு அறுத்துக் கொடுத்தனுப்பினார்.
காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும் பகுதியில் அங்குள்ள நண்பன் அழைத்துச் சென்றான். Wind millகளின் உட்பகுதியில் நுழைந்து அதன் கட்டமைப்பை வேடிக்கை பார்த்து வந்தேன். இரவு நெல்லை திரும்பி வைரமாளிகையில் மற்றொரு நண்பரோடு வெளுத்துக்கட்டல்.
மறுநாள் காலையிலே திருநெல்வேலியிலிருந்து பணகுடி சென்றிருந்தேன். பணகுடி-அம்பை சாலையில் பயணிப்பதுதான் எங்கள் திட்டம்.
புறவழிச் சாலைகள், நான்குவழிச்சாலைகள் வரும் முன்பு இந்தப் பாதைகள் தான் ஊரை இணைத்து வந்தவை. மெல்ல இவற்றின் பயன்பாடு குறைந்து வந்தாலும் பழமையின் தடங்களை இங்கே தரிசிக்க முடியும் என்பதாலே இப்படி குறுக்குப்பாதைகளில் பயணம் செய்தோம்.
திருக்குறுங்குடி, நம்பிகோயில், களக்காடு, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் வரைக்குமுள்ள இடைவெளியில் மட்டும் 10க்கும் குறைவில்லாத கல்மண்டபங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றின் உத்திரத்தில் பாண்டிய மீன்சின்னங்களையும் கண்டு படம் பிடித்துக் கொண்டேன்.
அம்பை வந்ததும் குற்றால ஆசை பெருக்கெடுத்தது. விடு வண்டியை என்று தென்காசி வழியே குற்றாலம் நுழைந்தோம். ஐந்தருவியில் குளியலும், மிளகாய் பஜ்ஜியும் கனஜோர். சீசன் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் கூட்டம் இருந்தது.
பிறகு குற்றாலத்திலே ராத்தங்கல் போட்டுவிட்டு இரவு செங்கோட்டை ரஹ்மத்தில் பார்டர் பரோட்டாவும், நாட்டுக்கோழியும் தின்று செழித்தோம். மறுநாள் காலை ஓட்டு எண்ணிக்கை என்பதால் இரவே ஊரைச் சுற்றிமுடித்து, காலையில் தென்காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றிவிட்டு நெல்லை திரும்பினோம். நெல்லை பைபாசில் உள்ள மண்சட்டிச் சோறு உணவு விடுதியில் மீன் குழம்பு சாப்பாட்டை முடித்து கர்ண மயக்கத்தோடு கன்னியாகுமரி மாலைவரை ஊர்சுற்றிவிட்டு இரவுப் பேருந்தில் சென்னை புறப்பட்டேன். நண்பர் ரொம்ப நல்லவர் போல ஒரு வெள்ளி மோதிரம் பரிசளித்தார். அய்யா நின் கொடை வாழ்க :P
பிறகு நேற்று அதிகாலை சென்னை வந்து இறங்கினேன். என்னைய்யா மழை மழை என்றீர்கள் வெயில் இந்தப் போடு போடுகிறது?

-கார்த்திக் புகழேந்தி
21-05-2016


Friday, 13 May 2016

அம்மன் சன்னதிகாலம் எவ்வளவோ மாறி இருக்கிறது என்பார்கள். திருநெல்வேலி மட்டும் அப்படியே இருக்கிறதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. என்ன கொஞ்சங்கொஞ்சம் அங்கங்கே சிமெண்ட் ரோடுகள் வந்துவிட்டது. பாளையங்கோட்டைக் காரனாக பிறந்து வளர்ந்தவனென்பதால் ஆற்றுக்கு அந்தப்பக்கமுள்ள நெல்லை டவுண் மீது ஏகபோகமாக ஒரு ஈர்ப்பு உண்டு எனக்குள். டவுணுக்குச் கூட்டுப் போகிறார்கள் என்றால் ஏதோ திருவிழாவுக்குச் செல்வது மாதிரி நினைப்பில் அலைவேன்.
அரசுப் பொருட்காட்சி, ஆனித் தேரோட்டம், தீபாவளி துணியெடுப்பு, பொங்கல் இந்தமாதிரியான நாட்களில் தான் டவுணுக்குக் கூட்டுப் போவார்கள். இதுபோக ராயல், ரத்னா தியேட்டர்களில் படம்பார்க்கப் போவதெல்லாம் பேரதிசயம் தான். இத்தனைக்கும் பாட்டன்மார்களுக்குப் பூர்வீகமே டவுண் குற்றாலரோடு தானாம். இன்னும் சுண்ணாம்புக்காரத் தெரு என்று கேட்டால் தெரியும் என்பார்கள். தாத்தன்கள் எல்லாம் சாலைத்தெருவிலும், சாலியார் தெருவிலும் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்ததாகச் செவிவழிச் செய்தி. நான் கண்ணால் பார்த்ததில்லை. ஏழு தாத்தன்களில் மிச்சமிருந்த ஒன்று ரெண்டு பேரும் நான் விரல் சூப்பிக் கொண்டிருந்தபோதே படுக்கையாக விழுந்திருந்தார்கள்.
அம்மையைக் கட்டிக்கொடுத்த விதத்தில் நான் பாளையங்கோட்டையிலே வளர்ந்தாலும் ஆற்றைக் கடந்து மேம்பாலம் ஏறி கோயில்வாசலில் பஸ்ஸை விட்டு இறங்குகிறோம் என்றாலே மனசுக்குள் ஒரு குதியாட்டம் வந்துவிடும். ரதவீதிகளை வா(ய்)பார்த்துக் கொண்டு, முன்னே இழுத்துக் கொண்டு நடக்கிற கையின் வேகத்துக்கு இணையாக ஓட்டமும் நடையும் போட்டிருக்கிறேன்.
ஆச்சி சொல்லும் ‘இங்கிருந்தே ஒரு கும்பிட போட்டுக்க வேண்டியதுதான்’ நெல்லையப்பனுக்கு என்று. எஸ்.என். ஹைரோட்டுக்கு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை என்றும், அது ஆசியாவிலே நீளமான சன்னதி என்றும் விபரம் புரிந்தபோதுதான் ஆச்சி சொன்னதற்கு அர்த்தம் பிடிபட்டது. நெல்லையப்பருக்கு சன்னதி அத்தனை பெரிது. டவுண் கோயில் வாசலில் ஆரம்பித்து, பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சிக்னல் வரைக்கும் நூல்பிடித்தமாதிரி ஒரே சாலை தான். முருகன்குறிச்சியில் வந்துதான் திருவனந்தபுரம் திருச்செந்தூர் சாலைகள் பிரிகிறது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, டவுண் சாப்டர் பள்ளிக்கூடப் பையன்களுடன் கிரிக்கெட் ஆடச் செல்வோம். கிட்டத்தட்ட கதீட்ரலில் படித்த எங்களுக்கும் , அவன்களுக்கும் அப்போது ஒரேமாதிரியாக சிமெண்டு நிறத்தில் கால்ச்சட்டை மாற்றி இருந்தார்கள். நிறைய ஆட்டங்கள் பிறகு அவனவன்கள் வீட்டுக்கு அழைத்துப் போவான்கள். அங்கே சொம்பு நிறைய தண்ணியைக் குடித்துவிட்டு நடந்தே பாளை மார்க்கெட்டுக்கு வர இருட்டியிருக்கும்.
இந்தக் காலக்கட்டங்களில் தான் டவுண் கலாச்சாரங்களுக்குள் மெல்ல நான் புகத் தொடங்கினேன். நிறைய நாள் இதே ‘அம்மன் சன்னதி தெருவில்’ நடந்தலைந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த மஞ்சள் சுண்ணாம்புக் காரை வீட்டை எட்டே நின்று பிரம்மிப்பாகப் பார்த்துவிட்டு, தாண்டி ஓடியிருக்கிறேன். உள்ளே உறைந்திருக்கிறவர் தமிழுக்கு செவிமயங்கிக் கிடக்கிற வயது வரைக்கும் அவர்பற்றிய சிலாக்கியங்களைக் கேட்டு அசைபோட்டுக் கொண்டதோடு சரி.

கொஞ்சமே கொஞ்சமாகத் தமிழ் படிக்கத் துவங்கின திருநெல்வேலி மாவட்ட நூலகங்களில் கடலலைக்கு ஒதுங்கின சிப்பி மாதிரி படிந்துகிடந்தேன். யாராவது எடுத்து எறிந்தால் கடலுக்குள் போவதுமாதிரி மீண்டும் வீட்டுக்குக் கிளம்புவது வரைக்கும் புத்தகங்கள் மேய்வது. அப்படித்தான் நெல்லை கண்ணன் ஐயாவைத் தெரிந்துகொள்கிறேன். பிறகு பலகாலங்கள் கழித்து அவர் பேச்சுப் பதிவுகளைக் கேட்டு பரிபூரணமாக அந்தத் தமிழுக்கு தலைசாய்ந்து நிற்கத் துவங்குகிறேன். அடுத்து வந்த நாட்களில் சொக்கல் சந்த் சேட் கடையில் கடைச் சாமான்கள் வாங்க அனுப்பப் படுகிறபோதெல்லாம் அம்மன் சன்னதியிலிருக்கும் இந்த மஞ்சள் காரை வீட்டை அத்தனை பிரம்மிப்போடு கடந்து போவதுண்டு.
சென்னைக்கு வந்த பிறகு ஊர்திரும்பிச் செல்கிற நாட்களில் மூங்கில் மூச்சு படித்ததும் சுகா அண்ணன் இங்கே தான் இருப்பாரோ, தாயார் சன்னதி என்று இந்தத் தெருவைத்தானே எழுதினார். இங்கேதானே சொக்கப்பனை எரியும்.என்ற நினைப்புகளோடு, ஐயா எழுதின குறுக்குத்துறை ரகசியங்களில் வரும் இராவண்ணா கதைகளும் அவர் இப்போது உயிரோடு இல்லையே ‘ச்சே’ என்ற வருத்தமும் கிளர்ந்து எழும்.

சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் என்னை மட்டும் குமரேசன் அண்ணன் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்தாலோ, ஐயாவிடம் அறிமுகம் செய்துவைக்காமல்போயிருந்திருந்தாலோ இன்றைக்கு வரைக்கும் தாயார் சன்னதி தெருவும், இந்த வீடும் நினைப்புகளுக்குள்ளே மட்டுமே வாழ்ந்திருக்கும்.
ஆனால் காலம் ஒருநாள் இந்த வீட்டின் நடுக்கூடத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. பெரியவர் காலில் விழுந்து வணங்கச் செய்தது. இதே வீட்டில் தலைவாழை இலையில் சோறு போட்டு இன்னும் வேணுமா என்று கேட்கச் செய்தது. ஊரேக்கூடி அவர் பிறந்த நாளுக்குக் கொண்டாடுகிற மேடையில் கைகட்டிக் கொண்டு அவர் பக்கத்திலே இரண்டுநாட்கள் நிற்கச் செய்தது. முகநூலில் எழுதுகிறதைப் படித்துவிட்டு, “என் பிள்ளைகள் எனக்குப் பின்னாலும் உண்மைகளைத் தைரியமாகச் சொல்லுகிறவர்களாக இருப்பார்கள்” என்று அவர் வாயாலே பேறு பெற வைத்தது.

முதல்தடைவை எழுதின புத்தகத்தை அவர் கையில் கொடுத்து, “இவன் தான் எழுதினான்” என்று குமரேசன் அண்ணன் சொன்னபோது, “அதுக்கு என்ன செய்ய. கட்டி வச்சி தொலிய உரிச்சுருவமாடே?” என்று கேட்டபோது அந்தக் கணமே சிரித்துத்தான் விட்டேன். “கார்த்தி ஏறு வண்டியில, ஒழுங்கா சாப்ட்டு போ”, “என்னவாம் அவனுக்கு” என்கிற சில வார்த்தைகளுக்கே வாயடைத்து நிற்கிறதுதான் எனக்கு வேலையாக இருக்கும். இப்போதும் யார் கேட்டாலும் சொல்லுகிறேன். நாங்கள் தாயார் சன்னதியில் நெல்லை கண்ணன் ஐயாவை வா பார்த்து வளர்ந்த பிள்ளைகள் என்று.

-கார்த்திக்.புகழேந்தி.

13-05-2016Thursday, 12 May 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016


இந்திய அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்பு என மொத்தம் மூன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் நடத்தப்படும்.


மே -16ல் நடக்கவிருப்பது தமிழ்நாட்டின் பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல்.
18வயது பூர்த்தியான, தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள குடிமகன்கள் யாவரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.


தமிழ்நாட்டின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் : 234
இவற்றுள் 44 தொகுதிகள் சாதி வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. (ஏற்காடு, சேந்தமங்கலம்)


மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் பாதியான 117தொகுதியைவிட ஒரு தொகுதி (118) அதிகமாக பெரும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க முடியும்.


கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 4,59,50,620+
2016 சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 5,79,75,075+
வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு சதவிகிதம் 26%
வாக்குப் பதிவு மையங்கள் எண்ணிக்கை : 65,616


மே16ம் தேதி காலையில் 6மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணியோடு முடிவுக்கு வரும். சீல் வைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள் மூலம் மே 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டி அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். அறுதிப் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆட்சி புரியும்.

காலையில் வாக்குச் சாவடிக்கு வாக்காளர் அடையாள அட்டை / பூத் ஸ்லிப் ஆவணங்களுடன் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க முடியும். காவலர்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்துவார். முதல் தேர்தல் பணியாளர் உங்கள் ஆவணங்களைப் பரிசோதிப்பார். அவரது உதவியாளர் ஆவணங்களைச் சரியார்க்க உதவுவார், இரண்டாவது பணியாளர் இடதுகை ஆள்காட்டி விரலில் கருநீல மையினை வைத்து, “இவர் வாக்களித்துவிட்டார்’ என்று அடையாளம் வைப்பார். பிறகு பாதுகாப்பான இடத்தில் இருக்கும் வாக்கு இயந்திரத்தில் வரிசையாக இருக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் வாக்காளரின் சின்னம்/ புகைப்படத்திற்கு பக்கத்தில் உள்ள பட்டனை அழுத்தி வாக்களிக்க வேண்டும். சிவப்பு வண்ண விளக்கும், பீப் ஒலியும் உங்கள் வாக்கு பதியப்பட்டதை ஊர்ஜிதப்படுத்தும்.


அவ்வளவுதான் நீங்கள் உங்கள் ஜனநாயகக் கடமையைச் செய்து முடித்துவிட்டீர்கள். இவ்வளவுதான் அடிப்படை விஷயங்கள். 1952 முதல் 2011 வரை .. நடைபெற்ற 14 சட்டமன்றத் தேர்தல்கள் பற்றிய சிறு குறிப்புகளைத் தேடிச் சேகரித்து எழுதியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால் படித்துப்பாருங்கள். பகிர்ந்தும் கொள்ளுங்கள் நன்றி.


******

1952ல் தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத்தேர்தல் நடைபெற்றது. (அதற்கு முன்பாக சென்னை மாகாணத்திற்கு ஆங்கிலேய ஆட்சியில், 1920முதல் 1946வரை 7தேர்தல்கள் நடைபெற்றுள்ளன)

*1952 தேர்தலில் 375 தொகுதிகளில் காங்கிரஸ் 152 இடங்கள் பெற்றது. இராஜாஜி சென்னை முதல்வரானார். அவருக்குப் பின் காமராஜர் முதல்வர் பொறுப்பேற்றார்.  21 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே வாக்களித்தனர். மொத்த தொகுதிகள் 375.  (ஆந்திரா, மலபார் பகுதிகள் பிரியும் முன்)

*1957 தேர்தலில் 205 தொகுதிகளில் 151 இடங்கள் பெற்று காங்கிரஸ் கட்சி வென்றது. காமராஜர் இரண்டாவது முறை முதல்வரானார். ஆந்திராவின் பிரிவால் கம்யூனிஸ்டுகள் பலமிழந்தனர். திமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால் அறிஞர் அண்ணா தலைமையில் கட்சி உறுப்பினர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு 13 இடங்கள் வென்றனர்.

*1962 தேர்தலில் 206 தொகுதிகளில் 139 இடங்கள் பெற்று காங்கிரஸ் கட்சி வென்றது. 143 இடங்களில் போட்டியிட்ட திமுகழகம் 50இடங்கள் வென்றது. சாத்தூரில் போட்டியிட்டு வென்ற காமராஜர் மூன்றாம் முறை முதல்வரானார். காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அறிஞர் அண்ணா தோல்வி அடைந்தார்


*1967 தேர்தலில் 232 தொகுதிகளில் 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களில் வென்றது. 232 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 51 இடங்கள் பெற்று படுதோல்வி அடைந்தது. கட்சிப் பணிக்காக பதவி விலகிவிட்டு பக்தவச்சலத்தை முதல்வராக்கின காமராசர் விருதுநகரில் தோல்வி அடைந்தார். போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளால் அறிஞர் அண்ணா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். முதல்வராகப் பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டிலே அவர் மறைந்தார்.


*1971 தேர்தலில் 234 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றன. 203 இடங்களில் போட்டியிட்ட திமுக 184 இடங்களை வென்றது. 1969ல் அண்ணா மறைந்ததால் மு.கருணாநிதி முதன்முதலாக தமிழக முதல்வரானார். 1972ல் எம்.ஜி.ஆர் திமுகவை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி (அ.இ.அதி.மு.க) தொடங்கினார். 1976ல் காமராஜர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சி வலுவிலந்தது.


*1977 தேர்தலில் 234 தொகுதிகளில் எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக கூட்டணி 144 இடங்களில் வென்றது. 1975ல் நெருக்கடி நிலையை அறிவிக்கப் பட்டதால் ஓராண்டுக்கு முன்பே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 48 இடங்கள் மட்டுமே பெற்ற திமுக நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் 12 ஆண்டுகள் வரை ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.


*1980 நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 162 இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 69 இடங்களைப் பெற்றது. 1977 வெற்றி பெற்ற அதிமுக ஆட்சி மூன்றே ஆண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்பட்டதால் 1980ல் தேர்தல் நடைபெற்றது. எனினும் அதிமுகவே வென்று எம்.ஜி.ஆர் இரண்டாம் முறை முதல்வரானார். 1980ல் மத்தியில் சரண்சிங் ஆட்சி கவிழவும் அதன் தலைவர்களுள் ஒருவரான பிஜூ பட்நாயக் திமுக அதிமுக கட்சிகளை இந்திரா காந்திக்கு எதிராக ஓரணியில் திரட்ட முயன்றார். ஆனால் அவர் திட்டம் கைகூடவில்லை.


*1984ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திராகாந்தி காங்கிரஸ் இணைந்தது. அதற்குமுன்பு வரை திமுக கூட்டணியில் இருந்தது. 232 இடங்களில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 195 இடங்களில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மூன்றாவது முறை முதல்வரானார். திமுக 34 இடங்களில் வென்றது. 1987ல் எம்.ஜி.ஆர் மறைந்தார்.


*1989 தேர்தலில் 232 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கருணாநிதி மூன்றாம் முறையாக முதல்வரானார். அதிமுக 27 இடங்களில் வென்றது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. இரு அணியையும் அரசியல் கட்சியாக அங்கிகரிக்க மறுத்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிடது. ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், ஜானகி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டார்.


*1991 தேர்தலில் அதிமுக +காங்கிரஸ் கூட்டணி 224 இடங்களை வென்றது. திமுக வெறும் 7 இடங்கள் பெற்று பின் தங்கியது. முந்தைய தேர்தலில் பிரிந்துகிடந்த அதிமுக ஜெயலலிதா தலைமையின் ஒன்றானது. ஜானகி அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். பாட்டாளி மக்கள் கட்சி முதன்முறையாக யானை சின்னத்தில் போட்டியிட்டது. தனிப் பெரும்பான்மை பெற்ற ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.


*1996 தேர்தலில் திமுக + த.மா.காங்கிரஸ் + இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி 220 இடங்களை வென்று கருணாநிதி நான்காம் முறையாக முதல்வரானார். முந்தைய தேர்தலின் வெற்றிக்குப் பிறகு அதிமுகவுடன் கொண்ட கூட்டணி முறிவால் எதிர்கட்சியாக செயல்பட்டது காங்கிரஸ். தொடர் ஊழல் குற்றச் சாட்டுகளால் ஆட்சியை இழந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 4 இடங்களில் மட்டுமே வென்றது. மூன்றாவது கட்சியாக பாட்டாளி மக்க்ள் கட்சியும் 4 இடங்களைப் பெற்றிருந்தது. இக்காலகட்டத்தில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்தார்.


*2001 தேர்தலில் பலம்பொருந்திய கூட்டணியோடு போட்டியிட்ட அதிமுக 196இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழக முதல்வரானார். மக்கள் செல்வாக்கோடு இருந்தாலும் இடைக்காலத்தில் மத்தியில் பாரதிய ஜனதாவோடு தேசிய கூட்டணியில் இருந்த திமுக 31 தொகுதியில் மட்டுமே வென்றது. தனித்துப் போட்டியிட்ட மதிமுக 205 இடங்களில் டெபாசிட் இழந்தது.


*2006 தேர்தலில் திமுக + காங்கிரஸ் + பாமக + சிபிஐ+ சிபிஎம் கூட்டணி 163 இடங்களில் வென்று கருணாநிதி ஐந்தாவது முறை முதல்வரானார். திமுக மட்டும் 96 இடங்களை வென்றது. அதிமுக + மதிமுக+ விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி 69 இடங்களை வென்று பின்தங்கியது. கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை பெற்றும் தனிக்கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் 30அமைச்சர்களோடு ஆட்சிப் பொறுப்பேற்றார் கருணாநிதி. கூட்டணிக் கட்சிகள் அவரை வெளியிலிருந்து ஆதரித்தமையால் மைனாரிட்டி திமுக ஆட்சி என்று எதிர்க்கட்சியினரால் அழைக்கப்பட்டது.


*2011 தேர்தலில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன 234 தொகுதிகளில் 188 பொதுத் தொகுதிகளும் 46 தனித் தொகுதிகளும் வகுக்கப்பட்டன. அதிமுக கூட்டணியில் 11 கட்சிகளும். திமுக தலைமையில் 8 கட்சிகளும் போட்டியிட்டன. 160 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 146 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. தமிழகத்தேர்தல் வரலாற்றில் அதிகபட்சமாக 77.8% வாக்குகள் பதிவானது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 29 இடங்களில் வென்று எதிர்கட்சி அங்கிகாரம் பெற்றது. 119 இடங்களில் போட்டியிட்ட திமுக ஈழப்படுகொலை எதிர்ப்பலைகளினாலும், 2ஜி அலைக்கற்றை விவகாரங்களினாலும் எழுந்த விமர்சனங்களால் 23 இடங்கள் மட்டுமே வென்று தோல்வியடைந்தது. வைகோ தலைமையிலான மதிமுக தேர்தலை புறக்கணித்தது. சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளால் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா பதவியை இழந்ததால் தற்காலிகமாக அதிமுக எ.எல்.ஏக்கள் ஆதரவில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, வடசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 


*2016 தேர்தல் ஆறுமுனைப் போட்டியைச் சந்திக்கிறது. நாம் தமிழர்கட்சி, பாமக, பாஜக கட்சிகள் தனித்துப் போட்டியிட, மக்கள்நலக்கூட்டணி + தேமுதிக+ த.மா.க கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் பலகட்சிகளின் பங்களிப்போடு போட்டியிடுகின்றன. ஆட்சியிலிருக்கும் அதிமுக கூட்டணிக் கட்சிகளை இணைத்தாலும் அவைகளை இரட்டை இலை சின்னத்திலே போட்டியிட வலியுறுத்தியுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்க 26% மேல் உயர்ந்திருக்கும் இந்த தேர்தல்முடிவுகள் அடுத்த ஐந்தாண்டுகள் தமிழக மக்களின் தலை எழுத்தை நிர்மாணிக்கும்.


-கார்த்திக்.புகழேந்தி
12-05-2016. 
There was an error in this gadget