Wednesday, 21 October 2015

வெட்கம் களைதல்...ஐந்தாவது வயது எப்படி பூர்த்தியானது என்று இப்போது கேட்டால் எப்படி நினைவிருக்கும். ஆனால் லதா மிஸ்ஸும், கிருபா மிஸ்ஸும் இன்றைக்கும் நினைவிருக்கிறார்கள். இந்த டீச்சர்களின் வளையல் வடிவ கம்மலை நீங்கள் யாரும் உங்கள் வயதில் கவனித்திருப்பீர்களா தெரியவில்லை.

க்யூ என்று ஆங்கிலத்தில் எழுதும் போது லதாமிஸ் ஒரு வெட்டு வெட்டி இழுத்து கரும்பலகையில் ஒரு டொக் வைப்பதை ரசித்திருக்கிறேனென்றெல்லாம் சொல்ல முடியவில்லை.
எனக்கு ஒரு பழக்கமிருந்தது உண்டு உறங்கும் போது பாயில் படுத்தாலும் சரி, மெத்தையில் படுத்தாலும் சரி... கால் தரையில் படவேண்டும்.
அதற்காகவே முதல் ஆளாக தரை ஒட்டிப் உறங்குவது. இடைஞ்சலாக இருக்கும் காலணிகள் வீடு திரும்பும் போது டிபன் கூடைக்குப் போயிருக்கும் என்பது தனிக்கதை. ஏகச் சுட்டித்தனம். பள்ளிக்கூடத்தில் தான்.

அந்த வயதில் புளியங்கொட்டையை மூக்கில் நுழைத்து அது சிக்கிக்கொள்ள அக்காளிடம் சண்டை என்றேனாம். இரண்டு நாள் உள்ளே கிடந்து பொதுமிப் போன புளியங்கொட்டையை வெளியில் எடுத்து, தோட்டச் செடி வெட்டும் கத்திரி போலொன்றைக் காட்டி இனி மூக்கில் எதையாவது திணிச்சே மூக்கை நறுக்கிருவேன் என்ற டாக்டர் கண்ணுக்குள்ளே நிற்கிறார்.

லதா மிஸ்ஸுக்கு அத்தனைச் செல்லம் நான். கிருபா மிஸ் கொஞ்சம் கருப்பாக இருந்ததால் அவரிடம் அதிகம் ஒட்டவில்லை போல நான். ஆனால் முகம் நினைவில் கச்சிதம். வஞ்சமில்லாமல் வால்த்தனம் பண்ணித் திரிந்த காலத்தில் ஒரு கிறிஸ்துமஸ் வந்தது. அதற்கு முதல்நாள் கலை நிகழ்ச்சிகளுக்காக நான் பள்ளிக்கூடத்தின் மேடையில் நின்று கொண்டிருந்தேன்.

வெள்ளை பஞ்சுவைத்த தலைமுடியும், கத்திரிப் பூ நிறத்தில் மேலங்கி ஒன்றும், இடுப்பில் அரக்கு துண்டும் கட்டியிருந்தேன். அந்த மேலங்கி அக்காளுடையது. அவளுக்கு பச்சை நிறம் தான் பிடிக்கும் என்பதால் அவ்வளவாய் பிடிக்காத இந்த உடையைத் தந்திருந்தாள். லதா மிஸ்ஸின் குரல் மேடைக்குப் பக்கவாட்டில் இருந்து அசரீரியாக ஒலிக்கும் போது யேசுவாக நினைத்து பவ்யமாக நடிக்கவேண்டும்.

"நோவா நீ ஒரு பேழை செய்யவேண்டும்..." இப்படி இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போவார் பெண்குரலில் யேசு. லதா மிஸ்ஸின் குரல் அத்தனை இனிமையானது. கொஞ்சம் அதிகமாகவே சிவந்த உதடு அவருக்கு... அவர் தான் என் பெயரை ஆங்கிலத்தில் ஒரு எழுத்து அதிகமாய் சேர்த்து ஒரு இக் [Karthi"c"k] வைத்தது.

நோவா வேடத்தில்  ஐந்தாம் வகுப்பு டீச்சரின் மேசையை தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு பேழை செய்து கொண்டிருப்பது போல நடித்துக் கொண்டிருந்தேன்... அது மிக எளிதாகவே இருந்தது. ஆடு மாடுகளாக நடித்தவர்களை எல்லாம் அந்த ஒன்று சேர்த்துக் கட்டிய ஐந்து மேசைகளுக்குள் உட்கார வைக்க, தேவ கிருபையால் நாற்பது நாட்கள் நிற்காமல் மழைபெய்து சனங்கள் காப்பாற்றப்படுவதாக அந்த ஓரங்க நாடகம் முடிந்தது.

அடுத்ததாக பாலர் நடனம் முடித்து மழலையர் நடனம். உடை மாற்றிக் கொண்டு முதல் வரிசையில் ஆட வரவேண்டும். பஞ்சுத் தலைமுடியையும் பிற ஒப்பனைகளையும். கலைத்துவிட்டு, மேலங்கியை பாதி கழட்டியும் மீதி கழட்டாமலும் ரொம்ப நேரமாக நின்று கொண்டிருந்தேன்.

"டைம் ஆச்சு டைம் ஆச்சு கமான் க்விக் க்விக் சீக்ரம் ரெடியாகு...கார்த்திக்"

"மிஸ் கொஞ்சம் கண்ணை மூடிக்கோங்க ப்ளீஸ்... " என்றேன்.

-கார்த்திக் புகழேந்தி.
03:09:15

அது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லைSuresh Raja Gtm 
வீட்டில் மூத்தவனுக்கு நேத்தைக்குப் பிறந்தநாள். அப்பா இருந்தவரைக்கும் பிறந்தநாள் என்பதில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் போனாலும், காலையிலே எழுந்து ஆற்றங்கரையில் குளித்துவிட்டு, பேராச்சியம்மன் கோயிலுக்குப் போய் விழுந்துகும்பிட்டு, அக்காள் கையில் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு அப்பா முன்னால் போய் நிற்பான்.

கடையில் சீனி வாங்க வந்த செண்பகம் மையினிக்கு பழைய நோட்டுத்தாளை கூம்பாய் உருட்டி பொட்டலம் மடித்துக் கொண்டிருப்பார். அண்ணனைப் பார்த்தவுடன் ஒரு இணுக்கு புன்னகைத்துவிட்டு,  “வேலை உண்டா இன்னைக்கு... மதியம் வீட்டுக்கு சாப்ட வந்துரு. அந்த டப்பால காசிருக்கும் எடுத்துக்கோ” என்பார். அத்தோடு சரி.

அப்பாவுக்கும் அண்ணனுக்குமான உரையாடல்கள் சின்னஞ்சிறியவை. அதை தூரத்தில் இருந்து கேட்பதே ஒரு வேடிக்கையாக இருக்கும். என்ன சொல்லவேண்டும் என்பதை இரண்டுபேரும் மனசுக்குள்ளே உணர்த்திக் கொள்வார்கள். “மதியம் பாயாசம் வை கோதை” என்று அவர் சொல்லும் முன்னே அம்மா முந்திரி டப்பாவை கடையில் உருட்டிக்கொண்டிருப்பார். அந்தச் சின்ன மளிகைக்கடைக்குள் தான் அப்பாவைச் சந்திக்கும் பொழுதுகள் அடிக்கடி வாய்க்கும். மற்றபடி தீபாவளி, பொங்கல், மத்தமாதிரியான விஷேசங்களுக்குச் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதோடு சரி.

அக்காதான் அண்ணனை அதிகம் புரிந்துகொண்டவள். எந்த நேரத்தில் அண்ணன் என்னமாதிரி நடந்துகொள்வான் என்பதை வைத்தே அவன் மனஓட்டத்தைப் புரிந்துகொள்வாள். விட்டேத்தியாகவே திரிந்துகிடந்ததால் நமக்கு இந்த வீட்டு அன்பின் நெருக்கம் பெரிதாக ஒட்டிக்கொள்ளவில்லை. அதுதான் இன்றைக்கு பழகின மனிதர்களிடம் வேண்டி வேண்டி ஒட்டிக்கிடக்க வைத்துவிடுகிறது.

இந்த விசயத்தில் சின்ன அண்ணன் நாலுபடி ஏறி நிற்பவன். இன்னும் சிலுக்குச் சட்டை மைனராக வாழ்ந்து கொண்டிருக்கும் அக்மார்க் திருநெல்வேலிக்காரன். கையைக் காலைக் கட்டித்தூக்கிக் கொண்டு அவனை சென்னையில் கொண்டுவந்துபோட்டால் அடுத்த காருக்கு ஊரைப்பார்த்து ஓடிவிடுவான். அநியாயத்திற்கு மனிதர்களைத் தெரிந்து வைத்திருப்பான்.

நிம்மதியாக ஆற்றுக்கு குளிக்கக்கூட அவனோடு போக முடியாது. எதிர்படுகிற ஒவ்வொருத்தருக்கும் அவனிடம் பேச ஆயிரம் சொச்சம் வார்த்தைகள் இருக்கும். “எல சத்தங்காட்டாம போறியா, அறை வெளுக்கட்டுமா” என்று பஜாரில் குடிச்சுட்டு அலம்பல் பண்ணுபவனை தோரணையாலே மிரட்டிவிடுபவன்.

அண்ணன் அவனுக்கு நேர்மாறாக அமைதிக்கு தத்துப் பிள்ளை.
என்ன இருந்து என்ன ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்வதில்லை. ஆச்சு மூணுவருசம். அண்ணனுக்குக் கல்யாணம் முடிந்தபோது அப்பா தவறி இருந்தார். வீட்டில் மூத்தது ஆம்பள பிள்ளைதான் நம்ம குடும்பத்துல என்று பெரியாச்சி சொன்ன வாக்கு பலிப்பதுபோலவே அண்ணனுக்கு மகன் வந்து பிறந்தான். சொல்லவும் வேண்டுமா அப்பாவின் பெயரைத்தான் சூட்டியிருக்கிறான்.

மனசு துண்டுபட்டு இங்குட்டும் அங்குட்டுமாக பிரிந்து கிடந்தாலும் அடியாழத்தில் அந்நியோன்யமான அண்ணன் தம்பி அன்பு புல்லுச்செடிபோல ஒத்த மழைக்குத் துளிர்த்துத்தான் விடுகிறது இல்லையா!

-கார்த்திக்.புகழேந்தி.
12-09-2015.

எங்கதெ - இமையம்


நேற்றைக்கு கணையாழி வாசகர் வட்டம் அமர்வுக்குச் சென்றிருந்தோம் நானும், நண்பரும். "எங்கதெ" நாவல் குறித்துப் பேசினார்கள்.
அந்த நாவலே விநாயகம் என்ற தனிமனிதன் தன்னந்தனியே பேசிக்கொண்டே போவதால் அதைப்பற்றித் தனியாகப் பேச ஒன்றும் சிக்காது என்பதுதான் உண்மை. கூடியமட்டும் கதையின் காலகட்டம், அண்ணன் தங்கை உறவுகள் இதையெல்லாம் மெச்சலாம்.

ஊருக்குள் இட்டுக்கட்டிப் பேசுதல் என்பார்களே! அப்படித்தான் இந்த நாவலை வாசித்து நமக்கு என்ன தோன்றியதோ அது எல்லாம் கருத்துகள். என்ன இருக்கனும் என்று நினைக்கிறோமோ அதி எல்லாம் விமர்சனங்கள் என்று ஆகி விடுகிறது. பேசுபவர்களிடையே, இது ஒரு "நீண்ட புலம்பல்" என்ற வார்த்தையை நிறைய தடவை இலைமறையாகக் குறிப்பிட்டதைக் கேட்கமுடிந்தது.

எனக்குச் சந்தேகமாக இருந்தது வீட்டுக்குத் திரும்பினதும் திரும்ப எடுத்து வாசித்துப் பார்த்தேன் புலம்பல் சலிக்காமல் கேட்க முடிந்தது. சாதாரணமாக புலம்பல்களை இப்படி திரும்பத் திரும்ப கேட்டால் எரிச்சல் வந்துவிடும் இங்கே அது நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கமலா ருசிக்கிறாள். அவ்வளவுதான் வேறு சொல்ல ஒண்ணுமில்லை.

விநாயகத்தின் குரலில் கமலாவை உருவகம் செய்யுபோது எனக்கு ரெட்டியார்பட்டியில் குடியிருக்கும் போது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணொருத்தர் நினைப்பில் வந்தார். அப்போ அவர் இவர் என்றெல்லாம் சொல்லமாட்டோம்.

மூணாம் வீட்டுக்காரி அவ்வளவுதான். அவருக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் என்னவோ படித்துக்கொண்டிருந்தான் அப்போது. என்னை விடச் சின்னப்பயல். அவன் வயதுப் பையன்கள் யாரும் அவனை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது மட்டும் தெரியும்.

அந்த பெண்ணுக்கு புருசனில்லை. கருக்கலில்  பாளை பஸ் ஸ்டாண்டில் வெளியூர் பேரூந்து நிறுத்தும் வெளிவாசலில் கையில் ஒரு ஹேண்ட் பேக்கோடு நின்று கொண்டிருப்பார். அப்போ
திருநெல்வேலி புதுபஸ் ஸ்டாண்டெல்லாம் வேய்ந்தான் குளம்தான்.

ஒருநாள் எனக்குச் சைக்கிள் ஓட்டச் சொல்லிக்கொடுத்த குட்டி என்ற நண்பன் தான் சொன்னான். "அவ மத்தமாதிரி தொழிலுக்குப் போறவான்னு"
கோயில் கொடை வந்தால் அவர் வீட்டில் வரி வாங்க மாட்டார்கள். படைப்புச் சோறு போகாது. நாராயணன் கோயில் பூ அந்த வீட்டு பக்கம் எட்டிப்பார்க்காது. பகட்டுக்கு அவரை ஊரே ஒதுக்கி வைத்திருந்தாலும் சங்க கட்டிடத்துக்கு வாடகை வாங்குபவரோடு இருந்த பழக்கத்தால் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அம்பாசமுத்திரத்திலிருந்து செங்கோவி இழுத்துவிட்ட நெற்றியோடு ஒருத்தர் அவர்வீட்டுக்கு சனிக்கிழமைகளில் வந்து போவார். அவர் வருகிற தினத்தில் சிவப்பு டவுசரில் அந்தப் பெண்ணின் மகனும், மூக்கு ஒழுகும் அவன் தங்கையும் ஆட்டுரலில் வெளிப்பாதை வேம்புமர நிழலடியில் உட்கார்ந்திருப்பார்கள்.

"ச்சை வயசுக்கு வந்த பிள்ளைய வீட்டுல வச்சுட்டு வாழ முடியுதா கண்டது தெனத்துக்கும் கால விரிச்சுட்டு அலையுதுவோ" என்று மீன்குழம்புச்சட்டியை அலசின தண்ணீரை வேண்டுமென்றே அந்த பெண்ணின் வீட்டு வாசலுக்கு விசிறி காரி உமிழும் நாலாம் வீட்டுக்கார சுப்பம்மக்கா. எங்களுடையது முதல்வீடு.

ஒருநாள் செங்கோவி குடித்துவிட்டு வாய்த்தகறாறு ஆனதில் கைசரசம் முற்றிப்போய், அந்த பெண்ணைப்போட்டு அடித்ததில் காது அறுந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அதே சுப்பம்மக்காதான் செங்கோவியை "ஒழுங்கா காம்பவுண்ட விட்டு வெளில போலன்னா போலீசில புடிச்சி கொடுத்துருவேம்" என்று செங்கோவியை மிரட்டி விரட்டியது.  மறுநாளைக்கெல்லாம் சங்கக் கட்டிடத்து ஆள் வந்தார். தடபுடலாய் என்னென்னவோ பேசி வீட்டக் காலிபண்ணாமல் இருக்க மட்டும் வழிபண்ணிவிட்டுக் கிளம்பிப்போனார்.

நாலு மாசம் கழித்து செங்கோவி இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டோடு வந்து டவுசர் பையனிடம், "அம்மா எங்க போயிருக்கா" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

ஊருக்கே அந்த பெண்ணைத் தெரியும். எல்லாராலும் ஒதுக்கப்பட்டவளாக அதே நேரம் யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து வந்தவள். ஒதுக்குவது மாதிரி ஒதுக்கினாலும் எல்லார் கண்களும் அவள்மேல்தான் புரண்டுகொண்டிருந்தது.

அவள் அவர்களில் எவரையும் நேசிக்கவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. தன் பிள்ளை பிழைப்பு அப்புறம் எப்பவாது வரும் செங்கோவி.
இங்கே தான் "எங்கதெ"யில் வரும் கமலாவையும், பெயர் தெரியாத அந்தப் பெண்ணையும் பொருத்திப் பார்த்துக் கொண்டது.
குட்டி சொல்வான் "அவள் வீட்டுலகட்டுக்கட்டாக பணம் இருக்குமான்டா"

"உனக்கு யாருல சொன்னா"

"எங்காச்சி சொன்னிச்சி"

எப்ப எதைக் கேட்டாலும் ஆச்சி முந்தானையை தான் இழுப்பான். இததனைக்கும் அது ஒரு ஊமைக்கிளவி.
சில தடவை மூணா வூட்டுக்காரிக்கு பொறந்தவனே என்று தன்னை அடித்த ஆவின் பண்ணை டிரைவர் எவனையாவது ஏசவும் செய்வான் குட்டி.
பூக்கொடுக்காத நாராயணன் கோயில் பூசாரி, வரி வாங்காத ஊர் தலைவர் எல்லாருமே ' ஏ ' காலனிக்கு அவள் நடந்து போகும் போது பின்னாலே சைக்கிளில் துரத்திப் போய் நூல்விட்டுப் பார்த்ததுண்டு.
இப்படி ஆளாளுக்கு அவள்மேல் ஒரு இச்சையும், சுடுசொல்லும்
அவள் மேல் இருக்க அம்பைக்கார செங்கோவிக்குத் தான் அவளைப் பற்றி உள்ளது தெரிந்திருக்கும்.

அந்த இடத்தில் "எங்கதெ" விநாயகத்தை உட்கார்த்தி மூணாவது வீட்டுக்காரி பத்திச் சொல்லேன் என்று கேட்டால் அவன் என்னென்ன சொல்லி இருப்பானோ அதுதான் எங்கதே. இப்படி இருக்கும்போது. அவன் கதைக்கு என்ன விமர்சனத்தைச் சொல்லமுடியும. கூட நாலு வார்த்தை எடுத்துப் போட்டு அவன் கதை இது என்று இன்னொருத்தருக்குச் சொல்லலாம்.

ஆக, கதைக்கு கண்ணு மூக்கு வாய் எல்லாம் சொல்பவனும் கேட்பவனும் சேர்ந்து உருவாக்கிக் கொள்வது. கதை முடியும் போது உருவம் கடலில் கரைந்துவிடும். கதை மட்டும் மனதில் தங்கிவிடும்.
அந்தக் கதையை "இதே மாதிரிதான் எங்க ஊர்ல.... " என்று மேலே நான் சொன்னது போல, இன்னொரு புள்ளியிலிருந்து கோடிழுக்கலாம். எங்கதே அதைத்தான் செய்கிறது.

பேச்சுமொழி குறித்து பல மெத்தப்படித்தவர்களின் அசூயையைத் தாண்டி இமையம் அவர்களின் மொழி வாசிப்புக்கு லேசானதாகப் படும் எப்போதுமே. எங்கதேயும் அப்படித்தான். கோவேறு கழுதைகள் வாசித்தது
முதல் அப்படித்தான் உணருகிறேன்.

அதுபற்றி கூட்டத்தில் அவரிடமே உங்கள் கருத்து என்னவென்றும் கேட்டேன்.
"இந்த மீடியாக்கார கிறுக்குப்பயலுங்க பண்ற வேலை" என்று பொட்டில் அடித்தார். அது சரி எழுதுகிறதைப் பேசுறதில்லை. பின்னே பேசுவதை எழுதும் போது என்ன பித்தலாட்டம்.

இமையம் அண்ணன் தடாலடி கருத்துக்காரர். தனக்குப் பட்டதை மண் கலயத்தை உடைப்பது போல பொட்டென்று உடைத்துவிடுவார். இங்க எவனுக்கும் வாசிக்கத் தெரியலடா தம்பிங்கும் போது... நல்ல எழுத்தையும், வாசிப்பையும் கத்துக் கொடுக்கலை இங்க இருக்கும் மேதைகள் என்ற தொனியில் தான் அது எனக்குக் கேட்டது.-கார்த்திக் புகழேந்தி.
20-09-15

ஊர்நாட்டானின் பக்ரீத்ரம்ஜான் சின்ன பெருநாள். பக்ரீத்துதான் பெரிய பெருநாள் அப்படின்னு உசேன் தான் சொல்லுவான். தாஹீர் , சிக்கந்தர் உசேன் எல்லாவனும் பள்ளிவாசல் தெருக்காரனுங்க. எங்களது தைக்கா தெரு. ஒண்ணுமண்ணா பள்ளிக்கூடத்துல படிச்சவனுங்கதான் எல்லாவனும். இன்னைக்கு ஒருத்தன் செல்போன் கடை, ஒருத்தன் ஜவுளி யாவாரம், வாட்ச் கம்பேனின்னு ஆளுக்கொரு தொழில்ன்னு ஆகிட்டானுங்க.

ரம்ஜான் பக்ரித் அப்பொல்லாம் வெள்ளைல கட்டம் போட்ட சாரத்தை கட்டிட்டு வந்து நிப்பானுங்க. நமக்கு வேடிக்கையாத்தான் படும். எம்மா எனக்கும் சாரம் தாயேன்னு கேட்டா வெளக்கமாறு தான் வந்து விழும்.

முஸ்லீம் பண்டிகையப்போ நமக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் லீவுன்றதோட சரி. அவங்களுக்கு அப்டி இல்லல்லா... அப்ப எங்ககூடி தீபாவளி பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்ற பழக்கம்லாம். பரிட்சைக்கு நடுவுல லீவு விட்டதே பெருசு. அதனால எல்லா பயல்களும் ஆத்தங்கரையிலயும், எம்.டி.டி பள்ளிக்கூட கிரவுண்ட்லயும் கிரிக்கெட் விளையாடிட்டு கிடப்போம். அந்த மஞ்ச கட்டடம் செவுத்துல த்ரூவா பந்து பட்டா சிக்ஸு. தப்பித்தவறி ஜன்னல் உள்ள போயிடுச்சுன்னா அவுட்டு.

ஆத்தங்கரையில் இந்த பிரச்சனை இல்ல. எங்க அடிச்சாலும் ரன்னு உண்டு. முள்ளுக்குள்ள சிக்குனா ட்டூ-ஜின்னு சொல்வோம். அது அவ்ளோ பெரிய ஊழல்ன்னு அப்ப யாருக்கு தெரிஞ்சது.

சற்குணத்தம்மான்னு பேருள்ள ஆச்சியை எல்லாரும் சலீமாம்மான்னு தான் கூப்பிடுவாங்க. ஆத்தங்கரை ஓரத்திலதான் அந்த ஆச்சி வீடு. பக்ரீத் அன்னைக்கின்னு பார்த்து சிக்கா அடிச்ச பந்து நேரா ஆச்சி வீட்டுக்குள்ள பாஞ்சி அடை வச்சிருந்த கோழிமேல பட்டு கோழி செத்துப் போச்சி. பெருஞ்சண்டைக்குப் பெறகு முட்டகோழிக்கு நூத்தம்பது ரூவான்னு கணக்குசொல்லி பிரச்சனை தீர்ந்துச்சி. அன்னைக்கு மத்தியானம் எங்க வீட்ல நாட்டுக் கோழிக்குழம்பு வாசனை மூக்கத் தொளைச்சுது.

சலீமம்மா அந்த நூத்தம்பது ரூவா கணக்கை கடன் சொல்லி தன் கடைசி காலம்பூரா எங்கைய்யா கடையில துணி சோப்பு வாங்கியே கழிச்சிச்சு கிழவி.
அன்னைக்கு உயிர்த்தியாகம் பண்ண கோழியை இன்னைக்கு நினைச்சாலும் நீர் சுரக்கும்.

கண்ணுலயா நாக்குலயான்னு நீங்க கேக்குறது எனக்கொன்னும் கேக்கல பார்த்துக்கிடுங்க.

-ஊர்நாட்டான்.
24/09/2015.

முற்றத்து மரத்தை வெட்டியது போல..."முற்றத்து மரத்தை வெட்டியதுபோல" என்றெழுதிய கலாப்ரியா அவர்களின் வார்த்தை கண்ணில் பட்டது. எனக்கு தயாபரன் தெரு காம்பவுண்டு வாசம் நினைப்புக்கு வந்தது. யசோதா இந்த கண்ணனை உரல்ல கட்டிவச்சிட இரண்டு மரங்களுககு நடூல உரலைச் சிக்க வைச்சி தப்பிச்சுக்குவாம்லா கிரிமினல் பய. அப்படி ஒரு ரெட்ட மரம் எங்க வீட்டு முத்தத்தில நின்னுச்சி.

மரத்துக்கு செட்டுக்குச் சேக்காளியா குப்புற கவுத்துன கல்லுரல் ஒன்னும் அங்கயே கெடக்கும். ஆச்சி சொளவு புடைக்கும் போது கால்நீட்டி மரத்துபோச்சுன்னா. ஒரல்லதான் வந்து ஒக்காரும். அந்த மரங்க நிழலடில தான் அதுக்கு பொழுதே கரையும். ஆச்சிக்குத் தொண ஆடும் மாடும்.
முக்காவாசி முங்கிக்கெடந்த கல்லுரலை கமத்திப் போட நிறையநாள் உருண்டு புரண்டு பார்த்தும் ம்ஹூம் அசையலையே.. சரி ஒரலதான் அசைக்க முடில இந்த மரத்துல ரெண்டுல ஒன்ன கமத்தி போட்ருவமான்னு கூட நெனப்பு.


செவலை கன்னுக்குட்டியை ஒரல்லேதான் கட்டிப்போடுறது எப்பவும். முணுமணிக்கு கறவைக்கு ஆள் வந்தாப் போதும் மடில முட்டி பால்குடிக்க கிடந்து குதியா குதிக்கும். கருவக்காயா தின்னு வளந்த குட்டியை சுழிசரியில்லைன்னு சந்தைல வித்தபெறகு முத்தத்து உரல் மொழுக்கட்டையாயிருச்சி. ஒருதரம் தீவாளிக்கு சும்மா கெடக்காம உரல் மேலே வச்சி பொட்டுவெடி வெடிக்கப்போய் என்ன எளவு பிசிறோ சட்டபோடாத தொந்தியில் தெரிச்சி ரத்தம் எட்டிப் பார்த்துருச்சி.

இனுக்கோண்டு ரெத்தத்துக்கு ஒருநாளு முழுக்க அழுதவன் எம்பேரன்னு கெளவி மானத்த வாங்கிருச்சி.. அதிலிருந்து உரல்கிட்ட எந்த சேட்டையும் வச்சிக்கிடுதது கிடையாது. அப்பப்போ மரமேறிக்குரங்கு விளையாட, கண்ணாம்பொத்திக்கு மரத்தோட மரமா ஒட்டி நின்னு இருட்டில் மறைஞ்சுக்க, மழைக்கு அப்புறம் தேனாட்டம் வடியும் முள்ளு பிசின் பிச்செடுக்க, சைக்கிள் டீப்பு, டயரு, வடக் கயித்தல்லாம் வச்சி ரெண்டு மரத்துக்கும் குறுக்க சாய்ப்பு ஊஞ்சல் கட்டிக்க, கை தொண தொணத்தா காஞ்ச பட்டைய உரிக்கன்னு மரங்களுக்கு கூட மட்டும் நெறைய பழக்கப்பாடுங்க இருந்துச்சு.

காம்பவுண்டையே வெலைக்கு வாங்கி வீடு கட்டுன சிட்டைக்காரரு எங்காச்சி சொல்லியும் கேக்காம, மரத்தை வெட்டிப் போடச் சொல்லி ஆள் வச்சாரு.
அன்னைக்குதான் மொத தடவ முடி மொளைக்காத குருவிக்குஞ்ச கைல வச்சு உசுரு இருக்கான்னு பார்த்துட்டு இருந்தேன். மரத்து அடிவேரப்புடுங்க தோண்டுன குழிய என்னத்த வச்சி மூட என் சவத்த வச்சி மூடுமைய்யான்னு எங்காச்சி பொலம்பிட்டு இருந்துச்சு. நாந்தான் ஆச்சிய காப்பாத்தனும்ன்னு செத்துப்போன குருவிகுஞ்ச அங்கயே பொதச்சுட்டேன். மரமும் போச்சி, குருவியும் போச்சி, கொஞ்ச காலத்தில் ஆச்சியும் கூடவே போயிருச்சி..

-ஊர்நாட்டான்.
( இன்னைய தேதி தான். )

மொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சி மொழிவது அறம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். அடுக்குமாடிக் குடியிறுப்புகள் பற்றினத் தலைப்பு. இந்த கேட்டட் கம்யூனிட்டி மீதுள்ள வெறுப்பை எல்லாம் கொட்டித்தீர்த்துவிடலாம் தான். ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமாய் நிறைய சங்கதிகள் அலசப்பட்டது.

சமத்துவம் இருக்கிறது, வாழும் காலத்திலே சொந்தவீடு கனவு நிஜமாகி இருக்கிறது என்ற பாசிட்டிவ் பக்கங்களுக்குப் பின்னே இங்கே சுதந்திரமில்லை என்று மூன்றுவித கருத்துகளில் எனக்கு மனித உணர்வு மாற்றத்தைப் பிரதிபலிக்கு வண்ணமமைந்த ”அடுக்குமாடிக் குடியிருப்புகள் மனிதர்களைத் தீவுகளாக்கி விடுகின்றன" என்ற தலைப்பு பொறுத்தமாக அமைந்தது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பிரச்சனைகளை எடுத்து அடுக்கி வைப்பதென்பது அடுத்தநாளே அத்தனையும் இடித்துத் தள்ளிவிட்டு தனிவீடுகள் கட்டிக்கொள்ளுங்கள் என்று முட்டாள்தனமாகப் பேசுவதல்ல. தவிர, நகரம் கிராமங்களைப் பிரதிபலிக்கவேண்டும் என்று வலிக்கட்டாயமாகத் திணிப்பதுமல்ல.

நாம் மனிதர்கள், நமக்கு வீடு என்பது வெறும் உய்விடம் அல்ல அது உணர்வுகளைக் கற்றுத்தரும் கூடம். தலைமுறைதலைமுறையாக வளர்த்தெடுத்த நம் மரபும், பண்பாடும் வடிவங்கள் மாறிப்போயிருக்கலாம். ஆனால் அதன் அடிப்படை வேர்களைத் தகர்க்கும் பிரச்சனைகளை புரிதல்கொண்ட மட்டும் பேசியிருப்பதாக நினைக்கிறேன்.

அதையெல்லாம்விட என்ன இன்னும் சொந்த வீடு வாங்கலையா என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி தன் வியாபாரத்தை வளர்த்தெடுக்கும் கொள்ளையர்களைப் பற்றியும், அடுக்குமாடிக்குடியிருப்புகளின் கட்டுமான ஆபத்துகளையும் இன்னும் தீவிரமாகப் பேசியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன் காணொளியைப் பாத்து முடித்ததும்.

நிகழ்ச்சியை பதிவுசெய்துகொடுத்த பேராசிரியர். டாக்டர். உஷா ஈஸ்வர் அவர்களுக்கு நன்றி.

Part 1" on YouTube - https://youtu.be/xMr57kZzkaw 
                                         Part 2" on YouTube - https://youtu.be/d_aOEou8DigPart 3" on YouTube - https://youtu.be/tzEzi4ljAzQ

Part 4" on YouTube - https://youtu.be/i5tIzI7Vrdw


Part 5" on YouTube - https://youtu.be/e1tEmaVw-ksகார்த்திக்.புகழேந்தி| சென்னை |
+91 9994220250


25-09-2015. 

வாசிப்பெனப் படுவது...பத்துவருசம் முன்னாடி (அப்போ 16வயசுதான்) பெரிய வாசிப்பனுபவம்லாம் கிடையாது. ஒரு பத்து எழுத்தாளர் பேரு சொல்லுன்னு கேட்டுருந்தா பேந்த பேந்த முளிச்சிருப்பேன்.வாசிக்கிறது, எழுதுறது எல்லாமே இந்த நாலைஞ்சு வருசமாத்தான். பள்ளிக்கூடத்துக்கு வெளியதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சுஜாதாவும் மதனும் தான் முதல் வாத்தியார்கள்.

வரலாறுமேல இவ்ளோ ஈடுபாடா நமக்குன்னு தோணுற அளவுக்கு சரித்திரத்தில் மூக்கை நுழைச்சிருக்கேன். உண்மையச் சொல்லனும்ன்னா எல்லா பாடத்திலும் 80, 95 வாங்கிட்டு சோசியல் சைன்ஸ்ல 77மார்க் வாங்கினபய நான்.

நம்ம மண்ணோட வரலாறைப் படிக்கப் படிக்கத்தான் அறிவு ஊறும்ன்னு விடாப்பிடியா நம்பிக்கை வச்சிருக்கேன். வரலாறு எழுதின புத்தகத்தில மட்டும் இல்ல பாக்குற மனுசங்ககிட்டயும் இருக்குன்னு ஒருகட்டத்தில் அறிவுக்கு பட்டப்போதான் கூச்சத்தைவிட்டு மனுசங்களோடு பழக ஆரம்பிச்சது.

எஸ்.ரா ஒரு மாட்டுவியாபாரிக்கிட்ட கதை கேக்குறதுக்காக நாலுமைல் தூரம் அவர்கூடவே மாட்டப்பத்திட்டுப் போனதாச் சொல்லியிருப்பார் கதாவிலாசத்தில. எனக்குங்கூட அந்தக் கிறுக்குத்தனம் இருந்துச்சி. நீச்சல் கத்துக்கனும்ன்னா ஆத்துல இறங்கித்தான ஆவணும். எல்லா மனுசங்ககிட்டயும் ஏகப்பட்ட கதைங்க.

கோமாளிமாதிரி கண்ணுக்குத் தெரிஞ்சவன் கிட்ட கோடீஸ்வரனோட கதை இருந்துச்சு. சின்னம நாயக்கர் ஜமின்வாரிசுங்க கிட்ட கேக்கும்போது வாழ்ந்துகெட்ட கதை இருந்துச்சு. மனுசன் தன்னோட கதையை காதுகொடுத்து கேக்குறவனை எவ்ளோ நம்புறான்னு பழகித் தெரிஞ்சுகிட்டேன்.

இப்போ அப்படியே புத்தகம் பக்கம் திரும்பி வந்தா நிறைய பேரு சவசவன்னு வார்த்தைங்கள நீட்டி முழக்குறாங்கன்னு பட்டது.நேரடியா கதைக்குச் சொந்தக்காரனை பார்த்துப் பழகின காதுக்கு கிடைச்ச சுவாரஸ்யம் வாசிக்குற கண்ணுக்கு இல்ல. எங்கயோ தொடர்பு அறுந்து நிக்குதுன்னு உணர்றேன் அப்போதான். அன்னையில இருந்து பேச்சுமொழிமேல ஒரு தனி ஒடுதல்.
இதுதாம்ல நம்ம சரித்திரத்த காப்பாத்தி வச்சுக்க வழின்னு தோண ஆரம்பிச்சுருச்சி.

"எந்த ஒரு மொழி பேசப்பட உகந்ததா இல்லையோ அது அழிஞ்சுபோகும்ன்னு" யாரோ எழுதினது நினைப்புக்கு வருது. இந்த பேச்சுமொழிக்கு இடையில அர்த்தம் புரியாம மருவி, தொலைஞ்சுபோன வார்த்தைங்களை எட்டிப் பார்க்கும் போது மொதசொட்டு மழை கன்னமேட்டுல விழுமே அப்படி ஒரு உணர்ச்சி.

இந்த மொழி மேல எத்தனை அக்கறையும் நேசமும் இருந்தா ஒவ்வொர் வார்த்தையா தேடிப்புடிச்சு அகராதிவரைக்கும் போட முடியும். அப்படித் தேடிச் சேர்த்த அகராதிக்கார எழுத்தாளரல்லாம் வாசிக்கும் போது ஆஹா இவங்கதாம்டே நம்ம குருசாமின்னு மனசு அவங்க எழுத்தில் அப்பிக்கும்.

இப்போ என்கிட்ட வந்து அந்த பத்து எழுத்தாளருங்க யார் யாருன்னு கேட்டா பட்டுபட்டுன்னு சொல்லிடுவேன். ஆனா அவங்கள கொண்டாடவும், புரிஞ்சுக்கவும், வாசிக்கவும் நிக்குற ஆட்கள் ரொம்ப சொற்பம்.
நல்ல எழுத்தாளன மதிக்காத ஊரு என்னைக்கும் நல்லா இருந்ததில்லன்னு மட்டும் மண்டைக்குள்ள ஒரு வார்த்த உருண்டுக்கிட்டே கெடக்கு..

கார்த்திக்.புகழேந்தி
27-09-2015

ரஜினி முருகன்விடுமுறை நாட்களில்  ஒருகூட்டம் தெக்குத்தெரு குளத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும். கூட்டத்தில் இளசுகளுக்கிடையே கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் முதிர்ச்சியாக ஒருத்தர் கட்டம்போட்ட சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் ஃபீல்டிங் நிற்பாரென்றால் எங்கள் ஊரில் அவருக்குப் பெயர் மளிகைக்கடை முருகன்.  ஏரியாமுழுக்க ரஜினி முருகன்.

கீழவளவில் ராணி மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். ராணியக்கா இல்லாதபோது ஏரியா விடலைகள் ஒன்றுகூடும் இடம் அவர் கடைதான். முன்னாள் “வீரா ரஜினி ரசிகர்மன்ற கிளைச் செயலாளர். வீரா படம் ரிலீஸாகும் போது பிறந்திருக்கவே செய்யாத பொடியன்களோடு இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது வீட்டுக்காரம்மாளின் பெரிய குற்றச்சாட்டு.

முருகன் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் இக்னேசியஸில் ஏழாவதும் ஐந்தாவதும், படிக்கிறது. ரெண்டும் பொண்ணு என்பதில் அவருக்கு ஏக சந்தோசம். கேட்டால்  “தலைவருக்கும் ரெண்டுமே பொண்ணுங்கதான்” என்பார்.

ராணியக்காவை கடையில் உட்கார வைத்து, “குளத்தாங்கரை வரை போய்ட்டு வந்துடுறேன்” என்று புளுகிவிட்டு எங்களோடு வந்து பீல்டிங் நிற்பார். உடும்புமாதிரி க்ளோஸில் கவர் செய்ய ஒரு ஆளை நிறுத்துவதற்காக அவரை எடுத்துக்கொள்ள இரண்டு டீமும் அடித்துக்கொள்ளும். கிரிக்கெட்டில் அவர் ஒன்றும் புலியெல்லாம் இல்லை. வலுவாய் ஒரு யார்க்கர் போட்டால் ஸ்டிக்கு நழுவிடும்.

"காலுக்குள்ளே எரிதாம்ல.. கண்டாரோலி" என்றபடி பௌலரைத் திட்டிக்கொண்டே கிரீஸைவிட்டு வெளியேறும்போது வேடிக்கையாக இருக்கும். எப்போதாவது கண்ணைமூடிவிட்டு சுத்தினால் அத்தோடு பந்து தொலைந்து போகும் தூரத்துக்குப் பறக்கும். ஆட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.

"ஏண்ணே உங்களுக்கு ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு இருக்குமா?"

"ஏன் வயசக்கேட்டு என்ன எனக்கு வளகாப்பா பண்ணப்போற மூட்டுப்போல"

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து சொல்வதென்றால் டவுண் ரத்னா தியேட்டரில் பாட்ஷா ரிலீஸ் ஆகி இருந்தபோது ஏக தள்ளுமுள்ளு. சட்டைகிட்டையெல்லாம் பட்டன் அறுந்து, கிழிந்து தொட்டி ஆட்டோவில் அழைத்துவந்த தன் ஏரியா ஜனங்களைத் கடினமான அண்டர்கவர் ஆப்ரேசன் மூலம் அரங்குக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமை அவருக்கு ஊருக்குள் இருந்தது.

ரஜினி பட ரிலீஸ் என்றால் ஆளைக் கையிலே பிடிக்கமுடியாது. ரஜினி பிறந்த நாளைக்கு டெய்லர் மிஷின், மூன்றுசக்கர சைக்கிள் என்று டயோசிசன் ஆட்களைப் பிடித்து அல்லோலகல்லோலப் படுத்திவிடுவார்.  நற்பணிமன்ற வேலைகள் தொடங்கி நாட்டுநலப்பணி திட்டம் வரைக்கும் வீரா நற்பணிமன்றத்தின் முக்கிய காரியதரிசி ரஜினி முருகன் அண்ணாச்சி தான்.

சொல்லி வைத்தது போல அவர் வீட்டம்மாவும் ரஜினி ரசிகை. என்பதால் கடை அடைத்ததும் சோடி போட்டுக்கொண்டு படம் ரிலீசான முதல்நாள் இரவுக்காட்சிக்கு தன்னுடைய பழைய எம்.எய்ட்டியில் ஊர் அதிரப் படத்துக்குப் போவார்கள்.

அருணாச்சலத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் படையப்பா ரிலீஸ் ஆனபோது கோயில் சுவரில் வால்போஸ்டர் ஒட்டினதற்காக கமல் ரசிகர்கள் பிரச்சனையைக் கிளப்பிவிட, அதைத்தன் இருப்பை நிறுவுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் ரஜினி முருகன்.

பிரச்சனை தீர்ந்த  அடுத்த திருவிழாவிற்கு வீரா நற்பணிமன்றம் மைக் செட்டு செலவுப் பொறுப்பை ஏற்றது. கோயில் கொடைவிழா முடியும் வரைக்கும் "சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு ஏறு என்று ஏறிக்கொண்டிருந்தார்கள்"

பாபா படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு. ஆளாளுக்கு துண்டை தலையில் கட்டிக்கொண்டு நடுவிரலையும், மோதிரவிரலையும் மடித்து “கதம் கதம்” என்றபடி திரிந்தார்கள். பாபா பப்படமாக படுத்துவிட்டதால் நொந்துபோன மனிதர் சிலபலகாலம் தாடியோடு திரிந்தார்.  ஒரே நல்லகாரியம் ரஜினி கொடுத்த ஸ்டேட்மெண்டினால் புகைப்பதை விட்டுவிட்டார்.

சந்திரமுகியிலிருந்து ரசிகர்மன்றப் பொறுப்பு மேலக்குளம் சந்தானகுமார் கைகளுக்கு மாறியது. ரசிகர் ஷோ முதல் ராம் தியேட்டர், பாம்பே தியேட்டர் வரை பேனர் கட்டுவது வரை எல்லாவற்றிலும் நவீனயுக்திகள் புகுத்தப்பட்டது. முருகன்குறிச்சி பெட்ரோல் பல்க் பக்கம் வைத்திருந்த தட்டி விளம்பரத்தில் முன்னாள் செயலாளர் ரஜினிமுருகன் எழுதாத காரணத்தால் அண்ணன் வலுக்கட்டாயமான  ரிடெய்ர்ட்மெண்டுக்கு தள்ளப்பட்டார்.

குசேலன் ஊற்றிக்கொண்டபோது ரஜினி ரசிகர்கள் கிளைச்சங்கங்கள் பெருகிவிட்டிருந்தது. ரஜினி-விஜய் ரசிகர் மன்றம், ரஜினி-அஜீத் ரசிகர் மன்றங்கள் என்று புது போர்டுகள் ஆட்டோ ஸ்டாண்டுகளில் முளைத்துக் கொண்டிருந்தது.

மீண்டும் மளிகைக்கடை முருகனாக்கப்பட்ட ரஜினிமுருகன் தன்னைப் புறக்கணித்திருக்காவிட்டால் குசேலன் படம் பிசிறு கிளப்பியிருக்கும் என்று ஆத்மார்த்தமாக நம்பிக்கொண்டிருந்தார். தலைவருக்கு இப்போதைக்குத் தேவை ஒரு சில்வர் ஜூப்ளி என்பதில் மட்டும் எல்லாருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது.

மாஸ் ஓப்பனிங்காக சிவாஜி அறிவிப்பு வந்ததும் கூடைகூடையாக அண்ணாச்சி முகத்தில் சன்லைட் வெளிச்சம். படம் பட்டையைக் கிளப்ப வீரா நற்பணிமன்றம் புதுப்பிக்கப்பட்டு சிவாஜி ரசிகர் நற்பணிமன்றமானது.

ரோபோ அறிவிப்பு வெளியான சமீபத்திலே திடீர் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு தலைவரைக்கொண்டு சென்றபோது ராணி மளிகைக்கடை மட்டுமல்ல தெருமுனை டீக்கடையில்கூட ஒரே பிரார்த்தனை கீதங்களாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. வாடிய மலரைக் கண்ட வள்ளலார் போல ஒவ்வொரு ரஜினி ரசிகரும் முருகன் அண்ணாச்சியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

“எம்.ஜி.ஆர் மாதிரி தலைவர் நிச்சயம் திரும்ப வருவார் பாருடே” என்று எல்லாருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டு இருந்தார் ரஜினி முருகன். தந்தி, மாலைமுரசு எதையும் விடாமல் தலைவர் பத்தின செய்திகளைத் தேடித் தேடி சேகரித்தார். தலைவருக்கு பி.ஏ. யாரும் இருந்தால் அவருக்குக்கூட தெரியாத தகவல்களை முருகன் அண்ணாச்சி தெரிந்துவைத்திருந்தார் அல்லது அப்படித்தான் ஊர் அவரை நம்பிக்கொண்டிருந்தது.

உடல்நலம் சீராகி  எந்திரன் சூட்டிங் தொடங்கியதுதான் தாமதம் ரசிகர்மன்றத்து ஆட்கள் எல்லோருமே ராக்கெட் வேகத்தில் பரபரக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஐஸ்வர்யாராய் சோடி சேர்ந்தது வேறு பெரியசாதனையாகப் பேசப்பட்டது.

மீண்டும் சின்ன இடைவெளிக்குப் பிறகு கோச்சடையான் ரிலீசான நேரத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ரஜினி முருகன் அண்ணாச்சி ஆள் ரொம்பவே மாறிப்போயிருந்தார்.  “என்னண்ணே தலைவர் படம் இப்படி  பொம்மபடம் மாதிரி இருக்கு?”

"உடம்பு முழுக்க ஒயரும் கியருமா கண்ட எடத்தில சொறுவி தலைவர ஏமாத்திட்டானுங்க.. எல்லாம் இந்த கே.எஸ் ரவிக்குமாரு பய பாத்த வேல. அவம் கமல் ஆளுல்லா" என்றார். கே.எஸ்.ஆர் தசாவதாரத்தில் கமலை உலகநாயகனேன்னு பாடிய கடுப்பு அவருக்கு. பழைய பங்காளிச் சண்டைபோல கமல் ரசிகர்களுக்கெதிரான பகையுணர்ச்சி அவருக்குள் லேசாக ஒட்டியிருந்தது.

"அடுத்தபடம் லிங்காவுக்கு அவர்தாம்ண்ணே டைரக்டர். இப்போ என்ன சொல்லுதீய" ரஜினி முருகன் அண்ணாச்சி முகத்தில் ஈயாடவில்லை. தலைவர் ஏன் இப்பிடி தப்புத்தப்பா முடிவெடுக்கார்ன்னு தெரிலே. அவரைப்பாக்கவும் முடியுறதில்ல. நேத்து மழைல மொளைச்சதெல்லாம் தலைவர் படத்தை கிண்டல்பண்ணுதுவோ” என்று என்னென்னவோ புலம்பினார்.

 ஆனாலும் புத்தாண்டு தினத்தில் பாம்பே தியேட்டரில் இடைவேளைவரைக்குமான பாதிப்படமும் இருபது பாடல்களும் போட்டு நடத்திய  ஸ்பெசல் ஷோவில் போய் குத்தாட்டம் ஆடி தன் புதுவருடக் களிப்பைக் கொண்டாடித் தீர்த்தார். இன்ப அதிர்ச்சியாக ராகவேந்திரா இல்லத்திற்கு வெளியே வந்து நின்று  தலைவர் கையசைத்து புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன சேதி பேப்பரில் வந்ததும் சென்னையில் இல்லாமல் போனதை எண்ணி உண்மையாகவே கண்ணீர் உகுத்தார். அவரைப் பொறுத்தவரை நல்லநாள் என்றால் அது தலைவரோடுதான்.

 ராணியக்கா -ரஜினிமுருகன் தம்பதிகளின் பிள்ளைகளான ஐஸ்வரியா சௌந்தர்யா இரண்டுபேரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டுபேரில் ஒருத்தி சூர்யாவையும் இன்னொன்று விஜயையும் கட்டுக்கொண்டு அழுகிறது என்று பேச்சுவாக்கில் திட்டிவிட்டு ரிமோட்டைக் கையிலெடுத்து சன் மியூஸிக்கிற்குத் தாவினார். திரையில் ”காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…” என்று குறுக்குமறுக்காக வெள்ளைக் கருப்பு கட்டம்போட்ட சட்டையில் ரஜினி பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டபடி நடந்து கொண்டிருந்தார்.

ரஜினி என்ற ஆனந்த ஜோதியில் கரைந்துவிட்ட முருகன் அண்ணாச்சியிடம் அதற்குமேல் நீங்களோ நானோ என்ன பேச்சுக்கொடுத்தாலும் அது அவர் காதில் விழாது.

நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில், ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால், உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்ல வா......-கார்த்திக்.புகழேந்தி
03-10--2015.

நினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்

எனக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. பார்த்து அறிமுகமாகி, பழகினவர்களாக (நட்புவட்டம் அல்லாமல்) இருந்தாலும் பெயர்களும் முகமும் மனதில் நிற்கவே நிற்காது. கீதா பெரியசாமி என்றால் கீதா ராமசாமியா கீதா கந்தசாமியா  என்று ஒரு குழப்பம் வந்து தொலைப்பதால் அதிகபட்சம் யார் முகம்கொடுத்துப் பேசினாலும் சிரித்தமுகத்துடன் வணக்கம் சொல்லி, நலம் கேட்டுத் தப்பித்துவிடுவது.

நண்பன் கிரி இந்த விசயத்தில் ஸ்கேனருக்கே டஃப் கொடுப்பான். ஒருதடவைப் பார்த்துவிட்டால் தி.நகர் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தாலும் சரியாக அடையாளம் சொல்வான். ஆச்சர்யமாக இருக்கும். ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது என்கதை அம்பேல்.

நேற்றைக்குக் கூட நாறும்பூநாதன் அவர்களின் நூல்வெளியீட்டு அரங்கில் நுழைந்ததும் அண்ணன் ஒருவர் அன்பொழுக வரவேற்று கை குலுக்கினார். பதிலுக்கு நானும் துளியும் தாமதிக்காமல் தெரிந்ததுபோல பேசிவிட்டு நகர்ந்தேன். தெய்வமே மன்னிச்சிடுங்க இங்க எங்கயாவது நீங்க என்னை அல்லது இந்தப்பதிவை பார்த்துட்டு இருக்கலாம். எனக்கு சத்தியமாக உங்களை நினைவில்லை. மன்னிக்கனும். (இந்தப்பதிவை முகநூலில் எழுதிய அன்றைக்கு அவரே வாசித்துத் தன்னை அடையாளம் சொல்லிவிட்டுச் சென்றார் )
 
சம்பவங்கள், பேச்சுகள் நினைப்பிலிருக்கும் அளவுக்கு ஆட்களும் பெயர்களும் நிற்பதில்லை ஏனோ. இத்தனைக்கும் பக்கம் பக்கமாக எழுதும் எந்த நிகழ்ச்சி பற்றிய பதிவுக்கும் ஒரு குறிப்புகூட எடுத்துக் கொள்ளும் பழக்கமில்லை.
விழா முடிந்து கலைந்து செல்கையில் ஒருவர் அருகேவந்து முகம்மலர்ந்து சிரித்துப் பேசினார். நெல்லைக்காரர் என்பதில் துளி சந்தேகமில்லை. நம்பரும் மாற்றிக்கொண்டோம். கூடவே நின்றிருந்த அவரது நிதி அமைச்சர் விளக்கமாய்ச் சொன்னால் அண்ணனது மனைவியார்.

"இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா நினைவுக்கு வரவில்லை" என்றார். ஹப்பாடா! மனதுக்குள் அவ்வளவு ஒரு குதூகலம்.பின்னே நம்மைப்போல் ஒருவரில்லையா. என்னை அறிமுகப்படுத்திவிட்டு, இவங்க என் மனைவி. பெயர் "பல்லவி" என்று பரஸ்பர அறிமுக்ம் செய்துவைத்தார் அண்ணன்.

 “பல்லவி” இப்படி ஈஸியாய், அனேக பொதுப்பெயர் அல்லாமல் யுனிக்காக அதுவும் தமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டால் எவ்வளவு எளிதாய் மனதில் பதிகிறது. அந்த அக்காளின் பெயர் இனி உறக்கத்தில் கேட்டாலும் மறக்காது.
முன்பெல்லாம் ராஜா என்பது தேசியப்பெயராக இருந்தது. இப்போது அந்தச் சோதனை கார்த்திக்குக்கும் வந்துவிட்டதாக அறிகிறேன். பெயர்களில் என்ன இருக்கிறது என்று அப்படியெல்லாம் விட்டுவிட முடிகிறதில்லையோ?!


குற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்


குற்றம் கடிதல் ஒரு நன்கு சமைக்கத்தெரிந்த வேலையாளின் வெங்காயம் நறுக்கும் கத்தி போன்ற ஷார்ப்பான படம். படம் ஆரம்பித்தது முதல்பாதி வரையான ஒவ்வொரு பிரேமையும் இண்டர்லிங்குகளால் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் பிடித்திருந்தது. நியாயதர்மங்கள், சமூகத்துக்கு கருத்து என்றெல்லாம் தான் எதுவும் பேசாமல் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார். ஒரு பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர். அடிவாங்கி மயக்கம்போட்டு விழுந்துவிடும் மாணவன் இந்த ஒற்றைத் திரியில் ஜோதி எரிகிறது.

எனக்கு ஆரண்யகாண்டத்திற்குப் பிறகு ஒரு இடத்தில் கூட தொய்வுகொடுக்காமல் நகரும் படமாகக் குற்றம் கடிதல் இருந்தது.
படத்தின் கரு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமானதாக உருத்தலைக் கொடுப்பது நிச்சயம். எம்புள்ளைய அடிச்சு உதைச்சாச்சும் நல்லா படிக்க வச்சிருங்கம்மா என்று ஆசிரியையிடம் கேட்டுநிற்கும் பெற்றோர்கள் காணாமல்போய்விட்டார்கள். இன்றைக்குப் பிள்ளைகள் ஒரு குடும்பச் சொத்து அந்தஸ்தில் வளர்பவர்கள்.

என்னை வாத்தியார் அடிச்சுட்டார்ன்னு எங்கப்பா ஸ்கூலுக்கே வந்து சண்டை போட்டார் என்ற பெருமைபேசிகளைப் பார்க்கும்போது, பொறாமையாக இருக்கும். "இன்னும் ரெண்டு போடுங்க சார்" என்ற கேட்டகரியிலிருந்து என் கல்விக்காலம் முழுக்க எங்கம்மா வெளிவரவேயில்லை. குழந்தைகளின் வளர்ச்சியை, அவர்களது கேள்வியை, இயல்பை கட்டிப்போடுகிற கல்வியை, கல்விச்சூழலை, ஆசிரியத்தனத்தை மெல்லிய கண்டிப்புடன் காட்சிப்படுத்துகிறது படம்.

தியேட்டரில் இல்லாதுபோயினும் டோரண்டிலோ, நண்பர்களிடமிருந்து பென் ட்ரைவிலோ கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம். ஆனால் இதை குழந்தைகள் சினிமா என்று முத்திரை குத்திவிடாதீர்கள். (பசங்க;மெரினா; காக்காமுட்டைகளுக்கு நேர்ந்தது போல) இது குழந்தைகளுக்கான படம்.
சொல்ல மறந்துவிட்டேன். பாரதியின் சின்னஞ்சிறுகிளியே பாடல் அப்பப்பா நெஞ்சைக் கரைக்கிறது. அதிலும் பாடலுக்கு இணையான காட்சிகள் அத்தனை நெருக்கம்... (கண்ணம்ம்ம்ம்மா) கடைசியில் தாய் நாவலைக் காண்பித்து அந்தத் தோழர் கதாப்பாத்திரத்தை நிறைவு செய்திருப்பது செம...

இயக்குனர் பெயர் பிரம்மனாம். படைப்பில் அத்தனை கச்சிதம்.பிரம்மா 

-கார்த்திக்.புகழேந்தி
04-10-2015

வாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்அரவிந்தன் எழுதிய பொன்னகரம் நாவலினை வாசிக்க நேர்ந்தது.
சென்னை என்ற நிலத்தின் பழைய அடையாளங்களைப் பேசும் படைப்புகளில் இழையோடும் மக்களின் பிரிவினையே இந்நாவலிலும் மையமாகிறது.
சென்னையின் மொழியை எழுத்தில் விவரிக்கும்போது அதன் இயல்பான வேகத்தில் பயணிக்கும் வேலையை பொன்னகரம் சிறப்பாகச் செய்திருக்கிறது. சில இடங்களில் தடுமாற்றங்களும் உண்டு.


குடியாத்தத்திலிருந்து தனது அத்தையின் மகன் முத்துவை மணம்முடித்து சென்னைக்கு வரும் பார்வதியின் பார்வையில் தொடங்கி, ஜகதாலன் என்கிற ஜகா, குரு என்கிற மாஞ்சா குரு, வரதன், ராசுக்குட்டி, பெருமாள், பாபு, செண்பகம் லட்சுமியம்மா என்று ஒவ்வொருவரின் பேச்சுகள், செயல்கள் அதன் எதிர்வினைகளினூடாக நாவல் பயணிக்கிறது.

சென்னையினைக் கொலைக்களமாகக் காட்டும் சினிமாத்தனம்தான் நாவலில் அப்பட்டமாகத் தெரிகிறது. கபடி விளையாட்டில் பின்னும் ஜகா பற்றிய விவரிப்புகளில் இருக்கும் ஆழம் இடைப்பட்ட அத்தியாயங்களில் சோடை போகிறது. சுருங்கச் சொன்னால் தயாரிப்பாளருக்கு ஒன் லைன் ஸ்டோரி சொல்வதுபோல தட்டையான விவரணை.

உறை சாராயம், பொட்டலம் என்று தொழில்போட்டிகளால் அடித்துக் கொள்ளும் பார்டர் தோட்டம், பகவதி புரம் என்ற இரண்டு ஊர்களின் / ரவுடியிசக் கதை தான் பொன்னகரம். பொருத்தமாக ஹீரோயிச நண்பன், வில்லன் போலீஸ், தாதா தலைவர்கள், சாதி அரசியல், என்கவுண்டர் எல்லாம் இருக்கிறது பொன்னகரத்தில்....

நாவலில் ஒட்டவே ஒட்டாத ஒன்று காலகட்டம். பணக்காரன், சூரசம்ஹாரம் படங்கள் ரிலீஸான (1990களில்) போது கட்டுக்கீரை ஐந்து ரூபாய்க்கு விற்கிறது (உறைசாராயம் 3:50பைசா) என்றெழுதுவதெல்லாம் குழப்பம்.
ஆங்காங்கு பிழைகள், கதாப்பாத்திர பெயர்குழப்பம் (பக்.77). எந்த கனத்தையும் தராத முடிவு இப்படி இன்னும் சில...

ஆனால் பொன்னகரத்தில் ஒரு சென்னை சினிமாவிற்கான திரைக்கதை இருக்கிறது. கதாப்பாத்திர வடிவமைப்புகளும் அதை உறுதி செய்கிறது.
மற்றபடி இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பான சென்னையை எழுத்தில் தரிசிக்க நினைக்கும் என்போன்றோர்க்கு பொன்னகரம் பெரிய உதவி செய்யவில்லை.

புத்தகத்தை வாசிக்கக் கொடுத்த நண்பனுக்கு நன்றி.

-கார்த்திக்.புகழேந்தி
09-10-2015.

ஆச்சி மனோரமாநேற்றைக்கு காலையில் ஒரு கனவு. சொந்த ஊரில் ஒரு திருமணத்திற்குப் போயிருக்கிறேன். ஏதோ கலாட்டாவில் திருமணம் நிற்கிறது. கடைசியில் இந்த கார்த்திக் புகழேந்தியை மாப்பிள்ளையாக்கி விடுகிறார்கள். தூங்கி முழித்ததும் காயத்திரி யிடம் கனவைச் சொன்னதும்,"தூக்கிப் போட்டு மிதிப்பேன்" என்றது. அது சரி அவாளுக்கு அவா பிரச்சனை.

கதையின் கான்செப்ட் தேவர்மகனில் சுட்டதாகப் பட்டது. அட வெக்கங்கெட்ட கனவே நீ கமலிடமே காப்பியடிக்கிறாயா என்று ஒரே தர்மசங்கடம். ஆனால் கனவில் தாலி எடுத்துக் கொடுத்தது ஆச்சி மனோரமா. தேவர் மகனில் ஏது ஆச்சி என்று நினைத்தபடி விசயத்தை விட்டுவிட்டேன்.

நள்ளிரவில் ஆச்சி இறந்ததாகச் செய்தி வந்தது. இல்லை இவனுங்க வதந்தியா இருக்கும் என்றேன் பதிலுக்கு. கூடவே கனவைச் சொன்னதும். கல்யாணக் கனவு கண்டா சாவு விழும் தானே என்றாள்.

சாவு விழுந்தால் தானே கல்யாணக் கனவு வரும் என்று குழம்பினேன். இப்பவும் ஜாம் பஜார் முனையில் வண்டியைத் திருப்பும் போதெல்லாம். "நா ஜாம்பேட்டை ஜக்கு ; நீ சைதாப்பேட்டை கொக்கு" என்ற பாட்டை முணுமுணுக்காமல் இருந்ததில்லை.

தாய்க்கிளவி நிஜமாவே இறந்து போச்சி என்பது மண்டைக்குள் ஏறமாட்டேங்குது. அந்த சிவப்புச் சேலையில் சிரித்த முகமாய் உக்கார்ந்திருந்த அம்மன் செலையல்லவா அவள்.

-கார்த்திக்.புகழேந்தி
11-10-2015

வாசகன் தாட்ஸ்... : S.Ra


எஸ்.ரா அளவுக்கு தமிழில் "எழுதித்தள்ளுகிற" எழுத்தாளர் சமகாலத்தில் யாருமில்லை. ஒரு நாளைக்கு இத்தனைப்பக்கம் என்று இலக்கு வைத்துக்கொள்வார் போல. அவர் அளவுக்கு ஈடு கொடுப்பதென்றால் ஆசானைச் சொல்லலாம். (வெண்முரசு...)

இது பிரச்சனை அல்ல. எஸ்.ரா ஏகப்பட்ட பிழை விடுகிறார் என்பதுதான் பிரச்சனை.ஆனால் அதைக் கண்டுபிடிக்கவோ சரிபார்க்கவோ அவரளவுக்கு தமிழில் எழுதுகிறவர்கள் யாருமில்லாதது அவரது பலம். தனித்திருக்கும் யானை போல....

சரித்திர சங்கதிகளில் மதன் எழுத்தின் வாசகனாக வளர்ந்த எனக்கு, எஸ்.ராவுக்குத் தாவும் போது இந்த சிக்கல் புரிந்தது. குறிப்பாக ஆண்டுகளில்... சொதப்பிக்குவிக்கிறார். ஒரு கட்டுரையின் ஒருபக்கத்தில் 1905எனக் குறிப்பிட்ட சம்பவத்தை அடுத்த பத்தியிலே 1907என்று குறிப்பிடுகிறார். (ம.பட்ட இந்தியா.பக்30-31) கு.அழகிரிசாமி பிறந்த ஆண்டு என்று அவரை 9வருடம் இளமையாக்கி விடுகிறார். (கதாவிலாசம்-பக்.136) இப்படி இன்னும் பல..

நீங்கள் எழுதிக்குடுங்க போதும், தடிமனா அட்டைபோட்டு,வித்துக் காசாக்கிடலாம் என்ற மனநிலையில் தான் பதிப்பகங்கள் இருக்கின்றன போலும். ஆறுபக்கம் எஸ்.ராவுக்கு.. அவர் என்னத்தை எழுதிக்கொடுத்தாலும் போடு என்று வெகுஜன இதழ்களும் முடிவுகட்டிவிட்டன.
இவைகூட  “எனக்கு” சமீபத்திய சலிப்பான (சஞ்சாரம்) விவரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம். எனது இந்தியாவை ரெபரன்ஸ் புக்காக வாங்கி வைத்துக்கொண்டு இதுதான் சரித்திரம் என்று நம்பிப் படிக்கத் தொடங்கினால் நாமல்லவா கோமாளி.

-வாசகன்.

நெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங்கம்.


நேரங்காலம் தெரியாமல் 12மணிக்குப் பசியெடுத்தது. கேண்டீனுக்குப் போனால் பிரெட் ஆம்லெட் சாப்பிடலாம். வறட்சியான சப்பாத்திக்கு அதுமேல்.
நண்பனை கூட்டிக்கொண்டு அலுவலகமாடியில் உள்ள கேண்டீனுக்குச் சென்றேன். கேண்டீன்காரர் கடவுளின் தேசத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் இளையராஜா ரசிகராக இருப்பார் போல... மெல்லிசைகளால் இழைத்துக் கொண்டிருந்தார்.

குடகுமலை காற்றில் வரும் பாட்டுக்கேட்குதா ... ஒலித்துக்கொண்டிருக்கும் போது மூன்று யுவதிகளும் கேண்டீனுக்கு வந்திருந்தார்கள். என்னே ரம்மியம். மூவரில் வெண்ணிற ஆடை அணிந்திருந்த பெண்மீது கண்கள் திரும்பியது.
கொஞ்சமாக ரசித்துவிட்டு,அவர்கள் நகர்ந்து சென்றதும் நண்பனிடம் சொன்னேன். அந்த வெள்ளைநிற ஆடையிலிருந்த பெண் நல்ல அழகில்லையா என்று. அட! நானும் அவரைத்தான் கவனித்தேன் என்றார். கவனிக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம்.

மோசமான கம்மெண்ட்களோ, தேவையில்லாத வெளிப்படுத்தலோ இல்லாமல் ஒரு குழந்தையைக் கடந்துபோவது போலான கவனித்தல் இது.
அதென்னமோ இந்த மண்ணின் அடையாளத்தோடு எளிமையான அணிகலன்களோடு எதிர்படும் ஒரு பெண் சட்டென்று ஈர்த்துவிடுகிறாள்.
அணிகலன் என்றதும் நேற்றைக்கு பார்த்த நெடுநல்வாடை நினைவுக்கு வந்தது. அந்த காலத்தில் பெண்கள் என்னென்ன அணிகலன்கள் அணிந்திருப்பாள் என்று தேடத் தவித்தேன்.
பிரெட் ஆம்லெட்டுக்கும், பைனாப்பிள் ஜூஸுக்கும் காசுகொடுத்துவிட்டு இருக்கைக்கு வந்ததும் முதல்வேலையாக நச்சினார்க்கினியார் உரையினைத் தேடத் தொடங்கினேன்.

சிக்கியது மேட்டர். அன்றைய பெண்கள் காதிலே குழை அணிந்திருக்கிறார்கள். அதிலே பூங்குழை, வார்குழை என்று இரண்டு விதம். கைகளில் தொடி புனைந்திருக்கிறார்கள். விரல்களில் நெளி மோதிரம்... இப்படி இன்னும் நிறைய..

கி.ராவிடம் தான் நான் அணிகலன்களைக் கற்றுக்கொண்டது.
பூடி, அலுக்கு, தாழம்பூ, ஒன்னப்பு, முருகு, குருத்தட்டு, பச்சைக்கல், வெத்திலைச் சுருட்டு, மூண்டுக்கு மணி, குவலை, பீங்காந்தட்டு, பவளம், புடை தாங்கி, நெத்திச்சுட்டி, பெருவிரல் முடிச்சு, பீலி, பில்லணை என்று அவர் ஒரு லிஸ்டே போடுவார்.

புதிதாக ஏதும் சிக்குகிறதா என்று துலாவியபோது ஆடைகள் பக்கம் கவனம் திரும்பியது. பெண்கள் மார்பிலே கச்சினை அணிந்திருக்கிறார்கள், பூ வேலைபாடுகொண்ட பூந்துகில்,‘அவிர் நூல் கலிங்கம் ’ என்ற நூலால் ஆன
ஆடைகள் (மஸ்லின்?) என்று வாசிக்கும் போதே தீபாவளி நெருங்குவது நினைவிற்கு வந்தது.

சரி ஆண்கள் ஆடை ஏதும் இருக்கிறதா என்று பார்த்தால் ... அடப்பாவமே இரண்டுபக்கமுமாக தோளில் தொங்கும் துப்பட்டாவை அணிந்திருக்கிறார்கள் ஹஹா... பகடிகள் ஒருபக்கம் இருக்கட்டும். அந்த "குழை" என்ற சொல்லைக் கவனித்தீர்களா... அதில்தான் எத்தனை குழைவு. (படங்கள் : நன்றி : அமுதா தமிழ்)


மஸ்லின்?
_________________அவிர் நூல் கலிங்கம் மஸ்லினா என்றுத்தெரியவில்லை. கலிங்கம் ஒரிசாவைக் குறிப்பது. மஸ்லின் ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்தைக் குறிப்பிடுகிறது. இரண்டுக்குமான இடைவெளி சொற்பம் தான். ஆனால் மஸ்லின் பருத்தியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அன்றைக்குக்காலத்தில் மஸ்லின் துணிகள் அணிந்துகொள்வது பெருமையாகவே கருதப்பட்டது. இங்கிலாந்து பெண்கள் இந்திய மஸ்லினுக்கு தவம் கிடந்தார்கள்.  மஸ்லின் இங்கிலாந்து பருத்தியின் வணிகத்தை பாதிக்கவே செய்தது.

ஆகவே, இங்கிலாந்து பருத்திக்காக இந்தியாவில் ரகங்களில் அழித்து ஒழித்த பருத்தியில் மஸ்லினும் ஒன்று. மஸ்லின் நூலை நெய்வதற்கு முன், அதனை மிருதுவாக்கவும், மெலிதாக்க ஒரு வித்தை பண்ணுவார்களாம். அதாவது, கட்டைவிரல் நகத்தை நீளமாக வளர்த்து அதிலே ஒரு பொடி துளைபோட்டு அதன் வழியே மஸ்லின் நூலை நுழைத்து.. நூல் சுற்றும்போது கையை மேலும் கீழும் அசைத்து அசைத்து மிருதுவாக்குவார்களாம்..
எப்போது மஸிலின் ஆங்கிலேய வணிகத்தைப் பாதித்ததோ அப்போதே மஸ்லின் நெசவாளர்களை பிடித்துவைத்து அவர்களின் விரல் நகத்தை/விரலை வெட்டிவிட்டதாகக் காற்றுவழிச் செய்திகள் உண்டு.

கார்த்திக்.புகழேந்தி|
13-10-2015

கொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்

படம் : நன்றி “சொல்வனம்”


கொலுவைத்தல் பற்றி பேச்சுகள் கேட்டதும் சின்னவயது நாட்கள் கன்னாபின்னாவென்று மனதிலெழுகிறது. அப்போது பாளையங்கோட்டை தயாபரன் தெருவில் எங்கள் வீடிருந்தது. வீட்டுக்குப் பக்கமே பாளையங்கால்வாய் சுழித்து ஓடும். வைக்கோல்போர்களுக்கு மேலேறி குதித்து விளையாடி, கண்பொத்தி, நாடுபிரித்து, கிளிச்சேட்டை பிள்ளைகளின் ஜடை இழுத்துவிட்டு , திருடன் போலீசெல்லாம் ஆடிக்கொண்டிருக்கும் சுழியன்கள் எல்லாம் பஜனையும் பழமுமாகத் திரியும் மாலைப் பொழுது இந்த கொலு காலங்களில் அமையும்.

சபரிமலைக்குப் போகும் ஐயப்பமார்களின் வீட்டில் மெய்யுருகப் பாடின பழக்கத்தில் கொலுவீடுகளுக்குப் போனால், அதத் தொடாதே இதைத் தொடாதே என்று எச்சரிக்கை கொடுத்தே எரிச்சல் கிளப்புவார்கள்.
எங்கள் வளவில் தங்கமீனா வீடு கொஞ்சம் வசதியானது. அவள் ஆச்சியும் நமக்கொரு கதைசொல்லி. உழுந்து திருக்கையை சுத்திக்கொண்டே வேதாளக்கதைசொல்லி விடுகதை போட்டு உடைப்பாள்.

தங்கமீனா வீட்டில் கொலு வைத்திருந்த காலத்தில், பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவள் வீடே கதியாகக் கிடப்பது. மரப்பாச்சி, களிமண் பொம்மைகளை எல்லாம் கொலுப்படியில் வெள்ளைத்துணி போட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பூ, பழமெல்லாம் போட்டு முடித்து பாட்டுப்பாடி, முடித்ததும் சக்கரைப்பொங்கலும், பூம்பருப்பும் பிரசாதமெனக் கொடுப்பார்கள். இங்கே பூசைமுடிந்ததும் பக்கத்துவீட்டுக்கு ஓடும் சிறார் கூட்டம்.  அங்கே முடித்து அடுத்து...பிறகு அடுத்தடுத்து. வீட்டுப்பாடமெல்லாம் பிறகுதான்.

ரிமோர்ட் காரின் மோட்டாரை உடைத்து, சிகரெட் அட்டையில் செய்த காத்தாடியை கணபதி சிலையில் தலைக்குப் பின்னால் ஒட்டிச் சுழல விட்ட என் விஞ்ஞான அறிவை மெச்சி எனக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சுண்டல் கொடுத்ததால் தங்கமீனா வீட்டுக்கு மட்டுமே போவது என் வழக்கமாக இருந்தது.

"பொட்டு வைக்கிறது தொடங்கி பூம்பருப்பு கொடுக்குறது வரைக்கும் அடுத்தவீட்டுக்கு வேலை செய்றான் நம்ம வீட்டுல ஒரு கண்மை டப்பாவக்குட அசைச்சுக் கொடுக்கமாட்டேன்" என்று திட்டுகள் விழும். அதெற்கெல்லாம் யார் அசைந்து கொடுத்தார்..

அம்மாவுக்கு கொலு வைப்பதென்றால் கொள்ளைப் பிரியம். அவ்வளவு பொம்மைகள் உண்டு வீட்டில்.  அட்சரம் திருத்தமாக அவள் அடுக்கி வைக்கும் கொலுவுக்கும், வாசல் கோலத்துக்கும் ஊர்ப்பட்ட ரசிகக்கூட்டம் உண்டு. வருசாவருசம் கொலு போட்டோக்களை ஆல்பம் போடுமளவுக்கு பெரிய பணக்காரியாகத்தான் வாழ்ந்திருந்தாள் ஹஹ..

அப்பாவுக்குப் பிறகான காலத்தில்சமாதானபுரம் போகும் போதெல்லாம் வெள்ளைமாவு பொம்மைகள் மட்டும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவ்வளவுதான். சொத்து சேர்ப்பதுபோல பொம்மைகள் சேர்த்தாள். இப்போது அதெல்லாம் பெட்டிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து இப்போதைக்கு பழைய நினைப்புகளை தூசி தட்டி கொலுவாக அடுக்கிக் கொண்டிருப்பாள் என்றே தோன்றுகிறது. இப்போது என்ன நான் என்ன சிந்திக்கிறேன் என்றால் தங்கமீனா என்று Facebookல் தேடிப்பார்க்கலாமா வேண்டாமா வேண்டாமா என்றுதான்.

-கார்த்திக்.புகழேந்தி
13:10:2015.

இலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா

"இலை உதிர்வதைப் போல" நூல்வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட நிகழ்வையே நிறைய எழுதியிருக்க வேண்டும். தவறிப்போனது.
இரா.நாறும்பூநாதன் அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பினை நூல்வனம் -மணிகண்டன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். நேற்றைக்கு மாலை நேரில் சந்தித்தபோது (இ.உ.போ) புத்தகத்தின் பிரதியினை அவரிடம் பெற்றுக்கொண்டேன்.

கையில் வாங்கின இரவிலே படிக்கத்தொடங்கி இப்போதுதான் முடித்தேன். "தன் 55ஆண்டுகால சேக்காளி உதயசங்கருக்கு.." என்றெழுதிப் போகும் நாறும்பூநாதன் அவகளுடைய கதைகளில் கரிசல் மண்வாசம் மட்டுமில்லை மனிதர்களின் சுவாசமும், பவளமல்லி வாசமும், கிழவிகளின் (ஆச்சி) நேசமும் செறிந்துகிடக்கின்றன.

இந்த இருபத்தைந்து கதைகளில் பொதிந்து கிடக்கும் "சொற்களை" மட்டும் திரும்பத்திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கழுதைபிரட்டி, சீவம், கூழ்வத்தல், கொழுப்பெடுத்த மூதி இந்தமாதிரியான தெக்கத்தி மண்ணுக்கேயுரியச் சொற்களைத்தான் சொல்கிறேன். "சில சொற்களை எல்லாம் பல காலங்களுக்குப் பிறகு வாசிக்கிறேன்" என்று வெளியீட்டு விழாவில் சுகா அண்ணன் சொன்னமாதிரி... எப்போதோ கேட்ட சொற்கள் வயிறு நிறைந்ததுபோல..

ஆடுமாடுகளிடம் அளவளாவுகிற ஆச்சிகளையும், பரிட்சை முடிந்த விடுமுறைகளில் "ஸ்ரீநாத் மாதிரி பந்து போடச்சொல்லுகிற " பேரன்களையும் வாசிக்கும்போது மார்கழி பகலில் புல்தரையில் நடந்ததுபோல காலெல்லாம் ஈரம்.

உணர்வுகள் பேசுகிற இப்புத்தகத்தின் மொழி எல்லா மனிதர்களுக்குமானதாகி நிற்கிறது. கோவில்பட்டிக்காரர்கள் எழுத்துக்கு கோவில்கட்டிக் கும்பிடு போடலாம். மொத்தக்குத்தகைபோல அத்தனைச் செங்கலும் இந்தமண்ணில் தானே சுட்டெடுக்கப்பட்டிருக்கிறது.

தாமிரபரணி பள்ளிக்கூடத்தில் முப்பது, நாற்பதாண்டுகாலத்துக்கு முந்தைய "பேட்ச்" ஆட்களை இப்போதுள்ள நாங்கள் வாசிக்கும் சொகம் இருக்கே .... அதெல்லாம் சொல்லிமாளாது.


வெளியீட்டு விழாவில் சில படங்கள் 
-கார்த்திக்.புகழேந்தி
14-10-15


"இலை உதிவதைப் போல"
நூல்வனம் :வெளியீடு
ஆசிரியர் :இரா.நாறும்பூநாதன். 
தொடர்புக்கு :+91 91765 49991. 

தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது

கவிஞர் விக்ரமாதித்யன் நம்பிராஜனை, அவரது கவிதைகளை,நவீன கவிதைகள் குறித்தான அவர் பார்வையை இன்றைக்குக் கிறுக்குபவர்கள் நிச்சயம் வாசிக்கணும்.

மு.சுயம்புலிங்கம், அஷ்டவக்கிரன்,எம்.யுவன், குவளைக்கண்ணன், பிரான்சிஸ் கிருபா, ஆசை,சி.மோகன், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, சமயவேல், யூமாவாசுகி, யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீநேசன், என்.டி.ராஜ்குமார், ஷங்கர் சுப்பிரமணியன், ஆர்.மகாதேவன், ராணிதிலக், கண்டராதித்தன்,பழநிவேள், கோகுலக்கண்ணன், அகச்சேரன், முக்கியமாய் கைலாஷ் சிவன் கவிதைகளைப் பற்றி விக்கிரமாதித்யன் வார்த்தைகளில் படிக்கவேணும்.

நறுக்குத் தெறித்தாற் போல எழுதுவார். இன்னின்னது இன்னின்ன மாதிரியானதென்பார். பிழைவிட்டால் போய் அ.கி.பரந்தாமனாரின், "நல்லதமிழில் எழுதுவது எப்படி" படிக்கச் சொல்வார்.

விக்கிரமாதித்யன் போல் நவீன கவிதைகளைக் கொண்டாடுகிறவரும், வாசிக்கிறவரும் இல்லை. எழுதுகிறவர்கள்தான் தண்ணிபட்டபாடு. நக்கீரன் பதிப்பில் வந்த "தீயின் விளைவாகச் சொல்பிறக்கிறது" வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

கார்த்திக் புகழேந்தி
15-10-2015

புத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்அக்காள் பிறக்கையில் முருகன்குறிச்சி அன்னை வேளாங்கண்ணியில் வைத்துப் பேறுகாலம் பார்க்கும் அளவுக்கு கையில் கொஞ்சம் வசதி இருந்திருக்கிறது. மூத்தது எப்போதும் பொண்ணாய்த்தான் பிறக்கும் எங்கள் வீட்டில். அதுவும் எல்லாம் பிறப்பிலும் வளர்ப்பிலும் சீமாட்டிகள்


நான் இரண்டாமவன். பெரியப்பன் சித்தப்பன் பிள்ளைகளோடு கணக்குப் பார்த்தாலும் கடைக்குட்டியும் கூட. நம் பிறப்பு வீட்டில் நிகழ்ந்தது. ஒரு நாலு முழ வேட்டியும், கருப்பு கசாயமும், கொஞ்சம் வென்னீரும் ஒரு புது ப்ளேடும் தான் என் பிறப்புக்கு மொத்தச் செலவு. தேதியை மூணு நாள் தள்ளி பிறப்புச் சான்றிதழில் பதிந்ததால் அதை மாற்றத்தான் பேறுகாலச் செலவைவிட அதிகம் பிடித்தது.

இரண்டாவது பிள்ளைகள் எப்போதுமே செலவு வைக்காத பிள்ளைகள். கடைசியாக நான்காவது படிக்கும் போது ஒரு விபத்து சிகிச்சைக்காக ஆசுபத்திரிக்குப் போனது. மற்றபடி காய்ச்சல், தலைவலி என்று எந்த சுகவீன காரணத்துக்கும் ஆசுபத்திரி பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை.
ரத்ததானம் உபகார காரியங்கள் வேறு கதை.

அக்காளுக்கு இரண்டும் பொண். மூத்தவளுக்கு ஊரேகூட்டி விருந்துவைத்து பேர் வைத்துவிட்டு. இரண்டாவது பிள்ளைக்கு "சிம்பிளா வீட்டிலே முடிச்சுட்டோம்" என்றார்கள். எனக்குக் கடுங்கோவம். இரண்டாவது பிள்ளைக்கு நானாச்சு என்று அதேமாதிரி தவுசுப்பிள்ளை வைத்து அண்டா நிறையப் பொங்கிப்போட்டு சீனித் தண்ணி கொடுத்தோம்.

இந்த மாதிரி காரணங்களாலேயே இரண்டாவது பிள்ளைகளை யாராவது ஓரங்கட்டினால் முணுக்கென்று முன்னால் நின்று வாரிக்கொள்வேன்.
விசயத்துக்கு வருவோம். நண்பன் சொல்லித்தான் முகநூலில் பதிந்திருந்த அம்மாவின் பதிவை வாசித்தேன். ஆம் அவரும் எழுதுகிறார். எதோ குடும்பத்தில் நமக்குத்தான் இந்தக்கிறுக்கு இருக்கிறது என்று இத்தனைகாலம் தப்புக்கணக்குப் போட்டிருக்கிறேன்.இரவு வேலையெல்லாம் முடித்து மொட்டைமாடியில் காற்று வாங்கிக் கொண்டிருந்தவருக்கு... பக்கத்துவீட்டம்மாளின் பரபரப்பு கண்ணுக்குப்பட என்ன ஏதென்று விசாரித்தால் நிறைமாத சூழிப்பிள்ளைக்கு வலி வந்துவிட்டதுபோல. ஆம்புலன்சுக்குக் கூப்பிட்டும் இன்னும் வந்த பாடில்லை. மாடியில் வலியால் கத்திக்கொண்டிருக்கும் பெண்ணை கீழே அழைத்துவரவும் வழிதெரியாமல் விழிபிதுங்கி நின்றிருக்கிறார்.

அடுப்படி எங்கேன்னு கேட்டு நேரேப்போய் அங்கிருக்கும் சிலபல அஞ்சறைப்பெட்டி சமாச்சாரங்களை நுணுக்கிப்போட்டு கசாயம் வைத்துக்கொடுத்து, அடுத்த அஞ்சாவது நிமிசத்தில் பிள்ளையைக் கையில் வாங்கிக் தொப்புள்கொடி அறுத்து, குளிப்பாட்டி பேத்தியாள் கையில் ஒப்படைத்திருக்கிறார். ஆம்புலன்சும் வந்திருக்கிறது.

அம்மாவுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்திருக்குமென்பதெல்லாம் நான் மண்டையைப் போட்டு உருட்டிக்கொண்டிருக்கவில்லை.விசயத்தைக் கேட்டதும் "கோத பின்னிட்டபோ"  (பூங்கோதை) என்று சொல்லத்தான் வாயெழுந்தது.

ஆச்சிக்கு ஏழுபிள்ளை.  அதுவும் ஏழும் பொண்ணாகப் பிறந்தது. ஏழாவது பிள்ளை பிறந்து நடமாடும்போதே முத்துச்சாமிக்கோனார் கண்ணை மூடிவிட்டார்.  ஒவ்வொரு பிள்ளையியும் கரைசேர்த்து தன் கடேசி காலத்திலும் மகள்களிடம் கைநீட்டித் தின்னாமல் கால்நடையாக நடந்து நடந்து உழைத்து ஊர்மெச்ச வெள்ளக்கோயில் போய்ச்சேர்ந்த  பொன்னாத்தாளின் ஏழாவது மகளுக்கு இதெல்லாம் எம்மாத்திரம் என்று அமைதியானேன்.

பிறந்தது ஆண்மகவாம். மருத்துவமனையில் தாயும் சேயும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  நலமாய்த்தான் வருவார்கள். எம்மோவ் பையனுக்கு எம்பேரு வைக்கச் சொல்லுங்க. அவனும் என்னப்போல அறிவா வரட்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். பார்ப்போம்

-கார்த்திக்.புகழேந்தி
16-10-2015.

குடங்கள்


படம் : கார்த்திக்புகழேந்தி | இடம்: இடைச்செவல் 

"ரோஜாப்பூ போட்ட குடம் நம்ம வீட்டு குடம் ", " குக்கெர் கேஸ்கெட்டை விளிம்புக்குள் சுத்தியிருந்தால் அது மேல்வீட்டு ராணியக்கா குடம்" இப்படி அடையாளங்கள் வைத்திருப்போம்.

ப்ளாஸ்டிக் குடங்களின் ஆயுள் எத்தனைகாலம் என்றெல்லாம் தெரியாது. வண்ணச்சாயம் தீர்ந்து வெளுப்பு வெட்டைகள் விழும்போது புதுக்குடம் குடிவந்திருக்கும் வீட்டில். சில்வர் குடம் கீழே போட்டு நெளித்த அன்றைக்குத்தான் உள்ளே இரும்பு குண்டுகள்தான் கிடந்து இந்தச் சத்தம் போடுகிறது என்று கண்டுபிடித்தது. அன்றைக்கு காதில் ஒய்ய்ய்ய்ய்ங்.
பித்தளை குடத்தை வெறும்குடமாகத் தூக்கவே ஒருசெம்பு பால் குடிக்கவேண்டும். நமக்கு வசதி எடைகுறைந்த/எடையில்லாத ப்ளாஸ்டிக் குடங்கள் தான்.

இடுப்பில் வைத்து குடம் தூக்கும் ரத்னா, திலகா, வள்ளிகளைப் பார்க்கும்போது, இவங்களால மட்டும் எப்படி முடியுதென்று நினைப்பேன். குடம் தூக்குவதில் நாம் பாகுபலி ஸ்டைல் ஆசாமி. பத்து குடம் தண்ணி எடுத்து முடிப்பதுக்குள் சட்டையெல்லாம் சதசதவென்றாகிடும்.
பின்னாளில் அதுவே ஒரு போட்டியாகி இருந்தது. யார் கம்மியா நனைஞ்சிருக்கானோ அவனே வெற்றியாளன். கடைசி குடம் தூக்கும் போது மாத்துச்சட்டை போட்டு ஏமாத்துறதெல்லாம் உண்டு.

இடுப்பில் தூக்கும் பிள்ளைகள் பாவாடைகூட நனையாது. என்ன சூட்சமமாயிருக்கும்?

கண்ணம்மா ஆச்சி சொல்லும் "பொம்பளைக்கு இடுப்புல ஒரு எலும்பு கூடலேய் அதான் கொடம் கின்னுன்னு நிக்குது "என்று. இது உண்மையா பொய்யா ஆராய்ச்சிக்கு எப்படிப் போக. அப்போதுப்பீட்டர்தான் சொல்வான். "ஆதாமின் விலா எலும்பிலே தேவன் ஏவாளை உண்டாக்கினார்ன்னு" ஒருவேள அதுதான் காரணமோன்னு விட்டுட்டேன்.

தண்ணீர் குழாயடிச் சண்டையில் இசக்கியம்மாக்கா தான் கோல்ட் மெடல். காது கம்மல் அறுந்து பொதபொதன்னு ரத்தம் ஊத்தும் போது ஒரு சொட்டுத் தண்ணிய கீழ சிந்தலையே. ஒண்ணுமண்ணா இருக்கும் குடும்பங்கள் அடிச்சுகிட்டு முறைப்பது இந்தக் குழாயடிகளில் தான்.

எப்பவாச்சும் தண்ணிக்குத் தட்டுப்பாடு வரும்போது
ஊர்முனையில் வட்ட டாங்குக்குக் கீழே காலிக்குடங்களோடு ஊரே திரண்டு கிடக்கும். சங்கடமாகக் காதல் வளர்க்கும் இளவட்டங்கள் அங்கிருக்கும் பொட்டிக்கடையில் அநியாயத்துக்குக் காவல் கிடப்பானுங்கள். அப்படி இப்படித்தான் தன்கூட எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்தவளைப் பார்த்தால் உண்டு.

ப்ளாஸ்டிக் குடத்தில் ஒரு அட்வாண்டேஜ் உண்டு. அதாவது தண்ணீர் வராதவரைக்கும் சும்மா பேராச்சியம்மன் கோயில் திருவிழாவுக்கு வரும் கொட்டுக்காரன் போல டம்ம டம்மவென கொட்டடித்துப் பட்டையை கிளப்பலாம். தாளத்துக்கு சேர்மதுரைன்னு ஒருத்தன் இருந்தான். கையில வித்தையோடு பொறந்தவன்.

அய்யா வந்தனமைய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும்... டக்ட டக்கட டக்கடர டக்க டக்கட டக்கட ரக்கடக்க....என்றவன் அடிக்கும்போது சும்மா இருக்கும் சுடலைக்குக்கூட ஆட்டம் வரும்.


நா வானமாமலைதயாபரன் தெருவின் முடிவில் பாளையங்கோட்டை, திருச்செந்தூர் ரோடு. ரோட்டுக்கு இந்தப்பக்கம் தீபம் டீக்கடை. அந்தப்பக்கம் வானமாமலை டுட்டோரியல் பஸ்டாப்.

மஞ்சள் காவி அடித்த பழைய காரைக்கட்டிடம்  அது. வானமாமலை முடுக்கு, வானமாமலை பஸ் ஸ்டாப் என்றுதான் அந்தப்பகுதிக்கு முன்பெயர் இருக்கும். அப்போது வானமாமலைன்னா யாரென்றெல்லாம் தெரியாது. அதே சந்தில் கால்கள் தேய பள்ளிக்கூடத்திற்கு நடந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் வானமாமலை கட்டிடத்திற்கு அடையாளம் தெரியாத ஆட்டோக்காரரால் மோதிவீசப்பட்டு தாடையில் நாலு தையல், வலதுகாதுக்குப் பின்பக்கம் ஐந்து தையல் போட்டிருக்கிறேன். அதாவது ரத்தம் சிந்தி பந்தமேற்பட்ட  இடம்.

வலியெல்லாம் பெரிதாக நினைவில்லை.  தையலுக்கு போடும் முன், ஊசியைக்காட்டி மிரட்டின விக்டர் துரை ராஜ் டாக்டரைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து தலைமை ஆசிரியர் சகிதமாக மொத்தப்பள்ளிக்கூடமே வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போன அன்றைக்கு கொடுத்துவிட்டுப்போன பிஸ்கெட் பாக்கெட்டை என்னால் தின்ன முடியாதபடிக்கு தாடையில் கட்டுக் கட்டியிருந்ததைத் தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

விஷயம் எங்கெங்கோ திரும்பிவிட்டது. நேர்வழிக்கு வருவோம். நா.வானமாமலை... நாட்டுப்புறத்து மனிதர்களின் வாய்ச்சொல்லையும் பாட்டையும் வரிவிடாமல் தேடித்திருந்து நம்கையில் சேர்த்த தாத்தன். இன்றைக்கு அன்னார் இல்லையென்றால்  நாட்டுப்புறபாடல்கள், நாட்டுப்புற கதைகள் மற்றும் நாட்டுப்புற கலைகள் பத்தின ஏகக்கணக்கான தகவல்கள் நம்மிடமில்லை.

ஊராகச் ஊரூராகப் போய் உ.வே.சா ஓலைச்சுவடிகளை எப்படி திரட்டி தமிழ்த்தாத்தாவென நீங்கா இடம்பிடித்தாரோ, அப்படி நாட்டுக்கலைகளுக்காகக் கொண்டாடப்படுபவர் நா. வானமாமலை. தமிழ்நாட்டு பாமரர் பாடல்கள், ஐவர் ராசாக்கள் கதை, கட்டபொம்மு கூத்து, கட்டபொம்மன் கதைப்பாடல், கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, வீணாதிவீணன் கதை எல்லாம் லேசுபட்டதா என்ன.

நெல்லைக்கு எப்படி வண்ணாரப்பேட்டை வட்டத்தொட்டியோ அப்படி 1967ல் நெல்லை ஆய்வு மையம் தொடங்கி ஏகக்கணக்கில் ஆய்வாளர்களை உருவாக்கிவிட்டவர். பேராசிரியர் அ.சிவசுப்பிரமணியம், விளாத்திகுளம் தங்கம்மாபுரத்துக்காரரான எஸ்.எஸ். போத்தைய்யா போன்றவர்களெல்லாம் நெல்லை ஆய்வு மையத்தின் மூலம் பல நாட்டுப்புற தரவுகளைத் திரட்ட உதவியாக இருந்தவர்கள்.

நான்குநேரியில் 1917 டிசம்பர் 7ம் தேதி பிறந்த நா.வானமாமலை அப்பகுதி விவசாயிகள் பிரச்சனைகளுக்காகவும், தொழிலாளர்கள் இயக்க போராட்டங்களுக்காகவும் சிறைக்குச் சென்றவர். இன்றைக்கு காலையில் அரெஸ்ட் ஆகி கல்யாண மண்டபத்தில் உட்காரவைத்து மாலையில் விடுவிப்பது போன்ற கைதுகளல்ல இவை. இதனால்தான் எனக்கு பொதுவுடைமைத் தோழர்களின் உழைப்பு பிடித்துப்போகிறது.

 1950ல் தூத்துக்குடி மீளவிட்டானில் சரக்கு இரயில் கவிழ்க்கப்பட்ட  “நெல்லை சதிவழக்கில்” கம்யூனிஸ்ட்டு கட்சி தலைவரான பாலதண்டாயுதம், நல்லகண்ணு, ஆசிரியர்.ஜேக்கப் போன்றவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது,  நா.வானமாமலையும் விசாரணைக் கைதியாக கைது செய்யப்பட்டதாகச் சொல்லியிருந்தார் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.  நா வானமாமலை பற்றிய பல தகவல்களும் செய்திகளும் அவர் வாய்மொழியாக அறிந்ததே. மனுஷர் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்காத காலத்திலே தகவல்களஞ்சியமாக நடமாடினவர். ஆண்டு தேதி நேரம் பிசகாமல் சம்பவங்களைச் சொல்லக்கூடியவர்.

ஈழ, மலேசிய, தமிழர்கள் மத்தியிலும்  நா.வானமாமலை மதிப்பிற்குரியவராக இருந்தவர். யாழ்பாணப் பல்கலைக்கழகம் கூப்பிட்டுவைத்து  “இலக்கிய கலாநிதி” என்ற பட்டமளித்திருக்கிறது.  இவையெல்லாம் ஒரு பக்கமிருந்தாலும், 1960களில் ஒன்றுபட்ட நெல்லை, குமரி மாவட்டங்களில்  எஸ் .எஸ்.எல்.சி மற்றும் கல்லூர்யில் பி.யூ.சி (புகுமுக வகுப்பு) தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட  “வானமாமலை டுட்டோரியல்தான் அன்றைக்கு எங்கள் அப்பனுக்கும் சிற்றப்பனுக்கும் சரணாலயமாக இருந்திருக்கிறது.

நெல்லையில் உள்ள அந்த இடம் தான் எனக்கான ரத்தபந்தமுள்ள இடம்பற்றிச் சொன்னது. ஆனால் எனக்கு என் 25வயது வரைக்கு வானமாமலை என்றால் யாரென்று தெரியாமல் போயிருக்கிறது. தொ.ப வையும் இப்படித்தான்.
பேர் தெரியும் ஆளோ, ஆளுமையோ தெரியாமல் வளர்ந்து தொலைத்திருக்கிறேன். இதில் கொஞ்சம் வருத்தம் தான்.

எனக்கு கழனியூரன் தான் நாட்டுப்புறத்து வாத்தியார். அவர் எழுத்தைப் பிடித்துக்கொண்டு தான் மண்ணை நுகர்ந்துபார்க்கப் பழகினதே. அவருடைய நாட்டுப்புற வழக்காற்றியல்களை வாசித்த தொடர்பில் தான் வானமாமலை அறிமுகம் கிடைத்தது. ஜெகவீர பாண்டியனாரோட பாஞ்சாலங்குறிச்சி வீரச்சரித்தரம் வாசிச்ச பிறகுதான் கட்டபொம்மன் கூத்து பத்தியும் ஐவராசாக்கள் பத்தியும் தெரிய வந்தது.

அப்பப்போ மலைகளுக்குப் பக்கத்திலே தான் வளர்ந்திருக்கோம்ன்னு நினைச்சுக்குவேன்.

[ஆண்டு |தேதி |சம்பவம் |தகவல்கள் : கே.எஸ்,இராதாகிருஷ்ணன் அவர்கள் தளத்திலிருந்து நன்றியோடு எடுத்தாளப்பட்டது]

-கார்த்திக்.புகழேந்தி
21-10-2015. (ஆயுத பூஜை)

ஈரம்காயாத டவுசர்

திசைகள் பழக்கப்படாத வயதில் வடக்கே என்றால் மூலமடையைச் சொல்வார்கள், ராஜா குடியிறுப்பு, மூளிக்குளம், வெள்ளக்கோயில், பாளையங்கோட்டூர் பகுதிகளுக்கு வாய்க்கால் தண்ணீரை மாற்றி அனுப்பும் மடை(மூலம்) இந்த குளம் என்பதால் அப்படி ஒரு பெயர்.

மடையிலிருந்து வயலுக்குப் பாயும் ஓடைதான் எங்கள் பெரிய அழிச்சாட்டியங்களுக்கான இடம். குற்றாலத்து ஆகாய கங்கைபோல நீராவி பொங்க குளத்திலிருந்து மடைவழியே வயலுக்குப்பாயும் ஓடையில் நீர்தொட்டி அமைத்து அடிக்கும் அட்டூழியங்களைப் பட்டியல் போட பத்துவிரலெல்லாம் பத்தாது.

வயலுக்குள் பச்சைபிடித்துக்கிடக்கும் நீலப்பச்சைப்பாசி கரண்டைக்காலில் ஒட்டிக்கொள்ள சகதியில் இறங்கி ஆட்டம்போட்டு மண்கறையைக் கழுவ மடைக்குள்தான் குதிப்போம். செல்விமாதிரி பிள்ளைகள் கூட இருந்தால் பாவாடைவிரித்து அயிரைமீன் பிடிக்கலாம். இசக்கிமாதிரி ஊருக்கு அடங்காதது பாம்புகள் கூட பிடிக்கும்.

சொக்கலிங்கத்தாத்தா கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு போகும்போதே மிரட்டல்சத்தம் கொடுப்பார். அவர் வயலில் நெத்தெடுக்கப் போகும் போது ஆறுபங்குக்கு ஒருபங்கு பறுப்பு கூலி.  ஆரெம்கேவி கவர் நிரம்ப நெத்து( உளுந்து) பறித்துவிட்டு பெரிய சாதனை புரிந்ததுபோல மற்றவர்களுக்கு முன்னால் சுத்திச்சுத்தி வருவேன்.  “நீயே வச்சிக்க பயலே” என்று அதட்டலோடு பத்திவிடுவார். நல்ல மனுசன் தான் ஆனால் என்ன செய்ய அவர் தோட்டத்திலும் வெள்ளரிக்காய் களவாண்டுதிங்க வேண்டி இந்த மானங்கெட்ட நாக்கு அலைந்திருக்கிறதே.

பழுத்த வெள்ளெரிக்காய் ஒவ்வொன்னும் கிலோக்கணக்கில் கனக்கும். பரந்த வயக்காட்டில் நாலு கம்பை ஊனி குச்சில் போட்டு உக்கார்ந்திருக்கும் குருட்டு கிளவி கண்ணில் மண்ணைத்தூவி வெள்ளரிக்காயை ஆட்டையைப் போடுவதெல்லாம் ஒரு வெறும் ருசிக்கு மாத்திரமல்ல. அதில் ஒரு போர்த்தந்திரத்துக்கான வேலைகள் இருந்ததுதான்.

இந்த சேட்டைக்கெல்லாம் சாட்சியோ ஆதாரமோ இருக்காது. ஆனால் இந்த மடை, குளத்துக் குளியலில் ரெண்டு வலுவான ஆதாரங்கள் அழிக்கமுடியாததாகிவிடும். ஒன்று டவுசர் தையல் விளிம்பில் காயாமல் காட்டிக்கொடுக்கும். அடுத்து கண்கள்.ரொம்பநேரம் தண்ணீருக்குள் ஊறினால் கண்கள் சிவந்து புகைமூட்டமாகத் தான் பக்கத்திலிருப்பவன் கூடத் தெரிவான். ஆனாலும், அப்படிச் சிவக்கச் சிவக்க ஆட்டம்போட்டு. வீட்டுக்குப் போகும் முன்னால் கூழாங்கல்லெடுத்து கண்ணில் ஒற்றி கண்களை வெள்ளையாக்கும் வித்தையை எல்லோரும் கற்றுவைத்திருந்தோம்.

இப்போது ஓடைகள் மெல்ல வழக்கொழிந்து பம்புசெட்டுகள் கூடிவிட்டது. அன்றைக்கு ஓடை வற்றும் போது குளம். குளம் வற்றினால் வாய்க்கால். வாய்க்காலும் வற்றினால் இருக்கவே இருக்கிறது வற்றாத ஜீவநதி. ஆக திருநெல்வேலி மையத்தில் பிறந்த எனக்கும் தண்ணீருக்குமான தொடர்பு தனித்தனியே பிரித்துப்பார்க்கமுடியாததாகவே இருந்தது. சிரிக்கச் சிரிக்கக் குதுகலத்தோடு ஆட்டம் போட்ட நீர்நிலைகளில் ஆச்சிக்கு நீர்மாலை எடுக்கும்போதுமட்டும் தான் கொஞ்சம் கலங்கிப் போயிருந்திருப்பேன்.
-கார்த்திக்.புகழேந்தி
18-10-2015.

திவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச நிலையாளர்கள்.

கணையாழி வாசகர் வட்டத்தில் வாசிக்க "வனம்" என்றெழுதிய காட்டின் கவிதையை நகலெடுத்து வைத்திருந்தேன். அதே நாளில் அதே நேரத்தில் அரும்புகள் அறக்கட்டளையின் நிகழ்வுக்கு வருவதாகச் சொல்லியிருந்திருக்கிறேன்.

ஆட்டிச நிலையாளர்கள் பற்றியெல்லாம் பாடம் படித்து கற்றுக் கொண்டதில்லை. திவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும். என்னைவிட இரண்டுமடங்கு பருமன் இருப்பான். தடிமனாக லென்ஸ் வைத்த கண்ணாடியின் மூலமாகத்தான் அவனுக்கு பார்வை தெளிவாகப் புலப்படும். அவன் அறிமுகமான காலத்தில் பேச்சுகள் என்று எதுவும் அவனோடு எனக்கில்லை. நிறைய ஒலி எழுப்புவான்.  அது அவனுக்கும் எனக்கும் மற்றெல்லோருக்குமான் சங்கேத பாஷை.

நண்பன் வீட்டில் புறா வளர்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்துவீட்டு ஜன்னலுக்கு அப்பாலிருந்து திவாகரனின் குரல் எழும்.புறா வேணுமா கண்ணா! மீன் வேணுமா கண்ணா! அது வேணுமா கண்ணா, இது வேணுமா கண்ணா என்று திவாகரன் அம்மாவின் குரல் கூட ஒலியாகத்தான் பரிச்சயம். தப்பித்தவறிக்கூட வெளியப் போகணுமா கண்ணா என்று அவர் கேட்டதுமில்லை. அவரும் வெளியே வந்ததும் இல்லை.

நாங்கள் மீன்கள், புறாக்கள் என்று அடுத்தகட்டமாக முயல் வளர்க்கத் துவங்கியிருந்தோம். திவா வீட்டு ஜன்னலுக்கருகில் சென்று, காதைப் பிடித்துத் தூக்கிய முயலைக் காட்டிய போது "ஆனும் ஆனும்" என்பான் திவா.

வெகு பிரயர்த்தனங்களுக்குப் பிறகு அவனை வெளியே அழைத்துக் கூட்டிவந்து ஒன்றாக விளையாடினோம். அவன் முதிர்ந்த தோற்றத்தின் மழலைத்தனம் மிக்க மகிழ்ச்சியை நாங்கள் நண்பர்களாய் ரசித்தோம். சொன்னேனெ திவா எப்போதும் திவா தான். ஆட்டிசம் என்றெல்லாம் யார்ர் கண்டது.

அரும்புகள் அறக்கட்டளை பற்றிய பதிவுகளைப் பார்த்து மற்றும் ஸ்ரீதேவி அக்காளின் அழைப்புக்கத்தான் சென்றிருந்தேன். ஒரு சங்கிலித்தொடர்போல நண்பர்களும் சேர கைகோர்த்துக்கொண்டோம்.  உள்ளே நிகழ்ச்சியில் என்ன பேசினார்கள் என்ன செய்தார்களென்றெல்லாம் தெரியாது. ஒரு மூன்று நான்கு மணிநேரம் திவாகரன்களின் உலகத்தில் ஓடிப்பிடித்துக் கொண்டிருந்தோம்.

பொதுவாகவே இந்தியர்களுக்கு சக மனிதர்களோடு ஒட்டுதல் குறைவு என்று படித்திருப்பீர்கள் . அத்தனை பெரிய ஹோட்டலில் ஒற்றையாகப் போய் தனி சீட்டில் அமர்வோம். பேரூந்துகளில் ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒருத்தர்.
இதை உளவியலாளர்கள் தன்னம்பிக்கைக் குறைவோடு ஒப்பிடுகிறார்கள்.
ஆகவே சக மனிதர்களை நாம் கவனிப்பதற்காகப் படைக்கப்பட்ட இந்த ஆட்டிச நிலையாளர்களின் பிரபஞ்சத்திற்குள் எங்கள் நேரங்கள் கவிதைகளாகக் கரைந்தன.

 எல்லோரும் விளையாடும் போது தனியாக உட்கார்ந்து ஒரு சிறுவன் மட்டும் அழுதுகொண்டிருந்தான். அவனுக்கு இப்போது அழப்பிடித்திருக்கிறது அழுகிறான் என்று நான் உணர்ந்து கொள்ளவும், அட இவர்கள் உலகம் இத்தனைச் சுதந்திரமானதா என்று செல்லப் பொறாமையும் கூட வருகிறது.

வாலண்டியர்களாக வந்திருந்த நண்பர்கள் நிறைய நன்றிகள் சொன்னார்கள் அது மீண்டும் தொடர்ச்சங்கிலி போல ஒருத்தரிடத்திலிருந்து ஒருத்தருக்காக மாறி மாறி யாருக்கும் சேராமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது.
இந்த அரும்புகளின் சிறு அசைவுகளுக்குக் காரணமாய் இருப்பவர்களுக்குத்தான் அத்தனையும் அன்பும் நன்றியும்
போய்ச் சேர வேண்டும்.

-கார்த்திக் புகழேந்தி.
1810-2015.


ஆமாம் அதென்ன இடைவேளைக்கு ஜிலேபியும் சிப்ஸும்... wink உணர்ச்சிலை

வாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்


வாசக சாலையின் 11நிகழ்வில் தான் முதல்முறையாகக் கலந்துகொள்ள முடிந்தது. எழுத்தாளர் ப.சிங்காரம் அவர்களின் படைப்பை முன்வைத்து ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார்கள் முன்பு. அந்த நிகழ்ச்சிக்கான அழைப்புப் பதிவை வாசிக்கும்போதே கலந்துகொள்ளத் தூண்டினது.

இன்றைய (18-10-2015) நிகழ்வில் சரவணன் சந்திரன் அவர்களுடைய “ஐந்து முதலைகளின் கதை” நாவலை முன்வைத்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நாவல் குறித்து நிறைய எழுதவேண்டுமென்பதால் அதுபற்றி பிறகுபேசிக்கொள்வோம்.

வாசகசாலையின் ஒரு அம்சம் பிடித்திருக்கிறது. வழக்கமாக( அல்லது வழக்கமாக்கப்பட்ட) நிகழ்வுகளில் கலந்துரையாடல் என்று பெயர் வைத்துவிட்டு சிறப்பு அழைப்பாளர்களே பேசிப்பேசிக் கொல்கிற கதை நிகழும்.தங்களின் நாற்பதாண்டுகால அனுபவத்தை நம்மீது கத்தி சொருகுகிறதுபோல குத்திவைப்பார்கள். பம்பாகணபதியை கடந்துபோய் சரங்குத்தி குத்துவார்களே அதுபோல.

வாசக அனுபவமும், பேச்சை ரசிக்கிற மனப்பக்குவமும் ஒன்றுக்கொன்று முட்டிமோதாமல் ஒருங்கிணைந்து போகிற நிகழ்ச்சிகள் அரிதானது. கூட்டத்துக்கு ஒருத்தரேனும் ஆயுதம் தரித்தவராகி இருப்பார்.
ஆகவே, தனித்தாக்குதல்கள் நிகழும் இலக்கியச் சச்சரவுகளுக்கு வெகுதூரமென சிற்சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது முக்கியமானதாகப்படும். அப்படி ஒரு நிகழ்வாக இன்றைய அமர்வில் நிறைய கலந்துரையாடல், கருத்துப் பறிமாற்றத்தைக் காண முடிந்தது.
மொத்த நிகழ்வும் மௌனமாகவே இருந்துவிட்டு உர்ர்ர்ர்ரென வெளியேறுகிற வாசகன் எதற்காக கூட்டங்களுக்குப் போகவேண்டும்.

கூட்டமாகக் கூடுகின்றவனிடமே இலக்கியம் தளைத்திருக்கிறது. போர், பக்தி தொடங்கி மதம், புரட்சி வரைக்கும் இலக்கியம் கூட்டமாகக் கூடுகிறவர்களிடமே வளர்ந்திருக்கிறது உண்மையா இல்லையா?
ஆனால் கூட்டங்களுக்குப் போய் தலையைத் தொங்கவிட்டுவிட்டு நாற்காலிகளை நிரப்பிக் கொண்டிருக்காமல் வாய்விட்டு எங்கே பேசுகிறோமோ அங்கே இருக்கிறது பலன். இன்றைக்கு நான் பலன் எய்தினேன். அதற்காக வாசகசாலைக்கு என்நன்றி.

இன்னுமொன்று சொல்ல வேண்டுமெனப்பட்டது. தேம்பாவணியில் முதல் படலத்திலே ஒரு பாட்டு உண்டு. அதாவது, படித்த ஒரு புத்தகம் பற்றிப் பயன்பட பேசுவது மலைகளின்மீது பொழியும் மழை நீர் அருவியாகி ஆறாகி கடல் சேர்வதுபோல பலர்க்கும் பயன்படுவதாகப் பொருள்படத் தொடங்கும்.
இங்கே சிறப்பு என்னவென்றால் அருவியை புத்தகம் பற்றிப் பேசுவோர்க்கு உவமையாய்ச் சொல்லவில்லை. புத்தகம் பற்றி பயன்பட உரைப்போரைத்தான் மழைக்கும் அருவிக்கும் ஆற்றுக்கும் ஒப்பாக்கி இருக்கிறார்.

ஆகச்சிறப்பு பெறுகிற காரியம் நல்ல புத்தகத்தைப் பற்றி நான்கு பேரைப் பேசவைப்பது. ரெண்டு பேரை வாங்க வைப்பது. ஒருத்தரையேனும் படிக்க வைப்பது என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?


தேம்பாவணி- நாட்டுப்படலம்- பாடல்
“படித்த நூல் அவை பயன்பட விரித்து உரைப்பவர் போல், 
தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே குடித்த நீர் எலாம் கொப்புளித்து, அமுது என அருவி இடித்து, அறா ஒலி எழத்திரை எறிந்து உருண்டு இரிவ.”


-கார்த்திக்.புகழேந்தி
18-10-2015.

Monday, 19 October 2015

ஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க


              லாய் தீவுக்கூட்டங்களின் தென்பாகத்தில் அமைந்துள்ளது தைமூர். (அல்லது திமோர்) 12ஆயிரம் சதுர மைல்களுக்கும் குறைவான சின்னஞ்சிறிய தேசத்தில், அதன் இயற்கை /கடல் வளங்களைக் கணக்கிட்டு முதலீட்டாளர்களாக நுழைகிற, அந்த நிலத்தின் வளங்களைச் சுரண்டி வணிகத்தின் மூலம் சம்பாதிக்கத் துடிக்கிறவர்களின் கதைதான் ஐந்து முதலைகளின் கதை. கதை என்பதைவிட இது ஒரு சுவாரசியமான டைரிக்குறிப்பு என்று தொடங்கலாம்.

ஆனால் டைரிக்குறிப்புக்கான அத்யாவசியமென்று பார்த்தால் இதில் ஆண்டுகள் இல்லை. நாட்கள் குறிப்பிடப்படவில்லை. நேரம் காலம் எதுவுமில்லை. 

வெகுவாக நாம் அறியாத அந்நிய நிலம். அரைகுறை ஆங்கிலம் இந்தோனேஷிய, போர்த்துக்கீஷிய, டேட்டம் மொழிகள் பேசுகிற மனிதர்கள். இந்தியா என்றால் ஷாரூக்கான் என்கிற அடையாளம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்வையும் பசியையும் பயன்படுத்தி, அவர்களின் தோள்மீது கைபோட்டுக்கொண்டே அவர்களின் உழைப்பைச் சுரண்டும் பன்னாட்டு முதலீட்டாளர்கள். இந்த முதலீட்டு முதலைகளின் வேட்டை சாம்ராஜ்ஜியத்தில் ஒரு கலையுணர்வும் கண்களில் ஒளியும் கொண்ட வஞ்சிக்கப்படும் ஒற்றை முதலையின் டைரி இது.

வேட்டையின் போது ஓரினத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒன்றுக்கொன்று காழ்ப்புணர்ச்சியோடு இயங்கினால் வேட்டையின் இறுதி நிமிடங்கள் எப்படி நிகழும்?. இரையின் மீது பரிதாபமோ,பச்சோதாபமோ”, நெருக்கமோ கொள்கிற வேட்டைவிலங்கு தன் சக விலங்கினத்தால் எப்படியெல்லாம் பலிவாங்கப்படும். பலி வாங்குதல்களிலிருந்து  தற்காத்துக்கொண்டு எப்படி மீண்டும் தன்னை வலியவன்தான் என்று நிலைநிறுத்தத் துடிக்கும். பூஜ்ஜியத்துக்கு மிக நெருக்கமாய் துரத்தப்படும்போதும் பசியைப் புறந்தள்ளி மீண்டும் தன்னம்பிக்கைகளால் எப்படி நின்றெழும் என்று தேர்ந்த நடையுடன் செல்கிறது நாவல்.

இந்த சின்ன லே-அவுட் தான் நாவலின் பரப்பளவு. ஆனால் அதன் கதை மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டுகிற எல்லா முதலாளித்துவ நாடுகளுக்கும்  பரந்துபட்ட கருப்பொருளாகப் பொருந்திப் போகிறது. நிறைய வியப்புகள், அறியப்பெறாத பல தகவல்கள், நாம் காணாத மனிதர்கள், நம்மைக் காணாத மனிதர்களிடம் நாம் பெற்றிருக்கும் அடையாளங்கள், அன்பு, கயமை, சுயநலம், நம்பிக்கை துரோகம், நட்பு, காமத்திலூறிய காதல், பிணைப்பு, பிரிவு, எதார்த்தம், கர்வம், வீழ்கையில் கிடைக்குமே தன்னம்பிக்கை என அது இதுவென்று எதையும் விட்டுவைக்கவில்லை ஐ.மு.க. (கட்சியல்ல நாவல் பெயர்ச்சுருக்கம்தான்) 

எல்லாமே நறுக்கென்று நிற்கிறது வரிகளுக்குள். சரவணன் சந்திரன் காலம்காலமான நாவல்களுக்கான அத்தியாயக் கொள்கைகளை கொலை செய்பவாரக இருக்கிறார். ஆனால் பாருங்கள் நமக்கு ‘சித்தார்த் அபிமன்யு’வைத்தானே பிடிக்கிறது. ;)

இத்தாலியரான அலெசான்ட்ரோ பாரிக்கோவின் பட்டு”, ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”. இந்த இரண்டு நாவல்களுமே (!)  தமிழ்ச்சூழலில் கவனிக்கத்தக்கவை. இவையிரண்டுமே மொழிப்பெயர்ப்பு நூல்கள். 

கதையாடலில் மிகச்சுருக்கமாக மாயம் நிகழ்த்துகிறதில் பாரிக்கரும், வாக்குமூல நடையில் நாம் அறிந்திராத கோணத்தை கட்டுடைப்பதில் பெர்கின்ஸும் தாண்டவமாடும் நூல்கள் இவை. தமிழில் இப்படியான நாவல்கள் வெளிவந்து மிரட்டியிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதில். சரவணன் சந்திரன் அப்படி ஒரு சிக்ஸரைத் தன்முதல் நாவலில் அடித்திருக்கிறார்.

சட்சட்டென (எம்.டிவி) காட்சி மாறுவதுபோல சம்பவங்கள் நம் சிந்தனையைக் கவ்விக்கொண்டு படுத்தாமல் தெறித்து ஓடுகிறது. வாசகனுக்கு அடுத்து என்ன என்று பக்கத்தைப் புரட்டுகிற சுவாரஸ்யத்தில் திமோர்/வணிகம்/ பித்தலாட்டங்கள்/ சுரண்டல்கள் எல்லாமே சவால்களை எதிர்கொள்கிற வீரனைப்போல் உணர வைக்கிறது.

பல அத்தியாயங்களுக்கிடையில் சொல்லாமல் விட்டுவிடுகிற இடைவெளி அல்லது கதைத்தனம் ஒரு புதிய வெளியை அடையாளம் காண்பிக்கிறது. ஊரில் வசித்த வீட்டை விற்று, நண்பனைவிட்டு, பழகியவர்களை விட்டுப் புறப்படும்போது, வழியனுப்புகிற நண்பனின் சகோதரி பேசும் வார்த்தைகளைக் கவனித்து, தன்னோடு சகஜமாய் இத்தனை ஆண்டுகள் பழகியவளுக்கு இத்தனை தத்துவார்த்தமாகப் பேசத்தெரியுமா என்று சிந்திக்கிற கோணம் யாருக்குத்தான் பிடிக்காது!

இது ஒரு நவீன பாய்ச்சல், உலகக்கோப்பையில் முல்லர், நெய்மர் அடித்த கோல்கள் என்றெல்லாம் வரிகளைச் சேர்த்துக்கொள்ள நினைக்கிறேன். பாராட்டுவதற்காக மட்டுமே இப்படி எழுதுகிறேனா என்ற சுயபரிசோதனைக்குப் பிறகே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினேன்.

சரவணன் சந்திரன் தெளிவாக இருக்கிறார். ஆயிரம் வாசகனைச் சேர்கிறது ஒரு புத்தகம், வாசிக்கிறவனை போட்டு படுத்துவதில் எனக்கு உடந்தை இல்லை. எனக்கு இலக்கியத்தனமும் தெரியும் நான் எழுத நினைத்தது அதையல்லமுடிந்தது கதை.

தமிழில் உள்ள ஆகப்பெரிய பிரச்சனை ஒருத்தரைப் பிடித்து உட்கார்த்தி வாசிக்கவைப்பது. ஒரு மலையாள நாளிதழில் எழுதினால் லட்சம் பிரதிகள் வெகு எளிதாக வாசகர்களைச் சென்றடைந்துவிடுகிறது. இங்கு ஒரு தமிழ்நாவல் ஐயாயிரம் பிரதிகளுக்குள் மூச்சுத் தள்ளிவிடும். அதற்கும் திருப்பிக் கொடுக்க தேவைப்படாத சாகித்யஅகாதமி ஒன்று வாங்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இந்த ஐந்து முதலைகளின் கதையினை வாசிக்கச் சொல்வதற்காக அதுபற்றி நீண்ட முழக்கமெல்லாம் நான் பேசிக்கொண்டிருந்தால் அது நாவலை என்ன காரணத்திற்காக நான் அபரிமிதமானதென்று ஏற்றுக்கொள்கிறேனோ அந்த காரணத்திற்கே எதிரானதாகிவிடும்.

நிச்சயம் நீங்கள் ஐந்து முதலைகளின் கதைவாங்கிப் படிக்கவேண்டும். இப்படித்தான் நான் என் வாசக நண்பர்களுக்குப் பரிந்துரைப்பேன். கடந்தவருடம் இதேபோல மிளிர்கல்லை பரிந்துரைத்தேன். ஒருத்தரும் படித்துவிட்டு என்மேல் கல்லெறியவில்லை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படிச் சொல்ல முடிகிறது என்னால்….

மேற்படி விமர்சனம் வைக்கிறவர்கள் தீர ஆராய்ந்து வைக்கும் விமர்சனங்களையும் வரவேற்கத்தான் வேண்டும். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஒரு புத்தகத்தின் அடியும் தலையும் தெரிந்துகொள்கிறவனாலே தான் ஆத்தாமார்த்தமாய் அதனை எதிர்க்கவும் கொண்டாடவும் முடியும்.  

புதிதாக எழுதவருகிறவர்களின் கூடவே வாசிக்க வருகிறவர்களின் ரசனைகள் மாறி இருக்கிறதென்று சப்தமாகச் செல்ல முடிகிறது.  விமர்சகர்களும் கொஞ்சம் தங்கள் வெர்ஷன்களை (விஷன்களை) அப்டேட் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

-கார்த்திக். புகழேந்தி
19-10-2015. 


There was an error in this gadget