குடங்கள்


படம் : கார்த்திக்புகழேந்தி | இடம்: இடைச்செவல் 

"ரோஜாப்பூ போட்ட குடம் நம்ம வீட்டு குடம் ", " குக்கெர் கேஸ்கெட்டை விளிம்புக்குள் சுத்தியிருந்தால் அது மேல்வீட்டு ராணியக்கா குடம்" இப்படி அடையாளங்கள் வைத்திருப்போம்.

ப்ளாஸ்டிக் குடங்களின் ஆயுள் எத்தனைகாலம் என்றெல்லாம் தெரியாது. வண்ணச்சாயம் தீர்ந்து வெளுப்பு வெட்டைகள் விழும்போது புதுக்குடம் குடிவந்திருக்கும் வீட்டில். சில்வர் குடம் கீழே போட்டு நெளித்த அன்றைக்குத்தான் உள்ளே இரும்பு குண்டுகள்தான் கிடந்து இந்தச் சத்தம் போடுகிறது என்று கண்டுபிடித்தது. அன்றைக்கு காதில் ஒய்ய்ய்ய்ய்ங்.
பித்தளை குடத்தை வெறும்குடமாகத் தூக்கவே ஒருசெம்பு பால் குடிக்கவேண்டும். நமக்கு வசதி எடைகுறைந்த/எடையில்லாத ப்ளாஸ்டிக் குடங்கள் தான்.

இடுப்பில் வைத்து குடம் தூக்கும் ரத்னா, திலகா, வள்ளிகளைப் பார்க்கும்போது, இவங்களால மட்டும் எப்படி முடியுதென்று நினைப்பேன். குடம் தூக்குவதில் நாம் பாகுபலி ஸ்டைல் ஆசாமி. பத்து குடம் தண்ணி எடுத்து முடிப்பதுக்குள் சட்டையெல்லாம் சதசதவென்றாகிடும்.
பின்னாளில் அதுவே ஒரு போட்டியாகி இருந்தது. யார் கம்மியா நனைஞ்சிருக்கானோ அவனே வெற்றியாளன். கடைசி குடம் தூக்கும் போது மாத்துச்சட்டை போட்டு ஏமாத்துறதெல்லாம் உண்டு.

இடுப்பில் தூக்கும் பிள்ளைகள் பாவாடைகூட நனையாது. என்ன சூட்சமமாயிருக்கும்?

கண்ணம்மா ஆச்சி சொல்லும் "பொம்பளைக்கு இடுப்புல ஒரு எலும்பு கூடலேய் அதான் கொடம் கின்னுன்னு நிக்குது "என்று. இது உண்மையா பொய்யா ஆராய்ச்சிக்கு எப்படிப் போக. அப்போதுப்பீட்டர்தான் சொல்வான். "ஆதாமின் விலா எலும்பிலே தேவன் ஏவாளை உண்டாக்கினார்ன்னு" ஒருவேள அதுதான் காரணமோன்னு விட்டுட்டேன்.

தண்ணீர் குழாயடிச் சண்டையில் இசக்கியம்மாக்கா தான் கோல்ட் மெடல். காது கம்மல் அறுந்து பொதபொதன்னு ரத்தம் ஊத்தும் போது ஒரு சொட்டுத் தண்ணிய கீழ சிந்தலையே. ஒண்ணுமண்ணா இருக்கும் குடும்பங்கள் அடிச்சுகிட்டு முறைப்பது இந்தக் குழாயடிகளில் தான்.

எப்பவாச்சும் தண்ணிக்குத் தட்டுப்பாடு வரும்போது
ஊர்முனையில் வட்ட டாங்குக்குக் கீழே காலிக்குடங்களோடு ஊரே திரண்டு கிடக்கும். சங்கடமாகக் காதல் வளர்க்கும் இளவட்டங்கள் அங்கிருக்கும் பொட்டிக்கடையில் அநியாயத்துக்குக் காவல் கிடப்பானுங்கள். அப்படி இப்படித்தான் தன்கூட எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்தவளைப் பார்த்தால் உண்டு.

ப்ளாஸ்டிக் குடத்தில் ஒரு அட்வாண்டேஜ் உண்டு. அதாவது தண்ணீர் வராதவரைக்கும் சும்மா பேராச்சியம்மன் கோயில் திருவிழாவுக்கு வரும் கொட்டுக்காரன் போல டம்ம டம்மவென கொட்டடித்துப் பட்டையை கிளப்பலாம். தாளத்துக்கு சேர்மதுரைன்னு ஒருத்தன் இருந்தான். கையில வித்தையோடு பொறந்தவன்.

அய்யா வந்தனமைய்யா வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும்... டக்ட டக்கட டக்கடர டக்க டக்கட டக்கட ரக்கடக்க....என்றவன் அடிக்கும்போது சும்மா இருக்கும் சுடலைக்குக்கூட ஆட்டம் வரும்.


Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil