ஈரம்காயாத டவுசர்





திசைகள் பழக்கப்படாத வயதில் வடக்கே என்றால் மூலமடையைச் சொல்வார்கள், ராஜா குடியிறுப்பு, மூளிக்குளம், வெள்ளக்கோயில், பாளையங்கோட்டூர் பகுதிகளுக்கு வாய்க்கால் தண்ணீரை மாற்றி அனுப்பும் மடை(மூலம்) இந்த குளம் என்பதால் அப்படி ஒரு பெயர்.

மடையிலிருந்து வயலுக்குப் பாயும் ஓடைதான் எங்கள் பெரிய அழிச்சாட்டியங்களுக்கான இடம். குற்றாலத்து ஆகாய கங்கைபோல நீராவி பொங்க குளத்திலிருந்து மடைவழியே வயலுக்குப்பாயும் ஓடையில் நீர்தொட்டி அமைத்து அடிக்கும் அட்டூழியங்களைப் பட்டியல் போட பத்துவிரலெல்லாம் பத்தாது.

வயலுக்குள் பச்சைபிடித்துக்கிடக்கும் நீலப்பச்சைப்பாசி கரண்டைக்காலில் ஒட்டிக்கொள்ள சகதியில் இறங்கி ஆட்டம்போட்டு மண்கறையைக் கழுவ மடைக்குள்தான் குதிப்போம். செல்விமாதிரி பிள்ளைகள் கூட இருந்தால் பாவாடைவிரித்து அயிரைமீன் பிடிக்கலாம். இசக்கிமாதிரி ஊருக்கு அடங்காதது பாம்புகள் கூட பிடிக்கும்.

சொக்கலிங்கத்தாத்தா கலப்பையைத் தோளில் தூக்கிக்கொண்டு போகும்போதே மிரட்டல்சத்தம் கொடுப்பார். அவர் வயலில் நெத்தெடுக்கப் போகும் போது ஆறுபங்குக்கு ஒருபங்கு பறுப்பு கூலி.  ஆரெம்கேவி கவர் நிரம்ப நெத்து( உளுந்து) பறித்துவிட்டு பெரிய சாதனை புரிந்ததுபோல மற்றவர்களுக்கு முன்னால் சுத்திச்சுத்தி வருவேன்.  “நீயே வச்சிக்க பயலே” என்று அதட்டலோடு பத்திவிடுவார். நல்ல மனுசன் தான் ஆனால் என்ன செய்ய அவர் தோட்டத்திலும் வெள்ளரிக்காய் களவாண்டுதிங்க வேண்டி இந்த மானங்கெட்ட நாக்கு அலைந்திருக்கிறதே.

பழுத்த வெள்ளெரிக்காய் ஒவ்வொன்னும் கிலோக்கணக்கில் கனக்கும். பரந்த வயக்காட்டில் நாலு கம்பை ஊனி குச்சில் போட்டு உக்கார்ந்திருக்கும் குருட்டு கிளவி கண்ணில் மண்ணைத்தூவி வெள்ளரிக்காயை ஆட்டையைப் போடுவதெல்லாம் ஒரு வெறும் ருசிக்கு மாத்திரமல்ல. அதில் ஒரு போர்த்தந்திரத்துக்கான வேலைகள் இருந்ததுதான்.

இந்த சேட்டைக்கெல்லாம் சாட்சியோ ஆதாரமோ இருக்காது. ஆனால் இந்த மடை, குளத்துக் குளியலில் ரெண்டு வலுவான ஆதாரங்கள் அழிக்கமுடியாததாகிவிடும். ஒன்று டவுசர் தையல் விளிம்பில் காயாமல் காட்டிக்கொடுக்கும். அடுத்து கண்கள்.



ரொம்பநேரம் தண்ணீருக்குள் ஊறினால் கண்கள் சிவந்து புகைமூட்டமாகத் தான் பக்கத்திலிருப்பவன் கூடத் தெரிவான். ஆனாலும், அப்படிச் சிவக்கச் சிவக்க ஆட்டம்போட்டு. வீட்டுக்குப் போகும் முன்னால் கூழாங்கல்லெடுத்து கண்ணில் ஒற்றி கண்களை வெள்ளையாக்கும் வித்தையை எல்லோரும் கற்றுவைத்திருந்தோம்.

இப்போது ஓடைகள் மெல்ல வழக்கொழிந்து பம்புசெட்டுகள் கூடிவிட்டது. அன்றைக்கு ஓடை வற்றும் போது குளம். குளம் வற்றினால் வாய்க்கால். வாய்க்காலும் வற்றினால் இருக்கவே இருக்கிறது வற்றாத ஜீவநதி. ஆக திருநெல்வேலி மையத்தில் பிறந்த எனக்கும் தண்ணீருக்குமான தொடர்பு தனித்தனியே பிரித்துப்பார்க்கமுடியாததாகவே இருந்தது. சிரிக்கச் சிரிக்கக் குதுகலத்தோடு ஆட்டம் போட்ட நீர்நிலைகளில் ஆச்சிக்கு நீர்மாலை எடுக்கும்போதுமட்டும் தான் கொஞ்சம் கலங்கிப் போயிருந்திருப்பேன்.




-கார்த்திக்.புகழேந்தி
18-10-2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil