கொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்

படம் : நன்றி “சொல்வனம்”


கொலுவைத்தல் பற்றி பேச்சுகள் கேட்டதும் சின்னவயது நாட்கள் கன்னாபின்னாவென்று மனதிலெழுகிறது. அப்போது பாளையங்கோட்டை தயாபரன் தெருவில் எங்கள் வீடிருந்தது. வீட்டுக்குப் பக்கமே பாளையங்கால்வாய் சுழித்து ஓடும். வைக்கோல்போர்களுக்கு மேலேறி குதித்து விளையாடி, கண்பொத்தி, நாடுபிரித்து, கிளிச்சேட்டை பிள்ளைகளின் ஜடை இழுத்துவிட்டு , திருடன் போலீசெல்லாம் ஆடிக்கொண்டிருக்கும் சுழியன்கள் எல்லாம் பஜனையும் பழமுமாகத் திரியும் மாலைப் பொழுது இந்த கொலு காலங்களில் அமையும்.

சபரிமலைக்குப் போகும் ஐயப்பமார்களின் வீட்டில் மெய்யுருகப் பாடின பழக்கத்தில் கொலுவீடுகளுக்குப் போனால், அதத் தொடாதே இதைத் தொடாதே என்று எச்சரிக்கை கொடுத்தே எரிச்சல் கிளப்புவார்கள்.
எங்கள் வளவில் தங்கமீனா வீடு கொஞ்சம் வசதியானது. அவள் ஆச்சியும் நமக்கொரு கதைசொல்லி. உழுந்து திருக்கையை சுத்திக்கொண்டே வேதாளக்கதைசொல்லி விடுகதை போட்டு உடைப்பாள்.

தங்கமீனா வீட்டில் கொலு வைத்திருந்த காலத்தில், பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவள் வீடே கதியாகக் கிடப்பது. மரப்பாச்சி, களிமண் பொம்மைகளை எல்லாம் கொலுப்படியில் வெள்ளைத்துணி போட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பூ, பழமெல்லாம் போட்டு முடித்து பாட்டுப்பாடி, முடித்ததும் சக்கரைப்பொங்கலும், பூம்பருப்பும் பிரசாதமெனக் கொடுப்பார்கள். இங்கே பூசைமுடிந்ததும் பக்கத்துவீட்டுக்கு ஓடும் சிறார் கூட்டம்.  அங்கே முடித்து அடுத்து...பிறகு அடுத்தடுத்து. வீட்டுப்பாடமெல்லாம் பிறகுதான்.

ரிமோர்ட் காரின் மோட்டாரை உடைத்து, சிகரெட் அட்டையில் செய்த காத்தாடியை கணபதி சிலையில் தலைக்குப் பின்னால் ஒட்டிச் சுழல விட்ட என் விஞ்ஞான அறிவை மெச்சி எனக்கு மட்டும் எக்ஸ்ட்ரா சுண்டல் கொடுத்ததால் தங்கமீனா வீட்டுக்கு மட்டுமே போவது என் வழக்கமாக இருந்தது.

"பொட்டு வைக்கிறது தொடங்கி பூம்பருப்பு கொடுக்குறது வரைக்கும் அடுத்தவீட்டுக்கு வேலை செய்றான் நம்ம வீட்டுல ஒரு கண்மை டப்பாவக்குட அசைச்சுக் கொடுக்கமாட்டேன்" என்று திட்டுகள் விழும். அதெற்கெல்லாம் யார் அசைந்து கொடுத்தார்..

அம்மாவுக்கு கொலு வைப்பதென்றால் கொள்ளைப் பிரியம். அவ்வளவு பொம்மைகள் உண்டு வீட்டில்.  அட்சரம் திருத்தமாக அவள் அடுக்கி வைக்கும் கொலுவுக்கும், வாசல் கோலத்துக்கும் ஊர்ப்பட்ட ரசிகக்கூட்டம் உண்டு. வருசாவருசம் கொலு போட்டோக்களை ஆல்பம் போடுமளவுக்கு பெரிய பணக்காரியாகத்தான் வாழ்ந்திருந்தாள் ஹஹ..

அப்பாவுக்குப் பிறகான காலத்தில்சமாதானபுரம் போகும் போதெல்லாம் வெள்ளைமாவு பொம்மைகள் மட்டும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவ்வளவுதான். சொத்து சேர்ப்பதுபோல பொம்மைகள் சேர்த்தாள். இப்போது அதெல்லாம் பெட்டிகளுக்குள் தூங்கிக் கொண்டிருக்கலாம். எனக்குத் தெரிந்து இப்போதைக்கு பழைய நினைப்புகளை தூசி தட்டி கொலுவாக அடுக்கிக் கொண்டிருப்பாள் என்றே தோன்றுகிறது. இப்போது என்ன நான் என்ன சிந்திக்கிறேன் என்றால் தங்கமீனா என்று Facebookல் தேடிப்பார்க்கலாமா வேண்டாமா வேண்டாமா என்றுதான்.

-கார்த்திக்.புகழேந்தி
13:10:2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil