Posts

Showing posts from May, 2017

கோடை விடுமுறையும் கையெறி குண்டுகளும்

     ஆதம்பாக்கம் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனைக் காட்டி, “புகழ் அந்தப் பெடியன பாருங்களேன்” என்றார் அகரமுதல்வன். அவர் சொல்லுகிற பெடியன் என்கிற அந்தச் சொல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிறுவன் அவன்பாட்டுக்கு மண்ணையோ கல்லையோ வைத்து தனியாளாக விளையாடிக் கொண்டிருந்தான். விழுகிற வெயிலெல்லாம் அவன் தலைமேலே மின்னிக் கொண்டிருந்தது. நானும் சின்ன வயசில் கோடை விடுமுறை விடுகிற காலத்தில் இதேமாதிரி தண்ணியைக் காணாத கழுதைபோல ஊரைச் சுற்றிக் கொண்டு, விளையாடித் திரிவேன். என்ன ஒன்று என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பெங்கூட்டம் நிழல்வட்டம் போட்டபடி இருக்கும். கையில் கிடைத்தது, எடுத்தது என்று என்னத்தையாவது உருட்டி விளையாடிக் கொண்டிருப்போம். கொஞ்சம் வசதி உள்ள வீட்டான்கள் எல்லாம் கிரிக்கெட்டு, பேங்க்கும், வெள்ளைக்காரன் சீட்டு விளையாட்டுகளும் ஆடிக் கொண்டிருக்க, வீதி விளையாட்டுகளில் இப்போ என்ன சீசன் என்று நிர்ணயிக்கிற தார்மீகவாதிகளாக நாங்கள் இருப்போம். எங்கள் தெருவில் எந்த விளையாட்டைக் கையில் எடுக்கிறோமோ அதுதான் பக்கத்துத்தெருக்களில் சீசனாக அமையும். பம்பரம், கோலிக்காய், சீட்டட்டை, செதுக்காங்க