Tuesday, 19 September 2017

கி.ரா- 95 | கி ரா என்றொரு கீதாரி - தொகுப்பு : கழனியூரன்நானிலமாக இருந்த தமிழ் நிலம் பின்வந்த இலக்கியங்களினால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு விலங்குகள், பறவைகள்.
சரி, இந்த ஐந்தில் கரிசல் எங்கே வருகிறது. காணவே காணோம். கரிசல் மட்டுமில்லை உட்கார்ந்து தடவினால் இன்னும் பல புதிய நிலத் திணைகள் அண்மைய கால வரலாற்றில் நம்மால் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதை எல்லாம் நாம் கண்ணைமூடிக்கொண்டு கடந்து போய்விட முடியாது. அங்கே ஒரு தனித்த வாழ்க்கை இருக்கிறது. வேறெங்கும் நிலவாத தட்பவெட்பம் சுடுகிறது. மழைக்குப் பிறகு வண்டிமை போல களிம்பாக வழுக்கும் தனித்த நிலம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே ஒரு வாய்மொழி நீண்டு நிலைத்திருக்கிறது.
இந்த வாய்மொழிகளை, ஆவணங்களை, நிலக்காட்சிகளை, வாழ்க்கையை, மனிதர்களை தன் எழுத்தில் பதிந்தவர் கி.ராஜநாராயணன். அவர் தெற்கத்தி கரிசல் நிலத்தில் செய்த எழுத்து வேலைகளில் பாதியை உலகின் வேறெந்த திசையில் வாழ்கிற அல்லது வாழ்ந்த வேறெந்த படைப்பாளியாவது தொடர்ந்து தன் தொன்னூற்றைந்து வயது வரை செய்து வந்தார் என்றால் அவருக்கான புகழ்வெளிச்சத்தின் தராதரமே வேறு.
கி.ரா இத்தகைய பொதுப் பாராட்டுகளுக்காக இயங்குகிறவரில்லை. அவரை இயக்கும் ஆன்மா அவருடைய எழுத்து. அவர் தூக்கிச் சுமக்கும் நியாபகத்தின் ஒருபக்கம் தான் கரிசலுடையது. ஒட்டுமொத்த இந்திய கிராமங்களின் நினைவு வலை அவர். கூகுளில் நீங்கள் தரவிறக்க முடியாத பல தரவுகளை அவர் எழுத்தில் தந்திருக்கிறார்.
அவரது 95ஆண்டு பயணத்தை மனத்தில் வைத்து, தமிழ் இலக்கியத்தில் தங்களை அர்பணித்துச் செயல்படும் எழுத்தாளுமைகள், கி.ரா அன்பர்கள், வாசகர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு விழா எடுத்ததை அறிவோம். அதிலும் குறிப்பாக கி.ராவின் அத்யந்த சீடனாகவிருந்த எழுத்தாளர் கழனியூரன், கி.ரா பற்றி இத்தனை ஆண்டுகளில் பலரும் எழுதின முக்கியமான கட்டுரைகளைத் தொகுத்துக் கொண்டுவரச் செய்த நூல் தான் “கி.ரா என்றொரு கீதாரி”
இந்த நூலில் எழுத்தாளர்கள், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், கவிக்கோ. அப்துல் ரகுமான், ஜோ டி’குருஸ், கே. எஸ்.இராதாகிருஷ்ணன், தீப.நடராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பா.செயப்பிரகாசம், க.பஞ்சாங்கம், அரங்க. மு.முருகையன், முருகபூபதி, தேவ மைந்தன், பாவண்ணன், அர.சீனிவாசன், பிரபஞ்சமித்ரன், கி.ரா.குறிஞ்சிவேலன், இராச.திருமாவளவன், சே.திருநாவுக்கரசு, தேவி கிரிசன், ஆகாசம்பட்டு ஷேசாலம், திரைப்பட நடிகர். சிவக்குமார். திரைப்பட நடிகர். சார்லி, தெலுங்கு எழுத்தாளர். ருத்ர துளசிதாஸ், நண்பர். புதுவை. இளவேனில், கார்த்திக் புகழேந்தி, மற்றும் கழனியூரன் ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
கழனியூரன் சொல்வதே போல், இவை இந்நூலுக்காகக் கேட்டு வாங்கித் தொகுத்த கட்டுரைகள் அல்ல. அவர்களாகவே பல்வேறு காலக்கட்டங்களில் கி.ரா குறித்து எழுதின கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து கொண்டு வந்த தொகுப்பு. தள்ளிப் பழுத்ததைவிட தானாய் பழுக்கும் பழங்களுக்கு ருசி அதிகம் என்பார்கள். ஆகவே தன்பழமாக இந்த கிரா என்ற கீதாரி நூல் இருக்கும்.

-ஜீவா படைப்பகம்.
19-09-2017
நூல் இரு இயல்களாக வெளியிடப்பட்டுள்ளது.
இரு இயல்களின் விலை: 300/- (160+140)

Saturday, 13 May 2017

கோடை விடுமுறையும் கையெறி குண்டுகளும்

    ஆதம்பாக்கம் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனைக் காட்டி, “புகழ் அந்தப் பெடியன பாருங்களேன்” என்றார் அகரமுதல்வன். அவர் சொல்லுகிற பெடியன் என்கிற அந்தச் சொல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிறுவன் அவன்பாட்டுக்கு மண்ணையோ கல்லையோ வைத்து தனியாளாக விளையாடிக் கொண்டிருந்தான். விழுகிற வெயிலெல்லாம் அவன் தலைமேலே மின்னிக் கொண்டிருந்தது.

நானும் சின்ன வயசில் கோடை விடுமுறை விடுகிற காலத்தில் இதேமாதிரி தண்ணியைக் காணாத கழுதைபோல ஊரைச் சுற்றிக் கொண்டு, விளையாடித் திரிவேன். என்ன ஒன்று என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பெங்கூட்டம் நிழல்வட்டம் போட்டபடி இருக்கும். கையில் கிடைத்தது, எடுத்தது என்று என்னத்தையாவது உருட்டி விளையாடிக் கொண்டிருப்போம்.

கொஞ்சம் வசதி உள்ள வீட்டான்கள் எல்லாம் கிரிக்கெட்டு, பேங்க்கும், வெள்ளைக்காரன் சீட்டு விளையாட்டுகளும் ஆடிக் கொண்டிருக்க, வீதி விளையாட்டுகளில் இப்போ என்ன சீசன் என்று நிர்ணயிக்கிற தார்மீகவாதிகளாக நாங்கள் இருப்போம். எங்கள் தெருவில் எந்த விளையாட்டைக் கையில் எடுக்கிறோமோ அதுதான் பக்கத்துத்தெருக்களில் சீசனாக அமையும்.

பம்பரம், கோலிக்காய், சீட்டட்டை, செதுக்காங்கல், எறிபந்து, தாண்டு, மரமேறிக்குரங்கு, டயர் வட்டு, மீன்வெட்டு, கக்கப்போர், புறா தூண்டி, வயல் அட்டை, தீப்பெட்டி வண்டி என்று சின்னதும் பெருசுமாக ஏகப்பட்டதை விளையாடிச் சலித்து கடைசியாக வினையை இழுக்கிறமாதிரி எதையாவது பண்ணியிருப்போம். ஊரேசேர்ந்து அத்தனை நாள் வஞ்சத்தையும் எங்கள் மீது தீர்க்கிற நாளாக அது இருக்கும். பிறகு பள்ளிக்கூடம் திறக்கிறவரை ஒருத்தனையும் தெருவிலே பார்க்க முடியாது. இழுத்து கதவைச் சாத்தி வீட்டுக்குள் அடைத்துவிடுவார்கள்.

இப்படி கோடை காலத்தில் திடல் பக்கம் எங்காவது விளையாடிக் கொண்டிருக்கும்போது, தூரமாக அம்மையோ, அக்காளோ வருகிறமாதிரி லேசாக சாயல் தெரிந்தால் போதும் தலைத்தெறிக்க ஓடிப்போய் கோயில் பக்கமுள்ள சந்தில் ஒழிந்துகொள்வேன். காட்டிக் கொடுப்பவன் ஒருத்தனும் நம் சேர்க்கையில் இல்லாவிட்டாலும், அவன்கள் முழிக்கிற முழியிலே அம்மா கண்டுபிடித்துவிடும் நான் பக்கத்தில்தான் எங்கோ ஒளிந்திருக்கிறேன் என்பதை...

 "அடிக்கிற வெயிலெல்லாம் உங்க மேலதாம்டா. கார்த்திய பார்த்தா சாப்புட வரச் சொன்னேன்னு சொல்லுங்க” என்று திட்டிவிட்டுப் போகும் அம்மை.

சரியாக அவர் தலை தெருமுனையில் மறையும்போது வேண்டுமென்றே கத்துவான்கள், “எல கார்த்தி உங்கம்மா போயிருச்சி, வெளில வா” என்று. அந்தச் சத்தம் தெருவுக்கே கேட்டிருக்கும். பிறகென்ன வீட்டுக்கு வந்ததும், ஆள் தனியாக அடாவடித்தனம் தனியாக அடி பிரித்து எடுக்கப்பட்டுவிடும். சுரணையே இல்லாமல் மறுநாளைக்கும் அதே பழைய குருடி கதவ திறடி கதைதான்.

இப்படி விழுப்புண்களாக வாங்கிச் சேர்த்த பால்யத்தில் சோடாமூடி மெழுகுவர்த்தியில் நெருப்பு பந்து எரியவிடுவதில் ஆரம்பித்து, கூட்டுறவு உரப் பண்ணை காம்பவுண்டுக்குள் ஏறிக் குதித்து, உர உப்பை அள்ளிவந்து கட்டுவெடி செய்வது வரை எங்களுடைய வில்ளையாட்டுகளில் பெரும்பாலானவை கிரிமினல் வேலைகளாக இருந்தன. 

செய்திகளில் எல்லாம் சொல்வார்களே! பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் எல்லாம் மூளையாகச் செயல்பட்டார், மூளையாகச் செயல்பட்டார்ன்னு சொல்வார்களே. அந்தமாதிரி எங்கள் கூட்டத்தின் கொட்டங்களில் எல்லாம் என்னுடைய கெமிக்கல் மூளையின் பங்களிப்ப அதிகம் இருந்தது.

அம்மோனியம், பொட்டாசியம், பாஸ்பேட், சல்பர், கால்சியம் என்கிற வேதியியல் பெயரெல்லாம் அப்போது யாருக்குத் தெரியும். எங்களைப் பொருத்தவரை எல்லாமே வெடி உப்பு, கரிமருந்து, சுண்ணாம்புக் கல், கந்தகப் பொடி, அலுமினியப் பொடி, உர உப்பு அவ்வளவுதான்.

காட்டுப் பொத்தையிலும், கல்வெட்டாங்குழியிலும் வெடி வைக்கிற விதங்களை வேடிக்கை பார்த்து ஜெலட்டின் குச்சிகளும், டைனமைட்களும்,  பார்வைக்குப் பழகியிருந்தது. அதன் தொழில்நுட்ப மாயங்களை ஏறக்குறைய கேள்வி ஞானத்தோடு தெரிந்து கொண்டு வெடி தயாரிக்கும் விளையாட்டை முதல்தடவை தெருவுக்குள் புகுத்தினோம். 

தேவநல்லூர் யானை வெடிகளுக்கு எங்கள் ஊரில் சரமாரியான கிராக்கி உண்டு. சாவுச் சத்தம் என்றால் அதில் வாடிப்பட்டி கொட்டுக்கும், தேவநல்லூர் வேட்டுக்கும் நிச்சயம் இடம் இருக்கும். அப்போதுதான் அது நல்லசாவு. திரி கிள்ளி பற்ற வைத்துவிட்டால், முதல் மூணு நாலு வினாடிக்கு தீக்கங்குகளை பெருமூச்சு மாதிரி இரைத்துவிட்டு “மட்ட்டார்” என்று கிளப்பும். சத்தம் சும்மா நாலு தெரு சனங்களையும் கூப்பிட்டு வைத்து, “காது சவ்வு எப்படி இருக்கு பங்காளி” என்று சுகம் விசாரிக்கும். 


அந்த யானை வெடியை நாங்கள் பெடியன்களாகச் சேர்ந்து கைக்காசு போட்டு வாங்குவோம். அப்போது ஒரு வெடி முப்பத்தைந்து பைசாவுக்கு விற்கும். பச்சை, சிவப்பு, நீலம் என்று தனித்தனிக் கலர் பேப்பர் சுற்றின யானை வெடியை கட்டு பிரித்து மருந்தை வெளியில் எடுப்போம். பிறகு, ஏரியாவில் சின்னச் சின்னதாய் நொருங்கிக் கிடக்கும் கரடுமுரடான கூழாங்கல்லை (சீனிக்கல்) மண்ணும் ஈரமும் இல்லாமல் பிறக்கி வைத்துக் கொள்வோம். 


கூடவே, பழைய சருகத்தாள், கிழிந்த சாரத்துணி, நூல்கண்டு இதெல்லாம் தேவையான பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டு சுற்றி அமர்வோம். இப்போ உள்ளங்கையளவு சதுரமாகக் கத்தரித்த சருகத்தாளில், பத்து சீனிக்கல்லையும், கொஞ்சம்போல வெடி மருந்தையும், போட்டு திருக்கி, சாரத்துணியால் சுற்றுவோம். மேலே நூல்கண்டைக் கொண்டு அசைவே இல்லாமல் ஒரு ‘டைட்’ ஏற்றி கட்டினால் கல்குண்டு ரெடி.


உருட்டி உருட்டி எறிந்தால் வெடிக்கிற சத்தத்துக்கு சும்மா கல்சுவரே குழி விழுந்து விடும்.


வேறு ஒரு ரகம் இருக்கிறது, கொஞ்சம் பரூம் கூழாங்கல்லோடு, பீங்கானும், களிமண் உருண்டையும், பிளேடும் போட்டு இறுக்கவேண்டும். திருவிழாச் சண்டைக்கு தோதான குண்டு. வெக்கை நாவலில் பூமணி எழுதியிருப்பார். கதை ஆரம்பத்தில் ஒரு கொலையைச் செய்துவிடுகிற நாயகன் கடைசிவரை கரிசல் காட்டில் இந்தக் குண்டுகளைத் தூக்கிக்கொண்டே திரிவான். நாங்கள் அவ்வளவு ரிஸ்க் (!) எடுக்காவிட்டாலும் இழுத்ததெல்லாம் வினைகள் தான். பள்ளிக்கூடம் திறக்க இன்னும் நான்கு நாள்தான் இருந்தது.


சேக்காளிகள் மூன்றுபேராகச் சேர்ந்து பத்து கல்குண்டுகளை ரைஸ்மில்லின் பின்பக்கச் சுவர் மேலே எறிந்து விளையாடப் போக, மொத்த காரைச் சுவரும் பொத்தல் போட்டுவிட்டது. அன்றைக்கு வாங்கின சாமக்கொடைதான். ஜென்மத்துக்கும் மறக்காது. இந்த வேலைக்கெல்லாம் இயங்கும் மூளை சல்பர் ஆக்ஸைடுக்கும் ,சல்பாரிக் அமிலத்துக்கும் குறியீடு என்ன என்று வேதியியல் வாத்தியார் கேட்டால் கவுந்ந்தடித்துப் படுத்துக்கொள்ளும் என்பதுதான் ஆகப்பெரிய காமெடி. 


சீனியையும், வர மண்ணையும் சோடா உப்பில் கலந்து, கொஞ்சம் வெள்ளை மண்ணெண்ணையைச் சுத்தி ஊற்றிப் பத்தவைத்தால் பாம்பு மாதிரி சாம்பல் பொங்கி எழும். சால்ட்பீட்டரை (கன் பவுடர்) பி.வி.சி பைப்புக்குள் இறுக அறைந்து நாலு சுண்ணாம்புக் கல்லை கலந்துபோட்டு, தேங்காய் நாரால் அடைப்பை மூடி பற்றவைத்தால் ஒரு பாறாங்கல்லையே பிளக்கக் கூடிய வெடிப்பை நிகழ்த்தமுடியும் என்றெல்லாம் புரிபட்ட இந்த “பிஞ்சு மனசு”க்கு KNO3 தான் பொட்டாசியம் நைட்ரேட் என நியாபகத்திலே நிற்காதது ஏனென்று தெரியவேயில்லை. 


ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், லீவு காலத்தில் செய்யும் இந்த பயங்கரவாத சாகசங்களை எல்லாம் எப்படா பள்ளிக்கூடச் சகாக்களிடம் போய் சொல்லி, செய்துக் காட்டுவோம் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கமாய் இருக்கும். ஆனால், பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு என்னும்போது உண்ண உறங்க வாய்வார்த்தை இல்லாமல் மனசு நிம்மதி இல்லாமல் அலையும்.. அதுக்குள்ள ரெண்டுமாசம் முடிஞ்சிருச்சா என்று!


ச்சை.. என்ன மானங்கெட்ட மனசோ...!

-கார்த்திக் புகழேந்தி

13-05-2017Wednesday, 26 April 2017

ஆடு வளர்ப்பு

     வெள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக் கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையது .


Related image
எட்டு பத்து வயசில் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலே என் பூரணப் பொழுதும் கழிந்துக் கிடந்தது. கிடை போட்டிருக்கிற வயல்களிலும், ஆற்றங்கரை திறந்த வெளிகளிலும் ஆடுகளை பத்திக்கொண்டு போகிற சேக்காளிகளோடு சுற்றித்திரிந்து, மரமேறிக் குரங்கு விளையாட்டு ஆடி, ஆட்டுக்கு கிளை ஒடித்துப் போட்டு, தூக்குப் போணியில் மோர்க்கஞ்சி குடித்து, ஆடுபுலி ஆட்டம் ஆடி, ஆலமர நிழலடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து வீடுவந்து சேருவது தனிவேலை.
வெள்ளாட்டுப் பெட்டைகளும், கிடாய்களும் செம்மறிகளும் தான் உள்ளூரில் அதிகம் வளர்க்கப்படும். முதல் தடவை நான் ஆத்தூரில் பிரசவம் பார்த்த பெட்டை ஆட்டு மூன்று குட்டிகள். மூன்றில் ரெண்டு கிடாய்.தலையீத்துக் குட்டியே வெள்ளையில்லாத கருங்கிடாய்கள் என்பதால் அந்த ஆத்தூர் ஆச்சிக்கு மனசு பொங்குமுகமாகிவிட்டது. ‘கருங்கிடாய் பிறந்தால் கையிலே காசு’ என்பாள் எங்களூர் கோமு ஆச்சி.
சந்தைக்குப் போய் நல்ல உரமுள்ள ஆட்டை, குணம், கழுத்து மெலிவு, உடம்பு நீளம், வயித்துப் பெருக்கம், ஆறுமாசத்து கணம் எல்லாம் பார்த்து பார்த்து வாங்கவும், விற்கவும் தெரிந்தவள் கோமு ஆச்சி.மாடுகளைப்போல ஆடுகளையும் பல்லைப் பிடித்துப் பார்த்து வாங்குவாள். கேட்டால், ‘முத்தின ஆட்டுக்கு பல்லு பெலம் இருக்காது. பல்லு பெலம் இல்லன்னா எங்கனக்கூடி எர திங்கும். தண்ணியத் தண்ணியக் குடிச்சி மெலிஞ்சித்தான் போகும். அதவச்சி காலந்தள்ளவா முடியும் என்பாள்.
அதுமட்டுமில்லை எத்தனை குட்டிகள் ஈனின ஆடு இது, தாய் வனப்பு எப்படி என்று மடிபார்த்தே கணக்குச் சொல்லுவாள். அதுக்குப் பிறக்கும் குட்டிகளை முடிந்த மட்டும் வெளியாள்களுக்குக் கொடுக்காமல் பேணிப் பேணி வளர்ப்பாள். ஆச்சிவீட்டு முத்தம் ஒரு மைதானம் அளவுக்குப் பெரியது. விளக்குத்தூண் மாதிரி முத்தத்தின் நடுவில் ஒரு கல் நட்டிருக்கும். ரொம்பக் காலங்களுக்கு முன்னால் அந்தக் கல் மீதுதான் ராத்திரி வெளிச்சத்துக்கு சிம்ளி வைத்து விளக்கு ஏரியவிடுவார்கள்.
ஊறல் எடுக்கிற பெட்டையும், கிடாய்களும், குட்டிகளும் அந்தக் கல்தூணைச் சுற்றிச் சுற்றி வந்து உடம்பு சொரிந்துக்கொண்டு புழுக்கை போட்டுத் தள்ளும். ஆச்சி சொந்தமாக ஆடுவைத்திருந்தது மட்டுமில்லாமல், வாரத்துக்கும் ஆடுகள் வளர்த்துக் கொடுத்து, கைக்காசு சேர்த்து வட்டிவாசிக்கும் விட்டுக் கொண்டிருந்தது.
எங்களூர் உய்க்காட்டு சுடலை கோயிலுக்குக் கொடை எடுக்கிற காலங்களில் ஆச்சிவீட்டுக் கிடாய்களுக்கு ரொம்பப் பெரிய கிராக்கி இருக்கும். உள்ளூர் ஆட்கள் ஒன்று சிவந்திப்பட்டி மலையாடுகளைத் தேடிப் போவார்கள் அல்லது நேரே ஆச்சிவீட்டுக்கே வந்து, கருங்கிடாய் ஒன்றை கழுத்துத் துண்டைப் போட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டுவந்து போவார்கள். கொடை நடக்கும் ராத்திரியில் நாலு காலையும் இழுந்து நெஞ்சாங்குழி அறுத்து ஈரக்குலை உருவி, சாமியாடுகிற சாமக்கொடைகளையும், மறுநாள் அடுப்பில் வெந்து தணிகிற கறிச்சோற்றையும் தின்று வளர்ந்த ஊர்க்காரப் பயகள் தானே நாங்கள்.
ஆடுகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறது மாதிரி காலம்பார்த்து கழிக்கிறதுக்கும் தனி அறிவு வேணும். அதுவும் கிடாய்களை இந்தமாதிரி சாமி காரியங்களில் குறை நிறை இல்லாமல் சமயம் பார்த்துக் கழிக்கவேண்டும். கழிப்பு ஆடுகளைக் கவனித்து, இளங்குட்டிகளை மேய்த்து பராமரித்து வளர்க்கிறவேலை எல்லாம் லேசுப்பட்டதில்லை.
கிடாய்களுக்கு வெடிப்பு பருவத்தில் முடை அடிக்கவேண்டும். மேய்ச்சலில் என்னத்தையாவது விசக்காய் தின்று நெரித்துக்கொண்டால் நாக்குக்கடியில் கீறி விடவேணும், பாம்பு கொத்தின ஆடுகளுக்கும், பின்னுறுப்பில் ஈ புகுந்து காயம்பண்ணின ஆடுகளுக்கும் மருந்து மாயம் பார்த்துக் காப்பாற்றவேண்டும். காரணம் புரியும் முன்பே, ஊளைமூக்கு வடித்து கொத்துக் கொத்தாய் ஆடுகளை இழந்த குடும்பங்கள் கரிசக்காட்டில் உண்டு.
செலை கடித்தது, முடையடிப்பது பற்றிச் சொன்னேனில்லையா! அதைப் பற்றி நண்பன் அரசன் ‘இண்டமுள்ளு’ அற்புதமாய் ஒரு கதை எழுதியிருப்பார். விசயத்தை கையில் உருட்டிக் கொடுக்கிறமாதிரி கதைகள். இப்போதெல்லாம் அம்பது ரூபாய் கொடுத்தால் கால்நடை ஆஸ்பத்திரிகளிலே முடையடித்து விடுகிறார்கள். அன்றைக்கெல்லாம் தாதனூத்து கிழவர் வீட்டுக்குத்தான் பொலியும் கிடாய்களை பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு சைக்கிளில் போவோம்.
பொழுதன்னைக்கும் பெட்டைகள் பின்னாலே இப்படித் திரிந்து தொந்தரவு பண்ணுகிற இந்தமாதிரி ஆடுகளின் ஊண் நாளாக நாளாக மதமதப்பாகிவிடும். தின்ன முடியாமல் நாற்றமெடுத்துவிடும். அதற்காக இப்படி ஒரு வழக்கம். தாதனூத்து ஆச்சாரி நல்ல கருக்கில்லாத பனமட்டைக்கு நடுவிலே ’அதை’வைத்து ஒரு இறுக்கு இறுக்கி விடுவார். ஒருவாரத்தில் வலி தீர்ந்தபிறகு கிடாய் சுத்த சாமியார் ஆகிவிடும்.
இந்த கிடாய்கள் மாதிரியே வெள்ளாட்டு பெட்டைகளும் பிறந்த ஒரு வருசத்துக்குள் எல்லாம் இனவிருத்திக்குத் தயாராகிவிடும். செம்மறிகள் கொஞ்சம் பின்தங்கி நாலஞ்சு மாசம் கழித்துத்தான் ஒதுங்கி நிற்கும். வயசுவந்த பிறகு ஆறு வருசம் வரைக்கும் குட்டி ஈனுகிற காலம். அதனாலே ஒண்ணு முதல் ஒண்ணரை வயசுக்குள் எல்லாம் ஆடுகளை மாற்றி வாங்கிக் கொள்ளவேண்டும்.
பண்ணை வளர்ப்புக்கும் பாச வளர்ப்புக்கும் இதுதான் வித்யாசம். பிள்ளைக்குப் பிள்ளையாய் ஆடு வளர்த்து அவசரத்துக்குக் கைமாற்றிவிட்டு கலங்குகிற சனங்களைக் கரிசல் காடு முழுக்கக் காணலாம். இப்போது பண்ணைகள் வளர்ப்புகள் பெருகிவிட்டது. வயது மூத்த ஆடுகள் இனவிருத்திக்கு தேறாது என்பதால் பண்ணைக்காரர்கள் அவற்றை மட்டும் கழித்து, குட்டிகளை மாய்ந்து மாய்ந்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அதுதவிர சிவப்பு கருப்பில் நிறம் மாறிப் பிறக்கும் குட்டிகள், தாடை ஒட்டாமல் பிறந்த குட்டிகள், கால் உரசும் குட்டிகள், விலா குறுகி, மடி அமைப்பு இல்லாத பெட்டைகள், வெட்டும் பல் இல்லாத, உடம்பு நெழிவுகளோடு பிறக்கும் குட்டிகளை எல்லாம் மட்ட விலையில் கழித்து வாங்கிக் கொள்கிறார்கள்.
அண்ணன் ஒருத்தர் வல்லநாட்டில் ஆட்டுப் பண்ணை வைத்திருக்கிறார்.கறிச்சந்தைக்கு விற்கும்போது வெள்ளாடுகளின் எடையைக் கூட்டிக்காட்ட, மரத்தீவனம் கொடுப்பது, புண்ணாக்கை கட்டியாகக் கரைத்து வாய்வழியாக ஊட்டம் கொடுப்பது, போன்ற வியாபாரிகள் செய்கிற தில்லாலங்கடிகலை அங்குள்ள வேளையாட்கள் வாய் ஓயாமல் சொல்வார்.
ஆட்டு கறிக்கு மட்டும் இல்லை தோலுக்கும் கிராக்கி உண்டு தான். பாளையங்கோட்டை செந்தில்நகருக்கு கிழக்கே, செந்தில்வேல் தியேட்டருக்குப் பக்கத்தில் ஆட்டுத் தோல் ஏலச்சந்தை இருக்கிறது. செம்மறி, வெள்ளாட்டுத் தோல்களை உப்புத்தடவி ஏலம் விட்டுக் கொண்டிருப்பார்கள். காலையில் வெள்ளனே ஆரம்பித்து பதினோரு மணிக்கெல்லாம் அடங்கிப் போகும் அந்த வியாபாரத்தை தெருக்காரப் பயல்களாக வேடிக்கைப் பார்க்கப் போவோம். தோல் சந்தையில் பேட்டை, மேலப்பாளையம் சாயிபுமார்கள் கையே எப்போதும் ஓங்கியிருக்கும்.
ஆத்தூரில் ஒரு நிறைமாத ஆட்டுக்கு பிரசவம் பார்த்த விஷயத்தைச் சொன்னேனில்லையா. இதே மாதிரி எழுத்தாளர் கழனியூரன் ஒரு சம்பவம் சொன்னார். நிறைமாதம் முடிந்து குட்டி ஈனப் போகிற நேரத்தில், நஞ்சுக்கொடி வாய்க்குள் சிக்கினதோ, இல்லை ஆடு எதையோ கடித்துத் தின்றதோ தெரியவில்லை. வயிற்றுக்குள்ளாகவே குட்டி இறந்துபோய்விட்டது. தாயையாவது காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடையாக இறந்த குட்டியை வெளியே கொண்டு வரவேண்டும். உள்ளூர் கால்நடை மருத்துவரை வரச் செய்து, வயிற்றுக்குள்ளிருந்து பிறக்காத குட்டியை துண்டம் பண்ணி வெளியே எடுத்து தாயைக் காப்பாற்றினதை அப்படியே விவரித்தார்.
சென்னையில் உள்ள அக்காள் ஒருத்தர் சிறுதொழிலாக ‘வாரத்துக்கு ஆடு வாங்கி வளர்க்கட்டுமா?’ என்றார். வாரம் என்பது நீங்கள் முதலீட்டாளர். வளர்ப்பு வேறு ஒருத்தர் பொறுப்பில் இருக்கும். முதல் ஈற்றுக் குட்டியில் அவருக்கு பங்கு அல்லது விற்பனை பணம் கொடுக்கணும். பிறகு போட்ட காசுக்கு வஞ்சனை இல்லாமல் ஆடுவளர்ப்பில் காசெடுக்கலாம். வளர்ப்பவர் நம்பிக்கையான ஆளாக இருக்கணும்.
இங்கே சென்னையில் இருந்துகொண்டு ஊரில் ஆள் வைத்து வளர்க்கும் ரிஸ்க்கை எல்லாம் எடுக்காதீங்க என்று அவர் ராசி நட்சத்திரம் கேட்டு, வேறு ஒரு உபாயத்தை அவருக்குச் சொன்னேன். அது அவருக்குப் பொறுத்தமான தேர்வாகவும் இருப்பதாகச் சொன்னார்.கூடவே, உனக்கு ராசி நட்சத்திரத்தில் எல்லாம் நம்பிக்கை உண்டா என்று கேட்டுவிட்டார். வெளியே சொல்லிவிடாதீர்கள். அத்தனையும் அடிச்சுவிட்டது. சும்மா அது ஒரு வாய்ஜாலம். ஆனால் விஷயங்கள் வேறு. நான் கேட்டது உங்கள் மனநிலையைத் தெரிந்து கொள்வதற்கு என்றேன்.
“உன்னையெல்லாம் நம்பி...” என்று இழுத்தார். நான் சிரித்துக் கொண்டேன், அக்காள் அநேகமாக இந்நேரம் இயற்கை வேளாண்மை வழியில் விவசாயம் பண்ண ஆரம்பித்திருப்பார் என்று நினைக்கிறேன். 

-கார்த்திக்.புகழேந்தி
26-04-2017

Monday, 17 April 2017

கள்ளும் நறவும் தேறலும்..          ன்னன் என்கிற மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி, ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும், கூத்தர்களும் அடங்கிய கூட்டம் ஒன்று மேற்குமலைகள் வழியாகப் பிரயாணம் போகிறது. அவர்களை வழியில் சந்திக்கிற பரணர் என்கிற புலவர் நன்னன் இறந்த கதையைச் சொல்லி, “நீங்கள் பறம்புமலை அரசன் பாரிகிட்டே செல்லுங்கள். தன் படைகளால் மூவேந்தரையும் வெல்லக்கூடியவன் உங்கள் கலைக்கு முன்னே சரணடைவான். பெரும்வள்ளல் அவன். கூடவே, கபிலர் என்கிற அறிஞனையும் வைத்திருக்கிறார்” என்று வழிகாட்டுகிறார். ஆக, பாணரும் கூத்தரும் அடங்கிய கூட்டம் பாரியிடம் செல்கிறது. இது பெரும்பாணாற்றுப் படையில் மேல்ச்சுருக்கக் கதை.

கலை மக்களால் எடுத்து இயம்பப்பட்ட இந்தக் கதைப்பாடலுக்கு உள்ளே நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப நுணுக்கமாக நம்மை அந்தக் காலத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரியைப் பார்க்கப் போகும் பாணர்கூட்டம் வழியிலே சில வேளாளர்களைச் சந்திக்கிறது. ஏழுநாள் நடக்கும் தங்களுடைய கோயில் நிகழ்ச்சியில் நீங்கள் வந்து கலை நிகழ்த்தவேணும் என்று வேண்டுகிறார்கள் வேளாளர்கள். செல்வச் செழிப்புமிக்க அவர்கள் ஊருக்குள் நுழைந்தபோது பாணன் இப்படிச் சொல்கிறான் "இங்கே பெண்கள் யானைத் தந்தங்களை உலக்கையாக வைத்து நெல் குத்துகிறார்களைய்யா" என்று. ஒரு சொல்லில் அவர்கள் வாழ்வும் வளமும் பிடிபட்டுவிடுகிறது.  பேச வந்தது இந்த விஷயமல்ல.. அது வேறு சரக்கு.

வேளாளர் இல்லத்துக்கு வந்த பாணர்களுக்கு களைப்பாக இருப்பீர்கள் இந்தாருங்கள் என்று 'நறும்பிழி' என்ற கள்ளை கோப்பையில் ஊற்றிக் கொடுக்கிறார்கள் வேளாளர்கள். கோப்பையில் ஊற்றும்போதே நறும்பிழியின் வாசனையில் மயக்குறும் பாணன் அந்தக் கள் தயாரிக்கப்படும் வித்தையை வேளாளக் குடியானவன் ஒருத்தனிடம் கேட்கிறார். ரொம்ப ரகசியமாய் அவர்களுக்குள் பரிமாறப்படுகிறது கள் தயாரிக்கும் விதம்.

"நெல் அரிசியை நன்கு சமைத்து, உருண்டையாகப் பிடித்து, பெரிய வாயுள்ள பாத்திரத்தில் காயவைத்து காட்டு இலைகளையும், தாத்திரிப் பூவையும் சேர்த்துப் பிசைந்து, ராவும் பகலும் நீர்விட்டுப் பிசைந்து, கொஞ்சம் பனை வெல்லமும் சேர்த்து, மண்பானையில் ஊற்றி மூடிவைத்துவிடுவோம். இந்த ஊறலை பலகாலம் கழித்து, வேக வைத்த பனைநார் பெட்டியில் வடிகட்டி எடுத்தால் நறும்பிழி (கள்) தயாராகிவிடும்” என்கிறான் குடியானவன். வெல்லமும் அரிசியும் கலந்து சேர்த்துத் தயாரிக்கப்படும் 'நறும்பிழி'யை காஞ்சி, தொண்டை மண்டலத்து, கடற்கரையூர்காரர்கள் தான் தினுசு தினுசாய் தயாரித்து ருசி பார்த்திருக்கிறார்கள்.

நேரடியாக பனையில் கள் இறக்கும் வித்தையை நான்  கடற்கரையூரான ஆமந்துறையில் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள் தோட்டத்தில் களைவேலை செய்கிற அண்ணன் ஒருத்தரிடம் கேட்டுத் தெரிந்திருந்தேன். 'நுங்கும் பழமும் பூக்கிற பனையை  'பெண் பனை' என்றும், நீள நீளமாய் பாளை மட்டும் முளைக்கிற பனையை ஆண் பனை என்றும் பார்த்தவுடனே பிரித்தறிய முதலில் சொல்லிக் கொடுத்தார். பிறகு, இந்த ஆண் பனையில் தான் 'கள்ளு' தயாரிப்பதெல்லாம் என்று அதன் செயல்முறைகளையும் விவரித்தார்.

“ரெட்டையாய் கவட்டைமாதிரி நீட்டி நிற்கிற பனம் பாளையை லேசாக தண்டில் கிழித்து, நெருக்கிவைத்து ஒரு கட்டு கட்டி, பாளையின் நுனியை சாம்பாருக்கு கேரட்டை வட்டமாய் அரிந்து போடுகிறமாதிரி பத்து பதினைந்து வட்டம் அரிந்தபிறகு, அதை அப்படியே விட்டால் பாளையில் நீர் துளிர்த்துக்கொண்டு வெளிப்படும். அதை அப்படியே கலயத்தில் வழிகிறமாதிரி நுழைத்துவிட்டால், பானையின் அளவைப் பொருத்து கள் சுரப்பை அரைநாளைக்கு வடியவிடுவார்கள். இந்த மண் கலயத்தின் உள்பக்கமாக நல்ல சுண்ணாம்பை ஈயம் பூசுகிறமாதிரி தடவி விட்டால் கள்ளுக்குப் பதில் கிடைப்பது பதனீராகிவிடும். இந்த நேரடியான பனங்கள்ளைத்தான் 'பெண்ணைப் பிழி' என்கிறது சங்கப்பாடல்கள்.

சங்க இலக்கியத்திலும் வேறு பலவிதமான கள் தயாரிக்கும் விதங்களை இன்னும் நிறைய வாசிக்க முடிகிறது. அவற்றுக்குள் தேறல், நறவு, நறும்பிழி, கள்ளு என்று ஏகப்பட்ட வகையறாக்களும் உண்டு. காட்டுத்தேனை எடுத்து நல்ல பழுத்த, ஈரமில்லாத மூங்கில் தண்டுக்குள் ஊற்றி வைத்து, நிறைய நாள் காத்திருந்தால், கட்டியாக மாறிவிடும் தேன் பிசினை தண்ணீரோடு கரைத்துக் குடிப்பது தேக்கள் தேறல். இன்றைக்கு வழங்குகிற டொப்பி அரிசி மாதிரி தோப்பி என்கிற ரக அரிசியில் பனங்கருப்பட்டி சேர்க்காமல் தோப்பி கள் தயாரித்திருக்கிறார்கள்.

இதேப்போல 'நறவு' என்ற பூ சேர்த்து (இலவங்கம்) தாயாரிக்கப்பட்ட  கள் வகையறாவை  மதுரையில் வாழ்ந்த பெண்கள் குடித்ததாக சங்கப் பாடல் ஒன்றும் உண்டு. வைகை ஆற்றில் குளித்துக் கரையேறினதும் அடித்துச் சுருட்டும் குளிரைப் போக்கிக்கொள்ளவும், உடல்சூடு கூடவும் பெண்கள் நறவு அருந்தியிருக்கிறார்கள். குடிக்கும் முன்பு வெள்ளையாக இருந்த அவர்கள் கண்கள் நறவு குடித்தபிறகு நறவம் பூப்போலச் சிவந்ததாக (வெள்ளை நிறமுடைய லவங்கம் கருஞ்சிவப்பாக மாறிவிடும்) எழுதுகிறான்  புலவன் மாங்குடி மருதனார்.

இன்னுங் கொஞ்சம் காசுபணம் வட்டிவாசி உள்ள தமிழ்க்கூட்டங்கள் குங்குமப்பூ, இஞ்சி என்று வாசனாதி திரவியங்களைச் சேர்த்து, தங்கக் கோப்பையில் ஊற்றி ஊற்றி கள்ளை ரசித்துக் குடித்திருக்கிறார்கள். இதற்கு 'பூக்கமழ் தேறல்' என்று செல்லப் பேரும் உண்டாம். சரி அந்தக் காலத்தில் தொடுகறியாக (சைட் டிஷ்) என்னென்ன உட்கொண்டார்கள் என்று ஓர் அற்ப ஆசையோடு தேடினால், நல்ல மீன் குழம்பும், கருநாவல் பழமும், துடரிப்பழமும், மாம்பழமும், மறவர் எறிந்து கொண்ற எயிற்பன்றியின் கறியும் தான் பெரும்பாலானவர்களின் தேர்வாக இருந்திருக்கிறது. ஊறுகாய்க்கு முன்பே ஃப்ரூட் சாலடை டேஸ்ட் செய்திருக்கிறான் சங்கத் தமிழன்.

காலமாற்றத்தில் விதவிதமான போதைகள் குடிபுந்திருக்கிறது இந்நிலத்தில். மெல்ல மெல்ல தென்னையில் இருந்தும் கரும்பஞ் சாற்றில் இருந்தும் மரப்பட்டைகளில் இருந்தும் வேறுபிற ரசாயனமேற்றிய தானியங்களிலிருந்தும் சாராயம் வடிக்கப் பட்டிருக்கிறது. யவனர்கள் கொண்டு வந்த மதுக் கோப்பைகள் பழியாய் மயக்கியிருக்கிறது நம் மக்களை. ஆக குடித்தல் என்பது உடல் களைப்புக்கு என்கிற ஏற்பைத் தாண்டி சமூக சமநிலையைக் குலைத்து, கெட்ட ஆட்டம் போட ஆரம்பித்ததும் கள்ளுண்ணாமை நீதி நூல்களின் முக்கிய அதிகாரமாகியிருக்கிறது.

பாணனும் கூத்தனும் அருந்தியதில் மிச்சமிருக்கும் ரகமான 'பெண்ணைப் பிழியும்', மரங்களிலும், தானியங்களிலும், தேறல் வைத்துச் சமைக்கப்பட்ட கள்வகைகளுக்கும் இன்றைக்கு தடைசெய்யப்பட்டு புழக்கத்தில் இல்லாமலே ஆகிவிட்டது.  ஆனால் மதுப் பழக்கத்தை வைத்து காசு பார்த்துப் பழகின அரசுகள் தங்கள் சாராய விற்பனை நிலைப்பாட்டில் மட்டும் மிகத் தெளிவாக உள்ளன.

-கார்த்திக் புகழேந்தி
16-04-2017

Thursday, 6 April 2017

வேட்டையன்கள்     சிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.

சமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.

ஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் இந்த வேட்டைக்காரன்களுக்கு மானின் வாசனை முன்பாகவே காட்டப் பட்டுவிடும். பாலைவன மணலில் ட்ரக் புறப்பட்டு, வேகமெடுத்ததும் வேட்டை தொடங்குகிறது. இப்போது இரையை நோக்கித் துள்ளிச்சாடி ஒவ்வொரு வேட்டையன்களும் ட்ரக்கை விரட்டிக்கொண்டு பாய்வான்கள்.

அயல்நாட்டு வேட்டை இனங்களான ஹவுண்ட், மோதல், விப்பெட், இவற்றின் கலப்புகள் ஆகியவற்றோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னியும் பந்தயக் களத்தில் இருந்தது. சும்மா இல்லை… மைல் கணக்கில் வண்டி வேகமெடுத்துப் போய்க்கொண்டே இருக்க, கலப்புகள் பலவும் மானை கிட்டத்தில் கூட நெருங்கவில்லை. நம்ம தமிழ் கன்னி கிட்டத்தட்ட இருபது நிமிட சளைக்காத துரத்தலில் மானைக் கைப்பற்றி வெற்றியைப் பறித்தேவிட்டான்.

ஜீவ காருண்யம் பற்றிப் பேசுகிறவர்கள் தயவு செய்து மன்னித்துவிடுங்கள். இது வேட்டைச் சமூகத்தின் நெடுங்கால வாழ்வின் வெற்றி. வேட்டை இரையைக் கைப்பற்றி தன் வலிமையை நிரூபிக்கிற பேராண்மை. எங்கள் ஊரில் கன்னிவேட்டை என்ற கொடை நிகழ்வே இருக்கிறது. அய்யனார், சுடலை, முனியன் கோயில் சிற்பங்களில் குதிரைக்குப் பக்கத்தில் பாருங்கள். ஓர் ஊசிமூக்கன் வயிறு ஒட்டி, வில்லாய் வளைந்த உடம்பாக நின்றுகொண்டிருப்பான். அவன் தான் கன்னி.

இந்தக் கன்னி வகை நாய்க்குட்டிகளின் வளர்ப்பே ரொம்ப ஆக்ரோஷமானது. ராதாபுரத்தில் தாய்மாமன் ஒருத்தர் இருக்கிறார். அவர் வீட்டில் வேட்டை, காவல் என்று வகைக்குத் தனித்தனியாக எட்டுக்கும் மேல் சின்னது பெரியதென்று நாய்கள் வளர்க்கிறார். ஆடு வளர்ப்பு, வியாபாரம் தான் அவருக்குத் தொழில். காவலுக்காக ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்களையும், தேரியில் முயல், உடும்பு, காடை, கௌதாரிகளை அடிக்க இந்த வேட்டைக் காரன்களையும் வளர்க்கிறார். அவர்கிட்டே இருந்துதான் நான் “முயல்வேட்டை” நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது.

ராதாபுரத்து தேரிகளில், குளங்களில், நாகர்கோயில் திட்டுவிளை பொத்தை, புலிக்குகை, பாறையடிக் கெல்லாம் இந்த வேட்டையன்கள் புடைசூழ வேட்டைக்குப் போகிற, விளையாடவிடச் செல்கிற அனுபவங்களையும், நான் வளர்த்த கதிர் என்கிற பொடிப்பயலைப் பற்றியும் சுருங்கச்சொல்லி நாலுகால் ஜீவன்கள் என்கிற பேரில் ‘ஊருக்குச் செல்லும் வழி’ புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.

ஒருநேரத்தில் ‘நாய்கள் வாங்க அணுகவும்’ என்று பார்க்கிற இடமெல்லாம் போர்டுகள் அடித்துத் தொங்கவிட்டிருக்கும் ராஜபாளையத்தில் முக்கு முக்காக அலைந்து திரிந்திருக்கிறேன். கன்னி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை வகையறாக்களை பார்த்த உடனேயே தரம் பிரித்துச் சொல்கிற அண்ணன்கள் சிலபேரின் அறிமுகம் எனக்கு அங்கே உண்டு.

கன்னியின் தனித்துவங்கள் பற்றி அவர்களிடம் உட்கார்ந்து பாடம் கற்றுக் கொண்டேன். அதன் குணாதிசயம். வளர்ப்பு விதங்கள், உணவு முறை, நோய், செருமல், வயிற்றுக் கழிப்பு இந்தமாதிரி விஷயங்களில் நிறைய சொல்வார்கள். கன்னி காவலுக்கு ஆகாது. அது அடிக்கிற இனம் அதே நேரம் விசுவாசி என்பார்கள். அகரமுதல்வன் தன்னுடைய கதையில் வரும் அப்படி ஒரு நாய்க்கு ‘நன்றி’ என்றே பேர் வைத்திருப்பார்.

கோம்பையை எங்கள் ஊரில் கோழிக்கள்ளன் என்று தான் கூப்பிடுவோம். எங்கேயாவது களவாண்டு வந்துவிடுவான். நாசூக்காக அடித்து வந்தாலாவது பரவாயில்லை. நான் தான் திருடினேன் என்று சாட்சியெல்லாம் வைத்துவிட்டு வந்துசேருவான். சொல்லி வைத்தார்போல களவு குடுத்தவர்கள் கோம்பையன் வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். பிறகு பஞ்சாயத்து தீர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சில நேரம் பொடி ஆட்டுக்குட்டியையே தூக்கிட்டு வந்துவிடுவான் எமப்பயல்.

கோவில்பட்டியிலிருந்து திருவேங்கடம் போகிற பாதையில் இருக்கிறது சிப்பிப்பாறை. ராஜபாளையம் வகையறாக்களின் ஆகிருதிகளோடு கொஞ்சம் மாற்றங்களோடு இருப்பவை சிப்பிப் பாறை வம்சம். மேட்டு நிலங்களில் ஏறிக்கொண்டு, தூரத்தில் ஒரு பொட்டு அசைந்தாலும் தான் இங்கே காவல் நிற்கிறேன் என்று எச்சரிக்கிறவன். காட்டுப் பன்றிகளை விரட்டி, நரிகளை மிரட்டி கண்துஞ்சாமல் காவல்புரிகிற அம்சம் சிப்பிப்பாறை நாய்களுடையது. அவற்றில் கலப்புகள் பல செய்து தூய இனத்தை கண்காணாமல் ஆக்கிவிட்டார்கள்.

எனக்குத் தெரிந்து நெல்லை ஜமீன்களில் பலப்பேர் கன்னி வேட்டை நாய் பிரியர்கள். கொத்துக் கொத்தாக இந்த வேட்டையாடிகளை வளர்த்திருக்கிறார்கள். எந்த எஜமானனுக்குத்தான் தான் சொன்னதைக் கேட்டு, விரல் சுண்டினால் காரியத்தை கனகச்சிதமாக முடிக்கிற வேலையாளை தீனிபோட்டு வளர்க்கப் பிடிக்காது. செவலை செம்பரை, நாலுகால் சிலம்பு, கழுத்து வெள்ளை, நெற்றி ராமம் என்று ஒவ்வொரு கன்னிக்கும் சிப்பிக்கும் தனி அடையாளம் வைத்திருப்பார்களாம்.

இவைகளுக்கு கோபக்குறியும் காவல் குறியும் சிறுசிலே சோதிக்கப்பட்டுவிடும். மடி, ராஜமடி, விரி காது, குத்துக்காது, குதிரை காது, குரங்கு காது, பறவை காது, வலக்குத்து மடி, இடக்குத்து மடி, நெரி மடி, வலக்குத்து நெரி, இடக்குத்து நெரி என்று காதுகளை வைத்தே கன்னிகளின் வேட்டையும், கோபமும் எப்படி இருக்கும் என்று கணித்து விடுவார்கள். ரெட்டை குறுக்கும், அகல நெஞ்சும், சாட்டை வாலும், நல்ல முழித் தெறிப்பும் இருந்தால் போதும் அந்த வேட்டையனைக் கொண்டாடிவிடுவார்கள்.

வால், தலை உடம்பு, கண்தெறிப்பு போலவே கால் வளைவையும் வைத்து ஓடும் வேகத்தையும் சொல்லிவிடலாம். நேர்நிமிர்த்தியாக வளரும் நெட்டுக்காலை விட கொஞ்சம் உள்வளைந்து சதைப்பற்றாய் இருக்கும் கூனிக்கால் கன்னிக்கு வேகம் அதிகம். கன்னியையும் சிப்பிப்பாறையையும் நிறத்தை வைத்து குழப்பியடிக்கிற வழக்கம் இன்னும் ஜனங்களிடம் நீடிக்கிறது. செவலையும் கருப்புமாக இருந்தால் கன்னி என்றும், வெள்ளையும் சாம்பலுமாக இருந்தால் சிப்பிப்பாறை என்றும் நம்புகிறவர்களும் உண்டு. அதெல்லாம் சும்மா.

சாலிகிராமம் பாஸ்கர் காலனி பூங்கா அருகே தெருநாய் ஒன்று கண்ணில் பட்டது. அப்படியே அசலான கன்னியின் ஜாடை ஆனால் கலப்பினம். எங்கெங்கோ தப்பி வந்த ஜீன்கள். ஆனாலும் மற்ற நாட்டு இனங்கள் போலல்லாமல் கர்ஜனையான குரைப்பொலி அதற்கு. சத்தங்காட்டாமல் சோம்பித் திரிகிறது தெருக்களில். இதற்கு வளர்ப்பும் ஒரு காரணம்.

கன்னியை 40 நாள் குட்டியாக இருக்கும்போதே மண்ணில் ஒரு குழி தோண்டி உள்ளே இறக்கிவிட்டுவிடுவார்கள். அது காலை உயர்த்தி மேலே ஏற முயற்சித்து முயற்சித்து உடம்பு வலுப்பெறும். வயிறு உள்வாங்கி, உயரமும் தலைதட்டும். குழியைத் தாவி மேலே வந்த பிறகு இன்னும் ஆழமாகத் தோண்டி திரும்பவும் இறக்கிவிட்டு விடுவார்கள்.

கட்டிப் போட்டு வளர்க்கிற கதையெல்லாம் வேட்டையினங்களில் ஆகவே ஆகாது. முடிந்தமட்டும் அலைச்சல் இருக்கவேண்டும். “நெட்டையனைக் கூட்டிட்டு விளையாடப் போனோம்” என்பான் மாமன் மகன். ஆனாலும் சிறுசாக இருக்கிற காலத்தில் வேண்டுமென்றே கட்டி வைத்தால் தான் அதற்கு அத்துக்கொண்டு ஓடுகிற வீர்யமும் வரும்.

அலெக்ஸாண்டர் குதிரை வைத்திருந்ததும் அதற்கு புசிபாலஸ்என்றும் பேரிருந்ததை ‘அபியும் நானும்’ படத்தின் வழியாக நம்மில் பலரும் தெரிந்துகொண்டாலும், அவர்கிட்டே ஒரு நாய் இருந்ததைப் பற்றி பிரகாஷ்ராஜ் நமக்குச் சொல்லாமல் விட்டுவிட்டார். அதற்கு பெரிடாஸ் என்று பேர் விட்டிருக்கிறார் அலெக்ஸாண்டர்.

பெரிடாஸ் என்றால் சிங்கத் தலையன் என்று பொருள்படுகிறது. இந்திய அரசன் ஒருத்தர் அந்த நாயை அவருக்குப் பரிசளித்ததாகவும், ஒரு யானையையும், சிங்கத்தையும் பெரிடாஸ் வேட்டையில் மிரட்டியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

அலெக்ஸாண்டர் நாய் பேர் இருக்கட்டும் நண்பரின் நாய்களுக்கு வைக்கப் பரிந்துரைத்த சரமை, கோவிவன் பற்றிச் சொல்லிவிடுகிறேன். மகேந்திர பல்லவன் ஆட்சிகாலத்தில் ரிஷிவந்தியம் பக்கமுள்ள ஓர் நடுகல்லில் கோவிவன் என்ற ஓர் நாயின் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ரிக் வேதத்தில் ரோமாபுரியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போன நாய்க்கு சரமை என்று பேரிட்டிருக்கிறார்கள். நாய்களுக்கெல்லாம் தாய் ஆதித்தாய் என்று பொருளாம்.

“எங்க இருந்தைய்யா இதெல்லாம் புடிச்சீர்” என்றார் நண்பர். ‘வாசிக்கிறோ மில்லையா என்னத்தையாவது, எல்லாம் அது கற்றுக்கொடுத்தது தான்’ என்றேன். இப்போது கன்னிகளான சரமையும், கோவிவனும் தீவிரப் பயிற்சியில் இருப்பார்களாய் இருக்கும். அவர்களுக்குப் பேர் உருவான கதையை கேட்கிறவர்களுக்கெல்லாம் விநோதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் நண்பர்.

கன்னிவேட்டை பற்றியும், அப்படி வேட்டையில் வழிதப்பின தன் தங்கை தெய்வமாக மாறின நாயக்கர்களின் ‘தொட்டியச்சி’ கதை ஒன்று இருக்கிறது. அது இப்போது வேண்டாம் ரொம்ப நீளமாகப் போகும். பிறகு அதை எழுதுவோம்.-கார்த்திக். புகழேந்தி

06-04-2017

Wednesday, 5 April 2017

‘கதா மாலிகா’            ரசய்யா குறித்து நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம் விசாகப்பட்டினத்தில் கப்பல் துறையில் வேலையிலிருக்கும் நண்பனோடு. அவரது புத்தகங்கள் மீது தீராத மோகம் இருந்தது எனக்குள்ளாக. அதேப்போல இன்னும் சில பழைய புத்தகங்களையும் ஏற்கனவே  வாசிக்கத் திரட்டிக் கொண்டிருந்தேன்.

ரா.பி சேதுபிள்ளை எழுதிய தமிழகம்; ஊரும் பேரும், தமிழர் வீரம், கி.வா.ஜ தொகுத்த 25ஆயிரம் சொலவடைகள், கே.கே பிள்ளையின் தென் இந்திய வரலாறு, பேராசிரியர் ராம வேலாயுதம் எழுதிய தென் கிழக்கு ஆசியா,  முனைவர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய முகலாயர் வரலாறு இப்படியாக சிலவை.

நேற்றைக்கு எழும்பூர் தமிழ்ச்சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்குப் போயிருந்தோம். ‘கல்வெட்டு’ காலாண்டிதழின் நூறாவது சிறப்புப் பிரதியை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பணியாற்றும் நண்பர் அன்பளித்தார். கூடவே, சென்னை, நெல்லை, குமரி, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் குறித்த கல்வெட்டு பதிப்பு நூல்களையும் வாங்க உதவி செய்தார். வந்ததும் முதல்வேலையாக சென்னைக் கல்வெட்டுகள் பதிப்பு நூலைப் புரட்டினேன்.

கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து சென்னையில் பல இடங்களில் முதலியார்களும், ஆச்சாரிகளும் நிலங்கள் வாங்கி, கோயில்கள் கட்டி, வீடுகளையும், கடைகளையும் பசுக்களையும் தானமாக வழங்கின பல செய்திகளைக் கல்வெட்டுகளாக எழுதியிருந்த தரவுகளைக் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

சாந்தோம் மாதா கிழக்கு ஆலயத்தில் ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தி கல்வெட்டு இருப்பதாக இரண்டு ஆண்டுகள் முன்பே அங்கே சென்றபோது பேராசிரிய நண்பர் சொல்லியிருந்தார். நூலின்படி அங்கே ராஜராஜன் மட்டுமில்லை, ராஜேந்திரன், குலோத்துங்கன் பற்றி எழுதின 11ம்-13ம் நூற்றாண்டு காலத்தைய கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. பிறகு, திருவள்ளூர் மாவட்ட கல்வெட்டுகளைப்   படித்துக் கொண்டிருந்தேன்.

 சில மாதங்களுக்கு முன்பாக நண்பன் கவிமணியோடு அவரது சொந்த ஊரான பொன்னேரிக்குப் போயிருந்தபோது, அங்கிருந்து 12கல் தொலைவில் இருந்த திருப்பாலைவனம் கோயிலுக்கு அழைத்துப் போயிருந்தார். அப்போது அந்தக் கோயில் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு சோழன் தானைய்யா உங்கள் ஊரில் இந்தைக் கட்டியிருக்கிறான் என்றேன். இப்போது அதற்கு விடைதெரிந்தது. திருப்பாலைவனம் மூன்றாம் குலோத்துங்கனின் கைங்கர்யம். இப்படியாக பழசுகளைத் தேடுகிறது ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தாலும் நரசய்யா பற்றின பேச்சு இன்னொரு பக்கத்துக்கு மடைமாற்றிவிட்டது.


இன்றைக்கு மதியத்தில் ஒரே மூச்சாக இராயப்பேட்டை கோனார் மாளிகையில் இயங்கும் பழநியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்திற்கு நண்பனும் நானும் போயிருந்தோம். பெரிய குடோன் மாதிரி புத்தகங்களாய் அடுக்கி வைத்திருந்த குடோனைத் திறந்துவிட்டு, எது வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று கைகாட்டிவிட்டார்கள். உள்ளே புகுந்து ஒரு மணிநேரம் வியர்த்துக்கொட்டி, தேவையானது என்று ஓர் இருபது சொச்சம் நல்ல புத்தகங்களை அள்ளிக்கொண்டுதான் வெளியேறி னேன். 
(வந்ததும் வராததுமாக இதோ மதராசப்பட்டினத்தை விரித்து வைத்திருக்கிறேன்)

வாசித்த புத்தகங்களை ஒருவாராக எழுதிவைத்துக் கொள்வதில் ஒரு நல்லது என்னதென்றால் அது எங்கே வைத்தோம் என்று தேடுவதற்குச் சவுகரியமாய் இருக்கிறது. அரைகுறையாக விட்டதை திரும்ப முடிக்க உட்காரவும் ஒரு உத்வேகம் வருகிறது. கே.ஏ நீலகண்ட சாஸ்த்ரியின்  ‘சோழர்கள்’ முதல் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாதத்தில் தான் வாசித்து முடிக்கவே செய்தேன்.  

ஏ.கே.செட்டியாரின் ‘தமிழ்நாடு பயணக்கட்டுரைகள்’ நூலில் ஒரு வினோதமான செய்தியைக் கவனித்தேன். நெல்லை சங்கர நயினார் கோயிலுக்கு சிறுவயதில் போன அனுபவத்தை ‘கதா மாலிகா’ என்கிற சுதேசமித்ரன் வெளியீட்டுக்கு 10-11-1920ல் எழுதியிருக்கிறார் ஒரு பெண்மணி. வாசிக்க வாசிக்க நடை அப்படியே பாரதியாரின் சாயலில்  இருக்கிறது. என்னடா என்று கடைசிப் பக்கத்தைத் திருப்பினாள் செல்லம்மாள் பாரதி என்று பேர் எழுதியிருக்கிறது. பாரதியே பேர்மாற்றி எழுதினாரா இல்லை அவர் வீட்டம்மாவுக்கும் பாரதியின் எழுத்துவன்மை இருந்ததா என்று தெரியவில்லை.

இந்த மாதம் வாசிப்பில் கடல்காற்றுதான் அதிகப்படியாக வீசியிருக்கிறது. கடல் சார்ந்து நிறைய வாசிக்கிறேன். ‘நெய்தல்வெளி’ பதிப்பகத்திலிருந்து பரவர் இன வரலாறு நூலும், குரூஸ் பர்னாண்டஸ் வாழ்க்கையையும் ஜஸ்டின் திவாகர் அண்ணன் கொடுத்திருந்தார்.  ‘பரவர் வரலாறு’ நெய்தல் வெளியின் சிறப்பான புத்தகம். தூத்துக்குடிக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குருஸ் பர்னாண்டஸ்  வாழ்க்கை நூல் நிறைய தெரியாத விஷயங்களைப் பேசியது. மீனவர் இனத்திலிருந்து ஒரு நகராட்சித் தலைவராக அக்காலத்திலே உயர்ந்திருக்கிறார். இறந்தபிறகும் நல்லபேரச் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

 ‘போராட்டபூமி’ என்கிற பேரில் பழையப் புத்தகக் கடையில் வியட்நாமின் வரலாற்று நூல் ஒன்றை வாங்கினேன். நிலத்தை உழும்போது கலப்பையில் சிக்கின மண்புழுபோல ஒரு சிறு தீவு தேசம். அங்கே, “ஹோ சி மின்” என்கிற ஒரு மீனவன் மகத்தான மக்கள் தலைவனாக உருவெடுத்திருக்கிறான். அந்நாட்டு மக்களின் விடுதலைக்காகப் போரிட்டிருக்கிறான். தான் வாழ்நாளில் ஒருமுறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்று ஏங்கிய லெனின் மீது ஹோ-வுக்கிருந்த அன்பையும், வியட்நாமின் விடுதலைக்குப் பிறகு அங்கே அவர் நிகழ்த்திய சீர்திருத்தங்களையும் போராட்டபூமி விவரித்துச் சொல்கிறது.

“ஹோசிமின் ஒரு மீனவன். அதனால்தான் வானிலிருந்து குண்டுகளை  விழும்போது வலைகளைத் தூக்கிப் பிடியுங்கள். கீழே விழுந்தால் தானே குண்டுகள் வெடிக்கும் என்றான்” என்று எழுத்தாளர் ஜோ டி குருஸ் சொன்ன வார்த்தைகளை அந்தப் புத்தகத்தில் கண்டுகொண்டேன். இன்னொன்று, அமெரிக்கா தென் சீனக்கடலில் வீசின குண்டுகளை அகழ்ந்து எடுக்கத்தான் வியட்நாமியர்கள் ரட்டை மடி வலையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்று ஒரு குறிப்பும் காணக்கிடைத்தது.

நேற்றைக்கு மாலை வாசக சாலை ஏற்பாடு செய்திருந்த கொற்கை நாவலுக்கான கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ‘கடற்கரை மக்கள் கடலை தங்கள் தொழில் வெளியாகவும், நிலத்தை தங்கள் கொண்டாட்ட வெளியாகவும் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சமூகத்தில் எல்லோரும் சம அளவில் வலுவானவர்கள். அதனால் தானோ என்னவோ இவர்களிலிருந்து வலுவான தலைவர்களே இல்லாமலாகிறார்கள்’ என்பதை இன்னுமொருமுறை அழுத்திச் சொன்னார்.

-கார்த்திக் புகழேந்தி
05-04-2017
  

Thursday, 30 March 2017

வாசிக்கும் பிம்பங்கள்         ஏழை எளியோர் வாழ்வைச் சித்தரிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டு கி.ரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் நாவலின் ஒவ்வொரு நிலைக்களன்களையும் குறிப்பிட்டு, குறுங்கதை ஒன்று சொல்லி காலக்கட்டத்தை அறிமுகப்படுத்தி அதுபற்றி எழுதினவர்களையும் அந்தந்த நூல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார்.
அப்படி கி.ரா குறிப்பிட்ட வரிசையில் தேயிலைத் தோட்டங்களின் வாழ்வைச் சொல்லும் செல்வராஜ் எழுதிய ‘தேனீர்’, கோகிலம் சுப்பையா எழுதின ‘தூரத்துப் பச்சை’, கொங்கு நாட்டு கிராமங்களை நிலைக்களமாகக் கொண்டு ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய ‘அறுவடை’, ‘பூவும் பிஞ்சும்’ மற்றும் ‘மாயத்தாகம்’
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் 
 எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘வேள்வித் தீ’, தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’ தென்மாவட்டங்களில் பனைத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையச் சரடாகக் கொண்டு ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதிய ‘புத்தம் வீடு’, ஆற்றுமணலை அள்ளிக்குவித்து வயிறுவளர்த்த கொள்ளையர்களைப் பற்றி ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’, வெற்றிலைக் கொடிக்கால் வாழ்வை எழுதின ஆ. பழநியப்பனுடைய ‘காவிரிக் கரையினிலே’,

தஞ்சை விவசாயிகள் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’, செ.கணேச லிங்கனின் ‘செவ்வானம்’, ஜோசப் எழுதிய ‘காலங்கள் சாவதில்லை’, கே.டானியல் எழுதிய ‘பஞ்சமர்’ மற்றும் ‘போராளிகள் காத்திருக்கின்றனர்’, செங்கை ஆழியான் எழுதிய ‘வாடைக்காற்று’ என்று தான் வாசித்தவற்றில் சில நாவல்களை எழுதி வைத்திருக்கிறார்.
இந்த வரிசைகளில் முன்னணியாக ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் அசோகமித்ரன் ஆகியோரது படைப்புகளைக் குறிப்பிட்டு, ரொம்ப நேசமாக பொன்னீலன் எழுதிய ‘கரிசல்’ நாவலைக் கொண்டாடி இருக்கிறார். அவற்றில் இருந்து நான் கொஞ்சம் அறியாத புத்தகங்களை வரிசைக்கிரமமாக வாசிக்க வேண்டியதென்று கல்பிறக்கிக் கொண்டேன்.
முதலாவதாக, 1950களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் கைத்தறி நெசவாளர்கள் சந்தித்த பெருந்துயரையும், கூட்டம் கூட்டமாக அவர்கள் பஞ்சம் பிழைக்கப் போனதையும், மானம் காக்க ஆடை நெய்தவர்கள் மானம் துறந்து கைநீட்டி பிச்சை கேட்ட காட்சிகளையும் கொண்டு எழுதப்பட்ட ‘பஞ்சும் பசியும்’ நாவலை வாசிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ பற்றிக் குறிப்பிடும்போது, எம்.வி.வெங்கட்ராம் எழுதின ‘வேள்வித் தீ’ நாவலை இன்னும் நெருக்கமாக மக்களின் வாழ்வியலோடு அவர்கள் பிரச்சனைகளையும் பேசியிருக்கிறது என்று எழுதியிருக்கிறார் கி.ரா.
ரகுநாதனின் இலக்கிய வாழ்க்கையை எழுத்தாளர் பொன்னீலன் எழுதின சரிதை வழியாக அறிந்துக்கொண்ட பிறகு ரகுநாதனை இன்னுங்கொஞ்சம் இனங்கண்டு வாசிக்க ஆர்வமாக இருந்தேன். காரணம் புதுமைப் பித்தனும், ரகுநாதனும் அவர்களுடைய காலக்கட்டத்தில் சோடிபோட்டுக் கொண்டு அடித்து வெளுத்துக் கட்டிய இலக்கிய சமாச்சாரங்கள் அவ்வளவு ருசியானவை.
மேற்படி விஷயத்தை பொன்வாசுதேவன் சாரிடம் மேலோட்டமாகச் சொன்னபோது, ‘பஞ்சும் பசியும்’ பிரதி உங்களிடம் இருக்கிறதா என்று ஒரு கொக்கியை வீசியிருக்கிறேன். ‘இருக்கிறது’ என்று நல்ல சகுமான பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. சொன்னதோடு மட்டுமில்லாமல் முதலாவதாக ரகுநாதன் எழுதின ‘பாரதியும் ஷெல்லியும்’ என்கிற ஒப்பீட்டு நூலைக் கையில் கொண்டுவந்து கொடுத்தார்.
1789ல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தையான ஷெல்லியிடமிருந்து, 1905ல் தோன்றிய ரஷ்யப் புரட்சியின் குழந்தையான பாரதி எங்கெங்கிருந்தெல்லாம் தன் கவிதைகளுக்கான கருவினை எடுத்துக் கையாண்டிருக்கிறார். எவ்வளவு வார்த்தைகள் ஒன்றுக்கொன்று இணையாக தந்திருக்கிறார், அவற்றை எங்கெங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார் என்று பிச்சு எறிந்திருக்கிறார் ரகுநாதன் அந் நூலில்.
உதாரணத்திற்கு, ஷெல்லியின் ‘வானம்பாடி’ பாரதிக்கு ‘சிட்டுக்குருவி’யாகிறது. ஷெல்லியின் ‘மேல்காற்று (west wind)’ பாரதியின் ‘நல்லதோர் வீணை’, ஷெல்லியின் சுதந்திரப் பனுவல், பாரதியின் சுதந்திர தேவி துதி. ஷெல்லியில் நேப்பிள்ஸ், ராணி மாப், வரிகள் பாரதியின் வந்தே மாதரம், பாரத சமுதாயம், புதிய ரஷ்யா, பாஞ்சாலி சபதம் பாடல்களில் அப்படியே தமிழாகிறது.
ஷெல்லி எழுதின, ‘இஸ்லாமின் புரட்சி’யில் வரும் சித்னா, பாரதியின் புதுமைப் பெண்ணாகிறாள். ஷெல்லியின் ‘சென்சி’ கவிதை நாடகத்தில் வருகிற பீட்ரைஸின் வார்த்தைகள், பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியின் குரலாக அப்படியே ஒலிக்கிறது.இப்படி இன்னும் நிறைய...
பாரதியின் கவிதைகளைக் களங்கட்டி அடித்தாடினாலும் ஒரு இடத்திலும் பாரதி காப்பியடித்தார் என்று நேராகச் சாடாமல் இருவரும் ஒரேமாதிரி யோசித்திருக்கிறார்கள்; ஷெல்லியின் தாக்கத்தால் எழுதினார்; ஷெல்லியிடம் பாரதி சுவீகரித்துக்கொண்டார், என்று மிதமான நக்கலிலே முழு நூலையும் எழுதியிருக்கிறார் ரகுநாதன்.
சமீபத்தில் தான் சலபதியின் ‘அந்த காலத்தில் காபி இல்லை’ நூலில் பாரதி குறித்து வேறு கோணங்களைக்கொண்ட மூன்று ஆதாரங்களோடான கட்டுரைகளைப் படித்திருந்தேன். தன் வாழ்வில் எவ்வெப்போதெல்லாம் தான் பேசின அறத்துக்குப் புறம்பாக பாரதி செயல்பட்டார் என்று சலபதி கூறுகட்டிக் குவித்து வைத்திருக்கிறார்.
கூர்ந்து கவனித்தால் மகாகவி பாரதிக்கு நாம் எக்கச்சக்கமாக புரட்சித் தோல் போர்த்திவிட்டோமோ என்று கூட மனத்துக்குப் பட்டது. அதெல்லாம் இல்லை அவன் தமிழில் இப்படிக் கொட்டிக் குவித்திருக்கா விட்டால் நாம் எங்கிருந்து ஷெல்லியை எல்லாம் வாசிக்கப் போகிறோம் என்ற எண்ணமும் மேலெழுந்தது.
எது எப்படியோ நான் ரகுநாதனை இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. எக்கச்சக்க புத்தகங்களோடு வாழ்ந்த இந்த மனுஷனைப் பத்தி உங்கள்கிட்டே பகிர்ந்துகொள்ள, எழுத்தாளர் பொன்னீலன் சொன்ன ஒரு விஷயம் உண்டு.
தோழர் ஜீவானந்தத்திற்கு ரகுநாதனின் நூல்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டாம். அவர் தன் வீட்டுக்கு வருகிறார் என்றாலே தொ.மு.சி.,க்கு கைகால் நடுங்க ஆரம்பித்து விடுமாம். சத்தம் கேட்டதும், வீட்டின் கீழ் அறையிலே வைத்து பேசி அனுப்பிவிட வேண்டும் என்று கருத்தாய் இருப்பாராம். ஆனால் தோழர் ஜீவா ‘எனக்கு ஒரு நல்ல காபி வேணும் ரகுநாதா’ என்று அவரை கடைக்கு அனுப்பிவிட்டு அவர் புத்தகங்களை மேய்ந்துவிடுவாராம்.
ஜீவாவுக்குக் கொஞ்சம் கொடைப் பண்பு அதிகம். ஜீவா வீட்டுக்கு வந்த டி.செல்வராஜ் ஜீவாவின் அலமாரியிலிருந்த ‘தென்னிந்தியாவில் சாதிகளும் குலங்களும்’ புத்தகங்களை ஆசையாகத் தடவிப் பார்க்க, அதன் ஏழு தொகுதிகளையும் அவருக்கே அன்பளிப்பாய் கொடுத்து விட்டிருக்கிறார் ஜீவானந்தம். இதை நேரில் கண்ட தொ.மு.சிக்கு அடங்காத அச்சமும் கோபமும். எங்கே இவரை விட்டால் நம் சேமிப்புக்கும் அல்லவா பங்கம் வந்துவிடும் என்று தவித்திருக்கிறார்.
ரெண்டுபேருமே புத்தகங்களை வாசிக்கிறதில் கொம்பாதி கொம்பன்கள். பின்னே நிலைமை இப்படித்தானே இருக்கும். என்னதான் நான் ஜீவா அபிமானி என்றாலும் இந்த புத்தகம் சேகரிக்கிற விஷயத்தில் நான் ரகுநாதன் வழி. அது என்னம்மோ அப்படித்தான். இந்த புத்தகத்தில் இந்தப் பக்கத்தில், இந்த இடத்தில் இப்படி எழுதி இருக்கும் என்று குறித்து வைக்காமலே தேடி எடுத்துக் காட்டிவிடுவேன். பிறகு எப்படி இரவல் கொடுக்க.
ஆனால், வாங்குவதற்கு கூச்சமே படமாட்டேன். வள்ளுவனே சொல்கிறானய்யா ‘பிச்சைப் புகினும்’ என்று. ஆக, இந்த பிட்டெல்லாம் மேற்படி குறிப்பிட்ட நாவல் வரிசையைக் கையகப்படுத்தும் முயற்சிகளுக்கான விதை என்பதை மேலோட்டமாகச் சுட்டிக்காட்டிக்கொள்கிறேன். நன்றி!
இறுதியாக, பத்திரிகை ஒன்றிற்காக ரகுநாதனின் நினைவு தினத்தில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட பத்தி ஒன்றை இங்கே சொல்ல நினைக்கிறேன்.
“ தான் வாசித்த புத்தகங்களை எல்லாம் சேர்த்து தனக்கென்று ஓர் நூலகத்தையே உருவாக்கிக் கொண்டார். இரவலோ, இலவசமோ யாருக்கும் புத்தகங்கள் கொடுத்ததில்லை. பல லட்சங்கள் தருகிறேன் என்று அந்தப் புத்தகங்களை விலைபேச வந்தவர்களை வெறுங்கையோடு அனுப்பியவர், தன் முதுமையில் தன் சேகரிப்பு நூல்கள் அத்தனையையும் எட்டையபுரம் பாரதி நூலகத்துக்குக் கொடையளித்தார் தொண்டைமான் முத்தையா சிதம்பர ரகுநாதன் ” என்கிற பத்திதான் அது.
யாருடைய எழுத்தை அக்குவேறாக ஆணிவேறாக விமர்சித்து ஒப்பிட்டு எழுதினாரோ அவர் பேரிலான நூலகத்திற்கு தன் அத்தனைப் புத்தகத்தையும் கொடுத்திருக்கிறார் பாருங்கள். எமன்யா நீர்!

-கார்த்திக்.புகழேந்தி
30-03-2017There was an error in this gadget