கடிதம் 02 அருள்ராஜ் குமாரசாமிக்கு...

அன்பு அண்ணன் அருள்ராஜ் அவர்களுக்கு, 

 இந்த வாரத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை உங்களிடம் சொல்லவேண்டுமெனத் தோன்றியது. தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களை வெளியீட்டுக்கு முன்பாக சினிமா, பத்திரிகை, ஊடக பிரஜைகளுக்குத் திரையிட்டுக் காட்டுவதும், படம் பற்றி பொதுவெளியில் பேச்சு மற்றும் சலனத்தை உருவாக்குவது வெகுகாலமாக நடைபெறும் வழக்கமாகத்தான் இருந்துவருகிறது. 

இந்த ‘ப்ரிவ்யூ ஷோ’ கலாசாரத்தில் புதிதாக இடம்பெற்றிருப்பவர்கள்  ‘இணையதள நண்பர்கள்’ எனும் புதிய கேட்டகரி. எனது பத்திரிகைத் துறை  நண்பர்கள் வழியாகச் சிலநேரங்கள் அடாபுடிகள் எதுவும் இல்லாமல் வெளியாகிற படங்களுக்கான டிக்கெட் முதல் பார்க்கிங் டோக்கன் வரை சிலநேரம் கிடைப்பதுண்டு. அவற்றை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறதுதான். இதுதவிர்த்து, தற்போது முகநூல் ஊடகம் வழியாக நண்பர்கள் பரிந்துரைந்த்து ப்ரிவ்யூ ஷோக்கள் பார்க்க வாய்ப்பமையும்போது ஒருவிஷயம் பயங்கர நெருடலாகிவிட்டது. 

 சமீபத்தில் ஒரு திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக நண்பர்களோடு பார்த்துவந்தோம். நிறைய சொதப்பல்களும், பெருவாரியாக இடங்களில் மேம்போக்காக நகர்த்தப்பட்ட காட்சிகளுமாகச் சேர்ந்து கதையின் தீவிரத்தை காலி செய்திருந்ததும், திரைக்கதையமைப்பிலே சமரசங்கள் பல இருந்ததும் ஒரு நல்ல கமர்சியல் படம் கொஞ்சம் சொதப்பி வந்துவிட்டதே என்ற அளவில் நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது, எங்களோடு அமர்ந்து படம்பார்த்த பெருவாரியானவர்கள் ‘ஆஹா ஓஹோ அரசியல் படம்’ என்று சோசியல் மீடியாவில் புளகாங்கிதப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஊரே கூடி, ஆமாம் என் கண்ணுக்குக் கடவுள்  தெரிகிறார் என்று சொல்லும்போது, நாம் மட்டும் எங்கே காணும் என்று கேட்டால் என்ன செய்வார்கள் என்று நான் சத்தங்காட்டாமல் எதையும் எழுதாமல் இருந்துவிட்டேன். பிறகு என்ன நண்பா படம் பிடிக்கவில்லையா என்று இயக்குநரே கேட்டதும் நான் விவரங்களைச் சொல்லிவிட்டு, படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு என் விமர்சனத்தை எழுதினேன். அத்தோடு போச்சு. பொது இடங்களில் கண்டால் கூட இயக்குநர் உன்னை எனக்குத் தெரியாது என்பதுபோல நடந்துகொண்டார். 

எதற்கு இந்த வம்பு தும்பு என்று நான்பாட்டுக்கு என் வேலை உண்டு நான் உண்டு என்று இருந்துகொண்டேன்.  இதுமாதிரியான அனுபவங்கள் கொஞ்சம் வருத்தந்தரச் செய்தாலும் ‘உள்ளத்து உள்ளபடி’ எழுதவும், பேசவும் செய்கிறேன் என்கிற எண்ணத்தில் அதைக் கடந்துவந்துவிட்டேன். 

ஒக்கி புயல் பாதிப்புகளால் இடர்பட்டுக் கொண்டிருக்கும் மீனவர்கள் குறித்து பொதுவெளியில் எதுவுமே எழுதுகிற மனநிலை இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருந்தேன். வேலையின் காரணமாகத் தொடர்ந்து அதுபற்றின செய்திகளை எழுதியும், வாசித்தும் வந்துகொண்டிருப்பதன் மன அழுத்தம் கூடக் காரணமாக இருக்கலாம். தெரிந்த கடற்கரை நண்பர்களிடம் கொஞ்சம் பேசினேன். அவர்களில் மரியம் வழக்கம்போல வேறொரு கோணத்தில் இருந்து புயலை அணுகினார். 

 “கடலுக்குள்ள போய்ட்டு புயல்ல சிக்கி வேற பக்கங்கள்ல உள்ள கடக்கரைக்கிப் போய் மாட்டிக்கிட்டு, பலவருசம் கழிச்சி அங்கனருந்து ஊர்திரும்பிவந்த மக்க எல்லாம் உண்டு. இப்போ உள்ள மாதி தொழில்படகுகளுக்கு இருக்கிற கட்டுப்பாடுகள் அப்ப இருக்கேல்ல. சிலோன் பக்கம் செத்தாலும் ஒதுங்கிரக்கூடாதுன்னு ஆக்கிட்டான்வ. ஆட்களுக்கும் பருவம் மாறுதது தெரியமாட்டுக்கு. பிரச்சனை செலவு பண்ணுததுக்கு இணையா தொழில்ல சம்பாதிச்சாவணும்ன்றதுதான். புயல் வருதுன்னு தெரிஞ்சு கரை திரும்பினவங்க எக்கச்சக்கம்பேரு இருக்காங்க. வெவரம் தெரியாமலும், நடுக்கடல்ல மாட்டிக்கிட்டவங்களும் தான் அதிகமா பாதிப்புக்குள்ளானவங்க. அவங்கள காப்பாத்த எல்லாரும் துடிக்கம். 

ஆனா அதைவிட இன்னும் எத்தனை நாளைக்கு கடல் தொழிலுக்குப் போகவுடாம நிப்பாட்டி வைச்சு கடனை ஏத்திவிடப் போறானோன்னு மத்த மீனவங்க துடிக்கோம். எது நடந்தாலும் அதைவச்சு பரபரப்பாக்கி துட்டு சம்பாதிக்க ஒரு கூட்டம் இருக்கு. டிவிக்காரனுக்கெல்லாம் அப்பத்தான வேல ஓடும். காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சனம் கத்துறது வேற வழியில்லாம இல்ல. எங்க கைய கட்டிப் போட்டு இப்படி வச்சிருக்கீங்களேன்னு தான்.” என்று நிறைய பேசிக்கொண்டேயிருந்தார்.

ஒருபக்கம் அவர் குற்றஞ்சாட்டுகிற வேலையைத்தான் தொடர்ந்து செய்ய வைக்கப்படுகிறோம் என்ற குற்றவுணர்வு. இன்னொரு பக்கம்  நம் கைகளும் கட்டப்பட்டுத்தான் இருக்கிறது என்ற பதைப்பு. 

அன்புடன், 
கார்த்திக் புகழேந்தி 
14-12-2017








Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil