Tuesday, 30 October 2012

புகழேந்தியும் ஒட்ட கூத்தனும் - ஒரு தற்காலக்கற்பனை

ஒட்டகூத்தரை உங்களுக்கு தெரிந்திருக்கும்... இல்லை தெரியாமலிருக்கும் ஆனால் நேற்றிரவில் எனக்கு அவரை நினைவில் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. அல்லது இப்போது தெரிந்து இருப்பீர். நான் யார் என்பதாவது நினைவிருக்கிறதா? அட நான் தானைய்யா புகழேந்தி!

நேற்றிரவு !
அது என்ன நேற்றிரவு. இதோ இப்போது தான்.. இதை எழுதும் போது கூடத்தான்.  என்ன திடீரென்று என்னை நினைத்து அழைக்கிறாயப்பா? என்று கூத்தரென்னருகில் வந்து கேட்டாலும் ஆச்சர்யமில்லை.

ஆனால் வரவில்லை நான் தான் தேடிப்போகிறேன்.  ஆமாம் ஏன் அவரைத்தேடுகின்றேன். நான் எங்கே தேடினேன் அவரல்லவே என்னை மீனவன் எனவும் வீரனா என்றும் கேட்டுப்போயிருக்கிறார், இந்த சோழக்கிளங்கவிஞர்களுக்கு வேலையே இல்லாமல் சங்கப் பாண்டியரை சரமாரியாய் வறுத்தெடுப்பதே வேலையாய் போயிற்று.

என்னைய்யா பழங்கதை சொல்கிறீரென்கிறீர்களோ!
இல்லை அப்படியானால் உங்களுக்கு புகழேந்தி புதியவன்.

யார் புகழேந்தி?
பாண்டிய அவையில் ஒரு பெருங்கிழவனா? இருக்கலாம்! இல்லை இளம்வயது நரம்பு புடைக்க தமிழ்சாறுகுடித்த கரிய உடல் இளையோனா ? அதுவும் இருக்கலாம். இல்லை பாண்டியத்தேவிக்கு படையல்ச்சீராக சோழநாடு கொடுத்த பெரும்புலவனாயும் இருக்கலாம்..!? லாமென்ன! அதே தான்.

என்னையா நீர் ஒட்டகூத்தனை கூட்டிவந்து புகழேந்திக்கு விளக்கம் கூறிக்கொண்டுக்கிடக்கிறீர். எனக்கு இப்போது ஒரு பஞ்சாயத்து தீர்க்க வேண்டி இருக்கிறது. 

சோழனுக்கும் பாண்டியனுக்கும் வேறு வேலையே இல்லை... அடித்துக்கொண்டே இருங்கள் தமிழைக்கொண்டு வாசிக்கும் நீர் அப்படிச் சலித்துக்கொண்டால்?

என்ன அப்பனே அவ்வாறுசொல்லி விட்டாய்... தமிழும் தமிழும் மோதாமல் போனால்... எங்கிருந்து புதுப்பதிகம் பிறக்கும்.. என்பது என் மறுமொழியாக இருக்கும்.

என்னம்மோ சொல்லுகிறீர் கிழவா! சரி ஏன் இந்நள்ளிரவில் வந்து உயிரெடுக்கிறீர்! 

இந்த புகழேந்தியைக்கிழவனென்கிறீர் உங்கள் ஒட்டகூத்தனென்ன வில்லெறி வலிமை கொண்ட வீரனோ!?

சரியைய்யா இப்போதுனக்கு என்னதான் வேண்டும். ஏன்  இத்தனைக்காலம் கடந்து வந்து தூங்கவிடாமல் என்னையும் உசுப்புகின்றீர்

நான் சோழனும் அல்ல பாண்டியனும் அல்ல புகழேந்தி என்ற உன் வலைப்பதிவை தெரியாத்தனமாக வாசிக்க வந்தவன்.


அதேயப்பா நான் புகழேந்தியின் மறுபிறப்பு,. நீதான் அந்த ஒட்டகூத்தன் என கூத்தனூரில் ஆணாதிக்கமாய் குடியிறுக்கும் சரஸ்வதி தேவி சொன்னாள்!.

எனக்கு கூத்தணூரும் இல்லை கூத்தாண்டவனூரும் இல்லை...  ஆனால் அது என்னய்யா சரஸ்வதியும் ஆணாதிக்கமும்.

சொல்கிறேன் கேளப்பா! ப்ரம்மனுக்கும் தேவிக்கும் படைப்புக்கும் அறிவுக்குமான சண்டை வர மாற்றி மாற்றி சாபமிட்டுக்கொண்டு மண்ணில் தமக்கையும் தமயனுமாய் பிறக்க... சாபல்யம் தீர்ந்ததும் அய்யகோ! அண்ணனா என் கணவனென்று அலறித்தவிக்க...  பிறைசூடன் முன்வந்து நீ இங்கேயே குடிகொள்! அடுத்த பிறப்பில் பார்க்கலாமென ப்ரம்மனை அழைத்துச்சென்ற ஆணாதிக்க ஸ்தலம் உன்னது ஊரப்பா!

அடப்பாவி! ஊரே மாசாமாசம் காணிக்கை கொடுக்கும் கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தேவியை  நீ பெரியாரைப்போல பொண்ணடிமை சொல்லிப்  பேசவந்தால் புரட்டி எடுத்திடுவார் ஊர் மக்கள் ஓடி விடு..

அது சரி ! கூத்தனுக்கு கூத்தெல்லாம் நினைவிலில்லை.. அய்யனே நீயே ஜென்மஜென்மம் முந்தி என்னைச்சிறையிலடைத்த சோழகுரு. நினைவுண்டா

நான் குருவா அடப்போய்யா!  இணையதளத்தில் வலம் வந்து கிடந்த நேரம் உன் தளம் பார்க்க வந்த குற்றம் மட்டும் தான் நான் செய்திருக்கின்றேன்.இதோ இப்போதே கிளம்பி விடுகிறேன் ஆளை விடு,


நிச்சயம் பெருங்கிழார்கவிக்கூத்தன் இவராயிராதோ!
சரி வந்தது வந்தீர்! எம் கதை கொஞ்சம் கேட்டுப்போயேன்.

கதை சொல்லுவேன் பேர்வழி என நீர் என்னை கடைந்த்தெடுத்து விடுவீர்,... நான் ஆள் இல்லை போரும்!


இல்லையப்பனே இல்லை செம்மொழி பெற்ற தமிழ் நாட்டின் பெரும் புலவர் இருவருக்கும் நடந்த பனிப்போர்க் கதை நீ கேளாமல் போவது சரியா? நீ சோழனோ பாண்டியனோ... நாளை தலைமுறைக்கு நற்றமிழ் வேண்டுமென நான் நினைப்பது பிழையா?

சரி சரி சொல்லித்தொலையும்... !

அப்படியே அப்பனே!

அப்பனுமில்லை மகனுமில்லை நீர் புகழேந்தி! இந்த காலத்திற்கு ஏற்றமாதிரி அழையுமைய்யா! ச்சே... உம்மோடு சேர்ந்து எனக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது சரி கதையை தொடங்கும்!


 முன் காலத்தில்  குலோத்துங்கனுக்கு தந்தையில்லாததால் சோழர் குருவான ஒட்டகூத்தரென்னும் பெருங்கவிஞர் அவருக்கு பெண் கேட்டுப் பாண்டிய அவைக்கு வந்தார்.

என்ன ஃப்ளாஷ் பேக்கா? இருங்க மிஸ்டர் புகழேந்தி/// ஒரு கொசுபத்தியைச்சுற்றிக்கொள்கிறேன்...

ஆகட்டும்...

 பாண்டியனுக்கும் சோழனுக்கும் ஆகாத காலம் அது! எப்போதும் அப்படித்தான் ஆனாலும் நல்லெண்ணம் பொருட்டும் அமைதியின் பொருட்டும் கூத்தன் இப்படி ஓர் முடிவெடுத்தார்.,

 தீர்மானித்தாள் குலோத்துங்கனுக்கும் பாண்டியராஜதேவிக்கும்...  புதுமணம் செய்யத் தீர்மானித்து வைகைக் கறையில் அமைந்த பாண்டிய அவை வந்தார்,...!


பெண்கேட்டு வந்தே! தமிழ் பெண்கேட்டு வந்தென்..
பொன் விளைந்த தஞ்சை மண் சோழனுக்கு
தக்க பெண் கேட்டு வந்தேன்
ஐயாறு தீரம் அலுங்காமல் பாயும் நகர்
ஆளும் குலோத்துங்கச் சோழனுக்குப்
பெண் கேட்டு வந்தேன்..

என்றுரைத்தான் ஒட்டக்கூத்தன்...

என்வீடு வந்த தமிழ் முன்கூத்தனுக்கு வணக்கம்
நில்லாது நிறைந்த  தமிழ் வைகைநதி பாயும்
மண்ணாண்ட மீன் பாண்டியன் பெற்ற
பெண்மகளைக் கொடுக்க என்ன வளம் கொண்டான்
சோழன்.  என்ன வளம் கொண்டான்.

மன்னன் மகளைக்கொடுக்க என்ன வளமுண்டு எனப் பெண்வீட்டார் கேட்பது நியாயம் தானே?

ஆமா இப்போல்லாம் மாப்பிள்ளைக்கு வீடு வாசலிருக்கான்னு கேக்கும் முன்னாடி ஊர்ல கரண்ட் இருக்கான்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க! மிஸ்டர் .புகழ்

ஆஹா! அவ்வளவு தட்டுப்பாடா!?

பின்ன! இன்னும் நீர் லெந்த்தா இழுத்தீர்ன்னா கரண்ட் போய்டும் சொல்லிட்டேன்!

சரி சரி... ஆக மாப்பிள்ளை வளம் பற்றி   கேட்டு வைத்தான் மாமன்னன் பாண்டியனார்..

அடக்கமாய்ப் பதில் சொல்ல வேண்டிய சோழனோ இளக்காரமாச்சொல்லி வைத்தான் இப்படி

எப்படி..?

இதோ இப்படி

என் ஆலிலைக்கு உம் வேம்பிலை தகுமோ
ஆதித்தன் புலிக்கு அம்புலி தான் தகுமோ
வீரசோழனுக்கு மீனவனும் தான் நிகரோ
வெல்லும்புலிக்கொடிக்கு வலைசிக்கும் மீன்நிகரோ
விரிந்தோடும் காவிரிக்கு இவ்வைகையும் நிகரோ
சூரிய குலச் சோழனுக்கு சந்திரகுல பாண்டியன் நிகரோ
குரந்தை மலைக்கு இந்த கொற்கை மலை நிகரோ
உலகாளும் சோழநாட்டுக்கு இக்கையளவு பாண்டியநாடும் நிகரோ

 என்று ஒட்டக்கூத்தன் நளவெண்பா பாடிய புகழேந்தியான என்னை ஓரக்கண்ணால்  நக்கலடித்துச் சிரித்து வைக்கிறான்.

ஓஹ்.... நீர் பாட்டெல்லாப் பாடுவீரோ? புகழ்.


ஆமைய்யா இப்போது தொண்டை வரண்டு விட்டதால் குறைத்துக்கொண்டேன்.

பாண்டியப்பெருமை கூற வேண்டிய  குரலும் புகழேந்தியான எனக்கு உரியதல்லவா.. விடுவேனா வெண்பாவெழுதிய வேந்தன் மகன்.

அகத்தியனும் தமிழ் சொன்ன அவையிதுவோ அம்மானே
சிவன் விளையாடுந்த் திருவிளைகள் நடந்ததிங்கே அம்மானே
மால் நாராயணன் எடுத்த அவதாரமும் மீனோ புலியோ அம்மானே
பிறைசூடன் தலை சுமந்தது நிலவோ கதிரோ அம்மானே
உலகாளும் தமிழ் கொடுத்தது இவ்வைகையோ காவிரியோ அம்மானே
கடல் பணிந்தது சோழனுக்கோ பாண்டியனுக்கோ சொல்நீ அம்மானே
இப்பாண்டியப்பெருமை சொல்லி வைக்க பட்டயங்கள் தீர்ந்திடுமே அம்மானே

என்று பதிலடி கொடுத்து வைத்தேன்!

அப்போ உங்க சண்டையில கல்யாணம் கேன்சல் ஆகி இருக்குமே!

அதானே இல்ல கல்யாணம் நடந்ததே,...

எப்படி?

அது எப்படியோ.... நடந்தாயிற்று !

அப்போ நீங்க ரெண்டுபேரும் தமிழ்சினிமா வில்லன் ஹீரோ  மாதிரி இன்னும் 
 முட்டிக்கிட்டு திரிவது ஏன்?

சொல்கிறேன் அச்சோகத்தையும்... திருமணச் சீராய் மன்னன் மகளுக்குத் துணையாய் என்னையும் பாண்டியனார் அனுப்பி வைத்தார்,

என்னது அந்த காலத்தில் இதெல்லாம் உண்டா? ஒரு வேல ரேடியோ, டேப்ரிக்கார்டர் மாதிரி போரடிக்க்கும் போது உம்மை பாட்டுப்பாடச்சொல்லி கேட்பதற்கா?

ஏனப்பா! இப்படி?

சரி மேலே சொல்லும்!

சோழர்குணம் தெரிந்தது தானே... பெண்ணை மணம் கொண்டும் புலவனை சிறைகொண்டும் விட்டார்கள்!

என்ன உம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களா?

ஆமப்பா ஆம்!

அடடே களி தானா? அப்போ!

சிறையிலடைத்த கூத்தன். குணத்தில்தான் முரடன் தமிழில் இல்லை
புலவனான நான் அவரை எதிர்த்துப்பாடிய ஆற்றாமையில் அப்படிச் செய்து வைத்தார்.

ஓஹ்! அப்போ உன் மேல செம காண்டுல இருந்துருப்பாரு போல ப்ளான் பண்ணி தூக்கிட்டார்யா!

அப்படியும் இருக்கலாம்! என்னோடு சிறையில் இன்னும் நான்கு பேர் இருக்க...
அவர்கள் இப்படிப்பேசிக்கொண்டார்கள்.

பிள்ளைபாண்டியன் தலையிலடிப்பான்
வில்லியாழ்வார் காதறுப்பார்
ஒட்டகூத்தனோ இருதலை முடிகட்டி தலையெடுப்பார்
இம்மூவரும் இல்லாததிங்கே சொல்லில்லாதவனெல்லாம் கவியென்பான் என்றுபேசிக்கொண்டார்கள்!

ஆகா! நல்ல வேலை இப்போ அவங்க மூணு பேரும் இருந்திருந்தா இணையத்தில் எழுதப்படும் கன்னாபின்னா கவிதைக்கெல்லாம் தண்டனையா தலை இருந்திருக்காது போலையே!

ஆமப்பா! கூத்தனின் சட்டம் சோழர் ஆட்சியில் வலுவாக இருந்தது தலையாய குருவென்பதால் கேட்க ஆள் இல்லை, நானும் சிறையிலிருக்க
உடன் நால்வருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தேன். ஒட்டகூத்தர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலுரைப்பவனுக்கே விடுதலை என்பது விதியாக இருந்தது,


அப்படியும் என்னை சிறைவாசம் விடாதிருக்க சோழனும் கூத்தனும் மேல்மாடத்தில் நடந்து வர ... சோழனென்னை கைகாட்டி அதோ நளவெண்பாவிசைத்த புகழேந்தி என்றான்.

என்னை பாண்டிய மருமகனார் பாராட்டியது பொறுக்காத கூத்தன் இப்படி பாடினான்,

வேங்கைப்புலி வரக்கண்டால் மான் மறைந்தோடிவிடும்
வற்றி உலர்ந்த காட்டின் செடிகொடிகள் எரியும் தீயில் பொசுங்கிவிடும்
பெரும்சுறா  வரக்கண்டால் சிறு  மீன்கள் சிதறியோடும்
சூரியனை முன் கண்டால் புல்லின் பனி மறைந்துவிடும்

என்று பாடிவைத்தார்,

அடடே உம்மை அவர் ரொம்ப டீல்ல விட்ருக்கார்போல..!
 சரி பதிலுக்கு உம்ம பாட்டை அவிழ்த்து விடவேண்டியது தானே! என்ன பாடினீர்,,,

வழக்கமாய் பாண்டிய பூமியிலென்றால் வெட்டிப்பாட்டு பாடி இருப்பேன் இது சோழதேசம் மேலும் எம்நாட்டின் மருமகனார் முன் அனுமதியில்லாமல் பாடுவதோ? ஆதலாம் கேட்டுவைத்தேன் இப்படி! சோழரே இக்கூத்தரின் பாடலை நான் வெட்டிப்பாடவோ! அல்லன் ஒட்டிப்பாடவோவென்று...

குருவுக்கும் கொண்ட நாட்டுப்புலவனுக்கும் இடையே ஏதும் பங்கம் வேண்டாமென்றே எண்ணிஒட்டிப்பாடிவையும்  புலவரே என்றார்.


ஆகா! சோழன் நீதிமானாயிற்றே!

ம்ம்ம் நான் பாடியதை கேளாயோ?

காத்துக்கிடக்கிறேன் புலவா பாடும் பாடும்!


புள்ளிமான் துள்ளிவர வேங்கைப்புலி மறைவதென்ன!
வற்றிக்கிடக்கும் கானகத்தை செந்தனலும் எரிக்கமுடியாததென்ன.!
சிறு மீன் பாண்டியனைக்கண்டு வெஞ்சுறாவும் பயந்ததென்ன...
புல்லமர்ந்த பனிமறுத்து சூரியனும் சுருண்டதென்ன..!

சபாஷ் வாத்தியாரே...!

இப்படி கூத்தனுக்கும் எனக்கும் ஏழாம்பொருத்தமாகிப்போனதால் விருத்தமகிக்கிடந்தது தமிழ்...! ஒன்று சொல்கிறேன் கேளப்பா! தமிழ் வளரவேண்டுமாயின் நல்லதமிழ்ப் பாவலரோடு பழகிடல் வேண்டும். நிதம் நான்கு செய்யுள் படிக்க வேண்டும். இக்கால இளையோர்க்கு பேசவே தெரிவதில்லை. காரணம் மொழியோடு பரிச்சயமில்லை, மொழியோடு பரிச்சயமில்லாமல் மாற்று மொழி தேடுகின்றோம்! மாற்று மொழியிலும் தேறாமல் இலக்கணம் மீறி புலம்பல் கொண்டோம். ஆதி தொன் தொட்ட தமிழ் அல்லாமல் வீட்டு ஜன்னல் வழியாகுமோ...!

எங்கே ஆங்கிலக் கலப்ப்பில்லாமல் தமிழ் பேச யாரால் முடிகிறது இன்று... அனிச்சை செயலாக ஆங்கிலம் ஆகிப்போன வேதனை அறிவது எப்போது, உலகெங்கும் ஆண்ட நம் மொழியின் பெருமை சொல்கிறேன் கேள்!

மாண்ட பிணம் தோண்டி மன்னவர் செப்பெடுத்து
தொன்மை சொல்வார் அங்கே!
அழிந்த மொழிக் கொணர அகம்பேசி
வழிகொண்ட வருமங்கே!
ஆயின்  தோண்ட மொழி தோண்டி
பிறவர் மொழி பிரசவித்து நாகரீகங்
கற்றுரைத்து ஆயர்க்கலை அறுபத்து
நான்கென  உலகமறிவித்தவரும் யாமே

போற்றும் தமிழ் யெம் பூமி என்றும்... 
வாழிய வாழியவே!**** முற்றும்****
இலக்கண மரபுகளை மீறி,  எளிய தமிழ்கொண்டு எழுதியது, பிழையெதுவெனினும் புகட்டுக,

-புகழேந்தி...

Monday, 29 October 2012

செய்யாத குற்றங்கள்...

அய்யைய்யோ...கணக்கு....


பள்ளிக்கூட காலத்திலும் சரி... பணிபுரியும் காலத்திலும் சரி  இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானோரைப் போல எனக்கும் கணிதம் என்றால் ஆகவே ஆகாது. ஆனால் இன்னைக்கு கணக்கு பதிவேடுகளுக்கு மத்தியில் தான் ஜீவனம் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது வேறு கதை.

பள்ளிப்பருவத்தில் மற்ற பாடங்களை சுமாராகவும் தமிழ்ப்பாடத்தை விருப்பத்துடனும் படித்து விடும் எனக்கு  கணிதத்துடன் எப்போதும் ஜல்லிக்கட்டுதான்.

அது ஒன்பதாவது வகுப்பு .... லாஸ்டுக்கும் முன்னாடிக்கும் இடைப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு... கணிதப்பாட வேளையில்  பூவாத்தலையா விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் ஷேக் தாவூதும்...

அப்போது நங்...என்று குறி தவறாது டஸ்டர் கட்டை ஷேக்கின் மண்டையை பதம் பார்த்தது... எங்க வாத்தியை எல்லாம் ஒலிம்பிக்ஸ்க்கு அனுப்பி இருக்கலாம்! ககன் நரங்கை எல்லாம் தூக்கி சாப்பிட்ருவார். 

 'கணிதத்தில் மட்டும்தான் உங்கள் ஜீரோ மதிப்பெண் வாங்க முடியாது வாழ்க்கையே கணக்குத்தான் என்றார்.. ஆனால் அதை ஒரு சாதனையாக செய்து அடிக்கடி அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் அவரது முதல் தர சிஷ்யப்பிள்ளையான என்னை அவர்... இவனை அடிச்சும் பார்த்தாச்சு... அழவைச்சும் பார்த்தாச்சு... உன்னையெல்லாம் என்னதாண்டாசெய்ய என்பார்,

 நீங்க நினைக்குறதெல்லாம் நடக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ் ,,,,

. ஜீரோவைக்கண்டு பிடித்தது இந்தியர் என்று வரலாற்றுப்பாடவேளையில் சொல்லிக்கொடுக்கும் போது  ஏனோ எனக்கு சந்தோஷமாக இல்லை...

மனித உடல்  பின்புறம் சதைப்பற்றுடன் படைக்கப்பட்டதே கணக்கு வாத்தியாரின் பிரம்பு விளையாட வேண்டும் என்பதாலோ என எண்ணிக்கொள்ளும் அளவுக்கு  தேவராஜ் வாத்தியாரின் பிரம்பு  என் மேல் விளையாண்டிருக்கிறது.

 கணிதமே உனக்கு என் மேல் வை திஸ் கொலவெறி.!


படிப்படியாக ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கணிதத்தில் என்னவோ ஏதோ மார்க் வாங்கும் மார்க் ஜூக்கர் பெர்க் ஆகிய நான் அதற்கு முன் கணிதம் மட்டுமல்லாது எல்லாப்பாடத்திலும் கில்லி.

இந்த வருஷத்தோட இந்த ஆளுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடனும் மச்சான் இல்ல... நமக்கு சங்கு ஊதாம விடமாட்டான் என உள்ளுக்குள் பொறுமிக்கொண்ட ர.ர, க்கள் கூட இருந்தார்கள்.

அதான் ரத்தத்தின் ரத்தங்கள்!

விடுவாரா...  தேவராஜும் அவர் பங்குக்கு எனக்காக தன் எனர்ஜிகளைச் செலவிட்டு என்னை வீங்க வைத்துப்பார்த்தார்.

ஆனால் ரிசல்ட் என்னவோ வழக்கம் போலத்தான்!  வராத படிப்பை வா வான்னா எப்படி வரும்.  இனி இவரோடு குடும்பம் நடத்த முடியாது என்று அழுது புரண்டு ஒன்பதாம் வகுப்பு பாஸாகியாச்சு...

பத்தாம் வகுப்பில் புது வாத்தியார்... ஜெய் ஹோ....ன்னு ஆடாத குறைதான்,.... பாடம் நல்லாப்படிச்சு கிழிக்கப்போறதில்லை ஆனா ஃப்ரெஷ்ஷா இன்னோரு ஆள்கிட்டதான் வாங்கி கட்டிக்கப்போறோம் என்கின்ற நப்பாஸை....

ஆனால் நாளே நாளில் நிலைமை தலைகீழ். மீண்டும் தேவராஜ்... ஆனால் இந்த முறை கணிதம் அல்ல ஆங்கிலம்! எடுக்க... வாட்-என்ன, வென் – எப்போது நேர்- எங்கே திஸ்- இது இப்படி   “கனவுப்பிரியன்” போல நானும் இருபது வார்த்தைகளை தெரிந்து வைத்து புரிந்து ஆங்கிலேயரை 40 மார்க்குக்குள் வெள்ளையனே ஒழிந்து போ! என விரட்டி விடுவேன்! அதனால் தப்பிப்பிழைத்தேனடா தர்மேந்திரா... என அகமகிழ்ந்தேன்.,.

கணக்கில் காலாண்டுத்தேர்வில்  17 மார்க்கு  நூற்றுக்கு.. தமிழில் 96.  ஆங்கிலம் இரண்டாம் தாள் அடிவாங்காத அளவில் சுதந்திர காற்றை சுவாசித்தாயிற்று. அடுத்து என்ன... லீவ் தான்!

ஆனால் லீவ் முடிந்து வரும் போது ஒரு மாபெரும் “ஏஸ்ஸே”-வை மனனம் செய்துட்டு வரச்சொல்லி இருந்தார். தேவ்ராஜ்

நல்லகாலத்திலே எக்ஸாமுக்கு ஏழு நிமிஷம் முன்னாடிதான்  “என்னாது இன்னைக்கு இங்லீஷ் செகண்ட் பேப்பரா?” என அப்பாவியாய் கேட்ககும் நாம் லீவில் படிச்சு அப்படியே பில்கேட்ஸ் கம்பேனிக்கு வேலைக்கு அப்ளிகேஷன் பில்லப் பண்ணிடப்போறோம்!
    

குதூகலம் ஒன்றாய் இருக்க குடுமி வைத்த மாடிவீட்டு மாமா எனக்கு எதிராய் செய்த சதி வேறாய் இருந்தது...

“லீவில் பசங்களுக்கெல்லாம் மாமி ட்யூஷன் எடுக்குறா! நம்ம கார்த்திக்கும் வேணும்ன்னா சேர்த்து எடுத்துண்டு போட்டுமே..ஃபீஸெல்லாம் வேணாம். என்று அம்மாவிடம் ஆப்படித்தார்.

நாராயணா கலி முத்திடுச்சுடா! என்று கலங்கிக்கொண்டே கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்காமல் கீழ்வீட்டுக்கும் மேல்வீட்டுக்கும் ஏறி ஏறி நடந்து ட்யூஷன் போனேன்,,, அவ்வப்போது மளிகைக்கடைக்கும்...

ஃபீஸ் வேணாம் என்று சொன்னதன் அர்த்தம் புரிகிறது.

படம் முடிந்தும் டிரைலர் முடியாத கதையாக... லீவ் விட்டும் இங்க்லீஷும் கணக்கும் என்னை துவைத்து காயப்போட்டு உஜாலாவில் முக்கியது...

நீண்ண்ண்ண்ண்ட..... எஸ்ஸே-வை படித்தே ஆகவேண்டிய கட்டாயம்... ”இந்தியன் அகாடமி இஸ் அவர் அகாடமி” எல்லாம் அங்கே வேலை செய்யவில்லை ... மாமிக்கு பாம்பு காது.

அப்போதெல்லாம் கூட நினைப்பது உண்டு தேவராஜ் தான் காசு கொடுத்து மாமியிடம் கோர்த்துவிட்டு நம்மை பலி வாங்குகிறாரோ என்று...

அசப்பில் அவர் அரவிந்தசாமி போல இருந்தாலும் என் மனசு அவரை மன்சூரலிகானாகத்தான் பார்த்தது என்பதை வைத்து புரிந்துகொள்ளவும்., என் வெறுப்பை

பள்ளிக்கூடம் திறந்து மீண்டும் யூனிஃபார்மில் ரிவைவ் கஞ்சிபவுடர் விரைப்புடன் இருந்தது,,, மீண்டும் தேவராஜ்..

மற்ற பீரியடெல்லாம் வக்கனையாக கடந்து போக அவருக்கு செலக்டீவ் அம்னீசியா வியாதி வர என எல்லாரும் ”வைணவகிறிஸ்துநபியை” வேண்டிக்கொண்டிருந்தார்கள் வகுப்பறையில்....   

ஈஸ்வர அல்லா தேரே நாம்...ன்னு ரேடியோல வாசிச்சது யார்ன்னு இப்போ நினைவில்லை.,..

முதல் வார்த்தையாக “என்ன எல்லாரும் எஸ்ஸே படிச்சுட்டு வந்தாச்சா... பேப்பர் பேனா எடுத்து பெஞ்சுக்கு 3 பேரா உக்காருங்க பார்ப்போம்” –என்று தான் ஒலித்தது,,,

மாமி தயவால் நான் கட கட என எழுதி முடிக்கப்போகும் தருணம்... க்ளாஸே மயான அமைதி எல்லோரும் பேனாவை பேப்பரில் தொட்டுப்பார்ப்பது தீண்டாமை என நினைத்துக்கொண்டு விழிக்கின்றார்கள்... ஒரு சில படிப்ஸ்களைத் தவிர  அவங்களை பத்தி நமக்கென்ன பேச்சு,...


நான்  கிடுகிடுவென்று எழுதி விட்டு கெத்தாக நிமி்ர்ந்தேன். அரையும குறையுமாக எழுதப்பட்டிருந்த ஒவ்வொருவரின் நோட்டுப் புத்தகமாக பார்த்துக் கொண்டு திட்டிக் கொண்டு வந்தவர்,  என் நோட்டைப் பார்த்து விட்டு.

பிள்ளையார் பால் குடிச்சார்ன்றதைக்கூட நம்புவேன்,...நீ இதை எழுதுனியான்னு வெறிச்சுப்பார்ந்த்துட்டு... பொளேர்ன்னு ஒன்னு விட்டார்..

புக்கைப்பார்த்து காப்பி அடிக்கிறியாடா மாடு,,,...ன்னு சொல்லி இருப்பார் போல எனக்கு புக்கை என்று சொன்னதற்கு மேல் எதுவும் கேட்காமல் ஆல் இந்திய ரேடியோவின் ஒயிங்ங்ங்ங்ங்ங்ங்ங்.................சத்தம் மட்டும் தான் கேட்டது...

இல்லசார்ன்னு சொல்ல வாய் திறக்கும் முன் வகுப்பறையே என்னை பார்த்த பார்வை இருக்கே! தத்தா தாச்சா சா இல்ல சார்... படிச்ச்... என்று முழுங்கி துப்ப!

என் கடந்தகால கணித வரலாறை ஒரு வினாடி கண்முன் கொண்டு வந்திருந்தேன்... என்ன சொன்னாலும் நம்பபோவதில்லை... ! மனசுக்குள் மாடிவீட்டு மாமாவை தூக்கிப்போட்டு மிதிக்கனும் என்று தோன்றியது..!

போய் அப்படியே போர்டுல எழுது அப்டியே...! என்று என்னை அவமானப்படுத்தும் எண்ணத்தை பகிரங்கமாக வெளியிட்டார்...!

பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு போர்டு அருகே சென்றேன். ”நாற்று நட்டாயா, களை பறித்தாயா, எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா மாமனா மச்சானா மானங்கெட்டவனே” என சிவாஜிகணேஷன் பேசும் வீராவேசத்தோடு மொத்த பேராக்களையும் எழுதித்தள்ளினேன்,
நல்லவேலை அப்போது “காதல் கொண்டேன்” படம் வந்திருக்கவில்லை.,

விளையாடக்கூப்பிட்டப்போ வரமாட்டேன் வரமாட்டேன்னு சொன்னதெல்லாம் இதுக்குத்தானாடா துரோகி என வடக்குத்தெரு  நடேசன் முறைக்கும் பாவனையில் பார்த்தான்.

அன்றைக்கு தேவராஜ் என்ற கணக்கு, ஆங்கில வாத்தி முன்னால் என் பிம்பம் முறிந்து விழுந்தது,,,அதற்கு பின் அவர் என்னை அடித்ததே இல்லை.  ஆனால் காதுக்குள் இன்னும் ஆல் இந்திய ரேடியோ உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.......

செய்யாத தப்பிற்கு தண்டனை பெற்ற நான்.... அவரை ஏகத்திமிரோடு பார்க்கலாம்தான் ஆன நாளைக்கு இன்னும் ரெண்டு எஸ்ஸே-வை தலையில் கட்டிட்டாருன்னா என்ற பயத்தினூடே கீழே குனிந்து நின்றேன்... பெல் அடித்தது...

ஒன்பதாம் வகுப்பில் க்ளாஸ் லீடர் என்ற ஒரே காரணத்தால் அக்னிநட்சத்திரம் ரேஞ்சுக்கு ஒருவருக்கொருவர் முறைத்துக்கொண்ட பிரபு வந்து தோளில் கை போட்டு
[பெயர் பொருத்தம் கார்த்திக் & பிரபு அக்னி நட்சத்திரம் ]

விடு மச்சி... ஆமா எப்டிடா இவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டும் உன்னை தேவராஜ் பொளக்காம விட்டுட்டு போய்ட்டாருன்னு கேட்ட பின் தான் சிரிக்க முடிந்தது,...


- வகுப்பறையிலிருந்து
   புகழேந்தி...

Friday, 5 October 2012

இன்றைய செய்திகள் ... அனைத்தும் நிஜம் தானா?


இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய அபாயம். செய்திச் சானல்கள் என்றால் நிச்சயமான உண்மையும் அதுவே!
24 மணி நேரமும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மிகுந்த தீனி இவர்களுக்கு தேவை. 


நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டு செய்தித் தொலைக்காட்சிகளை விட தினசரிச் செய்திகள் பெரும்பாலும் குறைவானைவையாய இருக்கும் என்றே!
பழைய நகைச்சுவை ஒன்று உண்டு. செய்தியே இல்லாமல் போனால் செய்தித்தாள்களில் என்ன செய்தி வரும்?


அதற்கென்ன பேஷா போச்சு.. இன்று திருநெல்வேலியில் எந்த செய்தியுமே இல்லை! கடந்த நூற்றாண்டுகளில் இதுபோல நிகழ்வுகள் ஏதும் நடந்ததே இல்லை. அதேபோல திருநள்ளாறிலும் செய்திகளே இல்லை.....ன்னு அதையே செய்தி ஆக்கி விடுவார்கள்! என்பதாக அந்த நகைச்சுவையின் அர்த்தம் இருக்கும்.


யதார்த்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்படியான சுவாரஸ்யங்கள் நிகழ்வதில்லை. ஆகவே இந்த செய்திச்சானல்கள் தங்களுடைய மாஸ்டர் மூளையைப் பயன்படுத்தி ஒரு செயற்கையான பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.


அது, மத்திய பிரதேசத்தின் சிறு கிராமத்தில் ஒரு சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்துவிட்ட செய்தியாக இருக்கும்.  கிணற்றை சுற்றி பதினைந்து லைவ் வாகனங்கள் நின்றுகொண்டு, ஒவ்வொரு டி.வி. ஸ்டுடியோவிலும் இரண்டிரண்டு பேர் அமர்ந்துகொண்டு… 


தங்கள் முகங்களை மிகுந்த பதற்றத்துடன் மெயின்டெய்ன் செய்து… புலியை காப்பாற்றவில்லை என்றால் நாளை அமேரிக்கா நம் மீது அணுகுண்டு வீசினாலும் வீசலாம்!? என்பதுபோல அவர்களது பரபரப்பு நடிகர் திலகங்களையே தூக்கிச்சாப்பிட்டு விடும்.
ஒரு சராசரி மனிதனை ஒரு தனியறைக்குள் பூட்டி, தொடர்ந்து ஒரு வாரத்துக்கு குறிப்பிட்ட சில செய்தி தொலைகாட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் அவர் நாடே கடும் பதற்றத்தில் பற்றி எரிவதாகவும் மக்கள் எல்லோரும் தீவிரவாதிகள் ஆகிவிட்டதைப்போலும் தான் நினைத்துக் கொள்வார்.


அந்த அளவுக்கு இந்த செய்தி தொலைகாட்சிகள், ஒட்டுமொத்த தேசமும் பதற்ற நிலையில் இருப்பதை போல செயற்கையான தோற்றத்தை உண்டு பண்ணுகின்றன.


டைம்ஸ் நவ்வில் அருணாகோஸ்சுவாமியும், சி.என்.என்.ஐ.பி.என்’னில் ராஜ்தீப் சர்தேசாயும் கொடுக்கும் சவுண்டுக்கு இந்நேரம் புரட்சிப்படைகளால் தேசம் துண்டாடப்பட்டிருக்க வேண்டும். 
ஆனால் இவர்கள் மக்களின் நலனில் இருந்து அல்லாமல் ஒரு சண்டை படத்தின் விறுவிறுப்புடன் மட்டுமே செய்திகளை வழங்குகின்றனர்.

ஆகவே இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு அது ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது.

அதனால்தான் கூடங்குளம் லைவ் காட்சிகளின் விளம்பர இடைவேளையில் “உலகத்தரம் மிக்க டி.எம்.டி கம்பிகள் அக்னி ஸ்டீல் முறுக்கு கம்பிகள் என முறுக்கிக்கொள்ள முடிகிறது. 


இவர்களின்  மேன்மை குறித்து முரண்படாமல் சுவாரஸ்ய மனப்பான்மையை வலுக்கட்டாயமாக நாமும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாகி விடுகிறது.

ஊடகங்கள் எல்லாம் முதலாளித்துவங்களின் கைக்கோல்களாகிப்போன காலமிது! சகோதரா! வினவு செய்!


-புகழேந்தி.ஐ

Friday, 28 September 2012

ப்ளமிங்கோ
கண்கள் அந்த வரவேற்புக் கூடத்தில் நின்றவர்களின் கைகளிலிருந்த மஞ்சள் நிறமிடப்பட்ட கருப்பு எழுத்துக்கள் பதிந்த  ஒவ்வொரு பெயர் அடையாள அட்டையிலும் ஐ.ராகவன் என்ற பெயரைத்தேடியது.

ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் என்னை விட உயரமாகவும் என்னை விட சிக்கனமாகவும் ஆடையிலிருந்த   அந்த ஜெர்மானிய வாசம் வீசும் ஹைப்ரீட் ஆரஞ்சு நிற யுவதியின் கையில் நான் தேடிய பெயர் இருந்தது.

எண்பத்து இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் காலடி எடுத்து வைத்ததும்  என்னை வரவேற்க ஒரு பெண்ணை அனுப்பி இருப்பார்கள் என சற்றும் எதிர்பார்க்கவில்லை  “ஹலோ..குட் மோர்கன்.” எனக்கு தெரிந்த டொட்ச் அவ்வளவே.! 

”மிஸ்டர்.ராகவ்? ” ஆங்கிலம் முலாம் பூசிய குரலில் எத்தனை இனிமை.

யெஸ்.அயாம் - டொட்ச் தவிர்த்து சரள ஆங்கிலத்தில் கைகுலுக்கிக் கொண்டோம்.. சின்ன ஸ்பரிசம் மனதின் ஓரத்தில் இதமான மகிழ்ச்சியைக்கொடுத்தது. 

வேறு பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காமல் விமான நிலையத்தின் வாயிலை இருவரும் ஒரே சீரான வேகத்தில் கடந்தோம். மொழி இருவருக்கும் தடையாக இல்லை. ஆனபோதும் புன்னகைகளாலும் அன்னிச்சையான சைகைகளாலும் பேசிக்கொண்டோம் முதல் சில நிமிடங்கள்! 

“லக்கேஜ் எடுத்து வந்திடவா?” இது நான்.,

யெப்! ஸ்யூர். -இது ஆரஞ்சு பூ. 

“தாமதமாகிவிடவில்லையே?” 

“பத்து நிமிடம் பின்தங்கி விட்டோம், அதனால் பரவாயில்லை சரியான நேரத்தில் சென்றடைந்து விடலாம்” 

பை தி பை அயாம் ஸ்........
....... என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதோ ஒரு பெயரைச்சொன்னாள்,.

 சத்தியமாய் என் ஆசிய நாக்கில் அந்த ஐரோப்பியப் பெயர் சரளமாக  உச்சரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கில்லை, அதனால் விட்டுவிட்டேன். 

கிழக்கு ஜெர்மனியில் அது கோடை காலமாம். நம்ம ஊர்பக்கம் மழை அடித்த மறுநாள் கூட இதைவிட உஷ்ணமாகத்தான் இருக்கும் என எனக்குள்ளே எண்ணிக்கொண்டேன். 

சீட் பெல்ட்டை மாட்டிக்கொள்ளச் சொன்னாள். மாட்டிக்கொள்ளும் முன்னே  கார் சீரான வேகத்தை கடந்து மித, அதி வேகத்தை தொட்டு சாலைக்கோடுகளை  பின்னுக்குத்தள்ளி முன்னேறிக்கொண்டிருந்தது. 

ஆசியநாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றில் பணிபுரியும் ராகவ் என்கிற ராகவேந்திரன்  எனக்கு ஜெர்மனி புதியது. அனைத்திற்கும் மேலாக அலுவல் காரணங்களுக்காக நான் ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதும் இது தான் முதல் முறை. 

விமானப் பயணத்தினூடே ஜெர்மனியின் பயணிகள் கையேடு ஒன்றை கையில் புரட்டியபடியே வந்தேன். அநேகமாக அதுவே நான் ஜெர்மனிக்கு புதிது என்பதை ஹோஸ்டர்ஸ்க்கு தெள்ளத்தெளிவாய் விளக்கி இருக்கும்.

மேலும் விமானத்தில் நம் இந்திய முகங்கள் யாருமே இல்லாதது கூட நான் அந்த புத்தகத்தை மட்டும் புரட்டிக்கொண்டிருக்க காரணமாய் இருக்கலாம். எனக்கு பேசுவது மிகவும் பிடிக்கும்.நம் இந்தியர்கள் பல நேரங்களில் அதிகம் பேசுபவர்களை கொண்டாடுவார்கள்., அதிலும் மிக அதிகமாய் நாம் வருவதைக்கண்டாலே.. ஒதுங்கி நான்கு தெரு சுற்றியும் போவார்கள். சந்தேகமென்றால் அரசியல் மேடையில் கூட்டம் வராத நகைச்சுவை துணுக்குகள் இன்னாள் வரைக்கும் எழுதப்பட்டுக்கொண்டிருப்பதை கவனிக்கலாம்.

பேச்சாற்றலின் ஆளுமை மற்றவர்களிடையே நம் கருத்தை முன்வைப்பதில்  ரொம்பவே தீரமான வழி என எண்ணிக்கொள்பவன் நான். ஆனால்  அப்படி ஒருவரும் அன்று சிக்காமல் போனது அவர்கள் பிறவிபலனாக கூட இருக்கலாம்.

ஆப்ரஹாம் லிங்கனின் மேடைப்பேச்சு கட்டுரை ஒன்றை வாசித்து விட்டு அயர்ந்து தூங்கினவனை அந்த ஆயிரம் முறைக்குமேல் ஒலிக்கப்பட்டிருந்த வழக்கமான விமானத்தின் தரையிறங்கும் அறிவிப்பு குரல் கண்விழிக்கச் செய்ய.. ஜெர்மனி சமீபமாகியிருந்தது.

 இதோ..!

 புலம் பெயர்வுகளில் அதிகமான மக்களைக்கொண்ட  மூன்றாவது நாடான  ஜெர்மனிய தேசத்தில் காலடி எடுத்து வைத்து........சம்பிரதாயமான பிரயாணிகளின் சோதனைகள் மற்றும் கடமைகளை முடித்து...  இந்த ஜெர்மன் பூவை பார்த்து பிரமித்து, புன்னகைத்து கண்களால் பேசி இதோ அவளோடே பயணிக்கிறேன். இடையிடையில் அவளது பர்ஃப்யூம் வாசனை என்ன மலரென்று கண்டுபிடிக்க முயன்று தோற்றுப் போகிறது என் நாசி.. 

“ஆர் யூ மேரிட் மிஸ்டர் ராகவ்”

தேனாய் ஆங்கிலம் கடந்த சில மணித்துளிகளின் சிந்தனையைக்  கலைத்தது
ஆக்ஸிலேட்டர் இன்னும் சீறிக்கொண்டே இருந்தது.,

அவளின் வேகத்தில் பயணிததது என் வார்த்தைகள்... கவனமாய்...

“நோ. இன்னும் பண்ணிக்கலை”

“கேர்ள் ஃப்ரெண்ட்?” மிகச்சாதாரணமாகக் கேட்டாள்.,

நான் பிறந்து வளர்ந்த தென்தேசம் என்னை அந்த அளவு நவ நாகரீகவாதியாகி விட அனுமதிக்கவில்லை என்பதை இவளுக்கு எப்படி புரிய வைப்பேன் எனத் தெரியாததினால். நமுட்டுச் சிரிப்பை பதிலாய் வைத்தேன். 

 “ஐ லவ் மை ஜாப் ஃபர்ஸ்ட்”

“ஓஹ் .குட்!”

 கணிதமேதை ராமானுஜம் ஏதோ பெரிய ஈக்வேஷனைக் கண்டறிந்துவிட்ட திருப்தியைப் போல அவளது குட் எனக்குக் கேட்டது! அவள் என்ன நினைத்துச் சொன்னாளோ. இந்திய வாடை ஆங்கிலமும், டேனிஷ் ஹாங்கிலமும் கலந்துரையாடிக்கொண்டது. 

“வேர் வி கோ? நௌ?” 

“மை காட்டேஜ் -இன் சுவ்வேரீன்.”

மெக்லன்பேர்க் நகரத்தின் சாலைகள் மீது பட்டு ... காரின் ஃப்ரெண்ட் விவர் க்ளாஸில் பால்டிக் கடல் காற்று ஜில்லிப்பாய் வீசியது.

“உங்களின் வருகையை இரு வார காலங்களுக்கு முன்னதாகவே எங்கள் நிறுவனம் எங்களுக்கு தெரிவித்து விட்டது.”

“அத்தனை முன்னெச்சரிக்கை வேகமா!” 

“சரியாகச்சொன்னால் உங்களின் பயணம் ஒவ்வொரு நிமிடமும் அப்போதே வடிவமைக்கப்பட்டுவிட்டது -ஆனால்”

“ஆனால்”

“இன்று உங்கள் இந்திய நிறுவனத்தின் தகவலமைப்பு சீர் செய்யும்  கட்டமைப்புகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாலும்எங்கள் பணியின் பாதிப்பு தேங்கி விட்டபடியினாலும் இன்றைய தினம் நீங்கள்  ஓய்வாக இருக்க வேண்டியது நிர்பந்திக்கப் பட்டுவிட்டது.”

நன்கு தின்று ஜெர்மன் முழுக்க ஊர்சுற்றிப்புராணம் எழுதலாம் உட்கார்ந்து மனதிற்குள் ஓய்வு டாலடித்தாலும் பணிச்சுமை இலகுவாய் மிரட்டியது. 
கார் இன்னும் சீறிக்கொண்டே இருந்தது அது எத்தனை மைல் வேகத்தில் செல்கிறது என என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் அவள் அதனை சைக்கிள் ஓட்டுவது போல ஓட்டிக்கொண்டிருந்தாள்..

காரின் இண்டீரியர் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதன் குஷன்களில் இப்போது அழுத்தமாய் என் முதுகுப்பக்கத்தை சுதந்திரத்தோடு விடுவித்தேன்

ஆல்ப்ஸ் மலை உச்சியில் நிற்பது போலான பனிக்குளிரை காரின் குளிர்பதனச் சன்னல் என் மீது விசிறியடித்தது. 

“உங்களுக்கு பிரச்சனையில்லையே”

 “முன்பே! ... ஆமோதித்திருந்தது தான் இந்த தாமதம்”

“எப்படி சொல்கிறீர்கள்”

“சில அரசியல் காரணங்களால் எங்களுடைய வர்த்தகக் கட்டிடத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையில் பணிகள் பாதிக்கப்பட்டது. விரைவில் சரிசெய்துவிடுவோம். ”

ப்ளைட்டில் ஏதேனும் சாப்பிட்டீர்களா மிஸ்டர். ராகவ் - அவள் மிஸ்டரை விடுவதாய் இல்லை

 “இல்லை ஆனாலும் பசி இல்லை?”

“ஓஹ்... நீங்கள் நான்வெஜ் தானே! உங்கள் .சி.வி படித்தேன்,  ”

“எஸ். எனி ப்ராப்ளம்”

“நோ. அதனால் ஒன்றுமில்லை ”

என் கணிப்பில் அவள் உருளைக்கிழங்குக்கும் சீஸுக்கும் உருவான காம்பினேஷன் உடற்கட்டோடு இருந்தாள் என நினைக்கிறேன்.

உருளைக்கிழங்கை பொறித்து , வதக்கி வெதுப்பி, அவித்து என விதம் விதமாக ஜெர்மனியர்கள் உண்ணுகிறார்கள் என டிக்ஸன் சொன்னது இப்போது ஊர்ஜிதமாகப்பட்டது.டிக்ஸன்  எங்கள் நிறுவனத்தின் சீனியர் மெண்டர்.  டிக்ஸனுக்குப் பதிலாகத்தான் நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். 

 “உங்கள் ஹாபியில்  கார் பந்தய விசிறி எனக் குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா?”-மீண்டும் அவளே கவித்தாள் .அல்லது பேசினாள்.

அவளின் கேள்விகளை திசை மாற்றியே ஆகவேண்டிய கட்டாயம் எனக்கு..
“யா! மைக்கேல் ஷூ மேக்கர்ஸ் பிக் ஃபேன் அயாம் ” என்ற போது அவளுக்கு கன்னம் சிவந்திருந்தது சிரிக்க முயற்சித்திருப்பாள் போல.,  நிச்சயமாய் அப்படி ஏதும் கிடையாது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கார் ரேஸ் பார்ப்பதை விட ஏ.எக்ஸ்.என்-னில் க்ராஷ் கார்ஸ் பார்ப்பவன் நான்

மைக்கேல் ஷூ மேக்கரை கவனத்தில் கொண்டு கார்பந்தயம் பிடிக்கும் அதும் ஒரு ஜெர்மனிக்காரரை பிடிக்கும் எனச் சொல்லலாமென்று அப்படி சி.வியில் கொடுத்திருந்தேன்.  சில பொய்கள் சந்தோஷிக்க வைக்கும் என்பதை அக்கணம் அனுபவித்தேன். 

“வாட் அபௌட் யூ மிஸ்.....ஆர் மிஸ.......” என்றதும். 
அவளே முந்திக்கொண்டு பேசினாள்.

“நான் உங்கள் ஏசியா நிறுவனத்தின் வர்த்தகத்தில் கைகோர்த்திருக்கும்  ஜெர்மனியில் இயங்கும் பன்னாட்டு நிறுவனத்தின் பப்ளிக் ரிலேஷன்ஷிப்  டிப்பார்ட்மெண்ட் ஆள்! உங்களை கெய்ட் செய்ய என்னை நியமித்திருக்கிறார்கள்.”

 “அப்படியானால் நீங்கள் நாளை ஓய்வில் தானா?”

“யூ மீன்?”

 “இல்லை எனக்கு பால்டிக் கடலை ரசிக்க ஆவல். உங்களுக்கு ஏதாவது வேறு ப்ரோக்ராம்?”

இல்லை அடுத்த நான்கு நாட்களுக்கு உங்களுடன் தான் என் ப்ரோக்ராம்
அதனால் டாமை நான் ஐந்து நாட்கள் நாள் வரச் சொல்லப்போவதில்லை என்றாள்,

“டாம்?”

“என் பாய் ஃப்ரெண்ட்!”

பதில் ஏதும் நான் சொல்லவில்லை. என்னால் அவள் சொல்ல வருவதை யூகிக்க முடிந்தது. அந்த அழகுப் பெண்ணுக்கு தகுதியான ஆடவனாகவே டாம் இருக்கவேண்டும் என்று மட்டும்  நினைத்துக்கொண்டது. கொஞ்சம் பொறாமையும் தான்.

காரின் வேகம் இன்னும் குறைந்த பாடில்லை... அது ஒன்று மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது இவள் வேகத்தை எப்போது குறைப்பாள்?
வலம்,இடம் முன், பின் என எல்லா பக்கமும் கார்கள்.

 எல்லாமுமே வேகம், வேகம், வேகம்....யாராவது ப்ரேக் அடித்தால் மொத்தமாய்      கேரம் ஸ்ட்ரைக்கர் சிதைத்து போட்டது போல கலைந்து க்ரஷ்ஷ்.... முடிந்தது கதை... மைக்கேல் சூ மேக்கரால் கூட காப்பாற்றமுடியாது.

“உங்களுக்கு இங்கு யாரையும் தெரியுமா மிஸ்டர். ராகவ்”

“மிஸ்டர் எல்லாம் வேண்டாம்...கால் மீ ராகவ்..  ஹ்ம்ம்ம் ஐ ஹாவ் சம் ஃப்ரெண்ட்ஸ் இன் ஜெர்மன், அவர்களை எனக்குத்தெரிந்திருந்தாலும் தொந்தரவு செய்ய முடியாதவர்கள்., தே ஆல்  ஜஸ்ட்  ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் ” என்றேன்.,

 “ஜஸ்ட் ஃபேஸ்புக்” என்ற வர்த்தையைச் சொல்லும் போது மனதுக்குள் ஏதோ சில நெருடல்கள். அதை நட்பின் அளவுகோலாய் அவள் எடுத்துக்கொள்ளக்கூடாது என மனது பிரார்த்தித்தது.

“யூ மீன்?”

“அவர்களை தொடர்பு கொள்ள நினைக்கவில்லை ” என்பதை மட்டும் விளங்க வைத்தேன்! அவள் இதழ் திறவாமல் புன்னகைத்தாள்.

சில நிமிடங்களில் காரின் வேகம் குறைந்தது,.

“என்னாச்சு?”

“ஏதோ விபத்து போல” என்றவாரே ஜி.பி.எஸ்-ஐ  ரீஃப்ரெஷ் செய்தாள்!

டேனிஷ் குரல் ஒன்று கரகரத்தது.

“முதல் மைல் தள்ளி ஒரு விபத்து இன்னும் 7 நிமிடங்களில் சரி செய்யப்படும்” என்றாள். அநேகமாக அவள் எனக்கு மொழிப்பெயர்த்தாள் எனச் சொல்ல வேண்டும்.

ஹெலிஹாப்டர் சப்தம் கேட்டது. தூரமாய் ஒரு சின்ன இரைச்சல். அடுத்து எல்லாம் முடிந்ததாக கிளம்பத் தயார் என்று அறிவிப்பை கரகர குரல் மீண்டும் டேனிஷித்தது...

“விஞ்ஞானம் வியப்படைய வைக்கிறது. ” என்றேன்!

மீண்டும் புன்னகை! சாதாரணமாக ஒரு விபத்தை புன்னகைத்தவாறே கடந்து போயிருக்கிறோம் என அப்போது நினைவுக்குள் கொண்டு வர விரும்பவில்லை. ஒரு வேளை அது என் தேசமில்லை என்பதாலோ... ஆனால் அவள் வருத்தப்பட்டாளென்று கொஞ்சமும் அடையாளப்படுத்தவில்லை சலனமில்லாத அவள் முகம்!

ஐந்தாவது நிமிடக்கடைசியில் சீராக ஊர்ந்தன ஏனைய கார்கள்! அதனோடு என்னருகே இருந்த  இந்த ஜெர்மன் நாட்டின் இந்தப்  பிளமிங்கோ பறவையும் ஆக்ஸிலேட்டரை தன் ஹீல்ஸில்... அழுந்த அது தானாய் அவளிடம் சரணடைந்து  மெல்ல வேகம்பிடிக்கத்தொடங்கியது. ... இன்னும் எத்தனை தூரம் தான்... இருக்கட்டும் இவளோடு இந்த அருகாமையைக் கொண்டாட இன்னும் கால் நிதியாண்டுகள் ஆகும்.

ப்ளமிங்கோ !
நம் ஊராக இருந்திருந்தால் மயில் குயில் என்றிருப்பேன். ஆனால் எனக்குத்தெரிந்த ஒரே ஜெர்மன் பறவை ப்ளமிங்கோ தான்! கூந்தகுளத்தில் வருடா வருடம் சீசனுக்கு வரும்..!

வேறு பறவைகள் சட்டெனத் தோணவில்லை ட்ராவல் கைடைப் புரட்டினால் பார்ஹெட்டட் கூஸ், சோவல்லார், பின்டெய்ல், காமன் டீல், பிளெமிங்கோ, கூட்  இது தவிர பெலிகான் பெயிண்ட், ஓயிட் ஐபிஸ், கிரே ஐபிஸ், கிரே ஹெரன், பர்பிள் ஹெரன், ஸ்பூன்பில், காட்டன் டீல், இந்தியன் மூர்கென், கிங் பிஷர் எல்லாம் வாசிக்கலாம் ஆனால் இவளுக்கு பிளமிங்கோ பொருந்துகிறதே கச்சிதமாய்.. 

காருக்கு வெளியே கனமான இரைச்சல் வெளியில் கேட்டிருக்க வேண்டும் ஆனால் எனக்கோ குளிரில் காதடைத்து இருந்தது.
சுவ்வேரீனை நெருங்கி விட்டோம் என்றாள். சில நிமிடங்களே மீதமிருந்தபோது அது நிகழ்ந்தது.

வயர்லஸ் டாக்கியில் சப்தமாக பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். ஜெர்மன் நகர காவல்துறையைச்சேர்ந்தவராக அவர் இருக்க வேண்டுமென ஊகித்திருந்தேன்.

அவர் சப்தமாக பேசக்காரணம்! ஹெலிஹாப்டர் ஒன்று மிகச்சாதாரணமாய் என் தலைக்கு மேலே சுமார் 25 அடியில் பறந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு விபத்து நடந்திருப்பதை உணர்ந்திருந்தேன். நம்மூர் சுஜாதாவாக இருந்தால் அது என்ன ரக ஹெலிஹாப்டர் என்பது வரைக்கும் போகிறபோக்கில் எழுதி இருப்பார்.

அடுத்தடுத்து இரண்டு ஹெலிஹாப்டர்களை மிகச்சர்வசாதாரணமாக பார்க்கிறேன்., நம் ஊரில் முதல்வர்கள் மாநாடு நடத்தினால் ஊரைச்சுற்றி வட்டம் போடுவார்கள் அப்போது கைகாட்டிய மகிழ்ச்சி லேசாய் புன்னகைக்க முயற்சித்தது. கையெடுத்துக் கும்பிடும் கலாச்சாரமெல்லாம் இப்போதுதானே சமீபமாய்... தூரத்தில் புள்ளியாய் ஹெலிஹாப்டர் தெரிகிறதா.. இல்லை நான் ஆழத்தில் விழுந்துகொண்டிருக்கின்றேனா... கண்கள் மெல்ல இருட்டியது எனக்கு!

*

மீண்டும் மயக்கம் தெளிந்த போது நான் அந்தரத்தில் இரட்டைக்கயிற்று ஸ்ட்ரெச்சரில் மேலேழுப்பப்பட்டுக்கிடந்தேன். கீழே உற்றுப்பார்க்க முடியாத வண்ணம் என் கழுத்தில் ப்ளாஸ்டிக் வஸ்து ஒன்று அழுத்தி மாட்டப்பட்டிருந்தது! கழுத்தை திருப்பவே முடியாத படியாக அது இருந்தது.

மேலே இருந்து டேனிஷ் குரல் ஒன்று துரிதகனமாய் என்னை தூக்க ஒத்துழைத்தது. இப்போது நான் ஹெலிகாப்டரில் சாய்தளமாக படுக்க வைக்கப்பட்டபோது கீழே... நான் இண்டீரியர் அழகாக இருக்கிறதென வர்ணித்த அந்த வோல்க்ஸ்வேகன் கால்ஃப் ரக கார்.. சுக்குநூறாய் அப்பளமாகக்கிடக்க.. அப்போது தான் எனக்கு விபத்து நேர்ந்திருப்பதை உணர்ந்தேன்.

அய்யோ அந்த ப்ளமிங்கோ பறவைக்கு என்னாயிற்று!?
 கொஞ்சம் முன்னால் சில அடிகள் தூரத்தில் எங்கள் முன்னால் சென்ற ஏதோ ஒரு கம்பேனியின் கருப்பு நிறகார் கரப்பான்பூச்சி போல கவிழ்ந்து கிடந்தது. திடீரென்று நிகழ்ந்த அந்த விபத்துக்குக் காரணம் கருப்பு நிறக்காரின் ஓட்டுனருக்கு ஏற்பட்ட தசைகள் செயலிழப்பு காரணத்தினால் என்று பின்னாளில் சொன்னார்கள்..

காரைப்போல அவள் முகம்  அத்தனைச் சிதிலமடைந்திருந்ததாகச் சொல்லப்பட்டபோது நிச்சயமாய் என்னால் நம்ப முடியவில்லை..
மருத்துவமனை வாசனையையும் மீறி என் நாசிகளில் அவளின் பர்ஃப்யூம் வாசனை  இன்னும் நீக்கமற நிறைந்திருந்தது.

அந்த மெழுகு பொம்மைக்கு என்னென்ன கனவுகள் இருந்ததெனத் தெரியவில்லை காற்றுக்குமிழ் போல அவளோடு இருந்த நினைவுகள் சட்டென உடைந்து விட்டதென்ற போது கண்கள் இருட்டி மயங்கிக்கிடந்தேன்...

நான்கு நாட்கள் கழித்து....

ஜஸ்ட் ஃப்ரென்ட்ஸ்  என சந்திக்கத் தயங்கின  என் நண்பநண்பிகளின்  மிகப்பெரிய உதவியால் ...  இந்தியா வந்தடைந்த போது  விபத்துக்கான காப்பீட்டுத் தொகை யூரோக்களாக கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.
டிக்சனே ஜெர்மன் சென்று  அசைன்மெண்டை முடித்துவிட்டிருக்கிறார். ஜெர்மனியில் நினைவு தப்பியவன் சமநிலைக்கு வர எட்டுவாரங்கள் பிடித்ததாம்.

 ப்ளம்மிங்கோ-வை அதற்குப்பிறகு என்னால் பார்க்கவே போவதில்லை என நான் உணர்ந்திருக்கவில்லை அப்போது. ஆம் எனக்கு  பார்வை பறிபோய்விட்டதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். கருப்புக் கண்னாடிக்குள் என் உலகை மறைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. கடைசியாய்ப் பார்த்தது ஆக்ஸிலேட்டரை உந்தின அவளது ஹீல்ஸ் கால்களாய் இருக்கலாம்..

ஆயிற்று இரண்டு வருடங்கள்... கூந்தகுளத்தில்... சீசன் தொடங்கி விட்டிருக்கலாம்.  ஜெர்மன் நாட்டின் ப்ளமிங்கோ பறவை சீசனுக்காக வந்திருக்கக் கூடும்.. என்னால் பார்க்க முடியாது கேட்க மட்டும் தான் முடியும்

ஆகவே, யாரேனும் எனக்கு டேனிஷ் கற்றுக்கொடுக்கிறீர்களா? கடைசியாக ப்ளமிங்கோ என்னிடம் ஏதோ சொல்ல முயன்றாள் அது என்னவென அவைகளிடம் தெரியவேண்டும் எனக்கு ...

-கார்த்திக். புகழேந்தி.


There was an error in this gadget