புகழேந்தியும் ஒட்ட கூத்தனும் - ஒரு தற்காலக்கற்பனை

ஒட்டகூத்தரை உங்களுக்கு தெரிந்திருக்கும்... இல்லை தெரியாமலிருக்கும் ஆனால் நேற்றிரவில் எனக்கு அவரை நினைவில் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. அல்லது இப்போது தெரிந்து இருப்பீர். நான் யார் என்பதாவது நினைவிருக்கிறதா? அட நான் தானைய்யா புகழேந்தி!

நேற்றிரவு !
அது என்ன நேற்றிரவு. இதோ இப்போது தான்.. இதை எழுதும் போது கூடத்தான்.  என்ன திடீரென்று என்னை நினைத்து அழைக்கிறாயப்பா? என்று கூத்தரென்னருகில் வந்து கேட்டாலும் ஆச்சர்யமில்லை.

ஆனால் வரவில்லை நான் தான் தேடிப்போகிறேன்.  ஆமாம் ஏன் அவரைத்தேடுகின்றேன். நான் எங்கே தேடினேன் அவரல்லவே என்னை மீனவன் எனவும் வீரனா என்றும் கேட்டுப்போயிருக்கிறார், இந்த சோழக்கிளங்கவிஞர்களுக்கு வேலையே இல்லாமல் சங்கப் பாண்டியரை சரமாரியாய் வறுத்தெடுப்பதே வேலையாய் போயிற்று.

என்னைய்யா பழங்கதை சொல்கிறீரென்கிறீர்களோ!
இல்லை அப்படியானால் உங்களுக்கு புகழேந்தி புதியவன்.

யார் புகழேந்தி?
பாண்டிய அவையில் ஒரு பெருங்கிழவனா? இருக்கலாம்! இல்லை இளம்வயது நரம்பு புடைக்க தமிழ்சாறுகுடித்த கரிய உடல் இளையோனா ? அதுவும் இருக்கலாம். இல்லை பாண்டியத்தேவிக்கு படையல்ச்சீராக சோழநாடு கொடுத்த பெரும்புலவனாயும் இருக்கலாம்..!? லாமென்ன! அதே தான்.

என்னையா நீர் ஒட்டகூத்தனை கூட்டிவந்து புகழேந்திக்கு விளக்கம் கூறிக்கொண்டுக்கிடக்கிறீர். எனக்கு இப்போது ஒரு பஞ்சாயத்து தீர்க்க வேண்டி இருக்கிறது. 

சோழனுக்கும் பாண்டியனுக்கும் வேறு வேலையே இல்லை... அடித்துக்கொண்டே இருங்கள் தமிழைக்கொண்டு வாசிக்கும் நீர் அப்படிச் சலித்துக்கொண்டால்?

என்ன அப்பனே அவ்வாறுசொல்லி விட்டாய்... தமிழும் தமிழும் மோதாமல் போனால்... எங்கிருந்து புதுப்பதிகம் பிறக்கும்.. என்பது என் மறுமொழியாக இருக்கும்.

என்னம்மோ சொல்லுகிறீர் கிழவா! சரி ஏன் இந்நள்ளிரவில் வந்து உயிரெடுக்கிறீர்! 

இந்த புகழேந்தியைக்கிழவனென்கிறீர் உங்கள் ஒட்டகூத்தனென்ன வில்லெறி வலிமை கொண்ட வீரனோ!?

சரியைய்யா இப்போதுனக்கு என்னதான் வேண்டும். ஏன்  இத்தனைக்காலம் கடந்து வந்து தூங்கவிடாமல் என்னையும் உசுப்புகின்றீர்

நான் சோழனும் அல்ல பாண்டியனும் அல்ல புகழேந்தி என்ற உன் வலைப்பதிவை தெரியாத்தனமாக வாசிக்க வந்தவன்.


அதேயப்பா நான் புகழேந்தியின் மறுபிறப்பு,. நீதான் அந்த ஒட்டகூத்தன் என கூத்தனூரில் ஆணாதிக்கமாய் குடியிறுக்கும் சரஸ்வதி தேவி சொன்னாள்!.

எனக்கு கூத்தணூரும் இல்லை கூத்தாண்டவனூரும் இல்லை...  ஆனால் அது என்னய்யா சரஸ்வதியும் ஆணாதிக்கமும்.

சொல்கிறேன் கேளப்பா! ப்ரம்மனுக்கும் தேவிக்கும் படைப்புக்கும் அறிவுக்குமான சண்டை வர மாற்றி மாற்றி சாபமிட்டுக்கொண்டு மண்ணில் தமக்கையும் தமயனுமாய் பிறக்க... சாபல்யம் தீர்ந்ததும் அய்யகோ! அண்ணனா என் கணவனென்று அலறித்தவிக்க...  பிறைசூடன் முன்வந்து நீ இங்கேயே குடிகொள்! அடுத்த பிறப்பில் பார்க்கலாமென ப்ரம்மனை அழைத்துச்சென்ற ஆணாதிக்க ஸ்தலம் உன்னது ஊரப்பா!

அடப்பாவி! ஊரே மாசாமாசம் காணிக்கை கொடுக்கும் கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தேவியை  நீ பெரியாரைப்போல பொண்ணடிமை சொல்லிப்  பேசவந்தால் புரட்டி எடுத்திடுவார் ஊர் மக்கள் ஓடி விடு..

அது சரி ! கூத்தனுக்கு கூத்தெல்லாம் நினைவிலில்லை.. அய்யனே நீயே ஜென்மஜென்மம் முந்தி என்னைச்சிறையிலடைத்த சோழகுரு. நினைவுண்டா

நான் குருவா அடப்போய்யா!  இணையதளத்தில் வலம் வந்து கிடந்த நேரம் உன் தளம் பார்க்க வந்த குற்றம் மட்டும் தான் நான் செய்திருக்கின்றேன்.இதோ இப்போதே கிளம்பி விடுகிறேன் ஆளை விடு,


நிச்சயம் பெருங்கிழார்கவிக்கூத்தன் இவராயிராதோ!
சரி வந்தது வந்தீர்! எம் கதை கொஞ்சம் கேட்டுப்போயேன்.

கதை சொல்லுவேன் பேர்வழி என நீர் என்னை கடைந்த்தெடுத்து விடுவீர்,... நான் ஆள் இல்லை போரும்!


இல்லையப்பனே இல்லை செம்மொழி பெற்ற தமிழ் நாட்டின் பெரும் புலவர் இருவருக்கும் நடந்த பனிப்போர்க் கதை நீ கேளாமல் போவது சரியா? நீ சோழனோ பாண்டியனோ... நாளை தலைமுறைக்கு நற்றமிழ் வேண்டுமென நான் நினைப்பது பிழையா?

சரி சரி சொல்லித்தொலையும்... !

அப்படியே அப்பனே!

அப்பனுமில்லை மகனுமில்லை நீர் புகழேந்தி! இந்த காலத்திற்கு ஏற்றமாதிரி அழையுமைய்யா! ச்சே... உம்மோடு சேர்ந்து எனக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது சரி கதையை தொடங்கும்!


 முன் காலத்தில்  குலோத்துங்கனுக்கு தந்தையில்லாததால் சோழர் குருவான ஒட்டகூத்தரென்னும் பெருங்கவிஞர் அவருக்கு பெண் கேட்டுப் பாண்டிய அவைக்கு வந்தார்.

என்ன ஃப்ளாஷ் பேக்கா? இருங்க மிஸ்டர் புகழேந்தி/// ஒரு கொசுபத்தியைச்சுற்றிக்கொள்கிறேன்...

ஆகட்டும்...

 பாண்டியனுக்கும் சோழனுக்கும் ஆகாத காலம் அது! எப்போதும் அப்படித்தான் ஆனாலும் நல்லெண்ணம் பொருட்டும் அமைதியின் பொருட்டும் கூத்தன் இப்படி ஓர் முடிவெடுத்தார்.,

 தீர்மானித்தாள் குலோத்துங்கனுக்கும் பாண்டியராஜதேவிக்கும்...  புதுமணம் செய்யத் தீர்மானித்து வைகைக் கறையில் அமைந்த பாண்டிய அவை வந்தார்,...!


பெண்கேட்டு வந்தே! தமிழ் பெண்கேட்டு வந்தென்..
பொன் விளைந்த தஞ்சை மண் சோழனுக்கு
தக்க பெண் கேட்டு வந்தேன்
ஐயாறு தீரம் அலுங்காமல் பாயும் நகர்
ஆளும் குலோத்துங்கச் சோழனுக்குப்
பெண் கேட்டு வந்தேன்..

என்றுரைத்தான் ஒட்டக்கூத்தன்...

என்வீடு வந்த தமிழ் முன்கூத்தனுக்கு வணக்கம்
நில்லாது நிறைந்த  தமிழ் வைகைநதி பாயும்
மண்ணாண்ட மீன் பாண்டியன் பெற்ற
பெண்மகளைக் கொடுக்க என்ன வளம் கொண்டான்
சோழன்.  என்ன வளம் கொண்டான்.

மன்னன் மகளைக்கொடுக்க என்ன வளமுண்டு எனப் பெண்வீட்டார் கேட்பது நியாயம் தானே?

ஆமா இப்போல்லாம் மாப்பிள்ளைக்கு வீடு வாசலிருக்கான்னு கேக்கும் முன்னாடி ஊர்ல கரண்ட் இருக்கான்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க! மிஸ்டர் .புகழ்

ஆஹா! அவ்வளவு தட்டுப்பாடா!?

பின்ன! இன்னும் நீர் லெந்த்தா இழுத்தீர்ன்னா கரண்ட் போய்டும் சொல்லிட்டேன்!

சரி சரி... ஆக மாப்பிள்ளை வளம் பற்றி   கேட்டு வைத்தான் மாமன்னன் பாண்டியனார்..

அடக்கமாய்ப் பதில் சொல்ல வேண்டிய சோழனோ இளக்காரமாச்சொல்லி வைத்தான் இப்படி

எப்படி..?

இதோ இப்படி

என் ஆலிலைக்கு உம் வேம்பிலை தகுமோ
ஆதித்தன் புலிக்கு அம்புலி தான் தகுமோ
வீரசோழனுக்கு மீனவனும் தான் நிகரோ
வெல்லும்புலிக்கொடிக்கு வலைசிக்கும் மீன்நிகரோ
விரிந்தோடும் காவிரிக்கு இவ்வைகையும் நிகரோ
சூரிய குலச் சோழனுக்கு சந்திரகுல பாண்டியன் நிகரோ
குரந்தை மலைக்கு இந்த கொற்கை மலை நிகரோ
உலகாளும் சோழநாட்டுக்கு இக்கையளவு பாண்டியநாடும் நிகரோ

 என்று ஒட்டக்கூத்தன் நளவெண்பா பாடிய புகழேந்தியான என்னை ஓரக்கண்ணால்  நக்கலடித்துச் சிரித்து வைக்கிறான்.

ஓஹ்.... நீர் பாட்டெல்லாப் பாடுவீரோ? புகழ்.


ஆமைய்யா இப்போது தொண்டை வரண்டு விட்டதால் குறைத்துக்கொண்டேன்.

பாண்டியப்பெருமை கூற வேண்டிய  குரலும் புகழேந்தியான எனக்கு உரியதல்லவா.. விடுவேனா வெண்பாவெழுதிய வேந்தன் மகன்.

அகத்தியனும் தமிழ் சொன்ன அவையிதுவோ அம்மானே
சிவன் விளையாடுந்த் திருவிளைகள் நடந்ததிங்கே அம்மானே
மால் நாராயணன் எடுத்த அவதாரமும் மீனோ புலியோ அம்மானே
பிறைசூடன் தலை சுமந்தது நிலவோ கதிரோ அம்மானே
உலகாளும் தமிழ் கொடுத்தது இவ்வைகையோ காவிரியோ அம்மானே
கடல் பணிந்தது சோழனுக்கோ பாண்டியனுக்கோ சொல்நீ அம்மானே
இப்பாண்டியப்பெருமை சொல்லி வைக்க பட்டயங்கள் தீர்ந்திடுமே அம்மானே

என்று பதிலடி கொடுத்து வைத்தேன்!

அப்போ உங்க சண்டையில கல்யாணம் கேன்சல் ஆகி இருக்குமே!

அதானே இல்ல கல்யாணம் நடந்ததே,...

எப்படி?

அது எப்படியோ.... நடந்தாயிற்று !

அப்போ நீங்க ரெண்டுபேரும் தமிழ்சினிமா வில்லன் ஹீரோ  மாதிரி இன்னும் 
 முட்டிக்கிட்டு திரிவது ஏன்?

சொல்கிறேன் அச்சோகத்தையும்... திருமணச் சீராய் மன்னன் மகளுக்குத் துணையாய் என்னையும் பாண்டியனார் அனுப்பி வைத்தார்,

என்னது அந்த காலத்தில் இதெல்லாம் உண்டா? ஒரு வேல ரேடியோ, டேப்ரிக்கார்டர் மாதிரி போரடிக்க்கும் போது உம்மை பாட்டுப்பாடச்சொல்லி கேட்பதற்கா?

ஏனப்பா! இப்படி?

சரி மேலே சொல்லும்!

சோழர்குணம் தெரிந்தது தானே... பெண்ணை மணம் கொண்டும் புலவனை சிறைகொண்டும் விட்டார்கள்!

என்ன உம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களா?

ஆமப்பா ஆம்!

அடடே களி தானா? அப்போ!

சிறையிலடைத்த கூத்தன். குணத்தில்தான் முரடன் தமிழில் இல்லை
புலவனான நான் அவரை எதிர்த்துப்பாடிய ஆற்றாமையில் அப்படிச் செய்து வைத்தார்.

ஓஹ்! அப்போ உன் மேல செம காண்டுல இருந்துருப்பாரு போல ப்ளான் பண்ணி தூக்கிட்டார்யா!

அப்படியும் இருக்கலாம்! என்னோடு சிறையில் இன்னும் நான்கு பேர் இருக்க...
அவர்கள் இப்படிப்பேசிக்கொண்டார்கள்.

பிள்ளைபாண்டியன் தலையிலடிப்பான்
வில்லியாழ்வார் காதறுப்பார்
ஒட்டகூத்தனோ இருதலை முடிகட்டி தலையெடுப்பார்
இம்மூவரும் இல்லாததிங்கே சொல்லில்லாதவனெல்லாம் கவியென்பான் என்றுபேசிக்கொண்டார்கள்!

ஆகா! நல்ல வேலை இப்போ அவங்க மூணு பேரும் இருந்திருந்தா இணையத்தில் எழுதப்படும் கன்னாபின்னா கவிதைக்கெல்லாம் தண்டனையா தலை இருந்திருக்காது போலையே!

ஆமப்பா! கூத்தனின் சட்டம் சோழர் ஆட்சியில் வலுவாக இருந்தது தலையாய குருவென்பதால் கேட்க ஆள் இல்லை, நானும் சிறையிலிருக்க
உடன் நால்வருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தேன். ஒட்டகூத்தர் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலுரைப்பவனுக்கே விடுதலை என்பது விதியாக இருந்தது,


அப்படியும் என்னை சிறைவாசம் விடாதிருக்க சோழனும் கூத்தனும் மேல்மாடத்தில் நடந்து வர ... சோழனென்னை கைகாட்டி அதோ நளவெண்பாவிசைத்த புகழேந்தி என்றான்.

என்னை பாண்டிய மருமகனார் பாராட்டியது பொறுக்காத கூத்தன் இப்படி பாடினான்,

வேங்கைப்புலி வரக்கண்டால் மான் மறைந்தோடிவிடும்
வற்றி உலர்ந்த காட்டின் செடிகொடிகள் எரியும் தீயில் பொசுங்கிவிடும்
பெரும்சுறா  வரக்கண்டால் சிறு  மீன்கள் சிதறியோடும்
சூரியனை முன் கண்டால் புல்லின் பனி மறைந்துவிடும்

என்று பாடிவைத்தார்,

அடடே உம்மை அவர் ரொம்ப டீல்ல விட்ருக்கார்போல..!
 சரி பதிலுக்கு உம்ம பாட்டை அவிழ்த்து விடவேண்டியது தானே! என்ன பாடினீர்,,,

வழக்கமாய் பாண்டிய பூமியிலென்றால் வெட்டிப்பாட்டு பாடி இருப்பேன் இது சோழதேசம் மேலும் எம்நாட்டின் மருமகனார் முன் அனுமதியில்லாமல் பாடுவதோ? ஆதலாம் கேட்டுவைத்தேன் இப்படி! சோழரே இக்கூத்தரின் பாடலை நான் வெட்டிப்பாடவோ! அல்லன் ஒட்டிப்பாடவோவென்று...

குருவுக்கும் கொண்ட நாட்டுப்புலவனுக்கும் இடையே ஏதும் பங்கம் வேண்டாமென்றே எண்ணிஒட்டிப்பாடிவையும்  புலவரே என்றார்.


ஆகா! சோழன் நீதிமானாயிற்றே!

ம்ம்ம் நான் பாடியதை கேளாயோ?

காத்துக்கிடக்கிறேன் புலவா பாடும் பாடும்!


புள்ளிமான் துள்ளிவர வேங்கைப்புலி மறைவதென்ன!
வற்றிக்கிடக்கும் கானகத்தை செந்தனலும் எரிக்கமுடியாததென்ன.!
சிறு மீன் பாண்டியனைக்கண்டு வெஞ்சுறாவும் பயந்ததென்ன...
புல்லமர்ந்த பனிமறுத்து சூரியனும் சுருண்டதென்ன..!

சபாஷ் வாத்தியாரே...!

இப்படி கூத்தனுக்கும் எனக்கும் ஏழாம்பொருத்தமாகிப்போனதால் விருத்தமகிக்கிடந்தது தமிழ்...! ஒன்று சொல்கிறேன் கேளப்பா! தமிழ் வளரவேண்டுமாயின் நல்லதமிழ்ப் பாவலரோடு பழகிடல் வேண்டும். நிதம் நான்கு செய்யுள் படிக்க வேண்டும். இக்கால இளையோர்க்கு பேசவே தெரிவதில்லை. காரணம் மொழியோடு பரிச்சயமில்லை, மொழியோடு பரிச்சயமில்லாமல் மாற்று மொழி தேடுகின்றோம்! மாற்று மொழியிலும் தேறாமல் இலக்கணம் மீறி புலம்பல் கொண்டோம். ஆதி தொன் தொட்ட தமிழ் அல்லாமல் வீட்டு ஜன்னல் வழியாகுமோ...!

எங்கே ஆங்கிலக் கலப்ப்பில்லாமல் தமிழ் பேச யாரால் முடிகிறது இன்று... அனிச்சை செயலாக ஆங்கிலம் ஆகிப்போன வேதனை அறிவது எப்போது, உலகெங்கும் ஆண்ட நம் மொழியின் பெருமை சொல்கிறேன் கேள்!

மாண்ட பிணம் தோண்டி மன்னவர் செப்பெடுத்து
தொன்மை சொல்வார் அங்கே!
அழிந்த மொழிக் கொணர அகம்பேசி
வழிகொண்ட வருமங்கே!
ஆயின்  தோண்ட மொழி தோண்டி
பிறவர் மொழி பிரசவித்து நாகரீகங்
கற்றுரைத்து ஆயர்க்கலை அறுபத்து
நான்கென  உலகமறிவித்தவரும் யாமே

போற்றும் தமிழ் யெம் பூமி என்றும்... 
வாழிய வாழியவே!



**** முற்றும்****




இலக்கண மரபுகளை மீறி,  எளிய தமிழ்கொண்டு எழுதியது, பிழையெதுவெனினும் புகட்டுக,

-புகழேந்தி...

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil