Tuesday, 29 March 2016

அன்னதோர் சொல் : அஸ்தினாபுரம் | ஜோ டி குருஸ்

               

வாழ்க்கை அவரவரது போராட்டங்களால் ஆனது. நிரைந்து ததும்புகிற மனத்தோடு வாழ்க்கைப்பாடுகளின் பின்னோக்கிப் பார்க்கிறபோது அத்தனையும் ஊழ் என்று வலியுறுத்துகிறது இந்தப் போர்க்களம். எத்தனையோ இடர்களை சிலுவைகள் போல் சுமந்துகொண்டே வாள்களைச் சுழற்றி முன்னேறுகிறோம். யுத்தத்தின் பெருங்குரல்  உள்ளே கிடந்து அரற்றிக்கொண்டே இருக்கிறதை மறைத்தபடி...
அஸ்தினாபுரம்

தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் நேரடியாக எந்தக் களத்தொடர்பும் இல்லை. ஆனாலும் முழுமொத்தப் பக்கங்களில் உருளும் பகடைகளைக் காண்கிறபோது அஸ்தினாபுரம் என்ற தலைப்பு நிகரற்றதாய் பிணைந்து கொள்கிறது.

 கொற்கை நிலத்தில் ஆமந்துறையில் பிறந்து, முதல் மனைவியின் கடூரத்தினால் வாழ்க்கைப் பாதையில் புரட்டியெடுக்கப்பட்ட அமுதனுக்கு, தொண்டை மண்டலத்தில் செம்மாங்குப்பத்தில் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் இளையவளாகப் பிறந்து, ‘வழக்கு முடியும் வரை நீ யாரென்று யாரும் கேட்டால் வேலைக்காரி என்றுவிடுகிறேன்’ எனச் சொல்லி மாலை மாற்றிக்கொள்ளும் புதுமனைவி ஆனந்தியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது அத்தினாபுரத்துப் பயணம்.

அடிப்படையில் கடற்கரைக்காரனாகப் பிறந்த அமுதன்  ஒரு முனைவர் பட்டத்துக்காக ஏவல் வேலைகள் செய்து, மீன்வளத்துறை அதிகாரி வேலைக்கு ஆசையாகக் காத்திருந்து, அது தன் உயர் அதிகாரியோடு கொஞ்சிக் குலவுகிறவளுக்கு நெருக்கமான யாரோ ஒருவருக்குப் பரிந்துரைக்கப் பட்டதை அறிந்து, ஆத்திரத்தில்  கைநீட்டி, ஒருகட்டத்தில் பட்டமாவது மண்ணாவது என்று மும்பைக்குச் சென்று ஏற்றுமதி இறக்குமதியில் கோலோச்சும் துறைமுக வர்த்தகத்தில் அடிப்படையிலிருந்து மேலேறத் துவங்குகிறான்.  

போர்க்களத்தில் ஆயுதங்கள் எப்போது ஒருமுகப் பக்கத்திலிருந்து தாக்குவதில்லையே. மனைவியோடு கூடவும், மகிழ்ச்சி கொள்ளவும் வழியில்லாத வாழ்க்கை ஒருபக்கம். உடன் பிறந்தவனுக்கு இரக்கப்பட்டு கடன்பட்டதுதான் மிச்சம், ஆடம்பரத்தில் மிதக்கிற மனைவியை வெறுத்துத் தள்ளுவதும், பிறகு ஒன்று சேர்வதும், தன் உடையில் தானே தீவைத்துக்கொண்டு வரதட்சணைக் கொடுமைப் படுத்தினான் என்று வழக்குகள் போட்டு சாவடித்ததுமாக அமுதன் ஒவ்வொரு பக்கங்களும் வாள் வீச்சுகளை எதிர்கொள்கிறான்.

அவன் கண்முன்னே இருக்கும் ஒரே பெரிய திறப்பு இந்தக் கடல். கடல்சார் துறைமுகத் தொழில். பன்னாட்டு வணிகர்களையும், கப்பல் முதலாளிகளையும், ஏற்றுமதி, இறக்குமதி தரகர்களையும், கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், சி எஃப் எஸ் ஆபரேட்டர்களையும், கண்டெய்னர் லைனர்களையும், டிரான்ஸ்போர்டர்களையும், ஸ்டிவிடோர்களையும், லிஃப்ட் ஆப்ரேட்டர்களையும், சர்வேயர்களையும், ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களையும், யூனியனின் மடிப்பு கலையாத சட்டைகளையும் கூடக் கையாளத் தெரிந்த ஆளுமைத்திறன். எங்கே காய் நகர்த்தினால் எங்கே கார்கோ நகரும் என்பதுவரைக்கும் அனுபவத்தில் தனக்கென ஒரு கம்பசூத்திரமே உருவாக்குகிறான் அமுதன்.

என்னதான் போர்க்கருவிகளைக் கையாளத் தெரிந்தவனாய் இருந்தாலும் புல்லுருவிகளின் அடிமட்டச் செயல்களால் நிர்வாகம் முதல் தொழில் வளர்ச்சி வரைக்கும் ஏகப்பட்ட முட்டுக்கடைகளை முறியடிக்கவேண்டி நேர்கிறது. முருகானந்தம் மாதிரியான நபர்களால் நாட்கள் இலகுவாகிறது. (பி.எம். என்கிற அந்தக் கதாப்பாத்திரத்தை நான் அறிந்தவன் என்றே நினைக்கிறேன். என்ன ஒரு அற்புதமான மனிதர்.)

வரதட்சணைக் கொடுமை என்று போடப்பட்டப் பொய் வழக்குகளால்  உழைப்பெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிறது. தன்னுடைய முதல் பிள்ளை கருவாகி இருக்கும்போது வளைகுடா நாட்டில் வெயிலுக்குக் காய்ந்து பேரீச்சை மரத்து நிழலில் கடிதமெழுதுகிறார் மனைவி ஆனந்திக்கு. ஆண்மையில்லாதவன் என்ற பழிச்சொல்லைக் கழுவ வந்துதித்தப் பிள்ளைகளைக் கண்ணீர்மல்கக் கொண்டாடுகிறார்.

வளர்ச்சித் திட்டங்களை நோக்கிப் பயணிக்கும் நிறுவனங்களில் மேல்மட்டப் பெரிச்சாளிகள் விசுவாசமும் அதே நேரம் கள அனுபவமும், உழைப்பும் கொண்ட அமுதனைத் தங்கள் ஆளுமைகளால் கட்டுப்படுத்த நினைக்கும்போதெல்லாம் வாமன அவதாரமாய் விஸ்வரூபம் எடுக்கிறார் அமுதன். முதல் அடி வைக்கும்போது கிரானைட் கல் ஏற்றுமதியில் மாற்றங்களைப் புகுத்துகிறார். இரண்டாவது அடியில் கல்லோடு கடலில் விழுந்த லாரியை ராட்சத கிரேன்மூலம் கடலில் இருந்து தூக்கி நிறுத்துகிறார். காற்றாலை மின்சாரத்திற்கான காற்றாடிகளின் நீண்ட பிளேடுகளைச் சென்னை துறைமுகத்தின் வழியே எடுத்துச் செல்லமுடியும் என்று புதர் மண்டிய இடத்தைச் சீரமைத்து களம் அமைக்கிறார். இதெல்லாம் மட்டும்தானா.. அமுதன் செய்யும் அனாயச சாகசங்கள் மேலாண்மைக் கல்வி கற்பவர்களுக்குப் பாலபாடமாக அமையக்கூடியவை.

தொட்டதெல்லாம் அதிரடி காட்டுகிறவரென்றாலும் ஆள் கொஞ்சம் திமிர்பிடித்தவன், கோபக்காரன், யாருக்கும் அடங்காதவன் என்ற சொற்களினால் மேலோர் அவரை விலக்கி வைக்க, அமுதனோ தார்பாய் சுற்றிப் படுத்துக்கிடந்த ”ஜோக்கர்” தொழிலாளர்கள் மீது லாரி ஏறி இறந்துபோக, அடுத்த நிமிடமே சம்பவ இடத்தில் ஆஜராகி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து தன்னுடைய நிறுவன ஐடிகார்டை அவர்கள் சட்டைக்குள் நுழைத்து இறந்துபோனவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வழிசெய்துகொடுத்து கீழோர்க்கு மனதிற்கு நெருங்கின ஆளாகவே காட்சி தருகிறார். அமுதன் என்றால் அவர்கள் அத்தனை பேருக்கும் நிஜமான மரியாதையும் பேரன்பும்.

அமுதன் தன் சொந்த வாழ்க்கையில், பெற்ற தாயாலும், மணம்புரிந்த முதற்பெண்ணாலும், உடன்பிறந்த சகோதரனாலும், சகோதரியாலும், ஏன் தந்தையாலும்கூட ஒருகட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவராகவே வாழ்கிறார். எப்போது வீழ்வான் என்று கண்கொத்தி நாரையாகக் காத்திருக்கிறவர்களுக்கு நடுவே அயராத உழைப்பு அவரை முதலாளிகளால் கொண்டாடச் செய்கிறது. பேர் சொல்லி அடையாளம் சொல்லி அமுதனின் திட்டங்களைச் சிலாகிக்கிறார்கள் பெரும் முதலாளிகள்.

ஆனாலும் சிலந்திவலை படிந்த குளியலறையில் தண்ணீர் நின்று போக சமையலுக்கு வைத்திருந்த குடத்தில் மேல் கழுவிக் கொள்ளுகிறவராக, பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுக்கிறவராக  அமுதன் கதாப்பாத்திரம் என்ன ஒரு எளிமைத்தன்மை கொண்ட ஆளுமை. கடற்புரத்தில் சக்கரவர்த்தி மாதிரி சூத்திரங்களால் தன் முன்னே இருக்கும் கணிதச் சமன்பாடுகளை வெட்டி வீசுகிற மனிதர் அமுதன். சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய திறமைசாலி. ஆனால் திறமைசாலிகளை உலகம் சரியான தீனிபோட்டு வளர்த்துவிடுவது இல்லைதானே. அடுத்தடுத்து நிறுவனங்களுக்கு மாறுகிறார். மனத்தடை கொண்டவராக இருக்கிறார். ஹீரோயிஸமெல்லாம் பண்ணாமல் தன்னை அறிந்தவராக வெளிப்படுகிறார்.

முழுக்க முழுக்க 8118கி.மீட்டர் நீளமுள்ள இந்தியக் கடற்புரத்தின் இன்றைய கார்பரேட் எழுச்சியையும், மாற்றங்களையும், தலைவிரித்தாடும் லஞ்ச, ஊழல், வளர்ச்சியின்மை, துறைசார்ந்த அனுபவமின்மை, பொறுப்பின்மை எல்லாவற்றுக்கும் எதிர்காலத் திட்டமிடலின்மை ஆகியவற்றை தன்னுடைய இத்தனை ஆண்டுகால அனுபவங்களால் கேள்விகேட்கும்படியாக நாவலின் பின்பகுதியில் ஒரு உரை நிகழ்த்துகிறார். பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் அதிகபட்சமான காசு எங்கே வீணடிக்கப் படுகிறது என்ற உண்மையை அந்த உரையின் வழியே கடந்துபோகிறார்.

எல்லோரும் கச்சத்தீவுக்கு அடித்துக் கொண்டிருக்கும்போது, “வெட்ஜ் பேங்க்” பகுதியில் நம் மீன்வளத்தைச் சிங்களன் சூறையாடுகிறான் இதை எவனும் தட்டிக் கேட்பதில்லை. மீன் கொழிக்கும் கடல்பரப்பு என்று எக்கச்சக்கமான சங்கதிகளை நாவல் வழியே எடுத்து விவாதங்களுக்கு முன் வைத்திருக்கிறார் ஜோ டி குருஸ். துறைமுகப் பாடுகள், சுனாமி, தனி ஈழம், திரிகோணமலை கடற்கரை, எண்ணூர் துறைமுகம், துறைமுக நகரத்தின் போக்குவரத்து நெரிசல், வெள்ளைக்காரர்கள் காலத்தில் போட்ட துறைமுகச் சாலை, சரக்குவாகனம் வரும் சாலையில் அலங்கார வளைவு, தண்டல்காரர்களின் அழிச்சாட்டியம் என்று நாவலின் பல பக்கங்கள் அழுத்தமான பதிவுகளாக வெளிப்படுகின்றன.

இடையிடையே குடும்பச் சூழலும், பிள்ளைகள் வளர்வதும், வழக்குகளில் விடுபடுவதும், தந்தை அல்வாரிசின் மரனமும், தாயின் அருகாமையிலும் அவருடைய கனல் கக்கும் வார்த்தைகளும், அமுதன் என்ற கதாப்பாத்திரத்தின் வழியே பாண்டவத்தில் நிகழும் வீழ்தல், எழுதல், குரோதங்களை பிரதிபலித்துச் செல்கின்றன. எதிலும் நானில்லை எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன் என்கிற தன்னுடைய வார்த்தைகள் மூலமாகவே தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார் அமுதன்.

இறுதியாக  தன் தாயோடும், பிறகு தன் மகன் எழிலனோடும்  நிகழ்த்துகிற உரையாடல் அத்தனை செறிவான இடங்கள். இருபக்கமும் எடை கூடிக் குறையும் தராசின் அதிர்வு போல அக்காட்சிகள் நிகழ்கிறது. வட்டார வழக்கின் ருசித்தனம் கடினமில்லாது இனிக்கிறது.

இந்த நாவலின் ஒரு அத்தியாயத்தில் வரும் சில வார்த்தைகள் என்னை திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்தபடியிருந்தன.

“ ரொம்ப போரடிக்கிறனோ?”

“ஏதாவது புதுசா தெரிஞ்சிகிட்டே இருக்கணும் சார். உங்களோட பிரயாணம் பண்ணுறதுக்கு வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்குவம்”

“தெரிஞ்சி செய்யிறதுல திரில்லே இல்ல. தெரியாம முட்டி மோதி செய்யிற பார்த்தியா அதுலதாம் திரில்லும், அதைவிடப் பெரிய பொக்கிஷமான அனுபவமும் இருக்கு. காரணம் சுயமா  சிந்திச்சிருப்ப”

இந்த சின்ன பேச்சாடலில் தான் நான் ஜோ டி குருஸ் என்கிற எழுத்தாளரோடு மிகையாகப் நெருங்கிப் போகிறேன். கொற்கைக்குப் பிறகுதான் ஆழி சூழ் உலகு வாசித்தேன். பிறகு கழுகெழு கொற்கையைக் கையில் கொடுத்து அகநாழிகை பொன்.வாசுதேவன் வாசிக்கச் செய்தார். நண்பர் கதிர் கொடுத்த வகைக்கு இப்போது அஸ்தினாபுரமும் வாசித்து முடிந்தது. எல்லா புரங்களிலும் இந்த இவருடைய மொழியும், எழுத்தும் அத்தனை இம்சை பண்ணுகின்றவை என்னை. “புதுசா ஏதாச்சும் கத்துகிட்டே இருக்கணும் என்கிற இம்சை” அவ்வளவுதான்.

முழுதாக ஒரு நாவல் வாசிக்கச் செலவிடும் நேரத்தை அஸ்தினாபுரம் மொத்தமும் அர்த்தமுள்ளதாய் மாற்றித்தந்தது. தெற்கிலிருந்து ஏகக் கணக்கில் கனவுகளோடும், கொஞ்சமே கொஞ்சம் பள்ளிக்கூட சகவாசத்தோடும் கூடை நிரம்ப பிரச்சனைகளையும், அது தந்த மனக்காயங்களின் தழும்புகளையும் தூக்கிக்கொண்டு இடம்பெயர்ந்து வந்தபின், பிரச்சனைகளை ஓரம் வைத்துவிட்டு கனவுகளைத் துரத்தி முட்டி மோதி  மேலேறத் துடிக்கிற என்மாதிரி பேருக்கு இந்த வாசிப்புத்தான் வாத்தியார்கள். ஒவ்வொரு காகிதப்பக்கங்களிலும் எழுதுகிற எழுத்து எவனோ ஒருவனுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்குமென்பது எவ்வளவு உண்மை.

நிறைய குத்துப்பட்ட பிறகும் அன்பினாலானவன் தான் நான் என்று நிற்கிற அமுதனைப் பார்க்கையில் எவ்வளவு ஒரு உவகை பிறக்கிறது.. எல்லா புத்தகத்தையும் வாசிக்கக் கொடுத்து வைத்துவிடுவதில்லை. சிலவற்றைத்தான் வாசிக்கிறேன். அதில் ஏதோ ஒரு பக்கத்தில் நானும்  வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில்  பீறிடுகிறது கண் சுரப்பி. அஸ்தினாபுரத்தை என் விருப்பமான புத்தகங்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். நண்பன் கதிருக்கு நன்றி.  ஜோ சாருக்கு  மரியாதை.

-கார்த்திக். புகழேந்தி

29-03-2016. 

Monday, 21 March 2016

ஆரஞ்சுமுட்டாய் நூல் அறிமுகக்கூட்டம் | பொள்ளாச்சி இலக்கியவட்டம்

பொள்ளாச்சி வந்திறங்கியபோது மணி ஏழு சுமார் இருந்தது. பூபாலன் ஏற்கனவே அறைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பழைய சுண்ணக் காரை கட்டிடத்தை தெளிவாக சீர்திருத்தி விடுதியாக்கி வைத்திருந்தார்கள். அறையின் குளிர்ச்சியில் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் குளித்து புறப்பட்டு பக்காவாக ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குப் போகிற தொனியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தமுறை நகரத்தார் சங்கத் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 35வது நிகழ்ச்சி இது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ஒவ்வொரு மாதமும் சலிக்காமல் மூன்றாண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கீதாபிரகாஷ் என்கிற நடன ஆசிரியை கவிஞராகப் பரிணமிக்கிற நிகழ்வோடு சேர்த்து என்னுடைய புத்தகத்திற்குமான அறிமுகக்கூட்டம் இது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போதே பூபாலனிடமும் பிறகு அம்சபிரியா அவர்களிடமும் அட்டண்டன்ஸைப் போட்டுவிட்டு வாகாகக் கிடைத்த சேரில்ப்போய் உட்கார்ந்துகொண்டேன். கவிஞர் ஆன்மன் பக்கத்தில் இருந்தார். கடங்கநேரியானின் சொக்கப்பனை கூட்டத்தில் அவருக்கு என்னைத் தெரிந்திருந்ததால் சத்தமில்லாமல் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறவரைக்கும் அவரோடு பேசிக்கொண்டிருப்பது சவுகரியமாய் இருந்தது எனக்கு.

மேளம் இசைக்கும் இடைவெளியில் படித்தவற்றுள் பிடித்தவற்றை பார்வையாளர்கள், படைப்பாளர்கள் என்ற வித்யாசபேதமில்லாமல் மேடையில் பேசினார்கள். தோழர் பௌசியா பானுவின் பாரதி பாட்டுக்கு எல்லோருமே சிலிர்த்துத்தான் போனார்கள். முதலில் ‘தேடிச்சோறு நிதந்தின்று… ’என்று அவர் கவிதையைச் சொல்லத் தொடங்கினதும் அவருடைய மொழிச்சரளம் எனக்குக் கடுங்கோபத்தைக் கொடுத்தது. என்ன சொற்களை இப்படிப் பிரிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது நான் பாரதியை இப்படித்தான் வாசிக்கிறேன் என்று தன்விளக்கம் சொன்னதோடு பாட்டின் அர்த்தத்தை அவர் வெளிப்படுத்தினபோது கைத்தட்டிக்கொண்டிருந்தேன்.

தோழர்.கீதாபிரகாஷ் அவர்களின் ‘ஜனுக்குட்டியின் பூனைக்கண்கள்’ கவிதைத் தொகுப்பு முதலிலே வெளியிடப்பட்டது. மீ. உமாமகேஸ்வரி அவர்கள் தொகுப்பை வெளியிட, கவிஞர் அம்சப்பிரியா நூலைப் பெற்றுக்கொண்டார். அண்ணன், அப்பா, கணவர், தோழர்கள் என்று எல்லாரையும் மேடைக்குப் பக்கம் அழைத்து புத்தகத்தை வெளியிடச் செய்த நிமிடத்தில் எனக்குக் கை குறுகுறுக்க மேடையை விட்டெழுந்து கேமிராவைத் தூக்கிக்கொண்டு படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
முதலில் ந.முத்து அவர்கள் கவிதைநூலுக்கான வாழ்த்துரை வழங்க, அடுத்ததாக உமா மகேஸ்வரி அவர்கள் கவிதைகளை இழை இழையாக ரசித்து ரசித்து அதுபற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எந்தக் கவிஞனும் அப்படிப் பேசினால் தேன்குடித்த தும்பிமாதிரி கனத்துப் போவான். அவருக்குப் பிறகு பேசின பூபாலன் மையச்சரடாக சில கவிதைகளைக் குறிப்பு வைத்துக்கொண்டு அறிமுக உரையை வழங்கின பிறகு கவிஞரை மேடைக்கு அழைத்தார்கள். “எனக்குப் பேச வராது; நான் பிறவி ஊமை” என்று உண்மையைச் சொன்னபிறகே பேசத்தொடங்கினார் தோழர் கீதாபிரகாஷ்.  

அவருடைய கவிதைகளை நான் வாசித்திருக்கவில்லை. அரைநாள் பழக்கத்தில் ரொம்ப உற்சாகமான, கொஞ்சம் குழந்தைத்தனமான மனுஷியாகத் தெரிந்தார். இலக்கிய வட்டத்துக்கார நண்பர்கள் தோழமைத்தனத்தோடு அவரை கண்ணீர் வருமளவுக்கு அன்பு செய்கிறதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மேற்கண்ட அன்பு என்பதை வம்பு என்றுகூட மாற்றிப் படித்துக்கொள்ளலாம் நீங்கள். 

உயிர்மை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் காரணமாக தோழர்.இளஞ்சேரல் விழாவுக்குச் சற்று காலதாமதமாகத்தான் வந்திருந்தார். அவர் வரும் வரைக்கும் வலை இல்லாத படகுமாதிரி உட்கார்ந்துகொண்டிருந்தேன். கவிதை நூல் வெளியீடு, வாழ்த்துரை, அறிமுக உரைகளுக்குப் பிறகு தோழர்.இளஞ்சேரல் ஆரஞ்சுமுட்டாய் கதைகள் குறித்த தன்னுடைய மதிப்புரையை வழங்கினார். நான் அவரிடம் பெரிய விமர்சனங்கள் கிடைக்குமென்று எதிர்ப்பார்த்திருந்தேன்.

ஆனால் அவர் ‘நுனிக்கு நெல்லுக்கு வலிக்காமல் கதிரடிக்கிற மாதிரியாக’ என் கதைகளைப் பற்றிய வாசிப்பனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். தாமிரபரணி நதியைச் சுற்றிப் பிறக்கும் கதைகளின் இயல்புகளைப் பற்றிப் பேசினதோடு, ‘இரயிலுக்கு நேரமாச்சி’ கதைப் பற்றி அவர் கும்பகோணம் மகாமகத்திற்கு வந்திருந்த பெண்காவலர்களோடு தொடர்புபடுத்திப் பேசினது பிடித்திருந்தது. எல்லோருக்கும் நெருக்கமான ‘வெட்டும்பெருமாளை’ அவரும் குறிப்பிடத் தவறவில்லை. கிராம மற்றும் நகரக் கதைகள் பற்றியும், கதைகள் சொல்லப்பட்டிருக்கும் முறைகளையும் குறிப்பிட்டுப் பேசின அவருடைய  மொத்தப் பேச்சையும் ஒலிப்பதிவு பண்ணிக்கொண்டேன்.

 ‘உங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவு நேரம் வேண்டும்?’ என்று முதலிலேயே திரு.அம்சப்பிரியா என்னிடம் கேட்டிருந்தார். நீங்கள் குடுப்பதை வைத்துச் சமாளித்துக்கொள்கிறேன் என்றதற்கு, ஒரு இருபது நிமிடம் போதுமா என்றார். நான் சரியாக இருபத்தி இரண்டு நிமிடம் பேசி இருக்கிறேன். ஏற்புரையோடு சிறப்புரையாகவும் பேசிவிடுங்கள் என்றார். இரண்டுக்கும் வித்யாசம்கூட தெரியாத ஒருத்தனிடம் இப்படியெல்லாம் அவர் சொல்லி இருக்கிறார் என்பதை அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மொத்தமாக மனதில் இருந்த வார்த்தைகளைப் பேசினேன். யாரும் பெரிதாகக் கொட்டாவி விட்டமாதிரித் தெரியவில்லை. நிறையபேர் முகங்களைக் கவனித்தேன். சிரிக்கவேண்டிய இடத்தில் சிரித்தார்கள். கைத்தட்டவேண்டிய இடத்தில் கைத்தட்டினார்கள். இதைவிட என்னவேணும். நல்லபடியாகப் பேசி அமர்ந்தேன். (இந்த ஆடியோவும் கைவசம் இருக்கிறது என்பது உபசெய்தி).

நிறையபேர் புத்தகம் வாங்கியிருந்தார்கள்.  கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறபோதுதான் கூச்சமாய் வருகிறது. நிகழ்ச்சிக்கு தங்கை அபிமதி பழநியிலிருந்து வந்திருந்தாள். ‘உங்ககூட ஒரு போட்டோவுக்காக வந்தேண்ணா. திட்டாதீங்க புக் இன்னும் வாசிக்கலை’ என்றாள். யார் பாரதிபாட்டை வாசித்தார் என்று கைத்தட்டினேனோ அவரும், ‘உங்க நிகழ்ச்சின்னுதான் சென்னையிலிருந்து வந்தேன் என்றான். உங்க பதிவுகளை எல்லாம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்றார். லைட்டாக  பக்’கென்று இருந்தது. அன்புக்கு நன்றிகள். இன்னும் நிறையபேரை எங்கோ பார்த்ததுபோல இருந்தாலும் நமக்குத்தான் நினைவுக்கு ஒன்றும் இருக்காதே என்று அமைதியாக, ‘பேசினால் பேச்சு இல்லைன்னா சத்தம் மூச்’ என்றபடி உட்கார்ந்துகொண்டேன்.

அடுத்து கவிதை வாசிப்பு நிகழ்ச்சி இருந்தது. ஆனாலும் பொள்ளாச்சிக்காரர்கள் மகா பொறுமைசாலிகள்தான் போங்கள். ரெண்டு மணி கொடும்பசியில் கவிதை கேட்கிறார்கள், வாசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த எல்லா இளைஞனையும்போல நானும் கவிதைகள் எழுதித்தான் எனது இன்னிங்க்ஸைத் துவங்கினவன் என்பதால் ஏற்கனவே எழுதியிருந்த என்னுடைய ‘வனப்பேச்சி மகன்’ கவிதையை வாசிக்க அனுமதி கேட்டேன். வாசிக்கவும் செய்தேன். நன்றாக இருந்தது என்றார்கள்.

நிகழ்வின் இறுதியாக நினைவுப்பரிசுகள் தந்தார்கள். கைநிரம்பப் புத்தகங்கள். மதியம் வாய்க்கும் வயிற்றுக்கும் சோறு போட்டு, ஊருக்குச் செல்ல டிக்கெட்டும் போட்டுக் கொடுத்தார்கள். ஏழு மணி பஸ்ஸைப் பிடித்து காலை ஐந்து நாற்பத்தைந்துக்கு சென்னை வந்திறங்கினேன். சென்னை அதிகாலையில் என்னமாய் குளிராய் இருக்கிறது.

-கார்த்திக்.புகழேந்தி.
21-03-2016.

படங்கள்
Wednesday, 16 March 2016

கொலைச் சொல்
கொலைச் சொல்

            ஆர்.வி.தோட்டத்தில் கணேசன் வீடு எது என்று விசாரித்தபோது,  பெட்டிக்கடைக்காரர் சாதாரணமாகத்தான் வழிசொன்னார். ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்துக்கொண்டே,“அவர் வீட்டுக்கு யாராவது புதிய ஆள் வந்திருக்கிறாரா” என்று கேட்டேன். கொஞ்சம் மோசமான சூழ்நிலையாக இருந்தால் என்கேள்வியின் அர்த்தமே மாறிப்போய்விடும். இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. சங்கர் இங்கேதான் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் அந்தக் கேள்வியை சாதாரணமாக கடைக்காரரிடம் தொடுத்தேன். 

அவருக்கு கணேசனைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் அவன் வீட்டுக்கு வந்துபோகிறவர்கள்.. குறைந்தபட்சம் கண் முக்கியமாக அவன் சிறையிலிருக்கிற காலங்களைப் பற்றியாவது...

நான் எதிர்ப்பார்த்ததுபோலவே அவரிடமிருந்து சங்கரின் அங்க அடையாளங்களோடு பொருந்துகிற ஒரு ஆள் ஒருவன் கணேசன் வீட்டில் இரண்டுநாளாகத் தென்படுவதுபற்றி தகவல் கிடைத்தது. அத்தோடு விடாமல் அந்தப்பையனை எங்கயோ பார்த்தமாதிரி இருந்தது என்று அவரே பேச்சை வளர்க்கத் தொடங்கினார். ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை. பேச்சுவாக்கில் நான் யார் என்பதையும், சங்கர் யார் என்பதையும் அவர் அறிந்துகொண்டால் அவருடைய பேச்சின் தொனி வேறுமாதிரி வெளிப்படலாம். 

அதிலும் என்னைவிட சங்கர் பற்றிய தகவல்கள் அவரைக் கொதிப்படையச் செய்யலாம். சிகரெட்டுக்குக் காசுகொடுத்துவிட்டு அவர் சொன்ன தெருவைநோக்கி நகரத் தொடங்கினேன். என்முதுகில் அவர் பார்வை படிந்திருந்தது. அதில் நிறைய வினோதம் குடிகொண்டிருந்தது.

சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்து இரண்டு மாதங்கள்தான் முடிந்திருக்கிறது. ஆயுள்தண்டனைக் குற்றவாளியாகவேண்டியவன், அவனது நல்லநேரம் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையாகி இருந்தான். வெளியே வரும்போது முதலில் அவன் தொடர்புகொண்டது என்னைத்தான். அவனுக்கு வேறு யாரையும் தெரிந்திருக்கவில்லை. அல்லது அவனது பழக்கம் எல்லாம் சிறைக்குள் இருந்தவர்களோடுதான் என்பதால்  அவர்களை அவன் தவிர்த்திருந்தான்.

முப்பத்து எட்டு வயதுக்காரன். ஆனால் சிறை வாழ்க்கையில் ஐம்பதைக் கடந்தவன்போல ரொம்பவும் தளர்ந்திருந்தான். யாரோடும் அதிகம் பேசுவதில்லை. "எனக்கு ஒரு கண்ணாடி வாங்கிக் கொடுண்ணே" என்றது மட்டும்தான் அவன் கடைசியாகப் பேசின வார்த்தை.

உசேன்பாயின் லாரிசெட்டை கவனித்துக்கொண்டு அங்கேயே இரவில் தங்கிக்கொள்ள வசதிபண்ணிக் கொடுத்திருந்தேன். கொஞ்ச நாளைக்கு வெளியில் எங்கும் போகவேண்டாம் என்பதால் அங்கேயே தங்கியிருக்கச் சொல்லியிருந்தேன். இருந்தும் சொல்லாமல் கொள்ளாமல் போனவாரத்தில் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டான்.

சங்கர் எனக்கு அவன் கல்லூரி படிக்கும்போது அறிமுகம். ஒரே ஊர்க்காரன்தான். அப்போது நான் பேரவையில் துணைப் பொறுப்பில் இருந்துகொண்டிருந்தேன். பேரவை கட்சியாக வளர்ந்தபோது, தலைவரின் கல்லூரிப் பொறுப்புகளை கவனித்துக்கொள்ளும் வேலையைக் கொடுத்திருந்தார். 

கூட்டங்கள் நடக்கும்போதெல்லாம் கல்லூரிகளில் இருந்து கட்சி ஈடுபாடுள்ள பசங்களைத் தேடித் திரட்டுகிற பணி எனக்கு கட்சி மேலிடத்திலிருந்து தரப்பட்டிருந்தது. அப்படி ஒரு பழக்கத்தில்தான் சங்கர் எனக்கு அறிமுகமானான். ரொம்பவும் துருதுருவென இருப்பான். தப்புத்தண்டா யார் செய்தாலும் துணிந்து விழுகிற முதல் அறை அவனுடையதாக இருந்தது.

அவனுக்கு கப்பம் கட்டுகிற ஜூனியர் பையன்களுக்காக சின்னச்சின்ன பஞ்சாயத்துகள் பண்ணினான். பெண்பிள்ளைகளிடம் சில்மிஷம் செய்த புரொபசரையே மூத்திரம் பெய்யும் இடத்தில்வைத்து தலையில் துண்டைப் போட்டு அமுக்கி வெளுத்துக்கட்டி அனுப்பினான். அப்படி ஒரு அடிதடி விவகாரத்தின் பேச்சுவார்த்தையில்தான் நான் சங்கரை கவனிக்கத் தொடங்கினேன். நகத்தால் கிள்ளிப்போட்டாலே வேர்பிடிக்கிற பயிர் இவன் என்பதைப் புரிந்துகொண்டதும் அவனைத் தலைவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன்.

நம்ம பையன்தான் என்றதும் தலைவருக்கும் அவனைப் பிடித்துப் போனது. குடும்பத்தை எல்லாம் விசாரித்தார். ரொம்ப அனுக்கமாக தலைவர் அவனது தோளில் கைப்போட்டு பேசினது சங்கருக்குப் பிடித்துப் போனது. அடிக்கடி கட்சி அலுவலகங்களுக்கு தலைவர் அவனை வந்துபோகும்படி சொன்னார். மெல்ல செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறவர்களோடு நெருக்கமாகத் தொடங்கினான் சங்கர்.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன சில்லறை வேலைகளுக்கு சங்கரை நிர்வாகிகள் பயன்படுத்தினார்கள். முதல்தடவை ருக்மணி லாட்ஜ் விஷயத்தில்தான் அவன் பேர் பெரிதாகப் பேசப்பட்டது கட்சிக்குள். அது ஒரு திருட்டு விவகாரம். தலைவருக்குச் சொந்தக்கார மச்சினனின் லாட்ஜ் அது. 

அங்கே வேலைபார்த்த மேனேஜர் ஒயின்ஷாப் கட்டிங்கிற்கு வைத்திருந்த தொகையை சுளையாக அடித்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டான். போலீசிடம் போகிற விவகாரம் இல்லை. பணம் வெள்ளையுமில்லை. திருடினவன் திருப்பதிக்குப் பக்கத்தில் மறைந்திருப்பதாக லாரி டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் மாசெ.வின் தம்பி மூர்த்தியை தலைவர் அனுப்பச் சொல்லி இருந்தார். 

மூர்த்தியின் மீது ஏற்கனவே ஆந்திராபோலீஸில் இரண்டு வழக்குகள் இருந்ததால் ’சங்கரையும் கூடே போகமுடியுமா தம்பி’ என்று கேட்டிருக்கிறார். இவனும் தலைவரே கேட்கிறார் என்று உடன் கிளம்பிவிட்டான்.

ஆந்திராவில் அறை எடுத்துத் தங்கிய நேரத்தில், இப்போ போனா சிக்கமாட்டான் என்று காத்திருக்கச் சொல்லிவிட்டு, கிளப் ஒன்றிற்குள் நுழைந்து ஆட்டம்பார்க்கத் தொடங்கிவிட்டான் மூர்த்தி. போன இடத்தில் போதையைப் போட்டு ரகளையும் செய்தவனை ஆந்திரபோலீஸ் அள்ளிக்கொண்டு போய்விட்டது. தலைவர் பணம்போனால் போகிறது மானம் போகாமல் எப்படியாவது ஊர்வந்து சேருங்கள் என்று எரிச்சலாகிவிட்டார்.

ஆந்திரபோலீஸிடம் கெஞ்சுவதுபோலக் கெஞ்சி போதையிலிருந்து மூர்த்தியை மீட்டு,  லாட்ஜ் அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு, சங்கர் மட்டும் தனியாளாக அலைந்து திரிந்து மேனஜரைப் பிடித்துவிட்டான். கொடுத்த அடியில் மிச்சமிருந்த பணத்தையும், மனைவியின் நகைகளையும் பறித்துக்கொண்டு லாரி ஏறி ஊர்வந்து சேர்ந்தான் சங்கர். மறுநாள் இங்கிருந்து ஆள்போய் மூர்த்தியை கதவைத்திறந்து மீட்டுக்கொண்டு வந்தார்கள்.

தலைவர் சங்கரை எல்லார் முன்னிலையிலும் மெச்சத் தொடங்கினார். 'போனவன் வெறுங்கையோட வராம வசூல் பண்ணிட்டு வந்துட்டான் பாரு' என்று வெளிப்படையாகவே பாராட்டியதில் சங்கருக்கு வசூல்குட்டி என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. அதன்பிறகு எந்த வெளியூர் வசூல் காரியமானாலும் சங்கரைத் துணைக்கு அழைத்துச் செல்லச்சொல்லி தலைவர் கட்டளையே பிறப்பித்துவிட்டார்.

படித்த பையன் என்பதால் பெயருக்கு தலைவர் தன்னுடைய லாரி சர்வீஸ் ஆபீஸுக்கு அவனை மேனேஜராக வெளியில் சொல்லச் சொன்னார். சொல்லப்போனால் அது ஒரு விசிட்டிங்கார்டு வேலை. பெயருக்குத்தான் சங்கர் அதன் மேனேஜர். நகரத்தில் திருடிய  அக்கு அக்காகப் பிரித்து க்ராப் வேஸ்ட் என்ற பெயரில் தனித்தனியாக கோழிகோட்டுக்கு கடத்துகிற புதுப்பேட்டை பாயின் உப கம்பெனி அது. தலைவர் ஆரம்பகாலத்தில் பாயின் செட்டில்தான் தொழில் பழகினவர். பிறகு முதலாளிக்கே முதலாளி ஆகி, பேரவை, கட்சி அலுவலகம், முனிசீப் இடங்களை ஆக்கிரமித்து பள்ளிக்கூடம், கல்லூரி என்று வளர்ச்சிகளை எட்டினார். அவரைப்பொறுத்தவரை லாரிசர்வீஸ் ஆபீஸ் என்பது அவருக்கு ராசியான இடம்.

சங்கர் கையில் பணம் விளையாடியது கூடவே அதிகாரவர்க்கத்தின் நெருக்கமும் கிடைத்தது. அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் தலைவர் ஆளுங்கட்சியோடு கூட்டணிவைத்து 11சீட்டுகள் ஜெயித்திருந்தார். தலைவரின் செல்வாக்கு பறந்து விரிந்தது. பேரவைப் பாசத்தில் கிட்டே இருந்தவர்களிடமெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை 'நாமெல்லாம் இன்னார்டா தலை எடுக்கத்தான் போகணும். தலைவணங்கிப் போகக்கூடாது' என்று தலைவர் பேசுவதுண்டு. அவர் அதிகாரத்தில்வேறு அப்போது இருந்தார். எப்படியும் தன் தம்பிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடும் அதன்பிறகு தன்னுடைய செல்வாக்கு இன்னும் வலுவாகிவிடும் என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.

அந்த சமயத்தில்தான் நான் தலைவரிடமிருந்து வெளியேற வேண்டிய சந்தர்பம் ஏற்பட்டது. என்னுடைய காரணத்தை அவரிடம் நேர்மையாகச் சொல்லி இருக்கக்கூடாது. ஆனால் அவரை நான் சரியாகக் கணிக்கத் தவறி இருந்தேன். என்னுடைய விலகலைவிட நான் முடிவெடித்த காரியம் அவரை உஷ்ணப்படுத்தியது. அவருக்கு இருந்த சாதிவெறியின் உச்சக்கட்டத்தை அப்போது கண்டு அதிர்ந்தேன்.

'என் கண் முன்னாலே நிக்காதே போய்டு. எந்த தே.... கூட படுக்கப் போனாலும் கேட்ருக்கமாட்டேன். எந்த சாதியில பொறந்துட்டு எந்தசாதிக்காரிய கட்டப்போறேன்னு வந்து என்கிட்டே சொல்லுவ" என்று என்னை அடித்துத் துவைத்தார். நான் நிலைகுலைந்தேன். என்னால் அவரை எதிர்க்கமுடியாது. உயிர்ப்பிச்சை போட்டாரென்று நினைத்து தப்பித்து வந்தேன்.

ஆனால் பிச்சை முழுமையானதல்ல. அடுத்தநாளே நான் சிறைக்குச் செல்லத் தயாராகவேண்டி வந்தது. ஆம் கல்லூரி நிர்வாகத்தில் கையாடல் பண்ணியதாக என்னைக் கைது செய்தார்கள். அள்ளிமுடித்த பாவம் குடுமியில் இருக்கும்போது நிழலை பழிக்கவா முடியும். 16மாதம் சிறையிலிருந்து வெளிவந்தேன். அப்போதுதான் மார்க்ஸ் அண்ணன் என்னை திடப்படுத்தினார். என்மீதிருந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கச் செய்தார். தோழர் எனக்கு ஒரு சாக்கு மண்டியில் கணக்கெழுதுகிற வேலை வாங்கிக்கொடுத்தார். சிறைவாசத்திற்குப் பிறகு  நான் நேசித்த அருந்ததியையே திருமணம் செய்துகொண்டேன். கிட்டத்தட்ட எதிர்முகாமில் பாதுகாப்பாய் முக்காடிட்டு அமர்ந்துகொண்டிருந்தேன்.

சிலவருடங்கள் போயிருக்கும் அப்போதுதான் நான் செய்தித்தாளில் அந்த படத்தைப் பார்த்தேன். கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் என்று போட்டிருந்த இடத்தில் சங்கரின் படம் இருந்தது. எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சங்கர் இந்த நிலைக்கும் இறக்கப்படுவான் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. முதலில் வழக்கு பற்றி செய்திகள்மூலம் வாசிக்கத் தொடங்கினேன்.

தலித்து குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கட்சிக்கு நெருக்கமானவரின் மகளை காதலித்து, வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். கோயிலில் திருமணம் செய்துகொண்டவர்களை எட்டுமாதம் கழித்து பொது இடத்தில் வைத்து சரமாரியாக வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். சம்பவ இடத்திலே அந்தப்பையன் பலியாகிவிட்டான். இப்படி ஒரு கொலைபாதகத்தைச் செய்ய நிச்சயம் வேறு என்னென்ன காரணம் இருக்கமுடியும் என்று யோசித்தபிறகு ஒரு கனத்த முடிவுடன்தான் நான் சங்கரைச் சந்திக்க  சிறைவளாகத்துக்குச் சென்றேன்.

ஜெயில்வாசம் ஒருவனை எப்படியெல்லாம் கொல்லும் என்பதை அனுபவித்தவன் என்பதாலும் தோழர்களைக் காண அடிக்கடி மனுபோட்டுக் காத்திருக்கிறவன் என்ற பழக்கத்தினாலும் என்னுடைய அணுகுமுறை எளிதில் சாத்தியமானது.

முதல்தடவை அவனைச் சந்தித்தபோது, "ஜாமீனில் எடுக்க வந்திங்களாண்ணே" என்று தான் கேட்டான். அவனுக்கு நான் தலைவரிடமிருந்து விலகியது தெரிந்திருக்கவில்லை. அத்தனைக் கச்சிதமாக உண்மைகளை அவர் மறைத்திருக்கக்கூடும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.

"ஏண்டா இப்படி பண்ணே. படிச்ச பையன் உனக்கு இதல்லாம் தேவையா. உன்னை இந்தக்கூட்டத்தில் இழுத்துவிட்டதுக்கு இந்தப்பாவமும் என் தலையில் விழுந்துவிட்டது" என்றேன்.

"என்னண்ணே சொல்ற, நம்ம வீட்டுப்பொண்ணை கண்ட நாயும் இழுத்துட்டு ஓடும். கண்டுக்காம விடச் சொல்றியா. தாயோளி அவன அறுத்து கூறுபோட வேணாமா" என்று சங்கர் குரலை உயர்த்தியபோது அவன் எவ்வளவு மாறிப்போயிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டேன். காலகாலமாகப் ஊட்டி வளர்க்கிற சாதிவெறியை கச்சிதமாக இவனுக்குள்ளும் செலுத்திவிட்டார்கள். அதுவும் தலைவர் மாதிரி தூண்டிவிடுகிற தூபம் ஒன்று பக்கத்திலே இருந்தால் நினைத்துப் பார்க்கவே தேவையில்லை.

"அடுத்த வாரத்தில பார்ணே  வெளியே வந்துடுவேன். வந்ததும் உன்னைப் பார்க்க வரேன். ஆமா எங்க இருக்க நீ. உன் அட்ரஸ் தந்துட்டுப்போண்ணே" என்றான். எனக்கு அவனிடம் பேச மேலதிக வார்த்தைகளே இல்லை.

ஆண்டுகள் தீர்ந்தபிறகு நான் தோழர்களோடு நெருங்கி இருந்தேன். எனக்கு இந்த புது அத்தியாயம் பிடித்திருந்தது. அதிகாரத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கிற கலைமுகத்தை கட்டி எழுப்பும் வீதிநாடகங்களை எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு மணல்கொள்ளைக்கு எதிரான வீதிநாடகத்திற்காக என்னையும் தோழர் லெனினையும் கூடவே திலீபனையும் கைது செய்து வேலூருக்கும் புழலுக்குமாக அலையவிட்டார்கள். அப்போதுதான் 12வருடங்கள் கழித்து நான் சங்கரைச் சந்தித்தேன். ஒருவார்த்தைகூட அவன் என்னிடம் பேசவில்லை. கலங்கினபடியே இருந்தான். ஒரு படித்த பிள்ளையின் வாழ்க்கையை கெடுத்துவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சியின் முள் மட்டும் என் தொண்டைக்குள் குத்திக் கொண்டிருந்தது.

சங்கரை வெளியே எடுக்கும் முயற்சிகளை கட்சியினரோ சங்கருக்கு நெருக்கமான நிர்வாகிகளோ செய்யவே இல்லை. அவன் துரதிஸ்டம் கொலை நடந்த நாட்களுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவித்திருந்தார்கள். கொலைக்குற்றச்சாட்டுக் கறைகள் கட்சியின் மீது விழுந்ததாலும், எதிர்முகாம்களில் பிரச்சாரத்தாலும் அந்தத்தேர்தலில் கட்சிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. படுகொலையின் எதிரொலியாக தலைவர் நேரடியாகவே வீழ்த்தப்பட்டார். அத்தோடு தம்பிக்கு மத்திய அமைச்சர் பதவி கனவும் பறிபோனது. சங்கரோடு சேர்த்து கைதான மற்ற இருவரும்கூட இன்னும் வேலூர் சிறையில் இருக்கிறதாகத் தகவலறிந்தேன்.

தோழர்களிடம் சொல்லி அவனுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை விளங்கவைக்கச் சொன்னேன். நான் பேசினால் அவன் நம்பாதிருக்கக்கூடும் என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்தது. அரசியல்வாதிகளின் போலித்தனமான சாதிவெறித் தூண்டலையும், அதைவைத்து நடத்தும்  ஓட்டுப் பொறுக்கித் தனத்தையும், அடிமட்ட மக்களின் ஜனநாயக வாழ்வுரிமையையும்  விளங்கவைக்கச் சொன்னேன். நாங்கள் சிறையிலிருந்து வழக்கமான கவனிப்புகளோடு வெளியில் வந்தோம். இந்தமுறை திலீபனுடைய காலை பதம்பார்த்திருந்தார்கள். லெனினை வெளியில்  விடுவதற்கு தாமதம் செய்தார்கள்.

அதன்பிறகான நாட்களில் அமைப்புசார் நண்பர்கள்மூலம் சங்கரின் ஆயுள்தண்டனையினை குறைக்கும் பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டேன். சிறைக்குள்ளே அவனுக்கு படிக்கவும் எழுதவும் என்னாலான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தேன். என் கைகளில் அப்பியிருந்த பாவத்தின் கறைகளைக் கழுவ எனக்கு வேறு வழியுமிருக்கவில்லை.

தோழர் லெனின் வெளியில் வந்தபோது சங்கரின் நடத்தையில் மாற்றங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். தண்டனைமுடிந்து வந்ததும் இயக்கத்தில் ஈடுபட விரும்புகிறேன் என்று சொன்னதாகவும் தெரிவித்தார். அதையெல்லாம்விட சங்கர் சொன்னதாகக் கேள்விப்பட்ட ஒரு வார்த்தைதான் என்னைத் தூங்கவிடவே இல்லை. இரவு முழுக்க அருந்ததியிடம் அதுபற்றியே பேசிக்கொண்டிருந்தேன்.

"வெளியில் வந்ததும் அந்த பையனின் தகப்பனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்று கூறியிருக்கிறான். மன்னித்தல் ஒன்றும் சாதாரணமானதில்லை. ஆனால் மன்னிப்புக் கேட்க நினைப்பது எத்தனைபெரிய மாற்றம் அன்பின் வழியது உயிர்நிலை என்று அடிக்கடி நினைவுறுத்துவாள் அருந்ததி.

கணேசன் வீட்டைக்கண்டுபிடித்து நான் உள்ளே நுழைந்தபோது, என்னை போலீஸ்காரனாக இருப்பானோ என்று சந்தேகமாகப் பார்த்தவர்களிடம், “சிறையில் இருக்கும்போது கணேசனைத் தெரியும்” என்றேன். “என்ன விஷயம்” என்று பதில்குரல் வந்தது. இங்கே  தம்பி ஒருத்தன் வந்து தங்கியிருப்பதாக விசாரித்துப் போகலாம் என்று வந்தேன் என்று முடிப்பதற்குள்... என் குரல் கேட்டு சங்கரே எட்டிப்பார்த்தான். 

மாடி அறைக்கு வரச்சொல்லி கைகாட்டினான். அறையில் நான் நுழைந்தபோது, அவன் கட்டிலில் 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' நாவல் கிடந்தது. 

 “ஏன் பாய்கிட்டே சொல்லாம கொள்ளாம இங்கே வந்துட்டே” .

"அங்கே எனக்கு சேரலை. பழைய நியாபகமெல்லாம் வருது"

"சரி ரெண்டு வாரமா எங்கே போயிருந்தே"

"அந்தப் பையனோட அப்பா இறந்துட்டாராம்"  என்றவன் அதற்குப் பிறகு கையிலிருந்த புத்தகத்தின் பக்கங்களைப் புறட்டத்தொடங்கிவிட்டான்.  நான் நெடுநேரம் அவனது முகத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன், அதில் விழுங்கமுடியாத சொல் ஒன்று மிச்சமாய் படிந்திருந்தது. 

-கார்த்திக்.புகழேந்தி
16-03-2016.

Tuesday, 15 March 2016

வெட்டும்பெருமாள் - சிறுகதை
               துநாள் வரைக்கும் எழுதிக் கிழித்ததில் உருப்படியாக ஒரு கதையைக் காட்டு பார்க்கலாம் என்று யாராவது கேட்டால், சட்டென்று ஒருகனமும் தயங்காமல் வெட்டும்பெருமாள் சிறுகதையைக் கொடுத்து படித்துவிட்டுச் சொல்லுங்கள் என்பேன்.. ஆம், அந்தக்கதை எனக்குச் செய்த காரியங்கள் ஒன்றிரண்டல்ல ஏராளமானவை. 

 அசமந்தமாக இருந்த ஒரு சாயங்காலப் பொழுதில் கணினியின் முன்னால் உட்கார்ந்துகொண்டு மனதுக்குள் ஓடிய வெட்டும்பெருமாளின் கதையை எழுதி முடித்தேன். கதை முடிவை நெருங்கும்போது நள்ளிரவு தொட்டிருந்தது. எப்போதுமே என்ன கதை எழுதப்போகிறோம் என்ற முன்முடிவுகள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு சொல்லி இருந்து தொடங்குவது என் பழக்கம். கதாப்பாத்திரங்களின் பெயர்களாக அன்றைக்கு புத்திக்குள் வந்தவர்களைத் தேர்வு செய்துகொள்வது. இப்படித்தான் இப்போதும் வண்டி ஓடுகிறது.

சரி கதைக்குவருவோம். வெட்டும்பெருமாள் பெயரை உச்சரிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு பரவசம் உண்டானது எனக்குள். அது என்னுடன் படித்த என் நண்பனது பெயர். சேரன்மாதேவிக்காரன். மலைக்காடுகளில் மாடுமேய்த்துக் கொண்டே பாளையங்கோட்டைப் பள்ளிக்கூடத்திற்கு வந்து படித்துக் கொண்டிருந்தான். ஒரு விடுப்பு தினத்தில் அவனுடைய கிராமத்திற்கு போனபோது எனக்கு அங்குள்ள ஊர்சாமியின் கதையைச் சொல்லி இருந்தான். அந்தகதை காலப்போக்கில் எனக்கு மறந்தே போனது. ஆனால் அதன் தொன்மம் எங்கேயோ உள்ளுக்குள் கிடந்து கதையாக வெளிப்பட்டுவிட்டது.

நிறையபேர் கேட்டார்கள் “ஏன் கார்த்திக் நிஜமாகவே இப்படி மாடுகளின் தோலை உயிரோடு உரிக்கிற பழக்கம் இருந்ததா?” என்று. “ஆம் இருந்தது” என்பதைச் சொல்ல எனக்கு தகுந்த சாட்சியமாக கி.ராஜநாராயணன் கிடைத்தார்.  சரி இதற்குமேலே ஒரு கதையைப்பற்றி நீட்டி முழக்கிக்கொண்டிருப்பது   அவ்வளவு சௌகரியமானதில்லை. 

நேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT) நிறுவனம் இந்திய மொழிகளில் (9மொழிகள்) புதிய சிறுகதை எழுத்தாளர்களை அடையாளப்படுத்தும் பொருட்டாக (நவலேகன்)  “புது எழுத்து - தமிழ்ச் சிறுகதைகள்” என  25 சிறுகதைகளைத் தமிழில் வெளியிட்டிருக்கிறது. இந்தமுறை சிறுகதைகளைத் தேர்நெதெடுத்தவர் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள். 

ஒரு மின்னஞ்சலில் உங்களுடைய கதைகளில் சிலவற்றை அனுப்புங்கள் என்றிருந்தார் ஜோ சார். நான் என்னுடைய மூன்று கதைகளை அனுப்பி இருந்தேன். அவ்வளவுதான் அதன்பிறகு அந்தக் கதைபற்றி வெறேதும் பேசவோ, சிந்திக்கவோ இல்லை. ஜன்னல் இதழ் பொங்கல் சிறப்பிதழுக்குக் கேட்டதும் இரண்டாவது சோதனை முயற்சியாக வெட்டும்பெருமாளை அனுப்பி வைத்தேன். அதுவரைக்கும் எந்த அச்சு ஊடகத்திலும் வெளிவந்திருக்காத காரணத்தால் அவர்களும் பிரசுரம் பண்ணினார்கள். இதழில் ஓவியங்களோடு கதையைப் பார்த்தபோது அப்படியே என் நண்பன் சாயலில் இருந்தான் வெட்டும்பெருமாள். பிறகு அதே இதழில் பணிக்குச் சேர்ந்ததெல்லாம் தனிக்கதை. 

 ஜன்னல் இதழில் வெளிவர ஒருவாரம் இருக்கும்போது, தில்லியிலிருந்து வாத்தியார்  (ஷாஜஹான்) அழைத்திருந்தார். உன் கதையா அது? என்று வினவினார்.  “ஆமாம்” என்றேன்.  தில்லி உலகப் புத்தக திருவிழாவில்  “புது எழுத்து” வெளியிடப்பட்ட செய்தியை அவர்தான் எனக்கு முதலில் பகிர்ந்திருந்தார். ஒரு கதை கொடுத்த அங்கீகாரத்தின் இன்பத்தை உணர்ந்துகொண்டேன். 

ஜன்னல் இதழில் வெளியான கதையின் பிடிஎஃப் பிரதியினை நேற்றைக்குத்தான் வாங்கியிருந்தேன். ஒரு நப்பாசைக்காக இங்கே வெட்டும்பெருமாளைப் பதிவேற்றியும் வைத்திருக்கிறேன். ஒரு பத்திருபது வருடங்கள் கழித்து திரும்ப ஒருநாள் படித்துப் பார்க்கலாமென்று...


-கார்த்திக்.புகழேந்தி
15-03-2016.


Monday, 14 March 2016

நீர்ப்பெயற் றெல்லைப் போய் வந்தோம் | மாமல்லபுரம் பயண அனுபவங்கள்

நீர்ப்பெயற் றெல்லை - மாமல்லபுரம் கடற்கரைக்கோயில்
          ழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை ஊர்சுற்றல் பதிவாகத்தான் இது இருந்திருக்கும். ஆனால், எங்கள் பயண திசை மாறியதால் பதிவின் தன்மையையே மாறிவிட்டது. ஆம் நண்பர்களோடு சென்னையின் வடஎல்லையில் இருக்கும் பழவேற்காட்டுக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு குழுவைத் திரட்டினோம். ஆனால் அத்தனை பயல்களும் டேக்கா காட்டிவிட, நானும் நண்பர் கேசவனும் மட்டும் மிச்சமானோம்.  சரி சமைத்துச் சாப்பிட்டுத் தூங்குவோம் என்று கேசவனிடம் அறைக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க அவரும் வந்துவிட்டார்.


          அப்போதுதான் பனுவலில் இன்றைக்கு மாமல்லபுரம் தொல்லியல்துறை கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கேசவன் நினைவுபடுத்தினார். அட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை என்றால் எப்படி என்று டேங்கை நிரப்பிக்கொண்டு கேமிராவும் கையுமாக ஈசிஆர் வழியாக தெற்குதிசையில் மாமல்லபுரம் விரைந்தோம்.


       மாமல்லபுரத்திற்கு 5.கி.மீ முன்பே சாளுவன்குப்பம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது புலிக்குகை. வெள்ளை நிற பேருந்தைப் பார்த்ததும் இங்கேதான் நம்மவர்கள் இருக்கிறார்கள் என்று உறுதிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தோம். சாளுவன் குப்பத்திற்கு பழைய பெயர் ஒன்றுண்டு அது திருவிழிச்சில். திருவிழிச்சில் பக்கம் சங்ககால கட்டுமானம் ஒன்று சுனாமியில் வெளிப்பட்டது என்றும் அது பழமையான முருகன் கோயிலின் அடித்தளம் என்றும் நண்பர் சொல்ல அங்கே சென்றிருந்தேன். குழுவினர் அந்த இடத்தைப் பார்வையிட்டார்களா என்று தெரியவில்லை. [முகநூலில் பதிவேற்றப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வழி பார்வையிட்டதை அறிகிறேன்]


நாங்கள் குழுவினரோடு கலந்துகொண்டபோது, நாகரி எழுத்துருவில் காலத்தால் முற்பட்ட  இராஜசிம்மனுடைய கல்வெட்டு அமைந்திருக்கும் அதிரணசண்டேஸ்வரத்தில் இருந்தார்கள். பேராசிரியர் பத்மாவதி ஆனையப்பன், பாலுச்சாமி அவர்கள் இந்தமுறை குழுவை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். (மற்ற துறைசார்ந்தவர்கள் பெயர்கள் அறியவில்லை மன்னிக்க...)  முன்பு கலந்துகொண்ட சுற்றுலாவில் அறிமுகமான நண்பர்கள், முகநூல் நண்பர்கள், பனுவல் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.   

இராஜசிம்மனின் கல்வெட்டு வரிகளை பேராசிரியர் பத்மாவதி அவர்கள் வாசித்துக் காண்பித்து, அதன் அர்த்தத்தையும் குழுவினருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பல்லவர்களுக்கு ஒரு பொடீ கல்லைக் கண்டாலும் போதும் , உட்கார்ந்து அதில் ஒரு சிலையைச் செதுக்கிவிட்டுத்தான் தூங்குகிற பழக்கம்போல. இராஜசிம்மனும் தன்பங்குக்கு பெரிய தூக்கக் கனவுக்காரனாக இருந்திருக்கக்கூடும். அதனால்தான் கல்வெட்டில்  “முடிவில்லாத கனவுகளைக் கொண்ட நான் (அதியந்த காமன்) இந்த கோயிலை என் மக்களுக்காக எழுப்புகிறேன். இங்கே சிவனும் உமையும் உறைந்திருக்கட்டும்”  என்று எழுதியிருக்கிறார். அதுவும் எப்படி? கிரந்தம், நாகரி இருவேறு எழுத்துருகளில் இடதும் வலதுமாக. கல்வெட்டுகளோடு.

அடுத்ததாக நிறைய குழப்பங்களைத் தன்அகத்தே கொண்ட புலிக்குகைக்கு நகர்ந்தார்கள் குழுவினர். வெயில் வெளுத்து வாங்கியதில் மக்கள் ரொம்பவே சோர்ந்து போயிருந்தார்கள். புலிக்குகை பெயருக்கு ஏற்ற மாதிரி ஒரு குகை அல்ல என்று மட்டும் நிச்சயம் சொல்லமுடியும். ஒரு பெரிய பாறையை ஒருபுறமாக செதுக்கி நடுமையத்தில் செவ்வக அறை செதுக்கியிருக்கிறார்கள். சுற்றிலும் 11யாழிகள் (சிங்கங்கள்) முகம், அதன் தென்பக்கம் இரு யானைகள் மீது இந்திரன், முருகன்(!) அமைர்ந்திருப்பது போன்ற முழுமைபெறாத சிற்பங்கள். மற்றும் தொடங்கிய நிலையில் மட்டுமேயுள்ள குதிரையில் தடம் ஆகியவை கொண்ட பெரும்பாறைக்கு நேர் கிழக்கில் ஒரு சிறிய பாறை பலிபீடம்போல நிற்கிறது.
குழுவை வழிநடத்தும் பாலுசாமி அவர்களுடனான இந்தப் பயணம் ரொம்பவும் சுவாரஸ்யமானது.  அதோ பாருங்கள் நிலா தெரிகிறதா? அதில் ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறாளா, அவளோடு ஒரு மான் தெரிகிறதா என்று கதை சொல்லுவதுமாதிரி சிற்பங்களை விளக்குகிறார்.  

“அந்த யாழிகளின் முகத்தைப் பாருங்கள் அதன் உறுமல் உங்களுக்குக் கேட்கிறதா, அதோ அங்கே இரண்டு யானை தெரிகிறதா? பக்கத்தில் குதிரை தெரிகிறதா? குதிரையும் யானையும் இந்திரனின் வாகனம். ஆக, அட்ம்பாரியில் அமர்ந்திருப்பது இந்திரனாக இருக்கலாம். யானை முருகனுக்கும் வாகனம் ஆக, இந்தப்பக்கம் இருப்பவர் முருகனாக இருக்கலாம். வடபக்கம் ஒரு சிங்கமுகம்  முற்றுப்பெறாமல் இருக்கிறது அதன் வயிற்றுப்பகுதியில் ஒரு சதுரவடிவம் வெட்டி எடுக்கப்பட்டு புடைப்பு தெரிகிறது கவனியுங்கள். இங்கிருக்கும் சிற்பங்களை அப்படியே பார்த்து புரிந்துகொள்வதைவிட மாமல்லபுரத்தில் காணும் சிற்பங்களோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும் .நீங்கள் அங்கே கடற்கரை கோயில்கள் அமைந்திருக்கும் இடத்தில் இதேபோல சிங்க வயிற்றில் துர்கையின் சிலை ஒன்று இருக்கிறது. அதேமாதிரியான வடிவம் இந்த புலிக்குகைக்கும் இருப்பதை உணர்ந்துபாருங்கள்” என்று நம் சிந்தனையையும் கிளறிவிட்டு பாடமும் சொல்லித் தருகிறார். மாமல்லபுரம் புலிக்குகை பற்றிய அவருடையை ஆய்வு நூல்கள் பனுவல்/காலச்சுவட்டில் கிடைக்கிறதாகச் சொல்கிறார்கள். கட்டாயம் வாங்க வேண்டும்.

புலிக்குகை முடித்து நேரே மாமல்லபுரத்துக்கு புறப்பட்டது பேருந்து. நாங்கள் பைக்கில் பின்தொடர, எங்களைப்போலவே தனியாக வந்திருந்த தீபக் வெங்கடாசலம் உடன் இணைந்துகொண்டான். ‘மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை’ மாதிரி. அட்டகாசமான கூட்டு தீபக். குழுவினர் அனைவரும் மாமல்லபுரம் நோக்கிச் சென்ற நேரத்தில் நாங்கள் மூவருமாக வழியிலிருந்த அடையார் ஆனந்தபவனில் பசியாறிக் கொண்டிருந்தோம். பேருந்திலிருந்து அனைவரும் இறங்கி பூங்காவுக்குள் நுழைந்த நேரத்தில் நாங்களும் அவர்களோடு அப்படியே  ஐக்கியமாகிப்போனோம்.

மாமல்லபுரம் பற்றி எனக்கு ஒரு தனிப்பார்வை இருந்தது. பெரும்பாணாற்றுப்படை வாசித்தபோது அதில் அக்காலத்து சமூக, இனக்குழுவினரின் வாழ்க்கையை எப்படி புரிந்துகொள்ள முடிந்ததோ அப்படி மாமல்லபுரத்தை வியந்தபோது புராண முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோடு மனிதன் விலங்குகளோடும் இயைந்து வாழ்ந்திருக்கிறான் என்பதும், கால்நடைகள் பறவைகளுடனான அவன் வாழ்க்கை நெருக்கமான ஒன்று என்பதையும் இங்குள்ள கற்சிற்பங்கள், மண்டபங்கள், வழி உணர்ந்துகொண்டேன்.

சங்க காலத்தைய காஞ்சி மன்னன் தொண்டைமான் இளந்திரையனை (பேரைப்பாருங்கள் இளந்திரையன். திரை-கடல். இந்த ஜாதகம் பார்த்துவிட்டு, ஞ,ஷெ,கூ,லொ என்று தொடங்கும் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட கேட்கிறவர்களின் வாயிலே பொக்கென்று குத்தவேண்டும். தமிழில் இல்லாதப் பெயர்களா என்று!) மனத்தில் கொண்டு உருத்திரங்கண்ணனார் எழுதின பெரும்பாணாற்றுப்படை அக்கால வாழ்நிலையை அறிந்துகொள்ள முக்கியமான பத்துப்பாட்டு நூல். கிட்டத்தட்ட எனக்கு இன்னொரு பட்டினப்பாலையை வாசித்ததுபோலப் பட்டது. அதிலே “நீர்ப்பெயற் றெல்லை போகிப் பாற்கேழ்” என்ற 319வது அடி (மொத்தம் 500அடி) மாமல்லபுரத்தைத்தான் குறிப்பிடுவதாக வாசித்திருந்ததால் இந்த தொடர்பு வேறோர்வகைக்கு நகர்த்தினது என்னை. அதுபற்றி பிறகு எழுதுகிறேன்.

குழுவினருக்கு வராஹ மண்டபத்தில் புடைப்புச் சிற்பங்கள் குறித்து பாலுசாமி அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தார். ‘பாதாளத்திலிருந்து பூமாதேவியை மீட்டு மடியில் தாங்கிகொண்டே, பாதாள அரசன் நாகனின் தலையில் முன்பாதம் அழுந்த, வராக அவதாரத்தில் நிற்பதையும், தன் கணவனைக் காக்க இறைஞ்சும் நாகனின் மனைவியும் கொண்ட சிற்பத்தை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் விவரணை பற்றி முன்பே சொன்னேனில்லையா. அவர் பேசப் பேச விஷுவலான காட்சி ஒன்று உங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும். 
“பாதாள உலகம் நீரால் ஆனது என்பதன் சான்றாக இங்கு அலைகளும் பூக்களும் தெரிகிறது பாருங்கள்’ 
 ‘பூமாதேவியின் முக அழகைப் பாருங்கள்; சிலர் அவள் வெட்கத்தில் நாணுவதாகச் சொல்வார்கள்.’
“நாகனின் மனைவி இறைஞ்சுவதைப் பாருங்கள் அவள் முகத்தில் என்ன ஒரு வேதனை’  என்று சிற்பங்களை அணுகும் நுணுக்கத்தை இலகுவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பயணத்தில் அவர் எனக்குக் கிடைத்த மிக முக்கியமான அறிமுகம். வராக மண்டபத்தின் தூண்பற்றி விவரிக்கிறார் உடன் குழுவினர்.
பிறகு கிருஷ்ண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பமான கோவர்த்தன காட்சியை விளக்கினார். சென்னையும், பிழைப்பும் நம்மைக் கைவிடும்போது எந்தக் கவலையும் இல்லாமல் மாமல்லபுரம் போய் நின்றுகொண்டு, இந்த சிற்பங்களைப் பற்றி வருகிறவர்களுக்கு விளக்கிக் கொண்டு காலந்தள்ளிவிடலாம் என்று எண்ணுகிறேன். அவ்வளவு ஆழமான, அதேசமயம் எளிமையான  உள்வாங்கல்.  “மாமல்லை” பற்றி மனத்துக்குள் உறைந்து போன  பயணம் இது.  

மதிய உணவுக்குப்பிறகு ரதங்கள் அமைந்த இடத்துக்கு குழுவினர் சென்றுவிட, நாங்கள் கடற்கரை கோயில்களுக்குச் சென்றிருப்பார்கள் என்று எண்ணி அங்கே போய்விட்டோம். சரி ரதங்களையும், யானையினையும் முன்பே அறிந்திருக்கிறோம்தானே என்ற சமாதானத்தின் பேரில் கடற்கரைக் கோயிலையே வளைய வந்தோம். 

என்ன ஒரு பிரம்மாண்டம். இரண்டு கோயில்களைச் சுற்றி வளாகமாக அமைக்கப்பட்டிருக்கும் பகுதியைக் காணும்போது, பாமகவினர் செய்த அழிச்சாட்டியங்களையும், கூடவே, ‘பால்மைரா’வில் வெடிவைத்துச் சிதைக்கப்பட்ட கட்டிடங்களையும் நினைத்துக்கொண்டேன்.

கடற்கரைக் கோயிலின் கருவறைக்கும் பலிபீடங்கள் அமைந்துள்ள இடத்தின் தொலைவைப் பார்க்கும் போது அக்காலத்தில் கோயிலின் பரப்பும் அமைப்பும் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்த்து வியந்துகொண்டேன். கடற்காற்றில் மிச்சமிருக்கும் சுதையினாலான சிற்பத்தின் இடைவெளித் துணுக்குகளில் காணப்படும் கலைநுணுக்கத்தை நீங்கள் போகும்போது நிச்சயம் கவனியுங்கள்.

 ‘ஈ’ மொப்பதுபோல ஜனங்கள் வந்து வந்து போகிறார்கள். விக்கிபீடியா உதவியில் “கைடு”களைப் புறக்கணித்துக் கொள்கிறார்கள். படம் எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுள் யார் இந்த பிரம்மாண்டத்தின் மிச்சத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைக்கப் போகிறவர்கள் என்றும் நினைத்துக் கொண்டேன். தொல்லியல்துறை ஊழியர்களெல்லாம் கொண்டாடப்பட வேண்டியவர்களைய்யா!

பஞ்சபாண்டவ ரதங்களை காணச் சென்றிருந்த குழுவினர் கடற்கரைக் கோயில்களுக்கு வந்துசேர்ந்தபோது சூரியன் மறைவதற்கு முன்பான வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பேராசிரியர் பத்மாவதி அவர்களிடம், “இம்மாதிரியான வரலாற்று இடங்கள் பற்றி தனித்தனியான சிறிய புத்தகங்களை எழுதுவதன் மூலம், ஆர்வமுள்ளவர்களுக்கு பல விஷயங்களைக் கடத்தமுடியும். அடுத்த பனுவல் சுற்றுலாவின்போது நாம் போகிற இடத்தின் வரலாற்று, தொன்மம் பற்றிய குறிப்புகளடங்கிய புத்தகப் பிரதிகள் நம் கையில் இருக்குமாறு செய்யவேண்டும். அதைச் செய்வதற்கான அத்தனை ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்றேன். அவருக்கும் அந்த எண்ணத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. “பண்ணலாம் கார்த்திக்” என்றிருக்கிறார். 

பின்பு, கேசவன், தீபக் மற்றும் நானுமாக குழுவினர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சென்னை புறப்பட்டோம். கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு வசதி என்னவென்றால் அலுப்பில்லாமல் வண்டி ஓட்டலாம். என்ன ஒன்று இந்த ரோட்சைடு ரேஸர்களைக் கண்டுகொள்ளாமல் செல்லவேண்டும். நீண்டகாலமாக சாலைப்போக்குவரத்து பணி நடக்கும் ஒரே பகுதியாகக் கிழக்கு கடற்கரைச் சாலைதான் இருக்கும். ‘டேக் டைவர்சன்’களைக் கூடப் தாங்கிக்கொள்ளலாம். இந்த சாலையில் சிதறும் ஜல்லிகள் பெரும் பிரச்சனை. எங்கள் கண்முன்னே ஒருவர் தடுமாறி சரிந்து விழ, அருகில் சென்று முதலுதவி செய்து வழியனுப்பி வைத்தோம்.

     அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில்  பனுவல் குழுவினர் சென்ற பேருந்து நின்றது கண்டு நாங்களும் வண்டியை ஓரங்கட்டினோம். எல்லோரும் கீழிறங்கி நிற்கிறார்களே என்னவாக இருக்குமென்று கிட்டே நெருங்கிப்போனால் அனைவரும் தேனீர் இடைவேளையில் இருந்தார்கள். கூட்டத்தோடு நாங்களும் கூடக் கலந்துகொள்ள, பயண அனுபவம் பற்றிப் பேச்சுத் துவங்கியது. 

   பேராசிரியர் பத்மாவதி அவர்களுக்கு நினைவுப்பரிசை வழங்குமாறு முகுந்தன் என்னைக் கோர்த்துவிட்டிருந்தார். பாலுசாமி அவர்களுக்கு திருமதி.ஈஸ்வரன் அவர்கள் நினைவுப்பரிசினை வழங்கினார். பனுவல் வாசக நண்பர் ஒருவர் அட்டகாசமாக தன்னுடைய இந்த முதல் பயணத்தில் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து நன்றிகளைப் பரிமாறிக்கொண்டார். இடையில் நானும் கொஞ்சம் நன்றியைச் சொல்லிவிட்டு தனியே சென்று பாலுசாமி அவர்களிடம் எனக்குள் தோன்றின கேள்வியைக் கேட்டேன்.

  கேள்வி இதுதான் : மாமல்லபுரத்தில் பிரசித்திவாய்ந்த யானைகளுக்கும், சிங்க ஏருகளுக்கும் பிறகு இப்பகுதியில் அதிகம் (எண்ணிக்கையிலும்) தென்படுவது நந்தி (மாடுகள்)சிற்பங்கள் தான். அதற்கு ஒப்பாக இங்கமைந்துள்ள முக்கியமான இரு புடைப்பு சிற்பத் தொகுப்பில் காணப்படும் கோவர்த்தனக் காட்சியில் ஆயர்களுக்கும் மாடுகளுக்கும் அரசனே அருகிருந்து, தோளில் கைபோட்டு ஆறுதல் தருகிறதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இனக்குழுவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்?

அவர்கூறிய "பதில்" ரொம்ப முக்கியமானதாக அமைந்தது எனக்கு… என்னுடைய கையில் இருக்கும் இந்த நூலை இழுக்க இழுக்க.... எந்தப் போர்வையில் கொண்டுபோய் விடப்போகிறதென்று தெரியவில்லை. பார்ப்போம்.பேராசிரியர்.பத்மாவதி ஆனையப்பன்
திரு.பாலுசாமி .,-கார்த்திக்.புகழேந்தி

14-03-2016.


  படங்கள் சில.. 
 


There was an error in this gadget