அன்னதோர் சொல் : அஸ்தினாபுரம் | ஜோ டி குருஸ்

               

வாழ்க்கை அவரவரது போராட்டங்களால் ஆனது. நிரைந்து ததும்புகிற மனத்தோடு வாழ்க்கைப்பாடுகளின் பின்னோக்கிப் பார்க்கிறபோது அத்தனையும் ஊழ் என்று வலியுறுத்துகிறது இந்தப் போர்க்களம். எத்தனையோ இடர்களை சிலுவைகள் போல் சுமந்துகொண்டே வாள்களைச் சுழற்றி முன்னேறுகிறோம். யுத்தத்தின் பெருங்குரல்  உள்ளே கிடந்து அரற்றிக்கொண்டே இருக்கிறதை மறைத்தபடி...




அஸ்தினாபுரம்

தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் நேரடியாக எந்தக் களத்தொடர்பும் இல்லை. ஆனாலும் முழுமொத்தப் பக்கங்களில் உருளும் பகடைகளைக் காண்கிறபோது அஸ்தினாபுரம் என்ற தலைப்பு நிகரற்றதாய் பிணைந்து கொள்கிறது.

 கொற்கை நிலத்தில் ஆமந்துறையில் பிறந்து, முதல் மனைவியின் கடூரத்தினால் வாழ்க்கைப் பாதையில் புரட்டியெடுக்கப்பட்ட அமுதனுக்கு, தொண்டை மண்டலத்தில் செம்மாங்குப்பத்தில் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் இளையவளாகப் பிறந்து, ‘வழக்கு முடியும் வரை நீ யாரென்று யாரும் கேட்டால் வேலைக்காரி என்றுவிடுகிறேன்’ எனச் சொல்லி மாலை மாற்றிக்கொள்ளும் புதுமனைவி ஆனந்தியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது அத்தினாபுரத்துப் பயணம்.

அடிப்படையில் கடற்கரைக்காரனாகப் பிறந்த அமுதன்  ஒரு முனைவர் பட்டத்துக்காக ஏவல் வேலைகள் செய்து, மீன்வளத்துறை அதிகாரி வேலைக்கு ஆசையாகக் காத்திருந்து, அது தன் உயர் அதிகாரியோடு கொஞ்சிக் குலவுகிறவளுக்கு நெருக்கமான யாரோ ஒருவருக்குப் பரிந்துரைக்கப் பட்டதை அறிந்து, ஆத்திரத்தில்  கைநீட்டி, ஒருகட்டத்தில் பட்டமாவது மண்ணாவது என்று மும்பைக்குச் சென்று ஏற்றுமதி இறக்குமதியில் கோலோச்சும் துறைமுக வர்த்தகத்தில் அடிப்படையிலிருந்து மேலேறத் துவங்குகிறான்.  

போர்க்களத்தில் ஆயுதங்கள் எப்போது ஒருமுகப் பக்கத்திலிருந்து தாக்குவதில்லையே. மனைவியோடு கூடவும், மகிழ்ச்சி கொள்ளவும் வழியில்லாத வாழ்க்கை ஒருபக்கம். உடன் பிறந்தவனுக்கு இரக்கப்பட்டு கடன்பட்டதுதான் மிச்சம், ஆடம்பரத்தில் மிதக்கிற மனைவியை வெறுத்துத் தள்ளுவதும், பிறகு ஒன்று சேர்வதும், தன் உடையில் தானே தீவைத்துக்கொண்டு வரதட்சணைக் கொடுமைப் படுத்தினான் என்று வழக்குகள் போட்டு சாவடித்ததுமாக அமுதன் ஒவ்வொரு பக்கங்களும் வாள் வீச்சுகளை எதிர்கொள்கிறான்.

அவன் கண்முன்னே இருக்கும் ஒரே பெரிய திறப்பு இந்தக் கடல். கடல்சார் துறைமுகத் தொழில். பன்னாட்டு வணிகர்களையும், கப்பல் முதலாளிகளையும், ஏற்றுமதி, இறக்குமதி தரகர்களையும், கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், சி எஃப் எஸ் ஆபரேட்டர்களையும், கண்டெய்னர் லைனர்களையும், டிரான்ஸ்போர்டர்களையும், ஸ்டிவிடோர்களையும், லிஃப்ட் ஆப்ரேட்டர்களையும், சர்வேயர்களையும், ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களையும், யூனியனின் மடிப்பு கலையாத சட்டைகளையும் கூடக் கையாளத் தெரிந்த ஆளுமைத்திறன். எங்கே காய் நகர்த்தினால் எங்கே கார்கோ நகரும் என்பதுவரைக்கும் அனுபவத்தில் தனக்கென ஒரு கம்பசூத்திரமே உருவாக்குகிறான் அமுதன்.

என்னதான் போர்க்கருவிகளைக் கையாளத் தெரிந்தவனாய் இருந்தாலும் புல்லுருவிகளின் அடிமட்டச் செயல்களால் நிர்வாகம் முதல் தொழில் வளர்ச்சி வரைக்கும் ஏகப்பட்ட முட்டுக்கடைகளை முறியடிக்கவேண்டி நேர்கிறது. முருகானந்தம் மாதிரியான நபர்களால் நாட்கள் இலகுவாகிறது. (பி.எம். என்கிற அந்தக் கதாப்பாத்திரத்தை நான் அறிந்தவன் என்றே நினைக்கிறேன். என்ன ஒரு அற்புதமான மனிதர்.)

வரதட்சணைக் கொடுமை என்று போடப்பட்டப் பொய் வழக்குகளால்  உழைப்பெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாகிறது. தன்னுடைய முதல் பிள்ளை கருவாகி இருக்கும்போது வளைகுடா நாட்டில் வெயிலுக்குக் காய்ந்து பேரீச்சை மரத்து நிழலில் கடிதமெழுதுகிறார் மனைவி ஆனந்திக்கு. ஆண்மையில்லாதவன் என்ற பழிச்சொல்லைக் கழுவ வந்துதித்தப் பிள்ளைகளைக் கண்ணீர்மல்கக் கொண்டாடுகிறார்.

வளர்ச்சித் திட்டங்களை நோக்கிப் பயணிக்கும் நிறுவனங்களில் மேல்மட்டப் பெரிச்சாளிகள் விசுவாசமும் அதே நேரம் கள அனுபவமும், உழைப்பும் கொண்ட அமுதனைத் தங்கள் ஆளுமைகளால் கட்டுப்படுத்த நினைக்கும்போதெல்லாம் வாமன அவதாரமாய் விஸ்வரூபம் எடுக்கிறார் அமுதன். முதல் அடி வைக்கும்போது கிரானைட் கல் ஏற்றுமதியில் மாற்றங்களைப் புகுத்துகிறார். இரண்டாவது அடியில் கல்லோடு கடலில் விழுந்த லாரியை ராட்சத கிரேன்மூலம் கடலில் இருந்து தூக்கி நிறுத்துகிறார். காற்றாலை மின்சாரத்திற்கான காற்றாடிகளின் நீண்ட பிளேடுகளைச் சென்னை துறைமுகத்தின் வழியே எடுத்துச் செல்லமுடியும் என்று புதர் மண்டிய இடத்தைச் சீரமைத்து களம் அமைக்கிறார். இதெல்லாம் மட்டும்தானா.. அமுதன் செய்யும் அனாயச சாகசங்கள் மேலாண்மைக் கல்வி கற்பவர்களுக்குப் பாலபாடமாக அமையக்கூடியவை.

தொட்டதெல்லாம் அதிரடி காட்டுகிறவரென்றாலும் ஆள் கொஞ்சம் திமிர்பிடித்தவன், கோபக்காரன், யாருக்கும் அடங்காதவன் என்ற சொற்களினால் மேலோர் அவரை விலக்கி வைக்க, அமுதனோ தார்பாய் சுற்றிப் படுத்துக்கிடந்த ”ஜோக்கர்” தொழிலாளர்கள் மீது லாரி ஏறி இறந்துபோக, அடுத்த நிமிடமே சம்பவ இடத்தில் ஆஜராகி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து தன்னுடைய நிறுவன ஐடிகார்டை அவர்கள் சட்டைக்குள் நுழைத்து இறந்துபோனவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வழிசெய்துகொடுத்து கீழோர்க்கு மனதிற்கு நெருங்கின ஆளாகவே காட்சி தருகிறார். அமுதன் என்றால் அவர்கள் அத்தனை பேருக்கும் நிஜமான மரியாதையும் பேரன்பும்.

அமுதன் தன் சொந்த வாழ்க்கையில், பெற்ற தாயாலும், மணம்புரிந்த முதற்பெண்ணாலும், உடன்பிறந்த சகோதரனாலும், சகோதரியாலும், ஏன் தந்தையாலும்கூட ஒருகட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவராகவே வாழ்கிறார். எப்போது வீழ்வான் என்று கண்கொத்தி நாரையாகக் காத்திருக்கிறவர்களுக்கு நடுவே அயராத உழைப்பு அவரை முதலாளிகளால் கொண்டாடச் செய்கிறது. பேர் சொல்லி அடையாளம் சொல்லி அமுதனின் திட்டங்களைச் சிலாகிக்கிறார்கள் பெரும் முதலாளிகள்.

ஆனாலும் சிலந்திவலை படிந்த குளியலறையில் தண்ணீர் நின்று போக சமையலுக்கு வைத்திருந்த குடத்தில் மேல் கழுவிக் கொள்ளுகிறவராக, பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுக்கிறவராக  அமுதன் கதாப்பாத்திரம் என்ன ஒரு எளிமைத்தன்மை கொண்ட ஆளுமை. கடற்புரத்தில் சக்கரவர்த்தி மாதிரி சூத்திரங்களால் தன் முன்னே இருக்கும் கணிதச் சமன்பாடுகளை வெட்டி வீசுகிற மனிதர் அமுதன். சந்தேகமே இல்லாமல் மிகப்பெரிய திறமைசாலி. ஆனால் திறமைசாலிகளை உலகம் சரியான தீனிபோட்டு வளர்த்துவிடுவது இல்லைதானே. அடுத்தடுத்து நிறுவனங்களுக்கு மாறுகிறார். மனத்தடை கொண்டவராக இருக்கிறார். ஹீரோயிஸமெல்லாம் பண்ணாமல் தன்னை அறிந்தவராக வெளிப்படுகிறார்.

முழுக்க முழுக்க 8118கி.மீட்டர் நீளமுள்ள இந்தியக் கடற்புரத்தின் இன்றைய கார்பரேட் எழுச்சியையும், மாற்றங்களையும், தலைவிரித்தாடும் லஞ்ச, ஊழல், வளர்ச்சியின்மை, துறைசார்ந்த அனுபவமின்மை, பொறுப்பின்மை எல்லாவற்றுக்கும் எதிர்காலத் திட்டமிடலின்மை ஆகியவற்றை தன்னுடைய இத்தனை ஆண்டுகால அனுபவங்களால் கேள்விகேட்கும்படியாக நாவலின் பின்பகுதியில் ஒரு உரை நிகழ்த்துகிறார். பெட்ரோலுக்கு நாம் கொடுக்கும் அதிகபட்சமான காசு எங்கே வீணடிக்கப் படுகிறது என்ற உண்மையை அந்த உரையின் வழியே கடந்துபோகிறார்.

எல்லோரும் கச்சத்தீவுக்கு அடித்துக் கொண்டிருக்கும்போது, “வெட்ஜ் பேங்க்” பகுதியில் நம் மீன்வளத்தைச் சிங்களன் சூறையாடுகிறான் இதை எவனும் தட்டிக் கேட்பதில்லை. மீன் கொழிக்கும் கடல்பரப்பு என்று எக்கச்சக்கமான சங்கதிகளை நாவல் வழியே எடுத்து விவாதங்களுக்கு முன் வைத்திருக்கிறார் ஜோ டி குருஸ். துறைமுகப் பாடுகள், சுனாமி, தனி ஈழம், திரிகோணமலை கடற்கரை, எண்ணூர் துறைமுகம், துறைமுக நகரத்தின் போக்குவரத்து நெரிசல், வெள்ளைக்காரர்கள் காலத்தில் போட்ட துறைமுகச் சாலை, சரக்குவாகனம் வரும் சாலையில் அலங்கார வளைவு, தண்டல்காரர்களின் அழிச்சாட்டியம் என்று நாவலின் பல பக்கங்கள் அழுத்தமான பதிவுகளாக வெளிப்படுகின்றன.

இடையிடையே குடும்பச் சூழலும், பிள்ளைகள் வளர்வதும், வழக்குகளில் விடுபடுவதும், தந்தை அல்வாரிசின் மரனமும், தாயின் அருகாமையிலும் அவருடைய கனல் கக்கும் வார்த்தைகளும், அமுதன் என்ற கதாப்பாத்திரத்தின் வழியே பாண்டவத்தில் நிகழும் வீழ்தல், எழுதல், குரோதங்களை பிரதிபலித்துச் செல்கின்றன. எதிலும் நானில்லை எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன் என்கிற தன்னுடைய வார்த்தைகள் மூலமாகவே தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார் அமுதன்.

இறுதியாக  தன் தாயோடும், பிறகு தன் மகன் எழிலனோடும்  நிகழ்த்துகிற உரையாடல் அத்தனை செறிவான இடங்கள். இருபக்கமும் எடை கூடிக் குறையும் தராசின் அதிர்வு போல அக்காட்சிகள் நிகழ்கிறது. வட்டார வழக்கின் ருசித்தனம் கடினமில்லாது இனிக்கிறது.

இந்த நாவலின் ஒரு அத்தியாயத்தில் வரும் சில வார்த்தைகள் என்னை திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்தபடியிருந்தன.

“ ரொம்ப போரடிக்கிறனோ?”

“ஏதாவது புதுசா தெரிஞ்சிகிட்டே இருக்கணும் சார். உங்களோட பிரயாணம் பண்ணுறதுக்கு வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்குவம்”

“தெரிஞ்சி செய்யிறதுல திரில்லே இல்ல. தெரியாம முட்டி மோதி செய்யிற பார்த்தியா அதுலதாம் திரில்லும், அதைவிடப் பெரிய பொக்கிஷமான அனுபவமும் இருக்கு. காரணம் சுயமா  சிந்திச்சிருப்ப”

இந்த சின்ன பேச்சாடலில் தான் நான் ஜோ டி குருஸ் என்கிற எழுத்தாளரோடு மிகையாகப் நெருங்கிப் போகிறேன். கொற்கைக்குப் பிறகுதான் ஆழி சூழ் உலகு வாசித்தேன். பிறகு கழுகெழு கொற்கையைக் கையில் கொடுத்து அகநாழிகை பொன்.வாசுதேவன் வாசிக்கச் செய்தார். நண்பர் கதிர் கொடுத்த வகைக்கு இப்போது அஸ்தினாபுரமும் வாசித்து முடிந்தது. எல்லா புரங்களிலும் இந்த இவருடைய மொழியும், எழுத்தும் அத்தனை இம்சை பண்ணுகின்றவை என்னை. “புதுசா ஏதாச்சும் கத்துகிட்டே இருக்கணும் என்கிற இம்சை” அவ்வளவுதான்.

முழுதாக ஒரு நாவல் வாசிக்கச் செலவிடும் நேரத்தை அஸ்தினாபுரம் மொத்தமும் அர்த்தமுள்ளதாய் மாற்றித்தந்தது. தெற்கிலிருந்து ஏகக் கணக்கில் கனவுகளோடும், கொஞ்சமே கொஞ்சம் பள்ளிக்கூட சகவாசத்தோடும் கூடை நிரம்ப பிரச்சனைகளையும், அது தந்த மனக்காயங்களின் தழும்புகளையும் தூக்கிக்கொண்டு இடம்பெயர்ந்து வந்தபின், பிரச்சனைகளை ஓரம் வைத்துவிட்டு கனவுகளைத் துரத்தி முட்டி மோதி  மேலேறத் துடிக்கிற என்மாதிரி பேருக்கு இந்த வாசிப்புத்தான் வாத்தியார்கள். ஒவ்வொரு காகிதப்பக்கங்களிலும் எழுதுகிற எழுத்து எவனோ ஒருவனுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்குமென்பது எவ்வளவு உண்மை.

நிறைய குத்துப்பட்ட பிறகும் அன்பினாலானவன் தான் நான் என்று நிற்கிற அமுதனைப் பார்க்கையில் எவ்வளவு ஒரு உவகை பிறக்கிறது.. எல்லா புத்தகத்தையும் வாசிக்கக் கொடுத்து வைத்துவிடுவதில்லை. சிலவற்றைத்தான் வாசிக்கிறேன். அதில் ஏதோ ஒரு பக்கத்தில் நானும்  வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில்  பீறிடுகிறது கண் சுரப்பி. அஸ்தினாபுரத்தை என் விருப்பமான புத்தகங்களின் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். நண்பன் கதிருக்கு நன்றி.  ஜோ சாருக்கு  மரியாதை.





-கார்த்திக். புகழேந்தி

29-03-2016. 

Comments

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil