Saturday, 27 June 2015

உப்பு புளி மொளகா....தோழமை ஒருவரோடு வாட்சப்பில் பேசிக்கொண்டிருந்தேன். நகரத்து உணவு விடுதிகளில் பதார்த்தங்களை,“ ஸ்டார்ட்டரில் தொடங்கி டெசர்ட் வரைக்கும்” விதவிதமாக விரும்பிச் சாப்பிடும் அனுபவத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தார்.

விதவிதமாகச் சமைக்க ‘மட்டுமே’ தெரிந்து வைத்திருந்த தலைமுறைப் பெண்கள் தனக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்து விரும்பிச் சாப்பிடுவதைப் பற்றி பெருமையாக சொல்லும் போது கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. காலம் எவ்வளவு மாறிவிட்டது என்றேன்.

ஆமாம், சமைக்க மட்டுமே தெரிந்தவர்கள் சாப்பிட மட்டுமே தெரிந்தவர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறோம் என்று புன்னகைக்க வைத்தார். ஏதோ வென்னீரில் கொதிக்கவிட்டு இந்த மேகி மட்டுமாவது கைகொடுத்து வந்தது அதுவும் போச்சு என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது.

நிஜம் தான். வருங்காலங்களில் அம்மாவின் சமையலை சிலாகிக்கும் குழந்தைகள் அரிதாகிவிடுவார்களோ என்னவோ. ஒரு ஹைக்கூ படித்தேன். “விமானங்களை அனாயசமாகவும் பட்டாம்பூச்சிகளை ஆச்சர்யமாகவும் கடக்கும் நகரத்துக் குழந்தைகள்” என்று.

புதிதாய் திருமணமான அத்தனை மாப்பிள்ளைகளையும் நமட்டுச் சிரிப்போடு வீட்டில் சமையல் எல்லாம் எப்படி என்ற கேள்வி உதிர்க்கிறோம் தானே. உப்பு குறைவாகவும், உளுந்து கூடுதலாகவும் என்று தினம் ஒரு சுவைகளில் உணவு சமரசங்களோடு படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அஷ்டகோணலாய் முகத்தை வீட்டில் மட்டும் சுளித்துவிட்டு ஆபீசில் மனைவி சமையலை பொறுத்துக் கொள்கிற கணவன்கள் தியாகிகளேதான். இந்த தியாகம் அன்பை வளர்க்கும்.

நல்லவேளையாக மேன்சன் காலத்தில் எனக்கும் மணிகண்டனுக்கும் கூட வாய் ருசிக்குச் சமைக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாம் இந்த உப்பு, காரம் கொண்ட சைவ,அசைவ சமாச்சாரங்களில் தான். அம்மா வைப்பது போல ஒரு சாம்பார் வைக்கவேண்டுமென்றால் திண்டாடித்தான் போகிறோம்.

பிரகாஷ்ராஜ் நடித்த ”உன் சமையலறையில்” திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். ‘இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது” விட்டால் நாள் முழுக்க அந்த பாடலைப் பார்த்தே ருசியாறிக் கொள்ளலாம்.

சின்னவயதில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது
தண்ணீர் குடிக்கச் செல்லும் டீக்கடையில் நண்பன் ஐய்யப்பனின் சித்தப்பா வெங்காய வடை சுடும் வாசத்தில் மயங்கி அங்கேயே நின்று கொண்டிருப்பேன். நாங்கள் வசித்த தெருவிற்கு ஒரு வாசமுண்டு.
சனிக்கிழமைகளில் எல்லா வீடுகளிலும் மீன்குழம்பு வாசமடிக்கும். ஞாயிற்றுக்கிழமை ஆடு, கோழிக்குழம்பு வாசம்.

என் கை மணக்குதா இன்னைக்கு எங்க வீட்டில் இன்ன குழம்பு என்று பெருமை பீத்திக்கொண்ட பொடிப்பயல்களாக வாழ்ந்து தீர்த்ததை இன்னுமொருமுறை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. தெருமுனைவீட்டில் ராஜி அக்கா குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டு மீன்குழம்பு வாசம் இதோ இந்த வார்த்தையை எழுதும் போதே பசியைப் புரட்டுகிறது.

ராஜி அக்கா போலச் மீன்குழம்பு வைக்கும் பெண்ணாகப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால் விதியின் விளையாட்டு மீன்குழம்பு மாத்திரம் நன்றாக வைக்கத் தெரிந்த பெண்ணை அனுப்பி வைத்துவிட்டார். பாத்திரம் கூட நாம் தான் தேய்க்க வேண்டும் போல..

ஒரு காலத்தில் பெண்குழந்தை பிறப்பே சாபம் என்று கருதப்பட்டுக் கொண்டிருந்தது. நான் சொல்லும் ஒருகாலம் பிந்தைய வேத காலம் வர்த்தமானருக்கும் புத்தருக்கும் முன்பிருந்த காலம்.
(கி.மு 1000முதல் 600வரை).

ஆனால் அன்றைக்கே காத்யாயினி, கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் மேதைகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். அதுபோல சமையலைக் குற்றஞ்ச் சொல்வது போல நான் பேசிக் கொண்டிருக்கையில் எங்காவது அட்டகாசமாய் சமைக்கும் இக்காலப் பெண்கள் அஞ்சறைப் பெட்டியின் வாசனையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வாக்கப்படப்போகின்றவர் பாக்கியவான்.

- கார்த்திக் புகழேந்தி
27-06-2015.

Tuesday, 9 June 2015

கடாரம் கொண்டான் : கடாரமும் தமிழகமும் - டத்தோ .வீ. நடராஜன்.


ஒருவாரம் முன் டத்தோ.வீ.நடராஜன் அவர்களை ஹோட்டல் அபி பேலசில் சந்தித்த பதிவோடு அவரோடு ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடி செய்யட்டுமா நண்பர்களே என்று பதிந்த வேகத்தில் நேற்றைக்கு, (08-06-2015) சமூக ஆய்வு வட்டம் சார்பில் ஏழாவது நிகழ்வாக பனுவலில், 
“கடாரத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு” என்ற தலைப்பில் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான் ஓய்ந்தார் பேராசிரியர். ஆ.பத்மாவதி அவர்கள். 

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்னே வீட்டுக்கு அழைத்திருக்க,  தெற்குச் சீமையின் ருசியோடு புளிப்பும் உரைப்புமாக உருண்டைக்குழம்பும் சோறும் தின்று,  திரு. நடராஜன் அவர்களது புத்தகம் பற்றியும், வேளாண்துறை இயக்குனர் திரு. இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றியும் நிறைய தகவல்களைச் சொன்னார். 

வீட்டுக்கு வந்ததும் கடாரம் பற்றி கொஞ்சம் தேடிப் படித்ததில் பட்டினப்பாலையின் “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் பாடலில் வந்த காழகத்து ஆக்கமும் என்ற வரி கடாரத்தைக் குறிக்கிறது என்பது போலான தகவல்களை கொஞ்சம் அறிந்து,  இராஜேந்திர சோழனையும், கடாரத்தையும் இணைக்கும் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதின் பேரார்வத்தில் இருந்தேன். 

திங்கள்கிழமை மாலையில் ஏற்பாடாகியிருந்த நிகழ்வுக்கு பனுவல் அரங்கில் எதிர்பார்ப்புக்கு அதிகமானவர்கள் திரண்டிருக்க, ஜோ டி குரூஸ் (கொற்கை),  அந்திமழை. திரு.அசோகன், வரலாறு டாட்காம் தளத்தின் காரணகர்த்தா,  இப்படி இன்னும் பல முக்கியமானவர்கள் திரண்டிருக்க நிகழ்ச்சி ஏழுமணியளவில் தொடங்கியது. 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான பேரா. பத்மாவதி அவர்கள் வரவேற்றுப் பேச, நிகழ்ச்சித் தலைமையேற்ற, திரு. இராஜேந்திரன் IAS அவர்கள் சோழர்கள் பற்றிய அறிமுகத்தோடு, டத்தோ.வி.நடராஜன் அவர்களை அறிமுகம் செய்து கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.  

மைக்கை விட என்குரல் உங்களுக்கு நன்றாகக் கேட்குமென்று நேரடியாக தன் பேச்சைத் தொடங்கினார். கடாரம் என்பது தற்போதைய மலேசிய தீபகர்ப்பத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு  என்றும், அதற்கு சுவர்ண பூமி என்று பெயருள்ளதையும் கடற்பயணியான பெரிப்ளூஸ் முதன்முதலாக சுவர்ணத்தீவென்று அழைத்தைதையும், அங்கே செய்யப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்களையும் விளக்கினார். 

பின் பவர்பாய்ண்ட் விளக்கக் காட்சிகளுடனும், வரைபடங்களுடனும் சோழக் கப்பல்களான மரக்கலம், தோணி, கலவம், வெடி மற்றும் படகு ஆகிய வகைகளையும், பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாய்மரங்களையுடைய கப்பலுக்கு வழிகாட்டும் பறவைகள் சின்னமிட்ட நாணயத்தையும், பருவக்காற்றை பயன்படுத்தி பயணங்களை மேற்கொண்டதையும்  விளக்கினார்.  


கடாரத்தில் இந்திய வாள்கள் தயாரிக்கப்பட்டதாகக் கிடைத்த குறிப்புகளைச் சொல்லி, தொல்பொருள் ஆய்வில் அங்கு கிடைத்த மூன்று இரும்பு உருக்கும் கொப்பரைகளின் படங்களைக் காட்டினார்.  கடாரம் என்பதற்கு என்ன பொருள் என்று தேடிப்பாருங்கள் இரும்பு என்று பொருள் உள்ளதென்று சொன்னார்.  வீட்டுக்கு வந்ததும் ‘அபிதான சிந்தாமணியிலும்’, ‘பிரிட்டானிகாவிலும்’ தேடிப்பார்த்தேன் கடாரத்திற்கு கடாகம்- கிணறு, பெருங்கொப்பரை,  கடாரம் - கருமை கலந்த பொன்மை (இரும்பு) என்ற பதில் கிடைத்தது.

இராஜேந்திர சோழன் கடல்கடந்து செய்த வணிகத்தையும், வணிகத்தின் பொருட்டு கிழக்காசிய நாடுகளின் மீதான படையெடுப்பையும், ஆட்சி பரிபாலனம் செய்யாமல் அந்தந்த நாட்டு மன்னனையே ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி கப்பம் செலுத்த வைத்த வரலாற்றையும், இதன்மூலம் மக்களிடம் நிகழ்ந்த  நாகரீக, பண்பாட்டு மாற்றங்களையும்  அதன் பின் வரலாறுகளையும் இலக்கிய ஆதாரங்களோடும், ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளோடும், சீன,  அரேபிய, மலேசிய நூல்களில் கிடைக்கும்  ஆதாரங்களோடும்  மேற்கோள் காட்டினார்.  

(படங்கள் கீழே) 

தொல்பொருள் ஆய்வில் கிடைத்த பல்லவ கிரந்த கல்வெட்டுகளும், நாணயங்களும், சோழர்காலச் சிலைகளும்,  தமிழகத்தில் செய்து கடாரத்திற்குச் சென்ற மணிகள் செதுக்கப்பட்ட கற்தூணின் ஒரு பகுதி,   கரும்பு, தானிய அரவை கல் யந்திரங்கள் என பல சான்றுகளை திரையில் காட்ட சட்டம் படித்துவிட்டு வரலாற்று ஆய்வாளராக மாறி,  "Bujang Valley the wonder that was ancient Kedah "  என்ற நூலினை எழுதி, (தமிழில் : சோழர் வென்ற கடாரம்)  மலேஷிய மன்னரால் “டத்தோ” எனப் பட்டம் பெற்ற திரு. வீ.நடராஜன் அவர்களின்  நீண்டகால ஆய்வும் உழைப்பும் அளவில்லாத தேடலும் திகைக்கவே செய்தது.

இந்தியர்கள் வணிகம் செய்த அளவுக்கு வரலாறு எழுதாததின் கோபம் அவருக்கு இருக்கிறது. மலேஷிய நாட்டின் மன்னர்களை  “துங்க்” என்று அழைப்பது ( எ.கா : குலோத்துங்க ) சோழர்களோடான தொடர்பின் அடிநாதம் என்ற ஊகத்தை நிரூபிக்க சான்றுகள் இல்லாத வருத்தத்தை அந்த கோபமே கடத்துகிறது. இன்றும் மலேஷிய மன்னர்கள் வரவேற்பின்போது பின்னே வாசிக்கும் வாத்தியங்கள் மிருதங்கமும் நாதஸ்வரமும் தான் ஆனால் இது தமிழ்நாட்டின் வழக்கம் எனச் சொல்லமுடியாத சூழல் என்று பல தகவல்களைப் பேச்சுவாக்கில் வீசிச் செல்கிறார். 

சோழர்கள் மீதும் வரலாற்றில் கடற்பயணங்கள் மீதும் ஆர்வம் கொண்டவர்களுக்கு நேற்றைய இந்த கருத்தரங்கு மிகப் பயனுள்ளதாகவே அமைந்தது என்பதை ஒவ்வொருவர் குறிப்பேடுகளும் நிறைந்ததில் கண்டுகொள்ள முடிந்தது.

கேள்விகளுக்கு பதிலளித்த பின், ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி அவர்களுக்கு நிபைவுப்பரிசு மடலை டத்தோ.வீ. நடராஜன் அவர்கள் வழங்கினார்.  திரு.சௌந்தர் ராஜன் அவர்கள் சோழர்கள் பற்றிய ஆய்வரங்கத்திற்கு பல்துறையைச் சார்ந்தவர்களிடமும் ஒத்துழைப்பு கேட்க,  நிகழ்வின் இறுதியில் நான்  சமூக ஆய்வுவட்டத்தின் சார்பில் நன்றி தெரிவிக்க கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது. 


நிகழ்ச்சி முடிந்தபின், பேராசிரியர், அமுதரசன் மற்றும் பரிசில் செந்தில்நாதன் ஆகியோர்களிடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பனுவலில் இன்னும் சில நாட்களில் கல்வெட்டு எழுத்துகள் கற்பிக்கும்  வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுமென்று அறிகிறேன். 

ஒரு புத்தகக் கடை என்பதையும் தாண்டி பனுவலின் ஒவ்வொரு இயக்கமும் ஆச்சர்யங்கள் மிகுந்தது. பிலிம் சொசைட்டி தொடங்கிவிட்டார்கள். வாரம்தோறும் திரைப்படங்கள் திரையிடுவதற்கான முயற்சியில் ஆட்சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.   இந்தவாரம் சேகுவேராவின் 87வது பிறந்தநாளில் இருந்து பனுவல் பிலிம் சொசைட்டி இயங்கத் துவங்குகிறது. முகுந்தனிடம் மல்டி ப்ளக்ஸ் எப்போது துவங்கப் போகிறீர்கள் என்று கேட்டு வைத்திருக்கிறேன்.

ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்திவிட்டு ஆண்டு முழுதும் வாங்கும் புத்தகங்களுக்கு 10% சலுகையும்,  தமிழில் முக்கியமான மற்றும், தரமான காடு  சூழலியல் இதழின் ஓராண்டு வெளியீடுகளும் தருகிறார்கள். அதைவிட முக்கியமானதென்னவென்றால் ஓராண்டு நிறைவு பெற்றதும் செலுத்திய முன்பணத்திற்கு புத்தகமாக வாங்கிக் கொள்ளலாம். 

வாழை, புத்தக நிலையம், வாசிப்பு வட்டம், வரலாற்றுப் பயணங்கள், சுற்றுச் சூழல் இதழ்கள் / புத்தகங்கள், இயற்கை அங்காடி, வகுப்புகள் பிலிம் சொசைட்டி என்று பனுவலின் ஒவ்வொரு அடியும் முக்கியமான அத்தியாயங்கள்.  யாரும் செய்யாததைச் செய்கிறோமென்றெல்லாம் ஆர்ப்பாட்டமின்றி தங்களால் ஆனதைத் தயங்காமல் செய்கிறார்கள். 

அதற்காகவே வாழ்த்தவும் ஒத்துழைக்கவும் கடமைப் பட்டுள்ளோம். வக்கனையாக இணையத்தில் மட்டும் சமூகசீர்திருத்தம் பேசி என்ன பயன் ?இயங்குபவர்களுக்கு ஒரு துரும்பையும் அசைத்துக் கொடுக்காமல். 

இதேவாரம் பட்டாம்பூச்சிகளின் திருவிழா என்று குழந்தைகளுக்கான தொடர் நிகழ்வுகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இயக்குனர் ராம் கலந்துகொள்ள (13.06.2015) ஓவியம், திரையிடல் என்று குழந்தைகளுக்கான கலை வளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழர்! 

-கார்த்திக்.புகழேந்தி 
09-06-2015. 


டத்தோ.வி நடராஜன்
டாக்டர். இராஜேந்திரன். IAS., இயக்குனர் வேளாண் துறை.பேராசிரியர். ஆ.பத்மாவதி

 ஜோ டி குருஸ்


                                                                         - நன்றி-

ஆலயம் செல்வது சாலவும் நன்று

கடந்த (29-05-2015) வெள்ளிக்கிழமையன்று மதியம் கல்வெட்டாய்வாளர் திருமதி. பத்மாவதி ஆனையப்பன் அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு. திருப்போரூர் முருகன் கோயிலில் அமைந்துள்ள நவ வீரர்கள் சிலைகளைக் காணப் போகிறோம். பிற்பகல் மூன்று மணிக்கு நீங்களும் வந்துடுங்க கார்த்திக் என்று...

அவசரவேலை என்று எதுவும் இல்லை என்பதாலும், கூகுளில் சென்னைக்கும் திருப்போரூருக்கும் 28சுமார் கிலோமீட்டர்களே காண்பித்ததால்  எப்படியும் மாலையில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையாலும் நானும் ஐக்கியமாகிக் கொண்டேன். வழியில் நண்பர் திரு.பன்னீர் சிப்காட் அருகில் இணைந்துகொள்ள திட்டப்படி திருப்போரூர் கோயிலை மாலை நான்கு மணிக்கு அடைந்தோம்.

கோவில் நுழைவாயிலில் இருந்து நேரே பிரகாரத்தின் பின்புறம் சென்று, கற்பலகையில்  செதுக்கப்பட்டிருந்த  நவவீரர்கள் என்றழைக்கப்படும் வாளும் கேடயமும் ஏந்தி அணிவகுத்து நின்ற வீரர்களின் சிலைகளைக் காண்பித்தார் பன்னீர். 

அதேவரிசையில் விநாயகர் சிலைக்கு அருகில் அமைந்திருந்த (சீனர்கள் சாயலில் மீசை வைத்திருந்த)   முனிவரை கவனித்து குறிப்பெடுத்துக் கொண்டார் பேராசிரியர். கோவிலின் தன்மையையும் தூண்களின் வடிவமைப்பையும் வைத்து கோயில் அமைக்கப்பட்ட காலம், சைவத்திற்கு முன்பு யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்திருக்கலாம் என்றெல்லாம் பன்னீரும் பேராசிரியரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிரகாரம் சுற்றி அப்படியே முன்மண்டபத்திற்கு வந்தால், பின்பக்கம்  நவ வீரர்கள் எப்படி வாளும் கேடயமும் ஏந்தி நிற்கிறார்களோ அதேபோலவே 24 வெள்ளை கிரானைட் தூண்களிலும் திசைக்கு ஒருவராக நான்குபுறமும் செதுக்கப்பட்ட வீரர்களின் உருவச்சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார் பேராசிரியர்.

சில தூண்களில் அதே மீசைக்கார முனிவரும் தென்பட்டனர். பொதுதரிசனம் செல்லும் கம்பி வளைவுகளுக் கிடையில் அமைந்த  ஒரு தூணில் மயில்மீது அமர்ந்த முருகனும் அதே முனிவரும் நிற்கும் சிலை காணப்பட்டது.

 “முக்கியமான போர் ஒன்று இப்பகுதியில் நிகழ்ந்திருக்க வேண்டும். அதன் காரணகாரியங்களோடு இந்த கோவில் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதோடு மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களையும் ஆய்வு செய்தால் மேற்கொண்டு இன்னும் தகவல்கள் கிடைக்கும்” என்றார் பேராசிரியர்.

சுற்றுப்பிரகார மண்டபம் ஒன்றில் தென்பட்ட தமிழ்கல்வெட்டு ஒன்றில்  “பாண்டிய” என்ற சொல்லைச் சுட்டிக்காட்டினார் பேராசிரியர். இப்போதெல்லாம் எங்கேயாவது யாராவது பாண்டிய மன்னர்கள் பெயரைச் சொன்னாலே உங்களுடைய நினைவுதான் வருகிறது என்று நகைத்து வைத்தேன்.

கூடவே நின்றிருந்த பன்னீர் இடையில் சிறிது நேரம் காணாமல் போய், யாரோ ஒரு பாட்டியிடம் போய் கோயில் பற்றிய பல தகவல்களைக் கேட்டு விசாரித்துக் கொண்டு வந்தார். சிற்பங்களைப் பார்த்ததுமே இது இது இன்னாருடைய சிலை இதே போன்று தஞ்சாவூரில் ஒரு சிற்பம் இருக்கிறது என்று விரல்நுனியில் தகவல் அடிக்கிறார் மனிதர்.  

'பன்னீர் மாதிரியான ஈடுபாடுள்ளவர்களை இந்த பண்பாட்டு அடையாளச் சின்னங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடுத்தவேண்டும்' என்று தன்னுடைய அக்கரையை பேராசிரியர் வெளிப்படுத்தினார்.

வெளிமண்டபத்தின் தூண்களில், வீணையேந்திய தட்சிணாமூர்த்தி யானையை பிளந்த சிவன், வில்லேந்திய முருகன்,  கோச்சடையான், நடராஜர், என கல்லிலே கண்ட கலைவண்ணங்களை காமிராவில் சுட்டுக் கொண்டு மாலை ஆறுமணிக்கு சென்னைக்குத் திரும்பினோம்.

வழிபாட்டுக்காக மட்டுமே கோயிலுக்குச் சென்று பக்தியில் ஆழ்ந்துபோகும் குடும்பத்தில் பிறந்தாலும், தூண்களையும், சிற்பங்களையும், சிலைகளையும், புரியாத கல்வெட்டு எழுத்துகளையும் உற்றுநோக்கிக் கொண்டிருப்பவனாக வளர்ந்த எனக்கு இதுபோல அனுபவங்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமான வையாகவே அமைகின்றன. அதிகமாக குறிப்புகள் எழுதிக்கொள்ளாவிட்டாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே  தகவல்களையு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். இதுவேதான் திருப்போரூரிலும் நடந்தது.

‘மாடர்ன் எழுத்தாளனா மட்டும் இல்லாமல் வரலாற்றையும் தெரிஞ்சுக்கோங்க கார்த்திக்’ என்று பேராசிரியர் சொல்லும்போது, இன்னும் கொஞ்சம் ஆர்வம் வரத்தான் செய்கிறது. 

சமீப நாட்களாக ஒரு கோயிலை எப்படி வரலாற்று ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கும் கலைக்கூடமாக அணுகவேண்டும் என்ற பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துக் கொண்டு வருகிறேன். 

கோயில்கள் நம்முடைய கலை, வரலாறு, பண்பாட்டின் ஒருங்கமைந்த கூடங்கள். நம்முடைய கலையையும், வரலாற்றையும் தெரியாத இனமாக வாழ்ந்து என்னத்தைக் கிழிக்கப்போகிறோம். 

 ‘எதிரிகளைத் தடுத்து ஆடும் மன்னர்களில் அடித்து ஆடிய மன்னன் இராஜேந்திர சோழன் தான்’ என்று சொல்லக் கேட்கும்போது சிலிர்க்கிறதுதானே. 

ஆக நம் மண்ணின் மன்னனின் வரலாறு அறிவதும், போற்றுவதும் காப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையென்றே எண்ணுகிறேன். 

சும்மாவா சொல்லி வைத்தாரன்று தமிழ்க்கிழவி,  “ஆலயம் செல்வது சாலவும் நன்றென்று”.

-கார்த்திக். புகழேந்தி.
09-06-2015.


புகைப்படங்கள் கீழே...  

திருப்போரூர் - மாமல்லபுரம் சாலை.

கல்பலகையில் ஆயுதமேந்திய நவவீரர்கள்
There was an error in this gadget