Posts

Showing posts from 2015

சந்திரஹாசம் - அகமும் புறமும்..

Image
    புத்தகம் கையில் கிடைத்த தினத்திலிருந்து இன்றைக்குவரைக்கும் “படிச்சதும் கொடுங்க” என்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டிருக்கும். சரி என்ன இருக்கிறது சந்திரஹாசத்தில். என்னதான் அந்த முடிவில்லா பெரும் யுத்தத்தின் கதை?       நிற்க!... முழுக்கதையுமோ புத்தகத்தின் மொத்த தொகுதியையுமோ இங்கே நான் எழுதப் போவதில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. ஆம்! வாசித்துவிட்டு எப்படி இருக்கின்றதெனச் சொல்லுங்கள் என “விகடன் கிராபிக்ஸில்” இருந்து தரப்பட்டது முதலாம் பாகம் மட்டுமே. அந்த அனுபவத்தை மட்டுமே நான் முலாம் பூசமுடியும்.     பாண்டியர்களின் சரித்திரம் சோழர்கள் அளவுக்கு மெய்கீர்த்திகளால் நிரம்பியது அல்ல. சமகாலத்தில் வெளியான பல சரித்திரநாவல்கள்கூட சோழர்களின் உயர்வைக் கொண்டாடும் மனநிலையிலே எழுதப்பட்டவையாகவே கருதுகிறேன். அந்தவகையில் பாண்டியர்களின் சரித்திர மற்றும் புராணக் கதைகள் திரைப்படங்களின் மூலம்தான் அதிகம் வெளிப்பட்டது.  சோழர்கள் தங்களைச் சூரியகுலத்தினர் என்று அழைக்க, பாண்டியர்களோ தங்களைச் சந்திர குலத்தினரென்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ஆக, பாண்டியர்களின் குலச்சின்னமா

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 4 | Saya Sundaram | Keerthi Maniam

Image
பாளையங்கோட்டையில் வீடுகட்டி முடித்து குடிபுகுகிற நாள் அது. அந்த பகுதி அப்போதுதான் பழக்கமாகிறது. அக்கம்பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு அப்பாவைத் தெரியும். எங்களைச் சின்னப்பிள்ளையில் பார்த்திருக்கலாம். அவ்வளவுதான் பரிச்சயம். முதல்நாள் சாயங்காலம் மாடிக்குச் செல்லும் வெளிப்படிக்கெட்டில் நின்றுகொண்டு அண்ணன் தம்பிகளாகக்  கதையடித்துக் கொண்டிருக்கிறோம். கூடுகிற இடம் கோயில் மாடமாக இருந்தாலும் சரி  குட்டிச்சுவராக இருந்தாலும் சரி அண்ணன் தம்பியென்றெல்லாமில்லாமல் கலகலப்பாக்கிவிடுவது எங்கள் பழக்கமாகவே இருந்தது. எங்கள் வீட்டுக்கு நேர் எதிர்த்தமாதிரி இருந்தது தெருக்குழாய். நல்ல தண்ணீருக்கு எல்லாருமே அந்தக் குழாயையும் நம்பி இருந்தார்கள். அது முரண்டுபிடிக்கும் காலங்களில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள தொட்டிதான் அட்சய பாத்திரம்.  அப்படி தண்ணீர் பிடிக்க வந்து கொஞ்ச நாட்களிலே எங்கள் தங்கைகளாக மனத்தில் இடம்பிடித்தவர்கள் ஆன்ஸியும் ப்ரீத்தியும்.  அக்காளுக்கும் தங்கைக்கும் ஆகவே ஆகாதாம். ஆனால் எங்கள் மீது அன்பு வைப்பதில் யார் அதிகம் என்று போட்டிபோட்டுக்கொண்டு பாசமழை பொழியும்கள். சேட்டையும்

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 3 | Madakkulam Prabhakaran

Image
 (கோப்பு படம்) வீடு என்பதின் மேலான எனது பிரியத்தை சர்வசாதாரணமாக எழுதிவிட முடிவதில்லை. தாத்தாவுக்குக் கூடப் பிறந்த சனம் ஏழுபேர். ஏழும் ஆண்பிள்ளைகள். தாத்தாதான் மூத்தவர். குடும்பங்கள் ஒவ்வொன்றும் ”ப” வரிசையில் சுத்தி வீடுகட்டிக்கொண்டு ஒண்ணுமண்ணாக வாழ்ந்தார்கள். வீடுகளின் நடு முத்தத்தில் தாயாருக்கு பூடம்கட்டி, சீலை சாத்தி, சூலம் நிறுத்தி வைத்திருக்கும். நல்ல நாளில் குடும்பங்கள்கூடி, கறவைகளையும், கன்றுகளையும், வண்டிமாடுகளையும் குளிப்பாட்டி, சாம்பிராணிபோட்டு சீராட்டி வரிசையில் நிறுத்தி அலங்கரிக்கும் காட்சிகளை எல்லாம் கதைகளாகக் கேட்டு வளர்ந்தவன். தாத்தா காலத்து வீடுகளுக்குள் நுழையும்போதே ஓலைப்பெட்டிகளுக்குள்ளிருந்து நெல்உமி வாசனையடிக்கும். பின்கட்டில் இனி கரி ஒட்டுவதற்கு இடமில்லை என்ற கனத்தில் ஈயப்பானையில் வென்னீர் புகைவிட்டுக்கொண்டே இருக்கும். நிறம் மாய்ந்து போன நிலைக்கதவும், உத்திரக்கட்டையில் கழட்டப்பட்ட ஊஞ்சல் கொக்கியும் விளையாடின காலத்து வாழ்க்கையை ஏக்கமாய்ப் பார்க்க வைக்கும். ஆச்சி வீட்டில் கம்பியில் பின்னின ஒரு பழங்கட்டில் உண்டு. “வயக்காட்டில் நார்க்கட்டிலில் உக

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 2 Packiaraj Sivalingam | Selva Kumar​

Image
ஆச்சியும், பெரியம்மாவும், அக்காள்களுமென பெண்கள் சாம்ராஜ்ஜியம் கொண்டது நம் வீடு. நாங்கள் தலையெடுக்கும் முன்னே பழுத்த தலை தாத்தன்கள் எல்லாம் வரிசை வரிசையாக விழுந்துவிட்டார்கள்.  சுப்பையா தாத்தா என்பார் தான் நீண்டகாலம் தாக்குப்பிடித்துக் கிடந்தார். அவரையும் மங்கலாக பார்த்த நினைவுதான். பெரியப்பாக்களும் அவ்வண்ணமே... ஆக, வீட்டில் தங்கிக்கிடப்பது நானும் அண்ணன் ஒருத்தரும் தான். இரண்டுபேரும் பெண்கள் அரவணைப்பிலும் வளர்ப்பிலுமே எங்கள் சின்ன வயசை தொட்டு வந்திருக்கிறோம். இதனாலேயே வீட்டுக்கு மூத்தவர் என்ற இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. கொஞ்சம் மூத்தவனான அண்ணனிடமும் பெரிய பேச்சும் பிரியமும் நினைவு தெரிந்து ஏற்பட்டதில்லை. ஒரேதடவையாக டி.வி நிகழ்ச்சியில் பார்த்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்திருந்தான். அவ்வளவுதான். இந்த இடைவெளிகள்  இப்போது மூன்றாவது தலைமுறையில்  கொஞ்சம் தீர்ந்துவிட்டிருக்கிறது. வாண்டுகள் எல்லாவனும் ஒன்றுகூடிப் பண்ணுகிற சேட்டைகளைப்  பார்க்கையில் கொடுத்து வைத்திருக்கிறான்கள் என்றுகூடத் தோன்றும். ஆனாலும் எண்ணிக்கையில் பின் தங்கியே.  33% கூட

வாழ்வியல்

“இரு இரு ஞாயிற்றுக்கிழமை வரட்டும் வேப்பங்கொழுந்து அரைச்சு வாயிலேயே புகட்டுறேன்” என்ற மிரட்டல்கள் எங்கே போனதென்றே தெரியவில்லை. சுக்கு அரைத்து கூடவே கொஞ்சம் இனிப்புக்கு கருப்பட்டி சேர்க்க, வேணாம் வேணாமென அடம்பிடிக்கும் குழந்தைகளைக் காணவே காணோம். நொச்சி இலையை கொதிக்கவிட்ட தண்ணீரில், வெங்கிச்சான் கல்லைப்போட்டு கனத்தப்போர்வைக்குள் வியர்க்க வியர்க்க ஆவி பிடிக்கும் பழக்கத்தை தொலைத்தே விட்டோம். புளியும் வெல்லமும் சேர்த்துப் பிசைந்து,கரைத்துக் கொடுக்கும் பானாகாரத்தைக் கேள்வியே படாத தலைமுறை ஒவ்வொரு வீட்டிலும் உருவாகிக் கொண்டிருக்கிறது. வெட்டிவேர் மிதக்கும் மண்பானைக் குடிநீரை ஆங்காங்கே நகரத் தண்ணீர் பந்தல்களில் பார்க்க முடிவது சற்று ஆறுதல் அளிக்கும் விசயம். ஆரோக்கியம் என்று நாம் குடிக்கும் பாலும், மோரும், இளநீரும், தன் தனித்துவத்தை இழந்து பலகாலங்கள் ஆகிவிட்டது. ஒரு கணக்குப் போட்டுப் பாருங்களேன். பல்லாயிரம் லிட்டர் பால் நம்முடைய ஒருநாள் தேவையாக இருக்கிறது, அத்தனை லிட்டர் பால்கறக்கும் பசுக்கள் நம்மிடம் எங்கே இருக்கிறது? கெமிக்கல் தான் விடை. மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றங்களை அடையும் முன்

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 1 Amutha Thamizh

Image
கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஊர் எங்களுடையது. ஒருபக்கம் வாய்க்காலும், ஒன்னொரு பக்கம் ஆறும் பாயும் நகரத்தில், ஈய வாளிகள் நிறைய அழுக்குத் துணிகளைச் சுமந்துகொண்டு படித்துறைக்குப் போய், கொலுசு அழுக்கைக் கடிக்க வரும் மீன்களை எத்தித் தள்ளிக்கொண்டே துணிகளை வெளுக்கும் மதினிகள் கூட்டத்தில் சின்னஞ்சிறுவனாக மேல்சட்டையில்லாமல் துணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரே ஆண் துணையாக நான் மட்டுமே இருந்திருக்கிறேன். ஆலம் பழம் விழுந்துகிடக்கும் மரத்தடியில் சுள்ளிக் குச்சிகளைக் கையில் பிறக்கி, நாலுதூண் நட்டு வீடுகட்டி முடிக்கும் வரைக்கும் அவர்கள் சோப்புப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அலசி முடித்ததும் பிளிந்து காயப்போடும்போது நமக்கு வேலையிருக்கும். மூக்கைப் பொத்திக்கொண்டு முங்காச்சி போட்டுக் குளித்துக் கரையேறும் ஈரம் மிகுந்த அந்நாட்களில்தான் எனக்குள் பேச்சுக் கதைகள் மெல்ல புத்து கட்டிக் கொண்டிருந்தன. அந்த மதினிமார்களுடைய அரசல்புரசலான சாடைப்பேச்சுக் கதைகளுக்குள், அறுவடைமுடிந்து திருணையில் காயப்போட்டிருக்கும் உழுந்து நெத்து வெடிப்பதுபோல அங்கங்கே சில வார்த்தைகள் நமக்கு பிடிபடும். அந்த வார்த

வெட்கம் களைதல்...

Image
ஐந்தாவது வயது எப்படி பூர்த்தியானது என்று இப்போது கேட்டால் எப்படி நினைவிருக்கும். ஆனால் லதா மிஸ்ஸும், கிருபா மிஸ்ஸும் இன்றைக்கும் நினைவிருக்கிறார்கள். இந்த டீச்சர்களின் வளையல் வடிவ கம்மலை நீங்கள் யாரும் உங்கள் வயதில் கவனித்திருப்பீர்களா தெரியவில்லை. க்யூ என்று ஆங்கிலத்தில் எழுதும் போது லதாமிஸ் ஒரு வெட்டு வெட்டி இழுத்து கரும்பலகையில் ஒரு டொக் வைப்பதை ரசித்திருக்கிறேனென்றெல்லாம் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு பழக்கமிருந்தது உண்டு உறங்கும் போது பாயில் படுத்தாலும் சரி, மெத்தையில் படுத்தாலும் சரி... கால் தரையில் படவேண்டும். அதற்காகவே முதல் ஆளாக தரை ஒட்டிப் உறங்குவது. இடைஞ்சலாக இருக்கும் காலணிகள் வீடு திரும்பும் போது டிபன் கூடைக்குப் போயிருக்கும் என்பது தனிக்கதை. ஏகச் சுட்டித்தனம். பள்ளிக்கூடத்தில் தான். அந்த வயதில் புளியங்கொட்டையை மூக்கில் நுழைத்து அது சிக்கிக்கொள்ள அக்காளிடம் சண்டை என்றேனாம். இரண்டு நாள் உள்ளே கிடந்து பொதுமிப் போன புளியங்கொட்டையை வெளியில் எடுத்து, தோட்டச் செடி வெட்டும் கத்திரி போலொன்றைக் காட்டி இனி மூக்கில் எதையாவது திணிச்சே மூக்கை நறுக்கிருவேன் என்ற டாக்டர் கண்ணு

அது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை

Image
Suresh Raja Gtm  வீட்டில் மூத்தவனுக்கு நேத்தைக்குப் பிறந்தநாள். அப்பா இருந்தவரைக்கும் பிறந்தநாள் என்பதில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் போனாலும், காலையிலே எழுந்து ஆற்றங்கரையில் குளித்துவிட்டு, பேராச்சியம்மன் கோயிலுக்குப் போய் விழுந்துகும்பிட்டு, அக்காள் கையில் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு அப்பா முன்னால் போய் நிற்பான். கடையில் சீனி வாங்க வந்த செண்பகம் மையினிக்கு பழைய நோட்டுத்தாளை கூம்பாய் உருட்டி பொட்டலம் மடித்துக் கொண்டிருப்பார். அண்ணனைப் பார்த்தவுடன் ஒரு இணுக்கு புன்னகைத்துவிட்டு,  “வேலை உண்டா இன்னைக்கு... மதியம் வீட்டுக்கு சாப்ட வந்துரு. அந்த டப்பால காசிருக்கும் எடுத்துக்கோ” என்பார். அத்தோடு சரி. அப்பாவுக்கும் அண்ணனுக்குமான உரையாடல்கள் சின்னஞ்சிறியவை. அதை தூரத்தில் இருந்து கேட்பதே ஒரு வேடிக்கையாக இருக்கும். என்ன சொல்லவேண்டும் என்பதை இரண்டுபேரும் மனசுக்குள்ளே உணர்த்திக் கொள்வார்கள். “மதியம் பாயாசம் வை கோதை” என்று அவர் சொல்லும் முன்னே அம்மா முந்திரி டப்பாவை கடையில் உருட்டிக்கொண்டிருப்பார். அந்தச் சின்ன மளிகைக்கடைக்குள் தான் அப்பாவைச் சந்திக்கும் பொழுதுகள் அடிக்கடி வாய்க்கும்

எங்கதெ - இமையம்

Image
நேற்றைக்கு கணையாழி வாசகர் வட்டம் அமர்வுக்குச் சென்றிருந்தோம் நானும், நண்பரும். "எங்கதெ" நாவல் குறித்துப் பேசினார்கள். அந்த நாவலே விநாயகம் என்ற தனிமனிதன் தன்னந்தனியே பேசிக்கொண்டே போவதால் அதைப்பற்றித் தனியாகப் பேச ஒன்றும் சிக்காது என்பதுதான் உண்மை. கூடியமட்டும் கதையின் காலகட்டம், அண்ணன் தங்கை உறவுகள் இதையெல்லாம் மெச்சலாம். ஊருக்குள் இட்டுக்கட்டிப் பேசுதல் என்பார்களே! அப்படித்தான் இந்த நாவலை வாசித்து நமக்கு என்ன தோன்றியதோ அது எல்லாம் கருத்துகள். என்ன இருக்கனும் என்று நினைக்கிறோமோ அதி எல்லாம் விமர்சனங்கள் என்று ஆகி விடுகிறது. பேசுபவர்களிடையே, இது ஒரு "நீண்ட புலம்பல்" என்ற வார்த்தையை நிறைய தடவை இலைமறையாகக் குறிப்பிட்டதைக் கேட்கமுடிந்தது. எனக்குச் சந்தேகமாக இருந்தது வீட்டுக்குத் திரும்பினதும் திரும்ப எடுத்து வாசித்துப் பார்த்தேன் புலம்பல் சலிக்காமல் கேட்க முடிந்தது. சாதாரணமாக புலம்பல்களை இப்படி திரும்பத் திரும்ப கேட்டால் எரிச்சல் வந்துவிடும் இங்கே அது நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கமலா ருசிக்கிறாள். அவ்வளவுதான் வேறு சொல்ல ஒண்ணுமில்லை. விநாயகத்தின் குரலில்

ஊர்நாட்டானின் பக்ரீத்

Image
ரம்ஜான் சின்ன பெருநாள். பக்ரீத்துதான் பெரிய பெருநாள் அப்படின்னு உசேன் தான் சொல்லுவான். தாஹீர் , சிக்கந்தர் உசேன் எல்லாவனும் பள்ளிவாசல் தெருக்காரனுங்க. எங்களது தைக்கா தெரு. ஒண்ணுமண்ணா பள்ளிக்கூடத்துல படிச்சவனுங்கதான் எல்லாவனும். இன்னைக்கு ஒருத்தன் செல்போன் கடை, ஒருத்தன் ஜவுளி யாவாரம், வாட்ச் கம்பேனின்னு ஆளுக்கொரு தொழில்ன்னு ஆகிட்டானுங்க. ரம்ஜான் பக்ரித் அப்பொல்லாம் வெள்ளைல கட்டம் போட்ட சாரத்தை கட்டிட்டு வந்து நிப்பானுங்க. நமக்கு வேடிக்கையாத்தான் படும். எம்மா எனக்கும் சாரம் தாயேன்னு கேட்டா வெளக்கமாறு தான் வந்து விழும். முஸ்லீம் பண்டிகையப்போ நமக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் லீவுன்றதோட சரி. அவங்களுக்கு அப்டி இல்லல்லா... அப்ப எங்ககூடி தீபாவளி பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்ற பழக்கம்லாம். பரிட்சைக்கு நடுவுல லீவு விட்டதே பெருசு. அதனால எல்லா பயல்களும் ஆத்தங்கரையிலயும், எம்.டி.டி பள்ளிக்கூட கிரவுண்ட்லயும் கிரிக்கெட் விளையாடிட்டு கிடப்போம். அந்த மஞ்ச கட்டடம் செவுத்துல த்ரூவா பந்து பட்டா சிக்ஸு. தப்பித்தவறி ஜன்னல் உள்ள போயிடுச்சுன்னா அவுட்டு. ஆத்தங்கரையில் இந்த பிரச்சனை இல்ல. எங்க அடிச்சாலும் ர

முற்றத்து மரத்தை வெட்டியது போல...

Image
"முற்றத்து மரத்தை வெட்டியதுபோல" என்றெழுதிய கலாப்ரியா அவர்களின் வார்த்தை கண்ணில் பட்டது. எனக்கு தயாபரன் தெரு காம்பவுண்டு வாசம் நினைப்புக்கு வந்தது. யசோதா இந்த கண்ணனை உரல்ல கட்டிவச்சிட இரண்டு மரங்களுககு நடூல உரலைச் சிக்க வைச்சி தப்பிச்சுக்குவாம்லா கிரிமினல் பய. அப்படி ஒரு ரெட்ட மரம் எங்க வீட்டு முத்தத்தில நின்னுச்சி. மரத்துக்கு செட்டுக்குச் சேக்காளியா குப்புற கவுத்துன கல்லுரல் ஒன்னும் அங்கயே கெடக்கும். ஆச்சி சொளவு புடைக்கும் போது கால்நீட்டி மரத்துபோச்சுன்னா. ஒரல்லதான் வந்து ஒக்காரும். அந்த மரங்க நிழலடில தான் அதுக்கு பொழுதே கரையும். ஆச்சிக்குத் தொண ஆடும் மாடும். முக்காவாசி முங்கிக்கெடந்த கல்லுரலை கமத்திப் போட நிறையநாள் உருண்டு புரண்டு பார்த்தும் ம்ஹூம் அசையலையே.. சரி ஒரலதான் அசைக்க முடில இந்த மரத்துல ரெண்டுல ஒன்ன கமத்தி போட்ருவமான்னு கூட நெனப்பு. செவலை கன்னுக்குட்டியை ஒரல்லேதான் கட்டிப்போடுறது எப்பவும். முணுமணிக்கு கறவைக்கு ஆள் வந்தாப் போதும் மடில முட்டி பால்குடிக்க கிடந்து குதியா குதிக்கும். கருவக்காயா தின்னு வளந்த குட்டியை சுழிசரியில்லைன்னு சந்தைல வித்தபெறகு முத்தத்

மொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி

Image
மக்கள் தொலைக்காட்சி மொழிவது அறம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். அடுக்குமாடிக் குடியிறுப்புகள் பற்றினத் தலைப்பு. இந்த கேட்டட் கம்யூனிட்டி மீதுள்ள வெறுப்பை எல்லாம் கொட்டித்தீர்த்துவிடலாம் தான். ஆனால் உண்மைக்கு மிக நெருக்கமாய் நிறைய சங்கதிகள் அலசப்பட்டது. சமத்துவம் இருக்கிறது, வாழும் காலத்திலே சொந்தவீடு கனவு நிஜமாகி இருக்கிறது என்ற பாசிட்டிவ் பக்கங்களுக்குப் பின்னே இங்கே சுதந்திரமில்லை என்று மூன்றுவித கருத்துகளில் எனக்கு மனித உணர்வு மாற்றத்தைப் பிரதிபலிக்கு வண்ணமமைந்த ”அடுக்குமாடிக் குடியிருப்புகள் மனிதர்களைத் தீவுகளாக்கி விடுகின்றன" என்ற தலைப்பு பொறுத்தமாக அமைந்தது. அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பிரச்சனைகளை எடுத்து அடுக்கி வைப்பதென்பது அடுத்தநாளே அத்தனையும் இடித்துத் தள்ளிவிட்டு தனிவீடுகள் கட்டிக்கொள்ளுங்கள் என்று முட்டாள்தனமாகப் பேசுவதல்ல. தவிர, நகரம் கிராமங்களைப் பிரதிபலிக்கவேண்டும் என்று வலிக்கட்டாயமாகத் திணிப்பதுமல்ல. நாம் மனிதர்கள், நமக்கு வீடு என்பது வெறும் உய்விடம் அல்ல அது உணர்வுகளைக் கற்றுத்தரும் கூடம். தலைமுறைதலைமுறையாக வளர்த்தெடுத்த நம் மரபும

வாசிப்பெனப் படுவது...

Image
பத்துவருசம் முன்னாடி (அப்போ 16வயசுதான்) பெரிய வாசிப்பனுபவம்லாம் கிடையாது. ஒரு பத்து எழுத்தாளர் பேரு சொல்லுன்னு கேட்டுருந்தா பேந்த பேந்த முளிச்சிருப்பேன்.வாசிக்கிறது, எழுதுறது எல்லாமே இந்த நாலைஞ்சு வருசமாத்தான். பள்ளிக்கூடத்துக்கு வெளியதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சுஜாதாவும் மதனும் தான் முதல் வாத்தியார்கள். வரலாறுமேல இவ்ளோ ஈடுபாடா நமக்குன்னு தோணுற அளவுக்கு சரித்திரத்தில் மூக்கை நுழைச்சிருக்கேன். உண்மையச் சொல்லனும்ன்னா எல்லா பாடத்திலும் 80, 95 வாங்கிட்டு சோசியல் சைன்ஸ்ல 77மார்க் வாங்கினபய நான். நம்ம மண்ணோட வரலாறைப் படிக்கப் படிக்கத்தான் அறிவு ஊறும்ன்னு விடாப்பிடியா நம்பிக்கை வச்சிருக்கேன். வரலாறு எழுதின புத்தகத்தில மட்டும் இல்ல பாக்குற மனுசங்ககிட்டயும் இருக்குன்னு ஒருகட்டத்தில் அறிவுக்கு பட்டப்போதான் கூச்சத்தைவிட்டு மனுசங்களோடு பழக ஆரம்பிச்சது. எஸ்.ரா ஒரு மாட்டுவியாபாரிக்கிட்ட கதை கேக்குறதுக்காக நாலுமைல் தூரம் அவர்கூடவே மாட்டப்பத்திட்டுப் போனதாச் சொல்லியிருப்பார் கதாவிலாசத்தில. எனக்குங்கூட அந்தக் கிறுக்குத்தனம் இருந்துச்சி. நீச்சல் கத்துக்கனும்ன்னா ஆத்துல இறங்கித்தான ஆவணும்

ரஜினி முருகன்

Image
விடுமுறை நாட்களில்  ஒருகூட்டம் தெக்குத்தெரு குளத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும். கூட்டத்தில் இளசுகளுக்கிடையே கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் முதிர்ச்சியாக ஒருத்தர் கட்டம்போட்ட சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் ஃபீல்டிங் நிற்பாரென்றால் எங்கள் ஊரில் அவருக்குப் பெயர் மளிகைக்கடை முருகன்.  ஏரியாமுழுக்க ரஜினி முருகன். கீழவளவில் ராணி மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். ராணியக்கா இல்லாதபோது ஏரியா விடலைகள் ஒன்றுகூடும் இடம் அவர் கடைதான். முன்னாள் “வீரா ரஜினி ரசிகர்மன்ற கிளைச் செயலாளர். வீரா படம் ரிலீஸாகும் போது பிறந்திருக்கவே செய்யாத பொடியன்களோடு இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது வீட்டுக்காரம்மாளின் பெரிய குற்றச்சாட்டு. முருகன் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் இக்னேசியஸில் ஏழாவதும் ஐந்தாவதும், படிக்கிறது. ரெண்டும் பொண்ணு என்பதில் அவருக்கு ஏக சந்தோசம். கேட்டால்  “தலைவருக்கும் ரெண்டுமே பொண்ணுங்கதான்” என்பார். ராணியக்காவை கடையில் உட்கார வைத்து, “குளத்தாங்கரை வரை போய்ட்டு வந்துடுறேன்” என்று புளுகிவிட்டு எங்களோடு வந்து பீல்டிங் நிற்பார். உடும்புமாதிரி க்ள

நினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்

எனக்கு இது ஒரு பெரிய பிரச்சனை. பார்த்து அறிமுகமாகி, பழகினவர்களாக (நட்புவட்டம் அல்லாமல்) இருந்தாலும் பெயர்களும் முகமும் மனதில் நிற்கவே நிற்காது. கீதா பெரியசாமி என்றால் கீதா ராமசாமியா கீதா கந்தசாமியா  என்று ஒரு குழப்பம் வந்து தொலைப்பதால் அதிகபட்சம் யார் முகம்கொடுத்துப் பேசினாலும் சிரித்தமுகத்துடன் வணக்கம் சொல்லி, நலம் கேட்டுத் தப்பித்துவிடுவது. நண்பன் கிரி இந்த விசயத்தில் ஸ்கேனருக்கே டஃப் கொடுப்பான். ஒருதடவைப் பார்த்துவிட்டால் தி.நகர் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தாலும் சரியாக அடையாளம் சொல்வான். ஆச்சர்யமாக இருக்கும். ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது என்கதை அம்பேல். நேற்றைக்குக் கூட நாறும்பூநாதன் அவர்களின் நூல்வெளியீட்டு அரங்கில் நுழைந்ததும் அண்ணன் ஒருவர் அன்பொழுக வரவேற்று கை குலுக்கினார். பதிலுக்கு நானும் துளியும் தாமதிக்காமல் தெரிந்ததுபோல பேசிவிட்டு நகர்ந்தேன். தெய்வமே மன்னிச்சிடுங்க இங்க எங்கயாவது நீங்க என்னை அல்லது இந்தப்பதிவை பார்த்துட்டு இருக்கலாம். எனக்கு சத்தியமாக உங்களை நினைவில்லை. மன்னிக்கனும். (இந்தப்பதிவை முகநூலில் எழுதிய அன்றைக்கு அவரே வாசித்துத் தன்னை அடையாளம் சொல்ல

குற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்

Image
குற்றம் கடிதல் ஒரு நன்கு சமைக்கத்தெரிந்த வேலையாளின் வெங்காயம் நறுக்கும் கத்தி போன்ற ஷார்ப்பான படம். படம் ஆரம்பித்தது முதல்பாதி வரையான ஒவ்வொரு பிரேமையும் இண்டர்லிங்குகளால் காட்சியாக்கம் செய்திருக்கும் விதம் பிடித்திருந்தது. நியாயதர்மங்கள், சமூகத்துக்கு கருத்து என்றெல்லாம் தான் எதுவும் பேசாமல் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார். ஒரு பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர். அடிவாங்கி மயக்கம்போட்டு விழுந்துவிடும் மாணவன் இந்த ஒற்றைத் திரியில் ஜோதி எரிகிறது. எனக்கு ஆரண்யகாண்டத்திற்குப் பிறகு ஒரு இடத்தில் கூட தொய்வுகொடுக்காமல் நகரும் படமாகக் குற்றம் கடிதல் இருந்தது. படத்தின் கரு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமானதாக உருத்தலைக் கொடுப்பது நிச்சயம். எம்புள்ளைய அடிச்சு உதைச்சாச்சும் நல்லா படிக்க வச்சிருங்கம்மா என்று ஆசிரியையிடம் கேட்டுநிற்கும் பெற்றோர்கள் காணாமல்போய்விட்டார்கள். இன்றைக்குப் பிள்ளைகள் ஒரு குடும்பச் சொத்து அந்தஸ்தில் வளர்பவர்கள். என்னை வாத்தியார் அடிச்சுட்டார்ன்னு எங்கப்பா ஸ்கூலுக்கே வந்து சண்டை போட்டார் என்ற பெருமைபேசிகளைப் பார்க்கும்போது, பொறாமையாக இருக்கும். "