Wednesday, 16 December 2015

ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 2 Packiaraj Sivalingam | Selva Kumar​


ஆச்சியும், பெரியம்மாவும், அக்காள்களுமென பெண்கள் சாம்ராஜ்ஜியம் கொண்டது நம் வீடு. நாங்கள் தலையெடுக்கும் முன்னே பழுத்த தலை தாத்தன்கள் எல்லாம் வரிசை வரிசையாக விழுந்துவிட்டார்கள்.  சுப்பையா தாத்தா என்பார் தான் நீண்டகாலம் தாக்குப்பிடித்துக் கிடந்தார். அவரையும் மங்கலாக பார்த்த நினைவுதான். பெரியப்பாக்களும் அவ்வண்ணமே...

ஆக, வீட்டில் தங்கிக்கிடப்பது நானும் அண்ணன் ஒருத்தரும் தான். இரண்டுபேரும் பெண்கள் அரவணைப்பிலும் வளர்ப்பிலுமே எங்கள் சின்ன வயசை தொட்டு வந்திருக்கிறோம். இதனாலேயே வீட்டுக்கு மூத்தவர் என்ற இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. கொஞ்சம் மூத்தவனான அண்ணனிடமும் பெரிய பேச்சும் பிரியமும் நினைவு தெரிந்து ஏற்பட்டதில்லை. ஒரேதடவையாக டி.வி நிகழ்ச்சியில் பார்த்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அழைத்திருந்தான். அவ்வளவுதான்.

இந்த இடைவெளிகள்  இப்போது மூன்றாவது தலைமுறையில்  கொஞ்சம் தீர்ந்துவிட்டிருக்கிறது. வாண்டுகள் எல்லாவனும் ஒன்றுகூடிப் பண்ணுகிற சேட்டைகளைப்  பார்க்கையில் கொடுத்து வைத்திருக்கிறான்கள் என்றுகூடத் தோன்றும். ஆனாலும் எண்ணிக்கையில் பின் தங்கியே.  33% கூடத் தேறவில்லை. கிடக்கட்டும்.

இங்கு முகநூலில் எப்படி அக்காள்கள் என்று நீண்ட பட்டியல் எழுதுகிறேனோ அதே அளவுக்கு அண்ணன்கள் பட்டியலும் எனக்குண்டு. அவர்கள் கொடுத்த ஊக்கமும், உறுதுணையும் இங்கு யாரிடத்திலும் பெற்றதில்லை.

2012ம் வருடத்தில் இன்றைக்கு நீங்கள் பார்க்கும் நானாக நான் இருக்கவில்லை. நிறைய உழைத்துக் கொண்டிருந்தேன். மாட்டு வேலை. செய்யும் வேலையில் ஒரு முரட்டுத்தனம் இருக்கும். கூடே இருப்பவன் எல்லாவனும் ஒரு பெட்டி தூக்கும்போது நான் ரெண்டு பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்துகொண்டிருந்தேன். அவ்வளவுதான்.

ஆனால் என்னைச் சரியாக அடையாளம் கண்டுபிடித்து எனக்கான வாய்ப்புகளை ஒருவர் திறந்துவிட்டுக் கொண்டிருந்தார்.  இன்னொருத்தர் எனக்கான பாதைகளைச் சீரமைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

செல்வா அண்ணாவும், பாக்கியராஜ் அண்ணனும் தான் அந்த இரண்டுபேரும். ஆம் அந்த இரண்டுபேர் இல்லை என்றால் இன்றைக்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நானாக நான் எப்போதுமிருந்திருக்க வாய்ப்பில்லை.

 செல்வா அண்ணன் எப்போதுமே எல்லோருக்குமே ஒரு எனர்ஜி ரீசார்ஜ்.  ஊடகம் என்ற வெளிச்சத்தை எனக்குப் பாய்ச்சியவர் அவர்தான். அவர் எனக்கு எழுதின மடலை நீங்கள் வாசித்திருக்கலாம். அது ஒன்றுபோதும் என்மீதான அவர் அக்கறையை காலத்துக்கும் பெருமையடித்துக்கொள்ள. நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்டு என்னென்ன செய்யலாம் நீ என்று நூறுவழிகளைக் கைகாட்டுவார். பத்துவருடங்களுக்குப் பிறகு என்ன செய்யப் போகிறேன் என்ற திட்டத்தைச் சொன்னால் அவர் 20வருடங்களுக்குச் சேர்த்து முன்யோசனை சொல்வார்.

பாக்கியராஜ் அண்ணனின் ”டேய் எங்கடா இருக்க” “சரி வா” ”அதொன்னும் பிரச்சனை இல்லடா”  ”இவன் நம்ம பையன்” இந்த
வார்த்தைகள் இந்த இரண்டு வருடத்தில் ஆயிரத்துசொச்சம் முறைகளுக்கு மேல் கேட்டிருக்கிறேன்.

உயர்மட்டத்தில் இருக்கும் பலரிடம் அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சரியாக என்னைப் பல இடங்களில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார்.  சோதனை முயற்சிகள் பலவற்றுக்கும் ஆதாரமாக நின்றிருக்கிறார். அண்ணன் எப்போதும் அண்ணன்.

 “ஆலமரங்களின் கீழே எந்தச் செடியும் முளைக்காது” இந்த ஒருவாசகத்தை எப்போதும் என் மனத்தில் வைத்திருக்கிறேன். சூழ்நிலைகள் நிழல்களுக்குக் கீழே கொண்டுபோய் நிறுத்தியபோதும் நான் ஒரு வெயில் விரும்பி.

என் வெயிலை, என் மழையை, என் சுதந்திரத்தை, என் தேவையை, என் பாதையை எப்போதும் அங்கீகரிக்கிறவர்களாய் இவர்கள் இரண்டுபேரும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்துகொண்டு அன்பைத் தருகிறவர்கள்.

இப்போது வீட்டுக்கு மூத்தப் பெரியாள் என்று யாரும் கேட்டால் தயங்காமல் செல்வா அண்ணனையும், பாக்கியராஜ் அண்ணனையும் தான் கைகாட்டுவேன்.

    Selva Kumar​


Packiaraj Sivalingam#Autograph2015 16-12-2015

1 comment:

  1. அருமையான ஆட்டோகிராஃப் புகழ்! இப்படி வழிநடத்த அண்ணன்கள் கிடைத்தார்களே அதுவே தங்களுக்கு ஒரு நல்ல சிந்தனையைத் தந்திருக்குமே! அதான் நீங்கள் நாலு பேருக்கு உங்கள் செல்வா அண்ணன் பாக்கியராஜ் அண்ணனின் வார்த்தகளைச் சொல்ல...அந்த நாலு பேர் இன்னும் நாலு/எட்டு பேருக்குச் சொல்ல என்று...ஒரு மெழுகுவர்த்தி பல மெழுகுவர்த்திகளை ஏற்ற உதவுவது போல்...

    ஏனென்றால் இன்று பல இளைஞர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இளைஞர்கள் மட்டுமல்ல குழந்தைகளும்...

    உங்கள் நிவாரணப் பணிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். அது இன்னும் பல இளைஞர்களை ஊக்குவித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. "புகழேந்தி" இன்னும் நீங்கள் நல்ல புகழேந்துவீர்கள்!

    ReplyDelete

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

There was an error in this gadget