Sunday, 12 April 2015

வெயிலில் நனையாத கிராமங்கள்சின்னவயசுல அக்காவுக்கு ஏகப்பட்ட தோழிகள். அந்த வாயாடிக் கூட்டத்துக்கு கேங்க் லீடர்ல ஒருத்தியா அக்கா இருந்திருக்கனும். வீடும் வைக்கோல் போர் எழும்பி நிற்கும்பின்கட்டும், தொழுவமும்   எப்பவும் ஜே ஜேன்னு நிரம்பி வழியும், பத்தாததுக்கு தொன்னூறு வயசுக் கிளவியா ஆச்சியும் வீட்டில் இருக்க, ஊரில் உள்ள கிழங்கட்டைகள் எல்லாம் அந்த முள்ளு மரத்து நிழல்ல கூடி உட்கார்ந்து  கதைகதையா பேசுவாங்க.

அந்தப் பிள்ளைகளுக்கு வால் ஒன்னுதான் குறை.. பூசணிப்பூ பறிக்க , குன்னிமுத்து பிறக்கி எடுக்க, புளியம்பழம் உலுக்க, நெல்லிக்கா, கொடுக்காபுளி, மாங்கா, நவ்வாப்பழம், கோவப்பழம், எளந்தைப்பழம், மருதாணிச்செடி, காக்கா முள்ளு, கள்ளிப்பூவு,  எருக்கம்பூவு, வாகைப் பூவு, அரச இலைன்னு ஒன்னு விடாம, ஊருல முளைக்குற எல்லாப் எல்லாமே அவங்களுக்கு தேவையான பொருள்தான்.

எல்லாத்தையும் பறிச்சுக்கொடுக்கவும், காவல் இருக்கும் தோட்டத்தில் களவாடவும் அவங்களுக்கு   ஒரு சம்பளமில்லாத அடிமையா நானும் ஒருகாலத்தில் இருந்தேன். எங்க போனாலும் பட்டத்து இளவரசிங்களுக்கு காவல் நாமதான். அதுவும் சோனிப்பையல்வளுக்கு அக்காவா சுகந்தி மாதிரி பிள்ளைங்க இருந்தா, தன்னோட தம்பிங்கள விட நம்ம மேல அம்புட்டு ஒரு இது.

படம் வரைஞ்சு கொடுக்குறது, பாண்டிக்கு சப்பைக்கல்லாப் பார்த்து தேடிக்கொடுக்குறது, சிரட்டைக்கொண்டைக்கு தேங்காச்சிரட்டையை பதமா சுரண்டி பாங்கா துளைபோட்டுக் குடுக்குறது, இவ்வளவு ஏன் வேலிக்காத்தான் முள்ளு காலைத் தச்சுருச்சுன்னா அதை ஊக்குவச்சி எடுத்துவிடுறது வரைக்கும் நாள் பூராம் நமக்கு வேலை இருக்கும்.   அவுங்களோட வேலை வாங்குற பட்டியலுக்கு ஓய்வே இருந்ததில்ல.

அப்பேர்பட்ட புள்ளைங்க வாய்வலிக்கப் பேசி ஒன்னுமண்ணா சுத்தி,   நம்மைக் கூடவே வச்சுக்கிட்டு வயிறு வலிக்க ஒருநாள்  உக்காரும் போது ஊரே சேர்ந்து நம்மள கழட்டி விட்டுரும். பருவத்தை புரிஞ்சுக்காத மனசு தென்னந்தட்டி போட்ட மச்சிவீட்டையே சுத்திச்சுத்தி வரும்.என்னதான் நாம  சுத்திச் சுத்தி வந்தாலும் அந்தப்பிள்ளைங்க வீடுகளை விட்டு வெளியே வராது. ஆனா அவங்க அம்மைமார்ங்க எல்லாம் வக்கைனையா, “மருமவனே அந்த தொர்ராசு கடையில போயி ரெண்டுரூவாய்க்கு சீனி வாங்கி வாய்யா” ன்னு மறுவட்டமா வேலை வாங்கும். அப்படிக் கடைக்குப் போய் வரும் போது ரோட்டில் கிடக்கும் பில்டரு, பனாமா, சார்மினார் சிகரெட்டு அட்டைங்களையா பொறுக்கி எடுத்து வந்து கொடுத்தா... ரெவ்வெண்டு அட்டையில ரஜினி படம் பேரா எழுதி, கை நிறைய சேர்த்து கழக்கி, வருசை வச்சு அந்தப் புள்ளைங்க விளையாடும்.

அதே சார்மினார் அட்டைக்கு பத்தாயிரம் பாய்ண்டு வட்டக்கல் விட்டு விளையாண்டா! ஆனா அது பயலுங்க கூட ஆடுற விளையாட்டு. நமக்கு பத்தாயிரம் பாய்ண்டா முக்கியம் பவளக்கொடி சிரிப்பா பாருங்க சிரிப்பு அதுதான் முக்கியம்.

இந்தக்கிழவிங்க தான் நமக்கு எப்பவும் எமன்.  “எங்க ஆச்சி வருது ஓடீருன்னு” தங்கரதி சிக்னல் குடுத்ததுமே அவ கையில பனங்கிழங்கை திணிச்சுட்டு ஓடுற ஓட்டத்துக்கு அந்த கிளவியும்லா கூட விரட்டும். மறுநாள் நுங்கு வண்டி ஓட்டிக்கிட்டு அதே பிள்ளை வீட்டை வேவு பார்க்கப் போனா, பிடிச்சு மோளத்தெரியாத பயக்கூடல்லாம் என்ன வெளாட்டுன்னு மானத்த வாங்கிடும்.

ஆனா, அதே கிழவிக்கு பல்லாங்குழி வெளையாட நாமதான் குழிதோண்டி கொடுக்கனும். மொத்த ஆண் சமூகமும் இப்படி சேவை செஞ்சே அழிஞ்சிருக்குன்னு அப்ப எனக்கும் தெரியாமப் போச்சி பார்த்தீங்களா!

நல்ல காசுபணம் உள்ளவிங்க வீட்டுல பல்லாங்குழிப்பெட்டி  பெட்டி மீன்மாதி பித்தாளைல இரட்டையாய் மடிச்சு வைச்சிருப்பாங்க. உலுக்கி எடுத்த புளியம்பழத்திலிருந்து புளியங்கொட்டைய எடுத்து சுத்தம்பண்ணி விளையாடுவாங்க.  பல்லுபோன கிளவிக்கு பித்தாளையில பல்லாங்குழி கேக்குதோன்னு எடுப்பெடுத்த யாரும் கேட்டுடுவாளுவன்னு மண்ணுலயே குழிவெட்டி ஆடுவாங்க.

இப்போதானே வீடெல்லாம் அங்குலம் இடம்கூட விடாம முழுக்க சிமெண்டுதரை போட்டு பூசி வச்சிருக்காங்க. அப்போ கன்னுக்குட்டி கட்டும் இடத்தில் கால் நீட்டி கிளவிகளும் குமரிப்பிள்ளைகளும் உட்கார்ந்து, எதிர் எதிரா ஆறு ஓரத்தில் நடுநாயகமா ரெண்டும்ன்னு பதினாலு குழி பறிச்சு, 12 குழி மட்டும் குழிக்கு ஆறு (ஆறுதானே? ) புளியமுத்து நிரப்பி பல்லாங்குழி ஆடுவாங்க... குழிதோண்டின நமக்கு கூட்டுல வேடிக்கை பார்க்கும் வேலை மட்டும் தான்.

எதிராளி சேமிச்சதை அள்ளி எடுத்து தன் குழிகளை நிரப்பிக்கும் சூட்சமம் எல்லாம் கணக்குப்பாடம். சேமிக்க செலவழிக்கன்னு ,  குடும்பத்தைக் கச்சிதமா கொண்டுபோக அந்த வயசிலே பொட்டப்பிள்ளைங்களுக்கு சூசகமா சொல்லிக்கொடுக்கும் விளையாட்டு தான் பல்லாங்குழி. பயலுங்களுக்கு இப்படிச் சொல்லிக் கொடுக்க அதிகம் வழி இல்லாம போயிருக்கு அதனால தான் கரடுமுரடாவே வாழ்ந்துடுறானுங்க.

ஒவ்வொரு விளையாட்டுக்குள்ளயும் வித்தைல்லா சொல்லிக்கொடுத்துருக்குங்க இந்த கிளவிங்க பாண்டி ஆடினா தசை இறுகுது. தட்டமாலை உடம்புல காந்த அதிர்வுகள ஏற்படுத்துது.  சீனிக்கல் விளையாட்டுல எத்தன நுணுக்கமா கல்லை அள்ளி காத்துல எறிஞ்சு மொழில பிடிச்சு, மறுகைல மடக்கி ஆத்தீ...

பொட்டப்பிள்ளைங்க மஞ்சள் அரைச்சு குளிச்ச கையில அப்படியே கொதிக்குற பானைய தூக்கமுடியும்ன்னு எங்க ஆச்சி சொல்லிக் குடுக்கும் போது அதுக்கு என்ன அர்த்தம்ன்னு அக்காவுக்கு தெரிஞ்சிருக்குமான்னு தெரில. ஆனா   மஞ்சள் வெப்பத்த கடத்தாதுன்னு இன்னைக்கு அறிவியல் கண்டுபிடிச்சிருச்சாம். அப்போ   அந்த கிளவிக்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பாங்க...

இந்த விளையாட்டுங்கல்லாம் மெல்ல அழிஞ்சு போச்சுன்னு சொல்ல முடியாது. இன்னைக்கும் கிராமங்கள்ள பச்சக்குதிரையில எக்கிக் குதிச்சு விளையாடுற பசங்க இருக்கத்தான் செய்யுறான். அவன் கையில கிரிக்கெட் பேட்டே வந்தாலும் அவன் பந்து சைக்கிள் ட்யூபை வெட்டி ரப்பர் பேண்டாக்கி இறுக்கிச் செஞ்ச விஞ்ஞானம் தான்.

விளையாட்டுங்க அழிஞ்சு போனது நகரத்தில் தான். ஆளாளுக்கு ஆண்ட்ராய்ட் வச்சிருக்காங்க. பார்ம் வில்லேன்றாங்க, ஆங்க்ரி பேர்ட்ன்றாங்க, சப்வே சபர்ன்றாங்க,  ஏம்மா தாயி பார்ம் வில்லேல உருளக்கிழங்கு போட்டேன்றீங்களே உருளக்கிழங்கு வெதை எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?  சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன் கோவிச்சுக்கிடாதீங்க..

அதென்னம்மோ ஒரே மாதிரி இருக்கும் மூனு மிட்டாயை ஒன்னு சேர்த்து உடைக்கச் சொல்றாங்களாமே. ஒன்னா இருக்குறத ஒடைச்சா குடும்பம் எப்படிம்மா உருப்படும்.  அதான் எல்லா சீரியல்லயும் மருமகளுக்கும், நாத்தனாருக்கும் , மாமியாருக்கும் ஆகமாட்டுக்கு போல

- பு.கா

12-04-2015.
Saturday, 4 April 2015

காலத்தை கடத்தும் கதை சொல்லி கி.ராவுடன்

இந்த இரண்டு நாள் பற்றி நிறைய சொல்லவேண்டி இருக்கிறது.. முக்கியமாக அந்த இரண்டரை மணிநேரங்களை, கூடவே 450கிலோமீட்டர் பயணங்களை...
__________________________________________

கி.ராஜநாராயணன் அவர்களின் “கதைசொல்லி” கத்தாய இதழ்  சிலவருடங்கள் முன்னே நின்று போனதும், பின்னே மீண்டும் வெளிவரும் பணிகளை மேற்கொண்டு வருவதையும் நாம் பக்கம் பக்கமாகப் பேசிவிட்டோம். ஆனால் கதை சொல்லியின் ஆதிஅந்தத்தைப் பற்றிச் சொல்லவேண்டி இருக்கின்றது.

கோபல்ல கிராமம், கோபல்ல கிராம மக்கள் , கரிசல்காட்டுக் கடிதாசி, அந்தமான் நாயக்கர் நாவல்களையும், கிடை, பிஞ்சுகள் குறுநாவல்களையும் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் கி.ரா என்ற  கரிசல் இலக்கியக் கர்த்தாவினை அறிந்திருப்பீர்கள். அவருடைய சிற்றிதழ் தான் “கதைசொல்லி” இன்றளவில் கதைசொல்லியின் வயது 18.


கதைசொல்லி - எண்வழி இதழாக வெளிவந்த போது அதற்கு
கத்தாய இதழ் என்று பெயரிட்டு அழைத்தார்கள். கரிசல் மண்ணில் ”கத்தாயப் பயிர்செய்தல்” என்பது நான்குமாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படும் வேளாண்மை.

கி.ரா  ஆசிரியராகவும், கழனியூரன் பொறுப்பாசிரியராகவும் சிரமமேற்று வெளியிட்டு வந்த பொழுதில், எட்டு ஆண்டுகள் முன்பு 19 இதழ்கள் வெளிவந்த நிலையில் கதைசொல்லி பல கடினங்களால் நின்று போனது.

2007ம் ஆண்டு பிப்ரவரி 17ம் நாள் கதைசொல்லியின் இணையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் திரு. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்க,
கத்தாய இதழான  “கதைசொல்லி”  (4-மாதங்களுக்கு ஒருமுறை), காலாண்டிதழாக (3மாதங்களுக்கொருமுறை) வெளிவரத் தொடங்கியது.

இதழின் முன்னுரையில் கி.ரா இப்படி எழுதி இருந்தார்.

**** “இந்த கதைசொல்லியைப் புதிய பொலிவோடு கொண்டுவரப்போகிறார்கள் என்று அறியும்போது மிக்க நிறைவாகவும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனக்கு.

இதழைப் பதிவு செய்துவிடவேண்டும் என்று தீர்மானமாகி (அன்பர் கே.எஸ்.ஆர் அவர்களின் முயற்சியால் ) 20.10.2006இல் சென்னை எழும்பூர் பெருநகர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மூன்று பெயர்கள் சொல்ல வேண்டுமாம்.

கதை சொல்லி
கி.ராவின் கதை சொல்லி
கிராமத்தின் கதைசொல்லி  என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
 எனது ஆசைப்படி கதை சொல்லி என்ற பெயரே கிடைத்தால் நன்றாக இருக்கும். பெத்த பிள்ளௌக்குப் பெயர்வைக்கவும் மூன்று பெயர்கள் கேட்பார்களோ!

கி.ரா,
புதுச்சேரி.
07.02.2007.”

****

பின்வந்த காலங்களில் தன் அரசியல் பணிகளுக்கிடையே,  தொடர்ந்து நடத்திச் செல்வதில் ஏற்பட்ட காலமின்மையால் கதைசொல்லி காலாண்டிதழ் தன் வரத்தை அணையிட்டுக்கொண்டது. இந்தச் சூழ்நிலையில், வற்றாநதி புத்தக விமர்சனக் கூட்டத்தில் (07-03-2015)
தலைமையேற்றுக்  கலந்துகொண்ட ”கே.எஸ்.ஆர்” அவர்களிடம் பரிசல் சிவ. செந்தில்நாதன்​ அண்ணன் ஒரு கோரிக்கையாகவே  கதைசொல்லி மீண்டும் வெளிவர வேண்டுமென்பதை முன்வைத்திருந்தார்.

அன்றிரவே  கே.எஸ்.ஆர் அவர்களின் ஒப்புதல் மற்றும் உதவியோடும்,  நண்பர்களின் ஒத்துழைப்போடும் கதைசொல்லியின் 27வது இதழ்
அடுத்த 23நாட்களில் வெளியிடுவதாக தேதி நிர்ணயிக்கப் பட்டது. 01.04.2015 - அன்று இதழைக் கொண்டு வந்துவிடுவோம் என்று கே. எஸ்.ஆர் அவர்கள் சொன்னபோது உற்சாகம் தான் தொற்றிக் கொண்டது.

இடைப்பட்ட காலங்களில், கே.எஸ்.ஆர் அவர்கள் பதிவுகள் மூலம் கதைசொல்லியின் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும், செய்திகளையும் வாசித்தறிந்துகொண்டோம். நூல் வெளியீடு இரண்டு முறைக்குமேல் நடத்திவிட்டோம். அதனால் நேரே வாசகர்கள் கையிலே கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள் என்று கே. எஸ்.ஆர் அவர்கள் சொல்ல...ஏன் நேரே கி.ரா வீட்டுக்குப் போய் (புதுச்சேரி)  நூலை அவர் கைகளிலே கொடுத்து இந்த புதியதொடக்கத்தை ஆரம்பிக்கக் கூடாதென்று தோன்றவும், கனவுப் பிரியனுக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னேன். கவலையை விடுங்கள் சேர்ந்தே போவோம் என்று அவர் 1ம் தேதி காலையிலே சென்னை வந்தடைந்துவிட்டார். கே.எஸ்.ஆர் அவர்களிடம் பேசி,  கி.ரா தாத்தாவுக்குத் தகவல் சொன்னதும் 2ம் தேதி மாலை 5.30க்கு வரச்சொல்லி விட்டார்.  இங்கிருந்து ஆட்டம் தொடங்கிகிறது.

*
2ம் தேதி மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு திருவான்மியூரிலிருந்து புதுச்சேரி பஸ்ஸைப் பிடித்துவிடலாம் என்று முடிவு செய்துகொண்டோம். ஓ.எம்.ஆர் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போதே கடல்காற்று இரண்டு நாடோடிகளையும் உசுப்பேற்ற நேரே ஒரு அழுத்து அழுத்திவிடுவோமா என்று நான் கேட்க, போலாம் ரைட் என்று கனவுப் பிரியனிடமிருந்து க்ரீன் சிக்னல்.

பெட்ரோல் நிரப்பிக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் நாங்களிரு கதைசொல்லிகளுமாக, புதுச்சேரிக்குப் பயணிக்கத் தொடங்கினோம். இடையில்  “பெருந்துறவு” தாண்டியதும் பச்சை வயலும் உவர்நீர் கழிமுக ஆறுகண்ணில் பட இறங்கிப் போய் புகைப்படமெடுத்துக் கொண்டோம். புதுச்சேரி சாலை உப்பளங்களையும் விட்டுவைக்கவில்லை.

 “ஆண்டவர் நைட் க்ளப்”,   “ஆ.அ.-உடன் ஒருநாள்” போன்ற தன் எழுதப்படாத  கதைகளை அவரும், வரலாற்றோடு கிழக்குக் கடலுக்கு இருக்கும் இலக்கியத் தொடர்புகளை நானுமாக மாறி மாறி கதை சொல்லிக் கொண்டோம். ஒரு இருபது வயது குறைந்தாலென்ன என்று வாய்விட்டேச் சொல்லிவிட்டார் நம்ம கனவு.

சரியாக மாலை 6மணிக்கு லாசுப்பேட்டை அரசுக்குடியிருப்பில் சீரியல் “கதைசொல்லிப்” பெண்களிடம் கி.ரா வீட்டைக் கேட்டதும் சரியாய் கைகாட்டினார்கள். கணவதி ஆச்சி/அல்லது பாட்டி கதவைத் திறந்து, “இவ்வளவு நேரம் உங்களுக்காக காத்திருந்து இப்போதான் உள்ளேப் போனாங்க” என்று வரவேற்றார்.

புகைப்படங்களிலும் எழுத்திலும் மட்டுமே நாங்களறிந்திருந்த கி.ராவை கிட்டத்தில் பார்த்து பரஸ்பர அறிமுகத்தோடு “கதைசொல்லியை கொண்டுவந்திருக்கோம் பொருநை-கரிசல் பதிப்பகத்தில” என்றதும்... அந்த வேலையிலிருக்கும் சங்கடங்களை எல்லாம் அறிந்திருக்கும் அந்த முகத்தில் மகிழ்ச்சிக்களை.

ஆளுக்கொரு பிரதி கையெழுத்து கேட்டு வாங்கிக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது வரைக்கும் நாங்களாய் இருந்தோம். “கோபல்ல கிராமம்  எந்த ஊரைப் பற்றிய கதை” என்ற கேள்வியிலிருந்து அந்த அறையின் நிலைமை தலைகீழாக மாறியது.

தாத்தாவின் பக்கத்தில் பேரப்பிள்ளைகளாக ஆளுக்கொரு பக்கம்  நானும் கனவுப் பிரியனும் தரையில் அமர்ந்துகொள்ள எண்ணற்ற கதைகள். சம்பவங்கள், இடையிடையே என்னுடைய ஆர்வத்திலான கேள்விகள் அதன் முதிர்ந்த பதில்கள் என நேரம் இலகுவாகிக் கொண்டிருந்தது.


முதுமை எல்லாம் இந்த உடலுக்குத் தான் கி.ராவின் குரலில் இன்றைக்கும் ”துடியான சாமி”யொன்று உட்கார்ந்திருக்கின்றது. பழசைக் கேட்கும் போதெல்லாம் பரவசப்படுகிறார். என்வயதுக்கு நீங்கள் சுண்டைக்காய் என்றெல்லாம் நினையாமல் கனவுப் பிரியன் சொல்லும் மருந்துக் குறிப்புகளின் பக்குவம் கேட்கிறார். கி.ராவின் இடதுகாலைத் தன் மடியில் வைத்து, அழுந்திக் கொடுத்தும்,
நீவிக் கொண்டுமிருந்த  கனவுப் பிரியன் கண்களை நீங்கள் கவனித்திருக்கவேண்டும். தன் தாத்தாவுக்கு அன்பு செய்யும் நிமிடங்களாக அவர் அந்நேரத்தைக் கருதி இருக்கக் கூடும்.சம்பிரதாயமாக இரண்டு பேர் வந்தார்கள் புத்தகம் கொடுத்தார்கள், ஆசிவாங்கிக் கொண்டு காணாமல் போனார்கள் என்றில்லாமல், நாங்கள் இருவரும் கி.ராவின் அன்புக்குப் பரிச்சயமாகிவிட்டோம் என்றே நம்புகிறேன். கணவதி ஆச்சியிடம்  வீட்டிலிருந்த பழங்களைத் தரச்சொல்லி தெலுங்கில் சொல்ல இரண்டு ஆப்பிள்களும், ஒரு மாதுளமும் எடுத்துவந்து கி.ரா தாத்தாவின் கையாலேயே கொடுத்தார். எனக்கு தி.க.சியைச் சந்திக்க வாய்ப்பே அமையாமல் போனது.

அந்த சாபத்தை கி.ராவின் மூலம் சமன் செய்துகொண்டேன். “ஆளுமைகள் எல்லாம் எப்படி இருக்கனும்ன்றதுக்கு இவர் அடையாளம்; எனக்கு எங்க தாத்தாவப் பார்த்துட்டு வந்தது போல இருந்துச்சு” என்றால் கனவுப் பிரியன்.


இருட்டுப் பாதையில் தீரத் தீர கீராவைப் பேசிக் கொண்டே சென்னைக்குத் திரும்பினோம். போக வர ஐந்து மணி நேரம் போக மீதம்  இரண்டரை மணி நேரத்தின் சொற்ப வினாடிகளை காணொளியாகச் சேமித்துக் கொண்டோம்.

சென்னை முழுக்க மூன்று நாட்கள் கனவுப் பிரியனோடு தான் ஊர்சுற்றல். கடந்தமுறை அவர் வந்திருந்தபோது இவ்வளவு பாக்கியங்கள் கிடைக்கவில்லை எங்களுக்கு.   கி.ராவைச் சந்தித்த மறுதினம் கழனியூரனையும் சந்தித்து, பதிப்பாசிரியர்,  ஆசிரியர், இணையாசிரியர் என்று மூன்றுபேரையும் நெருங்கிய பொழுதின் அனுபவத்தையும்... பைக்கில் போகும்போது இரண்டு தோள்களிலும் வைத்திருந்த கனவுப் பிரியனின் கைச்சூட்டையும், உணர்ந்துகொண்டே இதை எழுதி முடித்தாயிற்று.

-
கதை சொல்லி இதழ் இனிமேல் தான் பலருக்கும் அனுப்பி வைக்கவேண்டும். பலருக்கும் என்பதைக் கொஞ்சம் நீளமாக வாசிக்கவும். அத்தனை பேர்களின் பட்டியலுக்கும்.

இதழின் கடைசி வார்த்தையில் சுருங்கச் சொல்லி நிறைவு செய்ய வேண்டுமெனத் தோன்றியது. கதைசொல்லியில் இலச்சினையாக இருக்கும் தாத்தா மற்றும் பேரனின் படம் போட்டு “கதை பல சொல்லுவோம் “ என்று முடித்துக் கொண்டேன். உங்களுக்கும் அதே தான் “கதை பல சொல்லுவோம்”.

 -கார்த்திக். புகழேந்தி
04-04-2015. காலை 10.48 மணி. 
There was an error in this gadget