ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 3 | Madakkulam Prabhakaran
![]() |
(கோப்பு படம்) |
வீடு என்பதின் மேலான எனது பிரியத்தை சர்வசாதாரணமாக எழுதிவிட முடிவதில்லை. தாத்தாவுக்குக் கூடப் பிறந்த சனம் ஏழுபேர். ஏழும் ஆண்பிள்ளைகள். தாத்தாதான் மூத்தவர். குடும்பங்கள் ஒவ்வொன்றும் ”ப” வரிசையில் சுத்தி வீடுகட்டிக்கொண்டு ஒண்ணுமண்ணாக வாழ்ந்தார்கள்.
வீடுகளின் நடு முத்தத்தில் தாயாருக்கு பூடம்கட்டி, சீலை சாத்தி, சூலம் நிறுத்தி வைத்திருக்கும். நல்ல நாளில் குடும்பங்கள்கூடி, கறவைகளையும், கன்றுகளையும், வண்டிமாடுகளையும் குளிப்பாட்டி, சாம்பிராணிபோட்டு சீராட்டி வரிசையில் நிறுத்தி அலங்கரிக்கும் காட்சிகளை எல்லாம் கதைகளாகக் கேட்டு வளர்ந்தவன்.
தாத்தா காலத்து வீடுகளுக்குள் நுழையும்போதே ஓலைப்பெட்டிகளுக்குள்ளிருந்து நெல்உமி வாசனையடிக்கும். பின்கட்டில் இனி கரி ஒட்டுவதற்கு இடமில்லை என்ற கனத்தில் ஈயப்பானையில் வென்னீர் புகைவிட்டுக்கொண்டே இருக்கும். நிறம் மாய்ந்து போன நிலைக்கதவும், உத்திரக்கட்டையில் கழட்டப்பட்ட ஊஞ்சல் கொக்கியும் விளையாடின காலத்து வாழ்க்கையை ஏக்கமாய்ப் பார்க்க வைக்கும்.
ஆச்சி வீட்டில் கம்பியில் பின்னின ஒரு பழங்கட்டில் உண்டு. “வயக்காட்டில் நார்க்கட்டிலில் உக்காந்தா குத்துதுங்கா”ன்னு பொண்டாட்டிக்குப் பிரியமாய் தாத்தா பின்னிப் போட்டது. கட்டுக்கம்பியையே குறுக்கும் நெடுக்குமாக இழிசி இருப்பார். வெற்று முதுகோடு அந்த கட்டிலில் படுத்தால் தாயக்கட்டம் மாதிரி தடுப்பு ஏறிக்கொள்ளும்.
வீடு விடுத்த துயரங்களை எல்லாம் கடந்து பெருமாள் கோனார் காம்பவுண்டில் ஓலைச் சாய்ப்பு வீட்டிலும், மூளிக்குளம் தங்கம்மாள் காம்பவுண்டில் இல்லாத மாடுகளுக்கென மிச்சமிருந்த மாட்டுத் தொழுவத்தை வீடாக்கினபோதும் பாரம்பரியத்தின் மீதான இழப்பு பேரிழப்பாகப் புரிந்துகொள்ளவில்லை.
கொஞ்சம் வளர்ந்து காலங்கள் சுழன்ற பிறகு, டவுண் குற்றால ரோட்டின் வளைவு திரும்பும் துவக்கத்தில் இருக்கும் எங்கள் தாத்தன் பிறந்த இடத்திற்குள் நுழைகிறேன். ஆச்சி ஒருத்தி இறந்த துட்டிக்குச் சென்றவன் அந்த வீட்டை விட்டு நீங்க மனசே இல்லாமல் விடைபெறுகிறேன். அன்றுமுதல் பழசை மறக்காமல் பொக்கிசமாகத் தேக்கிவைக்கும் யாருடைய வீட்டைக் கண்டாலும் சின்னப்பிள்ளையாகிவிடும் மனம்.
மாடக்குளம் பிரபாகரன் அண்ணனை கனவுப் பிரியன் மூலமாகத் தான் தெரியும். வற்றாநதி வெளியானபோது மதுரைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் அவருடைய வீட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அதன் பின்னே இருந்த கதைகளையும் வரலாற்றையும் சொல்லிக்கொண்டிருந்தார்.
அத்தத்தில் மாட்டியிருந்த மூத்தவர்கள் படங்களைக் காட்டி ஒவ்வொருவரும் யார் யார் எந்த காலத்தில் தங்கள் குடும்பத்தை உய்வித்தவர்கள் என்றும், அவர்கள் ஊரையும் பேரையும் பெருமைகளையும் சொல்லி சுத்திக்காட்டவும் ஒருத்தரை உடன் அனுப்பிவைத்தார். இரண்டாவது தடவை கனவுப் பிரியனோடே கூட பிரபாகரன் அண்ணன் அவர்களுடைய வீட்டுக்குச் சென்றிருந்தோம்.
பழைய புகைப்படங்கள், செய்திக்குறிப்புகள், மாடக்குளம் பத்தின தகவல்கள், என்று நிறைய பார்த்திருந்தேன். தன் வீட்டுக்கு அத்திவாரம் நட்டது தொடங்கி அம்மனுக்கு சந்தனக்காப்பு சூட்டியது வரைக்கும் ஒவ்வொரு அசைவையும் தரவுகளாகத் திரட்டி சேமித்து வைத்திருந்தார். நான்கு வயது புகைப்படம், மாடாக்குழியில் வைக்கும் விளக்கு, பராமரிக்க கஷ்டம்தான் என்றாலும் ஞாபகார்த்தமாக இருக்கட்டுமே என்று ஒரு பசுவையும் கன்றையும் பராமரித்து வளர்க்கிறார்.
எனக்கு அவருடைய மொத்த வீடும், சுத்தியிருந்த மனிதர்களும் நிறைய நிறைய கதைகளையும் அனுபவங்களையும் உணர்த்திக்கொண்டே இருந்தன(ர்). வயலும் வயல் சார்ந்த வாழ்வியல் சூழலும் கூடவே பழசை நேசிக்கும் மனசும் தான் அவரை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன போலும். அதையெல்லாம் ஒன்றுகுவித்த உணர்வாய் அவருடைய வீடு இருந்தது.
மாடக்குளம் கீழ்த்திசை மதுரை என்று தொ.ப குறிப்பிட்டு வாசித்தபோது, அந்த ஊரின் பெருமையை உணர்ந்துகொண்டேன். மாடக்குளத்தில் பிரபாகரன் அண்ணனின் வீட்டில் அமர்ந்திருந்த தருணத்தில் அவரது இயல்பையும் நேசத்தையும் புரிந்துகொண்டேன்.
ஆறும் கடந்து ஊரும் கடந்து மதுரை வீதிகளைச் சுற்றித் திரிந்தபோது, “பழங்காநத்தம் வந்துடுங்க கார்த்தி வண்டி அனுப்புறேன்” என்ற ஒரு செல்பேச்சில் தொடங்கி நமக்குள் நிறைய நியாபகங்களையும், தவறவிட்ட பல பொக்கிசங்களையும் நினைவு படுத்துகிறவறாக அண்ணன் மாறிப் போயிருந்தார்.
இன்றைக்கும் சப்தமில்லாமல் வந்து நல்லகாரியங்களுக்குத் தன் பாராட்டைச் சொல்லிவிட்டு “நல்லா பண்ணுங்க கார்த்தி” என்று அர்த்தமாக விடைபெற்றுக்கொள்வார். இன்றைக்கு அண்ணனுக்குப் பிறந்தநாள் வேறு. இருக்கன்குடிக்குப் போய்விட்டு சாமிகும்பிட்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தேன். நீங்க, கனவுப்பிரியன் எல்லாம் நினைவுக்கு வந்தீர்கள். நல்லா இருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டோம் என்றார்.
வளர்த்த ஆட்டுக்குட்டியை கோவிலுக்கு கொடுக்கிறார்கள் என்றதும் விட்டுப்பிரிய மனசில்லாமல் கூடவே நெடுந்தொலைவு நடந்துபோன சிறுவன் நான் என்று அவர் சொன்ன தன் கதையைப் போலத்தான் நானும் அந்த வீட்டின் தொன்மையான நியாபகங்களோடு விடைபெற்றுக் கொண்டிருந்தேன்.
#Autograph2015 17-12-2015
அருமையான விவரணம்..
ReplyDeleteஎங்கள் வாழ்த்துகளும்..
GREAT..GREAT TO KNOW TAMILNAADU STORIES & TAMILS' HISTORY!
ReplyDeleteவீடுகள் பற்றிய பின்னோட்டங்களுடன் விவரங்கள்...
ReplyDeleteஅருமை!