ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 1 Amutha Thamizhகிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஊர் எங்களுடையது. ஒருபக்கம் வாய்க்காலும், ஒன்னொரு பக்கம் ஆறும் பாயும் நகரத்தில், ஈய வாளிகள் நிறைய அழுக்குத் துணிகளைச் சுமந்துகொண்டு படித்துறைக்குப் போய், கொலுசு அழுக்கைக் கடிக்க வரும் மீன்களை எத்தித் தள்ளிக்கொண்டே துணிகளை வெளுக்கும் மதினிகள் கூட்டத்தில் சின்னஞ்சிறுவனாக மேல்சட்டையில்லாமல் துணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரே ஆண் துணையாக நான் மட்டுமே இருந்திருக்கிறேன்.

ஆலம் பழம் விழுந்துகிடக்கும் மரத்தடியில் சுள்ளிக் குச்சிகளைக் கையில் பிறக்கி, நாலுதூண் நட்டு வீடுகட்டி முடிக்கும் வரைக்கும் அவர்கள் சோப்புப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அலசி முடித்ததும் பிளிந்து காயப்போடும்போது நமக்கு வேலையிருக்கும். மூக்கைப் பொத்திக்கொண்டு முங்காச்சி போட்டுக் குளித்துக் கரையேறும் ஈரம் மிகுந்த அந்நாட்களில்தான் எனக்குள் பேச்சுக் கதைகள் மெல்ல புத்து கட்டிக் கொண்டிருந்தன.

அந்த மதினிமார்களுடைய அரசல்புரசலான சாடைப்பேச்சுக் கதைகளுக்குள், அறுவடைமுடிந்து திருணையில் காயப்போட்டிருக்கும் உழுந்து நெத்து வெடிப்பதுபோல அங்கங்கே சில வார்த்தைகள் நமக்கு பிடிபடும். அந்த வார்த்தைகளைக் கொண்டு என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது சூசகமாய் விளங்கும்.

கோணங்கியின் மதினிமார் கதை வாசித்தபோது எனக்கு எங்கூரின் எருக்குழி தொழுவம் பக்கத்தில் கிடந்த உரலும், மஞ்சள் அப்பி முகம் சிவந்து மிஞ்சி ,மாட்டிய காலை நீட்டிக்கொண்டு நீள்வட்டச் சொளவில் பீடி சுற்றிக்கொண்டிருந்த மதினிகளும் தான் நினைவுக்குள் சொட்டினார்கள்.

சரி இதெல்லாம் யாருக்கு! இப்படிச் சொல்லித்தான் தொடங்கணும் என்று துளியளவுக்கும் நினைக்கவில்லை. ஆனால் இப்படித்தான் வாக்கியங்கள் நூல்கோர்த்துக் கொண்டன. “அமுதா தமிழ்” யார் என்ன எவர் என்று ஒரு பகிர்வும் கேட்டுக் கொண்டதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வெகு சமீபத்தில்தான் அர்த்தமர்த்தமாய் பேசிக் கொள்வது. அங்கங்கு “தொ.ப” வந்து குடிகொள்வார்.

ஊரின் மீதும் ஆறின் மீதும் எக்கச்சக்கப் பிரியம் கொண்டவன் என்பதால் அதேமாதிரியாகக் கிடைத்தவர். எப்போதாவது வார்த்தையிலிருந்து “தம்பி” என்று வந்துவிழும். எனக்கு தலை வருடிவிட்ட மதினிமார்களின் நியாபகங்கள் துளிர்க்கும் அந்த வார்த்தையில். பாதி உடைந்தும், மீதி இத்தும்போன வாய்க்கால் கரை பாலத்தில் நிகழ்ந்த என் பால்யகாலத்தில் இந்த நியாபகங்கள் மாத்திரம் வேறாரிடத்திலிருந்தும் எனக்குள் எட்டிப்பார்த்ததே இல்லை என்பதால் இவரிடமிருந்து வரும் ஒரு குறுஞ்செய்திகூட ஆனந்தப்படுத்திவிடும் என்னை.

அப்துல் வாஹப் பாய் பதிவுகளில்தான் முதன்முதலாக அவரைப் பார்த்த நினைவு. திருநெல்வேலிக்கார அன்பு, தமிழ் என்ற பெயர் இதெல்லாம் ஈர்ப்புக்கு காரணமாகி நின்றாலும் , பேஸ்புக் பரணில் தொடங்கி... மங்கை, புத்தகம், தமிழக மாந்தர்கள் என எத்தனையோ வினையூக்கங்கள். இதெல்லாம் தாண்டிய ஆளுமைத்திறன். மிகையென்று எதுவுமில்லாமல் எளிதாகவே அந்த ஆளுமை வெளிப்படுவதும் என் வியத்தலுக்குக் காரணங்கள்.

இவர் மாதிரியாக எழுதத்துணிந்த / தன் அறிவை, இல்லாத வாசிப்பை வெளிப்படுத்த முயன்று தோற்றுப் போனவர்களைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். கற்றுக் கொள்கிறதில் ஒரு சினேகத்தையும் பற்றுக் கொள்கிறதில் பெரும் அன்பையும் கண்டதால் முதல் தொடக்கமாய் இவர் பற்றி என் அபிப்ராயங்களை எழுதிக் கிறுக்குகிறேன். அக்காள் என்று அன்பில் அழைக்கும் மிகச் சொற்பமானோர்களில் செயற்கைத் தனங்களை யாரிடத்திலும் வழங்கியதில்லை. அது பழகினவர்களுக்குப் புரிந்திருக்கும். ஆகவே, எனக்கும் அன்புக்கு அன்பு செய்ய இதுமாதிரியல்லாமல் வேறு வழிகளென்று ஏதுமில்லை.

@Amudha Thamizh

‪#‎Autograph2015‬ 15-12-2015

Comments

  1. அருமையான மற்றுமொரு ஆட்டோகிராஃப்..

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்