ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 4 | Saya Sundaram | Keerthi Maniam
பாளையங்கோட்டையில் வீடுகட்டி முடித்து குடிபுகுகிற நாள் அது. அந்த பகுதி அப்போதுதான் பழக்கமாகிறது. அக்கம்பக்கத்துவீட்டுக்காரர்களுக்கு அப்பாவைத் தெரியும். எங்களைச் சின்னப்பிள்ளையில் பார்த்திருக்கலாம். அவ்வளவுதான் பரிச்சயம்.
முதல்நாள் சாயங்காலம் மாடிக்குச் செல்லும் வெளிப்படிக்கெட்டில் நின்றுகொண்டு அண்ணன் தம்பிகளாகக் கதையடித்துக் கொண்டிருக்கிறோம். கூடுகிற இடம் கோயில் மாடமாக இருந்தாலும் சரி குட்டிச்சுவராக இருந்தாலும் சரி அண்ணன் தம்பியென்றெல்லாமில்லாமல் கலகலப்பாக்கிவிடுவது எங்கள் பழக்கமாகவே இருந்தது.
எங்கள் வீட்டுக்கு நேர் எதிர்த்தமாதிரி இருந்தது தெருக்குழாய். நல்ல தண்ணீருக்கு எல்லாருமே அந்தக் குழாயையும் நம்பி இருந்தார்கள். அது முரண்டுபிடிக்கும் காலங்களில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள தொட்டிதான் அட்சய பாத்திரம்.
அப்படி தண்ணீர் பிடிக்க வந்து கொஞ்ச நாட்களிலே எங்கள் தங்கைகளாக மனத்தில் இடம்பிடித்தவர்கள் ஆன்ஸியும் ப்ரீத்தியும்.
அக்காளுக்கும் தங்கைக்கும் ஆகவே ஆகாதாம். ஆனால் எங்கள் மீது அன்பு வைப்பதில் யார் அதிகம் என்று போட்டிபோட்டுக்கொண்டு பாசமழை பொழியும்கள். சேட்டையும் ரவுசும் தாங்கமுடியாது. “ஆன்ஸி இங்க வாயேன்” என்பேன். “மாட்டேன் நீங்க மண்டைல கொட்டுவீங்க” என்பாள். இந்த மண்டையில் கொட்டுகிற பழக்கத்தை இப்போதெல்லாம் மறந்தேவிட்டேன். ஹாஹா... வெறும் வாய்ச்சொல்லாக மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
அக்காவும் தங்கச்சியும் இப்போது தொடர்பில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தப் பிள்ளைகளின் பாசமும் நேசமும் நெஞ்சிலே நின்றுகொண்டிருக்கும் காலத்துக்கும்.
இங்கே முகநூலில் எனக்கு ஆன்சியை அதிகம் நினைவுபடுத்திகிறவள் கீர்த்தி தான். கீர்த்தி கொஞ்சம் சுழிச்சேட்டை மிக்கவள். ஆன்ஸிதான் கீர்த்தியாக ஃபேக் ஐடியில் வருகிறாளோ என்றுகூடத் தோன்றும். போனவருடம் புத்தகக் கண்காட்சிக்கு நேரில் வந்துவிட்டு தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு, “அண்ணே உங்களுக்கு கொஞ்சம் முடிகொட்டுதுண்ணே” என்று மெஸேஜ் அனுப்பிவிட்டுச் சென்றிருந்தது எருமை. கூடவே காஞ்சி காமாட்சி குங்குமத்தை கவரில் முடிந்து,”நீங்க சாமி கும்புடுவீங்களான்னுல்லாம் தெரியாது. எங்க அண்ணனுக்காக வேண்டிக்கிட்டு கொண்டுவந்தேன்” என்று எழுதியிருந்தாள்.
ப்ரீத்தி சாயலில் நான் நினைத்துக்கொள்வது சாயாவை. “ஓய் அண்ணோவ், கோவமா இருக்கீங்களா” என்றபடிதான் பேச்சையே தொடங்குவாள். வார்த்தைவிடாமல் பேசுவதை எல்லாம் அம்மாவிடம் சொல்லிக்காட்டுவாள். நிறைய வாசிக்கிறாள். திடீர் திடீரென்று “நீயாம்மா எழுதுனே இதை” என்று கேட்கும்படிக்கு நல்ல கவிதைகள் எழுதுகிறாள். தமிழ் இலக்கியச் சூழலில் எத்தனை சிற்றிதழ்கள் இருக்கின்றன. எத்தனை மின்னிதழ்கள் இருக்கின்றன என்று கணக்கெடுக்க வேண்டுமானால் சாயாவின் கவிதைகள் வெளியான இதழ்களின் பெயர்களை எண்ணினால் போதும். ஹஹ்
இந்த இரண்டுபேரும்போல இன்னும் நேயமான அன்பைச் சிந்துகிற தங்கைகள் இருக்கிறார்கள் என்றாலும் எழுதவேண்டுமென்று நினைக்கும் வாஞ்சையினை எப்படித் தடுத்துவிட.
அன்பாயிருக்கிற பிள்ளைகளைச் சூழ்ந்த நாட்கள் ஆசிர்வதிக்கப்பட்டதெனில் நானும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். நல்லா இருங்க பிள்ளைகளா!
#Autograph2015 21-12-2015
![]() |
Saya Sundaram |
![]() |
Keerthi Maniam |
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது