சந்திரஹாசம் - அகமும் புறமும்..
    புத்தகம் கையில் கிடைத்த தினத்திலிருந்து இன்றைக்குவரைக்கும் “படிச்சதும் கொடுங்க” என்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டிருக்கும். சரி என்ன இருக்கிறது சந்திரஹாசத்தில். என்னதான் அந்த முடிவில்லா பெரும் யுத்தத்தின் கதை?

      நிற்க!... முழுக்கதையுமோ புத்தகத்தின் மொத்த தொகுதியையுமோ இங்கே நான் எழுதப் போவதில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. ஆம்! வாசித்துவிட்டு எப்படி இருக்கின்றதெனச் சொல்லுங்கள் என “விகடன் கிராபிக்ஸில்” இருந்து தரப்பட்டது முதலாம் பாகம் மட்டுமே. அந்த அனுபவத்தை மட்டுமே நான் முலாம் பூசமுடியும்.

    பாண்டியர்களின் சரித்திரம் சோழர்கள் அளவுக்கு மெய்கீர்த்திகளால் நிரம்பியது அல்ல. சமகாலத்தில் வெளியான பல சரித்திரநாவல்கள்கூட சோழர்களின் உயர்வைக் கொண்டாடும் மனநிலையிலே எழுதப்பட்டவையாகவே கருதுகிறேன். அந்தவகையில் பாண்டியர்களின் சரித்திர மற்றும் புராணக் கதைகள் திரைப்படங்களின் மூலம்தான் அதிகம் வெளிப்பட்டது. 

சோழர்கள் தங்களைச் சூரியகுலத்தினர் என்று அழைக்க, பாண்டியர்களோ தங்களைச் சந்திர குலத்தினரென்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். ஆக, பாண்டியர்களின் குலச்சின்னமான இரண்டு மீன்கள் பொறிக்கப்பட்ட அவர்களின் தொன்மையான வாளுக்கு “சந்திரஹாசம்” என்று பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

பின்னாளில் மதுரைமீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னனின் மனைவி கங்காதேவி எழுதிய “ மதுரா விஜயம்” சுவடியில் சந்திரஹாசம் பற்றிய குறிப்புகள் கிடைக்கிறது. அந்த வாளின் பெயரிலே  “சந்திரஹாசம்” கிராபிக் நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

கொஞ்சம் வரலாற்றுக்குள்....

மூன்றாம் இராஜராஜனை வடிகட்டின முட்டாள் என்றும், திறமைக் குன்றியவன் என்றும், அவராலே சோழப்பேரரசு வீழ்ச்சியை நோக்கித் திரும்பியது என்றும், அதிகாரத்திலிருந்த மூன்றாம் இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் இராஜேந்திரனால் (1246-1279) மட்டுமே சோழ அரசு தாக்குப்பிடித்தது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

சோழர்களின் கடைசி மன்னனான மூன்றாம் இராஜேந்திரனையும், இலங்கை மன்னன் பராக்கிரமபாகுவையும், கேரளத்தையும் வெற்றிகொண்டு, “மலைநாடும் சோனாடும் இருகொங்கும், ஈழமும், தொண்டை மண்டலமும் கொண்டருளியவன்” என்றபட்டங்களைத் தாங்கியவர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியர் (1268-1311). சரியாகச் சொன்னால் பிற்காலப் பாண்டியர்களில் இவருக்கு அடுத்து ஆட்சிசெய்த விக்கிரம பாண்டியனும் (1268-1281), சடையவர்மன் சுந்தரபாண்டியனும் (1276-1293) துணையாட்சி புரிந்தவர்களே.  குலசேகர பாண்டியன் தான்  “பிற்காலப் பாண்டியர்களின்” கடைசிப் பேரரசன். இவரது பட்டத்து அரசிக்குப் பிறந்த இளையமகன் சுந்தரபாண்டியன், துணைவிக்குப் பிறந்த மூத்தமகன் வீர பாண்டியன். 

இருவரில் மூத்தவரான வீரபாண்டியன் தந்தையின் தலைமையிலான ஈழப்போரில் கடல்கடந்துசென்று, சிறுபடையுடன் களமிறங்கி இலங்கைமன்னன் பராக்கிரமபாகுவை வீழ்த்துகிறான். இலங்கையின் மன்னன் யார் என்பதை நிர்ணயிக்கும் பௌத்தமதப் பிக்குகளின் பாதுகாப்பிலிருக்கும் “புத்தனின் புனிதப்பல்லைக்” கைப்பற்றுகிறான். பௌத்த பிக்குகள் தப்பியோடிய பராக்கிரமபாகுவை குலசேகர பாண்டியன் முன்னிலையில் ஒப்படைக்க, பாண்டியப் பேரரசின் சின்னமான மீன்கொடியின் கீழ் பணிந்து நடப்பதாக வாக்களித்து திரும்ப ஆட்சி பொறுப்பேற்கிறான். 

இந்த இடைப்பட்டகாலத்தில் சீனத்திலிருந்து கடற்பயணமாக தென்னிந்தியாவிற்கு வருகைதரும் மார்கோபோலோ குலசேகரபாண்டிய மன்னனின் அவைக்கு வருகிறார். சீனத்தூதுவராக தொன்மையான மதுரையின் அழகையும், அதன் பாரம்பரியத்தையும் நகரின் கலைநயத்தையும் தன் பயண நூலில் விவரிக்கிறார். நல்முத்துக்களால் நிறைந்த பாண்டிய மன்னர்களின் செல்வச்செழிப்பை வியந்து அங்கிருந்து விடைபெறுகிறார். 

ஈழப்போரில் வீரபாண்டியன் கையாண்ட விவேகமும், அவனுடைய வீரமும் பேரரசின் அடுத்த இளவரசன் என்ற பதவியைக் கொடுக்க, வாரிசுரிமைப்படி தனக்கு வரவேண்டிய ஆட்சி பறிபோவதைத் தாங்கிக்கொள்ளமுடியாத பட்டத்தரசியின் மகன் சுந்தரபாண்டியன் தன் தந்தை மாறவர்மன் குலசேகர பாண்டியரைக் கொலைசெய்து கோட்டையைக் கைப்பற்றுகிறார். கோட்டைக்காவல் தலைவன் வானவீரன் இளவரசர் வீரபாண்டியர் ஆணைக்கிணங்க கோட்டைவாயிலைத் திறந்துவிட சுந்தரபாண்டியனும் அவனது தாய்மாமன் செந்தூரனும் தப்பியோடுகிறார்கள். மணிமுடிக்கான யுத்தம் இங்கிருந்து தொடங்குகிறது.


தப்பியோடிய சுந்தரபாண்டியன் தனக்கு மீண்டும் மதுரையின் ஆட்சிப் பதவி கிடைக்க தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியான மாலிக் கபூரின் உதவியை நாடிச் செல்கிறான். மாலிக் கபூரின் படைகள் வட இந்தியாவில் செய்த அட்டகாசங்களையும், கொலை கொள்ளைகளையும் அறிந்த செந்தூரன், சுந்தரபாண்டியன் எடுத்த முடிவுக்கு தடையாக நிற்கிறார். அவரைக் கொன்றுவிட்டு மாலிக் கபூருடன் கூட்டு சேர்ந்து மதுரையின் செல்வச் செழிப்பை பணயமாக வைத்து, எனக்கு ஆட்சி உனக்கு செல்வம் என்ற ரீதியில் போருக்குத் தயார்ப்படுகிறான் சுந்தரபாண்டியன். தென்னிந்தியாவின் கருப்புச் சரித்திரம் இங்கிருந்து தொடங்குகிறது. 

மனிதக்கடலென புறப்பட்டுவரும் மாலிக்கின் பெரும்படையை எதிர்கொள்ள வீரபாண்டியன் தன் தளபதிகளுடன் வியூகம் வகுப்பதோடு முடிகிறது. சந்திரஹாசம் முதல்பாகம். முதல்பாகம் வரைக்குமே கையிலளித்திருந்தார்கள் என்பதால் என் வாசிப்பும் இங்கோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 


சரி கிராபிக் நாவல் கிராபிக் நாவல் என்கிறார்களே. அது எப்படி இருந்தது என்று என்னைக் கேட்டால், மிகமொத்தமாக நாவலில் வாசிக்கவேண்டிய வார்த்தைகள் எல்லாவற்றையும் ஒரு ஏ4-காகிதத்தில் எழுதிமுடித்துவிடலாம். முழுக்க வரைபடங்கள் மூலமாகவே கதைசொல்லப் பட்டிருக்கிறது.

ஓவியங்களின் மூலம் பிரம்மாண்டங்களை காகிதத்தில் விஷுவலாகக் கொடுத்திருக்கிறார்கள். திரைப்படங்களுக்கான  “ஸ்டோரிபேட்”  வடிவம். அல்லது காமிக் வடிவம் என்று சொன்னால் சட்டெனப் புரிந்துகொள்வீர்கள். ஆனால் இந்த மெனக்கிடல் பெரிது. தவிர பாண்டியர்கள் பக்கத்திலிருந்து வரலாற்றைப் பார்க்கும் விதமும் சேர்ந்திருக்கிறது. 

நிறைகள்  

*வரலாற்றுப் புதினங்களின் நீள, அகல, தலையணை சைஸ் புத்தகங்களை வாசிப்பதிலிருந்து தப்பி ஓடுகிறவர்களுக்கு எளிமை செய்திருக்கிறது இந்த கிராபிக்நாவல் வரவு.

*எதையும் விஷுவலாகச் சிந்திக்கும் அடுத்த தலைமுறையினருக்கு வரலாற்றுக் கதைகளின் தொடர்பை கையிலெடுத்துக் கொடுத்திருக்கிறது.

*ஓவியக்கலையின் அடுத்த வடிவத்திற்குக் கிடைத்திருக்கும் பலத்த வரவேற்பு இது. kஉகைச் சுவர்களிலும், களிமண்ணிலும் கோட்டுச்சித்திரமாகத் தொடங்கிய கலை டிஜிட்டலில் சக்கைபோடு போடுகிறது என்பதை வளர்ச்சியோடு சேர்த்தே அணுகலாம்.

*விகடன் மாதிரியான ஜனரஞ்சக ஊடகம் வியாபார சிந்தனையோடேகூட சரித்திரக் கதைகளில் புதுமை புகுத்தும் முயற்சிக்கு வாய்ப்பளிப்பது நல்லமாதிரியான தொடக்கம். 

*சு.வெங்கடேசன் க.பாலசண்முகம் இரண்டு படைப்பாளிகளின் உழைப்பு.

எதிர்ப்பார்த்தவை 

*சந்திரஹாசம் கிராபிக் “நாவல்” என்ற விளம்பரங்கள், அது ஏற்படுத்தியிருந்த  தோற்றத்திலும் நாவலைப் புரட்டிவிட்டு வாசிக்க அதிகம் வேலை இல்லை “படம்பார்த்துக் கதைசொல்” மாதிரி என்றதும் முதலில் ஏமாற்றமாகவே இருந்தது(எனக்கு). என் நண்பர்கள் சிலருக்கு அப்படி இல்லைபோல.

* சரித்திரக் கதையில் இருக்கும் வேகமும் அழகியலும் வார்த்தை விவரங்களில் இல்லாமல் போவதால் ஓவியங்கள் தான் அந்த இடத்தைப் பூர்த்தி செய்தாக வேண்டும். அது சில இடங்களில் தடைபடுகிறது.  சரியாகச் சொன்னால் அகநிலைக் காட்சிகளிலும், போர்க்காட்சிகளிலும் கூட உக்கிரம் குறையாதவர் போல ஒரே உர்ரென்ர முகத்தோற்றத்தில் இருக்கும் வீரபாண்டியனது ஓவியம். அவனது மனைவி சித்ராதேவி இன்னும் உம்ம்ம்ம்.

* மொத்தமாகச் செலவிட்டால் முதல்பாகத்தை இருபது நிமிடங்களுக்குள் வாசித்து முடித்துவிடலாம். போர்க்காட்சிகள், மதுரை நகரக் காட்சிகள், மாலிக் கபூர் படை புறப்படுவது ஆகிய மூன்று நான்கு இடங்களே மனதில் பதிந்தன. திரும்பத் திரும்ப பிரம்ம்மாண்டம் பிரம்மாண்டம் என்று காதுகளுக்குள் ஒலித்த சொல் சின்ன மழையைப் போல கரைந்துபோவதை ஏற்கமுடியவில்லை. 

குறைகள் 

*சிலர் சொல்லி இருக்கலாம்.. சில படங்கள் ரிப்பீட் ஆகிறது. ஒழுங்கற்ற ஏனோ தானோ கிராபிக் தன்மை. (ஒருவேளை அப்படித்தான் இருக்கவேண்டுமோ என்னவோ). அவ்வளவு பெரிய மதுரை நுழைவாயிலில் ஒரு மீன் சின்னம்கூடவா இல்லாமல் விடுவார்கள்? 

*பக்கம் எண் இல்லாததால்... சரி வேணாம் விடுங்க.

*1499/- ரூபாய் விலைக்கு இந்த ஒருபுக்தானான்னு பக்கோன்னு ஆகிடுச்சு. மொத்தம் எத்தனை பாகம். இன்னும் எவ்வளவுதூரம் கதை நீளும்? மாலிக் கபூர் படையெடுப்புக்குப் பின்னான சரித்திரத்தில் சந்திரஹாசத்தின் முக்கியத்துவம் என்ன? இதெல்லாம் சொல்லாமல் பாதியிலே புத்தகத்தை விட்டுவைத்தால் என்ன நியாயம் இதெல்லாம் ஹஹ.   

*இரண்டாவது பாகம் எப்போசார் குடுப்பீங்க..  

நேர்மையாகச் சொல்ல நினைப்பது 

இவ்வளவு விலை கொடுத்துத் தான்  காகிதத்தில் சரித்திரம் படிக்கப் போகிறதா அடுத்த தலைமுறை. நிறைய பேர் விலைகேட்டதுமே வெறுப்பு மனநிலையோடு “வெறும் பொம்மைப் படம்தான் சார்” என்ற கம்மெண்ட் அடித்ததைக் கேட்டேன். கோச்சடையான் துயரம் இதையேதான் நிகழ்த்தியது.

நன்றி 
திரு. தமிழ் மகன்   மற்றும் விகடன் குழுமத்திற்கு... 


Comments

  1. அன்பினிய நண்பர் திரு கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு வணக்கம்.
    வலைததிரட்டிகளில் இணைக்கப்படாத தங்களின் வலைப்பக்கத்தை எனது வலைப்பக்க இணைப்பில் தந்திருக்கிறேன். நண்பர்கள் படிக்கவேண்டியவற்றை இப்படி இணைப்பதில் தங்கள் கருத்து மாறுபடாது என்றே எண்ணுகிறேன். நன்றி - நா.முத்துநிலவன், புதுக்கோட்டை

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்