முற்றத்து மரத்தை வெட்டியது போல...



"முற்றத்து மரத்தை வெட்டியதுபோல" என்றெழுதிய கலாப்ரியா அவர்களின் வார்த்தை கண்ணில் பட்டது. எனக்கு தயாபரன் தெரு காம்பவுண்டு வாசம் நினைப்புக்கு வந்தது. யசோதா இந்த கண்ணனை உரல்ல கட்டிவச்சிட இரண்டு மரங்களுககு நடூல உரலைச் சிக்க வைச்சி தப்பிச்சுக்குவாம்லா கிரிமினல் பய. அப்படி ஒரு ரெட்ட மரம் எங்க வீட்டு முத்தத்தில நின்னுச்சி.

மரத்துக்கு செட்டுக்குச் சேக்காளியா குப்புற கவுத்துன கல்லுரல் ஒன்னும் அங்கயே கெடக்கும். ஆச்சி சொளவு புடைக்கும் போது கால்நீட்டி மரத்துபோச்சுன்னா. ஒரல்லதான் வந்து ஒக்காரும். அந்த மரங்க நிழலடில தான் அதுக்கு பொழுதே கரையும். ஆச்சிக்குத் தொண ஆடும் மாடும்.
முக்காவாசி முங்கிக்கெடந்த கல்லுரலை கமத்திப் போட நிறையநாள் உருண்டு புரண்டு பார்த்தும் ம்ஹூம் அசையலையே.. சரி ஒரலதான் அசைக்க முடில இந்த மரத்துல ரெண்டுல ஒன்ன கமத்தி போட்ருவமான்னு கூட நெனப்பு.


செவலை கன்னுக்குட்டியை ஒரல்லேதான் கட்டிப்போடுறது எப்பவும். முணுமணிக்கு கறவைக்கு ஆள் வந்தாப் போதும் மடில முட்டி பால்குடிக்க கிடந்து குதியா குதிக்கும். கருவக்காயா தின்னு வளந்த குட்டியை சுழிசரியில்லைன்னு சந்தைல வித்தபெறகு முத்தத்து உரல் மொழுக்கட்டையாயிருச்சி. ஒருதரம் தீவாளிக்கு சும்மா கெடக்காம உரல் மேலே வச்சி பொட்டுவெடி வெடிக்கப்போய் என்ன எளவு பிசிறோ சட்டபோடாத தொந்தியில் தெரிச்சி ரத்தம் எட்டிப் பார்த்துருச்சி.

இனுக்கோண்டு ரெத்தத்துக்கு ஒருநாளு முழுக்க அழுதவன் எம்பேரன்னு கெளவி மானத்த வாங்கிருச்சி.. அதிலிருந்து உரல்கிட்ட எந்த சேட்டையும் வச்சிக்கிடுதது கிடையாது. அப்பப்போ மரமேறிக்குரங்கு விளையாட, கண்ணாம்பொத்திக்கு மரத்தோட மரமா ஒட்டி நின்னு இருட்டில் மறைஞ்சுக்க, மழைக்கு அப்புறம் தேனாட்டம் வடியும் முள்ளு பிசின் பிச்செடுக்க, சைக்கிள் டீப்பு, டயரு, வடக் கயித்தல்லாம் வச்சி ரெண்டு மரத்துக்கும் குறுக்க சாய்ப்பு ஊஞ்சல் கட்டிக்க, கை தொண தொணத்தா காஞ்ச பட்டைய உரிக்கன்னு மரங்களுக்கு கூட மட்டும் நெறைய பழக்கப்பாடுங்க இருந்துச்சு.

காம்பவுண்டையே வெலைக்கு வாங்கி வீடு கட்டுன சிட்டைக்காரரு எங்காச்சி சொல்லியும் கேக்காம, மரத்தை வெட்டிப் போடச் சொல்லி ஆள் வச்சாரு.
அன்னைக்குதான் மொத தடவ முடி மொளைக்காத குருவிக்குஞ்ச கைல வச்சு உசுரு இருக்கான்னு பார்த்துட்டு இருந்தேன். மரத்து அடிவேரப்புடுங்க தோண்டுன குழிய என்னத்த வச்சி மூட என் சவத்த வச்சி மூடுமைய்யான்னு எங்காச்சி பொலம்பிட்டு இருந்துச்சு. நாந்தான் ஆச்சிய காப்பாத்தனும்ன்னு செத்துப்போன குருவிகுஞ்ச அங்கயே பொதச்சுட்டேன். மரமும் போச்சி, குருவியும் போச்சி, கொஞ்ச காலத்தில் ஆச்சியும் கூடவே போயிருச்சி..

-ஊர்நாட்டான்.
( இன்னைய தேதி தான். )

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil