புத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்



அக்காள் பிறக்கையில் முருகன்குறிச்சி அன்னை வேளாங்கண்ணியில் வைத்துப் பேறுகாலம் பார்க்கும் அளவுக்கு கையில் கொஞ்சம் வசதி இருந்திருக்கிறது. மூத்தது எப்போதும் பொண்ணாய்த்தான் பிறக்கும் எங்கள் வீட்டில். அதுவும் எல்லாம் பிறப்பிலும் வளர்ப்பிலும் சீமாட்டிகள்


நான் இரண்டாமவன். பெரியப்பன் சித்தப்பன் பிள்ளைகளோடு கணக்குப் பார்த்தாலும் கடைக்குட்டியும் கூட. நம் பிறப்பு வீட்டில் நிகழ்ந்தது. ஒரு நாலு முழ வேட்டியும், கருப்பு கசாயமும், கொஞ்சம் வென்னீரும் ஒரு புது ப்ளேடும் தான் என் பிறப்புக்கு மொத்தச் செலவு. தேதியை மூணு நாள் தள்ளி பிறப்புச் சான்றிதழில் பதிந்ததால் அதை மாற்றத்தான் பேறுகாலச் செலவைவிட அதிகம் பிடித்தது.

இரண்டாவது பிள்ளைகள் எப்போதுமே செலவு வைக்காத பிள்ளைகள். கடைசியாக நான்காவது படிக்கும் போது ஒரு விபத்து சிகிச்சைக்காக ஆசுபத்திரிக்குப் போனது. மற்றபடி காய்ச்சல், தலைவலி என்று எந்த சுகவீன காரணத்துக்கும் ஆசுபத்திரி பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை.
ரத்ததானம் உபகார காரியங்கள் வேறு கதை.

அக்காளுக்கு இரண்டும் பொண். மூத்தவளுக்கு ஊரேகூட்டி விருந்துவைத்து பேர் வைத்துவிட்டு. இரண்டாவது பிள்ளைக்கு "சிம்பிளா வீட்டிலே முடிச்சுட்டோம்" என்றார்கள். எனக்குக் கடுங்கோவம். இரண்டாவது பிள்ளைக்கு நானாச்சு என்று அதேமாதிரி தவுசுப்பிள்ளை வைத்து அண்டா நிறையப் பொங்கிப்போட்டு சீனித் தண்ணி கொடுத்தோம்.

இந்த மாதிரி காரணங்களாலேயே இரண்டாவது பிள்ளைகளை யாராவது ஓரங்கட்டினால் முணுக்கென்று முன்னால் நின்று வாரிக்கொள்வேன்.
விசயத்துக்கு வருவோம். நண்பன் சொல்லித்தான் முகநூலில் பதிந்திருந்த அம்மாவின் பதிவை வாசித்தேன். ஆம் அவரும் எழுதுகிறார். எதோ குடும்பத்தில் நமக்குத்தான் இந்தக்கிறுக்கு இருக்கிறது என்று இத்தனைகாலம் தப்புக்கணக்குப் போட்டிருக்கிறேன்.



இரவு வேலையெல்லாம் முடித்து மொட்டைமாடியில் காற்று வாங்கிக் கொண்டிருந்தவருக்கு... பக்கத்துவீட்டம்மாளின் பரபரப்பு கண்ணுக்குப்பட என்ன ஏதென்று விசாரித்தால் நிறைமாத சூழிப்பிள்ளைக்கு வலி வந்துவிட்டதுபோல. ஆம்புலன்சுக்குக் கூப்பிட்டும் இன்னும் வந்த பாடில்லை. மாடியில் வலியால் கத்திக்கொண்டிருக்கும் பெண்ணை கீழே அழைத்துவரவும் வழிதெரியாமல் விழிபிதுங்கி நின்றிருக்கிறார்.

அடுப்படி எங்கேன்னு கேட்டு நேரேப்போய் அங்கிருக்கும் சிலபல அஞ்சறைப்பெட்டி சமாச்சாரங்களை நுணுக்கிப்போட்டு கசாயம் வைத்துக்கொடுத்து, அடுத்த அஞ்சாவது நிமிசத்தில் பிள்ளையைக் கையில் வாங்கிக் தொப்புள்கொடி அறுத்து, குளிப்பாட்டி பேத்தியாள் கையில் ஒப்படைத்திருக்கிறார். ஆம்புலன்சும் வந்திருக்கிறது.

அம்மாவுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்திருக்குமென்பதெல்லாம் நான் மண்டையைப் போட்டு உருட்டிக்கொண்டிருக்கவில்லை.விசயத்தைக் கேட்டதும் "கோத பின்னிட்டபோ"  (பூங்கோதை) என்று சொல்லத்தான் வாயெழுந்தது.

ஆச்சிக்கு ஏழுபிள்ளை.  அதுவும் ஏழும் பொண்ணாகப் பிறந்தது. ஏழாவது பிள்ளை பிறந்து நடமாடும்போதே முத்துச்சாமிக்கோனார் கண்ணை மூடிவிட்டார்.  ஒவ்வொரு பிள்ளையியும் கரைசேர்த்து தன் கடேசி காலத்திலும் மகள்களிடம் கைநீட்டித் தின்னாமல் கால்நடையாக நடந்து நடந்து உழைத்து ஊர்மெச்ச வெள்ளக்கோயில் போய்ச்சேர்ந்த  பொன்னாத்தாளின் ஏழாவது மகளுக்கு இதெல்லாம் எம்மாத்திரம் என்று அமைதியானேன்.

பிறந்தது ஆண்மகவாம். மருத்துவமனையில் தாயும் சேயும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  நலமாய்த்தான் வருவார்கள். எம்மோவ் பையனுக்கு எம்பேரு வைக்கச் சொல்லுங்க. அவனும் என்னப்போல அறிவா வரட்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். பார்ப்போம்

-கார்த்திக்.புகழேந்தி
16-10-2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil