Skip to main content

ரஜினி முருகன்விடுமுறை நாட்களில்  ஒருகூட்டம் தெக்குத்தெரு குளத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும். கூட்டத்தில் இளசுகளுக்கிடையே கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் முதிர்ச்சியாக ஒருத்தர் கட்டம்போட்ட சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு கிரவுண்டுக்குள் ஃபீல்டிங் நிற்பாரென்றால் எங்கள் ஊரில் அவருக்குப் பெயர் மளிகைக்கடை முருகன்.  ஏரியாமுழுக்க ரஜினி முருகன்.

கீழவளவில் ராணி மளிகைக் கடைக்குச் சொந்தக்காரர். ராணியக்கா இல்லாதபோது ஏரியா விடலைகள் ஒன்றுகூடும் இடம் அவர் கடைதான். முன்னாள் “வீரா ரஜினி ரசிகர்மன்ற கிளைச் செயலாளர். வீரா படம் ரிலீஸாகும் போது பிறந்திருக்கவே செய்யாத பொடியன்களோடு இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அவரது வீட்டுக்காரம்மாளின் பெரிய குற்றச்சாட்டு.

முருகன் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டும் இக்னேசியஸில் ஏழாவதும் ஐந்தாவதும், படிக்கிறது. ரெண்டும் பொண்ணு என்பதில் அவருக்கு ஏக சந்தோசம். கேட்டால்  “தலைவருக்கும் ரெண்டுமே பொண்ணுங்கதான்” என்பார்.

ராணியக்காவை கடையில் உட்கார வைத்து, “குளத்தாங்கரை வரை போய்ட்டு வந்துடுறேன்” என்று புளுகிவிட்டு எங்களோடு வந்து பீல்டிங் நிற்பார். உடும்புமாதிரி க்ளோஸில் கவர் செய்ய ஒரு ஆளை நிறுத்துவதற்காக அவரை எடுத்துக்கொள்ள இரண்டு டீமும் அடித்துக்கொள்ளும். கிரிக்கெட்டில் அவர் ஒன்றும் புலியெல்லாம் இல்லை. வலுவாய் ஒரு யார்க்கர் போட்டால் ஸ்டிக்கு நழுவிடும்.

"காலுக்குள்ளே எரிதாம்ல.. கண்டாரோலி" என்றபடி பௌலரைத் திட்டிக்கொண்டே கிரீஸைவிட்டு வெளியேறும்போது வேடிக்கையாக இருக்கும். எப்போதாவது கண்ணைமூடிவிட்டு சுத்தினால் அத்தோடு பந்து தொலைந்து போகும் தூரத்துக்குப் பறக்கும். ஆட்டமும் முடிவுக்கு வந்துவிடும்.

"ஏண்ணே உங்களுக்கு ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு இருக்குமா?"

"ஏன் வயசக்கேட்டு என்ன எனக்கு வளகாப்பா பண்ணப்போற மூட்டுப்போல"

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து சொல்வதென்றால் டவுண் ரத்னா தியேட்டரில் பாட்ஷா ரிலீஸ் ஆகி இருந்தபோது ஏக தள்ளுமுள்ளு. சட்டைகிட்டையெல்லாம் பட்டன் அறுந்து, கிழிந்து தொட்டி ஆட்டோவில் அழைத்துவந்த தன் ஏரியா ஜனங்களைத் கடினமான அண்டர்கவர் ஆப்ரேசன் மூலம் அரங்குக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமை அவருக்கு ஊருக்குள் இருந்தது.

ரஜினி பட ரிலீஸ் என்றால் ஆளைக் கையிலே பிடிக்கமுடியாது. ரஜினி பிறந்த நாளைக்கு டெய்லர் மிஷின், மூன்றுசக்கர சைக்கிள் என்று டயோசிசன் ஆட்களைப் பிடித்து அல்லோலகல்லோலப் படுத்திவிடுவார்.  நற்பணிமன்ற வேலைகள் தொடங்கி நாட்டுநலப்பணி திட்டம் வரைக்கும் வீரா நற்பணிமன்றத்தின் முக்கிய காரியதரிசி ரஜினி முருகன் அண்ணாச்சி தான்.

சொல்லி வைத்தது போல அவர் வீட்டம்மாவும் ரஜினி ரசிகை. என்பதால் கடை அடைத்ததும் சோடி போட்டுக்கொண்டு படம் ரிலீசான முதல்நாள் இரவுக்காட்சிக்கு தன்னுடைய பழைய எம்.எய்ட்டியில் ஊர் அதிரப் படத்துக்குப் போவார்கள்.

அருணாச்சலத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் படையப்பா ரிலீஸ் ஆனபோது கோயில் சுவரில் வால்போஸ்டர் ஒட்டினதற்காக கமல் ரசிகர்கள் பிரச்சனையைக் கிளப்பிவிட, அதைத்தன் இருப்பை நிறுவுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் ரஜினி முருகன்.

பிரச்சனை தீர்ந்த  அடுத்த திருவிழாவிற்கு வீரா நற்பணிமன்றம் மைக் செட்டு செலவுப் பொறுப்பை ஏற்றது. கோயில் கொடைவிழா முடியும் வரைக்கும் "சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு ஏறு என்று ஏறிக்கொண்டிருந்தார்கள்"

பாபா படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு. ஆளாளுக்கு துண்டை தலையில் கட்டிக்கொண்டு நடுவிரலையும், மோதிரவிரலையும் மடித்து “கதம் கதம்” என்றபடி திரிந்தார்கள். பாபா பப்படமாக படுத்துவிட்டதால் நொந்துபோன மனிதர் சிலபலகாலம் தாடியோடு திரிந்தார்.  ஒரே நல்லகாரியம் ரஜினி கொடுத்த ஸ்டேட்மெண்டினால் புகைப்பதை விட்டுவிட்டார்.

சந்திரமுகியிலிருந்து ரசிகர்மன்றப் பொறுப்பு மேலக்குளம் சந்தானகுமார் கைகளுக்கு மாறியது. ரசிகர் ஷோ முதல் ராம் தியேட்டர், பாம்பே தியேட்டர் வரை பேனர் கட்டுவது வரை எல்லாவற்றிலும் நவீனயுக்திகள் புகுத்தப்பட்டது. முருகன்குறிச்சி பெட்ரோல் பல்க் பக்கம் வைத்திருந்த தட்டி விளம்பரத்தில் முன்னாள் செயலாளர் ரஜினிமுருகன் எழுதாத காரணத்தால் அண்ணன் வலுக்கட்டாயமான  ரிடெய்ர்ட்மெண்டுக்கு தள்ளப்பட்டார்.

குசேலன் ஊற்றிக்கொண்டபோது ரஜினி ரசிகர்கள் கிளைச்சங்கங்கள் பெருகிவிட்டிருந்தது. ரஜினி-விஜய் ரசிகர் மன்றம், ரஜினி-அஜீத் ரசிகர் மன்றங்கள் என்று புது போர்டுகள் ஆட்டோ ஸ்டாண்டுகளில் முளைத்துக் கொண்டிருந்தது.

மீண்டும் மளிகைக்கடை முருகனாக்கப்பட்ட ரஜினிமுருகன் தன்னைப் புறக்கணித்திருக்காவிட்டால் குசேலன் படம் பிசிறு கிளப்பியிருக்கும் என்று ஆத்மார்த்தமாக நம்பிக்கொண்டிருந்தார். தலைவருக்கு இப்போதைக்குத் தேவை ஒரு சில்வர் ஜூப்ளி என்பதில் மட்டும் எல்லாருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது.

மாஸ் ஓப்பனிங்காக சிவாஜி அறிவிப்பு வந்ததும் கூடைகூடையாக அண்ணாச்சி முகத்தில் சன்லைட் வெளிச்சம். படம் பட்டையைக் கிளப்ப வீரா நற்பணிமன்றம் புதுப்பிக்கப்பட்டு சிவாஜி ரசிகர் நற்பணிமன்றமானது.

ரோபோ அறிவிப்பு வெளியான சமீபத்திலே திடீர் உடல்நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு தலைவரைக்கொண்டு சென்றபோது ராணி மளிகைக்கடை மட்டுமல்ல தெருமுனை டீக்கடையில்கூட ஒரே பிரார்த்தனை கீதங்களாகவே ஒலித்துக்கொண்டிருந்தது. வாடிய மலரைக் கண்ட வள்ளலார் போல ஒவ்வொரு ரஜினி ரசிகரும் முருகன் அண்ணாச்சியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

“எம்.ஜி.ஆர் மாதிரி தலைவர் நிச்சயம் திரும்ப வருவார் பாருடே” என்று எல்லாருக்கும் தைரியம் சொல்லிக்கொண்டு இருந்தார் ரஜினி முருகன். தந்தி, மாலைமுரசு எதையும் விடாமல் தலைவர் பத்தின செய்திகளைத் தேடித் தேடி சேகரித்தார். தலைவருக்கு பி.ஏ. யாரும் இருந்தால் அவருக்குக்கூட தெரியாத தகவல்களை முருகன் அண்ணாச்சி தெரிந்துவைத்திருந்தார் அல்லது அப்படித்தான் ஊர் அவரை நம்பிக்கொண்டிருந்தது.

உடல்நலம் சீராகி  எந்திரன் சூட்டிங் தொடங்கியதுதான் தாமதம் ரசிகர்மன்றத்து ஆட்கள் எல்லோருமே ராக்கெட் வேகத்தில் பரபரக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஐஸ்வர்யாராய் சோடி சேர்ந்தது வேறு பெரியசாதனையாகப் பேசப்பட்டது.

மீண்டும் சின்ன இடைவெளிக்குப் பிறகு கோச்சடையான் ரிலீசான நேரத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ரஜினி முருகன் அண்ணாச்சி ஆள் ரொம்பவே மாறிப்போயிருந்தார்.  “என்னண்ணே தலைவர் படம் இப்படி  பொம்மபடம் மாதிரி இருக்கு?”

"உடம்பு முழுக்க ஒயரும் கியருமா கண்ட எடத்தில சொறுவி தலைவர ஏமாத்திட்டானுங்க.. எல்லாம் இந்த கே.எஸ் ரவிக்குமாரு பய பாத்த வேல. அவம் கமல் ஆளுல்லா" என்றார். கே.எஸ்.ஆர் தசாவதாரத்தில் கமலை உலகநாயகனேன்னு பாடிய கடுப்பு அவருக்கு. பழைய பங்காளிச் சண்டைபோல கமல் ரசிகர்களுக்கெதிரான பகையுணர்ச்சி அவருக்குள் லேசாக ஒட்டியிருந்தது.

"அடுத்தபடம் லிங்காவுக்கு அவர்தாம்ண்ணே டைரக்டர். இப்போ என்ன சொல்லுதீய" ரஜினி முருகன் அண்ணாச்சி முகத்தில் ஈயாடவில்லை. தலைவர் ஏன் இப்பிடி தப்புத்தப்பா முடிவெடுக்கார்ன்னு தெரிலே. அவரைப்பாக்கவும் முடியுறதில்ல. நேத்து மழைல மொளைச்சதெல்லாம் தலைவர் படத்தை கிண்டல்பண்ணுதுவோ” என்று என்னென்னவோ புலம்பினார்.

 ஆனாலும் புத்தாண்டு தினத்தில் பாம்பே தியேட்டரில் இடைவேளைவரைக்குமான பாதிப்படமும் இருபது பாடல்களும் போட்டு நடத்திய  ஸ்பெசல் ஷோவில் போய் குத்தாட்டம் ஆடி தன் புதுவருடக் களிப்பைக் கொண்டாடித் தீர்த்தார். இன்ப அதிர்ச்சியாக ராகவேந்திரா இல்லத்திற்கு வெளியே வந்து நின்று  தலைவர் கையசைத்து புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன சேதி பேப்பரில் வந்ததும் சென்னையில் இல்லாமல் போனதை எண்ணி உண்மையாகவே கண்ணீர் உகுத்தார். அவரைப் பொறுத்தவரை நல்லநாள் என்றால் அது தலைவரோடுதான்.

 ராணியக்கா -ரஜினிமுருகன் தம்பதிகளின் பிள்ளைகளான ஐஸ்வரியா சௌந்தர்யா இரண்டுபேரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டுபேரில் ஒருத்தி சூர்யாவையும் இன்னொன்று விஜயையும் கட்டுக்கொண்டு அழுகிறது என்று பேச்சுவாக்கில் திட்டிவிட்டு ரிமோட்டைக் கையிலெடுத்து சன் மியூஸிக்கிற்குத் தாவினார். திரையில் ”காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்…” என்று குறுக்குமறுக்காக வெள்ளைக் கருப்பு கட்டம்போட்ட சட்டையில் ரஜினி பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டபடி நடந்து கொண்டிருந்தார்.

ரஜினி என்ற ஆனந்த ஜோதியில் கரைந்துவிட்ட முருகன் அண்ணாச்சியிடம் அதற்குமேல் நீங்களோ நானோ என்ன பேச்சுக்கொடுத்தாலும் அது அவர் காதில் விழாது.

நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில், ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால், உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்ல வா......-கார்த்திக்.புகழேந்தி
03-10--2015.

Comments

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர். நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம். “காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம். உழுவதற்…

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 
அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக…

அவளும் நானும் அலையும் கடலும்

மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு.
முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள்.
*
இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?” என்ற அவளுடைய…