ஆச்சி மனோரமா



நேற்றைக்கு காலையில் ஒரு கனவு. சொந்த ஊரில் ஒரு திருமணத்திற்குப் போயிருக்கிறேன். ஏதோ கலாட்டாவில் திருமணம் நிற்கிறது. கடைசியில் இந்த கார்த்திக் புகழேந்தியை மாப்பிள்ளையாக்கி விடுகிறார்கள். தூங்கி முழித்ததும் காயத்திரி யிடம் கனவைச் சொன்னதும்,"தூக்கிப் போட்டு மிதிப்பேன்" என்றது. அது சரி அவாளுக்கு அவா பிரச்சனை.

கதையின் கான்செப்ட் தேவர்மகனில் சுட்டதாகப் பட்டது. அட வெக்கங்கெட்ட கனவே நீ கமலிடமே காப்பியடிக்கிறாயா என்று ஒரே தர்மசங்கடம். ஆனால் கனவில் தாலி எடுத்துக் கொடுத்தது ஆச்சி மனோரமா. தேவர் மகனில் ஏது ஆச்சி என்று நினைத்தபடி விசயத்தை விட்டுவிட்டேன்.

நள்ளிரவில் ஆச்சி இறந்ததாகச் செய்தி வந்தது. இல்லை இவனுங்க வதந்தியா இருக்கும் என்றேன் பதிலுக்கு. கூடவே கனவைச் சொன்னதும். கல்யாணக் கனவு கண்டா சாவு விழும் தானே என்றாள்.

சாவு விழுந்தால் தானே கல்யாணக் கனவு வரும் என்று குழம்பினேன். இப்பவும் ஜாம் பஜார் முனையில் வண்டியைத் திருப்பும் போதெல்லாம். "நா ஜாம்பேட்டை ஜக்கு ; நீ சைதாப்பேட்டை கொக்கு" என்ற பாட்டை முணுமுணுக்காமல் இருந்ததில்லை.

தாய்க்கிளவி நிஜமாவே இறந்து போச்சி என்பது மண்டைக்குள் ஏறமாட்டேங்குது. அந்த சிவப்புச் சேலையில் சிரித்த முகமாய் உக்கார்ந்திருந்த அம்மன் செலையல்லவா அவள்.

-கார்த்திக்.புகழேந்தி
11-10-2015

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil