எங்கதெ - இமையம்






நேற்றைக்கு கணையாழி வாசகர் வட்டம் அமர்வுக்குச் சென்றிருந்தோம் நானும், நண்பரும். "எங்கதெ" நாவல் குறித்துப் பேசினார்கள்.
அந்த நாவலே விநாயகம் என்ற தனிமனிதன் தன்னந்தனியே பேசிக்கொண்டே போவதால் அதைப்பற்றித் தனியாகப் பேச ஒன்றும் சிக்காது என்பதுதான் உண்மை. கூடியமட்டும் கதையின் காலகட்டம், அண்ணன் தங்கை உறவுகள் இதையெல்லாம் மெச்சலாம்.

ஊருக்குள் இட்டுக்கட்டிப் பேசுதல் என்பார்களே! அப்படித்தான் இந்த நாவலை வாசித்து நமக்கு என்ன தோன்றியதோ அது எல்லாம் கருத்துகள். என்ன இருக்கனும் என்று நினைக்கிறோமோ அதி எல்லாம் விமர்சனங்கள் என்று ஆகி விடுகிறது. பேசுபவர்களிடையே, இது ஒரு "நீண்ட புலம்பல்" என்ற வார்த்தையை நிறைய தடவை இலைமறையாகக் குறிப்பிட்டதைக் கேட்கமுடிந்தது.

எனக்குச் சந்தேகமாக இருந்தது வீட்டுக்குத் திரும்பினதும் திரும்ப எடுத்து வாசித்துப் பார்த்தேன் புலம்பல் சலிக்காமல் கேட்க முடிந்தது. சாதாரணமாக புலம்பல்களை இப்படி திரும்பத் திரும்ப கேட்டால் எரிச்சல் வந்துவிடும் இங்கே அது நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் கமலா ருசிக்கிறாள். அவ்வளவுதான் வேறு சொல்ல ஒண்ணுமில்லை.

விநாயகத்தின் குரலில் கமலாவை உருவகம் செய்யுபோது எனக்கு ரெட்டியார்பட்டியில் குடியிருக்கும் போது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணொருத்தர் நினைப்பில் வந்தார். அப்போ அவர் இவர் என்றெல்லாம் சொல்லமாட்டோம்.

மூணாம் வீட்டுக்காரி அவ்வளவுதான். அவருக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் என்னவோ படித்துக்கொண்டிருந்தான் அப்போது. என்னை விடச் சின்னப்பயல். அவன் வயதுப் பையன்கள் யாரும் அவனை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்பது மட்டும் தெரியும்.

அந்த பெண்ணுக்கு புருசனில்லை. கருக்கலில்  பாளை பஸ் ஸ்டாண்டில் வெளியூர் பேரூந்து நிறுத்தும் வெளிவாசலில் கையில் ஒரு ஹேண்ட் பேக்கோடு நின்று கொண்டிருப்பார். அப்போ
திருநெல்வேலி புதுபஸ் ஸ்டாண்டெல்லாம் வேய்ந்தான் குளம்தான்.

ஒருநாள் எனக்குச் சைக்கிள் ஓட்டச் சொல்லிக்கொடுத்த குட்டி என்ற நண்பன் தான் சொன்னான். "அவ மத்தமாதிரி தொழிலுக்குப் போறவான்னு"
கோயில் கொடை வந்தால் அவர் வீட்டில் வரி வாங்க மாட்டார்கள். படைப்புச் சோறு போகாது. நாராயணன் கோயில் பூ அந்த வீட்டு பக்கம் எட்டிப்பார்க்காது. பகட்டுக்கு அவரை ஊரே ஒதுக்கி வைத்திருந்தாலும் சங்க கட்டிடத்துக்கு வாடகை வாங்குபவரோடு இருந்த பழக்கத்தால் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அம்பாசமுத்திரத்திலிருந்து செங்கோவி இழுத்துவிட்ட நெற்றியோடு ஒருத்தர் அவர்வீட்டுக்கு சனிக்கிழமைகளில் வந்து போவார். அவர் வருகிற தினத்தில் சிவப்பு டவுசரில் அந்தப் பெண்ணின் மகனும், மூக்கு ஒழுகும் அவன் தங்கையும் ஆட்டுரலில் வெளிப்பாதை வேம்புமர நிழலடியில் உட்கார்ந்திருப்பார்கள்.

"ச்சை வயசுக்கு வந்த பிள்ளைய வீட்டுல வச்சுட்டு வாழ முடியுதா கண்டது தெனத்துக்கும் கால விரிச்சுட்டு அலையுதுவோ" என்று மீன்குழம்புச்சட்டியை அலசின தண்ணீரை வேண்டுமென்றே அந்த பெண்ணின் வீட்டு வாசலுக்கு விசிறி காரி உமிழும் நாலாம் வீட்டுக்கார சுப்பம்மக்கா. எங்களுடையது முதல்வீடு.

ஒருநாள் செங்கோவி குடித்துவிட்டு வாய்த்தகறாறு ஆனதில் கைசரசம் முற்றிப்போய், அந்த பெண்ணைப்போட்டு அடித்ததில் காது அறுந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அதே சுப்பம்மக்காதான் செங்கோவியை "ஒழுங்கா காம்பவுண்ட விட்டு வெளில போலன்னா போலீசில புடிச்சி கொடுத்துருவேம்" என்று செங்கோவியை மிரட்டி விரட்டியது.  மறுநாளைக்கெல்லாம் சங்கக் கட்டிடத்து ஆள் வந்தார். தடபுடலாய் என்னென்னவோ பேசி வீட்டக் காலிபண்ணாமல் இருக்க மட்டும் வழிபண்ணிவிட்டுக் கிளம்பிப்போனார்.

நாலு மாசம் கழித்து செங்கோவி இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டோடு வந்து டவுசர் பையனிடம், "அம்மா எங்க போயிருக்கா" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

ஊருக்கே அந்த பெண்ணைத் தெரியும். எல்லாராலும் ஒதுக்கப்பட்டவளாக அதே நேரம் யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்து வந்தவள். ஒதுக்குவது மாதிரி ஒதுக்கினாலும் எல்லார் கண்களும் அவள்மேல்தான் புரண்டுகொண்டிருந்தது.

அவள் அவர்களில் எவரையும் நேசிக்கவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. தன் பிள்ளை பிழைப்பு அப்புறம் எப்பவாது வரும் செங்கோவி.
இங்கே தான் "எங்கதெ"யில் வரும் கமலாவையும், பெயர் தெரியாத அந்தப் பெண்ணையும் பொருத்திப் பார்த்துக் கொண்டது.
குட்டி சொல்வான் "அவள் வீட்டுலகட்டுக்கட்டாக பணம் இருக்குமான்டா"

"உனக்கு யாருல சொன்னா"

"எங்காச்சி சொன்னிச்சி"

எப்ப எதைக் கேட்டாலும் ஆச்சி முந்தானையை தான் இழுப்பான். இததனைக்கும் அது ஒரு ஊமைக்கிளவி.
சில தடவை மூணா வூட்டுக்காரிக்கு பொறந்தவனே என்று தன்னை அடித்த ஆவின் பண்ணை டிரைவர் எவனையாவது ஏசவும் செய்வான் குட்டி.
பூக்கொடுக்காத நாராயணன் கோயில் பூசாரி, வரி வாங்காத ஊர் தலைவர் எல்லாருமே ' ஏ ' காலனிக்கு அவள் நடந்து போகும் போது பின்னாலே சைக்கிளில் துரத்திப் போய் நூல்விட்டுப் பார்த்ததுண்டு.
இப்படி ஆளாளுக்கு அவள்மேல் ஒரு இச்சையும், சுடுசொல்லும்
அவள் மேல் இருக்க அம்பைக்கார செங்கோவிக்குத் தான் அவளைப் பற்றி உள்ளது தெரிந்திருக்கும்.

அந்த இடத்தில் "எங்கதெ" விநாயகத்தை உட்கார்த்தி மூணாவது வீட்டுக்காரி பத்திச் சொல்லேன் என்று கேட்டால் அவன் என்னென்ன சொல்லி இருப்பானோ அதுதான் எங்கதே. இப்படி இருக்கும்போது. அவன் கதைக்கு என்ன விமர்சனத்தைச் சொல்லமுடியும. கூட நாலு வார்த்தை எடுத்துப் போட்டு அவன் கதை இது என்று இன்னொருத்தருக்குச் சொல்லலாம்.

ஆக, கதைக்கு கண்ணு மூக்கு வாய் எல்லாம் சொல்பவனும் கேட்பவனும் சேர்ந்து உருவாக்கிக் கொள்வது. கதை முடியும் போது உருவம் கடலில் கரைந்துவிடும். கதை மட்டும் மனதில் தங்கிவிடும்.
அந்தக் கதையை "இதே மாதிரிதான் எங்க ஊர்ல.... " என்று மேலே நான் சொன்னது போல, இன்னொரு புள்ளியிலிருந்து கோடிழுக்கலாம். எங்கதே அதைத்தான் செய்கிறது.

பேச்சுமொழி குறித்து பல மெத்தப்படித்தவர்களின் அசூயையைத் தாண்டி இமையம் அவர்களின் மொழி வாசிப்புக்கு லேசானதாகப் படும் எப்போதுமே. எங்கதேயும் அப்படித்தான். கோவேறு கழுதைகள் வாசித்தது
முதல் அப்படித்தான் உணருகிறேன்.

அதுபற்றி கூட்டத்தில் அவரிடமே உங்கள் கருத்து என்னவென்றும் கேட்டேன்.
"இந்த மீடியாக்கார கிறுக்குப்பயலுங்க பண்ற வேலை" என்று பொட்டில் அடித்தார். அது சரி எழுதுகிறதைப் பேசுறதில்லை. பின்னே பேசுவதை எழுதும் போது என்ன பித்தலாட்டம்.

இமையம் அண்ணன் தடாலடி கருத்துக்காரர். தனக்குப் பட்டதை மண் கலயத்தை உடைப்பது போல பொட்டென்று உடைத்துவிடுவார். இங்க எவனுக்கும் வாசிக்கத் தெரியலடா தம்பிங்கும் போது... நல்ல எழுத்தையும், வாசிப்பையும் கத்துக் கொடுக்கலை இங்க இருக்கும் மேதைகள் என்ற தொனியில் தான் அது எனக்குக் கேட்டது.



-கார்த்திக் புகழேந்தி.
20-09-15

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil