கடாரம் கொண்டான் : கடாரமும் தமிழகமும் - டத்தோ .வீ. நடராஜன்.
ஒருவாரம் முன் டத்தோ.வீ.நடராஜன் அவர்களை ஹோட்டல் அபி
பேலசில் சந்தித்த பதிவோடு அவரோடு ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடி செய்யட்டுமா
நண்பர்களே என்று பதிந்த வேகத்தில் நேற்றைக்கு, (08-06-2015) சமூக ஆய்வு வட்டம்
சார்பில் ஏழாவது நிகழ்வாக பனுவலில்,
“கடாரத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு” என்ற தலைப்பில் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான் ஓய்ந்தார் பேராசிரியர். ஆ.பத்மாவதி அவர்கள்.
“கடாரத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு” என்ற தலைப்பில் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான் ஓய்ந்தார் பேராசிரியர். ஆ.பத்மாவதி அவர்கள்.
நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்னே வீட்டுக்கு
அழைத்திருக்க, தெற்குச் சீமையின் ருசியோடு புளிப்பும் உரைப்புமாக
உருண்டைக்குழம்பும் சோறும் தின்று, திரு. நடராஜன் அவர்களது புத்தகம்
பற்றியும், வேளாண்துறை இயக்குனர் திரு. இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றியும்
நிறைய தகவல்களைச் சொன்னார்.
வீட்டுக்கு வந்ததும் கடாரம் பற்றி கொஞ்சம் தேடிப்
படித்ததில் பட்டினப்பாலையின் “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் பாடலில் வந்த
காழகத்து ஆக்கமும் என்ற வரி கடாரத்தைக் குறிக்கிறது என்பது போலான தகவல்களை கொஞ்சம்
அறிந்து, இராஜேந்திர சோழனையும், கடாரத்தையும் இணைக்கும் இந்த கருத்தரங்கில்
கலந்துகொள்வதின் பேரார்வத்தில் இருந்தேன்.
திங்கள்கிழமை மாலையில் ஏற்பாடாகியிருந்த நிகழ்வுக்கு
பனுவல் அரங்கில் எதிர்பார்ப்புக்கு அதிகமானவர்கள் திரண்டிருக்க, ஜோ டி குரூஸ்
(கொற்கை), அந்திமழை. திரு.அசோகன், வரலாறு டாட்காம் தளத்தின் காரணகர்த்தா,
இப்படி இன்னும் பல முக்கியமானவர்கள் திரண்டிருக்க நிகழ்ச்சி ஏழுமணியளவில்
தொடங்கியது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான பேரா. பத்மாவதி அவர்கள்
வரவேற்றுப் பேச, நிகழ்ச்சித் தலைமையேற்ற, திரு. இராஜேந்திரன் IAS அவர்கள் சோழர்கள்
பற்றிய அறிமுகத்தோடு, டத்தோ.வி.நடராஜன் அவர்களை அறிமுகம் செய்து கருத்தரங்கைத்
தொடங்கி வைத்தார்.
மைக்கை விட என்குரல் உங்களுக்கு நன்றாகக் கேட்குமென்று
நேரடியாக தன் பேச்சைத் தொடங்கினார். கடாரம் என்பது தற்போதைய மலேசிய
தீபகர்ப்பத்தின் பூஜாங் பள்ளத்தாக்கு என்றும், அதற்கு சுவர்ண பூமி என்று
பெயருள்ளதையும் கடற்பயணியான பெரிப்ளூஸ் முதன்முதலாக சுவர்ணத்தீவென்று அழைத்தைதையும், அங்கே
செய்யப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்களையும் விளக்கினார்.
பின் பவர்பாய்ண்ட் விளக்கக் காட்சிகளுடனும்,
வரைபடங்களுடனும் சோழக் கப்பல்களான மரக்கலம், தோணி, கலவம், வெடி மற்றும் படகு ஆகிய
வகைகளையும், பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாய்மரங்களையுடைய
கப்பலுக்கு வழிகாட்டும் பறவைகள் சின்னமிட்ட நாணயத்தையும், பருவக்காற்றை
பயன்படுத்தி பயணங்களை மேற்கொண்டதையும் விளக்கினார்.
கடாரத்தில் இந்திய வாள்கள் தயாரிக்கப்பட்டதாகக்
கிடைத்த குறிப்புகளைச் சொல்லி, தொல்பொருள் ஆய்வில் அங்கு கிடைத்த மூன்று இரும்பு
உருக்கும் கொப்பரைகளின் படங்களைக் காட்டினார். கடாரம் என்பதற்கு என்ன பொருள்
என்று தேடிப்பாருங்கள் இரும்பு என்று பொருள் உள்ளதென்று சொன்னார்.
வீட்டுக்கு வந்ததும் ‘அபிதான சிந்தாமணியிலும்’, ‘பிரிட்டானிகாவிலும்’
தேடிப்பார்த்தேன் கடாரத்திற்கு கடாகம்- கிணறு, பெருங்கொப்பரை, கடாரம் -
கருமை கலந்த பொன்மை (இரும்பு) என்ற பதில் கிடைத்தது.
இராஜேந்திர சோழன் கடல்கடந்து செய்த வணிகத்தையும்,
வணிகத்தின் பொருட்டு கிழக்காசிய நாடுகளின் மீதான படையெடுப்பையும், ஆட்சி பரிபாலனம்
செய்யாமல் அந்தந்த நாட்டு மன்னனையே ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி கப்பம் செலுத்த
வைத்த வரலாற்றையும், இதன்மூலம் மக்களிடம் நிகழ்ந்த நாகரீக, பண்பாட்டு
மாற்றங்களையும் அதன் பின் வரலாறுகளையும் இலக்கிய ஆதாரங்களோடும்,
ஆய்வுகளில் கிடைத்த சான்றுகளோடும், சீன, அரேபிய, மலேசிய நூல்களில்
கிடைக்கும் ஆதாரங்களோடும் மேற்கோள் காட்டினார்.
(படங்கள் கீழே)
தொல்பொருள் ஆய்வில் கிடைத்த பல்லவ கிரந்த
கல்வெட்டுகளும், நாணயங்களும், சோழர்காலச் சிலைகளும், தமிழகத்தில் செய்து
கடாரத்திற்குச் சென்ற மணிகள் செதுக்கப்பட்ட கற்தூணின் ஒரு பகுதி, கரும்பு,
தானிய அரவை கல் யந்திரங்கள் என பல சான்றுகளை திரையில் காட்ட சட்டம் படித்துவிட்டு
வரலாற்று ஆய்வாளராக மாறி, "Bujang Valley the wonder that was ancient
Kedah " என்ற நூலினை எழுதி, (தமிழில் : சோழர் வென்ற கடாரம்)
மலேஷிய மன்னரால் “டத்தோ” எனப் பட்டம் பெற்ற திரு. வீ.நடராஜன் அவர்களின்
நீண்டகால ஆய்வும் உழைப்பும் அளவில்லாத தேடலும் திகைக்கவே செய்தது.
இந்தியர்கள் வணிகம் செய்த அளவுக்கு வரலாறு எழுதாததின்
கோபம் அவருக்கு இருக்கிறது. மலேஷிய நாட்டின் மன்னர்களை “துங்க்” என்று
அழைப்பது ( எ.கா : குலோத்துங்க ) சோழர்களோடான தொடர்பின் அடிநாதம் என்ற ஊகத்தை
நிரூபிக்க சான்றுகள் இல்லாத வருத்தத்தை அந்த கோபமே கடத்துகிறது. இன்றும் மலேஷிய
மன்னர்கள் வரவேற்பின்போது பின்னே வாசிக்கும் வாத்தியங்கள் மிருதங்கமும்
நாதஸ்வரமும் தான் ஆனால் இது தமிழ்நாட்டின் வழக்கம் எனச் சொல்லமுடியாத சூழல் என்று
பல தகவல்களைப் பேச்சுவாக்கில் வீசிச் செல்கிறார்.
சோழர்கள் மீதும் வரலாற்றில் கடற்பயணங்கள் மீதும்
ஆர்வம் கொண்டவர்களுக்கு நேற்றைய இந்த கருத்தரங்கு மிகப் பயனுள்ளதாகவே அமைந்தது
என்பதை ஒவ்வொருவர் குறிப்பேடுகளும் நிறைந்ததில் கண்டுகொள்ள முடிந்தது.
கேள்விகளுக்கு பதிலளித்த பின், ஒருங்கிணைப்பாளர்
பத்மாவதி அவர்களுக்கு நிபைவுப்பரிசு மடலை டத்தோ.வீ. நடராஜன் அவர்கள் வழங்கினார்.
திரு.சௌந்தர் ராஜன் அவர்கள் சோழர்கள் பற்றிய ஆய்வரங்கத்திற்கு பல்துறையைச்
சார்ந்தவர்களிடமும் ஒத்துழைப்பு கேட்க, நிகழ்வின் இறுதியில் நான் சமூக
ஆய்வுவட்டத்தின் சார்பில் நன்றி தெரிவிக்க கருத்தரங்கம் இனிதே நிறைவு
பெற்றது.
நிகழ்ச்சி முடிந்தபின், பேராசிரியர், அமுதரசன் மற்றும்
பரிசில் செந்தில்நாதன் ஆகியோர்களிடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்
பனுவலில் இன்னும் சில நாட்களில் கல்வெட்டு எழுத்துகள் கற்பிக்கும்
வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுமென்று அறிகிறேன்.
ஒரு புத்தகக் கடை என்பதையும் தாண்டி பனுவலின் ஒவ்வொரு
இயக்கமும் ஆச்சர்யங்கள் மிகுந்தது. பிலிம் சொசைட்டி தொடங்கிவிட்டார்கள்.
வாரம்தோறும் திரைப்படங்கள் திரையிடுவதற்கான முயற்சியில் ஆட்சேர்க்கை நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றது. இந்தவாரம் சேகுவேராவின் 87வது பிறந்தநாளில்
இருந்து பனுவல் பிலிம் சொசைட்டி இயங்கத் துவங்குகிறது. முகுந்தனிடம் மல்டி ப்ளக்ஸ்
எப்போது துவங்கப் போகிறீர்கள் என்று கேட்டு வைத்திருக்கிறேன்.
ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்திவிட்டு ஆண்டு முழுதும் வாங்கும் புத்தகங்களுக்கு 10% சலுகையும், தமிழில் முக்கியமான மற்றும், தரமான காடு சூழலியல் இதழின் ஓராண்டு வெளியீடுகளும் தருகிறார்கள். அதைவிட முக்கியமானதென்னவென்றால் ஓராண்டு நிறைவு பெற்றதும் செலுத்திய முன்பணத்திற்கு புத்தகமாக வாங்கிக் கொள்ளலாம்.
வாழை, புத்தக நிலையம், வாசிப்பு வட்டம், வரலாற்றுப் பயணங்கள், சுற்றுச் சூழல் இதழ்கள் / புத்தகங்கள், இயற்கை அங்காடி, வகுப்புகள் பிலிம் சொசைட்டி என்று பனுவலின் ஒவ்வொரு அடியும் முக்கியமான அத்தியாயங்கள். யாரும் செய்யாததைச் செய்கிறோமென்றெல்லாம் ஆர்ப்பாட்டமின்றி தங்களால் ஆனதைத் தயங்காமல் செய்கிறார்கள்.
அதற்காகவே வாழ்த்தவும் ஒத்துழைக்கவும் கடமைப் பட்டுள்ளோம். வக்கனையாக இணையத்தில் மட்டும் சமூகசீர்திருத்தம் பேசி என்ன பயன் ?இயங்குபவர்களுக்கு ஒரு துரும்பையும் அசைத்துக் கொடுக்காமல்.
இதேவாரம் பட்டாம்பூச்சிகளின் திருவிழா என்று குழந்தைகளுக்கான தொடர் நிகழ்வுகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இயக்குனர் ராம் கலந்துகொள்ள (13.06.2015) ஓவியம், திரையிடல் என்று குழந்தைகளுக்கான கலை வளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழர்!
.
-கார்த்திக்.புகழேந்தி
09-06-2015.
![]() |
டத்தோ.வி நடராஜன் |
![]() |
டாக்டர். இராஜேந்திரன். IAS., இயக்குனர் வேளாண் துறை. |
![]() |
பேராசிரியர். ஆ.பத்மாவதி |
![]() |
ஜோ டி குருஸ்![]() |





















- நன்றி-
செம கார்த்திக். எனக்கும் இந்த மாதிரி விஷயங்கள் நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கு.
ReplyDelete