உப்பு புளி மொளகா....



தோழமை ஒருவரோடு வாட்சப்பில் பேசிக்கொண்டிருந்தேன். நகரத்து உணவு விடுதிகளில் பதார்த்தங்களை,“ ஸ்டார்ட்டரில் தொடங்கி டெசர்ட் வரைக்கும்” விதவிதமாக விரும்பிச் சாப்பிடும் அனுபவத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தார்.

விதவிதமாகச் சமைக்க ‘மட்டுமே’ தெரிந்து வைத்திருந்த தலைமுறைப் பெண்கள் தனக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்து விரும்பிச் சாப்பிடுவதைப் பற்றி பெருமையாக சொல்லும் போது கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. காலம் எவ்வளவு மாறிவிட்டது என்றேன்.

ஆமாம், சமைக்க மட்டுமே தெரிந்தவர்கள் சாப்பிட மட்டுமே தெரிந்தவர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறோம் என்று புன்னகைக்க வைத்தார். ஏதோ வென்னீரில் கொதிக்கவிட்டு இந்த மேகி மட்டுமாவது கைகொடுத்து வந்தது அதுவும் போச்சு என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது.

நிஜம் தான். வருங்காலங்களில் அம்மாவின் சமையலை சிலாகிக்கும் குழந்தைகள் அரிதாகிவிடுவார்களோ என்னவோ. ஒரு ஹைக்கூ படித்தேன். “விமானங்களை அனாயசமாகவும் பட்டாம்பூச்சிகளை ஆச்சர்யமாகவும் கடக்கும் நகரத்துக் குழந்தைகள்” என்று.

புதிதாய் திருமணமான அத்தனை மாப்பிள்ளைகளையும் நமட்டுச் சிரிப்போடு வீட்டில் சமையல் எல்லாம் எப்படி என்ற கேள்வி உதிர்க்கிறோம் தானே. உப்பு குறைவாகவும், உளுந்து கூடுதலாகவும் என்று தினம் ஒரு சுவைகளில் உணவு சமரசங்களோடு படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அஷ்டகோணலாய் முகத்தை வீட்டில் மட்டும் சுளித்துவிட்டு ஆபீசில் மனைவி சமையலை பொறுத்துக் கொள்கிற கணவன்கள் தியாகிகளேதான். இந்த தியாகம் அன்பை வளர்க்கும்.

நல்லவேளையாக மேன்சன் காலத்தில் எனக்கும் மணிகண்டனுக்கும் கூட வாய் ருசிக்குச் சமைக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாம் இந்த உப்பு, காரம் கொண்ட சைவ,அசைவ சமாச்சாரங்களில் தான். அம்மா வைப்பது போல ஒரு சாம்பார் வைக்கவேண்டுமென்றால் திண்டாடித்தான் போகிறோம்.

பிரகாஷ்ராஜ் நடித்த ”உன் சமையலறையில்” திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். ‘இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது” விட்டால் நாள் முழுக்க அந்த பாடலைப் பார்த்தே ருசியாறிக் கொள்ளலாம்.

சின்னவயதில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது
தண்ணீர் குடிக்கச் செல்லும் டீக்கடையில் நண்பன் ஐய்யப்பனின் சித்தப்பா வெங்காய வடை சுடும் வாசத்தில் மயங்கி அங்கேயே நின்று கொண்டிருப்பேன். நாங்கள் வசித்த தெருவிற்கு ஒரு வாசமுண்டு.
சனிக்கிழமைகளில் எல்லா வீடுகளிலும் மீன்குழம்பு வாசமடிக்கும். ஞாயிற்றுக்கிழமை ஆடு, கோழிக்குழம்பு வாசம்.

என் கை மணக்குதா இன்னைக்கு எங்க வீட்டில் இன்ன குழம்பு என்று பெருமை பீத்திக்கொண்ட பொடிப்பயல்களாக வாழ்ந்து தீர்த்ததை இன்னுமொருமுறை நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. தெருமுனைவீட்டில் ராஜி அக்கா குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டு மீன்குழம்பு வாசம் இதோ இந்த வார்த்தையை எழுதும் போதே பசியைப் புரட்டுகிறது.

ராஜி அக்கா போலச் மீன்குழம்பு வைக்கும் பெண்ணாகப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால் விதியின் விளையாட்டு மீன்குழம்பு மாத்திரம் நன்றாக வைக்கத் தெரிந்த பெண்ணை அனுப்பி வைத்துவிட்டார். பாத்திரம் கூட நாம் தான் தேய்க்க வேண்டும் போல..

ஒரு காலத்தில் பெண்குழந்தை பிறப்பே சாபம் என்று கருதப்பட்டுக் கொண்டிருந்தது. நான் சொல்லும் ஒருகாலம் பிந்தைய வேத காலம் வர்த்தமானருக்கும் புத்தருக்கும் முன்பிருந்த காலம்.
(கி.மு 1000முதல் 600வரை).

ஆனால் அன்றைக்கே காத்யாயினி, கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் மேதைகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். அதுபோல சமையலைக் குற்றஞ்ச் சொல்வது போல நான் பேசிக் கொண்டிருக்கையில் எங்காவது அட்டகாசமாய் சமைக்கும் இக்காலப் பெண்கள் அஞ்சறைப் பெட்டியின் வாசனையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு வாக்கப்படப்போகின்றவர் பாக்கியவான்.





- கார்த்திக் புகழேந்தி
27-06-2015.

Comments

  1. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. சிந்தனையைத் தூண்டிய பதிவு...படித்தவுடன்...'நெசமாலுமே இல்ல...!?" என்று தோன்றியது...! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. அருமை நண்பரே....

    வலைச்சரத்தில் இந்த வாரம்.... உங்கள் வாரம்! - வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. ரொம்பவே சுவைத்தோம் உங்களின் இந்தப் பதிவை....ரொமப்வே வாசனை இங்க வரை வீசுது...ஆமா என்ன வாசனை?!!!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil