வெட்டும்பெருமாள் - சிறுகதை




               துநாள் வரைக்கும் எழுதிக் கிழித்ததில் உருப்படியாக ஒரு கதையைக் காட்டு பார்க்கலாம் என்று யாராவது கேட்டால், சட்டென்று ஒருகனமும் தயங்காமல் வெட்டும்பெருமாள் சிறுகதையைக் கொடுத்து படித்துவிட்டுச் சொல்லுங்கள் என்பேன்.. ஆம், அந்தக்கதை எனக்குச் செய்த காரியங்கள் ஒன்றிரண்டல்ல ஏராளமானவை. 

 அசமந்தமாக இருந்த ஒரு சாயங்காலப் பொழுதில் கணினியின் முன்னால் உட்கார்ந்துகொண்டு மனதுக்குள் ஓடிய வெட்டும்பெருமாளின் கதையை எழுதி முடித்தேன். கதை முடிவை நெருங்கும்போது நள்ளிரவு தொட்டிருந்தது. எப்போதுமே என்ன கதை எழுதப்போகிறோம் என்ற முன்முடிவுகள் ஏதும் வைத்துக்கொள்ளாமல் ஒரு சொல்லி இருந்து தொடங்குவது என் பழக்கம். கதாப்பாத்திரங்களின் பெயர்களாக அன்றைக்கு புத்திக்குள் வந்தவர்களைத் தேர்வு செய்துகொள்வது. இப்படித்தான் இப்போதும் வண்டி ஓடுகிறது.

சரி கதைக்குவருவோம். வெட்டும்பெருமாள் பெயரை உச்சரிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு பரவசம் உண்டானது எனக்குள். அது என்னுடன் படித்த என் நண்பனது பெயர். சேரன்மாதேவிக்காரன். மலைக்காடுகளில் மாடுமேய்த்துக் கொண்டே பாளையங்கோட்டைப் பள்ளிக்கூடத்திற்கு வந்து படித்துக் கொண்டிருந்தான். ஒரு விடுப்பு தினத்தில் அவனுடைய கிராமத்திற்கு போனபோது எனக்கு அங்குள்ள ஊர்சாமியின் கதையைச் சொல்லி இருந்தான். அந்தகதை காலப்போக்கில் எனக்கு மறந்தே போனது. ஆனால் அதன் தொன்மம் எங்கேயோ உள்ளுக்குள் கிடந்து கதையாக வெளிப்பட்டுவிட்டது.

நிறையபேர் கேட்டார்கள் “ஏன் கார்த்திக் நிஜமாகவே இப்படி மாடுகளின் தோலை உயிரோடு உரிக்கிற பழக்கம் இருந்ததா?” என்று. “ஆம் இருந்தது” என்பதைச் சொல்ல எனக்கு தகுந்த சாட்சியமாக கி.ராஜநாராயணன் கிடைத்தார்.  சரி இதற்குமேலே ஒரு கதையைப்பற்றி நீட்டி முழக்கிக்கொண்டிருப்பது   அவ்வளவு சௌகரியமானதில்லை. 

நேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT) நிறுவனம் இந்திய மொழிகளில் (9மொழிகள்) புதிய சிறுகதை எழுத்தாளர்களை அடையாளப்படுத்தும் பொருட்டாக (நவலேகன்)  “புது எழுத்து - தமிழ்ச் சிறுகதைகள்” என  25 சிறுகதைகளைத் தமிழில் வெளியிட்டிருக்கிறது. இந்தமுறை சிறுகதைகளைத் தேர்நெதெடுத்தவர் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள். 

ஒரு மின்னஞ்சலில் உங்களுடைய கதைகளில் சிலவற்றை அனுப்புங்கள் என்றிருந்தார் ஜோ சார். நான் என்னுடைய மூன்று கதைகளை அனுப்பி இருந்தேன். அவ்வளவுதான் அதன்பிறகு அந்தக் கதைபற்றி வெறேதும் பேசவோ, சிந்திக்கவோ இல்லை. ஜன்னல் இதழ் பொங்கல் சிறப்பிதழுக்குக் கேட்டதும் இரண்டாவது சோதனை முயற்சியாக வெட்டும்பெருமாளை அனுப்பி வைத்தேன். அதுவரைக்கும் எந்த அச்சு ஊடகத்திலும் வெளிவந்திருக்காத காரணத்தால் அவர்களும் பிரசுரம் பண்ணினார்கள். இதழில் ஓவியங்களோடு கதையைப் பார்த்தபோது அப்படியே என் நண்பன் சாயலில் இருந்தான் வெட்டும்பெருமாள். பிறகு அதே இதழில் பணிக்குச் சேர்ந்ததெல்லாம் தனிக்கதை. 

 ஜன்னல் இதழில் வெளிவர ஒருவாரம் இருக்கும்போது, தில்லியிலிருந்து வாத்தியார்  (ஷாஜஹான்) அழைத்திருந்தார். உன் கதையா அது? என்று வினவினார்.  “ஆமாம்” என்றேன்.  தில்லி உலகப் புத்தக திருவிழாவில்  “புது எழுத்து” வெளியிடப்பட்ட செய்தியை அவர்தான் எனக்கு முதலில் பகிர்ந்திருந்தார். ஒரு கதை கொடுத்த அங்கீகாரத்தின் இன்பத்தை உணர்ந்துகொண்டேன். 

ஜன்னல் இதழில் வெளியான கதையின் பிடிஎஃப் பிரதியினை நேற்றைக்குத்தான் வாங்கியிருந்தேன். ஒரு நப்பாசைக்காக இங்கே வெட்டும்பெருமாளைப் பதிவேற்றியும் வைத்திருக்கிறேன். ஒரு பத்திருபது வருடங்கள் கழித்து திரும்ப ஒருநாள் படித்துப் பார்க்கலாமென்று...


-கார்த்திக்.புகழேந்தி
15-03-2016.


Comments

  1. மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் கார்த்தி! மேலும் மேலும் நீங்கள் எழுத்துலகிலும் பிரகாசிக்க எங்கள் வாழ்த்துகள். இதோ கதைக்குச் செல்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் சார்.

      Delete
  2. கதை திருநெல்வேலி மண் வாசனையுடன் அட்டகாசமாய் இருக்கிறது கார்த்தி. மனதையும் தொட்டுவிட்டான் பாவம் வெட்டும் பெருமாள்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்