ஆரஞ்சுமுட்டாய் நூல் அறிமுகக்கூட்டம் | பொள்ளாச்சி இலக்கியவட்டம்

பொள்ளாச்சி வந்திறங்கியபோது மணி ஏழு சுமார் இருந்தது. பூபாலன் ஏற்கனவே அறைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பழைய சுண்ணக் காரை கட்டிடத்தை தெளிவாக சீர்திருத்தி விடுதியாக்கி வைத்திருந்தார்கள். அறையின் குளிர்ச்சியில் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் குளித்து புறப்பட்டு பக்காவாக ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்குப் போகிற தொனியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தமுறை நகரத்தார் சங்கத் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 35வது நிகழ்ச்சி இது. கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ஒவ்வொரு மாதமும் சலிக்காமல் மூன்றாண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கீதாபிரகாஷ் என்கிற நடன ஆசிரியை கவிஞராகப் பரிணமிக்கிற நிகழ்வோடு சேர்த்து என்னுடைய புத்தகத்திற்குமான அறிமுகக்கூட்டம் இது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போதே பூபாலனிடமும் பிறகு அம்சபிரியா அவர்களிடமும் அட்டண்டன்ஸைப் போட்டுவிட்டு வாகாகக் கிடைத்த சேரில்ப்போய் உட்கார்ந்துகொண்டேன். கவிஞர் ஆன்மன் பக்கத்தில் இருந்தார். கடங்கநேரியானின் சொக்கப்பனை கூட்டத்தில் அவருக்கு என்னைத் தெரிந்திருந்ததால் சத்தமில்லாமல் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறவரைக்கும் அவரோடு பேசிக்கொண்டிருப்பது சவுகரியமாய் இருந்தது எனக்கு.

மேளம் இசைக்கும் இடைவெளியில் படித்தவற்றுள் பிடித்தவற்றை பார்வையாளர்கள், படைப்பாளர்கள் என்ற வித்யாசபேதமில்லாமல் மேடையில் பேசினார்கள். தோழர் பௌசியா பானுவின் பாரதி பாட்டுக்கு எல்லோருமே சிலிர்த்துத்தான் போனார்கள். முதலில் ‘தேடிச்சோறு நிதந்தின்று… ’என்று அவர் கவிதையைச் சொல்லத் தொடங்கினதும் அவருடைய மொழிச்சரளம் எனக்குக் கடுங்கோபத்தைக் கொடுத்தது. என்ன சொற்களை இப்படிப் பிரிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது நான் பாரதியை இப்படித்தான் வாசிக்கிறேன் என்று தன்விளக்கம் சொன்னதோடு பாட்டின் அர்த்தத்தை அவர் வெளிப்படுத்தினபோது கைத்தட்டிக்கொண்டிருந்தேன்.

தோழர்.கீதாபிரகாஷ் அவர்களின் ‘ஜனுக்குட்டியின் பூனைக்கண்கள்’ கவிதைத் தொகுப்பு முதலிலே வெளியிடப்பட்டது. மீ. உமாமகேஸ்வரி அவர்கள் தொகுப்பை வெளியிட, கவிஞர் அம்சப்பிரியா நூலைப் பெற்றுக்கொண்டார். அண்ணன், அப்பா, கணவர், தோழர்கள் என்று எல்லாரையும் மேடைக்குப் பக்கம் அழைத்து புத்தகத்தை வெளியிடச் செய்த நிமிடத்தில் எனக்குக் கை குறுகுறுக்க மேடையை விட்டெழுந்து கேமிராவைத் தூக்கிக்கொண்டு படம்பிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
முதலில் ந.முத்து அவர்கள் கவிதைநூலுக்கான வாழ்த்துரை வழங்க, அடுத்ததாக உமா மகேஸ்வரி அவர்கள் கவிதைகளை இழை இழையாக ரசித்து ரசித்து அதுபற்றிச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எந்தக் கவிஞனும் அப்படிப் பேசினால் தேன்குடித்த தும்பிமாதிரி கனத்துப் போவான். அவருக்குப் பிறகு பேசின பூபாலன் மையச்சரடாக சில கவிதைகளைக் குறிப்பு வைத்துக்கொண்டு அறிமுக உரையை வழங்கின பிறகு கவிஞரை மேடைக்கு அழைத்தார்கள். “எனக்குப் பேச வராது; நான் பிறவி ஊமை” என்று உண்மையைச் சொன்னபிறகே பேசத்தொடங்கினார் தோழர் கீதாபிரகாஷ்.  

அவருடைய கவிதைகளை நான் வாசித்திருக்கவில்லை. அரைநாள் பழக்கத்தில் ரொம்ப உற்சாகமான, கொஞ்சம் குழந்தைத்தனமான மனுஷியாகத் தெரிந்தார். இலக்கிய வட்டத்துக்கார நண்பர்கள் தோழமைத்தனத்தோடு அவரை கண்ணீர் வருமளவுக்கு அன்பு செய்கிறதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மேற்கண்ட அன்பு என்பதை வம்பு என்றுகூட மாற்றிப் படித்துக்கொள்ளலாம் நீங்கள். 

உயிர்மை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் காரணமாக தோழர்.இளஞ்சேரல் விழாவுக்குச் சற்று காலதாமதமாகத்தான் வந்திருந்தார். அவர் வரும் வரைக்கும் வலை இல்லாத படகுமாதிரி உட்கார்ந்துகொண்டிருந்தேன். கவிதை நூல் வெளியீடு, வாழ்த்துரை, அறிமுக உரைகளுக்குப் பிறகு தோழர்.இளஞ்சேரல் ஆரஞ்சுமுட்டாய் கதைகள் குறித்த தன்னுடைய மதிப்புரையை வழங்கினார். நான் அவரிடம் பெரிய விமர்சனங்கள் கிடைக்குமென்று எதிர்ப்பார்த்திருந்தேன்.

ஆனால் அவர் ‘நுனிக்கு நெல்லுக்கு வலிக்காமல் கதிரடிக்கிற மாதிரியாக’ என் கதைகளைப் பற்றிய வாசிப்பனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். தாமிரபரணி நதியைச் சுற்றிப் பிறக்கும் கதைகளின் இயல்புகளைப் பற்றிப் பேசினதோடு, ‘இரயிலுக்கு நேரமாச்சி’ கதைப் பற்றி அவர் கும்பகோணம் மகாமகத்திற்கு வந்திருந்த பெண்காவலர்களோடு தொடர்புபடுத்திப் பேசினது பிடித்திருந்தது. எல்லோருக்கும் நெருக்கமான ‘வெட்டும்பெருமாளை’ அவரும் குறிப்பிடத் தவறவில்லை. கிராம மற்றும் நகரக் கதைகள் பற்றியும், கதைகள் சொல்லப்பட்டிருக்கும் முறைகளையும் குறிப்பிட்டுப் பேசின அவருடைய  மொத்தப் பேச்சையும் ஒலிப்பதிவு பண்ணிக்கொண்டேன்.

 ‘உங்களுக்குப் பேசுவதற்கு எவ்வளவு நேரம் வேண்டும்?’ என்று முதலிலேயே திரு.அம்சப்பிரியா என்னிடம் கேட்டிருந்தார். நீங்கள் குடுப்பதை வைத்துச் சமாளித்துக்கொள்கிறேன் என்றதற்கு, ஒரு இருபது நிமிடம் போதுமா என்றார். நான் சரியாக இருபத்தி இரண்டு நிமிடம் பேசி இருக்கிறேன். ஏற்புரையோடு சிறப்புரையாகவும் பேசிவிடுங்கள் என்றார். இரண்டுக்கும் வித்யாசம்கூட தெரியாத ஒருத்தனிடம் இப்படியெல்லாம் அவர் சொல்லி இருக்கிறார் என்பதை அவருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மொத்தமாக மனதில் இருந்த வார்த்தைகளைப் பேசினேன். யாரும் பெரிதாகக் கொட்டாவி விட்டமாதிரித் தெரியவில்லை. நிறையபேர் முகங்களைக் கவனித்தேன். சிரிக்கவேண்டிய இடத்தில் சிரித்தார்கள். கைத்தட்டவேண்டிய இடத்தில் கைத்தட்டினார்கள். இதைவிட என்னவேணும். நல்லபடியாகப் பேசி அமர்ந்தேன். (இந்த ஆடியோவும் கைவசம் இருக்கிறது என்பது உபசெய்தி).

நிறையபேர் புத்தகம் வாங்கியிருந்தார்கள்.  கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறபோதுதான் கூச்சமாய் வருகிறது. நிகழ்ச்சிக்கு தங்கை அபிமதி பழநியிலிருந்து வந்திருந்தாள். ‘உங்ககூட ஒரு போட்டோவுக்காக வந்தேண்ணா. திட்டாதீங்க புக் இன்னும் வாசிக்கலை’ என்றாள். யார் பாரதிபாட்டை வாசித்தார் என்று கைத்தட்டினேனோ அவரும், ‘உங்க நிகழ்ச்சின்னுதான் சென்னையிலிருந்து வந்தேன் என்றான். உங்க பதிவுகளை எல்லாம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்றார். லைட்டாக  பக்’கென்று இருந்தது. அன்புக்கு நன்றிகள். இன்னும் நிறையபேரை எங்கோ பார்த்ததுபோல இருந்தாலும் நமக்குத்தான் நினைவுக்கு ஒன்றும் இருக்காதே என்று அமைதியாக, ‘பேசினால் பேச்சு இல்லைன்னா சத்தம் மூச்’ என்றபடி உட்கார்ந்துகொண்டேன்.

அடுத்து கவிதை வாசிப்பு நிகழ்ச்சி இருந்தது. ஆனாலும் பொள்ளாச்சிக்காரர்கள் மகா பொறுமைசாலிகள்தான் போங்கள். ரெண்டு மணி கொடும்பசியில் கவிதை கேட்கிறார்கள், வாசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த எல்லா இளைஞனையும்போல நானும் கவிதைகள் எழுதித்தான் எனது இன்னிங்க்ஸைத் துவங்கினவன் என்பதால் ஏற்கனவே எழுதியிருந்த என்னுடைய ‘வனப்பேச்சி மகன்’ கவிதையை வாசிக்க அனுமதி கேட்டேன். வாசிக்கவும் செய்தேன். நன்றாக இருந்தது என்றார்கள்.

நிகழ்வின் இறுதியாக நினைவுப்பரிசுகள் தந்தார்கள். கைநிரம்பப் புத்தகங்கள். மதியம் வாய்க்கும் வயிற்றுக்கும் சோறு போட்டு, ஊருக்குச் செல்ல டிக்கெட்டும் போட்டுக் கொடுத்தார்கள். ஏழு மணி பஸ்ஸைப் பிடித்து காலை ஐந்து நாற்பத்தைந்துக்கு சென்னை வந்திறங்கினேன். சென்னை அதிகாலையில் என்னமாய் குளிராய் இருக்கிறது.

-கார்த்திக்.புகழேந்தி.
21-03-2016.

படங்கள்








Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil