நீர்ப்பெயற் றெல்லைப் போய் வந்தோம் | மாமல்லபுரம் பயண அனுபவங்கள்
![]() |
நீர்ப்பெயற் றெல்லை - மாமல்லபுரம் கடற்கரைக்கோயில் |
வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை
ஊர்சுற்றல் பதிவாகத்தான் இது இருந்திருக்கும். ஆனால், எங்கள் பயண திசை மாறியதால்
பதிவின் தன்மையையே மாறிவிட்டது. ஆம் நண்பர்களோடு சென்னையின் வடஎல்லையில் இருக்கும்
பழவேற்காட்டுக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு குழுவைத் திரட்டினோம். ஆனால்
அத்தனை பயல்களும் டேக்கா காட்டிவிட, நானும் நண்பர் கேசவனும் மட்டும்
மிச்சமானோம். சரி சமைத்துச் சாப்பிட்டுத் தூங்குவோம் என்று கேசவனிடம்
அறைக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க அவரும் வந்துவிட்டார்.
அப்போதுதான் பனுவலில் இன்றைக்கு மாமல்லபுரம் தொல்லியல்துறை கல்விச் சுற்றுலாவுக்கு
ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று கேசவன் நினைவுபடுத்தினார். அட இந்த வாய்ப்பைப்
பயன்படுத்தவில்லை என்றால் எப்படி என்று டேங்கை நிரப்பிக்கொண்டு கேமிராவும் கையுமாக
ஈசிஆர் வழியாக தெற்குதிசையில் மாமல்லபுரம் விரைந்தோம்.
மாமல்லபுரத்திற்கு 5.கி.மீ முன்பே சாளுவன்குப்பம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது
புலிக்குகை. வெள்ளை நிற பேருந்தைப் பார்த்ததும் இங்கேதான் நம்மவர்கள்
இருக்கிறார்கள் என்று உறுதிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தோம். சாளுவன் குப்பத்திற்கு
பழைய பெயர் ஒன்றுண்டு அது திருவிழிச்சில்.
திருவிழிச்சில் பக்கம் சங்ககால கட்டுமானம் ஒன்று சுனாமியில் வெளிப்பட்டது என்றும்
அது பழமையான முருகன் கோயிலின் அடித்தளம் என்றும் நண்பர் சொல்ல அங்கே
சென்றிருந்தேன். குழுவினர் அந்த இடத்தைப் பார்வையிட்டார்களா என்று தெரியவில்லை. [முகநூலில் பதிவேற்றப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வழி பார்வையிட்டதை அறிகிறேன்]
நாங்கள் குழுவினரோடு கலந்துகொண்டபோது, நாகரி எழுத்துருவில் காலத்தால் முற்பட்ட இராஜசிம்மனுடைய
கல்வெட்டு அமைந்திருக்கும் அதிரணசண்டேஸ்வரத்தில் இருந்தார்கள். பேராசிரியர் பத்மாவதி ஆனையப்பன், பாலுச்சாமி அவர்கள் இந்தமுறை குழுவை
வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். (மற்ற துறைசார்ந்தவர்கள் பெயர்கள் அறியவில்லை
மன்னிக்க...) முன்பு கலந்துகொண்ட சுற்றுலாவில் அறிமுகமான நண்பர்கள், முகநூல் நண்பர்கள், பனுவல் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பலரும்
கலந்துகொண்டிருந்தார்கள்.
இராஜசிம்மனின்
கல்வெட்டு வரிகளை பேராசிரியர் பத்மாவதி அவர்கள் வாசித்துக் காண்பித்து, அதன்
அர்த்தத்தையும் குழுவினருக்கு விளக்கிக் கொண்டிருந்தார். பல்லவர்களுக்கு ஒரு பொடீ
கல்லைக் கண்டாலும் போதும் , உட்கார்ந்து அதில் ஒரு சிலையைச்
செதுக்கிவிட்டுத்தான் தூங்குகிற பழக்கம்போல. இராஜசிம்மனும் தன்பங்குக்கு பெரிய
தூக்கக் கனவுக்காரனாக இருந்திருக்கக்கூடும். அதனால்தான் கல்வெட்டில் “முடிவில்லாத
கனவுகளைக் கொண்ட நான் (அதியந்த காமன்) இந்த கோயிலை என் மக்களுக்காக எழுப்புகிறேன்.
இங்கே சிவனும் உமையும் உறைந்திருக்கட்டும்” என்று
எழுதியிருக்கிறார். அதுவும் எப்படி? கிரந்தம், நாகரி இருவேறு எழுத்துருகளில்
இடதும் வலதுமாக. கல்வெட்டுகளோடு.
அடுத்ததாக
நிறைய குழப்பங்களைத் தன்அகத்தே கொண்ட புலிக்குகைக்கு நகர்ந்தார்கள் குழுவினர்.
வெயில் வெளுத்து வாங்கியதில் மக்கள் ரொம்பவே சோர்ந்து போயிருந்தார்கள். புலிக்குகை
பெயருக்கு ஏற்ற மாதிரி ஒரு குகை அல்ல என்று மட்டும் நிச்சயம் சொல்லமுடியும். ஒரு
பெரிய பாறையை ஒருபுறமாக செதுக்கி நடுமையத்தில் செவ்வக அறை
செதுக்கியிருக்கிறார்கள். சுற்றிலும் 11யாழிகள் (சிங்கங்கள்) முகம், அதன் தென்பக்கம்
இரு யானைகள் மீது இந்திரன், முருகன்(!) அமைர்ந்திருப்பது போன்ற முழுமைபெறாத
சிற்பங்கள். மற்றும் தொடங்கிய நிலையில் மட்டுமேயுள்ள குதிரையில் தடம் ஆகியவை கொண்ட
பெரும்பாறைக்கு நேர் கிழக்கில் ஒரு சிறிய பாறை பலிபீடம்போல நிற்கிறது.
குழுவை
வழிநடத்தும் பாலுசாமி அவர்களுடனான இந்தப் பயணம் ரொம்பவும் சுவாரஸ்யமானது.
அதோ பாருங்கள் நிலா தெரிகிறதா? அதில் ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறாளா, அவளோடு ஒரு
மான் தெரிகிறதா என்று கதை சொல்லுவதுமாதிரி சிற்பங்களை விளக்குகிறார்.
“அந்த
யாழிகளின் முகத்தைப் பாருங்கள் அதன் உறுமல் உங்களுக்குக் கேட்கிறதா, அதோ அங்கே
இரண்டு யானை தெரிகிறதா? பக்கத்தில் குதிரை தெரிகிறதா? குதிரையும் யானையும்
இந்திரனின் வாகனம். ஆக, அட்ம்பாரியில் அமர்ந்திருப்பது இந்திரனாக இருக்கலாம். யானை
முருகனுக்கும் வாகனம் ஆக, இந்தப்பக்கம் இருப்பவர் முருகனாக இருக்கலாம். வடபக்கம்
ஒரு சிங்கமுகம் முற்றுப்பெறாமல் இருக்கிறது அதன் வயிற்றுப்பகுதியில் ஒரு சதுரவடிவம்
வெட்டி எடுக்கப்பட்டு புடைப்பு தெரிகிறது கவனியுங்கள். இங்கிருக்கும் சிற்பங்களை
அப்படியே பார்த்து புரிந்துகொள்வதைவிட மாமல்லபுரத்தில் காணும் சிற்பங்களோடு
தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும் .நீங்கள் அங்கே கடற்கரை கோயில்கள்
அமைந்திருக்கும் இடத்தில் இதேபோல சிங்க வயிற்றில் துர்கையின் சிலை ஒன்று
இருக்கிறது. அதேமாதிரியான வடிவம் இந்த புலிக்குகைக்கும் இருப்பதை
உணர்ந்துபாருங்கள்” என்று நம் சிந்தனையையும் கிளறிவிட்டு பாடமும் சொல்லித்
தருகிறார். மாமல்லபுரம் புலிக்குகை பற்றிய அவருடையை ஆய்வு நூல்கள் பனுவல்/காலச்சுவட்டில்
கிடைக்கிறதாகச் சொல்கிறார்கள். கட்டாயம் வாங்க வேண்டும்.
புலிக்குகை
முடித்து நேரே மாமல்லபுரத்துக்கு புறப்பட்டது பேருந்து. நாங்கள் பைக்கில்
பின்தொடர, எங்களைப்போலவே தனியாக வந்திருந்த தீபக் வெங்கடாசலம் உடன் இணைந்துகொண்டான்.
‘மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை’ மாதிரி. அட்டகாசமான கூட்டு தீபக்.
குழுவினர் அனைவரும் மாமல்லபுரம் நோக்கிச் சென்ற நேரத்தில் நாங்கள் மூவருமாக
வழியிலிருந்த அடையார் ஆனந்தபவனில் பசியாறிக் கொண்டிருந்தோம். பேருந்திலிருந்து
அனைவரும் இறங்கி பூங்காவுக்குள் நுழைந்த நேரத்தில் நாங்களும் அவர்களோடு
அப்படியே ஐக்கியமாகிப்போனோம்.
மாமல்லபுரம்
பற்றி எனக்கு ஒரு தனிப்பார்வை இருந்தது. பெரும்பாணாற்றுப்படை வாசித்தபோது அதில்
அக்காலத்து சமூக, இனக்குழுவினரின் வாழ்க்கையை எப்படி புரிந்துகொள்ள முடிந்ததோ
அப்படி மாமல்லபுரத்தை வியந்தபோது புராண முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோடு
மனிதன் விலங்குகளோடும் இயைந்து வாழ்ந்திருக்கிறான் என்பதும், கால்நடைகள்
பறவைகளுடனான அவன் வாழ்க்கை நெருக்கமான ஒன்று என்பதையும் இங்குள்ள கற்சிற்பங்கள்,
மண்டபங்கள், வழி உணர்ந்துகொண்டேன்.
சங்க
காலத்தைய காஞ்சி மன்னன் தொண்டைமான்
இளந்திரையனை (பேரைப்பாருங்கள்
இளந்திரையன். திரை-கடல். இந்த ஜாதகம் பார்த்துவிட்டு, ஞ,ஷெ,கூ,லொ என்று தொடங்கும் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட கேட்கிறவர்களின்
வாயிலே பொக்கென்று குத்தவேண்டும். தமிழில் இல்லாதப் பெயர்களா என்று!) மனத்தில் கொண்டு
உருத்திரங்கண்ணனார் எழுதின பெரும்பாணாற்றுப்படை அக்கால வாழ்நிலையை அறிந்துகொள்ள
முக்கியமான பத்துப்பாட்டு நூல். கிட்டத்தட்ட எனக்கு இன்னொரு பட்டினப்பாலையை
வாசித்ததுபோலப் பட்டது. அதிலே “நீர்ப்பெயற் றெல்லை போகிப் பாற்கேழ்” என்ற
319வது அடி (மொத்தம் 500அடி) மாமல்லபுரத்தைத்தான் குறிப்பிடுவதாக
வாசித்திருந்ததால் இந்த தொடர்பு வேறோர்வகைக்கு நகர்த்தினது என்னை. அதுபற்றி பிறகு
எழுதுகிறேன்.
குழுவினருக்கு வராஹ
மண்டபத்தில் புடைப்புச் சிற்பங்கள் குறித்து பாலுசாமி அவர்கள் விளக்கிக்
கொண்டிருந்தார். ‘பாதாளத்திலிருந்து பூமாதேவியை மீட்டு மடியில் தாங்கிகொண்டே,
பாதாள அரசன் நாகனின் தலையில் முன்பாதம் அழுந்த, வராக அவதாரத்தில் நிற்பதையும், தன்
கணவனைக் காக்க இறைஞ்சும் நாகனின் மனைவியும் கொண்ட சிற்பத்தை விவரித்துக்
கொண்டிருந்தார். அவர் விவரணை பற்றி முன்பே சொன்னேனில்லையா. அவர் பேசப் பேச
விஷுவலான காட்சி ஒன்று உங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும்.
“பாதாள
உலகம் நீரால் ஆனது என்பதன் சான்றாக இங்கு அலைகளும் பூக்களும் தெரிகிறது
பாருங்கள்’
‘பூமாதேவியின்
முக அழகைப் பாருங்கள்; சிலர் அவள் வெட்கத்தில் நாணுவதாகச் சொல்வார்கள்.’
“நாகனின்
மனைவி இறைஞ்சுவதைப் பாருங்கள் அவள் முகத்தில் என்ன ஒரு வேதனை’ என்று
சிற்பங்களை அணுகும் நுணுக்கத்தை இலகுவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பயணத்தில்
அவர் எனக்குக் கிடைத்த மிக முக்கியமான அறிமுகம்.
வராக மண்டபத்தின் தூண்பற்றி விவரிக்கிறார் உடன் குழுவினர். |
பிறகு
கிருஷ்ண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பமான கோவர்த்தன
காட்சியை விளக்கினார். சென்னையும், பிழைப்பும் நம்மைக் கைவிடும்போது எந்தக்
கவலையும் இல்லாமல் மாமல்லபுரம் போய் நின்றுகொண்டு, இந்த சிற்பங்களைப் பற்றி
வருகிறவர்களுக்கு விளக்கிக் கொண்டு காலந்தள்ளிவிடலாம் என்று எண்ணுகிறேன். அவ்வளவு
ஆழமான, அதேசமயம் எளிமையான உள்வாங்கல். “மாமல்லை” பற்றி மனத்துக்குள்
உறைந்து போன பயணம் இது.
மதிய
உணவுக்குப்பிறகு ரதங்கள் அமைந்த இடத்துக்கு குழுவினர் சென்றுவிட, நாங்கள் கடற்கரை
கோயில்களுக்குச் சென்றிருப்பார்கள் என்று எண்ணி அங்கே போய்விட்டோம். சரி
ரதங்களையும், யானையினையும் முன்பே அறிந்திருக்கிறோம்தானே என்ற சமாதானத்தின்
பேரில் கடற்கரைக் கோயிலையே வளைய வந்தோம்.
என்ன ஒரு
பிரம்மாண்டம். இரண்டு கோயில்களைச் சுற்றி வளாகமாக அமைக்கப்பட்டிருக்கும் பகுதியைக்
காணும்போது, பாமகவினர் செய்த அழிச்சாட்டியங்களையும், கூடவே, ‘பால்மைரா’வில்
வெடிவைத்துச் சிதைக்கப்பட்ட கட்டிடங்களையும் நினைத்துக்கொண்டேன்.
கடற்கரைக்
கோயிலின் கருவறைக்கும் பலிபீடங்கள் அமைந்துள்ள இடத்தின் தொலைவைப் பார்க்கும் போது
அக்காலத்தில் கோயிலின் பரப்பும் அமைப்பும் எப்படி இருந்திருக்கும் என்று
எண்ணிப்பார்த்து வியந்துகொண்டேன். கடற்காற்றில் மிச்சமிருக்கும் சுதையினாலான
சிற்பத்தின் இடைவெளித் துணுக்குகளில் காணப்படும் கலைநுணுக்கத்தை நீங்கள் போகும்போது நிச்சயம் கவனியுங்கள்.
‘ஈ’ மொப்பதுபோல
ஜனங்கள் வந்து வந்து போகிறார்கள். விக்கிபீடியா உதவியில் “கைடு”களைப்
புறக்கணித்துக் கொள்கிறார்கள். படம் எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுள்
யார் இந்த பிரம்மாண்டத்தின் மிச்சத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைக்கப்
போகிறவர்கள் என்றும் நினைத்துக் கொண்டேன். தொல்லியல்துறை ஊழியர்களெல்லாம்
கொண்டாடப்பட வேண்டியவர்களைய்யா!
பஞ்சபாண்டவ
ரதங்களை காணச் சென்றிருந்த குழுவினர் கடற்கரைக் கோயில்களுக்கு வந்துசேர்ந்தபோது
சூரியன் மறைவதற்கு முன்பான வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பேராசிரியர்
பத்மாவதி அவர்களிடம், “இம்மாதிரியான வரலாற்று இடங்கள் பற்றி தனித்தனியான சிறிய
புத்தகங்களை எழுதுவதன் மூலம், ஆர்வமுள்ளவர்களுக்கு பல விஷயங்களைக் கடத்தமுடியும்.
அடுத்த பனுவல் சுற்றுலாவின்போது நாம் போகிற இடத்தின் வரலாற்று, தொன்மம் பற்றிய குறிப்புகளடங்கிய
புத்தகப் பிரதிகள் நம் கையில் இருக்குமாறு செய்யவேண்டும். அதைச் செய்வதற்கான
அத்தனை ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்றேன். அவருக்கும் அந்த
எண்ணத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. “பண்ணலாம் கார்த்திக்” என்றிருக்கிறார்.
பின்பு,
கேசவன், தீபக் மற்றும் நானுமாக குழுவினர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சென்னை
புறப்பட்டோம். கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு வசதி என்னவென்றால்
அலுப்பில்லாமல் வண்டி ஓட்டலாம். என்ன ஒன்று இந்த ரோட்சைடு ரேஸர்களைக்
கண்டுகொள்ளாமல் செல்லவேண்டும். நீண்டகாலமாக சாலைப்போக்குவரத்து பணி நடக்கும் ஒரே
பகுதியாகக் கிழக்கு கடற்கரைச் சாலைதான் இருக்கும். ‘டேக் டைவர்சன்’களைக் கூடப்
தாங்கிக்கொள்ளலாம். இந்த சாலையில் சிதறும் ஜல்லிகள் பெரும் பிரச்சனை. எங்கள்
கண்முன்னே ஒருவர் தடுமாறி சரிந்து விழ, அருகில் சென்று முதலுதவி செய்து
வழியனுப்பி வைத்தோம்.
அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில் பனுவல் குழுவினர்
சென்ற பேருந்து நின்றது கண்டு நாங்களும் வண்டியை ஓரங்கட்டினோம். எல்லோரும் கீழிறங்கி நிற்கிறார்களே என்னவாக
இருக்குமென்று கிட்டே நெருங்கிப்போனால் அனைவரும் தேனீர் இடைவேளையில்
இருந்தார்கள். கூட்டத்தோடு நாங்களும் கூடக் கலந்துகொள்ள, பயண அனுபவம் பற்றிப்
பேச்சுத் துவங்கியது.
பேராசிரியர் பத்மாவதி அவர்களுக்கு நினைவுப்பரிசை வழங்குமாறு முகுந்தன்
என்னைக் கோர்த்துவிட்டிருந்தார். பாலுசாமி அவர்களுக்கு திருமதி.ஈஸ்வரன் அவர்கள்
நினைவுப்பரிசினை வழங்கினார். பனுவல் வாசக நண்பர் ஒருவர் அட்டகாசமாக தன்னுடைய இந்த
முதல் பயணத்தில் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து நன்றிகளைப் பரிமாறிக்கொண்டார்.
இடையில் நானும் கொஞ்சம் நன்றியைச் சொல்லிவிட்டு தனியே சென்று பாலுசாமி அவர்களிடம்
எனக்குள் தோன்றின கேள்வியைக் கேட்டேன்.
கேள்வி
இதுதான் : மாமல்லபுரத்தில் பிரசித்திவாய்ந்த யானைகளுக்கும், சிங்க ஏருகளுக்கும்
பிறகு இப்பகுதியில் அதிகம் (எண்ணிக்கையிலும்) தென்படுவது நந்தி
(மாடுகள்)சிற்பங்கள் தான். அதற்கு ஒப்பாக இங்கமைந்துள்ள முக்கியமான இரு புடைப்பு
சிற்பத் தொகுப்பில் காணப்படும் கோவர்த்தனக் காட்சியில் ஆயர்களுக்கும்
மாடுகளுக்கும் அரசனே அருகிருந்து, தோளில் கைபோட்டு ஆறுதல் தருகிறதுபோல் காட்சி
அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இனக்குழுவுக்கு இவ்வளவு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்?
அவர்கூறிய "பதில்" ரொம்ப முக்கியமானதாக அமைந்தது எனக்கு… என்னுடைய கையில் இருக்கும் இந்த நூலை இழுக்க இழுக்க.... எந்தப் போர்வையில் கொண்டுபோய் விடப்போகிறதென்று தெரியவில்லை. பார்ப்போம்.
பேராசிரியர்.பத்மாவதி ஆனையப்பன் |
![]() |
திரு.பாலுசாமி ., |
-கார்த்திக்.புகழேந்தி
14-03-2016.
படங்கள் சில..

எந்த இடத்துக்குப் போனாலும் ஜஸ்ட் ஜாலியா சுத்திட்டு வாரது தான் இதுவரை பழக்கம்...கார்த்திண்னா உங்க எழுத்துகள வாசிக்கும் போது..இப்டித்தான் பாக்கனும்னு சின்ன கொட்டு கொட்டி சொல்லிக்குடுக்குரா மாதிரியே இருக்கு.இனி கண்டிப்பா எங்க போனாலும்...என்னா ஏதுன்னு தெரிஞ்சிக்க முயற்சிபண்னுவேன்.செம ரைட்டிங் அண்ணாவ்.ஹேப்பி.
ReplyDeleteநானும் உங்களுடன் மாமல்லபுரத்தை பார்த்துவிட்டேன். புகைப்படங்கள் அனைத்தும் அருமை!!
ReplyDeletepadangalum arumai. katturai thokuppu athai vida arumai. Mannan ilanthirayanai pola mudivillatha kanavugalai kondavan nee endre solla vendum. Thodarattum payanangal
ReplyDeleteதோழர் வணக்கம் ! உங்கள் பயண கட்டுரை அருமை! புலிக்குகை பற்றி மேலும் சில விவரங்கள் தேவை . உங்கள் தொடர் எண் கொடுங்களேன்.
ReplyDeleteதோழர் வணக்கம் ! உங்கள் பயண கட்டுரை அருமை! புலிக்குகை பற்றி மேலும் சில விவரங்கள் தேவை . உங்கள் தொடர் எண் கொடுங்களேன்.
ReplyDelete