ஆரஞ்சு முட்டாய் | இரா.முருகவேள்                   கார்த்திக் புகழேந்தியின் சிறுகதைத் தொகுப்பான "ஆரஞ்சு மிட்டாய்" -ன் முதல் கதை வெட்டும்பெருமாள். சென்ற நூற்றாண்டின் உக்கிரம் மிகுந்த கிராமப்புற வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது. தோலுரிக்கப் பட்ட மாடுகள் . . . பசி தூக்கமின்றி காட்டில் அலைந்து இந்தப் பாவத்தைச் செய்தவனை வேட்டையாடி கிராம தெய்வமாக உயரும் அநாதைச் சிறுவன் . . .

          நான் ஒருவிநாடி அதிர்ந்து போனதென்னவோ உண்மைதான். கேலியும் கிண்டலுமான கார்த்திக் புகழேந்தியின் முகநூல் பதிவுகளைப் பார்த்து, அந்த மாதிரி கதைகளை எதிர்பார்த்திருந்தேன்.

          அடுத்தடுத்த கதைகளில் ஒரே கலாட்டா. காதல், வெற்றி தோல்வி, கேலி கிண்டல் என்று ரகளையாக இருக்கின்றன கதைகள். பெரும்பாலான கதைகள் காதலைப் பேசுகின்றன. பெரும்பாலும் தோல்விதான். ஆனால் மனிதர் தோல்வியைக் கொண்டாடும் விதமிருக்கிறதே அங்கே நிற்கிறார் கார்த்திக்.

          உருகி உருகிக் காதலித்த பெண்ணை பல ஆண்டுகள் கழித்து ஒருவன் பார்க்கப் போகிறான். "ஒரு வேளை அவளுக்குத் திருமணம் ஆகியிருக்குமோ?அதுசரி எனக்கே இரண்டு வயதில் மகள் இருக்கும் போது அவளுக்கு ஆகாமலா இருக்கும்"

      மிகையான சோகம் புலம்பல் எதுவும் இல்லை. அட்டகாசம்.


தாமிரபரணி பாலத்தடியிலிருந்து விரட்டப்படும் மக்கள், போலீஸ்காரியாகும் விளையாட்டு வீராங்கனை என்று இயல்பாக அரசியல் பேசுகின்றன கதைகள். எண்பதுகளின் வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் இந்த இளைஞன் பிறந்ததே 89ல் தான் என்பது வியப்பு.

           “ஓ…இதுதானா அது” என்று நாகரீகமாக காமத்தைக் கடந்து செல்லும் லாவகம், வலிந்து கதை முடிவுகளைத் தேடாமல் போட்டது போட்டபடி விட்டுவிட்டு அவ்வளவுதான் கதை என்று முடிக்கும் குறும்பு.

முன்னுரை எழுதிய தோழர் கமலாலயனும், ஆத்மார்த்தியும் பொய் சொல்லவில்லை.


இரா. முருகவேள்
February 24 at 10:39pm ·(Url :
https://www.facebook.com/murugavel.raju.9/posts/10201376470209784?pnref=story ) 

Comments

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு