Skip to main content

கோடை விடுமுறையும் கையெறி குண்டுகளும்

    ஆதம்பாக்கம் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனைக் காட்டி, “புகழ் அந்தப் பெடியன பாருங்களேன்” என்றார் அகரமுதல்வன். அவர் சொல்லுகிற பெடியன் என்கிற அந்தச் சொல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிறுவன் அவன்பாட்டுக்கு மண்ணையோ கல்லையோ வைத்து தனியாளாக விளையாடிக் கொண்டிருந்தான். விழுகிற வெயிலெல்லாம் அவன் தலைமேலே மின்னிக் கொண்டிருந்தது.

நானும் சின்ன வயசில் கோடை விடுமுறை விடுகிற காலத்தில் இதேமாதிரி தண்ணியைக் காணாத கழுதைபோல ஊரைச் சுற்றிக் கொண்டு, விளையாடித் திரிவேன். என்ன ஒன்று என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பெங்கூட்டம் நிழல்வட்டம் போட்டபடி இருக்கும். கையில் கிடைத்தது, எடுத்தது என்று என்னத்தையாவது உருட்டி விளையாடிக் கொண்டிருப்போம்.

கொஞ்சம் வசதி உள்ள வீட்டான்கள் எல்லாம் கிரிக்கெட்டு, பேங்க்கும், வெள்ளைக்காரன் சீட்டு விளையாட்டுகளும் ஆடிக் கொண்டிருக்க, வீதி விளையாட்டுகளில் இப்போ என்ன சீசன் என்று நிர்ணயிக்கிற தார்மீகவாதிகளாக நாங்கள் இருப்போம். எங்கள் தெருவில் எந்த விளையாட்டைக் கையில் எடுக்கிறோமோ அதுதான் பக்கத்துத்தெருக்களில் சீசனாக அமையும்.

பம்பரம், கோலிக்காய், சீட்டட்டை, செதுக்காங்கல், எறிபந்து, தாண்டு, மரமேறிக்குரங்கு, டயர் வட்டு, மீன்வெட்டு, கக்கப்போர், புறா தூண்டி, வயல் அட்டை, தீப்பெட்டி வண்டி என்று சின்னதும் பெருசுமாக ஏகப்பட்டதை விளையாடிச் சலித்து கடைசியாக வினையை இழுக்கிறமாதிரி எதையாவது பண்ணியிருப்போம். ஊரேசேர்ந்து அத்தனை நாள் வஞ்சத்தையும் எங்கள் மீது தீர்க்கிற நாளாக அது இருக்கும். பிறகு பள்ளிக்கூடம் திறக்கிறவரை ஒருத்தனையும் தெருவிலே பார்க்க முடியாது. இழுத்து கதவைச் சாத்தி வீட்டுக்குள் அடைத்துவிடுவார்கள்.

இப்படி கோடை காலத்தில் திடல் பக்கம் எங்காவது விளையாடிக் கொண்டிருக்கும்போது, தூரமாக அம்மையோ, அக்காளோ வருகிறமாதிரி லேசாக சாயல் தெரிந்தால் போதும் தலைத்தெறிக்க ஓடிப்போய் கோயில் பக்கமுள்ள சந்தில் ஒழிந்துகொள்வேன். காட்டிக் கொடுப்பவன் ஒருத்தனும் நம் சேர்க்கையில் இல்லாவிட்டாலும், அவன்கள் முழிக்கிற முழியிலே அம்மா கண்டுபிடித்துவிடும் நான் பக்கத்தில்தான் எங்கோ ஒளிந்திருக்கிறேன் என்பதை...

 "அடிக்கிற வெயிலெல்லாம் உங்க மேலதாம்டா. கார்த்திய பார்த்தா சாப்புட வரச் சொன்னேன்னு சொல்லுங்க” என்று திட்டிவிட்டுப் போகும் அம்மை.

சரியாக அவர் தலை தெருமுனையில் மறையும்போது வேண்டுமென்றே கத்துவான்கள், “எல கார்த்தி உங்கம்மா போயிருச்சி, வெளில வா” என்று. அந்தச் சத்தம் தெருவுக்கே கேட்டிருக்கும். பிறகென்ன வீட்டுக்கு வந்ததும், ஆள் தனியாக அடாவடித்தனம் தனியாக அடி பிரித்து எடுக்கப்பட்டுவிடும். சுரணையே இல்லாமல் மறுநாளைக்கும் அதே பழைய குருடி கதவ திறடி கதைதான்.

இப்படி விழுப்புண்களாக வாங்கிச் சேர்த்த பால்யத்தில் சோடாமூடி மெழுகுவர்த்தியில் நெருப்பு பந்து எரியவிடுவதில் ஆரம்பித்து, கூட்டுறவு உரப் பண்ணை காம்பவுண்டுக்குள் ஏறிக் குதித்து, உர உப்பை அள்ளிவந்து கட்டுவெடி செய்வது வரை எங்களுடைய வில்ளையாட்டுகளில் பெரும்பாலானவை கிரிமினல் வேலைகளாக இருந்தன. 

செய்திகளில் எல்லாம் சொல்வார்களே! பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் எல்லாம் மூளையாகச் செயல்பட்டார், மூளையாகச் செயல்பட்டார்ன்னு சொல்வார்களே. அந்தமாதிரி எங்கள் கூட்டத்தின் கொட்டங்களில் எல்லாம் என்னுடைய கெமிக்கல் மூளையின் பங்களிப்ப அதிகம் இருந்தது.

அம்மோனியம், பொட்டாசியம், பாஸ்பேட், சல்பர், கால்சியம் என்கிற வேதியியல் பெயரெல்லாம் அப்போது யாருக்குத் தெரியும். எங்களைப் பொருத்தவரை எல்லாமே வெடி உப்பு, கரிமருந்து, சுண்ணாம்புக் கல், கந்தகப் பொடி, அலுமினியப் பொடி, உர உப்பு அவ்வளவுதான்.

காட்டுப் பொத்தையிலும், கல்வெட்டாங்குழியிலும் வெடி வைக்கிற விதங்களை வேடிக்கை பார்த்து ஜெலட்டின் குச்சிகளும், டைனமைட்களும்,  பார்வைக்குப் பழகியிருந்தது. அதன் தொழில்நுட்ப மாயங்களை ஏறக்குறைய கேள்வி ஞானத்தோடு தெரிந்து கொண்டு வெடி தயாரிக்கும் விளையாட்டை முதல்தடவை தெருவுக்குள் புகுத்தினோம். 

தேவநல்லூர் யானை வெடிகளுக்கு எங்கள் ஊரில் சரமாரியான கிராக்கி உண்டு. சாவுச் சத்தம் என்றால் அதில் வாடிப்பட்டி கொட்டுக்கும், தேவநல்லூர் வேட்டுக்கும் நிச்சயம் இடம் இருக்கும். அப்போதுதான் அது நல்லசாவு. திரி கிள்ளி பற்ற வைத்துவிட்டால், முதல் மூணு நாலு வினாடிக்கு தீக்கங்குகளை பெருமூச்சு மாதிரி இரைத்துவிட்டு “மட்ட்டார்” என்று கிளப்பும். சத்தம் சும்மா நாலு தெரு சனங்களையும் கூப்பிட்டு வைத்து, “காது சவ்வு எப்படி இருக்கு பங்காளி” என்று சுகம் விசாரிக்கும். 


அந்த யானை வெடியை நாங்கள் பெடியன்களாகச் சேர்ந்து கைக்காசு போட்டு வாங்குவோம். அப்போது ஒரு வெடி முப்பத்தைந்து பைசாவுக்கு விற்கும். பச்சை, சிவப்பு, நீலம் என்று தனித்தனிக் கலர் பேப்பர் சுற்றின யானை வெடியை கட்டு பிரித்து மருந்தை வெளியில் எடுப்போம். பிறகு, ஏரியாவில் சின்னச் சின்னதாய் நொருங்கிக் கிடக்கும் கரடுமுரடான கூழாங்கல்லை (சீனிக்கல்) மண்ணும் ஈரமும் இல்லாமல் பிறக்கி வைத்துக் கொள்வோம். 


கூடவே, பழைய சருகத்தாள், கிழிந்த சாரத்துணி, நூல்கண்டு இதெல்லாம் தேவையான பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டு சுற்றி அமர்வோம். இப்போ உள்ளங்கையளவு சதுரமாகக் கத்தரித்த சருகத்தாளில், பத்து சீனிக்கல்லையும், கொஞ்சம்போல வெடி மருந்தையும், போட்டு திருக்கி, சாரத்துணியால் சுற்றுவோம். மேலே நூல்கண்டைக் கொண்டு அசைவே இல்லாமல் ஒரு ‘டைட்’ ஏற்றி கட்டினால் கல்குண்டு ரெடி.


உருட்டி உருட்டி எறிந்தால் வெடிக்கிற சத்தத்துக்கு சும்மா கல்சுவரே குழி விழுந்து விடும்.


வேறு ஒரு ரகம் இருக்கிறது, கொஞ்சம் பரூம் கூழாங்கல்லோடு, பீங்கானும், களிமண் உருண்டையும், பிளேடும் போட்டு இறுக்கவேண்டும். திருவிழாச் சண்டைக்கு தோதான குண்டு. வெக்கை நாவலில் பூமணி எழுதியிருப்பார். கதை ஆரம்பத்தில் ஒரு கொலையைச் செய்துவிடுகிற நாயகன் கடைசிவரை கரிசல் காட்டில் இந்தக் குண்டுகளைத் தூக்கிக்கொண்டே திரிவான். நாங்கள் அவ்வளவு ரிஸ்க் (!) எடுக்காவிட்டாலும் இழுத்ததெல்லாம் வினைகள் தான். பள்ளிக்கூடம் திறக்க இன்னும் நான்கு நாள்தான் இருந்தது.


சேக்காளிகள் மூன்றுபேராகச் சேர்ந்து பத்து கல்குண்டுகளை ரைஸ்மில்லின் பின்பக்கச் சுவர் மேலே எறிந்து விளையாடப் போக, மொத்த காரைச் சுவரும் பொத்தல் போட்டுவிட்டது. அன்றைக்கு வாங்கின சாமக்கொடைதான். ஜென்மத்துக்கும் மறக்காது. இந்த வேலைக்கெல்லாம் இயங்கும் மூளை சல்பர் ஆக்ஸைடுக்கும் ,சல்பாரிக் அமிலத்துக்கும் குறியீடு என்ன என்று வேதியியல் வாத்தியார் கேட்டால் கவுந்ந்தடித்துப் படுத்துக்கொள்ளும் என்பதுதான் ஆகப்பெரிய காமெடி. 


சீனியையும், வர மண்ணையும் சோடா உப்பில் கலந்து, கொஞ்சம் வெள்ளை மண்ணெண்ணையைச் சுத்தி ஊற்றிப் பத்தவைத்தால் பாம்பு மாதிரி சாம்பல் பொங்கி எழும். சால்ட்பீட்டரை (கன் பவுடர்) பி.வி.சி பைப்புக்குள் இறுக அறைந்து நாலு சுண்ணாம்புக் கல்லை கலந்துபோட்டு, தேங்காய் நாரால் அடைப்பை மூடி பற்றவைத்தால் ஒரு பாறாங்கல்லையே பிளக்கக் கூடிய வெடிப்பை நிகழ்த்தமுடியும் என்றெல்லாம் புரிபட்ட இந்த “பிஞ்சு மனசு”க்கு KNO3 தான் பொட்டாசியம் நைட்ரேட் என நியாபகத்திலே நிற்காதது ஏனென்று தெரியவேயில்லை. 


ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், லீவு காலத்தில் செய்யும் இந்த பயங்கரவாத சாகசங்களை எல்லாம் எப்படா பள்ளிக்கூடச் சகாக்களிடம் போய் சொல்லி, செய்துக் காட்டுவோம் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கமாய் இருக்கும். ஆனால், பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு என்னும்போது உண்ண உறங்க வாய்வார்த்தை இல்லாமல் மனசு நிம்மதி இல்லாமல் அலையும்.. அதுக்குள்ள ரெண்டுமாசம் முடிஞ்சிருச்சா என்று!


ச்சை.. என்ன மானங்கெட்ட மனசோ...!

-கார்த்திக் புகழேந்தி

13-05-2017Comments

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர். நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம். “காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம். உழுவதற்…

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 
அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக…

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான். 

அன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன். 
முழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…