Skip to main content

அங்காடித் தெரு

அங்காடித் தெரு
************************

SKDS

திருநெல்வேலியிலிருந்து, திசையன்விளையிலிருந்து, சாத்தான்குளத்திலிருந்து மஞ்சள் பைகளோடு மற்ற மாவட்டங்களில் வியாபார நிறுவனங்களைத் தொடங்குகிற அண்ணாச்சிகள் நிறைந்த ரங்கநாதன் தெருபோல கோவைக்கும் நிறைய பெரிய வணிகச் சாலைகள் உண்டு. அதில் முக்கியமானது காந்திபுரம் கிராஸ்கட் சாலை.

மேற்கு மாவட்டங்கள் முழுக்க கிளைவிரித்து கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான கிளைகளை விஸ்தரித்திருக்கும் அந்நிறுவனத்தின் கணபதி கிளையில் நான் கணக்காளராக இருந்தேன். அநேகமாக கொங்குக்காரர்கள் யூகித்திருக்கலாம் நான் எந்த நிறுவனத்தைச் சொல்கிறேன் என்று..

இந்த கணக்காளர் வேலை என்பது கணக்கு வழக்குகள் பார்ப்பது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிளையின் நிர்வாக முடிவுகளை எடுக்கக் கூடிய அளவுக்கு கொஞ்சம் பலமான பதவி. 2007-09களின் இறுதிவரைக்கும் இந்த “டான்” பொறுப்பில் நடமாடிக் கொண்டிருந்தேன்.

விற்பனை, கொள்முதல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டாலும் மற்ற கணக்குவழக்குகளை கையால் எழுதியே சாகடிக்கிற நிறுவனத்தில் மற்றெல்லா கிளைகளுக்கும் ’மின்னணு தரவு செயலாக்கப் பொறுப்பாளர்’ என்று தனியாக ஒரு நபர் இருப்பார். ரொம்ப படுத்துகிறேன் இல்லையா?! EDP - incharge என்பதைத்தான் அப்படிச் சொல்லிவைத்தேன்.

கணபதி கிளையில் இந்த பொறுப்புக்கு ஆள் யாரும் இல்லாததால் நம் தலையிலே அந்த வேலையும் விழும். அதாவது பில்போடுகிற கணினிகளில் ஏதாவதும் கோளாறு என்றால் உடனே, “கூப்பிடு கணக்காளரை” என்பார்கள். நாமும் அத்தனைக் கூட்டமும் காத்திருக்க தடாலடியா உள்ளே இறங்கி அட்மினில் நுழைந்து அது இது என்று ஏதாவது செய்து பிரச்சனையைச் சரிசெய்வது வாடிக்கையாக இருக்கும்.

சரி, என்ன படித்துவிட்டு இந்த வேலையெல்லாம் பார்த்தே? என்று கேட்காதீர்கள். வல்லநாட்டில் பால் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த முருகேசன் சார்தான் எங்களது அந்த நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் (CGM). ஆலங்குளத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஆறுமுகம் சார்தான் துணை பொதுமேலாளர் (DGM). படிப்பை விட அனுபவத்துக்கும் உழைப்புக்கும் வாய்ப்பு கொடுக்கிறவர் அண்ணாச்சி.

சரி இந்த முன்கதைகள் எல்லாம் இருக்கட்டும் நான் சொல்லவந்த விஷயமே வேறு. காலையில் செல்வா அண்ணன் ஒரு சேதி எழுதி இருந்தார். சூப்பர் மார்கெட்டில் பில் போடுகிற கவுன்டரில் “ஹே அந்த மௌனராகம் கார்த்திக்கை என்கிட்ட அனுப்பு” என்று பிள்ளைகள் சைட் அடிக்க பந்தாடின கதையை...

இதேமாதிரியான அனுபவங்கள் ஏகப்பட்டது அப்போது எங்களுக்கு உண்டு. என்ன ஒன்று பயல்கள் நாங்களாக இந்த வேலையைச் செய்வோம். பகீர் அழகுடன் தேவதைத் தனத்தோடு நமக்கு நன்கு அறிமுகமான வாடிக்கையாளர் யாராவது வந்துவிட்டால் போதும், பில்லிங்கில் இருக்கும் லோக்கல் ஸ்பை நமக்குத் தகவல் அனுப்பிவிடுவான்.

அந்த சிஸ்டம் மட்டும் உடனே பழுதாகும். தள மேலாளரிடம் இருந்து நமக்கு அழைப்பு வரும். சூறாவளி மாதிரி உள்ளே நுழைகிறது. மற்றவர்களைப் பக்கத்துக் கவுண்டருக்கு மடைமாற்றிவிட்டு, நம்மவர் வருகிற நேரம் பார்த்து, கணினி சீராகும் உடனே அவருக்கு பில் போட்டு நலம் விசாரித்து, எக்கச்சக்கமாய் வழிந்து, கேஷ் கவுண்ருக்கு வழியனுப்பி வைத்து, “அது என் டார்கெட். எவனாச்சும் லேசா அந்தப் பக்கம் திரும்பினாலும் உதைபடுவீங்க” என்பதுபோல கண்காட்டுவது வரைக்கும் இல்லாத ஜித்துவேலைகள் செய்வது.

வெளி உலகம் தெரியாத அந்த அங்காடித் தெரு வாழ்க்கையில் இதுமாதிரியான புதுவசந்தங்கள் தான் பெரிய சுவாரஸ்யமே. நட்பு ரீதியான பழக்கங்கள், மினியேச்சர் ப்ரியங்கள் என்று அது வேறுமாதிரி உலகம். வாடிக்கையாளர்களுக்கான மரியாதையும் துளியும் மிஸ் ஆகாது. இதெல்லாம் சின்னச் சின்னச் சேட்டைகள் அவ்வளவுதான். அதிகபட்சமாக செல்போன்கள் கூட இல்லாத உலகின் அந்த நேர அற்புதங்கள். (இப்போது நிலைமை எப்படி என்று தெரியவில்லை)

பாய்ஸ் ஒன்லி பள்ளிக்கூடம் போலான அந்நிறுவனத்தில் கிட்டத் தட்ட ஏழுவருடங்கள் அந்த உழன்று கொண்டிருந்தேன். “ஒழுங்கா படிக்கலைன்னா, கார்த்தி அண்ணாட்ட சொல்றேன் பாரு” என்று தன் பிள்ளைகளை மிரட்டும் அம்மாக்கள் வரைக்கும் எல்லாம் எங்கள் வாடிக்கையாளர் உலகத்தில் நேசமானவர்களாக இருந்தார்கள். சொல்லப்போனால் எங்கள் வெளியூர் உறவுகளாக பல வாடிக்கையாளர்கள் அமைந்தார்கள். பண்ணரியம்மனைக் குப்பிடப் போகிறபோதெல்லாம் ஒரு இனுக்கு திருநீரை எங்கள் பயல்களுக்கு எடுத்துவந்து பூசிவிடுகிற அம்மைகள் திரிந்தார்கள்.

கணக்காளராகும் முன் கிராஸ்கட் கிளையில் தலைமை காசாளராக இருந்தேன். அப்பாவிடமிருந்து வேகவேகமாக பணத்தைச் சுழற்றிச் சுழற்றி எண்ணுகிற பழக்கம் எனக்கும் தொற்றி இருந்தது. மொத்தக் கூட்டத்துக்கும் ஒத்தைக் காசாளன். கோவையில் உதவி ஆணையாளராக இருந்த போலீஸ்காரர் ஒருவர் அப்போது எங்கள் தளத்துக்கு வருவார். மனைவி மகன்களை பொருட்கள் வாங்க அனுப்பிவிட்டு கேஷ் கவுண்டர் அருகே நின்றுகொள்வார். “நீ பாட்டுக்கு வேலை பாருடே நான் பாட்டுக்கு உன்னைப் பார்த்துட்டு இருக்கேன்” என்பார். கேட்டால் என்னுடைய வேகத்துக்கு விசிறி என்பார்.

அவர் சொல்லும்போதே அவ்வளவு கெத்தாக இருக்கும். பில்லிங்கில் இருக்கிறபோது கீபோர்டில் கை விளையாடுகிறதாகட்டும், விற்பனையாளனாக இருக்கிறபோது மாய்ந்து மாய்ந்து வேலைகள் செய்கிறதாகட்டும் ஒவ்வொரு படியும் வேகவேகமாக முன்னேறி வந்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.

கடைசியாக 2009ல் உதவி மேலாளராக இருந்துவிட்டு ஒரு சின்ன முட்டலில் நானும் என்னோடு சகாக்களாக இருந்த பதிமூன்று நண்பர்களுமாக ஒரே நாளில் வேலையை விட்டு வெளியில் வந்தோம். இன்றைக்கும் 13ல் ஐந்துபேர் சென்னையில் கூட்டாகத் தொழில்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் ஊர்ப்புறங்களில் கிராம நிர்வாக அலுவலராக, மளிகைக் கடை உரிமையாளராக, வங்கியில் காசாளராக என்று ஆளுக்கு ஒரு வேலையில் ஐக்கியமாகிவிட்டார்கள். அவன் பிள்ளைக்கு இவன் பேர் விடுகிறது இவன் பிள்ளைக்கு அவன் பேர் விடுகிறதெல்லாம் கூட நடக்கும்.

சக நண்பர்கள் நிறைய பேர் தங்களுடைய கல்லூரி அனுபவங்களைச் சொல்கிறபோது, நாங்கள் எங்களது அங்காடித் தெரு நாட்களை அசைபோட்டுக் கொள்வோம். எந்த வித கெட்டப் பழக்கங்களுக்கும் ஆட்படாமல், ஒழுங்கு மீறாமல் நாங்கள் எங்கள் 16-24 வயதுடைய பிராயத்தை கடந்தோம் என்றால் அதற்கு அந்த நிறுவனமும் அதன் கட்டுப்பாடுகளுமே காரணகர்த்தா.

செங்காட்டுப் புழுதியில் சுற்றிக் கொண்டிருந்தவர்களைக் கூட்டிவந்து இரவுபகலில்லாமல் உழைப்பை உறிஞ்சினாலும், வாழ்க்கையில் முன்னேறுகிற தைரியத்தைக் கற்றுக்கொண்டது அங்கேதான். எப்போது கேட்டாலும், எந்த நிலையிலும் வேலைபார்த்த நிறுவனத்தை நேசிக்கிறவர்களாகவே பழைய நண்பர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நிறுவனத்தின் ஆண்டுவிழாவுக்காக வரவேற்புரை எழுதித்தரச் சொல்லி மார்கெட்டிங் ஜி.எம்.அழைத்திருந்தார். “இப்போ எங்கே வேலை?” என்றார். நான் இருக்கும் இடத்தின் பெயரைச் சொன்னேன். “எங்கேயோ போய்ட்டியடே, நல்லாயிரு” என்றார். நல்லாயிருப்போம் சார் என்று போனை வைத்தேன்.

-கார்த்திக்.புகழேந்தி


04-05-2016

Comments

  1. தங்களின் வாழ்க்கைப் பயணம் பல பாடங்கள் அடங்கியது. அனுபவம்தான் மிகப் பெரிய பல்கலைக்கழகம். பல வெற்றிகளின் உச்சத்தை அடைய வாழ்த்துகள். எத்தனை வெற்றிகள் வந்தடைந்தாலும் நீங்கள் இதே கார்த்தியாக நல்ல மனிதராகவே மண்ணின் மணத்துடன் இருப்பீர்கள் வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர். நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம். “காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம். உழுவதற்…

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 
அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக…

அவளும் நானும் அலையும் கடலும்

மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு.
முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள்.
*
இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?” என்ற அவளுடைய…