இண்டமுள்ளு




   அரசனை எனக்கு நண்பர் கோவை ஆவி மூலமாகத் தெரியும். இரண்டு பேரையும் விக்ரமாதித்யனும் வேதாளமும் போல ஒன்றாகவேதான் பலதடவைச் சந்தித்திருக்கிறேன். டிஸ்கவரி புத்தக நிலையத்தில் ஒரு சந்திப்பின்போதுதான் அரசனோடு நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தது. பேச்சு முழுக்கக் “சிறுகதைகளைச்” சுற்றி நிகழ்ந்தது.

அரசன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை அப்போதுதான் அறிந்தேன். பொதுவாகவெ கதைகள் மீதுகொண்ட ஈர்ப்பும், அதிலும் வட்டார வழக்கு மொழியில் எழுதப்படும் கதைகள் மீதான பிடித்தமும் அரசனின் புத்தகமான “இண்ட முள்ளு” மீது பேரார்வத்தைக் கொடுத்தது.

வட்டார வழக்கில் எழுதுகிறபோது மொழி புரியமாட்டேன் என்கிற கூற்றைப் பலரும் சொல்வதுண்டு. அதன் நியாயத்தை உணர்ந்தும் இருக்கிறேன். ஆனால் அதற்காக நிலத்தின் பேச்சை விட்டுவிட்டு எளிமை எனப்படுகிற சாலைகளில் நடப்பதற்கு நான் எப்போதும் விரும்புகிறவனில்லை. எனக்குக் கால் கட்டாந்தரையில் படவேண்டும்.  கரிசலோ, செம்மண் புழுதியோ விரலிடுக்கில் அந்த மண் ஒட்டவேண்டும். மக்கள் பேசுகிற சொற்கள் எழுத்தில் உயிர்பெற வேண்டும். ஈழத்துப்பேச்சு புரிபடமாட்டேன் என்று அந்த மண்ணின் கதைகளை கலோக்கியலுக்குக் கொடுங்கள் என்றால் எவ்வளவு கோளாறாக இருக்கும். அதுமாதிரிதான் என் வட்டார மொழியின் நியாயமும்.

இன்னும் சொல்லப்போனால் மனிதர்கள் பேசுகிற/ புழங்குகிற சொற்களுக்கிடையிலேதான்  நல்ல தமிழ் வாழுகிறது. அதைபோட்டு உரித்து தோல்சீவி,  வாயில் வைத்து ஊட்டிவிடுகிற வழக்கத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்றாலும் மண்சார்ந்த எழுத்துக்களில் அந்த குதர்க்கத்தைச் செய்யவேண்டியதில்லை என்று நம்புகிறேன். ஃப்ரைடு ரைஸ் வறுத்துக் கொடுக்க ஏகப்பட்ட கடைகள் இருக்கின்றன வீதியில். எனக்கு வயலும் நாற்றங்காலும் தான் வேண்டும் என்ற கொள்கையில் கட்டிப்பட்டிருக்கிறேன். அரசன் எனக்குப் பக்கத்து வயல்க்காரர்.

அரசனின் மொழி அரியலூருக்குச் சொந்தமான புழங்குமொழி. நீட்டி இழுக்கிற வார்த்தைகளில் மண்ணின் உயிரை அறுவடை செய்கிற அடர்த்தியான மொழி. காய்ந்த கள்ளியில் பழம்பழுத்துக் கிடக்கிறமாதிரியான சுவையான சொலவடைகளோடு கூடிய மொழி. அவரது கதைத்தன்மைகள் ஈரமும் துயரமும் அப்பட்டமான உண்மையுமானது. மனிதர்களோடு இயங்குவதின் ஊடே மண்ணின் வாழ்நிலையைப் பெருமையோடு பதியும் குணாதிசயம் கொண்டது.

அரசன் 


“இண்ட முள்ளு” வாசிக்கும்போது நான் அந்த நிலத்தின் காற்றை சுவாசித்துக் கிடந்தேன். உகந்த நாயகன் குடிக்காட்டின் சுணைத் தண்ணீரின் ருசி வழிந்து ஓடுகிறது. உழைத்து உழைத்து கட்டிபிடித்துப் போன கைகளை வீசி நடக்கிற மனிதர்களை, அவர்கள் வாழ்க்கைப் பாடுகளை, அவரது வயல்நிலங்களின் உழவுகளை, சாக்குப்போக்கு பார்க்காமல் காடுகரையெல்லாம் அலைந்து மேய்க்கிற அவர்கள் கால்நடைகளை, கபடங்களை, பொல்லாப்புகளை, இன்னுமென்னென்ன உண்டோ அத்தனையின் சொச்சத்தை கதைகளின் வழி பதிவு செய்திருக்கிறார் அரசன்.

நான் நிலையில்லாத பித்தம் கொண்டு ஒரு நடுராத்திரியில் தூக்கமற்று தவித்தேன். சம்சாரியின் சாவுகளை எழுதுகிற கதைகளுக்குள் மூச்சைத் தொலைத்தேன்.  ‘எங்கேய்யா இருந்தே இத்தனை காலமா எழுதாமல்’ என்று அரசனை வசையால் வதைத்தேன்.  ஒருநாள் இடைவெளிக்குப் பிறகு போனில் பிடித்து நடுரோட்டில் நின்றுகொண்டு உம்முடைய கதைகள் எல்லாம் உம் மண்ணுடைய மக்களின் வரலாறுகள். அந்த நிலத்தில் விழுகிற ஒவ்வொரு துளி மழைக்குமான விதைக்கூறுகள் என்றேன்.

அரசனுக்கு வாய்வார்த்தைகள் நின்றுபோயிருந்தது. நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். மனிதர் கேட்டுக்கொண்டே இருக்கிறார். நான் மனசு நிறைந்து நிற்கிறேன் கார்த்தி என்றார். என் மொழி படிக்கச் சங்கடமாய் இருப்பதாக சில நண்பர்கள் சொன்னபோது நான் கொஞ்சம் அவஸ்தையாய்த்தான் உணர்ந்தேன். அந்த அவஸ்தையை வலிதெரியாமல் என் நெஞ்சில் இருந்து உருவி எடுத்துவிட்டீர் என்றார்.

 “நாக்கில்லாதவன் தேனின் சுவையை மட்டம் சொன்னதுபோல இம்மாதிரி கதைகளை வாசிக்கக் கடினமாய் இருக்கிறது என்பாரை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீரைய்யா. நீங்கள் செய்வது நூற்றாண்டுகளுக்குப் பிறகு எடுபடுகிற வேலை. உம்முடைய மண்ணில் உலவிய மக்களின் வாழ்க்கையை அவர்கள் சுயத்தோடு அனுமானம் பண்ணும்படிக்கு படியெடுத்து வைக்கிறீர். அதை வாசிக்கிறவர்களின் போதாமைக்காக வாய்மொழியைத் திருத்தி எழுத வேண்டியதில்லை என்று பெரும்பேச்சு பேசிக்கொண்டிருந்தேன்.

நாலாம் வகுப்புப் பையனுக்கு நாலாயிரம் சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பார் என் தமிழ் வாத்தியார். இங்கே எவனுக்கு அவ்வளவு கூறு தெரிந்திருக்கிறது. அவனைப் பற்றிக் கவலைப்பட்டு, “செலை கடித்த மாட்டுக்கு அடிநாக்கில் நரம்பைக் கீறிவிடுகிற” காரியத்தை எழுதாமல் விட்டுவிடாதேயும் என்றேன்.

     நேர்மையாகச் சொன்னால் நான் அரியலூர் நிலத்துக்கு அந்நியமானவனாகவே பிறந்திருக்கிறேன். எனக்கு அந்த நடுநாட்டின் பேச்சு அவ்வளவு அணுக்கமானதும் இல்லை. சிலநண்பர்களைத்தாண்டி அந்த ஊர்ப்பக்கத்து மனிதர்களை அறிந்ததும் கிடையாது. முண்டுதட்டி முட்டிமோதித்தான் அந்நிலத்தின் கதைகளைப் பின்பற்றுகிறேன். இருநூறு தலைக்கட்டுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த படைப்பாளியின் கதையை எந்த சம்பந்தமும் இல்லாத நான்போய் நீ எழுதியதைப் படிப்பதற்குச் சிரமமாய் இருக்கிறது என்று சொல்வதில் எவ்வளவு கூமுட்டைத்தனம் இருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறேன். அதனாலேயே எனக்கு உம் கதைகள் சிரமமில்லாமல் வாசிக்க முடிந்தது என்றேன்.


            வாசிக்கிற கதைகளில் நம் அறிவுஜீவித்தனத்தை தூர வைத்துவிட்டு, ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்துப் பயலாக புதிதாக நாமொன்றைத் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என்று கையைக் கட்டிக்கொண்டாலே தன்னாலே நாம் கதையின் சேற்றில் கால் நனைத்துவிடுவோம் என்று எண்ணுகிறேன். தவிர “இண்டமுள்ளு”க்காக நான் இத்தனை தூரம் பேசுவது சும்மா அந்த வட்டாரமொழி என்ற என் போதைக்காக மட்டுமில்லை. தாய் ஊட்டும் சோற்றுக்கிடையில் ஒரு ருசி நாக்கில் ஒட்டிக்கொள்ளுமே அந்தமாதிரியான கதைகளை எந்த வித சமரசமும் இல்லாமல் எழுதுவதும், முப்பது பக்கத்துக்கு ஒரு கதைக்கான தேவை இருக்கிறது என்றால் துணிந்து அதை எழுதுகிற கதைக்காரனின் வைராக்கியமும் தான் அரசனை தலைநிமிர்ந்து நிற்கச் செய்கிறது. எனக்கொரு சேக்காளி கிடைத்தமாதிரி மகிழ்கிறேன்.

-கார்த்திக்.புகழேந்தி
23-05-2016.




Comments

  1. கார்த்தி எங்கள் நண்பர் அரசனின் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும் என்பதால் இப்போதைக்குத் தங்கள் விமர்சனத்தை வாசிக்கவில்லை. யாருடைய விமர்சனத்தையும் வாசிக்கவில்லை. ஏனென்றால் நாங்களும் வாசித்து எழுத வேண்டும். அப்படியே உங்கள் புத்தகம் உட்பட புத்தகச் சந்தையில் வாங்க உள்ளோம். வருகின்றோம் மீண்டும் வாசித்து விட்டு....உங்கள் பதிவுகள் சில விடுபட்டு விட்டது...இதோ போய் வாசிக்கணும்...

    ReplyDelete
  2. விக்ரமாதித்தன் -வேதாளம்.. ஹஹஹா.

    நண்பர்கள் மனதைத் தாண்டி மக்கள் மனதைத் தொட்டுவிட்டீர்கள்.
    பார்ப்போம், இருவரில் யார் முதலில் சாகித்ய அகாடமி வாங்குகிறீர்கள் என்று. இப்போதே என் வாழ்த்துகளை சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil