அம்மன் சன்னதி



காலம் எவ்வளவோ மாறி இருக்கிறது என்பார்கள். திருநெல்வேலி மட்டும் அப்படியே இருக்கிறதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. என்ன கொஞ்சங்கொஞ்சம் அங்கங்கே சிமெண்ட் ரோடுகள் வந்துவிட்டது. பாளையங்கோட்டைக் காரனாக பிறந்து வளர்ந்தவனென்பதால் ஆற்றுக்கு அந்தப்பக்கமுள்ள நெல்லை டவுண் மீது ஏகபோகமாக ஒரு ஈர்ப்பு உண்டு எனக்குள். டவுணுக்குச் கூட்டுப் போகிறார்கள் என்றால் ஏதோ திருவிழாவுக்குச் செல்வது மாதிரி நினைப்பில் அலைவேன்.
அரசுப் பொருட்காட்சி, ஆனித் தேரோட்டம், தீபாவளி துணியெடுப்பு, பொங்கல் இந்தமாதிரியான நாட்களில் தான் டவுணுக்குக் கூட்டுப் போவார்கள். இதுபோக ராயல், ரத்னா தியேட்டர்களில் படம்பார்க்கப் போவதெல்லாம் பேரதிசயம் தான். இத்தனைக்கும் பாட்டன்மார்களுக்குப் பூர்வீகமே டவுண் குற்றாலரோடு தானாம். இன்னும் சுண்ணாம்புக்காரத் தெரு என்று கேட்டால் தெரியும் என்பார்கள். தாத்தன்கள் எல்லாம் சாலைத்தெருவிலும், சாலியார் தெருவிலும் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்ததாகச் செவிவழிச் செய்தி. நான் கண்ணால் பார்த்ததில்லை. ஏழு தாத்தன்களில் மிச்சமிருந்த ஒன்று ரெண்டு பேரும் நான் விரல் சூப்பிக் கொண்டிருந்தபோதே படுக்கையாக விழுந்திருந்தார்கள்.
அம்மையைக் கட்டிக்கொடுத்த விதத்தில் நான் பாளையங்கோட்டையிலே வளர்ந்தாலும் ஆற்றைக் கடந்து மேம்பாலம் ஏறி கோயில்வாசலில் பஸ்ஸை விட்டு இறங்குகிறோம் என்றாலே மனசுக்குள் ஒரு குதியாட்டம் வந்துவிடும். ரதவீதிகளை வா(ய்)பார்த்துக் கொண்டு, முன்னே இழுத்துக் கொண்டு நடக்கிற கையின் வேகத்துக்கு இணையாக ஓட்டமும் நடையும் போட்டிருக்கிறேன்.
ஆச்சி சொல்லும் ‘இங்கிருந்தே ஒரு கும்பிட போட்டுக்க வேண்டியதுதான்’ நெல்லையப்பனுக்கு என்று. எஸ்.என். ஹைரோட்டுக்கு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை என்றும், அது ஆசியாவிலே நீளமான சன்னதி என்றும் விபரம் புரிந்தபோதுதான் ஆச்சி சொன்னதற்கு அர்த்தம் பிடிபட்டது. நெல்லையப்பருக்கு சன்னதி அத்தனை பெரிது. டவுண் கோயில் வாசலில் ஆரம்பித்து, பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சிக்னல் வரைக்கும் நூல்பிடித்தமாதிரி ஒரே சாலை தான். முருகன்குறிச்சியில் வந்துதான் திருவனந்தபுரம் திருச்செந்தூர் சாலைகள் பிரிகிறது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, டவுண் சாப்டர் பள்ளிக்கூடப் பையன்களுடன் கிரிக்கெட் ஆடச் செல்வோம். கிட்டத்தட்ட கதீட்ரலில் படித்த எங்களுக்கும் , அவன்களுக்கும் அப்போது ஒரேமாதிரியாக சிமெண்டு நிறத்தில் கால்ச்சட்டை மாற்றி இருந்தார்கள். நிறைய ஆட்டங்கள் பிறகு அவனவன்கள் வீட்டுக்கு அழைத்துப் போவான்கள். அங்கே சொம்பு நிறைய தண்ணியைக் குடித்துவிட்டு நடந்தே பாளை மார்க்கெட்டுக்கு வர இருட்டியிருக்கும்.
இந்தக் காலக்கட்டங்களில் தான் டவுண் கலாச்சாரங்களுக்குள் மெல்ல நான் புகத் தொடங்கினேன். நிறைய நாள் இதே ‘அம்மன் சன்னதி தெருவில்’ நடந்தலைந்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த மஞ்சள் சுண்ணாம்புக் காரை வீட்டை எட்டே நின்று பிரம்மிப்பாகப் பார்த்துவிட்டு, தாண்டி ஓடியிருக்கிறேன். உள்ளே உறைந்திருக்கிறவர் தமிழுக்கு செவிமயங்கிக் கிடக்கிற வயது வரைக்கும் அவர்பற்றிய சிலாக்கியங்களைக் கேட்டு அசைபோட்டுக் கொண்டதோடு சரி.

கொஞ்சமே கொஞ்சமாகத் தமிழ் படிக்கத் துவங்கின திருநெல்வேலி மாவட்ட நூலகங்களில் கடலலைக்கு ஒதுங்கின சிப்பி மாதிரி படிந்துகிடந்தேன். யாராவது எடுத்து எறிந்தால் கடலுக்குள் போவதுமாதிரி மீண்டும் வீட்டுக்குக் கிளம்புவது வரைக்கும் புத்தகங்கள் மேய்வது. அப்படித்தான் நெல்லை கண்ணன் ஐயாவைத் தெரிந்துகொள்கிறேன். பிறகு பலகாலங்கள் கழித்து அவர் பேச்சுப் பதிவுகளைக் கேட்டு பரிபூரணமாக அந்தத் தமிழுக்கு தலைசாய்ந்து நிற்கத் துவங்குகிறேன். அடுத்து வந்த நாட்களில் சொக்கல் சந்த் சேட் கடையில் கடைச் சாமான்கள் வாங்க அனுப்பப் படுகிறபோதெல்லாம் அம்மன் சன்னதியிலிருக்கும் இந்த மஞ்சள் காரை வீட்டை அத்தனை பிரம்மிப்போடு கடந்து போவதுண்டு.
சென்னைக்கு வந்த பிறகு ஊர்திரும்பிச் செல்கிற நாட்களில் மூங்கில் மூச்சு படித்ததும் சுகா அண்ணன் இங்கே தான் இருப்பாரோ, தாயார் சன்னதி என்று இந்தத் தெருவைத்தானே எழுதினார். இங்கேதானே சொக்கப்பனை எரியும்.என்ற நினைப்புகளோடு, ஐயா எழுதின குறுக்குத்துறை ரகசியங்களில் வரும் இராவண்ணா கதைகளும் அவர் இப்போது உயிரோடு இல்லையே ‘ச்சே’ என்ற வருத்தமும் கிளர்ந்து எழும்.

சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் என்னை மட்டும் குமரேசன் அண்ணன் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்தாலோ, ஐயாவிடம் அறிமுகம் செய்துவைக்காமல்போயிருந்திருந்தாலோ இன்றைக்கு வரைக்கும் தாயார் சன்னதி தெருவும், இந்த வீடும் நினைப்புகளுக்குள்ளே மட்டுமே வாழ்ந்திருக்கும்.
ஆனால் காலம் ஒருநாள் இந்த வீட்டின் நடுக்கூடத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. பெரியவர் காலில் விழுந்து வணங்கச் செய்தது. இதே வீட்டில் தலைவாழை இலையில் சோறு போட்டு இன்னும் வேணுமா என்று கேட்கச் செய்தது. ஊரேக்கூடி அவர் பிறந்த நாளுக்குக் கொண்டாடுகிற மேடையில் கைகட்டிக் கொண்டு அவர் பக்கத்திலே இரண்டுநாட்கள் நிற்கச் செய்தது. முகநூலில் எழுதுகிறதைப் படித்துவிட்டு, “என் பிள்ளைகள் எனக்குப் பின்னாலும் உண்மைகளைத் தைரியமாகச் சொல்லுகிறவர்களாக இருப்பார்கள்” என்று அவர் வாயாலே பேறு பெற வைத்தது.

முதல்தடைவை எழுதின புத்தகத்தை அவர் கையில் கொடுத்து, “இவன் தான் எழுதினான்” என்று குமரேசன் அண்ணன் சொன்னபோது, “அதுக்கு என்ன செய்ய. கட்டி வச்சி தொலிய உரிச்சுருவமாடே?” என்று கேட்டபோது அந்தக் கணமே சிரித்துத்தான் விட்டேன். “கார்த்தி ஏறு வண்டியில, ஒழுங்கா சாப்ட்டு போ”, “என்னவாம் அவனுக்கு” என்கிற சில வார்த்தைகளுக்கே வாயடைத்து நிற்கிறதுதான் எனக்கு வேலையாக இருக்கும். இப்போதும் யார் கேட்டாலும் சொல்லுகிறேன். நாங்கள் தாயார் சன்னதியில் நெல்லை கண்ணன் ஐயாவை வா பார்த்து வளர்ந்த பிள்ளைகள் என்று.

-கார்த்திக்.புகழேந்தி.

13-05-2016



Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil