பார்டர் பரோட்டாமே15 தொடங்கி 19வரைக்குமாக ஐந்துநாட்கள் ஊரில் இருந்தேன். முதல் மூன்று நாளுமே அவ்வளவு மழை என்பதால் உள்ளூரிலே சுற்றிக் கொண்டிருந்தேன். அண்ணனுடைய யமஹா RX135 மீது உட்கார்ந்து கொண்டாலே ஒரு தனி கெத்துதான்.
மூன்றாம்நாள் மதியம் திருநெல்வேலி - மானூர்- தேவர்குளம்- பனவடலிச்சத்திரம் வழியாக சங்கரன்கோவில் சென்றிருந்தேன். அங்கே நண்பர் துரை மோகன்ராஜ் அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். கொஞ்ச நேரம் இளைப்பாறலுக்குப் பின்னே இரண்டுபேருமாக நெல்கட்டான்செவலில் உள்ள பூலித்தேவன் அரண்மனைக்குச் சென்றோம். வழியில் தென்பட்ட கல் மண்டபங்கள், நாட்டார் தெய்வங்கள் போன்றவற்றை நான் படமெடுத்துக்கொண்டேன்.
பூலித்தேவர் அரண்மனையை அடைந்தபிறகு அவ்வூரில் உள்ள குறிசொல்லும் பூசாரி பற்றி நண்பர் சொன்னதும் அவரைத்தேடி ஊருக்கு மேற்குகோடியில் உள்ள கோயிலுக்கே சென்றோம். அங்கு சென்று வந்ததில் ஒரு நல்ல கதை தேறியது.
பிறகு வழியில் உள்ள ஊர்களில் பச்சேரி என்னும் இடத்தில் முற்கால நந்தி சிற்பம் ஒன்றைக் கண்டேன். எப்படியும் 500 வருஷங்கள் முந்தையதாக இருக்கலாம். ஆவுடை ஆற்றங்கரையில் கரைவீரன் முனி கோயில் அருகே நடப்பட்டிருந்த நடுகற்கள், முசல்மான் கல்லறை ஒன்று என்று கேட்கிறதற்கான கதைகள் ஏகத்துக்குக் கிடைத்தன. அப்படியே ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வரைக்கும் இழுக்கலாம் என்றால் மேகம் மிரட்டிக் கொண்டிருந்தது.
மாலையில் மீன்துள்ளி உணவகத்தில் நண்பர் துரை மோகன்ராஜ் அவர்களிடமிருந்து விடைபெற்று நெல்லை திரும்பினேன். வரும்வழியில் ஒவ்வொரு ஊரிலும் சிறிது நேரம் பின்தங்கியபடியே வந்தேன். பனம்பாளை அறுத்து பதனீர் இறக்கிக்கொண்டிருந்தவரைப் படமெடுத்தபோது, கை நிறைய நுங்கு அறுத்துக் கொடுத்தனுப்பினார்.
காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும் பகுதியில் அங்குள்ள நண்பன் அழைத்துச் சென்றான். Wind millகளின் உட்பகுதியில் நுழைந்து அதன் கட்டமைப்பை வேடிக்கை பார்த்து வந்தேன். இரவு நெல்லை திரும்பி வைரமாளிகையில் மற்றொரு நண்பரோடு வெளுத்துக்கட்டல்.
மறுநாள் காலையிலே திருநெல்வேலியிலிருந்து பணகுடி சென்றிருந்தேன். பணகுடி-அம்பை சாலையில் பயணிப்பதுதான் எங்கள் திட்டம்.
புறவழிச் சாலைகள், நான்குவழிச்சாலைகள் வரும் முன்பு இந்தப் பாதைகள் தான் ஊரை இணைத்து வந்தவை. மெல்ல இவற்றின் பயன்பாடு குறைந்து வந்தாலும் பழமையின் தடங்களை இங்கே தரிசிக்க முடியும் என்பதாலே இப்படி குறுக்குப்பாதைகளில் பயணம் செய்தோம்.
திருக்குறுங்குடி, நம்பிகோயில், களக்காடு, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் வரைக்குமுள்ள இடைவெளியில் மட்டும் 10க்கும் குறைவில்லாத கல்மண்டபங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றின் உத்திரத்தில் பாண்டிய மீன்சின்னங்களையும் கண்டு படம் பிடித்துக் கொண்டேன்.
அம்பை வந்ததும் குற்றால ஆசை பெருக்கெடுத்தது. விடு வண்டியை என்று தென்காசி வழியே குற்றாலம் நுழைந்தோம். ஐந்தருவியில் குளியலும், மிளகாய் பஜ்ஜியும் கனஜோர். சீசன் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் கூட்டம் இருந்தது.
பிறகு குற்றாலத்திலே ராத்தங்கல் போட்டுவிட்டு இரவு செங்கோட்டை ரஹ்மத்தில் பார்டர் பரோட்டாவும், நாட்டுக்கோழியும் தின்று செழித்தோம். மறுநாள் காலை ஓட்டு எண்ணிக்கை என்பதால் இரவே ஊரைச் சுற்றிமுடித்து, காலையில் தென்காசி விஸ்வநாதர் கோயிலைச் சுற்றிவிட்டு நெல்லை திரும்பினோம். நெல்லை பைபாசில் உள்ள மண்சட்டிச் சோறு உணவு விடுதியில் மீன் குழம்பு சாப்பாட்டை முடித்து கர்ண மயக்கத்தோடு கன்னியாகுமரி மாலைவரை ஊர்சுற்றிவிட்டு இரவுப் பேருந்தில் சென்னை புறப்பட்டேன். நண்பர் ரொம்ப நல்லவர் போல ஒரு வெள்ளி மோதிரம் பரிசளித்தார். அய்யா நின் கொடை வாழ்க :P
பிறகு நேற்று அதிகாலை சென்னை வந்து இறங்கினேன். என்னைய்யா மழை மழை என்றீர்கள் வெயில் இந்தப் போடு போடுகிறது?

-கார்த்திக் புகழேந்தி
21-05-2016


Comments

  1. நீங்கள் நம்மூர்கள் எல்லாம் குறிப்பிட்டிருப்பது ஏதோ நானும் போய்வந்தது போல. திருக்குறுங்குடி, நம்பி கோயில் அதுவும் மலநம்பி கோயில் அழகாக இருக்கும். அங்கு கோயிலின் பின் புறம் இருக்கும் சிறு அருவியில் அந்தச் சுனையில் நீந்திக் குளித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. அதே போன்று களக்காடு காட்டிற்குள் தலையணை ஆறு

    நம்மூர் எப்படி இருக்கின்றது கார்த்தி அதான் திருநெல்வேலி, நாகர்கோயில் எல்லாம் கேரளத்தில் மழை அவ்வப்போது என்பதால் அங்கும் பெய்கின்றதா? இங்கு சென்னையில் செம வெய்யில் காய்ச்சுத் தள்ளுகின்றது.

    கீதா

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

வேட்டையன்கள்