வெட்கம் களைதல்...

ஐந்தாவது வயது எப்படி பூர்த்தியானது என்று இப்போது கேட்டால் எப்படி நினைவிருக்கும். ஆனால் லதா மிஸ்ஸும், கிருபா மிஸ்ஸும் இன்றைக்கும் நினைவிருக்கிறார்கள். இந்த டீச்சர்களின் வளையல் வடிவ கம்மலை நீங்கள் யாரும் உங்கள் வயதில் கவனித்திருப்பீர்களா தெரியவில்லை. க்யூ என்று ஆங்கிலத்தில் எழுதும் போது லதாமிஸ் ஒரு வெட்டு வெட்டி இழுத்து கரும்பலகையில் ஒரு டொக் வைப்பதை ரசித்திருக்கிறேனென்றெல்லாம் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு பழக்கமிருந்தது உண்டு உறங்கும் போது பாயில் படுத்தாலும் சரி, மெத்தையில் படுத்தாலும் சரி... கால் தரையில் படவேண்டும். அதற்காகவே முதல் ஆளாக தரை ஒட்டிப் உறங்குவது. இடைஞ்சலாக இருக்கும் காலணிகள் வீடு திரும்பும் போது டிபன் கூடைக்குப் போயிருக்கும் என்பது தனிக்கதை. ஏகச் சுட்டித்தனம். பள்ளிக்கூடத்தில் தான். அந்த வயதில் புளியங்கொட்டையை மூக்கில் நுழைத்து அது சிக்கிக்கொள்ள அக்காளிடம் சண்டை என்றேனாம். இரண்டு நாள் உள்ளே கிடந்து பொதுமிப் போன புளியங்கொட்டையை வெளியில் எடுத்து, தோட்டச் செடி வெட்டும் கத்திரி போலொன்றைக் காட்டி இனி மூக்கில் எதையாவது திணிச்சே மூக்கை நறுக்கிருவேன் என்ற டாக்டர் கண்ணு...