பெருசுகள்

கிழவருக்கு சொடலை என்று பேர். ஆள் பார்க்க வண்டிமையை மேலே தேய்ச்சதுமாதிரி அரைக் கருப்பாக இருப்பார். கைகாலெல்லாம் குச்சு குச்சாய் மூங்கில் குருத்துமாதிரி இருக்கும். மூளிக்குளத்தில் பேராச்சியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் வளவு மொத்தத்துக்கும் கிழவருக்குச் சொந்தமானதுதான். ஆனால் கொத்துச்சாவி எல்லாம் பெஞ்சாதி தங்கம்மாள் பெயரில்தான் இருந்தது. ஒண்ணேகால் ரூவாய் செய்யதுபீடிப் பொட்டலத்தை கையில் வாங்கி கசக்கி, உருட்டி, கீழே கட்டை விரலால் ஒரு குத்து குத்தினாரென்றால் மேட்ல்வாடு பிஞ்சுகொண்டு பீடிகள் வெளியில் நீண்டுகொள்ளும். அதில் ஒத்தைப்பீடியை எடுத்து பத்தவைத்துக் கொண்டு ஒருபல் கடியில் வாயில் வைத்துக்கொண்டே, ஏணிமீது ஏறி வைக்கப்போர் ஏத்துவார். “ஒருநா இல்ல ஒருநா பாரு கங்கு வுளுந்து படப்பு பத்திக்கலன்னா இருக்கு” என்று ஏசிக்கொண்டே தங்கம்மா ஆச்சி கரிச்சட்டியை கழுவி தொழுவத்துப் பக்கம் ஊத்தும். சொடலை தாத்தனுக்கு ரெண்டு பெஞ்சாதி. ஆச்சியைக் கட்டி ரெண்டு பொண்ணு பெத்தபிறகு, சீவலப்பேரியில் இருந்து ஒருத்தியை இழுத்துக்கொண்டு பச்சேரியில் வீடேத்திக் கொண்டார். இந்த சங்கதியெல்லாம் எங்களுக்கு ஆ...