அரவம் | நாகம்| சர்ப்பம்| பாம்புகள்

               சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம். அது வழக்கம்தான் என்றாலும், இன்றைக்கு சர்ப்பங்கள் குறித்து அவள்தான் தொடங்கினாள். பாலா அண்ணனின் பதிவில் என் பின்னூட்டம் பார்த்துவிட்டு, நாகங்கள் பற்றி என்ன நினைக்கிறாய் என்றாள். தூங்கப் போகிற நேரத்தில் இவளொருத்தி என்று திட்டிவிட்டு போனை வைத்தேன்.

            கண்மூடின திசையெல்லாம் அரவ அசைவு தான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி. சார்ஜர் ஒயர், ஹேல்டரில் தொங்கும் இடுப்பு பெல்ட், கொடிக்கயிற்றின் மிச்சம், புது ட்யூப் லைட்டின் உறை என எல்லாம் பாம்புபோல நெளிகின்றன.  திட்டிக்கொண்டேன்.கேட்டிருக்காது அவளுக்கு. பாம்புக் காதில்லை. கண்தான் கொஞ்ச(சு)ம் கழுகு.

இந்தக் காலையில், நாகங்கள் பற்றி, நாக நெடுந்தீவு பற்றி, நாகர்கள் பற்றி ஏன் நாகர்கோயில் பற்றிகூட வாசித்தது, கதைகேட்டதெல்லாம் நினைவுக்குள் ஓடினது.


            பாண்டவ சகோக்கள், நாகர்களின் காட்டை அழிக்க, அங்கே மயனால் கட்டப்பட்ட  “இந்திரப்பிரஸ்த மாளிகை”.  நாகர் உலகம் புகுந்து நஞ்சு குடித்து வீராதிவீரனான பீமன் இப்படி இதிகாசங்கள் ஒருபக்கம்.

            ஊர்க்காட்டில் பாம்பின் வால் பிடித்து, தலைசுற்றி அடித்து இன்புற்ற சேக்காளி நினைப்புகள் இன்னொரு பக்கம். இப்படி பல கிளர்ச்சிகள். ஒருதடவை பனிவாடாத நுனி கருக்கலில் வயலுக்குப் போன தங்கையா ஆசாரியைப் பாம்பு கொத்திவிட, வெள்ளக்கோயில் மருத்துவச்சி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். இப்போதுதானே அச்சும்ன்னு தும்மினாலே ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள்.

            மருத்துவச்சி வீடு வருகிற வரைக்கும்,"அந்தப் பாம்பைக் கொன்னுடாதீங்கய்யா, நாந்தான் தெரியாம வால் மிதிச்சுட்டேன்" என்று அனத்திக்கொண்டே போனாராம் ஆசாரி. சம்சாரிகளை வயல் எலிகள் படுத்தும் பாட்டுக்கு பாம்புகள்தான் நிவாரணம். "நல்லது போகுது கொஞ்சம் நின்னுப் போப்பா" என்பார்கள்.
இங்கே "நல்லது" என்பது நல்லப்பாம்பு. சக்கர வளைவு தலை அடையாளம்.

            ராசி, நட்சத்திரம், பெயர்க்காரணங்கள் வைத்தெல்லாம் பாம்பை அடிக்காதவர்கள் உண்டு. ஆயில்யக் காரர்கள் பாம்பை அடிக்காதார். நானும் ஆயில்யமாம். முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஏழெட்டு பாம்புகள் உயிர் பிழைத்திருக்கும்.  நாகராஜா, நாகலிங்கம், நாகலெட்சுமி பெயர்கொண்ட ஆட்களை  பாம்பு தீண்டிக் கேள்விப் பட்டதில்லை. அவர்களும் பாம்புகளை அடித்தும் பார்த்ததில்லை.

            சின்ன வயசில் பாம்புன்னு சொல்லாதே "பூச்சி"ன்னு சொல்லு என்று எங்கள் வாயில் அடித்த விஜயா அக்காளை நினைத்துக் கொள்கிறேன். என்னமாதிரி ஒரு ஏமாத்துத்தனம். அவசரத்துக்கு பூச்சி பூச்சி என்று கத்தி ஆளைக் கூப்பிடுவதற்குள் ஒரு காட்டு காட்டிவிட்டுப் போய்விடாதா. அரவத்தை ஒரு துண்டுமாதிரி சுழற்றி விளையாடுகிற பிள்ளைகளை திட்டுவிளையில் வசித்த நாட்களில் பார்த்திருக்கிறேன். திட்டுவிளை அமரர் ஜீவானந்தம் பிறந்த ஊர். அங்கே ஓடைப் பாம்புகள் ஏகப்பட்டது பார்த்திருக்கிறேன்.

            இத்தனை காலத்தில் நான் பார்த்ததிலே 'பெரிய்ய்ய்ய்ய" சர்ப்பத்துக்குச் சொந்த ஊர். கோழிக்கோடு. அப்போது லாரி ஓட்ட வேணும் என்று ஒரு பேராசை. ஓட்டியும்விட்டேன். சென்னை, சேலம், கோவை வழியாக வாளையார் நுழைந்து, கோழிக்கோட்டில் சரக்குகள் இறங்கின பிறகு, (சரக்கு என்ன என்பது இங்கே ரகசியமாகவே விடப்படுகிறது) ஊர்திரும்பும் வழியில் "மலையாளக்கராவில்" ஒரு குளியல் போடலாம் என்றார் மாமன். லாரியை ஒதுக்கிவிட்டு நதிக்கரையில் ஊறுகிற தமிழகத்து ஓட்டுநர்களை அங்கே யாரும் சட்டை செய்வதே இல்லை.

             நாற்பதடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த நதிக்குள் இறங்குகிறபோது அது எங்களைக் கடந்து போனது. சுமார் ஒரு முப்பது வினாடி வரைக்கும் அது வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அத்தனை நீளம். தொடை அகல வயிறு. சரள் மண்ணில் வெயில் அடித்த மாதிரி ஒரு மினுமினுப்பு. மிரண்டுவிட்டேன். இனி எங்கே குளிப்பது. படங்களில் பார்த்த பைத்தான், அனகோண்டா எல்லாம் நினைப்பில் வந்துமிரட்ட, தீர்த்தம்போல் தண்ணீரைத் தலையிலள்ளித் தெளித்துக் கொண்டு வண்டியில் ஏறினவன் தான்.

            நாகங்களில் ரொம்ப சிநேகமானது தண்ணீர் சாரை. பாவப்பட்டது பச்சைப் பாம்பு, கொடூரமானது கருநாகம், தொடை நடுங்க வைப்பது ராஜநாகம். நல்லது "ஆள்ப்பார்த்து" செய்யும் போல.  "நீங்கள் கேட்டவை" படத்தில் மூத்த அண்ணன் கதாப்பாத்திரம் சின்ன வயதில் செய்த தவறுக்காக ஆற்றிலே கழுத்தளவு தண்ணீரில் நிற்கவைத்து தண்டிப்பார் அவரது மாமன். அப்போது பாம்பு ஒன்று அவன் தோள்மீது ஊர்ந்து போகுமே அப்படி பலதடவை வாய்க்கால் கரை அனுபவங்கள்  “எங்கள்வளுக்கு” உண்டு.

            துணிக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்த வசந்தி அக்கா ஒருதடவை காலைச் சுத்தின சாரையை கரகரன்னு பிடித்து தூக்கி வீசிவிட்டு, "நான் ஆரல்ன்னு நினைச்சேன். கடசீல பார்த்தா தண்ணிச்சாரை" என்று அசால்ட்டாகச் சொன்னது.

            மேலே சொன்னேனில்லையா வெள்ளக்கோயில் மருத்துவச்சி. அது ஒருநாள் அடித்த சாரையை பாளமாக உரித்து, "சாரக் கொழுப்பெல்லாம் மருந்து பார்த்துக்க" என்றபடி தலைகீழாகப் பிடித்து தோலுரித்துக் கொண்டிருந்தது.  சிரட்டையில் வழித்து வைத்திருந்த சாரைக் கொழுப்பை பார்த்து குமட்டிக்கொண்டு ஓடினவன் ஓடினவன் தான்.

            திருநெல்வேலியில் அப்படி பெருசாய் ஒன்றும் சொல்லிவிட முடியாவிட்டாலும். நாஞ்சில் மண்டலம் நாகங்களின் சொர்க்க பூமி. அதைக் கண்ணாரக் கண்டதுண்டு. அங்கே பாம்புகளை வைத்து ஏகக்கணக்கில் கதைகளுண்டு. அதாவது பாம்புகள் எண்ணிக்கை அளவுக்கு பின்னப்பட்டவை.

            நகர்த்தில் பாம்பு பார்ப்பது வருடத்தில் பிப்பிரவரி 29மாதிரிதான். பழசுபோல் இப்போது தமிழ் சினிமாவிலும் பாம்புப் படங்கள் வருவதில்லை. வந்தாலும் ராமநாராயணனும், முமைத்கானுமே கதி.

            மகாபாரதத்தில் யாரைப் பிடிக்கும் என்று நண்பன் ஒருதடவைக் கேட்டான். நான் "அரவான்"என்று சொன்னேன். பிறகுதான் அந்தப் பெயர் பாம்பைக் குறிக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். அரவானுக்கு "அப்பன் அர்ச்சுனன்" தெரியும். அம்மை யாராயிருக்கும்? என்று யோசனை வந்தது. தேடிப்பார்த்தால் அவள் ஒரு  "நாகர் குல இளவரசி" பேர் உலூபி.

            அட! இந்த சங்கதியை விசயம் தெரியாத யாரிடமாவது பேச்சுக்கு ஊடாக பெருமை பீத்திக் கொள்ளவேண்டுமே என்று அடித்துக் கொண்டது மனது.

-கார்த்திக். புகழேந்தி
02-02-2016


Comments

  1. good...கட்டுரை அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil