சொக்கப்பனை | கடங்கநேரியான்| கவிதைநூல்



             சொக்கப்பனை முழுதாய் வாசித்து முடித்துவிட்டேன்.  நிகழ்ச்சிக்குக் கிளம்பும் முன், இன்னுமொருமுறை வாசித்துவிட்டு எழுதலாம் என்று புத்தகத்தைத் தேடினால் கிடைக்கவில்லை. இங்குதானே வைத்தோமென்று அறைமுழுக்க ஒழுங்குபடுத்தியும் கண்ணில்மட்டும் சிக்கவே இல்லை. ஒன்று யாரும் படிக்க எடுத்துச் சென்றிருக்கவேண்டும் அல்லது இன்னும் நன்றாகத் தேடியிருக்க வேண்டும் .

புத்தகத்தைத் எடுத்துச் செல்கிறவர்கள் பற்றி எங்கள் வாத்தியார் ஒன்று சொல்வார்.  “எடுத்துட்டுப் போய் என்ன செய்யமுடியும்?  படிக்கத்தானே முடியும். படிச்சிட்டுப் போறாம் விடு” என்று. வாத்தியார் பேச்சை இப்போதாவது கேட்போமே என்று விட்டுவிட்டேன்.

கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசைய்ல் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக இந்த கவிதைகள் மட்டும் அந்நியமாகியா நின்றுவிடும்? ரொம்ப மெனக்கிடாமல், இந்தத் தொகுப்பில் வாசித்து, மனத்துக்கு நெருங்கின கவிதைகள் பற்றி எழுதத் துணியும் போது வார்த்தைகள் தன்னாலே சுரந்து முண்டுகின்றன. சீவின பனம் பாளை மெல்லக் கசிவது மாதிரி.

வேப்பம் பூ உதிர்ந்து விழும் கிணற்றடியில் வண்டிமாடுகளைக் கழத்தி, அவற்றை நிழலாக்கிவிட்டு, கொத்துக்கல்லில் குறுக்கைச் சாத்திக்கொண்டு, மூசு மூசென்று மூச்சுவாங்குகிற கிழவனுக்கிருக்கும் ஆசுவாசத்தை நீங்கள் இந்த கவிதைகளில் பெறப்போவதில்லை. கோவைக்காய் தேய்த்த சிலேட்டுக் கட்டையில் கடங்கநேரியான் தெளிவாய் எழுதிச் செல்வதெல்லாம் தன் ஆங்காரங்களின் வார்த்தை மிச்சங்களைத் தான். அது கோப்புக்காளைகள் புறத்தில்  விழுகிற சுளீர்ச் சாட்டையின் சத்தமாகக் கேட்கிறது.

வேம்பு, கருவேலம், புளியஞ் சுள்ளிகளுடன் பச்சையமிழந்த புற்களோடு நெருஞ்சிகளும் உண்டு காகக் கூட்டில் என்ற வரிகள் மொத்தமும் பேசிவிடுகிறது.  கெளுத்தி தன் முள்களை ரெட்டையாய் விரித்தபடி, வலையில் சிக்கிக்கொண்டு இருளனை சங்கடத்தில் ஆழ்த்துகிற மாதிரி. எனக்குள் இந்த கவிதைகள் மாட்டிக்கிடக்கின்றன. கெளுத்தியின் கொடுக்குகளைப் பிய்ப்பது கள்ளியில் பழம்பறிப்பதைவிட கடினமாகப்படுகிறது. ஒவ்வொரு முள்ளாய் ஒடித்து, கழுவு கழுவென்று கழுவினாலும்  மீன்வாசனை கையைவிட்டுப்போகாதில்லையா. வாசனையின் மிச்சத்தோடு உங்கள் முன் நிற்கிறேன்.

வானத்திலிருந்து பாறாங்கல் விழுந்தால் கூட, “பார்த்தேன்” என்று சொல்ல பக்கத்தில் ஒருத்தன் இல்லாத செவக்காட்டுப் புழுதித் தடத்தில், கம்மாய்க்கரை மேட்டிலேறி, ஆணி ஆணியாய் நிக்கும் பனைமர மூட்டுக்கு சுத்துவட்டாரத்தில் பழமேதும் விழுந்து கிடக்குதான்னு பார்த்து, தென்மேற்குக் காத்துச் சாய்மானத்தில் சரசரக்கும் பனையோலைத் சத்தத்துக் கிடையில், தன்னுடைய குரலையும் சேர்த்து, தறிகெட்டுத் துள்ளும் வெள்ளாட்டுக் குட்டிகளை  “ட்ரேய் ட்ரேய்” என்றபடி பத்திக்கொண்டு போகிற, காட்டுப் பயலின் கதைப்பேச்சாகவும் சில கவிதைகள் எனக்குள் சல்லிவேர்பிடித்துக் கொண்டு நிற்கின்றன.

 “எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனது படைப்புகள் உதவுகின்றன. இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்துகொள்ள உதவுவது அவனது கட்டுரைகள்” என்பார் கரிசல்காட்டுக் கடுதாசிக்காரர் கி.ராஜநாராயணன்.

ஒரு படைப்பாளனின் அல்லது ஒரு கவிஞனின் மன உலகைப் புரிந்துகொள்ள அவனது கவிதைகளை விட்டால் வேறு நல்ல கதியில்லை என்பது என் நினைப்பு. கரிசல் மண்ணில் அவுரிக்கு ஊடாக சூரியகாந்தியைப் பாவி விடுவதுபோல, என்னத்தை எழுதினாலும் இந்தக் கவிஞனின்  “அகம்” அங்கங்கே வெளிப்பட்டு விடுகிறது. அதே சமயம் அவனது அறமும்.

விடியும் திசையில் வெளிச்சத்தைப் பார்த்து சூரியகாந்தியைப் பூ தலை திருப்பிக் கொள்கிறதுமாதிரி இக்கவிதைகளின் ஒவ்வொரு  பரப்பிற்குள்ளும் தனக்கேயுரிய கருத்தியலைப் புகுத்தி அதைநோக்கி நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார். கவிதைகள் நம்மோடு பேசத் தொடங்காத வரைக்கும் நமக்கு கழுத்து வலியில்லை.

சொக்கப்பனையில் நான் கண்டது, கேட்டது, பார்த்தது எல்லாம் ஊர்வாசம் சுமக்கும் மண்ணின் குரலைத்தான்.  மண் பேசுகிற அரசியலின் சுழலில், மூழ்கிக்கொண்டே ஒலிக்கின்ற அந்த குரல் கைகாட்டும் திக்கில் தான் வரிசைவிட்டு நிற்கிறது காலப் பனைகள்.

பனைகளின் உச்சியில் கூடுபின்னித் தொங்கும் தூக்கனாங்குருவியின் பார்வைக்கு ஊர் எப்படித் தெரியுமென்று எனக்கொரு கற்பனை உண்டு. அகண்ட பரப்பில், மோட்டு ஓடுகள் நீங்கலாக, காரைச்சுண்ணாம்புச் சுவர்கள் பாசியேறி, மூணு கை காத்தாடிகள் சுத்திக்கொண்டு காற்றை மிரட்ட, அந்த எதிர்க்காற்றுக்கு காற்றுக்கு ஊர் அலைபாய்ந்ததுபோல.... தூக்கனாங்குருவிக்கு எப்படி யெப்படியெல்லாம் தோன்றுமோ அப்படி யப்படி யெல்லாம் நகரத்தின் மேடான கட்டிடங்களின் உச்சியிலிருந்துகொண்டு வலசை விட்டு வந்த ஊரின் திசைபார்க்கிறேன் நான்.

“பசுமை சூடிய வயல்வெளியில் பருத்திப்பூக்கள் தான் எத்தனை அழகென்று” கடங்கநேரியானின் வரிகள் ஊர்ந்து செல்லும்போதே கொத்தைப்பருத்திக்கும் கேவலமாய்ப் போய்விட்ட சம்சாரி நினைப்புத்தான் வந்தது. காடுமேடாய் நடந்த பாதைத்தடம் பள்ளம் கண்டுகிடக்கிறது. பாதைக்கு இரண்டு பக்கமும் சங்கடமில்லாமல் வளர்ந்துகிடந்த வாடாமல்லியைத் தேடவேண்டிய நினைப்பு வருகிறது.  கெண்டை பிடித்து, குதித்துச் சாடிய குளம் ஈரம் வறண்டிருக்கிறது.  “மோக்கால் கிணற்றில் கல்போட்டால் மொட்டென்று ஒலி எழும்புகிறது. கள்ளியில் பால்வடிந்து பேரெல்லாம் அழிகிறது. கற்றாழை மஞ்சள் பூத்துக்கிடக்கிறது.  காக்காய் முள்ளுக்கு ஆலாய்ப் பறக்கிறேன்.  கெளுத்தியும், அயிரையும் நாக்கைப் போட்டு வதைக்கிறது. கொம்புசீவின எங்கள் மாடுகளைத் தழுவ கோர்ட்டுப் படியெல்லாம் ஏறவிடுகிறார்கள். சரி போகட்டும்.

வயல்காட்டுக்கு மத்தியில் குருவி உட்கார நீண்ட தோரணம் கட்டினமாதிரிப் பாயும் கம்பிவடத்தில் கடத்திச் செல்லப்படும் கரண்டுச் சத்தம் கேட்டிருக்கிறீர்களா? விய்ய்ய்ய்ங் என்று ஒலியெழுப்பும் அதிர்வலைகள் போல புத்திக்குள்ளே ஊர்நினைப்பு வடிகிறது மொத்தத்தையும் வாசித்து முடிக்கிறபோது.

ஊரில் என்னவெல்லாம் இருக்கும் என்ற எண்ணம். எல்லாமும் தான் இருக்கும். பொடனிக்குப் பின்னால் செய்யும் அரசியல், களவாணித்தனம், காவல், கண்ட கசடுகள், நைச்சாட்டியம், நல்லது கெட்டது எல்லாமும் தான். எல்லாம் சேர்ந்ததுதானே நாம். இந்த கவிதைகளும் எல்லாவற்றுமாலும் ஆனவை. அதில் அங்கங்கு துளிர்ப்பது தீயின் மொட்டுக்கள்.

ஊர் மெல்ல நகரச் சாயலைப் மொழுமொழுவெனப் பூசிக்கொண்டிருக்கிறதைப் பார்க்கிறேன். இல்லையென்று மறுத்தாலும்கூட. இந்த முலாம்போடுகிற வேலை ஜரூராகிக் கொண்டே போகிறது. ஆனாலும், பாருங்கள் நினைப்புகளை எழுதி எழுதி,  ஊரைத் திரும்பக் கட்டியெழுப்பி விடுகிறோமில்லையா. மொட்டுப் பென்சிலை மிச்சம் மீதிக்கு வைக்காமல் சீவுகிறமாதிரி.

நெல்லையப்பன் சன்னதிக்கு நேரே குழிபெருக்கி, நெடு நெடுவென வளர்ந்துவிட்டப் உடம் பனையை செங்குத்தாக நட்டுவைத்து, பிளந்த மூங்கிலை பிரித்துக் கட்டி, நாலுபக்கமும் பனையோலை சுற்றிச் சாத்தி, கோபுரம் எழுப்புவார்கள். பூசான்னங்கள் முடித்து பட்டர் கொண்டுவரும் சூடத்து தீவாராதனைக்குக் காத்துக்கிடந்து, ஜூவாலை விட்டு எரிகிற சொக்கப்பானையை கார்த்திகைக்குக் கார்த்திகை கண்ணாறக் காணாமல் அயர்வு இல்லை.

எரிபட்ட தடிமரத்தை வெட்டி முறிக்கிறதுபோல ஆகிப் போகிறது எண்ணங்களால் கட்டியெழுந்த ஊர் நினைப்புகள். கரிபிடித்த சாம்பல் வாசனையில் புகைந்துகொண்டே இருக்கிறது வாழ்வாதாரங்களைப் பொசுக்கினச் சாபம். கோலாக்காரன் கையைக் கடித்துக் குதறும் வரைக்கும் கல்லைக் குறிபார்த்துக் கொண்டிருக்கிறோம். நாய்களை விரட்ட நமக்குத்தான் நேரமேது என்றபடி. உள்ளுக்குள் கோபமிருக்கிறது. ரோசமிருக்கிறது. எல்லாவற்றையும் பிளிந்து கசக்கி எழுத கலை இருக்கிறது. கவிதை இருக்கிறது. இருக்கிறதில் எல்லாவற்றையும் இருப்பு வைத்துக் கொள்கிறோம். அதற்கும் கொஞ்சம் முதுகெலும்பு தேவைப்படுகிறது.

இந்த  உலகமயமாக்கல் பேசுகிறவர்கள் என்ன எளவை எல்லோர் புத்திக்குள் ஏற்றுகிறார்கள் என்று ஒரு பக்கம் புரிய விழைகிறேன். கவனிக்கவும் புரிய வைக்க அல்ல.

உலகை எப்படி உலகமயமாக்க முடியும். ஊரை எப்படி ஊர்மயமாக்க முடியும் என்று கேள்வி எழுப்புவார் தொ.ப. ஒரு நாள் சாயந்திர நேரத்தில், “திருநெல்வேலியைத் திருநெல்வேலிமயமாக்கிடுவியாடே” என்றார். எனக்கு சுத்தமாய் புரியவில்லை. உலகமயமாக்கல் என்ற சுத்தப் பொய் நம் வளங்களைத் தின்பதற்கானத் திட்டங்களுக்கு இடப் பட்டிருக்கும் நாமகரணம் என்று அன்றைக்கு என் இரவுக்கு வெளிச்சம்பண்ணிக் கொண்டிருந்தார்.

அப்போ எது உண்மை என்றேன். உலகம் முழுக்கவும் “சந்தை மயமாக்கப் படவேண்டும்” என்பத்தான். சந்தையைத் தான் எல்லா நாவுகளும் புசிக்கத் துடிக்கின்றன. எண்மிகுந்த கூட்டத்துக்கிடையில் எளிதாக வளைபவன் யார் என்று பார்த்துப் பார்த்து, சல்லடையால் சலித்து சலித்துப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள்.   கொந்தளிப்பவர்களைச் சகிப்புத் தன்மை அற்ற மூடர்கள் என்று குற்ற முத்திரை குத்துகிறார்கள். வழக்குகள் வண்ண வண்ணமாய்க் குவிகிறது.  வெடிகுண்டு வீசுகிறவனாக்கினார்கள்.

நாம் வசிக்கும் வீட்டை சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிபடத் துவங்கிற்று. சந்தை வணிகனுக்கும் வாடிக்கையாளனுக்குமான இடம். அது நம் வீடு மாதிரியானதல்ல. சந்தையில் காசில்லாதவனுக்கு மரியாதை இல்லை. சந்தையில் நீங்கள் வாங்கலாம், விற்கலாம். வாழமுடியாது. சந்தைக்குள் உங்களைப் பார்த்து சிரிக்கிறவன் இரண்டொரு முகமுடிகள் அணிந்ததிருக்கிறான். அவன் புன்னகையில் அன்பு, உறவு, பிடிப்பு, பந்தம், வேர்கள் என்று எதுவுமில்லை.  சர்வீஸ் சார்ஜ்ஜுகள் மட்டுமுண்டு.

இந்த சந்தைத் தனத்தை விடுத்து, வாழ்தலுக்கான கூட்டைத் தேடி, அடியும் முடியும் காணத் துடிக்கும் பரவசத்தைத் தனக்கேயுரிய அரசியல் காட்டத்தோடு கவிதைகளாக எழுதிச் சென்றிருக்கிறார் கடங்கநேரியான்.

ஒரு தீக்கங்காணி, தீப்பிடித்து எரியும்  சொக்கப்பனைேயையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல, நான் கடங்கநேரியானின் கவிதைகளைப் பார்க்கிறேன். பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அவ்வளவாய்ப் பேசத்தெரியாது.

-கார்த்திக்.புகழேந்தி
27-01-2015.

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil