ரோலக்ஸ் வாட்ச் | சரவணன் சந்திரன் | 2ன்ட் இன்னிங்ஸ்

           மீபத்தில் ஒரு இரண்டரை அடி உயரக் குதிரைக்குட்டியோடு சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருக்கிற காணொளியினைப் பார்த்தேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக அவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சந்தோஷித்துக் கொள்கிற காணொளி அது. அதே மாதிரியான உணர்வை ஒரு புத்தகம் வாசிக்கும்போதுகூடப் பெறமுடியும் என்பதை கடைசியாக நேற்றைக்கு மாலையில் வாசித்த “ரோலக்ஸ் வாட்ச்” நாவலின் மூலம் நான் உணர்ந்துகொண்டேன்.

             “வெள்ளி முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது”  போஸ்டர் ஒட்டின திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக ப்ரிவ்யூ தியேட்டரில் அமர்ந்து ஒரு ரசிகனாக கைத்தட்டி, விசிலடித்து, ரசித்துப் பார்ப்பதுபோல ஒவ்வொரு படிநிலையாக இந்நாவலை இதுவரைக்கும் இரண்டு முறைப் படித்திருக்கிறேன். “ஐந்து முதலைகளின் கதை” நாவல் வழியாக ரொம்ப சாதாரணமான வாசிக அறிமுகம்தான் சரவணன் சந்திரன் அண்ணனுடன். அவரது முதல் நாவலின் தாக்கத்தில் நண்பர்களிடமெல்லாம் ஐ.மு.கதையினை வாசித்துப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தேன். இந்த இரண்டாம் நாவலான “ரோலக்ஸ் வாட்ச்”-சை கையில் கொடுக்கும்போது, “பழசெல்லாம் மறந்துவிட்டு ஒரு விமர்சகப் பார்வையோடு வாசித்து எப்படி இருக்கிறதென்றுச் சொல்” என்றார். 

(இனி நாவலுக்குள்)

            ப்ளேஷர் அணிந்துகொண்டு வளையவரும் மேட்டுகுடி மனிதர்களின் களம் வாசிப்புச் சூழலுக்குப் புதியது. வலிக்க வலிக்க எளியமனிதர்களின் கதைகளைப் படமாக எடுப்பவர்கள் மாலைப் பொழுதுகளில் ஒன்றுகூடும் பார்ட்டி ஹாலின் கசியும் இருளுக்குள் நாம் நுழைந்தால் என்ன மனநிலையில் இருப்போம். முழுக்கப் பணத்தால் கட்டியெழுப்பப்பட்ட, இந்தியாவில் கோக் தடைசெய்தால் ப்ளைட் பிடித்து மலேசியா சென்று கோக் குடிப்போம் என்று திமிர்கொண்டிருக்கிற, பிறக்கும் போதே கோல்டன் ஸ்பூனுடன் வந்துகுதித்த, தாங்கள் அமர்ந்திருக்கிற பீடத்தின் நிழலைக்   கூட குனிந்து பார்க்க நேரம் செலவிடாத ஆடம்பர மனிதர்களின் உலகத்திற்குள் தன் நண்பனது அங்கீகாரத்தினால் நுழைகிற கதாநாயகனின் வார்த்தைகளிலே நாவல் முழுக்க முழுக்கப் பயணிக்கிறது.

பெரும் பணம் படைத்த மனிதர்களின் மூலம் அவனுக்குக் கிடைக்கும் அதிகார மையத் தொடர்புகள். அதிகார மையத்தின் சில்லரைத்தனமான போட்டிகளையும், பொறாமைகளையும் பொளேர் என்று ஒரு அடியாலோ, சூசகமான புன்னகையாலோ தவிர்த்துவிட்டு அவர்களுக்குத் தேவைப்படுகிறவனாகவே தன் பிம்பத்தை எப்போது கட்டிக்காக்கிற கம்பீரம். தன் தொடர்புகளைப் பயன்படுத்தி முன்னேறத் துடிக்கும் உத்வேகம். சமூகநல விடுதியில் இளங்கலை படிக்கும்போது கேண்டீன் பீஸ் கட்டக்கூட வழியில்லாத நாயகன் சர்வதேச நாடுகளுக்கும் சென்று மது, மாது மாயங்களென உங்கள் ஆடம்பரங்களை எல்லாம் நாங்களும் அனுபவிக்கப் பிறந்தவர்கள்தான் என்று காட்டும் உணர்ச்சி நிலை எல்லாமும் நாயகனை நல்லவனா கெட்டவனா என்று முடிவெடுக்கச் செய்யாமல்  அதிவிரைவு ரயில்போல நம்மை நாவலுக்கு இயங்க வைக்கிறது.

            கேண்டர்பெர்ரிக்கு இளந்தைப் பழம் மேல் மோகம் பிடித்தால் எப்படி இருக்கும். அப்படியாக மேல்தட்டு நண்பர்கள் குழுவில் இருக்கும் தன் நண்பனது கல்லூரித்தோழிக்கு நாயகன் மீது காதலும் காமமும் பீறிடுகிறது. உணர்ச்சிகரமாகத் தழுவிக் கொள்கிறார்கள். அன்பு செய்கிறார்கள். இன்னும் மிச்சமுள்ள எல்லாமும். ஆனபடியே அவள் கணவனுக்குத் தெரியாமல் இவையத்தனையும் நிகழ்கிறது. இந்தத் தொடர்பு வெளிப்பட்டுவிட்டால் நாயகனுக்குண்டான இடம் சிதிலப்படும். ச்ச்சீ... என்று தூக்கி எறிந்துவிடுவார்கள். தன் மதுக்கோப்பைகளை சியர்ஸ் சொல்லிக் கொள்கிறவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை நுகர விடுவார்களா என்ன? அதை நாயகன் உணர்ந்துமிருக்கிறான். ஆனாலும் தன் இருப்பைத் தக்கவைக்கவும், தன்னாலும் இவர்களை வெல்ல முடியும் என்ற போதையை நீட்டிக்கவும் கூட கேண்டர்பெர்ரியின் கூடல் அவனுக்குத் தேவையாய் தொடர்கிறது. கேண்டர் பெர்ரிக்கு திவ்யா என்றும் மாருதி ஸ்விஃப்ட் என்றும் பேர்.

             மேல்த்தட்டு வளையத்திற்குள் நாயகனை அறிமுகப்படுத்தி, தொடர்புகளை வளர்க்க உறுதுணையாய் இருந்த நண்பன் சந்திரன் நாயகனுக்கு ஒரு கடிவாளம் போல் அமைகிறான். அவனது காதலி மாதங்கி இன்னும் நெருக்கமான அன்பைச் சிந்தும் தாயாகவும் தெரிகிறாள். நாளடைவில் சந்திரனின் அனுசரணை நகைக்கடையில் இருக்கும் சிசிடிவி போல  நாயகன் பொருளாதார வளர்ச்சியின் மூலம் உயரங்களை அடையும் போதும் தொடர்வது அவனை உறுத்துகிறது. இந்தக் கடிவாளத்தைப் பிய்த்து எறிய முடியாது. அதேகனத்தில் பொறுத்துக்கொள்ளவும் முடியவில்லை. மேல்த்தட்டுக் குழுவினர்களிடையே சந்திரனுக்குக் கிடைக்கும் அதியுன்னத வழிபாடு நாயகனுக்குக் கிட்டுவதில்லை. ஆனாலும் அவன் மரியாதைக்குரிய இடத்தில் தான் இப்போதுவரை இருக்கிறான். அந்த மரியாதை சந்திரன் அளவுக்கானதில்லை. இந்த இடத்தில் நிச்சயம்  ‘யார் கதையின் நாயகன்?’ என்ற வேறுபாட்டை நாம் உணர முடியாது. தன் வேட்டை எல்லையைப் பாதுகாக்க வேண்டிய வேங்கை எதிர்க்காட்டின் மானோடு கள்ளமாய் ஒரு தொடர்பு வைத்திருக்கும் காரணத்திற்காக  “லயன்ஷேர்” சிங்கங்கங்களிடம் உதைபடவும் வேண்டுமா?

            முழுக்க முழுக்க பழுப்புக் கறைகள் கொண்ட ஒருவனது கதை இது. ஒருவனது கதையெல்லாம் இல்லை. இது ஒரு சமூகத்தின் கதை. அடிமட்டத்திலிருது மண்ணைக் கிளர்ந்துகொண்டு முளைவிடுகிற விதையின் கதை. போட்டிச் சமூகத்தில் அதிகார மட்டங்களுக்குள் அனாயாசமாக நுழைந்து, பிறகு தன் எல்லைகளை நிர்ணயிக்க நீங்கள் யார் என்று அவர்களுக்கே சவால் விடுகிற கதை. வேங்கையின் நியாயங்களை யாரும் புரிந்துகொள்ளப் போவதில்லை, ஆனாலும் வேங்கை எவரையும் பந்தாடும் வலுபடைத்ததென்று நிரூபிக்கத் துடிக்கின்ற கதை. இதையெல்லாம் கடந்த அரை நூற்றாண்டாக செல்லுலாய்டு திரைகளில் அப்பழுக்கற்ற நாயகன்களே தொடைதட்டி, சவால்விட்டு சாதனையாளனாவதாகக் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இங்கே ஆடுகளமே வேறு. ஆடுவது வெள்ளாடு அல்ல வேங்கை.

            ஏன் இந்த நாவலுக்கு ரோலக்ஸ் வாட்ச் என்று பெயர் வைத்திருக்கிறார் என்பதற்கு கதைப் போக்கிலே விளக்கமும் வருகிறது. அந்த விளக்கம் ஒன்றே முழுமொத்தமாய் நான் இவ்வளவு எழுதினதற்குப் போதுமானதாக இருக்கிறது. முதல் பத்திகளில் சொன்னதுபோல ஒரு குதிரைக்குட்டி கண்முன்னே வளர்கிற நேரத்தில் நானும் அதன்கூடேவே வளர்ந்தது போல இருந்தது. பசியும் தன்மானமும் அடிவயிற்றைக் கிள்ளுகிற மேன்சன் காலத்தினை வாசித்துக்கடக்கும் போது எனக்கும் பசி துருத்தியது. அரசு எந்திரங்களின் ஊடுதுளைகளுக்குள் நுழைந்து, அதிகார மையங்களின் பெருந்துணையோடு கொத்தாக வெற்றிக்கனியைப் பறிக்கிறபோது நானும் காலர்களை உயர்த்திக் கொள்கிறேன். அதற்காக மோகங்கொண்டு காமம் மீறுகிற காட்சிகளை எப்படி ரசித்தாய் என்று கேட்காதீர்கள். அந்தப் பெயர் எழுதி முத்தமிடுகிற காட்சிக்குக் கொடுக்கும் விளக்கம் ஒன்று போதும். அள்ளுகிறது.

            இந்த நாவலில் நான் மிக முக்கியமாகச்  சொல்ல நினைப்பது அதன் வேகம் தான். ஒரு நாவல் எல்லா தளங்களையும், எல்லா வாசகனையும் எப்போதும் திருப்திப் படுத்த வேண்டியதில்லை. அது இலக்கியத்தின் வேலையும் இல்லை. ஆனால் இந்நாவல் நிறைய விசயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிச் செல்கிறது. அதையெல்லாம் பட்டியல் போட்டுக்கொண்டு நான் உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

           நினைத்த மாத்திரத்தில் ஸ்விட்சைத் தட்டினதும் பொறிகள் இயங்க, கம்பி வடங்களில் உயரெழுந்து, வளைந்தும், நிமிர்ந்தும், கீழிறங்கிச் சாடியும்  நம்மை மிரட்டுகிற  “ரோலர் கோஸ்டர்” அனுபவத்தை  “ரோலக்ஸ் வாட்ச்” நாவலை வாசிக்கும் போது பெறமுடியும். இரண்டாவது இன்னிங்க்ஸிலும் ட்ராவிட் அடிக்கும் சதம் எத்தனை நுணுக்கமானதோ அத்தனை நுணுக்கம் இந்நாவலில் உண்டு என்ன ஒன்று பேட்டிங் ஸ்டைல்தான் ஆரம்பகால ஷேவாக்கை நினைவுபடுத்துகிறது.  அதைச் சரியாக பிரதிபலிக்க ஒரேயொரு சொல்தான் என்னிடத்தில் உள்ளது

 “அடிபொளி”

-கார்த்திக்.புகழேந்தி.
16-02-2016
             


Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

வேட்டையன்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா