பரிசல் புத்தக நிலையம் தொடக்க விழா




    ல்டாம்ஸ் சாலையில் அரசுப்பள்ளிக்கு எதிர்புறம் இருந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்திற்கு அக்கம்பக்கத்தில் கொஞ்சம் விசாரித்து மாலை ஒரு ஆறுமணிக்கு மேலே போயிருந்தேன். அதற்கும் முன்னே நீதியரசர் சந்துரு மற்றும் அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்கிற வர்களெல்லாம் இணைந்து தொடக்க விழா நிறைவு பெற்றிருந்தது. புறப்படுகிற தருவாயில் இருந்த நண்பர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு உள்ளே நுழைந்து இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கிக் கொண்டேன்.
            பல தடைகளுக்குப் பிறகு தன் கையை உயர்த்தி இருக்கிறார் ‘பரிசல்’ செந்தில்நாதன் அண்ணன். சென்னைக்கு வந்தபிறகு நிறைய ஓடியாடி சாடியிருக்கிறேன். அதில் முக்கியமான ஒன்று சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கினது. கோவையில் என்னோடு ஒண்ணுமண்ணாய்ப் புளங்கின தம்பிகளைக் கூடே வைத்துத் தான் அந்தக் கடையை ஆரம்பித்தது. இராப்பகல் உழைப்பிருந்ததாலும், முன்னேறடவேணும் என்ற துடிப்பிருந்ததாலும் ஒன்று இரண்டு என இன்றைக்கு மூன்று கடைகளைத் திறந்து தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.

   பரிசல் அண்ணனைச் சந்திக்கிறபோதெல்லாம் “கார்த்தி எழுதுகிறான் என்பதைவிட ஒரு தொழிலதிபர் அவன்” என்று எல்லோருக்கும் மத்தியில் சொல்லிக் கொண்டே இருப்பார். இயல்பாகவே நமக்கு இருக்கும் கூச்சத்தில் சத்தமில்லாமல் அந்த வார்த்தையைக் கடந்துவிடுவேன். அது கொஞ்சம் கூடுதலான சொல்தான். சொந்தமாக ஒரு ‘திறப்பு’ என்பது எவ்வளவு மகிழ்ச்சியும் அதே சமயம் எவ்வளவு சுமைகளையும் தரும் என்பதை என்வயசுக்கு கொஞ்சம் பட்டுவிட்டேன் தான்.   ஆனாலும் விருப்பப்பட்ட வேலையைச் செய்துகொண்டு நகர்வதால் அதன் கடுமை பாதிக்கவில்லை.

   இந்த ஊரில் எனக்குக் கிடைத்திருக்கும் அத்தனைபேரும் தானாய்த் தேடிப் பழகிச் சேர்த்தவர்கள்தான். முதல்தடவைப் பேசுகிறமாதிரி பழக்கத்தை தொடர்கிறவர்கள் ரொம்ப அபூர்வம். அப்படி அபூர்வமானவர்களில் நான் நேசிக்கிற மனிதர் பரிசல் அண்ணன். கொஞ்சம் உரிமை எடுத்துக் கொள்கிறதிலும் கூட. அவருடைய தொடர்புகள் எல்லாம் ரொம்பப் பெரியவட்டம். இந்த புத்தகக் கடை அவர் எப்போதோ தொட்ட உச்சங்களின் ஒரு பிந்திரும்புதலாகக் கூட இருக்கலாம். ஆனால் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். நாங்கள் என்றால் வாசிக்கும் உங்கள் எல்லாரையும் சேர்த்துத்தான்.

    புத்தகங்களை வாசிக்கிறவனுக்கு புத்தகங்களை நேசிக்கிறவர்களைப் பிடித்திருப்பது சாதாரணமானதுதானே. இங்கே புத்தகங்களோடே வாழ்கிறவருக்கு அன்பு செய்யவும், துணை நிற்கவும் இல்லாமல் போனால்தான் வித்யாசமாகிவிடும். அந்த வகைக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணே..

-கார்த்திக். புகழேந்தி.
02-03-2016.



Comments

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள்.... அவர் வெற்றி பெறட்டும்.....

    ReplyDelete
  2. நன்றி கார்த்திக் :)

    ReplyDelete
  3. அவர் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil