இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்

Image may contain: 1 person
  

  தமிழ் சிறுகதையின் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இளந்தலைமுறை படைப்பாளிகள் புதிய களன்களில் புதிய கதைமொழியில் சிறப்பான கதைகளை எழுதிவருகிறார்கள்.

சிறுகதை எழுவதுதை பெரும் சவாலாகக் கருதுகிறவன் என்ற முறையில் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வெளியாகிற சிறுகதைகளைத் தேடிப் படித்து விடுவேன். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளையும் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவேன்.

சிறுகதைகள் தேங்கிவிட்டது, முடிந்துவிட்டது என்பது பொய்யான அபிப்ராயம். சிறுகதையில் புதிய கதைக்கருவை, மொழியை, கதைசொல்லும் முறையைக் கையாளும் பலர் உருவாகி இருக்கிறார்கள். என் வாசிப்பிற்குள் வராத பல சிறுகதைகள், எழுத்தாளர்கள் இருக்ககூடும். என் வாசிப்பில் முக்கியமாகக் கருதும் இளம்தலைமுறையைச் சார்ந்த பத்து சிறுகதையாசிரியர்களை அடையாளப்படுத்த விரும்புகிறேன்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

துரதிருஷ்டம் பிடித்த கப்பலின் கதை என்ற இவரது சிறுகதைத்தொகுப்பை வாசித்தேன். கால்வினோ, போர்ஹே, சரமாகோ எனப் பரந்த வாசிப்பு அனுபவம் கொண்டவர் என்பதன் சான்றாக இவரது கதைகள் பின்நவீனத்துவ எழுத்துமுறையாக இருக்கின்றன. தாவித்தாவி செல்லும் மொழியில் சிதறுண்ட கதைகளை எழுதுகிறார்.

கார்த்திகை பாண்டியன்

இவரது சிறுகதைகளைச் சிற்றிதழ்களில் வாசித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான மர நிறப் பட்டாம்பூச்சி சிறந்த சிறுகதை தொகுப்பாகும். தேர்ந்த மொழி நடையுடன் கட்டுக்குள் வைத்து கதை சொல்வது இவரது தனிச்சிறப்பு .

தூயன்

கணையாழியில் இவரது கதையை வாசித்தேன். தற்போது இருமுனை என்ற சிறுகதைத்தொகுப்பு வெளியாகவுள்ளது. முகம், இருமுனை இரண்டு சிறுகதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஒவியங்கள், சிற்பங்கள் என நுண்கலைகளைச் சார்ந்து கதைகளை எழுதுவது இவரது தனிச்சிறப்பு

கே.ஜே.அசோக்குமார்

சொல்வனம், மலைகள் இணைய இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். வித்தியாசமான கதைக்களன்களை நுணுக்கமாகக் கையாளுகிறார். இவரது சாமத்தில் முனகும் கதவு சிறுகதை தொகுப்பு தற்போது வாசக சாலை விருது பெற்றுள்ளது

கிருஷ்ணமூர்த்தி

நகுலன், கோணங்கி, ஜெயமோகன், பாதசாரி, லா.ச.ரா, அசோகமித்ரன் என ஒரு பக்கமும் போர்ஹே, நபகோவ், மார்க்வெஸ், கால்வினோ என மறுபக்கமுமாக நிறைய வாசித்துத் தள்ளுபவர். பரிசோதனை எழுத்தில் அதிக நாட்டம் கொண்டவர். புதிய கதைமொழியைக் கையாளுகிறார். இவரது சாத்தானின் சதைத்துணுக்கு சிறுகதை தொகுப்புத் தற்போது வெளியாகவுள்ளது

அகரமுதல்வன்

இரண்டாம் லெப்ரினன்ட் இவரது சிறுகதைத்தொகுதி. ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். . பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதையைச் சொல்லும் இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கபட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார் , துயரத்தின் பெருவலியை பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்கு புதியவை.

கார்த்திக் புகழேந்தி

வற்றா நதி சிறுகதைத் தொகுப்பின் வழியே இவரை அறிந்து கொண்டேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர். யதார்த்த கதைகளை அதிகம் எழுதுகிறார். நேரடியான கதைகூறுதலின் வழியே உணர்வுகளை அழுத்தமாகக் கூறுகிறார்.

குமாரநந்தன்

மலைகள் இணைய தளத்தில் இவரது கதைகளை வாசித்திருக்கிறேன். இவரது பூமியெங்கும் பூரணியின் நிழல் சிறுகதை தொகுப்பையும் படித்திருக்கிறேன் பாலுறவு சிக்கல்கள், பிறழ்வுகள், உளவியல் பாதிப்புகள் பற்றியே இவரது கதைகள் அதிகம் பேசுகின்றன. வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுகிறார்

ஹரன்பிரசன்னா

பலமுறை ஹரன் பிரச்சன்னாவை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கில் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவர் சிறுகதைகள் எழுதுவார் என்று தெரியாது. அண்மையில் சொல்வனத்தில் அவரது இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். நன்றாக இருந்தன. சாதேவி என்ற சிறுகதை தொகுப்பையும் அண்மையில் படித்தேன். வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு.

காலத்துகள்


பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

-எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்தாளர்.

Comments

  1. மன்னிக்க வேண்டும் நண்பரே!
    நீங்கள் கேட்ட நூலைச் சென்னையில் வந்து தர விரும்புகிறேன், அதுதொடர்பான தகவல் தெரிவிக்க உங்கள் மின்னஞ்சலைத் தெரிவிக்க வேண்டுகிறேன் -நா.மு.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil