வற்றா நதி – ஒரு எதிர் நீச்சல்



                           மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள். இந்த கதைகளை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு கண்டிப்பாக அருகதையில்லை. ஆனால் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒவ்வொரு கதாப்பாத்திரம் நம்மை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுகிறது. அந்த கதாபாத்திரங்கள் முழுமையாய் நம்மை ஆட்கொண்டு மோடி மஸ்தான் வித்தை போல நம்மையே அங்கே வாழ வைத்து விடுகின்றன.

பச்சை, பிரிவோம் சிந்திப்போம், கிறிஸ்டி ஒரு டைரி குறிப்பு, ஜெனி- இந்த நான்கு கதைகளும் நம்மை இளம்பிராயத்திற்கு இழுத்து செல்லும். இளமை துடுக்குகளிலும் காதல் பார்வைகளிலும் கார்த்திக் புகழேந்தி என்ற சிறுவன் அத்தனை சில்மிஷம் செய்கிறான். கோபியர் மத்தியில் இருக்கும் ஒரு கண்ணனை நீங்கள் ரசிக்க வேண்டுமா, இல்லை கோபிகைகளை கண்ணார காண வேண்டுமா, இந்த கதைக்குள் கொஞ்சம் மூழ்கி விட்டு வாருங்கள். கரையேறுவது கடினம்.

அப்பாவும் தென்னை மரங்களும் – நகர வாழ்க்கையில் மூழ்கி போய் விட்ட நாம் இதை படித்து விட்டு ஒரு தடவையாவது மிச்சமிருக்கும் அப்பாவின் வேஷ்டியையாவது முகர்ந்து பார்ப்போம். அவர் கட்டி சென்ற வீடு சிதைக்கப்பட்டிருந்தால் ஒரே ஒரு செங்கலையாவது தொட்டு விட வேண்டுமென்று பதறிப் துடிப்போம். அவர் வாழ்ந்த புலன்களை நீங்கள் கண்டிப்பாக சுவாசித்து விட்டு வரலாம், உத்தரவாதம் நிச்சயம்.

குடுப்பனை, பொங்கலோ பொங்கல், சுற்றியலையும் காலம், பங்குனி உத்திரம், கிராமிய சிறகுகள், சொத்து, தீபாவளி, நிலைகதவு – நகர மனிதர்களுக்குள் ஒரு கிராமத்தானை பதித்து விட்டு போய் விடும் ஆற்றல் வாய்ந்த கதைகள். நாமும் இப்படி தானே, இப்படி ஏங்கினோம் அல்லவா, அடடா, இப்படியே தான் அப்படியான மனத்துள்ளல்கள் நமக்குள் வருவதை தடுத்து விடவே முடியாது.

அரைக்கிலோ புண்ணியம், 169 கொலைகள் – நாம் பார்த்த, பார்க்கும், பார்க்கப்போகும் மனிதர்களை பற்றிய கண்ணோட்டம் இந்த கதையை படித்தப்பின் கண்டிப்பாக மாறிப்போகும். ஒரு வித குற்றவுணர்ச்சியை நமக்குள் தோற்றுவித்த புண்ணியத்தை அடைந்து விட்டு அடுத்த கதைக்கு தாவி விடுகிறார் இந்த தெருவோர நடைபயணி.. மன்னிக்க, சிறுவனாக துடிக்கும் இந்த பைலட்.

சிவந்திபட்டி கொலை வழக்கு, பற்றியெரியும் உலை – ஒரு கணம் அல்ல, அரைமணி நேரம் அசையாமல் உறைய வைக்கும் உயிர்ப்பு கொண்டவை. இவற்றை தப்பி தவறி படித்து விட்டால் மனதில் ஒரு பெரிய பாராங்கல்லை கொண்டு வந்து வைத்து விடுகிறார் இந்த எமகாதகன். யதார்த்தம் புரிபட்டு போகும்போது சமூகம் மீதான கோபம் தன்னிரக்கமாக மாறுவதை தவிர்க்க முடிவதேயில்லை.

காற்றிலிடைத் தூறலாக, வணக்கதிற்குறிய - இருவேறான எண்ணங்கள், எல்லோரையும் ஏதோ சூழ்நிலையில் இப்படி வாழ ஆசைப்பட வைக்கும். தன்னை பற்றிய சுய அலசலாகட்டும், வருங்கால மாமனாரிடத்து அறிமுகப்படுத்திகொள்வதாகட்டும், இப்படி ஒருவனை தான் ஒவ்வொரு பெண்ணும், பெண்ணை பெற்ற தகப்பனும் தேடிக் கொண்டிருப்பார்கள். முக்கியமாக பெண்ணைப் பெற்றவர்கள் கவனிக்க.

உதிர்ந்து விழும் அஸ்திவாரங்கள், லைட்ஸ் ஆப் – இளமை துள்ளலோடு சுற்றி திரிந்த கதாநாயகன் இங்கு திடீரென முதுமையடைந்து தன் பால்யங்களை கடந்து போகிறார். மனைவியின் பிரிவாகட்டும், மகனின் பிரிவாகட்டும், இரு கதைகளும் இருவேறு நடைகள் என்றாலும் ஒரே மாதிரியான தாக்கத்தில் மனதை உறைய வைத்து விடுகின்றன. இந்த எழுத்தாளர் மிக வேகமாக அறுபதுகளை தொட்டு விட்டு நினைவுகளோடு உறைந்து நம்மையும் உறைய வைத்து விடுகிறார் இங்கே.

இறுதியாக டெசி கதை – அத்தனை விதமான அவதாரங்களும் எடுத்து விட்டு இறுதியாக பத்து வயது சிறுவனாக பேயை பார்த்து உறைந்து நிற்கிறார் கார்த்திக் புகழேந்தி.

- புஷ்பராஜ் கந்தசாமி ( Pushparaj Kandaswamy )
July 21, 2016.  

Comments

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil