அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

Image may contain: 6 people, people standing


 
                   ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 

அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக் கண்டாலே கொள்ளைப் பிரியம். கள்ளும், சுட்ட கருவாடுமாய் உண்டு களிகூறுவான். அதிலும் புளுத்த ஊறைக் கருவாட்டைக் கண்டால் நாக்க ஏழு மொழத்துக்கு தொங்கப் போட்டுகிட்டு அலைவான்வ. கொழும்பு கொச்சிக் கடையில் இவ்வாறான பேச்சை என் காதறிய நானே கேட்டிருக்கிறேன்.  
“மைதீன் முதலாளிக்கு கொடுக்கிற கை, அது அன்பானாலும் சரி, அடியானாலும் சரி – கடற்கரை வாழ்வின் யதார்த்தம். எடங்கேறு, கெதி, மய்யம் போன்ற பழம்பெரும் வார்த்தையாடல்கள் மகிழ வைக்கிறது.  அந்தக் காலத்தில் சம்பை வியாபாரத்தில் கொடிபோட்டு வாழ்ந்தவர்கள் எல்லோரும் இன்று விலாசமற்றுப் போய்விட்டார்கள். காரணம், நம்பிக்கைத் துரோகம். தத்துவார்த்தங்களை பேசுகிறதோ இல்லையோ, எளிய மனிதர்களையும், அவர்தம் வாழ்வையும், அதன் பாடுகளையும் கண்முன்னே கொண்டுவந்து கண்ணீர் விட வைத்துவிடுகிறது   ‘வள்ளம்’. 
 இது அன்றி வேறென்ன இலக்கியம்”


 என்று கதையை வாசித்துவிட்டு பதில் எழுதியிருந்தார். மைதீன் முதலாளிக்கு மட்டுமல்ல, ஜோ சாருக்கும் (தட்டிக்) கொடுக்கிற கை என்பதை அறிந்தவனாகினேன். விடிந்தபோது பத்தாவது கதை கொடுத்த தைரியத்தில் அடுத்தத் தொகுப்புக்கான அட்டைப் படத்துக்கு நண்பன் சிவகாசி சுரேஷுக்குப் போனைப் போட்டதும்.. மறுநாளே வடிவமைப்பு வேலைகள் முடிந்தது.  

உண்ட மயக்கம் கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில் தலைப்புடனான அட்டைப்படத்தை முகநூலில் தட்டிவிட “அவளும் நானும் அலையும் கடலும்” என்கிற வார்த்தை அல்லோலகல்லோலப் பட்டுவிட்டது. நிறைய விசாரணைகள். “புத்தகம் எப்போ சார் வருது?’ என்று. குத்துமதிப்பாக பிப்ரவரி 14ம் தேதியைச்  சொன்னதும் அது நிறையவே தொகுப்பின் ஒருபாதிக் கதைகளுக்கேற்ப பொறுத்தமான நாளாகிவிட்டது.

அண்ணன் ஜே.கே ஜீவகரிகாலன் யாவரும்.டாட் காமிற்காக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார். அகரமுதல்வன் விமர்சன உரை நிகழ்த்துவகாத முடிவானது. நாச்சியாள் சுகந்தி அக்கா வாழ்த்துரையும், இயக்குநர் கவிதா பாரதி அண்ணன் அறிமுக உரையும். எழுத்தாளர் பாக்கியம் சங்கர் அண்ணன் சிறப்புரையும் பேசுவதாகக் குறித்துவைத்தோம். நூலினை, நீயா நானா இயக்குநர் ஆண்டனி அவர்கள் வெளியிடுவதாகவும், எழுத்தாளர் அண்ணன் சரவணன் சந்திரன் அவர்கள் பெற்றுக்கொள்வதாகவும் அனுமதி கேட்டு அரங்கத்தைத் தெரிவு செய்துக்கொண்டோம். 

அடுத்தடுத்து ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும், தியாகச் சின்னத்தாயும் பிரேக்கிங் நியூஸ்களால் ஊரையே அதிரச் செய்துகொண்டிருந்த பொழுதுகளில் சத்தமே இல்லாமல் நிகழ்வு நடந்தேறியது.  லதா அருணாச்சலம் அக்காள், தோழமை சக்தி பிரகாஷ், தடகளம் தியாகு, கவிஞர். நண்பர் கு.விநாயகமூர்த்தி, கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு கவுதமன், அண்ணன் தம்பிச் சோழன் தம்பதியர், ரமேஷ் ரக்‌ஷன், அக்காள் தேகா கஸ்தூரி, மனோ ரெட், நண்பர் அரசன், கோவை ஆவி., அண்ணன் சூரியதாஸ், தம்பி சந்தோஷ் சிவகாசி சுரேஷ், இன்னும் நண்பர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்தார்கள்.

பல இலக்கிய நிகழ்வுகளை நினைவுகளாக்கித் தந்து, தொடர்ந்து என்போன்றவர்களை ஆதரித்துச் செல்லும் ஸ்ருதி டிவி.அண்ணன் (அவர் பேரை நான் அப்படித்தான் சொல்லிக்கொண்டு திரிகிறேன்) இந்த நிகழ்ச்சியையும் ஊராரிடம் காட்டிப் பெருமையடித்துக் கொள்வதுபோல அழகாக்கித் தந்திருக்கும் அவரின் அன்புக்கு நன்றி.


கவிஞர் அகரமுதல்வன்  :-
நீயா? நானா? இயக்குநர் ஆண்டனி :- 
 எழுத்தாளர் பாக்கியம் சங்கர் :- கவிஞர் நாச்சியாள் சுகந்தி  :- 
இயக்குநர் கவிதா பாரதி  :- 
எழுத்தாளர் ஜீவகரிகாலன் தொகுப்புரை
மற்றும் என்னுடைய ஏற்புரை :-
நன்றி.. 

-கார்த்திக் புகழேந்தி
20-02-2017
“அவளும் நானும் அலையும் கடலும்” 
விலை : 130/-
@கார்த்திக் புகழேந்தி
ஜீவா படைப்பகம், MIG-1544, த.நா.வீ.வா காலனி,
வேளச்சேரி, சென்னை -42
போன் +91 9994220250 

Buy books Online :   
Comments

  1. அனைவருக்கும் வாழ்த்துகள் பல...

    ReplyDelete
  2. மேலும் (தாங்களின்) வளர்ச்சியே காண காத்திருக்கும் பலரில் ஒருவன்.
    நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இயலாமல் போன வருத்தத்தை தவிர்த்துவிட்டது..தாங்களின் இக்கட்டுரையும்,காணொளியும்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா