ரெண்டு ரூவாத்துட்டு

கருப்பண்ண சாமி கோயிலுக்குப் பின்பக்கம் பாளையங் கால்வாய் வழிந்தோடுகிறது. ஊருக்குள் நுழைய உடைந்த பாலம் ஒன்று மிச்சமாய் இருக்க பாலத்தின் முனையில் அந்த ஆலமரம் விழுதுகளை கால்வாய்க்குள் ஊறப்போட்டபடி நிமிர்ந்து நிற்கும்.

கோவில் பூடங்களுக்கும் ஆலமரத்துக்கும் உள்ள இடைவெளியில் தான்
பாரதி அக்காவுக்கும் சிவபாண்டி அண்ணனுக்குமிடையே காதல் பிறந்திருக்கக் கூடும். அவர்களை அங்கேதான் இரண்டொருமுறை பார்த்திருக்கிறேன்.

பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சைக்கிள் கேரியரில்
பெப்ஸி ஐஸ் என்றெழுதிய மரப்பெட்டிக்குள் சாக்ரீம் ஐஸை ஐம்பது பைசாவுக்கு விற்கும் பெரியவரை பின் தொடர்ந்து ஓடிய நாளில், மஞ்சள் தாவாணியில் இருந்த  பாரதி அக்காளை சிவபாண்டியண்ணன்
கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். கட்டிப் பிடிப்பதென்பது எத்தனை சுகானுபவம் என்பதெல்லாம் எனக்கு அறிமுகப்பட்டிருக்காத வயது அது.

மறுநாள் பள்ளிக்கூடம் விட்டதும் மேல்சட்டை இல்லாமல் டவுசரை மட்டும் இழுத்து முறுக்கிக் கொண்டு நேரே ஆலமரத்தடி கோவிலுக்கு விளையாட ஓடினேன். கோவில் என்பது கொடை எடுக்கும் காலங்களில் மட்டுமே பெரியவர்களுக்கானது. மற்ற பொழுதிலெல்லாம் அது எங்களைப்போன்ற வீட்டுக்கு அடங்காத பொடியன்களின் விளையாட்டுத் திடல்.

கொஞ்ச நேரத்திலே சீனி வாங்க கடைக்குப் போகச் சொல்லி வீட்டிலிருந்து தாக்கல் வந்தது.  கடைக்குப் போனால் பத்து பைசாவுக்குக் குறையாமல் கமிசனடித்து பாக்கு முட்டாயும், ஆர்லிக்ஸ் முட்டாயும் வாங்கித்தின்ன முடியும் என்ற நப்பாசையுடன் ரெண்டு ரூபாவை வாங்கிக்கொண்டு முருகன் கடைக்குக் கிளம்பினேன்.

முருகன் கடை என்பது ஊர் முனையில் கூரைச் சாய்ப்பு போட்டு பக்கத்துக்கு இரண்டு மரப்பெஞ்சு உட்கார்ந்தே தேய்ந்து போய் கிடக்க, ஆம்ஃப்லிபேரில் வயர்கள் சொறுகிக்கிடக்க  பொத்தல் விழுந்த மண்பானைக்குள் பழைய ஸ்பீக்கரை துணிசுற்றி வைத்து  “வைதேகி காத்திருந்தாள்” படப்பாடல்களை ஒலிக்கவிட்டு ஏழெட்டுபெருசுகள் சுற்றியமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் ஒரு மண்குடிசை.

சாணம் மொழுகப்பட்டு உள்ளே ஆள்நுழைமுடியாதபடி, எல்லா  இண்டு இடுக்கிலும் டவுணிலிருந்து வாங்கி வந்திருக்கும் பலசரக்குகளை எல்லாம் ஒரு சுருட்டுப் பொட்டலம் போல கட்டிவைத்திருந்தால் அதுதான் முருகன்கடை என்பதற்கான விளக்கம். இரண்டு ரூவாய்க்கு சீனி மடக்க சிறுவர்மலர் லக்கிமேன் சொரிமுத்து கதை இருக்கும் பேப்பர்தான் வேண்டுமென அடம்பிடிப்பேன்.

அன்றைக்குக் கடைக்குப் போகும் வழியிலே கோயிலும் ஆலமரமும் வர கப்பித்தனமான பேராசையில், விழுதுகளைப் பிடித்துக் கொண்டு பாலத்துக்கும் பூடத்துக்கும் இரண்டு மூன்று தரம் ஊஞ்சலாடிக் கொண்டேன். கீழே இறங்கி கடைக்கு க் கிளம்பும்போது  டவுசர் பாக்கெட்டுக்குள் கையை விட்டால் வீட்டில் கொடுத்தனுப்பிய இரண்டு ரூவாய் நாணயம் தொலைந்து போன சங்கதி தெரிந்தது. அழுது புலம்பி ஆகப் போவது ஒன்றுமில்லை. மிட்டாய் வாங்கித்தின்னவும் வழியில்லை. புளிய விளாறால் புறங்காலிலே அடித்து தோல் உரிக்கப்படும் என்பது சந்தேகமில்லாமல் புத்திக்கு உரைத்திருந்தது.

ஆபத்பாந்தவனாக சிவபாண்டியண்ணன் தூரத்திலிருந்து எதிர்பட்டான். நேற்றைக்கு பாரதி அக்காவோடு அவன் பேசிக் கொண்டிருந்ததை யாருக்கும் சொல்லக்கூடாது என்று ரத்தச் சிவப்பில் இருக்கும் பழ ஐஸ் வாங்கிக் கொடுத்தது நினைவில் வந்தது. இவனைக் கேட்டால் இரண்டு ரூபாய்க்கு வழி கிடைக்குமென்று வியூகம் வகுத்துக்கொண்டு கிட்டே நெருங்கி அசடு வழிய, இன்றைக்கும் ஐசுக்கு வந்திருக்கிறான் என்று நினைத்து பொளெரென்று செவுளில் அறை விட்டான். அவன் நினைப்பில் குற்றமில்லை.
ஆனால், அடிபட்ட வீராப்பில் மூசு மூசென்று இறைக்க வீட்டை நோக்கி ஓடினேன். ஏற்கனவே காசு தொலைந்த பயத்தில் சொல்வதற்குத் தோதாய் ஒரு பொய் கிடைத்துவிட்டது. ”யம்மோய்ய்ய்” என்று அழுதுகொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்..

“ஏலா சீனி வாங்கப் போனவன் என்னலா அழுதுகிட்டே வார”

“இல்லம்மோவ் இந்த சிவப்பாண்டி அண்ணன் இருக்காம்லா அவன் நேத்து நம்ம கடைசி வீட்டு பாரதி அக்காவ கட்டிப் பிடிச்சுட்டு நின்னத நான் பார்த்துட்டம்ன்னு என்னைய அடிச்சுட்டாம்மா.. கையில இருந்த காசையும் புடிங்கிக்கிட்டாம்மா” என்று பச்சையாக புழுகி வைத்தேன்.

ஆங்காரக் கொண்டையை சுழற்றிக்கொண்டு நேரே பாரதி அக்காள் வீட்டுமுன்னே அம்மா கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டாள். அந்த நேரத்தில் காபியோ சீனியோ இரண்டு ரூபாயோ அவளுக்குப் பெரிய காரியமாய் இல்லாமல் போனது பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் அடிவிழாமல் தப்பித்துக் கொண்டதாலே நான் சச்சரவுகளை வேடிக்கை பார்க்கத் துவங்கி இருந்தேன். கொஞ்ச நேரத்தில் மேல் வளவு மணிகண்டன் டயர் உருட்டி விளையாடக் கூப்பிட்டதும் அவனோடே கூட தெரட்டுக்குப் போய்விட்டேன்.

அடுத்த நாளில் சிவன்பாண்டி அண்ணனும், பாரதி அக்காவும் ஊரைவிட்டு ஓடிப்போனதாகப் பேசிக் கொண்டார்கள். மக்யாநாளே ஏரலுக்குப் பக்கத்தில் இரண்டுபேரும் சொந்தக்காரர்கள் வீட்டில் பதுங்கி இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு , வெள்ளை அம்பாசிடர் காரிலும், தங்கமுத்து மாமா புல்லட்டிலும்  திரும்ப அழைத்து வரப்பட்டார்கள்.

பஞ்சாயத்துப் பேசி தீர்த்த இரண்டாம் வாரத்தில் இரண்டுபேரும் கல்யாணம் கட்டிக்கொண்டு எங்கள் வீட்டுக்குப் பின்கட்டிலே குடியும் வந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் பாரதி அக்காவுக்கு என்மீது துளியும் கோபமில்லை என்பது தெரியவந்த பிறகுதான் நான் கோழியடைக்கக் கூட பின்கட்டுக்குப் போகவே தொடங்கினேன்.

சொல்ல மறந்ததென்னவென்றால் தொலைந்துபோனதாகக் கருதப்பட்ட அந்த இரண்டு ரூபாய் கருப்பண்ணசாமி பூடத்துக்குப் பின்னாலே மறுநாளே கண்டெடுக்கப்பட்டது.



-கார்த்திக் . புகழேந்தி
25-03-2015

Comments

  1. ரெண்டு ரூவாத்துட்டு - சொல்ல மறந்ததென்னவென்றால் தொலைந்துபோனதாகக் கருதப்பட்ட அந்த இரண்டு ரூபாய் கருப்பண்ணசாமி பூடத்துக்குப் பின்னாலே மறுநாளே கண்டெடுக்கப்பட்டது.= அருமையான சிறுகதை. படிக்கும் போது நாமும் கிராமத்தில் இருக்கிறோம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி.

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil