Skip to main content

கெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..

இந்த உலகம் எப்போதுமே முந்திக்கொண்டு புலம்புபவனுக்காக பால்பேதமில்லாமல் படைப்புகளையும், தத்துவங்களையும்,
போட்டோஷாப் இமேஜ் கொயட்களையும்  தந்துவிட்டிருக்கின்றது.

நேரே போய் நறுக்கென்று ஏண்டா எருமை ஒழுங்கா பேசமாட்றேன்னு நண்பனிடம் கேட்டு சண்டை பிடிக்கும் திராணி நமக்கிருந்தாலும், அப்படியெல்லாம் இல்லையே மச்சி வா ரெண்டு டீ சொல்லு என்று பாக்கெட்டிலிருக்கும் பதினாறு ரூபாய்க்கு உலைவைத்துவிடுவானோ என்ற ஒரே காரணத்துக்காக நாம் அடக்கி வாசித்திருப்போம்.

ஆனால் அந்த தேவதத்தனோ அன்னப்பறவையின் லெக்பீஸை மென்று சுமைத்துவிட்டு அடுத்த நாள் புத்தனாகி பேஸ்புக்கில் நல்ல நல்ல பஞ்ச் வசனங்களை எழுதுவான். நமக்கு ஒரு எளவும் புரியாதென்றாலும்... என்னவோ சொல்லவாரேனே இந்த யுக கேந்திர பதாதைகளுக்கென்று நெருங்கிப் பார்த்தால் கழிசடை நம்மைத்தான் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கும்.

அடேய் உன்னைய என் சொந்த சித்தப்புவ விட மரியாதையா நடத்திட்டு இருந்தேனடா நீயா என்னைத் திட்டுற. சரி இவ்வளவு நாள் என்கூட பழகி இருக்கியே எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு கூடவா உனக்குத் தெரியாது என்று கேட்கத் தோன்று. சபை நாகரீகம் என்னும் சப்பைக்கட்டுக் கட்டி நாம் அமைதியாவோம்.

இரண்டாம் நாள் அவன் கர்ணனாகவும், கலிங்கத்தில் காலை பேக்வேர்ட் எடுத்துவைத்த அசோகனாகவும் புதுப்புது பதிவுகளாக ஷேர் செய்வான் எங்கிருந்து  இதெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்தால் எருமை தான் நேரடியாக எழுதினால் கட்டென்ரைட்டாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தனக்கு நெருங்கிய டோழி அல்லது டோழனைவிட்டு போஸ்ட் செய்யவைத்து அதை ஷேர் செய்து அருணாச்சலம் படத்தில் தலைவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் காலடியில் தங்கக்காப்பை கழட்டிவைத்த தோரணையில் சீன் போடு..  எலேய் நீ போட்ருக்க சட்ட என்னுதுலேய்..

அப்படியே அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு இரண்டாம் நாள் சாமம் முடிந்ததும் இடி இடியென முதுகில் குத்திவிட்டான், மூக்குமேலே மொத்திவிட்டான் என்றும் நான் அவனை உதறிவிட்டேன் இனிப் போறபாதை சிங்கப்பாதை என்று காயினைச் சுண்டிக்கொண்டிருப்பான். காயினுக்குச் சொந்தக்காரன் தான் அந்த போஸ்டுக்கு லைக் போட்ட ஒரே அப்பாவி.

கடைசியில் எலி மலையைக் குடைந்து மசால்வடைக்கு அலைந்த கதை விசாரித்தால் மூதேவி நாம் சொன்ன ஒரு உப்புச்சப்பில்லாத மேட்டரை ஊதிப் பெரிதாக்கி யாருக்குச் சொல்லக்கூடாதோ அவனிடமே போய் வாங்கு ஊதி இரண்டுபக்கமும் தவிலடி வாங்கி இருக்கும் குட்டு வெளிப்படும்.

ஆனா ஒன்னு மச்சான் நீ கௌதம புத்தன் போலவும், கவரிமான் வம்சம் போலவும் போட சீனைக் கூட தாங்கிக்குவேண்டா.. அத்த இங்க்லீஷ்ல ஸ்டேட்டஸ் போட்டதை மட்டும் தாங்கிக்கவே மாட்டேண்டா...!Comments

  1. இதெல்லாம் பேஸ்புக் (மட்டுமே) போராளி வகையறா. என்ன செய்ய, சில நேரம் இந்த உறவுகள நாமளே தலைல தூக்கி வச்சு கொண்டாடுறதும் உண்டு.... அட, விடு மக்கா, இன்னொரு தோள் கிடைக்காமலா போகும்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர். நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம். “காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம். உழுவதற்…

அவளும் நானும் அலையும் கடலும் | நூல் வெளியீடு நிகழ்வு

ஒன்பது சிறுகதைகள் எழுதி முடித்து கைவசம் இருந்தன. ‘ஊருக்குச் செல்லும் வழி’ என்கிற கட்டுரைத்தொகுப்பு வெளியாகி, விற்பனைக்கு வந்து ஒரு மாதம் கூட முடிந்திருக்கவில்லை. அடுத்து எந்தப் பக்கம் கவனத்தைச் செலுத்த என்கிற மனத்தடையோடு நிற்கிறபோது இந்தச் சிறுகதைகளை எல்லாம் ஒரு ரவுண்டு திரும்ப வாசிக்கிற சூழல் அமைந்தது. ஊழ்வினை நம்மைச் சும்மாய் இருக்க விடாதில்லையா... 
அத்தனையையும் சீர்பார்த்து, முடிக்கிறபோது  ‘மைதீன் முதலாளி’ என்கிற தேங்காய்ப் பட்டணத்து கருவாட்டு வியாபாரியின் கதையான  “வள்ளம்” தனித்துவமாக மின்னி நின்றது. அதை உட்கார்ந்து ஓர் நாள் இரவு முழுக்க எழுதித் திருத்திவிட்டு, ஜோ டி குரூஸ் சாருக்கு அனுப்பிவைத்தேன்.

 "தம்பி.
நாற்பது வருடங்களுக்கு முன்னால் தேங்காப்பட்டனம் கடற்கரையில் நின்றபடி பாடு கேட்டது போலிருந்தது. ஆங்கில மாதங்களையே கேட்டுப் பழகிவிட்ட இன்றைய நிலையில் சித்திரைப்பாடு என்ற வார்த்தைப் பிரயோகமே கதைசொல்லி கார்த்தியோடு மனதளவில் நெருக்கமாக்கி விட்டது. சொன்ன சொல்லுக்கு மருவாதியோடு அறம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அன்று இருந்தார்கள். சிங்களத்தானுக்கு நம்ம ஊரு கருவாட்டைக…

அவளும் நானும் அலையும் கடலும்

மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு.
முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள்.
*
இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?” என்ற அவளுடைய…